முன்னோக்கு

பெருந்தொற்றும் ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பு சதியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதன்கிழமை, அமெரிக்காவில் கோவிட்-19 ஆல் 4,100 பேர் உயிரிழந்தனர், இது ஐந்தாவது நாளாக 4,000 உயிரிழப்புகளைக் கடந்திருந்தது. நாளாந்தம் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இந்தாண்டின் இதுவரையில் ஒவ்வொரு நாளும் 200,000 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

2021 இன் முதல் இரண்டு வாரங்களில், அமெரிக்காவில் கோவிட்-19 ஆல் 43,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அடுத்த மூன்று வாரங்களில் ஏறக்குறைய 90,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கக் கூடுமென நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) அனுமானிக்கிறது.

உலகளவில், இந்த மரண எண்ணிக்கை இரண்டு மில்லியனைக் கடந்துள்ளது. ஆனால் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் இந்த கொடூர யதார்த்தத்தின் ஒரு பகுதி வெளிப்பாட்டை மட்டுமே வழங்குகின்றன, கோவிட்-19 மரணங்கள் மீதான உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட உலகெங்கிலும் 30 சதவீதத்திற்கும் அதிகமாக "கூடுதல் மரணங்கள்" இருந்துள்ளதாக ஒரு சமீபத்திய பகுப்பாய்வு எடுத்துக்காட்டுகிறது.

ஏற்கனவே இந்த நாசகரமான பாரிய மரணங்கள் மற்றும் நோய்தொற்று மட்டங்களுக்குக் கூடுதலாக, இன்னும் அதிகளவில் தொற்றக்கூடிய கோவிட்-19 இன் ஒரு புதிய வகைகள் இன்னும் அதிக உயிரிழப்புகளுக்கு இட்டுச் செல்லும் என்று வல்லுனர்கள் இப்போது எச்சரிக்கின்றனர். மருத்துவ ஆய்விதழ் Stat கட்டுரை ஒன்று வியாழக்கிழமை குறிப்பிடுகையில், “அமெரிக்க கோவிட்-19 வெடிப்பு இப்போது மிகவும் கொடூரமாக தெரிகிறது என்றாலும், ஏறத்தாழ நிச்சயமாக அது இன்னும் மோசமாகக்கூடும்,” என்றது.

அந்த அறிக்கை தொடர்ந்து குறிப்பிட்டது, “அவை தென் ஆபிரிக்கா, பிரிட்டன் எங்கிலும், அதிகளவில், ஏனைய இடங்களிலும், போட்டிபோட்டு பரவியுள்ளன, இன்னும் அதிகளவில் தொற்றக்கூடிய கொரோனா வைரஸின் புதிய வகைகள் அமெரிக்காவில் கால் பதித்துள்ளன. அவை பரவுவதற்கு அனுகூலங்கள் உள்ள நிலையில், அவை பரவுவதை அமெரிக்கர்கள் விரைவாக தடுக்காவிட்டால், அவை பரவிவிடும் என்கின்ற நிலையில், அவை இங்கே இறங்கினால், நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, நாடு ஏற்கனவே ஆழமாக, மிக ஆழமாக பறிக்கப்பட்டுள்ள குழியில் ஒருவகை வெடிகுண்டு போல வந்து வெடிக்கும்.”

இந்த பாரியளவிலான மருத்துவ நெருக்கடியானது, டொனால்ட் ட்ரம்ப் தூண்டிவிட்ட ஜனவரி 6 பாசிசவாத கிளர்ச்சியைப் பின்தொடர்ந்தும் மற்றும் ஜனவரி 20 பதவியேற்பு தினத்தன்றும் அதற்கு முன்னரும் நாடெங்கிலும் தொடர்ந்து இருந்து வரும் பாசிசவாத வன்முறை அச்சுறுத்தல்களைப் பின்தொடர்ந்தும் அமெரிக்காவின் முன்நிகழ்ந்திராத அரசியல் நெருக்கடியுடன் ஒரே நேரத்தில் ஏற்பட்டுள்ளது.

ஆனால் வாஷிங்டன் சம்பவங்களைக் குறித்த ஊடகங்களின் முடிவில்லாத செய்திகளுக்கு மத்தியில், அவ்விரண்டையும் இணைத்துக் காட்ட அங்கே எந்த முயற்சியும் இல்லை. அரசியலமைப்பைத் தூக்கிவீசுவதற்கான ட்ரம்பின் முயற்சிக்கும் கடந்தாண்டு நெடுகிலும் நிர்வாகத்தினது கொள்கையின் மத்திய அம்சமாக இருந்துள்ள, இந்த வைரஸ் பரவலை நிறுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்க வேண்டியதில்லை என்ற வலியுறுத்தலுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்பதைப் போல உள்ளது.

உயிர்களைக் காப்பாற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மீதான எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்குவதே கடந்தாண்டில் ட்ரம்ப் வளர்த்தெடுத்த பாசிசவாத அமைப்புகளினது பிரதான வேலைத்திட்ட கோரிக்கையாக இருந்துள்ளது என்பது ஓர் அரசியல் உண்மையாகும். மார்ச் மாத கடைசியில் வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்புக்குப் பின்னர், ஏப்ரல் மற்றும் மே இல் ஒழுங்கமைக்கப்பட்ட பேரணிகளின் கோரிக்கையும் இதுவாக தான் இருந்தது. இதுதான், அக்டோபரில் அம்பலப்படுத்தப்பட்ட, மிச்சிகன் ஆளுநர் கிரெட்சன் விட்மரைக் கடத்தி கொலை செய்வதற்கான பாசிசவாத சூழ்ச்சியை ஊக்குவித்தது.

நவம்பர் தேர்தலுக்குப் பின்னர் ட்ரம்ப் அவரின் முதல் பகிரங்க உரையில், அவர் பதவியில் தங்கியிருக்க வேண்டும் என்று ஆளும் வர்க்கத்திற்கு விசயத்தைக் குறிப்பிட்ட அதேவேளையில், இந்த பெருந்தொற்றுக்கு அவரது நிர்வாகத்தின் விடையிறுப்பையும் இரண்டு மடங்கு குறைத்தார். மரண எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருந்த போது, நவம்பர் 16 இல் அவர் குறிப்பிடுகையில், “இந்த நிர்வாகம் அடைப்பு மேற்கொள்ளப் போவதில்லை,” என்று வலியுறுத்தினார். ஜனவரி 20 இல் யார் பதவியில் இருப்பார்கள் என்பதை “காலம் எடுத்துரைக்கும்” என்ற அதேவேளையில், “குணப்படுத்துதல் … பிரச்சினையை விட மோசமாக இருந்துவிடக் கூடாது,” என்ற அவரின் முந்தைய வலியுறுத்தலை மீண்டும் வலியுறுத்தினார்.

அவர் ஆட்கொலை கொள்கையை ஊக்குவித்து மத்திய வர்க்க நலன்களை வலியுறுத்திய ட்ரம்ப், பங்குச் சந்தைகள் "எல்லா காலத்திற்குமான சாதனையை முறியடிக்க தயாராக உள்ளது,” என்று குறிப்பிட்டு, அதன் உயர்வைச் சுட்டிக் காட்டினார்.

இந்த பெருந்தொற்றுக்கு விடையிறுப்பான ஆளும் வர்க்கத்தின் கொள்கைக்கும் அமெரிக்காவில் ஜனநாயக முறிவுக்கும் இடையே ஓர் இன்றியமையா தொடர்பு உள்ளது. அக்டோபரில் WSWS பின்வருமாறு எழுதியது:

இந்த பெருந்தொற்றுக்கு விடையிறுப்பதில் ஆளும் வர்க்க ஆட்கொலை கொள்கை, அமெரிக்காவில் முன்நிகழ்ந்திராத அரசியல் நெருக்கடியின் மையத்தில் உள்ளது. இந்த கொள்கையை நடைமுறைப்படுத்த, ஆளும் உயரடுக்கு முன்பினும் அதிக வன்முறை மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நாடுகிறது.

இந்த பெருந்தொற்றின் யதார்த்தம், இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ஜனநாயகக் கட்சியின் விடையிறுப்பையும் அடிக்கோடிடுகிறது. ஜனவரி 6 சம்பவங்களில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஜோ பைடென் தலைமையில் ஜனநாயகக் கட்சியினர் இந்த சூழ்ச்சியின் அளவை மூடிமறைக்க அவர்களால் ஆன அனைத்தையும் செய்து வருகின்றனர். பைடென் ஒரு "வலுவான" குடியரசுக் கட்சியின் தேவையை வலியுறுத்தி உள்ளதுடன், குறிப்பாக இந்த பெருந்தொற்றுக்கு எந்தவித சட்டபூர்வ விடையிறுப்பிலும் "இருகட்சிகளது ஒருமனதான சம்மதத்திற்கு" அவரின் "குடியரசுக் கட்சி நண்பர்களுக்கு" —அதாவது ட்ரம்பின் சக சதிகாரர்களுக்கு— முறையீடு செய்துள்ளார்.

வோல் ஸ்ட்ரீட்டின் ஒரு கட்சியாக, ஜனநாயகக் கட்சி, ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஓர் இயக்கம் எழுந்து, அது ஒட்டுமொத்த ஆளும் வர்க்கம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையுடன் ஒரு மோதலாக அபிவிருத்தி அடைந்து விடுமோ என்று மிகவும் அஞ்சுகிறது. அது, "பின்னோக்கி அல்ல, முன்னோக்கி" செல்வந்த தட்டுக்களின் கொள்கையுடன் நகர வேண்டியுள்ளது.

Politico இதழிலில் (“வோல் ஸ்ட்ரீட்டின் பெரும் விருப்பம்: தயவுசெய்து நகருங்கள்” என்பதில்) மேற்கோளிடப்பட்ட ஒரு வங்கி தலைமை செயலதிகாரி ஆளும் வர்க்கத்தின் மனோபாவத்தைத் தொகுத்தளித்தார். அந்த பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதியைக் குறித்து பேசுகையில், அவர் கூறினார்: “அதைச் சுற்றியுள்ள எல்லா உணர்வுகளும் எனக்கு புரிகிறது, அதைக் குறித்து மக்கள் எந்தளவுக்கு பலமாக உணர்கிறார்கள் என்பதும் புரிகிறது. அதில் எதையும் நான் ஒதுக்கிவிடவில்லை. ஆனால் இப்போது வலதை நோக்கி தீவிரமாக நாம் நகர வேண்டியுள்ளது, இதில் ஜோ பைடெனின் ஆட்கள் என்னுடன் உடன்படுவார்கள் என்று நினைக்கிறேன்,” என்றார்.

“முன்னோக்கி நகர்வது" என்றால் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையைத் தொடர்வது என்று அர்த்தம். கோவிட்-19 மரணங்களின் பேரழிவுகரமான அதிகரிப்புக்கு விடையிறுப்பாக உயிர்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு அழுத்தமளிப்பதை விட்டுவிட்டு, ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபகமும் மனித உயிர்களை விலையாக கொடுத்து பெருநிறுவனங்களின் இலாபங்களைப் பாதுகாக்கும் நோக்கில், பொருளாதாரத்தை மீண்டும் இன்னும் கூடுதலாக திறந்துவிட கோரி வருகின்றன.

ஜனநாயகக் கட்சியின் சிக்காகோ நகரசபை தலைவர் லாரி லைட்ஃபூட் வியாழக்கிழமை கூறுகையில், “சாத்தியமானளவுக்கு விரைவாக" அந்நகரின் மதுபானக் கூடங்களும் உல்லாச உணவு விடுதிகளும் உள்சேவைகளுக்கு மீண்டும் திறந்துவிடுவதை அவர் விரும்புவதாக தெரிவித்தார். புதன்கிழமை விட்மரே கூட, இரண்டு வாரங்களில் உள் உணவுக்கூடங்களை மீண்டும் திறந்துவிட அம்மாநிலம் திட்டமிட்டு வருவதை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், குழுவாக உடற்பயிற்சி செய்யும் வகுப்புகளையும் திறப்பதாக அறிவித்தார்.

வணிகங்களை மீண்டும் திறப்பதற்கான மிகவும் வெளிப்படையான வாதத்தை, மற்றொரு ஜனநாயகக் கட்சியாளர், நியூ யோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ வழங்கினார். அவர் அவரின் மாநில சட்டமன்ற உரையில், “தடுப்பூசி முக்கிய நபர்களை எல்லாம் எட்டும் வரையில் நாம் சர்வசாதாரணமாக அடைத்து வைத்திருக்க முடியாது. இதற்கான விலை மிகவும் அதிகமாக உள்ளது. பின்னர் திறப்பதற்கு நம்மிடம் ஒன்றும் இருக்காது. நாம் பொருளாதாரத்தை மீண்டும் திறந்து விட வேண்டும்,” என்றார்.

உலகிலேயே மிகவும் சமநிலையற்ற இடமாக, 113 பில்லியனர்கள் வாழுமிடமாக விளங்கும் நியூ யோர்க் நகரம் அமைந்துள்ள ஒரு மாநிலத்திற்கு குவாமோ தலைமை தாங்குகிறார்.

ஏறக்குறைய எந்த விதிவிலக்கும் இல்லாமல், அமெரிக்க பில்லியனர்கள் இப்போது ஓராண்டுக்கு முன்னர் இருந்ததை விட இன்னும் அதிகமாகவே செல்வந்தர்களாக உள்ளனர். இந்த பட்டியலில் முதலாவதாக இருப்பவர், டெஸ்லா மற்றும் SpaceX இன் தலைமை செயலதிகாரி எலொன் முஸ்க் ஆவார், இவர் இவ்வாரம் 201 பில்லியன் டாலருடன் உலகிலேயே மிகப்பெரும் செல்வந்தர் ஆனார். கடந்தாண்டு மட்டும், இந்த பெருந்தொற்றால் 400,000 க்கு நெருக்கமான அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ள போதும் கூட, 10 மில்லியன் வேலைகள் அழிக்கப்பட்டுள்ள போதும் கூட, முஸ்க் அதிர்ச்சிகரமாக 170 பில்லியன் சேர்த்திருந்தார்.

ஒரே ஆண்டில் ஒரேயொரு மனிதருக்கு 170 பில்லியன் டாலர் வழங்க முடிகிறது என்ற நிலையில், மனித உயிர்களைக் காப்பாற்றும் செலவுகளைச் சமூகத்தால் தாங்க முடியாது என்ற வாதம் அர்த்தமற்றதாக உள்ளது.

கோவிட்-19 க்கு விடையிறுப்பாக ஒவ்வொரு அம்சமும், தொழிலாள வர்க்க உழைப்பிலிருந்து இடைவிடாமல் இலாபங்களை உறிஞ்ச அனுமதித்து, சீறிக் கொண்டிருக்கும் இந்த பெருந்தொற்றுக்கு மத்தியில் மலிவு உழைப்பு கிடைப்பதை உறுதிப்படுத்துவதன் அடிப்படையில் உள்ளது. இவ்வாரம், தேசிய பொருளாதார கவுன்சிலின் பைடெனினது வரவிருக்கும் இயக்குனர் பிரைன் டீசெ ராய்டர் கூட்டத்தில் கூறுகையில், “நாம் பள்ளிகளை திறக்க வேண்டியுள்ளது, அப்போது தான் பெற்றோர்கள் … வேலைக்குத் திரும்ப முடியும்,” என்றார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அந்த கருத்துக்கள் மீது நியூ யோர்க் டைம்ஸ் கருத்துரைக்கையில் எதை அது "தொழிலாளர் சக்தி பங்களிப்பு" என்று குறிப்பிட்டதோ அதை அதிகரிக்க, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உயிர்கள் தியாகம் செய்யப்படுகின்றன.

அமெரிக்காவில் பாரிய மரணம் மற்றும் ஜனநாயகத்தின் ஒரு பொதுவான முறிவுக்கு மத்தியில், அமெரிக்க சந்தைகள் இந்த ஒட்டுமொத்த வாரமும் உயர்ந்தன என்பதைக் குறிப்பிடுவது மதிப்புடையதாக இருக்கும். “நாடாளுமன்ற கலகம் குறித்து பங்குச் சந்தை ஏன் கவலைப்படவில்லை" என்றவொரு கட்டுரையில், வாஷிங்டன் போஸ்ட் வோல் ஸ்ட்ரீட் வர்த்தகர் ஒருவர் கூறியதை மேற்கோளிட்டது, “அரசியலைக் குறித்து சந்தை அறிந்து கொள்வதில்லை… நாங்கள் ஜனநாயகமே சிறந்ததென நினைக்க விரும்புகிறோம். என்றாலும் இறுதியில், முதலீட்டாளர்கள் அதைக் குறித்து அதிகமாக கவனத்தில் கொள்வதில்லை என்று தெரிகிறது,” என்றார்.

கோவிட்-19 இல் இருந்து மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், அதைப் போலவே ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்கும் ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு கன்னை மீதும் நம்பிக்கை வைக்க முடியாது. இந்த பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த, அத்தியாவசியமல்லாத வணிகங்களை உடனடியாக மூடுதல், பரிசோதனை, நோய்தொற்றின் தடம் அறிதல், பாதுகாப்பான தனிமைப்படுத்தல் பகுதிகள், தடுப்பூசி ஆகியவற்றைக் கோர தொழிலாள வர்க்கத்தின் தலையீடு அவசியப்படுகிறது. இத்தகைய கோரிக்கைகளுக்காக போராட ஒவ்வொரு ஆலை, வேலையிடம் மற்றும் அண்டை பகுதிகளிலும் சாமானிய குழுக்களைக் கட்டமைக்குமாறும், சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறும் நாங்கள் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

Loading