மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பிரித்தானிய மருத்துவ இதழ், போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கத்தின் “அரசியல்மயமாக்கல்,” “ஊழல்,” மற்றும் “விஞ்ஞானத்தின் மீதான அதன் அடக்குமுறை” பற்றி குற்றம்சாட்டி வழமைக்கு மாறான கட்டுரை ஒன்றை பிரசுரித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த கட்டுரை, “விஞ்ஞானத்தை அரசியல்மயமாக்குவது வரலாற்றின் சில மோசமான எதேச்சதிகாரிகள் மற்றும் சர்வாதிகாரிகளால் உற்சாகமாக பயன்படுத்தப்பட்டது, அதிலும் தற்போது ஜனநாயக நாடுகளில் பொதுவாக இது பின்பற்றப்படுவது வருந்தத்தக்கது. தற்போதைய மருத்துவ-அரசியல் சிக்கல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சாத்தியங்களை அதிகரித்து, அவர்களை மேலும் செழிப்புள்ளவர்களாக்க விஞ்ஞானத்தை அடக்குவதற்கு தூண்டுகிறது. மேலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் மிகவும் வெற்றிகரமானவர்களாகவும், பணக்காரர்களாகவும், அத்துடன் கூடுதலான அதிகார போதைக்கு அவர்கள் ஆளாகும் நிலையிலும், விஞ்ஞானத்தின் சிக்கலான உண்மைகள் நசுக்கப்படுகின்றன. மேலும், எப்போது சிறந்த விஞ்ஞானம் நசுக்கப்படுகிறோதோ, அப்போது மக்கள் இறக்கிறார்கள்” என்று தெரிவித்து நிறைவு செய்தது.
பிரித்தானிய மருத்துவ சங்க இதழின் தலையங்கம், மனிதகுலப் பேரழிவை உருவாக்கிய கோவிட்-19 பெருந் தொற்றுநோய்க்கு பிரித்தானிய ஆளும் வர்க்கம் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கை மூலம் பதிலிறுத்தமை குறித்து குற்றம்சாட்டுவதாக உள்ளது. தேசியளவிலான சமூக முடக்கங்களுக்கு விஞ்ஞானிகள் விடுக்கும் அழைப்புக்களையும், பணியிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை தொடர்ந்து திறந்து வைத்திருப்பதனால் விளையும் கடும் தாக்கங்களைப் பற்றிய அவர்களது எச்சரிக்கைகளையும் ஒவ்வொரு கட்டத்திலும் அரசாங்கம் புறக்கணித்து வந்துள்ளது.
நவம்பர் 11 அன்று, இங்கிலாந்து 50,000 இறப்புக்கள் என்ற பயங்கரமான மைல்கல்லைக் கடந்தது. இது உத்தியோகபூர்வ எண்ணிக்கையாகும் என்பதுடன், தற்போது இது 52,745 ஆக உள்ளது, இதில் 28 நாட்களுக்குள் கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டவர்களில் இறந்தோர் எண்ணிக்கை மட்டுமே அடங்கும். என்றாலும் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள தேசிய புள்ளிவிபரங்களுக்கான அரசாங்க அலுவலகம் (ONS) மற்றும் பிற புள்ளிவிபர நிறுவனங்களின் படி, இறப்புச் சான்றிதழில் கோவிட்-19 நோய்தொற்று இருந்ததாக குறிப்பிடப்பட்ட 64,000 க்கும் மேற்பட்ட இறப்புக்கள் அங்கு நிகழ்ந்துள்ளன. தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததிலிருந்து, இங்கிலாந்து 70,000 க்கும் அதிகமான “அதிகப்படியான இறப்புக்களால்” பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 410 பேருக்கு மேலானோர் இந்த நோய்தொற்றுக்கு பலியானார்கள், இது ஒரு மாதத்திற்கு முன்னைய சராசரி இறப்பு வீதத்தை விட தோராயமாக நான்கு மடங்கு அதிகமானது. கடந்த வாரம் வியாழக்கிழமை நிலவரப்படி, அண்ணளவாக 15,000 கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றனர், இது ஒரு மாதத்திற்கு முன்னைய எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமானது, மேலும், 1,300 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு செயற்கை சுவாச வசதி அளிக்கப்பட்டது, இது ஒரு மாதத்திற்கு முன்னைய எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகமானதாகும்.
இவையனைத்தும், கோடை மற்றும் இலையுதிர் காலங்களில் பொருளாதாரம், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை பொறுப்பற்ற வகையில் மீண்டும் திறந்து வைத்திருந்ததனால் தூண்டிவிடப்பட்ட நோய்தொற்றுக்களின் கடும் எழுச்சியால் ஏற்பட்ட விளைவுகளாகும். உத்தியோகபூர்வமாக, புதிய நாளாந்த நோய்தொற்று எண்ணிக்கைகளின் ஏழு நாள் சராசரி 25,331 ஆகும். என்றாலும் இந்த எண்ணிக்கை அரசாங்கத்தின் பரிசோதனை அளவில் உள்ள கடும் சரிவால் வேண்டுமென்றே குறைத்துக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளை, ONS, ஒவ்வொரு நாளும் சுமார் 50,000 புதிய நோய்தொற்றுக்கள் ஏற்படுவதாக மதிப்பிடுகிறது.
தொற்றுநோய் நிலைமை “ஸ்திரப்படுத்தப்படுகிறது” என்று அறிவிக்க, நவம்பர் 4 அன்று தொடங்கப்பட்டு பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பல பணியிடங்களை திறந்தே வைத்திருக்கும் ஜோன்சன் அரசாங்கத்தின் “சமூக முடக்கம்” பற்றி பறைசாற்ற பெருநிறுவன ஊடகங்களின் வர்ணனையாளர்கள் ONS தரவை பற்றிக் கொண்டுள்ளனர். இது அரசாங்கத்தையும், அதன் கொலைகார கொள்கைகளையும் ஆதரிக்கும் இழிவான பிரச்சாரமாகும். ONS தரவு நோய்தொற்றுக்களின் அதிகரிப்பு விகிதம் குறைந்து வருவதை மட்டுமே காட்டுகிறது, இதன் பொருள் தொற்றுநோய் பரவல் மிக உயர்ந்த மட்டத்திலிருந்து இன்னும் அதிகரித்து வருகிறது என்பதாகும்.
நவம்பர் 6 வரையிலான முதல் வாரத்தில், இங்கிலாந்து முழுவதுமாக 710,000 க்கும் மேற்பட்டவர்கள் கோவிட்-19 பெருந் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். R0 (இனப்பெருக்க விகிதம்) தேசியளவில் 1 மற்றும் 1.2 க்கு இடைப்பட்டதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது அதிகரித்து வரும் நிகழ்வுகளைக் குறிக்கிறது, மேலும் தொற்றுநோய் பரவும் வீதம் தேசியளவில் அதிக ஆபத்தில் உள்ள வயோதிபர்களிடையே அதிகரித்து வருகிறது, மேலும் பிராந்திய ரீதியாக தென்கிழக்கு, தென் மேற்கு மற்றும் நாட்டின் வடகிழக்கில் அதிகரித்து வருகிறது. மேற்பரப்பில் நோய்தொற்று வீதம் சமீபத்தில் 100,000 பேருக்கு 783 என உயர்ந்தது, இது இங்கிலாந்து சராசரியின் மும்மடங்காகும்.
இலண்டனின் இம்பீரியல் கல்லூரியின் மதிப்புமிக்க தொற்றுநோயியல் நிபுணரான பேராசிரியர் நீல் ஃபெர்குசன் (Neil Fergusson), தற்போதைய சமூக முடக்கக் கட்டுப்பாடுகள் R0 ஐ வெறும் 0.8 அல்லது 0.9 ஆக குறைக்கும் என்று நம்புகிறார், மேலும் மிகுந்த நம்பிக்கைக்குரிய மாதிரிப்படுத்தலாக 0.6 என்றளவிற்கு கூட குறைந்து போகலாம் என்று கூறுகிறார். டிசம்பர் 2 இல் சமூக முடக்கங்கள் முடிவுக்கு வருகின்றபோது, நோய்தொற்று பரவும் வீதம் இன்னும் ஆபத்தான அளவில் அதிகமாக இருக்கும் என்பதுடன், மீண்டும் ஒரு முறை ஏராளமாக வெடித்து பரவும். அவசரகால நிலைகளுக்கான அரசாங்கத்தின் விஞ்ஞான ஆலோசனைக் குழு (The government’s Scientific Advisory Group for Emergencies-SAGE), தற்போதைய கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தவுடன் மீண்டும் செயல்படுத்தப்படவுள்ளதான அரசாங்கத்தின் “அடுக்கு அமைப்புமுறை” (“Tier System”) குளிர்காலத்தில் ஏற்படவுள்ள வைரஸ் நோய்தொற்றின் மற்றொரு எழுச்சியைத் தடுக்காது.
இந்த குளிர்காலத்தில் அதிகரித்து வரும் இறப்புக்கள் மற்றும் தேசிய சுகாதார சேவை சீர்குலைந்து போகும் என்று பரந்தளவில் கணிக்கப்பட்டது ஆகியவை பற்றி அச்சமடைந்த சமூக பின்னடைவைத் தடுக்க அரசாங்கம் தற்போதைய சமூக முடக்க நடவடிக்கைகளை மட்டுமே செயல்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் ஜனவரி மாதத்தை முன்னிட்டு, சில்லறை மற்றும் விருந்தோம்பல் வர்த்தகங்கள் பெருமளவு வீதத்தில் செயல்படுத்தப்படுகையில், முழு பொருளாதாரத்தையும் மீண்டும் திறப்பதற்கு போதுமான நேரத்தை வழங்கக் கோருவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
பெருவணிகத்தின் கோரிக்கைக்கு இணங்க வாழ்க்கைக்கு முன் இலாபங்களை முன்வைக்கும் அரசாங்கத்தின் நேற்றைய முடிவு, வெளிநாடுகளிலிருந்து இங்கிலாந்திற்கு வரும் பருவகால கோழித் தொழிலாளர்களுக்கு சமூக முடக்க விதிகளிலிருந்து விலக்கு அளிப்பதாகவே உள்ளது, இதனால் 14 நாள் தனிமைப்படுத்தலின் போதும் அவர்கள் நேராக வேலையைத் தொடங்கலாம். போக்குவரத்து செயலாளரான கிராண்ட் ஷாப்ஸ், இதன் மூலம் உணவு உற்பத்தியாளர்கள் வான்கோழிக்கான “கிறிஸ்துமஸ் கால தேவையை பூர்த்தி செய்ய முடியும்” என்பதே இதன் பொருள் என்று கூறினார்.
பெருநிறுவனங்களின் கிறிஸ்துமஸ் கால இலாபங்கள் பல்லாயிரக்கணக்கான உயிர்களை விலைகொடுத்து வாங்குவதாக இருக்கும். அரசாங்க அதிகாரிகள் நோய்தொற்றின் புதிய அலைகள் எழுச்சி பெறவுள்ளதை ஒப்புக்கொண்டு, மூன்றாம் கட்ட சமூக முடக்க நடவடிக்கைகள் அல்லது “சுற்றுப்பாதை உடைப்பான்கள்” என்றழைக்கப்படும் ஒரு தொடர் நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் பற்றி கேள்வியெழுப்பியுள்ளனர்.
இலாபமீட்டுதலுக்கு தடை ஏற்படுத்தக்கூடிய தேசியளவிலான எந்தவித கூடுதல் கட்டுப்பாடுகளையும் அமல்படுத்த வேண்டாம் என்று தனது 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த உத்தரவிற்கு கட்டுப்பட்டவராக ஜோன்சன் இருக்கிறார். தற்போதைய வகையிலான சமூக முடக்கத்தை எதிர்க்கும் பின்வரிசை டோரி கிளர்ச்சியாளர்களுக்கு, டிசம்பர் 2 க்கு பின்னர் சமூக முடக்கம் நீடிக்கப்பட மாட்டாது என ஜோன்சன் உறுதியளித்த பின்னரே கைவிடப்பட்டது. பைனான்சியல் டைம்ஸின் கூற்றுப்படி, வார இறுதியில் டோரி நன்கொடையாளர்களிடம் “மேலதிக கொரோனா வைரஸ் காரணமான சமூக முடக்க நடவடிக்கைகள் தவிர்க்கப்படக்கூடும்” என்று ஜோன்சன் கூறியுள்ளார்.
மற்றொரு சுகாதார பேரழிவு கட்டமைக்கப்படுகிறது. கோடையில், NHS சிகிச்சைக்காக காத்திருப்போரின் பட்டியல் கிறிஸ்துமஸூக்குள் 10 மில்லியனை எட்டக்கூடும் என்று NHS கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் 2 மில்லியன் பேர் 18 வாரங்களுக்கும் மேலாக சிகிச்சைக்காக காத்திருப்பதாக NHS தெரிவித்துள்ளது. கடந்த வார நிலவரப்படி, அண்ணளவாக 140,000 பேர் ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்கின்றனர், இது 2008 ஆம் ஆண்டுக்கு பின்னைய உச்சபட்ச எண்ணிக்கையாகும். இந்த பெப்ரவரியில், இந்த எண்ணிக்கை வெறும் 1,600 ஆக மட்டுமே இருந்தது.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்திலிருந்து 19 மில்லியனுக்கு குறைவாகவே பல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் செப்டம்பர்-அக்டோபர் நிலவரப்படி, பல் மருத்துவ நடவடிக்கைகள் இயல்பான மட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் அவசர சிகிச்சைக்காக தோராயமாக 300,000 என்றளவிற்கு குறைவான நபர்களே புற்றுநோய் நிபுணர்களை சந்தித்துள்ளனர், அதாவது ஒரு கால் பங்கு குறைந்துள்ளது. மேலும், புற்றுநோய்க்காக சிகிச்சையைத் தொடங்குவோரின் எண்ணிக்கை ஐந்தில் ஒரு பங்கு அளவிற்கு குறைந்துள்ளது. ஜூலை மாதத்தில், புற்றுநோய்க்கான சுகாதார ஆராய்ச்சி மையம், இந்த இடையூறின் காரணமாக ஒரு வருடத்திற்குள்ளாக இங்கிலாந்து 7,000 மற்றும் 35,000 க்கு இடைப்பட்ட எண்ணிக்கையில் கூடுதல் புற்றுநோய் இறப்புக்களை எதிர்கொள்ளக்கூடும் என்று முன்கணித்துள்ளது. தொற்றுநோய் பரவ ஆரம்பத்ததிலிருந்து, பிரிட்டன் ஏற்கனவே அண்ணளவாக கூடுதல் 5,000 இறப்புக்களை எதிர்கொண்டதாக British Heart Foundation அமைப்பு தெரிவித்துள்ளது, இது 7 சதவிகித அதிகரிப்பாகும்.
பூட்டுதல் கட்டுப்பாடுகளுக்கு எதிரான வாதமாக இந்த புள்ளிவிபரங்களை விற்க முயற்சிக்கும் ஆளும் வட்டாரங்களில் உள்ள மரண வணிகர்கள், மனிதகுலத்திற்கு எதிரானதொரு குற்றத்தை ஆதரிக்கின்றனர். சரிபார்க்கப்படாமல் விடப்பட்ட அனைத்து அனுபவங்களும், கோவிட்-19 வைரஸ் மக்கள்தொகை ஊடாக விரைந்து பரவுவதையும், அதனால் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறைகள் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிவதையும் காட்டுகிறது.
இதனுடன் தொடர்புபட்ட சம்பவம் என்பது “நீண்டகால கோவிட்” தொற்றுநோய் பரவியதாகும், கோவிட்-19 நோய்தொற்றுக்குப் பின்னைய நீண்டகால நோயறிகுறிகளின் தொகுப்பில், பொதுவாக சோர்வு, மூளைச் சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் சரீர ரீதியான வலிகள் அடங்கும். இந்த நிலையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை, என்றாலும் இந்த நோய்தொற்றின் தாக்கத்தால் இறப்பவர்களைக் காட்டிலும், ஏராளமான மக்களுக்கு இது சரீர ரீதியான நீடித்த சேதத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டுகிறது.
மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த 58 கோவிட்-19 நோயாளிகள் பற்றிய ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வின் ஆரம்பகட்ட தரவுகள், 60 சதவிகிதத்தினர் அவர்களது நுரையீரல்களிலும், 29 சதவிகிதத்தினர் அவர்களது சிறுநீரகங்களிலும், 26 சதவிகிதத்தினர் அவர்களது இதயங்களிலும், மேலும் 10 சதவிகிதத்தினர் அவர்களது கல்லீரல்களிலும் அசாதாரண சிரமங்களை உணர்ந்தனர் என்பதைக் கண்டறிந்தது. மேலும் இந்த ஆய்வு, மூளையின் சில பகுதிகளில் திசுக்களில் ஏற்பட்ட மாற்றங்களையும் கண்டறிந்தது.
இளைஞர்கள் மற்றும் நல்ல ஆரோக்கியமுள்ள குறைந்தளவு ஆபத்துள்ள நபர்கள் மீதான “நீண்டகால கோவிட்” தொற்றுநோயின் தாக்கம் குறித்த ஆரம்பகட்ட கண்டுபிடிப்புக்களை ஒரு தனிப்பட்ட ஆய்வு வெளியிட்டது. குறைந்த ஆபத்துள்ள 200 நபர்களில், 70 சதவிகிதம் பேருக்கு நோய்தொற்று ஏற்பட்டு நான்கு மாதங்களுக்குப் பின்னர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புக்களில் குறைபாடுகள் ஏற்பட்டிருந்ததாகவும், 25 சதவிகிதம் பேருக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புக்களில் குறைபாடுகள் ஏற்பட்டிருந்ததாகவும் கவர்ஸ்கான் ஆய்வு (Coverscan Study) தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் 500,000 பேர் வரை இதுபோன்ற நீண்டகால விளைவுகளுடன் வாழ்கிறார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், சிறப்பு சிகிச்சை மையங்களை அமைப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் NHS க்கு 10 மில்லியன் யூரோ என்றளவிற்கு அற்பமான நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சுகாதார நெருக்கடி, பரவலான சமூக பொருளாதார துயரங்களால் அதிகரித்து வருகிறது. இது குறித்து Resolution Foundation, “இந்த நெருக்கடி காலம் முழுவதும் தங்களது வருமானத்தில் வீழ்ச்சி கண்டவர்களில் பத்தில் மூன்று பங்கினர் தற்போது பொருள் இழப்பையும் சந்திக்கின்றனர்” என்று ஞாயிறன்று தெரிவித்தது. மேலும், முன்னாள் தொழிற் கட்சி பிரதமரான கோர்டன் பிரவுன், இதற்கு பதிலிறுப்பாக அரசாங்கம் “ஒரு புதிய வறுமை ஒழிப்புத் திட்டத்தை அறிவிக்கவில்லை என்றால், தேசியளவிலான ஒரு கிளர்ச்சியை அவர்கள் எதிர்கொள்வார்கள்” என்று எச்சரித்தார்.
நிதிய மற்றும் பெருநிறுவன தன்னலக்குழுவின் பொக்கிஷங்களிலிருந்து சமூக செல்வத்தை பெருமளவில் மறுபங்கீடு செய்வதால் மட்டும் இந்த பேரழிவை சரிசெய்ய முடியாது. மாறாக, இதற்கென ஒரு தடுப்பூசி பயன்படுத்தப்படும் காலம் வரும் வரை, பள்ளிகளுக்குச் செல்லாத குழந்தைகளுக்கும், வேலைகளுக்குச் செல்லாத தொழிலாளர்களுக்கும் தேவைப்படும் முழு ஆதரவை வழங்குவதுடன், சமூகத்திற்கு தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தொற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும், மேலும், பில்லியன் கணக்கிலான நிதி ஒதுக்கீடுகளை, சுகாதாரம், பொது சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு உள்கட்டமைப்பு ஏற்பாடுகளுக்காக வாரி வழங்க வேண்டும்.