மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சிகாகோவில் இப்போது ஒரு முக்கியமான போராட்டம் விரிவடைந்து வருகிறது. இது அமெரிக்காவிலும் சர்வதேசரீதியாகவும் தொழிலாளர்களுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்காவின் மூன்றாவது பெரிய பள்ளி மாவட்டத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதைத் தடுக்க கல்வியாளர்கள் உறுதியாக உள்ளனர். பள்ளிகள் மீண்டும் திறப்பதை விரைவில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை நடாத்திவரும் ஜனநாயகக் கட்சி மற்றும் சிகாகோ ஆசிரியர் சங்கம் (CTU) ஆகியவற்றுடன் அவர்கள் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள உலகெங்கிலும் உள்ள நாடுகளின் ஆளும் உயரடுக்கினர் பெற்றோர்களை மீண்டும் வேலைக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்த பள்ளிகளை மீண்டும் திறக்க முயல்கின்றனர். திங்களன்று, வைரஸின் புதிய வகைகள் நாடு முழுவதும் பரவினாலும் பிரேசிலின் சாவோ பாலோவில் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கத் தொடங்கி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களை மீண்டும் வகுப்பறைகளுக்கு அனுப்பியது. ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள டஜன் கணக்கான பிற நாடுகளிலும் இதேபோன்ற படுகொலைக் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன.
இந்த பிரச்சாரத்தின் உலகளாவிய தன்மை காரணமாக, சிகாகோ கல்வியாளர்களுடன் ஒன்றிணைவதற்கு தொழிலாள வர்க்கம் சர்வதேச அளவில் அணிதிரட்டப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் உயிர்களையும் பாதுகாப்பையும் பாதுகாப்பதில் சாத்தியமான பரந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
திங்கள்கிழமை மாலை, சிகாகோ பொதுப் பள்ளிகளின் (CPS) தலைமை நிர்வாக அதிகாரி ஜானிஸ் ஜாக்சன் மற்றும் ஜனநாயகக் கட்சி மேயர் லோரி லைட்ஃபூட் ஆகியோர் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தைத் தடுக்க 48 மணி நேர “விலக்குதலுக்குட்பட்ட காலம்” (“cooling off”) இருக்கும் என்று அறிவித்தனர். பள்ளிகளை மீண்டும் திறக்கும் திட்டத்தில் குறிப்பிடப்படாத அம்சத்தில் சிகாகோ ஆசிரியர் சங்கத்துடன் (CTU) ஒரு சமரசத்தை எட்டிய லைட்ஃபூட் மற்றும் ஜாக்சன், “நல்ல நம்பிக்கையின் சைகையாக, இப்போதைக்கு, ஆசிரியர்கள் தங்கள் கூகுள் கலந்துரையாடல் அறைக்கான (Google Suite) அணுகலைத் தக்க வைத்துக் கொள்வார்கள்” என்று கூறினார். அதாவது, இணையம் மூலமான கல்விகற்பிப்பது தடுக்கப்படாது.
சிகாகோ பொதுப் பள்ளிகளுக்கும் மற்றும் சிகாகோ ஆசிரியர் சங்கத்திற்கும் இடையே வரும் நாட்களில் எதுவும் மாறாது. அவை தொற்றுநோயின் மோசமான கட்டத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை உடன்பாட்டில் உள்ளன. அந்த நேரத்தில் ஏற்பட்ட ஒரே குறிப்பிடத்தக்க மாற்றம் என்னவென்றால், 300,000 க்கும் அதிகமான மக்கள் தொற்றுநோயாக்குள்ளாகி விடுவார்கள், மேலும் அமெரிக்கா முழுவதும் கோவிட்-19 இனால் குறைந்தது 6,000 பேர் இறப்பார்கள்.
ஜனவரி மாதத்தில் 97,917 பேர் இறந்த பின்னர், அமெரிக்காவில் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 454,213 ஆக உள்ளது. ஏனெனில் வைரஸின் அதிக தொற்றக்கூடிய வகைகள் நாடு முழுவதும் பெருமளவில் கண்டறியப்படவில்லை. மேலும் அதிகளவிலான குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வைரஸால் இறக்கின்றனர். வைரஸ் வோல் ஸ்ட்ரீட்டின் நலன்களுக்காக ஜனநாயகக் கட்சி இடைவிடாமல் பள்ளி மீண்டும் திறக்கப்படுவதை முன்தள்ளுகின்றது.
சிகாகோ பொதுப் பள்ளிகளும் சிகாகோ ஆசிரியர் சங்கமும் பைடென் நிர்வாகத்துடன் நாளாந்த தொடர்பில் உள்ளன. இதன் முக்கிய கொள்கை முன்மொழிவு ஏப்ரல் இறுதிக்குள் பெரும்பான்மையான பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்பதாகும். கல்வியாளர்களிடையே உள்ள எதிர்ப்பு தங்கள் கட்டுப்பாட்டை மீறுவதாக அச்சுறுத்துவதோடு, அமெரிக்காவிலும் உலக அளவிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களிடையேயும் எதிர்ப்பு அலைகளைத் தூண்டுகிறது என்பதை அவர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். இந்த காரணத்திற்காக, மாவட்டமும் தொழிற்சங்கமும் தங்கள் நேரத்தை ஒதுக்கி, அவர்கள் மீண்டும் திறக்க ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்று அவர்கள் உணரும் வரை சிகாகோ ஆசிரியர்களை தனிமைப்படுத்துகின்றனர்.
லைட்ஃபூட் ஆசிரியர்களுக்கு எதிராக "நடவடிக்கை எடுக்க" அச்சுறுத்தலை வெளியிட்டது என்பது ஒரு கடுமையான எச்சரிக்கையாக கருதப்பட வேண்டும். சிகாகோவில் உள்ள ஜனநாயகக் கட்சியினர், வெள்ளை மாளிகையுடன் ஒருங்கிணைந்து, சிகாகோ ஆசிரியர்களை உடனடியாக தொழிற்சங்கத்துடன் ஒரு உடன்படிக்கைக்கு வர முடியாவிட்டால், வேலைநீக்கம், அபராதம், பாரிய துப்பாக்கிச் சூடு மற்றும் பிற தண்டனை நடவடிக்கைகள் மூலம் கொடூரமாக அடக்கத் தயாராகி வருகின்றனர்.
லைட்ஃபூட்டின் அச்சுறுத்தலும் மற்றும் சிகாகோ ஆசிரியர் சங்கத்தின் பிரதிபலிப்பும் 1981 ஆம் ஆண்டின் நிகழ்வுகளைத் தூண்டுகின்றன. இதேபோன்ற தாக்குதல் அரசால் செயல்படுத்தப்பட்டபோது தொழிற்சங்கங்களால் அதற்கு பதிலளிக்கப்படவில்லை. ரொனால்ட் ரீகன் 13,000 நிபுணத்துவ விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் அமைப்பு (PATCO) தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை அடித்து நொறுக்கியதில் இருந்து 40வது ஆண்டு நிறைவை 2021 ஆம் ஆண்டுகுறிக்கிறது. அவர்கள் ஒரு குறுகிய வேலை வாரத்தையும், ஊதிய அதிகரிப்பையும் மற்றும் தங்கள் வேலைகளின் கடுமையான அழுத்தத்தைக் குறைக்க கூடுதலான தொழிலாளர்களை கோரினர்.
PATCO தொழிலாளர்களின் போராட்டம் AFL-CIO அதிகாரத்துவத்தால் தனிமைப்படுத்தப்பட்டு காட்டிக் கொடுக்கப்பட்டது. இது தொழிலாளர்கள் மத்தியில் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான தொடர்ச்சியான அழைப்புக்கு மத்தியில் அதன் மில்லியன் கணக்கான உறுப்பினர்களை ஒரு பரந்த போராட்டத்தில் அணிதிரட்ட மறுத்துவிட்டது.
சிகாகோவில் தற்போதைய மோதல் மற்றும் 2018 ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்களின் அலைகளைப் போலவே, PATCO வேலைநிறுத்தம் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையை குறித்ததுடன் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவ அரசிற்கும் இடையே ஒரு நேரடி மோதலை அடையாளம் காட்டியது. இன்று கல்வியாளர்களும் அனைத்து தொழிலாளர்களும் குடியரசுக் கட்சியினருக்குப் பதிலாக ஜனநாயகக் கட்சியை எதிர்கொள்வது என்பது இரு கட்சிகளும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கு சேவை செய்கின்றன என்ற அடிப்படை மார்க்சிச விளக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
PATCO வேலைநிறுத்தத்தின் தோல்வி அமெரிக்காவின் அனைத்து தொழிற்சங்கங்களுக்கிடையில் ஒரு வலதுசாரி திருப்பத்தை தொடக்கி, பல தசாப்தங்களாக முடிவில்லாத துரோகங்கள் மற்றும் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்கியது. இது அமெரிக்காவிலும் உலகளாவிய ரீதியிலும் உள்ள தொழிலாளர்களுக்கு ஆழ்ந்த அதிர்ச்சியாக இருந்தது. இது தொழிற்சங்க உடைப்பு மற்றும் Phelps Dodge, Greyhound, Hormel, Caterpillar மற்றும் பல பணியிடங்களில் பெரும் வேலைநிறுத்தங்களின் தோல்விகளுக்கு வழிவகுத்தது.
தேசியவாதம் மற்றும் சீர்திருத்தவாதத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சங்கங்களின் வேலைத்திட்டமானது, பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியாலும் மற்றும் நாடுகடந்த நிறுவனங்களினால் குறைந்த ஊதியங்களையும் மிகக் கொடூரமான சுரண்டலையும் கொண்ட எந்த இடங்களுக்கும் உற்பத்தியை மாற்றுவதற்கான திறனினால் தனது அடித்தளத்தை இழந்துள்ளது.
இந்த நேரத்தில், அனைத்து ஆசிரியர் சங்கங்களும் ஜனநாயகக் கட்சியுடன் ஒருங்கிணைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, அமெரிக்க ஆசிரியர் கூட்டமைப்பு (AFT) தலைவர் ராண்டி வைன்கார்டன் இப்போது ஜனநாயக தேசியக் குழுவில் (DNC) அமர்ந்து முதல் பெண்மணி ஜில் பைடெனுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளார். PATCO வேலைநிறுத்தம் நடந்த நேரத்தில் இன்றுள்ள மில்லியன் கணக்கான ஆசிரியர்கள் பிறந்திருக்கவில்லை. ஆனால் அவர்கள் இந்த துரோகத்தின் விளைவுகளை எதிர்கொண்டு, தங்கள் சொந்த சுயாதீன நலன்களுக்காக போராட புதிய அமைப்புகளை கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்தை எதிர்கொள்கின்றனர்.
இன்று, தொழிலாள வர்க்கம் மீண்டும் போராட்டத்தில் நுழைகிறது. PATCO தொழிலாளர்களை அரசு தாக்கியபோது, தொழிற்சங்கங்கள் அவர்களை தனிமைப்படுத்தி அவர்களை பாதுகாத்துக் கொள்ள முடியாது செய்துவிட்டது. இது மீண்டும் நடக்கக்கூடாது! தொழிற்சங்கங்கள் திணிக்க முயற்சிக்கும் தவிர்க்கமுடியாத துரோகங்களுக்கு எதிரான தொழிலாளர்களின் குரலாக சேவை செய்ய சுயாதீன சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்க அனைத்து முயற்சியும் எடுக்கப்பட வேண்டும்.
சிகாகோ ஆசிரியர் சங்கம் போன்ற போலி-இடது உள்ளூர் அமைப்புகள் உட்பட இன்று தொழிற்சங்கங்கள் இந்த வார்த்தையின் எந்த அர்த்தத்திலும் தொழிலாளர் அமைப்புகளாக இல்லை. வர்க்கப் போராட்டத்தை அடக்குவதற்கான ஆளும் வர்க்கத்தின் கருவிகளாக அவை மாற்றப்பட்டுள்ளன.
உலகளவிலான கல்வியாளர்களைப் பொறுத்தவரை, பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த எதுவும் இல்லை. இது அவர்களினதும் அதே போல் அவர்களின் மாணவர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகம் அனைத்திற்குமான வாழ்க்கை மற்றும் பாதுகாப்பின் இருத்தலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில் மட்டும், மழலைகள் பள்ளியிலிருந்து தரம் 12 வரையில் குறைந்தது 689 தொழிலில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற கல்வியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கோவிட்-19 காரணமாக இறந்துவிட்டனர். அதே நேரத்தில் 2.7 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பள்ளிகளை "பாதுகாப்பாக" மீண்டும் திறக்க முடியும் என்று கூறும் பெருநிறுவன ஊடக முடிவற்ற சரமாரியான பிரச்சாரம் இருந்தபோதிலும், தொற்றுநோய் பற்றிய விஞ்ஞானம் இது ஒரு பொறுப்பற்ற மற்றும் படுகொலை முயற்சி என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் இப்போது ஒரு மகத்தான சமூகப் போராட்டமாக உருவாகி வருகிறது. சிகாகோ ஆசிரியர்கள் அனைத்து தொழிலாளர்களிடையே வளர்ந்து வரும் போர்க்குணத்திற்கு ஆரம்ப வெளிப்பாட்டைக் கொடுத்துள்ளனர். சமுதாயத்தில் இரண்டு பெரிய வர்க்கங்களான தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலான மோதல்கள் பெருகிய முறையில் முன்னணிக்கு வருகின்றன.
ட்ரம்ப் தலைமையிலான ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கும் முயற்சியில் ஜனவரி 6 ஆம் திகதி பாசிஸ்டுகள் அமெரிக்க காங்கிரஸை தாக்கினர். இன்று, சிகாகோவில் மிகவும் சக்திவாய்ந்த சக்தி காட்சிக்கு வருகிறது.
கடந்த 40 ஆண்டுகளில் தொழிலாள வர்க்கத்தின் மீதான இடைவிடாத தாக்குதல், இன, பாலினம் மற்றும் பாலியல் அடையாள அரசியலின் இடைவிடாத ஊக்குவிப்புடன் சேர்ந்துள்ளது. லோரி லைட்ஃபூட் இப்போது பள்ளிகளை மீண்டும் திறக்கும் படுகொலை பிரச்சாரத்தின் முன்னணியில் இருப்பது, தீர்க்கமான பிரச்சினை வர்க்கம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
சிகாகோவில் வெளிவரும் போராட்டம் பிரமாண்டமான முக்கியத்துவம் வாய்ந்ததுடன் மற்றும் நாடு தழுவிய அரசியல் பொது வேலைநிறுத்தத்தில் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் பரந்த இயக்கத்தின் முன்னணியாக வரவேண்டும். இது உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்பி மற்றும் உலகளவில் இதேபோன்ற போராட்டங்களைத் தூண்டும்.
சிகாகோ கல்வியாளர்களின் போராட்டத்தை அமெரிக்கா மற்றும் உலகளவில் கல்வியாளர்களுடனும், தொழிலாள வர்க்கத்தின் மற்ற ஒவ்வொரு பிரிவினருடனும் இணைக்க சோசலிச சமத்துவக் கட்சி அனைத்து முயற்சிகளையும் செய்யும். இந்த போராட்டங்களை ஒரு வெற்றிகரமான முடிவுக்கு வழிநடத்த தேவையான தலைமையை வழங்க நாங்கள் போராடுவோம். இதற்கு தற்போதுள்ள சொத்துறவுகளை சோசலிச மாற்றத்திற்கு உள்ளாக்குவது, செல்வத்தின் பரந்த மறுபகிர்வு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக சமூகத்தை மீள்கட்டியெழுப்புதல் ஆகியவை இறுதியாக தேவைப்படுகின்றது.