மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
முதலாளித்துவ அரசியலின் இற்றுப்போன தரத்தில் வைத்து பார்த்தாலும் கூட, ஜனாதிபதி ட்ரம்பின் உடல்நலக் குறைவுக்கு ஜனநாயகக் கட்சியின் விடையிறுப்பு அரசியல் புனிதத்தன்மை பற்றிய பகட்டாராவார பேச்சுக்கள், பாசாங்குத்தனம் மற்றும் வஞ்சகத்தில் ஒரு புதிய சாதனையைச் செய்துள்ளது.
ஜனாதிபதி விரைவில் குணமடைந்து, வெள்ளை மாளிகைக்குத் திரும்ப வேண்டுமென்ற முறையீடுகளின் பொழிவிலிருந்து, ஒருவர், வால்டர் ரீட் மருத்துவமனையில் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருப்பது டொனால்ட் ட்ரம்ப் அல்ல, பிராங்க்ளின் டெலானொ ரூஸ்வேல்ட்டோ அல்லது ஜோன் எஃப். கென்னடியோ என்று நினைக்கக்கூடும்.
“அனைத்தையும் மன்னித்துவிட்டோம். நாங்கள் உங்களை நேசிக்கிறோம் திரு. ஜனாதிபதி,” என்பதே முன்னணி ஜனநாயகக் கட்சியினர் மற்றும் அவர்களின் ஊடக ஊதுகுழல்களிடமிருந்து பொங்கி வரும் கண்ணீர் மல்கிய இரங்கல் பேரலையின் பொதுவான கருத்துருவாக உள்ளது.
ட்ரம்பின் 2016 பிரதான பிரச்சார கோஷமான "அவரை அடைத்து வையுங்கள்!” என்ற கோஷத்திற்கு இலக்காகி இருந்த ஹிலாரி கிளிண்டன் இப்போது, “ஜனாதிபதியும் முதன்மை பெண்மணியும் விரைவில் குணமாக வேண்டும்,” என்று வாழ்த்துகிறார். ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் ட்ரம்பை முசோலினி மற்றும் ஹிட்லருடன் தொடர்புபடுத்திய பிரதிநிதிகள் சபையின் காங்கிரஸ் சபை கொறடா Jim Clyburn, ஓர் அடைச்சொல் சேர்த்து, “விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய" அவரின் நம்பிக்கையை வெளியிட்டார்.
ட்ரம்பின் அரசியல் புகழ் உயர்வானது, ஒபாமா அமெரிக்க பிரஜை இல்லை என்றும், ஆகவே சட்டத்திற்குப் புறம்பான ஜனாதிபதி என்ற அவரின் இனவாத தத்துவத்தை ஊக்குவித்ததுடன் பிணைந்திருந்தது. “நாம் அனைவரும் அமெரிக்கர்களே,” என்று ஒவ்வொருவருக்கும் நினைவூட்டி, ஒபாமா ஓர் ட்வீட் வெளியிட்டார்.
தயவுதாட்சண்யமின்றி குலைநடுங்கும் அச்சுறுத்தல்களுடன் ட்ரம்ப் ஆல் கடித்துக் குதறப்பட்ட வேர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ், “ஜனாதிபதியும் முதன்மை பெண்மணியும் முழுமையாக விரைவில் குணமடைய" ஜனநாயகக் கட்சியினரின் விருப்ப கூக்குரலுடன் அவரது குரலையும் சேர்த்துக் கொண்டார்.
இவ்வார ஆரம்பத்தில் நடந்த விவாதத்தில் அமெரிக்கர்களின் உயிரை ட்ரம்ப் அலட்சியப்படுத்துவதாகவும், வரலாற்றிலேயே படுமோசமான ஜனாதிபதி என்றும் குறிப்பிட்டிருந்த துணை ஜனாதிபதி பைடென், ட்ரம்பை விமர்சிக்கும் எல்லா தேர்தல் விளம்பரங்களையும் அவர் நிறுத்துவதாக அறிவித்தார் — ஆமாம், இந்நடவடிக்கைக்கு ட்ரம்ப் மற்றும் குடியரசு கட்சியினர் எதுவும் எதிர்வினையாற்றவில்லை. அவர் "இப்போது ஜனாதிபதியையோ முதன்மை பெண்மணியையோ தாக்க விரும்பவில்லை" என்று பணிவடக்கத்துடன் விவரித்த பைடென், அவர்கள் விரைவாக குணமாக அவர் பிரார்த்திப்பதாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து ஒபாமாவின் அதே தொனியை ஒட்டி பைடெனும் தேசிய ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார்: “ஜனநாயகக் கட்சியினர் அல்லது குடியரசுக் கட்சியினர் அல்லது சுயேட்சைகள் என்பதற்கு முன்னதாக — நாம் எல்லோரும் அமெரிக்கர்கள். நாம் அதை மறந்து விடக் கூடாது,” என்றார்.
சொல்லப்போனால், ட்ரம்ப் நோய்தொற்றுக்கு உள்ளான செய்திக்கு ஜனநாயகக் கட்சியின் விடையிறுப்புக்கான தொனியை நியூ யோர்க் டைம்ஸ் தான் அமைக்கிறது. “குணமடையுங்கள், திரு. ஜனாதிபதி,” என்பது சனிக்கிழமை பிரசுரிக்கப்பட்ட அதன் முதன்மை தலையங்கத்தின் தலைப்பாக இருந்தது. “பரிசோதனையில் கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட ஜனாதிபதி ட்ரம்பும் முதன்மை பெண்மணியும் விரையில் குணமடையட்டும். அவர்களின் நன்மைக்காகவும் — தேசத்தின் நன்மைக்காகவும்,” என்று அந்த தலையங்கம் அறிவித்தது.
தேசத்தின் நன்மைக்காகவா? அவர் நோய்வாய்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர், ட்ரம்ப் நிர்வாகம் குறித்த டைம்ஸின் செய்திகள், 1) ஜனாதிபதி விவாதத்தில் அவர் பாசிசவாதிகளைக் கண்டிக்க மறுத்து, “அணிவரிசையில் நிற்கவும், பக்கவாட்டில் நிற்கவும்" நவ-நாஜி அமைப்பான Proud Boys அமைப்பிற்கு அவர் அழைப்பு விடுத்ததன் மீதும்; 2) ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அவருக்கு எதிராக இருந்தால் அதை அவர் ஏற்கப் போவதில்லை என்ற ட்ரம்பின் அறிக்கைகள் மீதும்; 3) வாக்கெடுப்பைச் சவால்விடுத்து ட்ரம்ப் கொண்டு வரும் எந்தவொரு வழக்குகளையும் விசாரிக்கும் விதமாக உச்ச நீதிமன்றத்தில் Amy Coney Barrett ஐ நியமனத்திற்கு அழுத்தம் கொடுத்த ஜனாதிபதியின் முயற்சிகள் மீதும்; 4) ஆண்டுக் கணக்கில் நிதி ஊழல் மற்றும் மோசடியை எடுத்துக்காட்டி, ட்ரம்பின் வருமான வரித்தாக்கலைப் பாரியளவில் அம்பலப்படுத்தியதன் மீதும் ஒருங்குவிந்திருந்தன.
பைடென் உடனான விவாதம் குறித்து டைம்ஸ் அதன் சொந்த தலையங்கத்தில் குறிப்பிடுகையில், அவர் ஜெயிக்காவிட்டால் தேர்தல் சட்டபூர்வமானதாக இருக்காது என்ற ட்ரம்பின் வாதங்களைக் குறித்து எழுதியது: “ஜனநாயக நடைமுறை மீதான இந்த அச்சுறுத்தல் உள்ளபடியே குறைவானதல்ல ஏனென்றால் அது பகிரங்கமாக தொடுக்கப்பட்ட ஓர் அச்சுறுத்தல்.” கடந்த செவ்வாய்க்கிழமை தான், டைம்ஸின் தோமஸ் ஃபிரெட்மன் ஒரு கட்டுரையில், தேர்தலை சட்டத்திற்குப் புறம்பானதாக ஆக்கும் ட்ரம்பின் முயற்சிகள் உள்நாட்டு போர் அல்லது கியூபா ஏவுகணை நெருக்கடியை விட ஜனநாயகத்தின் உயிர்பிழைப்புக்கு மிகத் தீவிரமான அச்சுறுத்தலை முன்னிறுத்துவதாக எச்சரித்தார்.
ட்ரம்பின் உடல்நலக் குறைவு சம்பந்தமாக டைம்ஸின் மனக்கவலைக்கு அது அளிக்கும் காரணங்கள் ஜனநாயகக் கட்சியின் நிஜமான கவலைகளை அம்பலப்படுத்துகின்றன. அவர் நோய்வாய்ப்பட்டிருப்பது "அரசின் உயர்மட்டங்களைக் குழப்பத்திற்குள் ஆழ்த்தும். அவர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கவில்லை என்றாலும் கூட, அந்த தொற்றுநோய் அச்சுறுத்தல் நீங்கும் வரையில் ஜனாதிபதியால் அவர் கடமைகள் பலவற்றைச் செய்யவியலாது,” என்று அந்த தலையங்கம் எச்சரித்தது.
ஜனாதிபதியாக பதவியேற்கும் வரையில், அதுவும் குறிப்பாக கடந்த ஒன்பது மாதங்களில், அவர் என்னவாக இருந்தால் என்பதை வைத்து பார்க்கையில், “அவரது கடமைகள் பலவற்றை செய்யவியலாது" போகலாம் என்ற சாத்தியக்கூறு பரந்த நிம்மதியும் மக்கள் கொண்டாடுவதற்கும் தான் காரணமாக இருந்தாக வேண்டும்.
இந்த தொற்றுநோய்க்கு எந்தவொரு ஒருங்கிணைந்த விடையிறுப்பையும் தடுக்கும் நோக்கில் ட்ரம்ப் நிர்வாகம் ஒரு கொள்கையை முன்னெடுத்துள்ளது. பாப் வூட்வார்ட் உடனான பதிவு செய்யப்பட்ட பேட்டிகளில் வெளியானதைப் போல, இந்த அபாயத்தைக் குறித்து பெப்ரவரி மாதம் வேண்டுமென்றே ட்ரம்ப் அமெரிக்க மக்களிடம் குறைத்துக் காட்டினார். நவ-பாசிசவாத அரசியலின் ஓர் அடையாளமாக, இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க முகக்கவசம் அணிதல் போன்ற மிகவும் குறைந்தபட்ச நடவடிக்கைகளைக் கூட நிராகரிப்பதற்காக அவர் இடைவிடாது செயலாற்றினார்.
முதலாளித்துவ அரசியலும் ஸ்தாபக ஊடகங்களும் ஏதேனும் நேர்மையாக எழுத்துக்களையோ அல்லது நேர்மையாக யாரொருவரும் கூறுவதையோ வெளியிட்டு பல தசாப்தங்கள் ஆகிவிட்டன. எச். எல். மென்கென் போன்று அங்குமிங்கும் இப்போது யாரேனும் இருந்தார்கள் என்றால், தற்போதைய நிலைமை மீதான அவரது கட்டுரை, மறுக்கமுடியாத உண்மையாக, கோவிட்-19 தொற்றுக்குத் தகுதியுடைய ஒருவர் அமெரிக்காவில் யாரேனும் இருப்பார்களேயானால் அது டொனால்ட் ட்ரம்பாக தான் இருப்பார் என்று குறிப்பிட்டே தொடங்கும். நீண்ட நாட்களாக அவர் சிறுமைப்படுத்தி வந்த வைரஸ் அபாயத்திற்கு ட்ரம்பையே நோய்வாய்ப்படுத்தி, ஏதோவொரு நன்மைக்காக, தெய்வ சக்தியே பழிவாங்கி இருப்பதாக தெரிகிறது என்று தீவிர நாத்திகவாதியே கூட, பிரபஞ்சமே கடவுளால் ஆளப்படுகிறது என்பதற்கான சாத்தியக்கூறை ஒப்புக் கொள்ள இட்டுச் செல்லக்கூடும் என்பதையும் நிகழ்கால மென்கென் சேர்த்துக் கொள்வார்.
ஊழல் நிறைந்த கோழைத்தனமான இந்த ஸ்தாபக ஊடகங்களில் ஒரேயொரு வார்த்தை உண்மையைக் கூட கேட்கவோ அல்லது வாசிக்கவோ முடியவில்லை. ட்ரம்புக்கு—அல்லது Barrett நியமன கொண்டாட்டத்திற்காக, முகக்கவசம் கூட அணியாமல், கடந்த சனிக்கிழமை ரோஸ் கார்டனில் திரளாக ஒன்று குழுமிய குடியரசுக் கட்சியின் கணவான்களில் புதிதாக நோய்தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு — அனுதாபம் காட்டும் எந்தவொரு உணர்வும், இப்போது 210,000 இல் நிற்கும் கோவிட்-19 மரணங்களுக்கு இந்த ஜனாதிபதி தான் அரசியல்ரீதியிலும் தனிப்பட்டரீதியிலும் பொறுப்பாகிறார் என்ற உண்மையால், தவிர்க்கவியலாமல் ஒன்றுமில்லாமல் போய்விடும்.
வெள்ளை மாளிகையில் சௌகரியமாக பாதுகாக்கப்பட்டிருந்த ட்ரம்ப், செல்வச்செழிப்பான அமெரிக்கர்களைத் தவிர வேறு யாரும் அறிந்திராத அளவுக்குத் தனிப்பட்ட பாதுகாப்பை அனுபவித்தார். மற்றவர்களையும் அவர் அபாயத்திற்கு உள்ளாக்கி உள்ளார் என்பதைக் குறிப்பிடாமல் விட்டாலும், அவராவது நோய்த்தொற்றைத் தவிர்த்திருக்கலாம். ட்ரம்பின் பேரணிகளுக்கு வந்திருந்த அவரிடம் ஏமாந்து நிற்கும் அவரின் பல ஆயிரக் கணக்கான ஆதரவாளர்களும் அதில் உள்ளடங்குவர். ஆனால் உரிய முன்னெச்சரிக்கைகளைக் கடைபிடிக்க அவர் மறுத்ததன் விளைவாக, ஓர் எதேச்சதிகார நவ-நாஜி இயக்கத்தைக் கட்டமைக்க அவசியமான ஒரு வகை பிம்பத்தைக் காண்பிப்பதற்கான அவரின் முயற்சிகளால் ஓர் அசட்டைத்தனம் உருவாக்கப்பட்டிருந்ததால், ட்ரம்ப் மருத்துவமனையில் உள்ளார். வால்டர் ரீட் மருத்துவ மையத்தில் தலையாய வசதிகளுடன் மருத்துவர்களின் ஒரு பெரிய பரிவாரம் அவரின் உடல்நலனையும் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்ற நிலையில், எண்ணற்ற மில்லியன் கணக்கான வரிசெலுத்துவோரின் டாலர்கள் தான் அவர் கவனிப்புக்காக செலவிடப்பட்டு வருகின்றன.
ட்ரம்பின் உடல்நலக் குறைபாடு சம்பந்தமாக முன்வைக்கப்படும் பாரியளவிலான பாசாங்குத்தனம் மற்றும் வஞ்சகத்தை வர்க்க நலன்களின் ஒரு வெளிப்பாடாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும். டைம்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியின் பிரதான கவலை ஒருபோதும், அரசியலமைப்பைச் சீர்குலைப்பதன் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்கள் மீதோ அல்லது அது நடைமுறைப்படுத்தி வரும் கொள்கைகள் மீதோ இருந்ததில்லை. வோல் ஸ்ட்ரீட் நலன்களையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியலுக்கான கட்டாய நிர்பந்தங்களையும் அச்சுறுத்தும் தொழிலாள வர்க்கத்தின் சமூக எதிர்ப்பு அதிகரிப்பதே அவர்களின் முக்கிய அச்சமாக உள்ளது. நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், அவர்கள் மிகவும் பயப்படும் எதிரான தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அணி வகுப்பதே ஆளும் வர்க்கத்தின் உள்ளுணர்வுபூர்வ விடையிறுப்பாக உள்ளது.