முன்னோக்கு

ஒரு நூற்றாண்டு கால சூறையாடலுக்குப் பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய அமெரிக்க அகதிகளை திரும்ப அனுப்புகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

எல் சால்வடோர், ஹோண்டுராஸ் மற்றும் குவாத்தமாலா மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கினர், அதாவது 2 மில்லியன் பேர் வரவிருக்கும் மாதங்களில் அமெரிக்காவிற்கு தப்பிச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அமெரிக்கா முழுவதும் முன்னோடியில்லாத வகையில் மனித வெளியேற்றம் நடந்து வருகிறது. அமெரிக்க அரசாங்கம் அதன் கதவுகளை அடைத்தும், தஞ்சம் கோருவோருக்கான உரிமையை இரத்து செய்தும், ஆதரவற்ற 15,000 குழந்தைகளைச் சட்டத்தை மீறியவர்களாக தடுப்புக்காவலில் வைத்து விடையிறுத்துள்ளது. இது தான் பாரியளவிலான மனித அவலங்களுக்கு முதலாளித்துவ அமைப்புமுறையின் காட்டுமிராண்டித்தனமான, பகுத்தறிவற்ற விடையிறுப்பாக உள்ளது.

பெருநிறுவன ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும் தஞ்சம் கோருவோருக்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க பைடென் நிர்வாகத்தை நிர்பந்திக்கும் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளன. "பைடென் நிர்வாகம் எல்லை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தத் தவறியது" என்று தாக்கிய பெஸோஸ் க்கு சொந்தமான வாஷிங்டன் போஸ்ட் இன் ஒரு தலைப்பு இதற்கொரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாகும்.

பைடெனை ஆதரிப்பதன் மூலம் புலம்பெயர்ந்தோர் மீதான ட்ரம்பின் பாசிசவாத தாக்குதலை தோற்கடிக்க முடியுமென மில்லியன் கணக்கான வாக்காளர்கள் நம்பியிருந்த வேளையில், இந்த புதிய நிர்வாகமோ அந்த முன்னாள் ஜனாதிபதியின் கொள்கைகளை மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கிறது. பைடெனின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை செயலர் ABC இன் "இந்த வாரம்" நிகழ்ச்சியில் மார்தா ராடாட்ஸிடம் பேசுகையில் புலம்பெயர்ந்தோரை அச்சுறுத்தினார்: “சேதி மிகவும் தெளிவானது, வராதீர்கள். எல்லை மூடப்பட்டுள்ளது, எல்லை பாதுகாக்கப்பட்டுள்ளது.”

குழந்தைகளைச் சிறையில் அடைப்பது, குடும்பங்களிலிருந்து அவர்களைப் பிரிப்பது, எல்லையை இராணுவமயமாக்குவது மற்றும் பெருந்திரளான மக்கள் நாடு கடத்தப்படுவது மீது அங்கே இருகட்சிகளிடையே ஒருமனதான உடன்பாடு உள்ளது, ஆனால் இந்த சுயதிருப்தி கொண்ட ஊடங்கங்களில் அந்த வடக்கு முக்கோண நாடுகளின் சமூக பொறிவுக்கான மூலகாரணங்களைக் குறித்து ஒருபோதும் எந்தவொரு விவாதமும் இல்லை. மத்திய அமெரிக்காவில் மேலோங்கி உள்ள வறுமை மற்றும் வன்முறை ஏதோ வருந்தத்தக்க தற்செயலான விபத்தின் விளைவாக சித்தரிக்கப்படுகின்றன.

A U.S. Customs and Border Protection vehicle is seen next to migrants after they were detained and taken into custody, Sunday, March 21, 2021, in Abram-Perezville, Texas. (AP Photo/Julio Cortez)

உண்மை என்னவென்றால், அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் சமூகக் சீர்கேட்டுக்கான குற்றவாளி, மில்லியன் கணக்கானவர்கள் ஒரு பேராபத்தில் இருந்து தப்பிப்பிழைக்க நகர்கிறார்கள் என்றால் அது அமெரிக்காவினால் செய்யப்பட்டது. அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஹோண்டுராஸ், குவாத்தமாலா மற்றும் எல் சால்வடோரை முறையாக அழித்து, இயற்கை வளங்களை சூறையாடி, அங்கே தொழிலாள வர்க்கத்தின் உழைப்பு சக்தியைச் சுரண்டி, நிலங்களைக் கொள்ளையடித்து, மக்களைப் பட்டினியில் கிடத்தி, பொதுக் கருவூலத்தைத் திவாலாக்கி, அதேவேளையில் தன்னை வளப்படுத்திக் கொண்டுள்ளது.

தற்போது ஒவ்வொரு நாட்டையும் நடத்தும் அரசாங்கங்கள் அமெரிக்க பெருநிறுவனங்களின் கட்டளைகளை அமல்படுத்துவதற்கும் அந்த அரைக்கோளம் முழுவதும் சமூக எதிர்ப்பை நசுக்குவதற்கும் அமெரிக்கா விதிக்கும் பொலிஸ் அரசு சர்வாதிகாரங்களில் அவற்றின் வேர்களைக் கொண்டுள்ளன.

பெரு மந்தநிலைக்குப் பின்னர் சுமார் இரண்டு தசாப்தங்களாக, குவாத்தமாலா, எல் சால்வடோர் மற்றும் ஹோண்டுராஸ் ஆகியவை ஒருங்கிணைந்த பழ நிறுவனத்தின் (United Fruit Company) சார்பாக தொழிலாளர்கள் விவசாயிகளை வழமையாக படுகொலை செய்த சர்வாதிகாரிகளால் ஆளப்பட்டன. 1932 இல், எல் சால்வடோரின் பாசிசவாத ஜனாதிபதி மாக்சிமில்லினோ ஹெர்னான்டஸ் மார்ட்டினேஸ் (Maximiliano Hernandez Martinez) அமெரிக்க பெருநிறுவனங்களுக்கு எதிராகவும் அகுஸ்டின் ஃபராபுண்டோ மார்டி (Agustin Farabundo Marti) தலைமையிலான உள்ளூர் நில உரிமையாளர்களுக்கு எதிராகவும் கிளர்ச்சியில் ஈடுபட்ட 40,000 விவசாயிகளை படுகொலை செய்தார். குவாத்தமாலாவின் ஜோர்க் யுபிகோ (Jorge Ubico) ஹிட்லரின் புகழ்பாடுபவர் என்பதோடு, அமெரிக்கா மற்றும் ஐக்கிய பழ நிறுவனத்தின் (United Fruit Company) நெருங்கிய கூட்டாளியாவார்.

1954 இல், அமெரிக்கா நிலச் சீர்திருத்தங்களில் குறுக்கிட்டு, குவாத்தமாலாவின் ஜனாதிபதி ஜகோபோ அர்பென்ஸை (Jacobo Arbenz) அதிகாரத்திலிருந்து நீக்குவதற்காக ஒரு ஆட்சிக் கவிழ்ப்புச் சதியை நடத்தியது. "ஆட்சியைக் கைப்பற்றி இருந்த ஒரு கம்யூனிஸ்ட் அரசாங்கத்திலிருந்து நாங்கள் விடுபட வேண்டியிருந்தது,” என்று கூறி டுவைட் ஐசன்ஹோவர் பின்னர் அதை ஒப்புக் கொள்ளவிருந்தார்.

தசாப்த கால அந்த சர்வாதிகாரத்தைத் தொடர்ந்து, இலத்தீன் அமெரிக்காவின் வெளியில் தெரியும் நரம்புகள் (Open Veins of Latin America) என்ற அவரது நூலில் எட்வர்டோ கலியானோ (Eduardo Galeano) அதை குணாம்சப்படுத்தி இருந்தார்:

குவாத்தமாலா பார்தலோமு அருட்தந்தையின் ஒரு நீண்ட இரவுக்கு உட்பட்டிருந்த போது உலகம் திரும்பி பார்க்கவே இல்லை. [1967 இல்,] கஜான் டெல் ரியோ கிராமத்தின் ஆண்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள்; டைட்டூக் கிராம ஆண்களின் குடல்கள் கத்தியால் கிழிக்கப்பட்டன; பெய்ட்ரா பராடாவில் அவர்கள் தோல்கள் உரிக்கப்பட்டன; அகுவா பிளாங்கா டு இபாலாவில் அவர்கள் கால்களில் சுடப்பட்டு பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர். கிளர்ச்சியில் இருந்த ஒரு விவசாயின் தலை, சான் ஜோர்ஜ் சதுக்கத்தின் மையத்தில் உள்ள ஒரு கம்பத்தில் தொங்கியது. செர்ரோ கோர்டாவில் Jaime Velázquez இன் கண்கள் ஊசிகளால் நிரம்பியிருந்தன… இந்த நகரங்களில், பிரயோசனமற்றவர்களின் வீட்டு கதவுகளில் கருப்பு குறியீடுகள் குறிக்கப்பட்டிருந்தன. குடியிருப்பாளர்கள் வெளியேறும்போது இயந்திர துப்பாக்கியால் அவர்கள் சுட்டுத் தள்ளப்பட்டு, அவர்களின் உடல்கள் பள்ளத்தாக்கில் வீசியெறியப்பட்டன.

1970 கள் மற்றும் 80 களில், அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை இன்னும் பெரிய பெருந்திரளான மக்கள் சுடுகாடாக மாற்றியது, இனப்படுகொலை போர் நடத்துவதற்காக படுகொலைப் படைகளை நிலைநிறுத்தியதுடன், ஹோண்டுராஸின் அண்டை நாடான நிக்கராகுவாவில் சாண்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணியை நசுக்குவதற்கான முயற்சிகளுக்கு ஹோண்டுராஸைக் களமாக பயன்படுத்தியது.

எல் சால்வடோர் மற்றும் குவாத்தமாலாவில் சர்வாதிகாரங்களை அமெரிக்கா ஆதரித்தது, பயிற்சியளித்தது, ஆயுத உதவிகள் செய்தது. எல் சால்வடோரின் உள்நாட்டுப் போரின் போது, ஃபாராபுண்டோ மார்டி (Farabundo Martí) தேசிய விடுதலை முன்னணிக்கு எதிரான தீயிட்டு கொளுத்தும் தரைப்படை நடவடிக்கையில் 80,000 பேர் கொல்லப்பட்டனர், ஒரு மில்லியன் பேர் இடம்பெயர்ந்தனர். 1982-83 இல் இருந்து வெறும் ஓராண்டில், குவாத்தமாலாவின் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி எஃப்ரைன் ரியோஸ் மான்ட் பழங்குடியினருக்கு எதிரான ஓர் இனப்படுகொலை நடவடிக்கையில் 75,000 பேரைக் கொன்றார். 1982 இல், ரொனால்ட் ரீகன் மான்ட்டைச் சந்தித்தார், அவரது செயல்களைப் பாதுகாத்ததுடன், "தனிப்பட்ட நேர்மையும் அர்ப்பணிப்பும் கொண்ட மனிதர்" என்றவரைக் குறிப்பிட்டார்.

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மீதான இந்த துதிபாடல்கள் வெறுமனே ஒரு கடந்தகால விசயமல்ல. 2009 இல், தன்னை ஒரு சமூக சீர்திருத்தவாதி என்றும் வெனிசூலாவின் ஹூகோ சாவேஜின் கூட்டாளி என்றும் காட்டிக்கொண்ட மானுவல் ஜெலாயா தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹோண்டுரான் அரசாங்கத்திற்கு எதிராக ஒபாமா நிர்வாகம் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை முடுக்கிவிட்டது.

தகவல் சுதந்திர சட்ட கோரிக்கை மூலம் 2017 இல் வெளியிடப்பட்ட ஆவணங்கள், அமெரிக்க இராணுவம் மற்றும் வெளியுறவுத் துறையின் உயர் மட்டம் சம்பந்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகின்றன, அப்போது அந்த துறைக்கு ஹிலாரி கிளிண்டன் தலைமை தாங்கி இருந்தார். ஹோண்டுரான் இராணுவத்தால், ஜெலாயா அவரின் பைஜாமாவுடன் கைகள் பின்னால் கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர், “ஹோண்டுரான் ஆயுதப்படைகள் மற்றும் நடப்பிலுள்ள ஆட்சியின் கூறுபாடுகளுடன் சேர்ந்து செயல்பட" தனது ஒப்புதலை வழங்கி கிளிண்டன் ஹோண்டுராஸில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு கடிதம் எழுதினார். ஹோண்டுரான் ஆட்சி கண்மூடித்தனமான சிக்கன நடவடிக்கைகளின் மிருகத்தனமான ஆட்சியை நடைமுறைப்படுத்தியது, பெர்டா கேசெரெஸ் போன்ற ஆர்வலர்களைக் கொன்றது, இன்றோ சக்திவாய்ந்த போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் சிறிதளவே மூடிமறைக்கப்பட்ட கூட்டணியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அமெரிக்கா இன்னும் கூடுதலான குற்றங்களுக்குத் தயாரிப்பு செய்து வருகிறது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் "போட்டி முனை … அதுவும் குறிப்பாக சீன செல்வாக்கு என்று வரும் போது, [இலத்தீன் அமெரிக்காவில்] அழிந்து வருகிறது,” என்று அமெரிக்க தெற்கு கட்டளையகத்தின் (SOUTHCOM) அட்மிரல் கிரெக் ஃபெல்லர் டிசம்பரில் பத்திரிகைகளுக்குத் தெரிவித்தார். "உலகளாவிய விதிகளுக்கு இணங்கி இருக்க" சீனாவைக் கட்டாயப்படுத்தும் பொருட்டு அமெரிக்கா இலத்தீன் அமெரிக்காவில் ஒரு செயலூக்கமான பிரசன்னத்தைக் கொண்டிருக்கும் என்று ஃபெல்லர் அறிவித்தார்.

ஒரு நூற்றாண்டு கால ஏகாதிபத்திய சுரண்டலின் விளைவாக, மத்திய அமெரிக்கா உலகிலேயே மிகவும் சமநிலையற்ற பகுதியாகி உள்ளது. ஹோண்டுரான், சால்வடோர் மற்றும் குவாத்தமாலாவின் அறுபது சதவிகித மக்கள் அவர்களது நாடுகளின் வெகு குறைவான வறுமை கோட்டிற்குக் கீழே வாழ்கிறார்கள். மக்கள் தொகையில் எழுபது சதவீதம் பேர் முறைசாரா தொழிலில் மட்டுமே வேலை செய்கிறார்கள். அப்பகுதியில் பத்து முதல் 20 சதவீதம் வரை மின்சாரம் இல்லை. மக்கள் தொகையில் கால்வாசி பேர் கல்வியறிவற்றவர்கள். அமெரிக்காவிலுள்ள அவர்களின் உறவினர்களிடமிருந்து வரும் பணம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ஆறில் ஒரு பங்காக உள்ளது. நூறாயிரக் கணக்கான தொழிலாளர்கள், வோல்மார்ட், மேசி மற்றும் கோல் போன்ற அமெரிக்க ஆயத்த ஆடை பெருநிறுவனங்களுக்கு சில்லரை விற்பனையில் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஜவுளிகள் உற்பத்தி நிறுவனங்களில் மலிவுழைப்பு கூடங்களில் உழல்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் மத்திய அமெரிக்காவை சீரழித்துள்ளது, மில்லியன் கணக்கானவர்கள் ஆழமாக வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர், அப்பிராந்தியம் எங்கிலும் பரந்த பட்டினி குறித்து ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுக்க இட்டுச் சென்றுள்ளது. புலம்பெயர்ந்தோர் தடுப்புக்காவல் மையத்தில் நோய்தொற்றுக்கு உள்ளான பலரை அமெரிக்கா நாடு கடத்தியதாலேயே ஆரம்பத்தில் அந்த வைரஸ் அங்கே பரவியது. அமெரிக்கா தடுப்பூசிகளைக் கையிருப்பு வைத்திருக்கும் அதேவேளையில், அங்கே மருத்துவமனைகளோ நிரம்பி வழிவதுடன், பரிசோதனைகளும் போதுமானளவுக்கு இல்லை, அதுவும் நோயாளிகளின் எண்ணிகையும் இறப்பு எண்ணிக்கையும் பாரியளவில் குறைவாக கணக்கிடப்படுகின்றன.

பெருந்திரளான மத்திய அமெரிக்க தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்கள் இந்த சமூக நரகத்திலிருந்து தனிப்பட்டரீதியில் அபாயத்தை ஏற்று தாங்களே வெளியேறி வருகிறார்கள். வர்க்க நனவுள்ள ஒவ்வொரு தொழிலாளரின் அனுதாபத்திற்கும் ஆதரவுக்கும் அவர்கள் தகுதியானர்கள். பழைய விதத்தில் வாழ்க்கையைத் தொடர முடியாது என்பதையும், பில்லியன் கணக்கான மக்களின் சமூக தேவைகள் இந்த முதலாளித்துவ அமைப்புமுறையின் கட்டமைப்புக்குள் மற்றும் தேசிய எல்லைகளது கட்டுப்பாட்டுக்கள் கிடைக்காது என்பதையும் பெருந்திரளான மக்கள் தொடர்ந்து உணர்ந்து வருகிறார்கள் என்பதற்கு இந்த வெளியேற்றமே ஓர் அறிகுறியாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி பின்வருவதைக் கோருகிறது:

  • அமெரிக்காவிற்கு வரும் புலம்பெயர்வோர் அனைவருக்கும் பாதுகாப்பாக உள்நுழைவதற்கான வசதிகளும் சட்டபூர்வ அந்தஸ்தும் வழங்கப்பட வேண்டும்.
  • அமெரிக்காவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை உடனடியாக விடுவித்து அவர்களின் குடும்பத்திடம் சேர்க்க வேண்டும் என்பதோடு, எந்த வயதினராக இருந்தாலும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
  • மத்திய அமெரிக்காவை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக பல ட்ரில்லியன் டாலர் வேலைத்திட்டம் வேண்டும், இந்த தொகை அமெரிக்க பில்லியனர்களின் செல்வத்தைப் பறிமுதல் செய்வதன் மூலம் வழங்கப்பட வேண்டும்.
  • குடியமர்வு மற்றும் சுங்க அமலாக்க ஆணையம் (ICE) மற்றும் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு ஆணையம் (CBP) கலைக்கப்பட வேண்டும்.
  • தொழிலாளர்கள் அனைவரும் அலைக்கழிப்பு அச்சமின்றி பாதுகாப்பாக உலகில் பயணிப்பதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும்.
Loading