மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கடந்த மாத இறுதியில் ஸ்ருட்கார்ட் நகரில் நகர கலையகத்தின் முன்னே போதைப் பொருட்களுக்காக17 வயதுடைய ஒருவரை பொலீசார் தேடியதைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு இளைஞர்களுக்கும் பொலீசாருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. பொலிஸ் புள்ளிவிவரங்களின்படி, 19 அதிகாரிகள் காயமடைந்தனர், மேலும் 12 பொலீஸ்கார்கள், ஒரு முதலுதவிவாகனம் மற்றும் 40 கடைகள் சேதமடைந்தன. இதில் கைது செய்யப்பட்டவர்கள் 16 முதல் 33 வயதுக்குட்பட்டவர்களில் ஜேர்மன், குரோஷிய, ஈராக், போர்த்துக்கல் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளடங்குகின்றனர்.
இதன்போதான முழு போலிஸ் நடவடிக்கையும் இராணுவ பாணியிலான தலையீட்டிற்கு ஒப்பாகும். ஒரு பெரிய பொலிஸ் பயிற்சியை மேற்கொள்வதற்காக, ஸ்ருட்கார்ட்டின் நகர மையத்தில் வழமையாக ஒன்றுகூடும் இளைஞர்களின் கூட்டத்தை அவர்கள் முறையாக பயன்படுத்திக்கொண்டனர். நகரம் முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்துடன், நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகளின் ஆதிக்கம் காணப்பட்டது. பாடன்-வூர்ட்டெம்பேர்க் மாநிலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 200 பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். இரண்டு பொலிஸ் ஹெலிகாப்டர்கள் இரவு முழுவதும் நகர மையத்தில் வட்டமிட்டன.
ஸ்ருட்கார்ட்டின் நிகழ்வுகள் ஜேர்மனி மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள நிலைமைகளை பிரதிபலிக்கின்றன. ஒரு சமூக மற்றும் அரசியல் வெடிப்புக்கான நிலைமை உருவாகி, கோபம் எல்லா இடங்களிலும் மேற்பரப்பின் கீழ் உருவாகிறது. ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொலைக்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக நூறாயிரக்கணக்கானவர்கள் ஜேர்மனியில் வீதிகளில் இறங்கினர். இந்த எதிர்ப்புக்கள் ஆளும் உயரடுக்கிற்கு அச்சத்தை உருவாக்கியது. அந்த ஆர்ப்பாட்டங்கள் இனவெறி, வலதுசாரி தீவிரவாத வலையமைப்புகள் மற்றும் வன்முறைகளுக்கு இழிபெயர்பெற்ற ஜேர்மனியில் பொலிஸ் மீது பரவலான வெறுப்பை வெளிப்படுத்தியது. மேலும் தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீட்டுக் கட்சியின் எழுச்சி, பெரும் கூட்டணியின் வலதுசாரி கொள்கைகள், ஜேர்மன் இராணுவவாதத்தின் திரும்பல், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் வளர்ந்து வரும் வேலையின்மை மற்றும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றிற்கான எதிர்ப்பையும் அவை பிரதிபலித்தன.
இந்த நிகழ்வுகளைப் பற்றி, ஜேர்மன் ஜனாதிபதி ஃபிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையரில் இருந்து அனைத்து கட்சிகளிலிருந்தும், நாட்டின் ஊடகங்களிலிருந்தும் நாடாளுமன்ற பிரதிநிதிகளும், "ஸ்ருட்கார்ட்டில் வன்முறை இரவு", "உள்நாட்டுப் போர் போன்ற நிலைமைகள்" மற்றும் "சமாதானத்தின் கடுமையான மீறல்கள்" என்று பரபரப்பாக பேசுகிறார்கள். ஒருவரைவிட இன்னொருவர் மீறி, மேலதிக பொலிஸார் வேண்டும் மற்றும் "குழப்பம் விளைவிப்பவர்கள்" மற்றும் "வன்முறைக்குத் தயாராக உள்ள புலம்பெயர்ந்தோருக்கு" கடுமையான தண்டனைகள் வழங்கவேண்டும் என்று கோருகின்றனர்.
இந்த "ஸ்ருட்கார்ட் இரவு வன்முறை" என்று அழைக்கப்பட்டதன் பின்னர், பிராங்பேர்ட் நகரில் இதேபோன்ற ஒரு நிகழ்வு இப்போது பொலிஸ் அதிகாரங்களை திட்டமிட்டு அதிகரிக்கவும், அரசு எந்திரத்தில் தீவிர வலதுசாரி கட்டமைப்புகளை நியாயப்படுத்தவும் பலப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், பிராங்பேர்ட்டின் ஓப்பேரா சதுக்கத்தில் [Opera Square] சுமார் 3,000 பேர் கலந்து கொண்ட ஒரு திறந்தவெளி கொண்டாட்டத்திற்குப் பின்னர், இளைஞர்களுக்கும் பொலீசாருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. காவல்துறையினரின் கூற்றுப்படி, சச்சரவில் தலையிட்ட அதிகாரிகள் மீது அவர்கள் போத்தல்களை வீசினர். ஒரு டிராம் நிறுத்தத்தின் கண்ணாடி விளம்பரப் பலகையும் உடைக்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் குறித்து சுயாதீனமான அறிக்கைகள் எதுவும் இல்லை.
17 முதல் 23 வயதுடைய 39 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் மறுநாள் அவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டியிருந்தது, ஏனெனில் அவர்கள் அரசு அதிகாரிகளுடன் ஒரு மோதலில் ஈடுபட்டததற்கான எந்த ஆதாரத்தையும் அரச வழக்குத்தொடுனர் அலுவலகம் காணவில்லை. ஆயினும்கூட, ஊடகங்களும் அரசியல்வாதிகளும் உடனடியாக தங்கள் பிரச்சார இயந்திரங்களை முடுக்கிவிட்டனர்.
ஹெஸ்ஸ மாநில உள்துறை மந்திரி பீட்டர் பியூத் (Peter Beuth - கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் - CDU), "காவல்துறைக்கு எதிரான இந்த அர்த்தமற்ற வன்முறை எதையும் நியாயப்படுத்த முடியாது" எனக் கூறினார். "பாதுகாப்பு வட்டாரங்களை" சுட்டிக்காட்டி Bild பரபரப்பு செய்தித்தாள், சம்பந்தப்பட்ட மக்கள் "ஸ்ருட்கார்ட்டில் நடந்த கலவரங்களில்" ஈடுபட்டவர்களுக்கு ஒத்தவர்கள் என்றும் "குடியேறியவர்களில் அதிக சதவீதத்தினர் குடிபோதையில் மற்றும் அதிக மூர்க்கத்தனத்துடன் இருந்தனர் என்றும் தெரிவித்தது. "கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் உள்ள கிறிஸ்தவ சமூக ஒன்றியத்தின் (CSU) பிரிவின் நிர்வாக இயக்குனர் ஸ்டீபன் முல்லர், “காரணங்கள் தெளிவாக பெயரிடப்பட வேண்டும். அதாவது வெளிநாட்டவர்களை சமூகத்தில் ஒருங்கிணைப்பது தோல்வியுற்றதும் மற்றும் இடதுசாரி பிரிவினரால் உருவாக்கப்படும் மோசமானவற்றை கவனத்திற்கு எடுக்காது விடுவதுமாகும்” என்றார்.
பிராங்பேர்ட் காவல்துறைத் தலைவர் ஹெகார்ட் பெரெஸ்வில், இதில் ஈடுபட்ட இளைஞர்கள் முக்கியமாக குடியேற்ற பின்னணி கொண்ட ஆண்கள் என்று கூறினார். மோதல்களுக்கான காரணங்கள் குறித்து ஹெசென்சாவ் செய்தித்தாளிடம் கேட்டபோது, மது மற்றும் மூர்க்கமான மனப்பான்மைக்கு மேலதிகமாக, காவல்துறையினர் எதிர்நோக்கும் "பெரும் குற்றச்சாட்டுகளும்" என்று அவர் கூறினார். பொலிஸ் அதிகாரிகள் வலதுசாரி தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டு தெருக்களில் இதை எதிர்கொள்கின்றனர். கூடுதலாக, ஜோர்ஜ் ஃபுளோய்ட் இறந்த பின்னர் ஜேர்மனியில் பரவியிருந்த இனவெறி மற்றும் இனரீதியான விவரக்குறிப்புகள் மற்றும் பொலிஸ் வன்முறை குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும் அவர் கூறினார். ஜேர்மன் பொலிஸ் அமெரிக்க பொலிஸுடன் பொய்யாக அடையாளம் காணப்பட்டது.
காவல்துறைத் தலைவர் வேண்டுமென்றே காரணத்தையும் விளைவையும் கலக்கிறார். காவல்துறையினரை பற்றி சந்தேகிக்க இளைஞர்களுக்கு அனைத்து காரணங்களும் உள்ளன.
இப்போது பல வாரங்களாக, ஹெஸ்ஸ பொலிஸில் உள்ள வலதுசாரி தீவிரவாத வலைப்பின்னல்கள் பற்றிய மேலும் விவரங்கள் அறியப்பட்டுள்ளன. நவ-நாஜி National Socialist Underground (NSU) இற்கு பலியான பலருக்கு ஆதரவாக செயல்பட்ட வக்கீல் Seda Basay-Yildiz, முன்னணி இடது கட்சி அரசியல்வாதிகள், மேடைநாடக கலைஞர் Idil Baydar, பசுமைக் கட்சி உறுப்பினர் Jutta Ditfurth மற்றும் பத்திரிகையாளர் Deniz Yücel உட்பட பல பிரபலங்கள் "NSU 2.0" என்று கையெழுத்திடப்பட்ட மரண அச்சுறுத்தல்களை பெற்றுள்ளனர். பல சந்தர்ப்பங்களில், அச்சுறுத்தல்களில் தனிப்பட்ட தகவல்களும் உள்ளன. இவை ஹெஸ்ஸ பொலிஸின் கணனிகள் ஊடாக பெறப்பட்டவையாகும்.
ஆனால் குற்றவாளிகள், அரசிலும் அரசியலிலும் மிக உயர்ந்த அதிகாரிகளால் மறைக்கப்படுகிறார்கள். அத்தகவல்களை பெற பயன்படுத்தப்பட்ட அதிகாரிகளை அவர்களின் பெயரில் உள்ள கணனிப்பதிவு இலக்கங்களை கொண்டு அடையாளம் காண்பது எளிதானது என்றாலும், இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று காவல்துறைக்கு இன்னும் தெரியவில்லை.
இந்த விவகாரத்தின் மையத்தில், பிராங்பேர்ட்டில் உள்ள 1 ஆவது காவல் நிலையம் உள்ளது. இது, சமீபத்திய மோதல்களின் தளமான ஓப்பேரா சதுக்கத்திற்கும் பொறுப்பாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, Basay-Yildiz பற்றிய தகவல்கள் அங்கிருந்துதான் எடுக்கப்பட்டன. அங்கு பதியப்படிருருந்த பெண் பொலிஸின் கை அலைபேசியில் ஒரு கலந்துரையாடல் குழு இருந்தது. அதில் பொலீஸ் அதிகாரிகள் ஹிட்லரையும் இனஅழிப்பையும் புகழ்ந்துபேசியிருந்தனர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 5 பேர் 1 ஆவது பிராங்பேர்ட் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர், ஆனால் அவர்களுக்கு வேறு எதுவும் நடக்கவில்லை.
இடது கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான Janine Wissler பற்றிய தகவல்கள் பின்னர் வீஸ்பாடென் நகரில் உள்ள ஒரு பொலீஸ் கணினியிலிருந்து எடுக்கப்பட்டிருந்தபோதும், இதற்கு பொறுப்பான காவல்துறை அதிகாரி கூட தேடப்படவில்லை.
மேடைநாடக கலைஞர் Idil Baydar அச்சுறுத்தும் மின்னஞ்சல்களைப் பெற்றதால் எட்டு முறை குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் விசாரணைகள் தோல்வியடைந்தன. தனது தரவுகள் பொலிஸ் கணினியிலிருந்து எடுக்கப்பட்டிருந்ததை Baydar பொலிஸ் வட்டாரங்களிலிருந்து இல்லாது, ஊடகத்துறைகளிலிருந்து அறிந்து கொண்டார்.
ஆயினும்கூட, பிராங்பேர்ட் பொலிஸ் தலைவர் இப்போது "பொதுவான குற்றச்சாட்டை" காரணம் காட்டுகின்றார். அதாவது, பொலிஸ் அதிகாரிகளில் வலதுசாரி தீவிரவாத வலைப்பின்னல்களை அம்பலப்படுத்தப்பட்டதே பொலிஸ் அதிகாரிகள் மீது கல் வீசியதற்காக காரணமாக குறிப்பிடுகின்றார். இது காவல்துறை மீதான எந்தவொரு விமர்சனத்தையும் அடக்குவதற்கான வெளிப்படையான முயற்சியாகும்.
இதற்கு மாறாக, பிராங்பேர்ட் “கலவரங்கள்” மிகைப்படுத்தப்படுகின்றன. காவல்துறையினரால் மிகைப்படுத்தப்பட்ட இந்த கலவரங்களை ஒரு அளவுகோலாக ஒருவர் எடுத்துக் கொண்டாலும், கால்பந்தாட்ட மைதானங்களில் வன்முறை குண்டர்களால் வழக்கமாகப் பயன்படுத்தும் வன்முறையுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமில்லாததாகிறது. உத்தியோகபூர்வ பொலிஸ் புள்ளிவிவரங்களின்படி, 2018-19 கால்பந்தாட்ட பருவகாலத்தில் வன்முறை மோதல்களில் 1,127 பேர் காயமடைந்தனர். 6,289 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அவற்றில் கால் பகுதி தாக்குதல்களாகும். 34 போட்டி நடக்கும் நாட்களுக்கு, இதன் பொருள் சராசரியாக ஒவ்வொரு விளையாட்டு நாளுக்கும் 33 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் வாரத்திற்கு இது 185 குற்றவியல் நடவடிக்கைகள். ஆனால் குண்டர்கள் பெரும்பாலும் வலதுசாரி தீவிரவாதிகள் என்பதால், அவர்களின் வன்முறை பற்றி ஊடகங்களில் ஒரு வரியையும் காணமுடியாது.
இனரீதியான விவரக்குறிப்பு தொடர்பான குற்றச்சாட்டு ஒன்றும் கற்பனையானதல்ல. காவல்துறையினர் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஸ்ருட்கார்ட் காவல்துறையினர் “வன்முறை இரவு” க்கு பின்னர் “குடும்ப மரபு ஆராய்ச்சி” என்று அழைக்கப்பட்டதை மேற்கொண்டனர். அவர்களது சொந்த அறிக்கைகளின்படி, அவர்கள் ஜேர்மன் கடவுச்சீட்டுக்களை கொண்ட இளைஞர்களின் பெற்றோரின் பிறந்த நாடு குறித்து, பதிவு அலுவலகங்களில் விசாரித்தனர். பசுமைக் கட்சிவாதிகள் மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய அரசியல்வாதிகள் இருவரும் இந்த நடைமுறையை ஆதரித்தனர். இது நாஜிகளின் யூத எதிர்ப்புச் சட்டத்தை நினைவூட்டுகிறது.
ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், அரசியல்ரீதியாக ஊக்கப்படுத்தப்பட்ட குற்றங்களை வகைப்படுத்த, காவல்துறை “ஜேர்மன் எதிர்ப்பு” வரையறையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது. இந்த வலதுசாரி பிரச்சார வார்த்தையானது ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்றீட்டின் (AfD) கருத்தியல் ஆயுதக் களஞ்சியத்திலிருந்து நேரடியாக வருகிறது. இதற்கு பொலிஸ் விவகாரங்களைக் கையாளும் உத்தியோகபூர்வ அமைப்புகள் ஒருமனதாக ஆதரவாக வாக்களித்தன என சமீபத்தில் taz பத்திரிகை அறிவித்தது.
நவ-நாஜிக்கள் மீது காவல்துறை கொண்டுள்ள இழிவான அனுதாபம், பிராங்பேர்ட் மோதல்களின் அதே நாளில் பேர்லினில் நடந்த இன்னொரு சம்பவத்தால் விளக்கப்பட்டுள்ளது.
வலதுசாரி தீவிரவாத சமையல் புத்தக எழுத்தாளர் அட்டிலா ஹில்ட்மான் மீண்டும் ஒரு மோட்டார் சைக்ளையும் பேரணியை பேர்லினில் வரலாற்று மையத்தில் ஏற்பாடு செய்தார். சுமார் 150 கைதட்டும் பங்கேற்பாளர்களுக்கு முன்னால், அவர் யூதர்களுக்கு எதிராக தூண்டினார். அவர்கள் "ஜேர்மன் இனத்தை அழிக்க விரும்புவதாக" குற்றம் சாட்டினார். அவர் அடோல்ஃப் ஹிட்லரை ஜேர்மனிக்கு "ஒரு வரப்பிரசாதம்" என்று புகழ்ந்தார், மேலும் பசுமைக் கட்சி அரசியல்வாதி Volker Beck இற்கு பொது மரண தண்டனை வழங்க அச்சுறுத்தினார். ஹில்ட்மான் ஏராளமான குற்றங்களைச் செய்திருந்தாலும், காவல்துறையினர் தலையிடாமல் பார்த்துக்கொண்டு நின்றனர்.
ஹில்ட்மான் ஏற்கனவே சமூக ஊடகங்களில் இதே போன்ற அறிக்கைகளை வெளியிட்டார். பல்வேறு யூத அமைப்புக்கள் திகிலுடன் பிரதிபலித்தன, போட்ஸ்டாம் நகர பொலிஸ் தலைமையகத்திற்கு மொத்தம் 1,600 புகார்கள் வந்தன. ஆயினும்கூட, பிராண்டன்பேர்க் அரச வழக்குத்தொடுனர் அலுவலகம் எந்தவொரு குற்றமும் செய்யப்படவில்லை என்று மறுத்தது.
இராணுவத்தினுள்ளும் (Bundeswehr) மற்றும் KSK படைப் பிரிவில் உள்ள வலதுசாரி பயங்கரவாத வலைப்பின்னல்கள் மற்றும் அரசியலமைப்பு பாதுகாப்பு அமைப்பு (Verfassungsschutz) மற்றும் தீவிரவாத நவ-நாஜிக்கள் ஆகியவற்றுக்கு இடையிலான நெருங்கிய தொடர்புகளுடன் வெளிவரும் விபரமானது கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் ஆகியோரின் பெரும் கூட்டணியாலும் பாராளுமன்றத்திலுள்ள ஏனைய கட்சிகளாலும் மூடிமறைக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டுள்ள அரசு அமைப்பினுள்ளேயே ஒரு வலதுசாரி சதியின் எழுச்சியை காட்டுகின்றது. தமது அங்கத்தவர்கள் கூட அச்சுறுத்தலுக்குள்ளாகும் இடது கட்சி மற்றும் பசுமைவாதிகள் கூட இந்த வலதுசாரி சதிக்கு எதிராக சின்னி விரலைக்கூட உயர்த்தவில்லை.
இதற்கு ஆழமான புறநிலைக் காரணங்கள் உள்ளன. 1930 களில் இருந்து முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஜேர்மன் ஆளும் வர்க்கம் தனது ஆட்சியைப் பாதுகாப்பதற்கும் அனைத்து அரசியல் மற்றும் சமூக எதிர்ப்பையும் நசுக்குவதற்கும் சர்வாதிகாரம் மற்றும் போரின் வழிமுறைகளுக்குத் திரும்புகிறது. கடுமையான வர்க்கப் போராட்டங்களை அறிவிக்கும் கூர்மையான சமூக பதட்டங்களுக்கு இது இவ்வாறு எதிர்வினையாற்றுகிறது.
இது ஒரு சர்வதேச நிகழ்வாகும். அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும், ஆளும் வர்க்கம் காவல்துறை மற்றும் இரகசிய சேவைகளை ஆயுதபாணியாக்கி தீவிர- வலதுசாரி இயக்கங்களை ஊக்குவிக்கிறது.
அமெரிக்காவில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்காக உள்ளூர் அதிகாரிகளின் விருப்பத்திற்கு எதிராக ஓரேகனின் போர்ட்லாண்டிற்கு கூட்டாட்சி பாதுகாப்பு படைகளை முதன்முறையாக அனுப்பியுள்ளார். இராணுவ சர்வாதிகாரத்தை நினைவூட்டும் காட்சிகளில், போர் உடையில் இருக்கும் இந்த பாதுகாப்புப் படைகள் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகச் செயல்பட்டு, மேலும் அவர்களை அடையாளம் இலக்கம் குறிக்கப்படாத வாகனங்களுக்குள் இழுத்து ஏற்றுகின்றனர்.
ஒரு பொலிஸ் அரசு மற்றும் வலதுசாரி தீவிரவாதத்தின் வளர்ச்சிக்கு எதிரான போராட்டத்திற்கு, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். இது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதை சோசலிசத்திற்கான போராட்டத்துடன் இணைக்கிறது.
ஆசிரியர் பரிந்துரைக்கும் மேலதிக கட்டுரைகள்:
Neo-Nazi network in police covered up at highest levels of German state and politics
[18 July 2020]
Germany: Racist “family tree research” and police state measures in Stuttgart
[16 July 2020]
German media and politicians stoke massive campaign for a police state
[25 June 2020]