மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்த ஆண்டு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமைக்கான தினமானது அதி-வலது சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தல் ஆழமடைந்து செல்வதற்கு மத்தியில் வருகிறது. மே தினத்திற்கு முந்தைய வாரத்தில், 23 ஓய்வுபெற்ற அல்லது சேமப்படை தளபதிகள் ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதியை அறிவுறுத்தி நவபாசிச பத்திரிகையான Valeurs Actuellesஇல் வெளியாகியிருந்த ஒரு கடிதம் தொடர்பாக பிரான்சில் ஒரு அரசியல் நெருக்கடி உண்டாகியிருந்தது. இந்தக் கடிதத்திற்கு ஆதரவாகப் பேசும் அதிகாரிகள் மீது வழக்கு நடவடிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சகம் அச்சுறுத்துகின்ற போதும் கூட, அதில் கையெழுத்திடுகின்ற அதிகாரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகிச் செல்கிறது - இப்போது 7,000 ஐயும் கடந்து விட்டது.
இந்த அறிக்கைகள் பிரான்சில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி சர்வதேச அளவிலும் தொழிலாளர்களுக்கான ஒரு எச்சரிக்கையாக எடுக்கப்பட்டாக வேண்டும். ஜனவரி 6 அன்று, அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் தனது தோல்விக்கான சான்றிதழ் வழங்கப்படுவதை நிறுத்துவதற்காக வாஷிங்டன் டிசியில் உள்ள அரசாங்கத் தலைமையகத்தை முற்றுகையிட ஆயிரக்கணக்கில் தனது நவபாசிச ஆதரவாளர்களை அனுப்பிய சம்பவம் நடந்து இன்னும் ஐந்து மாதங்களும் கூட கடக்கவில்லை. அது ட்ரம்ப்பின் தனிமனித பொறுப்பின்மையை காரணமாகக் கொண்ட ஒரு வரலாற்றுத் தற்செயலாகவும் இருக்கவில்லை, அல்லது அந்த கவிழ்ப்புமுயற்சியின் தோல்வியானது பாசிச ஆட்சியின் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவந்துவிடவும் இல்லை என்பது தெளிவு.
“சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கைகளால் விளைகின்ற படுபயங்கர உயிரிழப்பு எண்ணிக்கை மற்றும் பெருந்தொற்றுக்காலத்தில் செல்வந்தர்கள் செழிப்பை பெருக்கிக் கொண்டமை ஆகியவற்றைக் கொண்டு தொழிலாள வர்க்க கோபம் பெருகிச் செல்கின்ற நேரத்தில், ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கத்தின் சக்திவாய்ந்த கன்னைகள் இராணுவ-எதேச்சாதிகார ஆட்சியை சிந்தித்துக் கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு எழுதப்பட்ட அந்தக் கடிதம், பிரெஞ்சு தேசம் “மரண அபாயங்களுக்கு” முகம் கொடுப்பதாகக் கூறியது. ஒரு ”வெடிப்பையும்... தேச மண்ணில்.. நமது செயலூக்கமிக்க பணியிலுள்ள ஆயுதமேந்திய தோழர்கள் ஒரு ஆபத்தான நடவடிக்கையில் தலையீடு செய்வதையும்” தவிர்க்க வேண்டுமென்றால் அரசுக் கொள்கையில் உடனடியான, குறிப்பிடப்படாத மாற்றங்கள் செய்யப்படுவதற்கு அது அழைப்பு விட்டது. அத்துடன், “மரணங்கள் -அதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள்- ஆயிரங்களில் இருக்கும்” என்றும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஓய்வுபெற்ற மற்றும் சேமப்படை தளபதிகள் தங்களது அச்சுறுத்தல்களை, அரசியல் இஸ்லாமை இலக்குவைத்த மக்ரோனின் “பிரிவினைவாத-எதிர்ப்பு” சட்டத்தின் இஸ்லாமிய அச்ச சொல்லாட்சியில் பற்றிக் கொண்டனர். மாலியில் பிரான்சின் எட்டாண்டு கால போரின் படுதோல்வி மற்றும் புலம்பெயர்ந்தோர் வாழும் புறநகர்ப் பகுதிகளிலான போலிஸ் வன்முறை குறித்து பெருகிச் செல்கின்ற கோபம் ஆகியவற்றின் மத்தியில், அவர்கள் ”நாட்டின் ஏராளமான பகுதிகளை” அரசின் அதிகாரத்தில் இருந்து பிரிப்பதை நோக்கி செலுத்துவதற்காக “இஸ்லாமியத்தையும் புறநகர்ப் பகுதி கூட்டங்களையும்” கண்டனம் செய்தனர். “வகுப்புவாதம், பூர்வீக தேசவாதம் மற்றும் காலனித்துவ-எதிர்ப்பு தத்துவங்கள்” ஆகியவற்றினால் உண்டாகின்ற “இனப் போர்” அச்சுறுத்தலை எதிர்த்து அரசாங்கம் போராட வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
ஆளும் வர்க்கம் அஞ்சுவது இனப் போரைக் கண்டு அல்ல மாறாக வர்க்கப் போரைக் கண்டு ஆகும். இந்தக் கடிதம் வருவதற்கு முந்தைய வாரங்களில், கோவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை ஐரோப்பாவில் ஒரு மில்லியனையும் பிரான்சில் 100, 000 ஐயும் தொட்ட வேளையில், கொரோனா வைரஸின் உருத்திரிந்த வடிவங்கள் பரவிக் கொண்டிருந்த வேளையிலும் கூட, மக்ரோன் சமூக இடைவெளியை முடிவுக்குக் கொண்டுவர சூளுரைத்தார். தொற்றுப்பரவலை நிறுத்துவதற்கு இன்னும் கடினமானதொரு கடையடைப்பை எதிர்நோக்கிய மக்களின் எதிர்பார்ப்பையும், படுகொலையை நிறுத்துவதற்கு ஒரு விஞ்ஞானபூர்வமான கொள்கை முன்னெடுக்கப்படுவதற்கு மருத்துவத் துறையினரிடம் இருந்து வெளியான நிர்க்கதியான மற்றும் கோபமான அழைப்புகளையும் அவர் மீறினார். பள்ளிகளை மீண்டும் திறக்கும் தனது முடிவை எந்த சுகாதார புள்ளிவிவரங்களும் மாற்றிவிட முடியாது என்று ஆத்திரமூட்டும் விதத்தில் அறிவித்தார்.
ஏப்ரல் 17 அன்று, ஆட்சிக்கவிழ்ப்பு மிரட்டலின் பின்னாலிருக்கும் முன்னணி அதி-வலது அரசியல்வாதிகளில் ஒருவரான பிலிப் டு வில்லியே Valeurs Actuellesபத்திரிகையில் “ஒரு கிளர்ச்சிக்கு அழைக்கிறேன்” என்ற தலைப்பில் ஒரு பாசிச விண்ணப்பம் விடுத்தார். இந்த பெருந்தொற்றுக்கு “பெரும் மருந்து நிறுவனங்கள், பெரும் தரவு நிறுவனங்கள், பெரும் நிதி முதலைகள், பில் கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் டாவோஸ் மன்றம்” ஆகியவையே காரணம் என்று அவர் வாய்வீச்சுடன் குற்றம்சுமத்தினார்.
அடுத்த நான்காம் நாளில், ஏப்ரல் 21 அன்று, படைத்தளபதிகளின் கடிதம் வெளியானது. அதன் காலஒற்றுமை தற்செயலானதல்ல. 1961 ஏப்ரல் 21 அன்றான அல்ஜீயர்ஸ் கவிழ்ப்புக்கு -டு வில்லியே இன் தந்தையும், அதிவலது இரகசிய ஆயுதமேந்திய அமைப்பின் (OAS) தலைவர்களில் ஒருவராய் இருந்திருந்தவருமான ஜாக் அல்ஜீரியப் போரின் போது இதனை ஆதரித்தார்- அறுபது ஆண்டுகளின் பின்னர் இது வந்திருந்தது. அல்ஜீரியாவில் இருந்த செல்வச்செழிப்பான பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகளுடனும் மற்றும் ஸ்பெயினில் இருந்த தளபதி பிரான்சிஸ்கோ ஃபிராங்கோவின் பாசிச ஆட்சியுடனும் தொடர்புடைய படைத் தளபதிகளால் தலைமை கொடுக்கப்பட்ட இந்த தோல்விகண்ட ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையானது, 1962 இல் அல்ஜீரியாவுக்கு சுதந்திரம் வழங்க தயாரித்துக் கொண்டிருந்த தளபதி சார்ல்ஸ் டு கோல் ஐ கவிழ்க்கும் நோக்கம் கொண்டிருந்தது.
பிலிப் டு வில்லியேயின் சகோதரரான, ஜெனரல் பியர் டு வில்லியே, 2019 இல் இராணுவத்தின் தலைமைத் தளபதியாக ஓய்வுபெற்று வெளிவந்த சமயத்தில், சமூக சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடிய “மஞ்சள் சீருடை” போராட்டங்களை கடுமையாக ஒடுக்குவதற்கு கோரினார். 10,000க்கும் அதிகமான “மஞ்சள் சீருடையினர்” கைது செய்யப்பட்டு, 4,400க்கும் அதிகமானோர் போலிசாரால் காயம்பட்டிருந்ததற்குப் பின்னரும் கூட, அவர் போராட்டக்காரர்களுக்கு எதிராக கூடுதல் “கடுமை”க்கு அழைப்புவிடுத்தார். “தலைமை நடத்துபவர்களுக்கும் கீழ்ப்படிபவர்களுக்கும் இடையில் ஒரு பெரும்பிளவு உண்டாகி விட்டிருந்தது. இந்த பெரும்பிளவு ஆழமானது... நாம் ஒழுங்கை மீட்டாக வேண்டும்; விடயங்கள் இதேவழியில் தொடர்ந்து போய்க்கொண்டிருக்க முடியாது.”
சென்ற ஆண்டில் பெருந்தொற்றுக்கு மத்தியில், ஒரு உலகளாவிய புரட்சிகர நெருக்கடி குறித்தும் அவர் எச்சரித்தார். “இன்று, பாதுகாப்பு நெருக்கடியைத் தாண்டி, இந்த பெருந்தொற்று பிரச்சினையும் வந்திருக்கிறது, இவை அனைத்துமே தலைவர்களின் மீது நம்பிக்கையின்மை காரணமாக ஒரு பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடி தோன்றியிருக்கின்றதொரு பின்புலத்தில் வந்துசேர்ந்திருக்கின்றன” என்றார். “அடக்கி வைக்கப்பட்ட இந்த கோபம் உடனே வெடித்தெழக் கூடும் என்று நான் அஞ்சுகிறேன்” என்று எச்சரித்த அவர், இவ்வாறு சேர்த்துக் கொண்டார், “சிந்திக்கக் கடினமானதை நாம் சிந்தித்தாக வேண்டும்.. சட்டத்தின் ஆட்சி என்பது வெளிப்படையாக ஒரு நல்ல விடயம் தான், என்றாலும் சில சமயங்களில், நாம் ஒரு மூலோபாயத் திட்டத்தையும் அபிவிருத்தி செய்தாக வேண்டும்.”
இராணுவ சர்வாதிகாரம் தான் இந்த “மூலோபாயத் திட்டம்” என்பது தெளிவு. இதற்கு எதிராய் தொழிலாளர்களின் சிறந்த கூட்டாளிகளாக வரக் கூடியவர்கள் உலகெங்கிலும் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளே. உலக வரலாற்றில் ஒரு தூண்டுதல் நிகழ்வாக அமைந்திருக்கின்ற இந்த பெருந்தொற்றானது, 1991 இல் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிசத்தால் முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டதைத் தொடர்ந்த 30 ஆண்டுகால ஏகாதிபத்தியப் போர் மற்றும் சமூக சிக்கன நடவடிக்கைத் திட்டங்களால் செலுத்தப்பட்ட சர்வதேச வர்க்க மோதலை மிகப்பரந்தளவில் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு உலகளாவிய பெருந்தொற்றானது உலக தொழிற்துறைகளையும் விஞ்ஞானத்தையும் அணிதிரட்டக் கூடிய ஒரு உலகளாவிய ஒருங்கிணைப்புடனான சுகாதாரக் கொள்கையின் மூலமாக மட்டுமே தடுத்து நிறுத்தப்பட முடியும்.
அதைப்போன்றே, அதி-வலது ஆட்சியின் அச்சுறுத்தலை, முதலாளித்துவ-ஆதரவுக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக, தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கையைக் கொண்டு மட்டுமே எதிர்த்து நிற்க முடியும்.
முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்டுள்ள சமூக சமத்துவமின்மையின் மட்டங்கள் மற்றும் மரணங்களுடன் இணக்கம் கொள்ள முடியாததாக இருக்கிற நிலையில் ஜனநாயக ஆட்சி வடிவங்கள் உலகெங்கிலும் உருக்குலைந்து கொண்டிருக்கின்றன. ட்ரம்ப் முன்னெடுத்த வரலாறு கண்டிராத ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை, -ஆட்சித் தலைமையகத்திற்கு துருப்புகளை அனுப்ப பென்டகன் பல மணி நேரத்திற்கு மறுத்து வந்த வேளையில், இது கிட்டத்தட்ட வெற்றிகாணவிருந்தது- ஒரு சர்வதேச நிகழ்ச்சிப்போக்காக, உலக ஏகாதிபத்தியத்தின் இருதயத்தானத்தில் நிகழ்ந்த, ஒரு கண்ணை உறுத்துகின்ற உதாரணம் மட்டுமே. ஜேர்மனியில், நவ-நாஜிக்கள் பழமைவாத அரசியல்வாதியான வால்டர் லுப்கே ஐ புலம்பெயர்ந்த மக்கள் தொடர்பான அவரது அறிக்கைகளுக்காக 2019 இல் கொலைசெய்த சம்பவம் நடந்தது; அதன்பின்னர் இராணுவத்தில் உள்ள பல தரப்பட்ட நவ-நாஜி வலைப்பின்னல்கள் கொலைப்பட்டியல்களை தயாரித்துக் கொண்டிருக்கின்றன.
நவபாசிச ஜனாதிபதி வேட்பாளரான மரின் லு பென் 2022 தேர்தலுக்கு ஆதரவு கோரி அதி-வலது தளபதிகளிடம் விண்ணப்பம் செய்கின்ற வேளையில், மக்ரோன் அதி-வலது சக்திகளுக்கு எவ்வகையிலும் மாற்றானவராக இல்லை. சொல்லப் போனால், ஒரு போலிஸ் அரசை உருவாக்கிக் கொண்டிருக்கும் மக்ரோனுக்கு ஆலோசனையாகவே தளபதிகளது கடிதம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தளபதிகளின் கடிதம் குறித்து ஒரு காதைக் கிழிக்கும் மவுனத்தையே கடந்த வாரத்தில் அவர் பராமரித்து வந்திருக்கிறார்.
2017 இல் ஜனாதிபதியாகத் தேர்வானது முதலாக, இந்த “செல்வந்தர்களது ஜனாதிபதி” போலிஸ் மற்றும் இராணுவத்திடம் நல்லபெயரெடுக்க முனைந்திருக்கிறார். 2018 இல் “மஞ்சள் சீருடை” போராட்டங்கள் தொடங்கிய வேளையில் கருத்துவாக்கெடுப்புகளில் அவருக்கு ஆதரவு உருக்குலைந்த நிலையில், பிரான்சின் நாஜி-ஒத்துழைப்புவாத சர்வாதிகாரியான பிலிப் பெத்தான் ஐ ஒரு “மாபெரும் படைவீரர்” ஆக புகழும் ஒரு முன்கண்டிராத செயலில் மக்ரோன் இறங்கினார். அவரது “பிரிவினைவாத-எதிர்ப்பு” சட்டம் —உள்துறை அமைச்சரும் அதி-வலது Action française இன் ஒரு முன்னாள் உறுப்பினருமான ஜெரால்ட் டார்மனன் ஆல் இது மேற்பார்வை செய்யப்பட்டிருந்தது— லு பென்னை விடவும் இஸ்லாம் மீது கடுமைகாட்டுபவர்களாய் தங்களைக் காட்டிக்கொள்ள நோக்கம் கொண்டிருக்கிறது. “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கைகளுக்கான ஒரு அடித்தளமாக, மக்ரோன் வளர்த்தெடுத்து வருகின்ற அதிகாரிகள் படையினர் மத்தியில் பாசிச சக்திகளை இது வலுப்படுத்தவே செய்கிறது.
ஸ்ராலினிச CGTயும் (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) கவிழ்ப்பு முயற்சி அதிகாரிகள் மீது மக்ரோன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிவருகின்ற அதன் கூட்டாளி 2017 ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் லூக் மெலோன்சோனும் தங்களை மக்ரோன் ஆட்சியின் பின்னால் அணிநிறுத்திக் கொண்டிருக்கின்றனர். வங்கிகள் மற்றும் பெரு வணிகங்களுக்கான ஐரோப்பிய பெருந்தொற்று பிணையெடுப்புகளை —ஐரோப்பிய பில்லியனர்களை 1 டிரில்லியன் யூரோக்கள் வரை இவை செழிப்பாக்கின— ஆதரித்து இவர்கள் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை”க்கு உடந்தையாக உள்ளனர்.
சொல்லப் போனால், அவர்களது ஸ்பானியக் கூட்டாளியான பொடேமோஸ் இன் பொதுச் செயலாளரும் முன்னாள் துணைப் பிரதமருமான பப்லோ இக்லெஸியாசின் செயல்வரலாறு அவர்களது பிற்போக்குத்தனமான பாத்திரத்திற்கான தெளிவான அறிகுறியாக இருக்கிறது. அவர் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கைகளை அமல்படுத்த உதவியதோடு சென்ற ஆண்டில் நவ-பிராங்கோவாத Vox கட்சிக்கு நெருக்கமான ஸ்பானிய தளபதிகளிடம் இருந்தான ஆட்சிக்கவிழ்ப்பு மிரட்டல்களை தொழிலாளர்கள் உதாசீனம் செய்ய அழைப்பு விடுக்கவும் செய்தார்.
சொந்தமக்களைக் கொல்லும் இத்தகைய கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தில் நிலவுகின்ற ஆழமான எதிர்ப்பு அணிதிரட்டப்பட்டாக வேண்டும். தொழிலாளர்கள், தங்களை தேசியரீதியாக அல்லது இனரீதியாக பிளவுபடுத்துவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளை நிராகரித்து, ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில் அணிதிரள்வதற்கு பாதை வகுக்கும் பொருட்டு, சாமானியத் தொழிலாளர் கமிட்டிகளது ஒரு சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணியைக் கட்டியெழுப்புவதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அழைப்பு விடுத்திருக்கிறது. மேலும், நவபாசிச சர்வாதிகாரத்திற்கும் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கைகளுக்கும் எதிரான போராட்டமானது தொழிலாள வர்க்கத்தில் முதலாளித்துவ அமைப்புமுறையை எதிர்த்துப் போராடுகின்ற ஒரு சோசலிசத் தலைமையை கட்டியெழுப்புவதற்காக நடத்தப்படுகின்ற போராட்டத்தில் இருந்து பிரிக்கவியலாததாகும்.
வாசகர்கள் இந்த முயற்சிக்கு ஆதரவளித்து இதில் கைகோர்ப்பதற்கும் இன்றைய தினம் நடைபெறவிருக்கும் இணையவழி சர்வதேச மேதினப் பேரணியில் கலந்துகொள்வதற்கும் ICFI வலியுறுத்துகிறது.
மேலும் படிக்க
- இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு அச்சுறுத்தும் அதிவலது தளபதிகளின் கடிதத்தை பிரெஞ்சு அதிகாரிகள் ஆதரிக்கின்றனர்
- பிரெஞ்சு ஓய்வு பெற்ற இராணுவ தளபதிகள் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு அச்சுறுத்துகின்றனர்
- மக்ரோனின் பொதுப் பாதுகாப்பு மசோதா பிரான்சில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது
- பாரிஸ் கம்யூனின் 150 ஆவது ஆண்டுதினம்