தொழிலாள வர்க்கம் பேரழிவை முகங்கொடுக்கையில் இன்னமும் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் இல்லை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்,

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது மீதான கடுமையான அரசியல் மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இரண்டாம் உலக போரின் முடிவிற்கு பின்னர் ஐரோப்பாவில் நிகழ்ந்து வரும் முன்னோடியில்லாத மரணகதியிலான பேரழிவுக்கு மத்தியில், பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களும் அவற்றின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதாயத்திற்காக எளிதில் கையாள முடியாத போராட்டத்தில் சிக்கி உள்ளன.

Prime Minister Boris Johnson signed the Withdrawal Agreement for the UK to leave the EU on January 31st. [Credit: U.K. Prime Minister]

சட்டத்தின்படி, பிரிட்டன் ஜனவரி 1 இல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது. பிரெக்ஸிட்-க்கு பிந்தைய வர்த்தக உடன்படிக்கை எட்டப்படவில்லை என்றால், ஏற்றுமதி/இறக்குமதி வரிகள் மற்றும் ஒதுக்கீடுகளில் பிரிட்டன் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளின்படி வர்த்தகம் செய்யத் தொடங்கும்.

பல தொடர்ச்சியான "இறுதி காலக்கெடுவில்" சமீபத்தியது ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. “21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் ஓர் உடன்படிக்கை எட்டப்பட்டால்" மட்டுமே புத்தாண்டுக்கு முன்னதாக ஒரு பிரெக்ஸிட் உடன்பாட்டை தங்களால் நிறைவேற்ற முடியுமென ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர்கள் சென்ற வியாழக்கிழமையே அறிவித்திருந்தனர்.

பிரிட்டன் அரசு ஆதாரநபர் ஒருவர் கார்டியனுக்குக் கூறுகையில், “பேரம்பேசல்களுக்குள் நாங்கள் கொண்டு வந்துள்ள அடிப்படை கோட்பாடுகளுக்கு இணைந்த விதத்தில் ஓர் உடன்பாட்டை எட்ட, நாங்கள் தொடர்ந்து எல்லா வாய்ப்பு வழிகளையும் காண முயல்வோம்,” என்று குறிப்பிட்ட நிலையில், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் இவ்வாரமும் தொடர்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த தூதர் ஒருவர் கடந்த வாரம் டெலிகிராப் பத்திரிகைக்குக் கூறியவாறு, “டிசம்பர் 31 தான் ஒரேயொரு இறுதி காலக்கெடுவாக உள்ளது.”

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முறையே அவற்றின் நாடாளுமன்றங்களில் பின்னர் ஒரு மாதத்திற்குள் உத்தியோகபூர்வ ஒப்புதல் பெறும் வகையில், ஜனவரி 1 இல் உடன்படக்கூடிய "தற்காலிகமாக பொருந்தக்கூடிய" ஓர் உடன்பாட்டை அடுத்த ஒருசில நாட்களில் வழங்க சாத்தியக்கூறு உள்ளதா என்று பல அரசு பிரமுகர்களும் இப்போது விவாதித்து வருகின்றனர். ஆனால் வெவ்வேறு அரசுகளும் அதை மொழிபெயர்த்து, ஆய்வுக்குட்படுத்தி, எந்தவொரு உடன்பாட்டுக்கும் தேவையான வரிகளைச் சேர்த்து பின்னர் பேச்சுவார்த்தைகளுக்கு வருவதற்கு அங்கே நேரமில்லை, அதுவும் வரவிருக்கும் புத்தாண்டில் பிரிட்டன் "சட்டரீதியான குழப்பத்தில்" விடப்பட்டிருப்பதால் இதற்கான சாத்தியக்கூறு அதிகமாக உள்ளது.

பிரெக்ஸிட் இந்த புள்ளியை எட்ட அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பது பிரிட்டிஷ் முதலாளித்துவம் மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் கடுமையான அரசியல் பலவீனத்தின் மற்றும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான எதிர்விரோதங்கள் செறிந்திருக்கும் நிலையின் அறிகுறியாகும். பிரிட்டன் கடற்பகுதி மீதான மீன்பிடிப்பு உரிமைகளே இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு இடையே நிலவும் மிகப்பெரிய பிளவாக பெரும்பாலான ஆதாரநபர்கள் தெரிவிக்கின்றனர். பிரிட்டிஷ் கடற்பகுதியில் பிடிக்கப்படும் மீன்களின் பொருளாதார மதிப்பு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டால் மிகவும் அற்பத்தொகையாக உள்ளது — பிரிட்டிஷ் கடற்பகுதியில் பிரிட்டன் மீன்பிடி கப்பல்கள் 850 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கப்பல்களோ 650 மில்லியன் யூரோ மதிப்பிலும் மீன்கள் பிடித்துள்ளன.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இந்த பிரச்சினையில் பிரிட்டனுக்கு எதுவொன்றையும் விட்டுக்கொடுப்பதால் ஏற்படும் அரசியல் துணைவிளைவுகளைக் குறித்து கவலைக் கொண்டுள்ளார். 2022 இல் தேர்தலை முகங்கொடுக்கும் அவர், மரீன் லு பென்னின் பாசிசவாத கட்சியான தேசிய பேரணியின் ஆதரவாளர்களை வென்றெடுக்க அதிகரித்தளவில் வலதுசாரி குரலை உயர்த்தி வருகிறார். பிரிட்டிஷ் கடற்பகுதியில் மீன்பிடிப்பதுடன் நெருக்கமான பொருளாதார தொடர்புகளைக் கொண்டுள்ள கடற்பகுதிவாழ் சமூகங்கள் முக்கிய போட்டிநிலவும் பகுதிகளில் ஒன்றாக உள்ளடங்கி உள்ளன.

பிரிட்டனுக்கு எந்தவொரு முக்கிய விட்டுக்கொடுப்புகளையும் அனுமதிப்பது, அதிகரித்தளவில் முரண்பட்டுள்ள பலவீனமான இந்த ஒன்றியத்திலிருந்து உடைத்துக் கொள்வதற்கான ஏனைய முயற்சிகளை ஊக்குவிக்கும் என்பதே ஐரோப்பிய ஒன்றிய முன்னணி சக்திகளின் பிரதான கவலையாக உள்ளது.

ஜோன்சனை பொறுத்தவரை, அதன் கடற்பகுதி மீதான "பிரிட்டிஷ் இறையாண்மையை" பாதுகாப்பது, டோரிக்களின் அதிவலது தேசியவாத அரசியல் வட்டாரங்களுக்கு அதிமுக்கிய கவலைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது. பேச்சுவார்த்தைகள் சம்பந்தமாக கிடைக்கும் செய்திகள் துல்லியமாக இருக்கிறதென்றால், பிரெக்ஸிட் நடவடிக்கைக்குப் பின்னாலிருக்கும் உந்துசக்தி திட்டநிரலான தொழிலாளர் பாதுகாப்புகள், சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை ஐரோப்பிய ஒன்றியம் கீழறுப்பதைத் தடுக்கும் இயங்குமுறை பிரிட்டன் கைவிட நிர்பந்திக்கப்படுகிறது.

அதுபோன்ற எந்தவொரு பின்வாங்கலும் —ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிட்டனுக்கும் இடையே நிலவும் மிகப்பெரிய அதிகார சமநிலையாலும் மற்றும் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவுடன் நெருக்கமான கூட்டணி அமைப்பதற்கான பிரெக்ஸிட் ஆதரவாளர்களின் முன்னோக்கு தொடர்ந்து பொறிந்து வருவதாலும் இது அவசியப்படுகின்ற நிலையில்— இது டோரி கட்சியில் தீவிர பிளவுகள் ஏற்படும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. டோரி பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஐரோப்பிய ஆராய்ச்சி குழு உறுப்பினர்கள் ஒரு "மோசமான உடன்படிக்கையை" எதிர்த்து வாக்களிக்க அச்சுறுத்தி வருகின்றனர்.

பிரிட்டிஷ் முதலாளித்துவத்திற்கு முன்பில்லாத ஒரு நெருக்கடி காலக்கட்டத்தில் அரசாங்க கட்சியை ஒருங்கிணைத்து வைப்பதற்காக, ஜோன்சன், சிறிய பொருளாதார பிரச்சினைகள் மீது இராஜதந்திர கொள்கையைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார். இந்த இலக்கை பின்தொடர்வதில், அவர் பொருளாதார பேரழிவை எதிர்கொள்கிறார்.

உடன்பாடு எட்டப்படாத பிரெக்ஸிட்டுக்கு பிரிட்டிஷ் வணிகங்கள் தயாராக இல்லை என்று பொதுச்சபையின் பிரெக்ஸிட் குழு கடந்த வாரம் எச்சரித்தது. பிரிட்டிஷ் தொழில்துறை கூட்டமைப்பின் துணை இயக்குனர் இம்மாத ஆரம்பத்தில் கூறுகையில், “ஒரு பேரலை வருகிறதென்றால் தயாரிப்பு என்பது ஒரு அலையின் பாதுகாப்பை அர்த்தப்படுத்தாது. நீங்கள் மணல் மூட்டைகளை வேண்டுமானால் குவிக்கலாம், அது ஓரளவுக்குத்தான் உதவும், ஆனால் அப்போதும் தண்ணீர் உள்நுழைந்து விடும்,” என்றார்.

இந்த அபாயகரமான சாத்தியக்கூறுகள் ஐரோப்பாவின் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் சமீபத்திய அபிவிருத்தியால் இன்னும் கூர்மையான ஒருமுனைப்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. பிரிட்டனில் ஒரு புதிய இன்னும் அதிக வீரியம் மிக்க தொற்றுநோய் வைரஸ் வெளிப்பட்டிருப்பதால், அது பிரிட்டனில் இருந்து பயணியர்கள் வருவதற்கு மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதிகள் உள்ளடங்கலாக பல்வேறு நாடுகளில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்சுக்குள் பிரிட்டன் லாரி சரக்குகள் நுழைவதற்கு ஞாயிறன்று இரவு பிரான்ஸ் தடைவிதித்தது, அதுவும் வெறும் ஒரு சில மணி நேர முன்னறிவிப்புடனும், பிரிட்டிஷ் பிரதமருக்கு தகவல் அளிக்காமலும் செய்யப்பட்டது.

பிரெக்ஸிட் சேமிப்புக் கிடங்குகளின் சுமையாலும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளாலும் ஏற்கனவே முனங்கிக் கொண்டிருக்கும் பிரிட்டிஷ் துறைமுகங்கள், லாரிகள் ஐந்து மைல்களுக்கும் அதிகமாக நீளமாக வரிசையில் நின்று கொண்டிருக்கும் நிலையில், அவை குழப்ப நிலைக்குள் வீசப்பட்டுள்ளன. Road Haulage அமைப்பின் கொள்கை இயக்குனர் Rod McKenzie, “வினியோக சங்கிலி மீதான நாசகரமான பாதிப்பை" குறித்து எச்சரித்தார். “தொழிற்சாலை உதிரிப்பாகங்கள், புதிய மற்றும் தேங்கியிருக்கும் காய்கறிகள், கிறிஸ்துமஸ் பொருட்கள் அனைத்தும் என ஒவ்வொன்றையும் குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்,” என்றவர் தொடர்ந்து கூறினார்.

இந்த பாதிப்புகள் பிரிட்டிஷ் பொருளாதாரம் நெடுகிலும் உணரப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை காலை FTSE 100, சந்தை 3 சதவீதம் சரிந்து, நிறுவன பங்குகளில் இருந்து 50 பில்லியன் பவுண்டுகளை துடைத்தழித்தது, டாலர் மற்றும் யூரோவுக்கு எதிராக பவுண்டு குறிப்பிடத்தக்களவில் வீழ்ச்சி அடைந்தது. அது 1.7 சதவீதம் சரிந்து நிறைவடைந்தது. ஏற்கனவே கடந்த வாரம் இங்கிலாந்து வங்கியால் பிரிட்டனுக்கு இரட்டை இலக்க மந்தநிலை அனுமானிக்கப்பட்டுள்ளது.

தொழிலாள வர்கத்தின் வாழ்க்கை தரங்களை இன்னும் கூடுதலாக நாசப்படுத்துவதன் மூலமாகவே இந்த நெருக்கடியின் விலை அவர்கள் மீது சுமத்தப்படும், இது கடுமையான ஒரு வர்க்க போராட்ட காலக்கட்டத்திற்குக் கட்டியம் கூறுகிறது.

2019 இல், இந்த அரசாங்கம் உடன்பாடு எட்டப்படாத பிரெக்ஸிட் குறித்து அதன் முன்கணிப்பை வெளியிட நிர்பந்திக்கப்பட்டது, பகுதியாக இது “ஆபரேஷன் யெல்லோஹாமர்” (Operation Yellowhammer) என்ற குறியீட்டு பெயரில் கடந்தாண்டு ஓரளவு கசியவிடப்பட்டது. அந்த ஆவணம் சரக்கு போக்குவரத்து முடங்கும் என்றும், மருந்துகளையே பாதிக்கும் வினியோக வலையமைப்புகள் நீண்டகாலத்திற்குத் தொந்தரவுக்கு உள்ளாகும் என்றும், உணவு மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் என்றும் எச்சரித்தது. “பொது அமைதி குலைவு மற்றும் சமூக பதட்டங்களில் அதிகரிப்பை" அது அனுமானித்து.

இந்த கோடையில், மந்திரிசபை அலுவலக ஆவணம் ஒன்று கசியவிடப்பட்டது. அது ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்பாடு எட்டப்படாமல் வெளியேறுவது மற்றும் இந்த தொற்றுநோயின் இரண்டாம் ஆலை இவை இரண்டும் சேர்ந்தும், அத்துடன் வெள்ளப்பெருக்கு மற்றும் பருவகால சளிக்காய்ச்சல், “கிடைக்கக்கூடிய வருமானங்கள், வேலைவாய்ப்பின்மை, வியாபார நடவடிக்கை, சர்வதேச வர்த்தகம் மற்றும் சந்தை ஸ்திரப்பாடு" ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்தது. அந்த ஆவணம், விலை உயர்வுகள் மற்றும் பற்றாக்குறைகள் மீதும், “குறைந்த பொருளாதார குழுக்கள் மீது [குறிப்பிடத்தக்க] பாதிப்பு" மற்றும் உள்நாட்டு அமைதியின்மை குறித்தும் எச்சரித்தது.

இந்த சூழ்நிலைகள் இப்போது வந்து கொண்டிருக்கின்றன. கண்மூடித்தனமான ஒடுக்குமுறையே ஜோன்சன் அரசாங்கத்தின் ஒரே பதிலாக உள்ளது.

உடன்பாடு எட்டப்பட்டாத பிரெக்ஸிட் ஏற்பட்டால் பத்தாயிரக் கணக்கான சிப்பாய்களையும் கலகம் ஒடுக்கும் பொலிஸையும் நிலைநிறுத்தும் திட்டங்கள், மற்றும் டோரி பிளேயரின் 2004 குடியுரிமை அவசர செலவுச் சட்டத்தில் விவரிக்கப்பட்ட பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை பயன்படுத்தும் திட்டம் ஆகியவற்றின் பின்னணியில் தான் ஆபரேஷன் யெல்லோஹாமர் வடிவம் பெற்றது. சிப்பாய்களின் பல்லாயிரக்கணக்கான துருப்புகள் முன் எச்சரிக்கையில் வைக்கப்பட்டிருக்கும் என்ற அறிவிப்புடன் இந்தாண்டு தொடக்கத்தில் அவசரகால கொரொனா வைரஸ் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.

பிரெக்ஸிட்டும் கொரோனா வைரஸ் தொற்றுநோயும் அனைத்து வகை தேசியவாத அரசியல் முன்னோக்குகளின் அப்பட்டமான திவால்நிலையை உறுதிப்படுத்தி உள்ளன. சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு போலி-இடது வகையறாக்களாலும் ஜோன்சனின் பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு "இடது" திரை வழங்கப்பட்டதுடன், ஒரு சுதந்திர பிரிட்டன் சீர்திருத்தவாத மறுபிறப்பின் அடித்தளத்தில் இருக்கும் என்று வாதிடப்பட்ட நிலையில், அது அதிவலதின் வளர்ச்சிக்கும் மற்றும் தொழிலாள வர்க்கம் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கும் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமோ அதன் சொந்த மிக சக்திவாய்ந்த உறுப்பு நாடுகளின் பிற்போக்குத்தனமான தேசிய நலன்களை முன்னெடுப்பதற்காக மட்டுமே முயன்று வருவதுடன், அது எந்த முற்போக்கான எதிர்பலத்தையும் வழங்கவில்லை.

பிரிட்டனும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் அனைத்துமே அவற்றின் மிகப்பெரும் செல்வந்த தட்டுக்களின் இலாப நலன்களைப் பாதுகாக்கவும், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயும் தமக்கிடையேயும் நடத்தும் பொருளாதார போட்டியில் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தாலும், கோவிட்-19 வைரஸைக் கட்டுப்படுத்தி துடைத்தழிக்க அவசியமான படிகளை எடுக்க மறுத்துள்ளன.

ஆளும் வர்க்கத்தின் மற்றும் அதன் அனைத்து முகமைகளின் தேசியவாத, முதலாளித்துவ சார்பு அரசியலை எதிர்த்து ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேசியவாத சோசலிச இயக்கத்திற்காக போராடுவதன் மூலமாக மட்டுமே மில்லியன் கணக்கானவர்கள் முகங்கொடுக்கும் இந்த சமூக மற்றும் பொது சுகாதார நெருக்கடிக்கு ஒரு பதிலைக் காண முடியும். பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியும் இக்கண்டத்தில் உள்ள அதன் சகோதர கட்சிகளும் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்க முன்வருமாறு தொழிலாளர்களை அழைக்கின்றன.

 

Loading