மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு பாரிய ரோயல் கடற்படை / ரோயல் விமானப்படை தாங்கி தாக்குதல் குழு அனுப்பப்படுவது குறித்த விவரங்களை பிரிட்டிஷ் அரசு வழங்கியுள்ளது. "வடக்கு அட்லாண்டிக் முதல் இந்தோ-பசிபிக் வரை உண்மையான உலகளாவிய ஈடுபடுத்தல்" என்று விவரிக்கப்படும் இந்த நடவடிக்கை, தென் சீனக் கடல் வழியாக பயணம் செய்வதையும் ஆத்திரமூட்டும் வகையில் உள்ளடக்கியுள்ளது. இது மே 18 க்கு முன்பே புறப்படலாம்.
நேட்டோ-ஆதரவு பணிக்காக இங்கிலாந்தின் புதிய 3.2 பில்லியன் பவுண்டுகள் மதிப்பு விமானம் தாங்கி கப்பலான HMS Queen Elizabeth அதன் முதல்முறை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கடற்படையின் மிகப்பெரிய மற்றும் மிக சக்திவாய்ந்த போர்க்கப்பலான இந்த விமானம் தாங்கி அக்டோபர் 2017 இல் தொடங்கப்பட்டது, பின்னர் கடல் பரிசோதனை பயணங்கள் மற்றும் நடவடிக்கை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இது "நாங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு இடத்தை குறிப்பிட்ட நேரத்திலும் இடத்திலும் கடலில் இருந்து தாக்க முடியும் …" என்று கடற்படையால் விவரிக்கப்படுகிறது.
1982 இல் போக்லாந்து / மல்வினாஸ் போருக்குப் பின்னர் எந்தவொரு ரோயல் கடற்படை படையும் இத்தகைய அளவில் அணிதிரட்டப்படவில்லை. ஒரு தலைமுறையில் இங்கிலாந்தை விட்டு வெளியேறும் 'கடல் மற்றும் வான் பலத்தின் மிகப்பெரிய ஒன்றுகுவிப்பு' என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. ரோயல் கடற்படை "1950 ல் கொரியப் போர் தொடங்கிய பின்னர் முதல் முறையாக ஆசியாவிற்கு ஒரு போர்க்கப்பலை அனுப்புவதன்" முக்கியத்துவத்தை பற்றி ஒரு பார்வையாளர் குறிப்பிட்டார்.
பனிப்போரின் முடிவில், பிரிட்டனின் ரோயல் கடற்படை மேற்பரப்பு கப்பல்கள் மற்றும் அழிக்கும் கப்பல்கள் குறைக்கப்பட்டு, இப்போது வெறும் 19 கப்பல்கள் உள்ளன. பாதுகாப்பு அமைச்சகத்தால் “ஒரு போட்டி யுகத்தில் பாதுகாப்பு” மதிப்பாய்வின் ஒரு பகுதியாக அனைத்து ஆயுதப்படைகளுக்கும் பல்லாயிரக்கணக்கான பவுண்டுகள் செலவினங்கள் மீண்டும் அதிகரிக்கப்படுகின்றன.
இந்தோ-பசிபிக் நடவடிக்கை முழு கடற்படையினதும் தற்போதைய பலத்தை பட்டியலிடுகிறது. விமானம் தாங்கி கப்பலில் 18 F-35B குண்டுவீச்சு விமானங்கள் இருக்கும். இதற்கு 45 ரக அழிப்பான்கள், HMS Defender, HMS Diamond, 23 ரக நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல்கள், HMS Kent, HMS Richmond மற்றும் ரோயல் கடற்படை தளவாட விநியோகக் கப்பல்கள், Fort Victoria மற்றும் Tidespring ஆகியவை பின்தொடர்கின்றன. Tomahawk அதிவேக நீர்-நில ஏவுகணைகளுடன் ஆயுதம் ஏந்திய சமீபத்திய Astute தர அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் இவற்றிற்கு ஆதரவுகொடுக்கும். இத்துடன் 14 கடற்படை ஹெலிகாப்டர்களும், 8 RAF விரைவான விமானங்களும், ஒரு தொகுதி ரோயல் கப்பல்களும் உள்ளடங்கும்.
விமானம்தாங்கி குழு 28 வாரங்களில் 26,000 கடல் மைல்கள் பயணித்து 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விஜயம் செய்யும். இது மத்தியதரைக் கடல் வழியாக சூயஸ் கால்வாய்க்கு செல்லும்போது நேட்டோ மற்றும் நேட்டோ அல்லாத கூட்டாளர்களுடனான பயிற்சிகள் உட்பட 70 நடவடிக்கைகளில் பங்கேற்கும். இதில் அமெரிக்கா தனது அளிப்பானான USS The Sullivans மற்றும் 10 அமெரிக்க கடற்படை பிரிவின் F-35B Lightning II விமானங்களின் படைப்பிரிவுடன் பங்கேற்கிறது.
ரோயல் கடற்படை தாக்குதல் குழு ஓமானில் உள்ள இங்கிலாந்தின் கூட்டு தளவாட ஆதரவு தளமான டுக்மில் ஒரு வாரம் நிறுத்தப்படும். இது இந்திய கடற்படையுடன் இந்தியப் பெருங்கடல் நடவடிக்கைகளையும், தென் கொரியா மற்றும் சிங்கப்பூருடனான கூட்டுப் பயிற்சிகளையும் மேற்கொள்ளும். அமெரிக்க மற்றும் ஜப்பானிய ஆயுதப்படைகளுடன் இரண்டு வாரங்கள் வரை கூட்டுப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். அப்படைப்பிரிவு தென் சீனக் கடலில் அதன் ஆத்திரமூட்டும் பயணத்தையும் மேற்கொள்ளும்.
இங்கிலாந்தின் ஒருங்கிணைந்த மதிப்பீட்டின், “போட்டி யுகத்தில் உலகளாவிய பிரிட்டன்” மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆகியவை சீனா மற்றும் ரஷ்யாவை முக்கிய எதிரிகள் மற்றும் பொருளாதார அச்சுறுத்தல்களாக அடையாளம் காட்டின. ஒருங்கிணைந்த மதிப்பீடு சீனாவை “ஒரு முறையான போட்டியாளர்” என்று விவரிக்கிறது. சீனாவின் அதிகரித்துவரும் சக்தியும் சர்வதேச உறுதிப்பாடும் 2020களின் மிக முக்கியமான புவிசார் அரசியல் காரணியாக இருக்கலாம்”.
அது கூறியது, “இங்கிலாந்து இந்தோ-பசிபிக் நாட்டில் எங்கள் ஈடுபாட்டை ஆழமாக்கும்… வேறு எந்த ஐரோப்பிய நாட்டையும் விட அதிக மற்றும் தொடர்ச்சியான பிரசன்னத்தை ஸ்தாபிக்கின்றது. இப்பகுதி ஏற்கனவே நமது பொருளாதாரத்திற்கும் மற்றும் பாதுகாப்பிற்கும் முக்கியமானதும், சர்வதேச சட்டங்கள், விதிகள் மற்றும் விதிமுறைகளின் பேச்சுவார்த்தைக்கு ஒரு மைய புள்ளியாகும். அடுத்த தசாப்தத்தில் இங்கிலாந்து செழிப்புக்கு இது மிகவும் முக்கியமானதாக மாறும்.”
பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வடிவமைப்புகளுக்கு ஏற்ப, இங்கிலாந்து இளைய பங்காளியாக செயல்பட்டு வருவதால், இந்த நோக்கம் “இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை நோக்கிய இங்கிலாந்தின் சாய்வின் ஒரு பகுதியாகும்… இது தம்மிடையே பங்கிடப்படும் செழிப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாக இந்தோ-பசிபிக் பகுதியில் ஆழ்ந்த ஈடுபாட்டிற்கான இங்கிலாந்தின் இலக்கை அடைய உதவும்” என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
சந்தைகளை பாதுகாப்பதற்கான பிரெக்சிட்டின் பிந்தைய மூலோபாயத்தின் ஒரு பகுதியாக பாதுகாப்பு மந்திரி பென் வாலஸ் இந்த பணியை விவரித்தார்: “எங்கள் விமானந்தாங்கி தாக்குதல் குழு அடுத்த மாதம் பயணம் செய்யும்போது, அது உலகளாவிய பிரிட்டனுக்காக கொடியை பறக்க விடும். இது நமது செல்வாக்கை வெளிப்படுத்தி, நமது பலத்தை அடையாளம் காட்டி, எங்கள் நண்பர்களுடன் இணைந்து இன்றைய மற்றும் நாளைய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது ...” இந்த நடவடிக்கை 21 ஆம் நூற்றாண்டில் "சர்வதேச அமைப்புமுறையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்க பிரிட்டன் தயாராக உள்ளது என்பதை காட்டுகின்றது" என்றார்.
கடந்த வாரம், அரசியல் ஸ்தாபகத்திற்குள் முன்னணி போர் ஆதரவாளர்களின் விரிவான பிரச்சாரத்திற்கு பின்னர், ஆதாரமற்ற கூற்றுக்களின் அடிப்படையில் சீனா வீகர் முஸ்லிம்களுக்கு எதிராக "இனப்படுகொலையை" மேற்கொள்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். அமெரிக்க அரசாங்கத்துடன் பெய்ஜிங்கை இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டுவதில் பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் கனடாவில் மற்ற மூன்று சட்டமன்றங்களுடனும் பிரிட்டனும் இணைகிறது.
டோரி நாடாளுமன்ற உறுப்பினரான நுஸ்ராட் ஹானி முன்வைத்த ஒரு கடமைப்பாடற்ற தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றி “சிஞ்சியாங் வீகர் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள வீகர்கள் மற்றும் பிற இன மற்றும் மத சிறுபான்மையினர் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களையும் மற்றும் இனப்படுகொலையையும் அனுபவித்து வருகின்றனர்; மற்றும் இனப்படுகொலை தடுப்பு மற்றும் தண்டனை தொடர்பான ஒப்பந்தத்தினையும் மற்றும் சர்வதேச சட்டத்தின் அனைத்து அமைப்புமுறைகளையும் பயன்படுத்தி இதனை முடிவுக்குக் கொண்டுவர அதன் கடமைகளை நிறைவேற்ற அரசாங்கம் அழைப்பு விடுக்கிறது.
கடந்த மாதம் சீனாவால் தடைவிதிக்கப்பட்ட சீன ஆராய்ச்சி மற்றும் பழைமைவாத மனித உரிமைகள் ஆணையம் போன்ற பல சீன எதிர்ப்பு முன்னணி குழுக்களுடன் உள்ளடங்கிய ஐந்து இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஹானியும் ஒருவராக இருந்தார். புவிசார் அரசியல் பதட்டங்களை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட சீன அதிகாரிகளுக்கு எதிராக இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் கனடா ஆகியவற்றின் ஒருங்கிணைத்த பொருளாதாரத் தடைகளுக்கு சீனா இவ்வாறு பதிலளித்தது.
எதிர்க் கட்சியான தொழிற் கட்சி சார்பாக, நிழல் வெளியுறவு அலுவலக மந்திரி ஸ்டீபன் கின்னாக், 'இனப்படுகொலையை ஒருபோதும் அலட்சியத்தாலோ அல்லது செயலற்ற தன்மையாலோ சந்திக்க முடியாது' என்று கட்சி இந்த தீர்மானத்தை ஆதரித்தது என்றார்.
டோரி முன்னாள் தலைவர் இயன் டங்கன் ஸ்மித் தலைமையிலான சீன எதிர்ப்பு பருந்துகளின் புதிய எழுச்சியை இந்த வாக்களிப்பு குறிக்கிறது. ஒரு நாடு இனப்படுகொலை செய்கிறதா என்பதை தீர்மானிக்கும் உரிமை பற்றி இங்கிலாந்தின் உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை அறிமுகப்படுத்த அவர்கள் வெற்றியின்றி முயன்றனர். மார்ச் மாதத்தில், வர்த்தக மசோதாவில் ஒரு திருத்தத்தை பெற ஸ்மித் மூன்றாவது முறையாக தோல்வியுற்றார். "இனப்படுகொலை" கூற்றுக்களின் அடிப்படையில் சீனாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகளை அதிகரிக்க இதைப் பயன்படுத்த முயன்றார். பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையில் சமநிலைப்படுத்த முயன்றார்.
சீனாவையும் ரஷ்யாவையும் இலக்குவைத்து ஏகாதிபத்திய சக்திகளிடையே அதிகரித்து வரும் போர் வெறியின் அறிகுறியாக, இது இராணுவத்துடன் நெருங்கிய தொடர்புகளைக்கொண்ட முன்னணி டோரி நாடாளுமன்ற உறுப்பினர்களின் போர்க்குணமிக்க பிரதிபலிப்பாகும். இவர்கள் தென் சீனக் கடலில் மே மாத நடவடிக்கை போதுமான ஆத்திரமூட்டல் அல்ல என்று வலியுறுத்தினார்கள். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் தைவான் “இப்போது ஒரு பெரிய அளவிலான போருக்கு வழிவகுக்கும் மிக முக்கியமான வெடிப்பு புள்ளியாகும்” என்ற பைடென் நிர்வாகத்தினதும் மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜோன் அக்விலினோ ஆகியோரின் சமீபத்திய கூற்றுக்களைக் கூறி, ஜப்பான் நோக்கிய பயணத்தின் ஒரு பகுதியாக நடவடிக்கைக் குழு தைவான் நீரிணையிலும் நுழைகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
டங்கன் ஸ்மித் டெலிகிராஃபிடம் பின்வருமாறு கூறினார், “விமானம் தாங்கி கப்பல் தென் சீனக் கடலில் அனுப்பப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் தைவான் ஜலசந்தி வழியாக பயணம் செய்வதன் மூலம் அண்டை நாடுகளுக்கு எதிரான மிக ஆக்கிரோஷமான நடவடிக்கைகளை அவர்கள் ஏற்கவில்லை என்பதை சீனர்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலம் அவர்கள் இந்த செயல்முறையை முடிவிற்கு கொண்டுவர வேண்டும்.”
பாதுகாப்புத் தேர்வுக் குழுவின் தலைவரான டோபியாஸ் எல்வுட் அவருக்கு ஆதரவளித்தார். இந்தோ-பசிபிக் நடவடிக்கை "இது போன்ற ஒரு முக்கியமான நோக்கத்திற்காக என்று கூறப்படுகின்றது" என்று கூறினார். ஆனால் இது "குற்றத்தின் பயத்தினால்" அது "மறைந்துவிடக்கூடும்" என்று கவலைப்பட்டார். தைவான் நீரிணையை தவிர்ப்பது, நடவடிக்கையின் “நோக்கத்தை” தோற்கடித்து “சீனாவின் சர்வாதிகாரத்திற்கு துணை நிற்பது போலாகும்” என்றார்.
இத்தகைய கருத்துக்கள் ஆளும் வட்டங்களின் பிரிவுகளிலும், அணுசக்தி சக்திகளுடனான ஆயுத மோதலைப் பற்றி சிந்திக்கும் இராணுவ உயர்மட்டத்தினரிடையேயும் உள்ளார்ந்த சிந்தனையைப் பற்றிய உட்பார்வையை வழங்குகின்றன.
இங்கிலாந்தின் பாதுகாப்பு மறுஆய்வு இனை தொடர்ந்து, டெலிகிராப் மூத்த வெளிநாட்டு நிருபர் ரோலண்ட் ஓலிபாண்டின் ஒரு “சிறப்பு அறிக்கையை” வெளியிட்டார், “சீனா மற்றும் ரஷ்யாவின் இராணுவ ஆயுதங்கள் அவற்றின் அளவிலேயே திகிலூட்டுகின்றன, என்றால் அவை போரில் எவ்வாறு செயல்படும்?” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது சீனாவின் கடற்படையை விவரிக்கிறது, “ஏற்கனவே 130 க்கும் மேற்பட்ட பெரிய மேற்பரப்பு போர்க்கப்பல்கள் உட்பட சுமார் 350 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்ட உலகின் மிகப்பெரியது. இது 2030 க்குள் ஐந்து விமானம் தாங்கிக் கப்பல்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அதன் அழிக்கும் கடற்படையை விரைவாக விரிவுபடுத்துகிறது. இது பசிபிக் பகுதிக்கு தொலைவில் வான்வெளியில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க நீண்ட தூர துல்லியமான கப்பல் மற்றும் கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணைகள், ஆரம்ப எச்சரிக்கை ரேடார்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கியுள்ளது.” மேலும், “இது சமீபத்தில் அமெரிக்க தாக்குதல் பிரிவுகளை எதிர்க்க வடிவமைக்கப்பட்ட ஹைபர்சோனிக் ஆயுதங்களை வெளியிட்டது” என அது குறிப்பிட்டது.
இவை அனைத்தும் பெரிய விஷயமல்ல, "மக்கள் விடுதலை இராணுவம் [2 மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பணியாளர்கள் மற்றும் 1 மில்லியனுக்கும் அதிகமான சேமப்படை பணியாளர்கள்] கண்ணுக்கு தெரியாமல் இல்லை. இராணுவம் முக்கிய அணிதிரட்டல் சவால்களையும் எதிர்கொள்கிறது. தொழில்முறை படையினரை நியமிக்க, பயிற்சியளிக்க மற்றும் தக்க வைத்துக் கொள்ள போராடுவதுடன் மற்றும் ஊழலால் தூண்டப்பட்ட ஒரு நன்னெறி பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறது. அத்துடன் இது 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு போரையும் நடத்தவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.