நோய்தொற்று மற்றும் மரணங்களில் இருந்து அல்ல, "பொது அடைப்பிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்க" மோடி சூளுரைக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கிற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தியா, எதிர்நோக்கி இருந்திருக்கக்கூடிய மற்றும் எதிர்நோக்கப்பட்ட ஒரு சுகாதார மற்றும் சமூக பேரழிவால் இப்போது சூழப்பட்டுள்ளது.

கடந்த வெறும் ஐந்து நாட்களில், இந்தியா 2 மில்லியன் புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகள் மற்றும் 20,928 இறப்புகளை உத்தியோகபூர்வமாக பதிவு செய்தது. ஏப்ரல் 12 திங்கட்கிழமையிலிருந்து, இந்தியாவின் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை 65 சதவிகிதத்திற்கும் அதிகமாக அதிகரித்து அல்லது 8.99 மில்லியன் அளவுக்கு உயர்ந்ததுடன், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அதன் மொத்த நோய்தொற்று எண்ணிக்கையை 22.6 மில்லியனுக்குக் கொண்டு வந்துள்ளது. அதே நான்கு வார காலத்தில், இந்த புதிய கொரோனா வைரஸ் 75,213 இந்தியர்களின் உயிர்களைப் பறித்துள்ளது, இது இந்த ஒட்டுமொத்த தொற்றுநோய் காலம் நெடுகிலும் ஏறக்குறைய 11 நாடுகளில் உயிரிழந்தவர்களை விட அதிக எண்ணிக்கையாகும்.

இந்திய கட்டுப்பாட்டு காஷ்மீரின் ஸ்ரீநகரில் 2021 மே 8 சனிக்கிழமையன்று COVID-19 ஐ பரிசோதிக்க ஒரு சுகாதார பணியாளர் ஒரு காஷ்மீர் சிறுவனின் வாய் துடைக்கும் மாதிரியை எடுத்துக்கொள்கிறார். (AP Photo / Dar Yasin)

உள்ளத்தை உருக்கும் இந்த புள்ளிவிவரங்களைப் பொறுத்தவரையில், அவை இந்தியாவின் உண்மையான நோய்த்தொற்று எண்ணிக்கை மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் வெறும் ஒரு பகுதியை மட்டுமே குறிக்கின்றன, பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்றும் அவரது அதி வலது பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) அரசாங்கத்தின் ஏறக்குறைய பெரும்பாலான கண்மூடித்தனமான பாதுகாவலர்களாலேயே இது ஒப்புக் கொள்ளப்படுகிறது.

கோவிட்-19 பரிசோதனையின் நேர்மறை விகிதங்கள் இந்தியாவின் 718 மாவட்டங்களில் 301 இல் தற்போது 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகவும், இந்தியாவின் தேசிய தலைநகரமும் மிகப்பெரிய நகர்ப்புற பகுதியான டெல்லியில் இது 30 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவு காட்டுகிறது. 5 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமான நேர்மறை விகிதம் என்பது நோய்தொற்றுக்களின் தீவிர குறைமதிப்பீடு என்று உலக சுகாதார அமைப்பு (WHO) நீண்டகாலமாக வலியுறுத்தி உள்ளது.

இந்த தொற்றுநோய்க்கு முன்னதாக, படுமோசமான, நீண்டகாலமாக குறை நிதி வழங்கப்பட்ட இந்தியாவின் சுகாதார மருத்துவ அமைப்பு, மொத்த உயிரிழப்புகளில் வெறும் ஒரு கால்வாசியை மட்டுமே மருத்துவக் காரணத்தின் அடிப்படையில் பதிவு செய்திருந்தது, அதுவும் கிராமப்புற இந்தியாவில் பல மரணங்கள் பதிவு செய்யப்படவில்லை. சமீபத்திய வாரங்களில் சுகாதார வல்லுநர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் ஆய்வுகளும் கருத்துக்கணிப்புகளும், அதிகாரிகள் காட்டும் இறப்பு எண்ணிக்கையில் தெரிவிக்கப்பட்டதை விட பல மடங்கு அதிகமான மக்கள் கோவிட்-19 நெறிமுறைகளின் கீழ் தகனம் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. ஓர் உதாரணத்தை மேற்கோள் காட்ட வேண்டுமாயின், மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் ஒரு நாளிதழ், சந்தேஷ், அம்மாநிலத்தின் முக்கிய நகர மையங்களில் 10 கோவிட்-19 இறப்புகளில் ஒன்று மட்டுமே உத்தியோகபூர்வமாக இந்த தொற்றுநோய்க்கு காரணமாக காட்டப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது. 2 மில்லியன் மக்கள் வாழும் நகரமான ராஜ்கோட்டில், ஏப்ரல் பிற்பகுதியில் கோவிட்-19 காரணமாக 220 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்நகரின் “கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை மட்டுமே” தகனம் செய்யும் ஏழு தகன மேடைகள் அதே காலகட்டத்தில் 673 சடலங்களைக் கையாண்டிருந்ததை அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டின.

டெல்லி, மும்பை மற்றும் பிற முக்கிய நகரங்களிலும் மோசமான உடல்நலக்குறைவில் இருப்பவர்கள் பெருகிவழியும் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் இருப்பதையும், அவர்களின் மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல நோயாளிகள் மூச்சுமுட்டி உயிரிழப்பதையும், பற்றாக்குறையில் உள்ள ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் உருளைகள் அதிகரித்து வரும் கருப்புச் சந்தையில் விற்கப்படுவதையும் காட்டும் ஊடக அறிக்கைகளால் இந்தியா மற்றும் உலகெங்கிலுமான மக்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர்.

நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வசிக்கும் கிராமப்புற இந்தியாவில், பெரும்பாலும் பொது சுகாதார மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில், அங்கே இந்த பேரழிவு இன்னும் அதிகமாக அச்சுறுத்துகிறது. 15 கிராமப்புற மாவட்டங்களில், ஒரு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் வாழும் இந்த பெரும்பாலான அல்லது எல்லா மாவட்டங்களிலும், கோவிட்-19 பரிசோதனையின் நேர்மறை விகிதம் இப்போது 50 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது.

இந்து மேலாதிக்கவாத, எதேச்சதிகார வலிமைமிக்கவராக இருக்கக்கூடிய மோடி தலைமையிலான இந்தியாவின் நேர்மையற்ற முதலாளித்துவ உயரடுக்கு, உழைக்கும் மக்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பறித்து வரும் இந்த தொற்றுநோய் படுகொலை மீது மிகவும் அலட்சியமாக உள்ளது.

ஏப்ரல் 20 இல் நாட்டுக்கு உரையாற்றிய மோடி, "பொது முடக்கத்திலிருந்து நாட்டை காப்பாற்றுவது" —அதாவது, இந்த வைரஸிற்கு எதிராக போராடுவதற்கோ அல்லது உயிர்களைப் பாதுகாப்பதற்கோ அல்ல, இந்தியாவின் பில்லியனர்கள் மற்றும் பெருநிறுவன உயரடுக்கின் சொத்து வளங்கள் மற்றும் இலாபங்களுக்கு முட்டுக்கொடுப்பதே— அவர் அரசாங்கத்தின் முக்கிய நோக்கமென அறிவித்தார். கோவிட்-19 ஆல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் கூட "சிறிய-கட்டுப்பாட்டு மண்டலங்கள்" என்றழைக்கப்படுவதற்கு ஆதரவாக பொது முடக்கங்களைத் தவிர்க்குமாறு வலியுறுத்தும் அளவுக்கு அவர் சென்றார்.

மில்லியன் கணக்கான கூடுதல் நோயாளிகள் மற்றும் பத்தாயிரக் கணக்கான கூடுதல் இறப்புகளுக்குப் பின்னரும், இது தான் அரசு கொள்கையாக இருக்கிறது.

நாட்டின் மிகப் பெரிய மருத்துவர்கள் அமைப்பான இந்திய மருத்துவ கூட்டமைப்பு (IMA), "பொருளாதாரத்தை விட உயிரே விலைமதிப்பற்றது" என்று அறிவித்து, வைரஸின் கொடிய எழுச்சியை தடுப்பதற்காகவும், “சுகாதார உள்கட்டமைப்பை மீட்பதற்காகவும்” பிஜேபி அரசாங்கம் தேசிய பொது முடக்கத்தை அறிவிக்க தவறியதைக் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் கண்டித்தது. "கோவிட்-19 தொற்றுநோயின் பேரழிவுகரமான இந்த இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள வேதனையான நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதில், சுகாதார அமைச்சகத்தின் அளவுக்கதிமான சோம்பேறித்தனமும் மற்றும் பொருத்தமற்ற நடவடிக்கைகளையும் காண", "எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது," என்று IMA அறிவித்தது.

கடந்த மூன்று வாரங்களாக ஒரு தேசிய பொது முடக்கத்திற்கு அது அழுத்தம் கொடுத்து வருவதைக் குறிப்பிட்ட IMA, அதுவும் ஏனைய விஞ்ஞான வல்லுனர்களும் கோரிய கோரிக்கைகளை மோடி அரசாங்கம் குப்பையில் வீசி, “அடிமட்ட யதார்த்தங்களை உணராமல்" முடிவெடுத்து வருவதாக குற்றஞ்சாட்டியது. இதன் விளைவாக கோவிட்- பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை “ஒவ்வொரு நாளும் நான்கு இலட்சத்திற்கும் (400,000) அதிகமாக” அதிகரித்து வருகிறது, மற்றும் “மிதமான நோயாளிகள் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகள்" எண்ணிக்கை “கிட்டத்தட்ட 40 சதவீதமாக” அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இந்த தொற்றுநோயின் இரண்டாவது அலை பெப்ரவரி மத்தியில் தொடங்கியது, அதன் பின்னர் உடனடியாகவே மருத்துவ வல்லுனர்கள் கோவிட்-19 இன் மீளெழுச்சிக்கு இந்தியா முற்றிலும் தயாரிப்பின்றி இருப்பதாக முன்பினும் அதிக உறுதியோடு கடுமையான எச்சரிக்கைகளை வழங்கி வந்தனர். இது எல்லாவற்றையும் விட, அப்போதிருந்தே இந்த வைரஸ் பரவல் பிரிட்டனில் முதலில் அடையாளம் காணப்பட்ட B.1.1.7 வகை வைரஸ் மற்றும் இந்தியாவின் சொந்த "இரண்டு மடங்கு உருமாறிய" வகை ஆகியவை உள்ளடங்கலாக இன்னும் அதிகமாக தொற்றக்கூடிய உயிராபத்தான வைரஸ் வகைகளால் எரியூட்டப்பட்டு இருந்ததை ஒவ்வொன்றும் சுட்டிக்காட்டின. மோடிக்கு நேரடியாக தகவல்களை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் ஒரு குழு மார்ச் மாத தொடக்கத்தில், வரவிருக்கும் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையின் அச்சுறுத்தலைக் குறித்தும் வெளிப்படையாக எச்சரித்திருந்தது.

இருந்தும் கூட, பெருநிறுவன இந்தியாவின் விருப்பத்திற்கிணங்க செயல்பட்ட இந்த அரசாங்கம் தீர்க்கமாக இவை அனைத்தையும் நிராகரித்தது. இந்தியா “இயல்புநிலைக்கு” திரும்பிவிட்டதாக காட்டும் நோக்கில், அது பெருந்திரளான மாநில தேர்தல் கூட்டங்களுக்கும் உலகின் மிகப்பெரிய மதத் திருவிழாவான கும்பமேளா நடத்துவதற்கும் பச்சைக்கொடி காட்டியமை உட்பட, எஞ்சியிருந்த ஒருசில கோவிட்-19 கட்டுப்பாடுகளையும் உதறிவிட முன்நகர்ந்தது. இந்த தொற்றுநோய் ஓர் அச்சுறுத்தல் தான் என்றது ஒப்புக் கொண்டவரை, இது "உலகின் மிகச் சிறந்த" தடுப்பூசி நடவடிக்கை மூலமாகவே கையாளப்பட இருந்தது — இந்த நடவடிக்கை இப்போது தடுப்பூசி பற்றாக்குறையால் குழப்பத்தில் உள்ளது. இன்று வரையில், 10 சதவிகிதத்திற்கும் குறைவான இந்தியர்களே முதல் சுற்று தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், வெறும் 2.5 சதவீத மக்களுக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியும் பிற எதிர்க்கட்சிகளும் இப்போது இந்த தொற்றுநோயை மோடி அரசாங்கம் தவறாக கையாள்வதைக் குறித்து தயக்கத்தோடு விமர்சனங்களைச் செய்து வருகின்றன. ஆனால் இந்த உயிர்பறிக்கும் குற்றத்தில் அவர்களும் குறைவான குற்றவாளிகள் இல்லை. எதிர்க்கட்சிகள் தலைமையிலான மாநிலங்கள் உட்பட, எல்லா மாநில அரசாங்கங்களுமே மோடியின் "பொருளாதாரத்தைத் திறந்துவிடும்" மனிதப்படுகொலை கொள்கையை நடைமுறைப்படுத்தின. சமீபத்திய நாட்களில், இந்த பேரழிவு மீது பொதுமக்கள் கோபம் அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி அரசாங்கங்கள் போன்ற சில அரசாங்கங்கள் “பொது அடைப்பை” அறிவித்துள்ளன என்றாலும், இவை உயிர்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை வழங்குவதை மட்டுமே முன்நிறுத்தி உள்ளன. முதலாவதாக, உற்பத்தித்துறையிலிருந்து கட்டுமானம் வரையில் நடைமுறையளவில் அனைத்து உற்பத்திக்கும் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது; இரண்டாவதாக, பொது அடைப்பு நடவடிக்கைகளால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்கள், சேவைத்துறை தொழிலாளர்கள், தெருவோர கடைவியாபாரிகள் மற்றும் கைவினைஞர்களுக்கு பஞ்சகால பாணியில் நிவாரணம் வழங்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் முறையான தயாரிப்பற்ற மத்திய அரசாங்கத்தின் பொது அடைப்பு எந்தவொரு அர்த்தமுள்ள சமூக ஆதரவும் இல்லாமல் இரவோடு இரவாக நூறு மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தைக் கொள்ளையடித்த நிலையில், அது இன்னும் கூடுதலாக 230 மில்லியன் இந்தியர்களை நாளொன்றுக்கு 375 ரூபாய் (5 அமெரிக்க டாலர்) என்ற தேசிய வறுமைக் கோட்டுக்குக் கீழே கொண்டு வந்த நிலைமைகளின் கீழ் தான் இவையெல்லாம் செய்யப்படுகின்றன.

இந்திய ஆளும் வர்க்கத்தின் சமூக நோயெதிர்ப்பு பெருக்கும் கொள்கையும், இலாபத்திற்குத் தொந்தரவு வரக்கூடாது ஆகவே மக்கள் இந்த வைரஸூடன் அவதிப்படட்டும் என்ற கணக்கிட்ட அதன் தீர்மானமும், தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் மீதான சுரண்டலை இன்னும் பல மடங்கு தீவிரப்படுத்துவதற்கான அதன் முனைவில் கூர்மையாக நடவடிக்கைகளாக உள்ளன. பெருவணிகங்களின் உத்வேகமான வரவேற்புக்காக, “பொருளாதாரத்தை புதுப்பிக்கிறோம்" என்ற பெயரில் மோடி, பொதுச் சொத்துக்களை அடிமட்ட விலைக்கு விற்றதிலிருந்து பல்வேறு வேளாண்வணிக சார்பு சட்டங்களைக் கொண்டு வந்தது வரையில் மற்றும் பெரும்பாலான தொழிலாளர்களது வேலை நடவடிக்கைகளைச் சட்டவிரோதமாக ஆக்கும் தொழிலாளர் சட்டங்களின் சீர்திருத்தம் வரையில், கடந்த 12 மாதங்களில் பல்வேறு முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி உள்ளார்.

இந்த வர்க்கப் போர் தாக்குதல் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளிடமிருந்து பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறது. உத்தரபிரதேச முதல்வராக மோடியால் நியமிக்கப்பட்ட இந்து மேலாதிக்க குண்டர் உள்ளடங்கலாக, பிஜேபி, மருத்துவமனை படுக்கை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை மீதான பொதுமக்களின் ஆவேச எதிர்ப்பை ஒடுக்க கைது நடவடிக்கைகளையும் தணிக்கைகளையும் நடத்தி உள்ளது என்றால், அது ஏனென்றால், தொழிலாள வர்க்கத்திடமிருந்து அதிகரித்து வரும் சவாலுடன் இதுவும் குறுக்கிட்டு கூடுதலாக எரியூட்டுமோ என்று அது அஞ்சுகிறது.

இந்தியா வரலாற்று ரீதியாக வறுமை மற்றும் மோசமான அவலங்களால் பாதிக்கப்பட்ட ஓர் ஒடுக்கப்பட்ட நாடாகும். இருப்பினும், மருத்துவத்துறை உள்ளடங்கலாக அது உற்பத்தி துறைகளிலும்; கடந்தாண்டு மட்டும் இரண்டு மடங்கு அண்மித்து 594 பில்லியன் டாலர் குவித்துக் கொண்ட 130 பில்லியனர்களின் சொத்து வளங்களில் தொடங்கி பெரும் செல்வ வளத்தைக் குவிப்பதிலும் முன்னேறி உள்ளது. அனைத்திற்கும் மேலாக, இந்திய அரசு அளப்பரிய வளங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது, அது 72.9 பில்லியன் டாலருடன் போதுமானளவுக்கு அதை உலகின் மூன்றாவது மிகப்பெரிய இராணுவ செலவீட்டாளராக ஆக்குகிறது.

இருந்தாலும் இந்த ஆதாரவளங்களில் ஒரு சிறிய அளவும் கூட இந்திய மக்களின் உயிர்களையோ வாழ்வாதாரத்தையோ பாதுகாக்க திரட்டப்படவில்லை. இப்போதும் கூட, கோவிட்-19 இக்கு எதிராக பருவ வயதடைந்த எல்லா இந்தியர்களுக்கும் இலவச தடுப்பூசி வழங்க தேவைப்படும் வெறும் 6.7 பில்லியன் டாலரென மதிப்பிடப்பட்ட செலவுக்குக் கூட அரசாங்கம் நிதி ஒதுக்க மறுக்கிறது.

ஜி 7 கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட இலண்டனில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த வாரம் இரண்டு சர்ச்சைக்குரிய உண்மைகளை ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்: ஒன்று, பல தசாப்தங்களாக, பாஜக அல்லது காங்கிரஸ் கட்சி எதுவாக இருந்தாலும் மத்திய அரசை வழிநடத்திய இந்திய அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவிகிதமே சுகாதார மருத்துவத்துறைக்குச் செலவிட்டிருந்தது, மற்றொன்று, இந்த தொற்றுநோய் இந்தியாவின் சுகாதார மருத்துவ அமைப்புமுறையின் முழு தோல்வியை "அம்பலப்படுத்தி" உள்ளது. பின்னர் அவர் புலம்பினார், “நிறைய பணம் செலவிட்டிருக்க வேண்டுமென இன்று சொல்வது மிகவும் சுலபம். இப்போது நான் அரசாங்கத்தில்… சொல்லப்படுவதைப் போல அவ்வளவு சுபலமில்லை என்று என்னால் சொல்ல முடியும்,” என்றார்.

முதலாளித்துவம் சமூக தேவைகளுடன் சமரசமன்றி முரண்படுகிறது என்பதை எடுத்துக்காட்ட மட்டுமே ஜெய்சங்கரின் இரங்கல் சேவையாற்றுகிறது. இந்த தொற்றுநோய் இதை உயிரோட்டமாக எடுத்துக்காட்டியுள்ளது—என்றாலும் இதே முரண்பாடு முன்பில்லாதளவில் மிகப்பெரும் உலகளாவிய வளத்திற்கு மத்தியிலும் வறுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மையால் ஏற்படுத்தப்பட்ட அவலம் மற்றும் சமூக கவலைகளில் இருந்து, சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் போர் வரையில், சமூக பொருளாதார வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் படர்ந்து பரவி ஊடுருவி உள்ளது.

இந்தியாவின் கொடூரமான இந்த “இரண்டாம் அலை” ஓர் உலகளாவிய அச்சுறுத்தலாகும். இது ஏற்கனவே நேபாளம், இலங்கை மற்றும் பங்களாதேஷ் வரையில் பரவியுள்ளது. இதற்கும் மேலாக, இதுவரை வைரஸ் ஒழிக்கப்படாத நிலையில், இது தற்போதுள்ள தடுப்பூசிகளால் எதிர்க்க முடியாத வேறுவேறு உருமாறிய வைரஸ்களைத் தோற்றுவிக்க அச்சுறுத்துகிறது.

இந்த இந்திய பேரழிவில், இது நெடுகிலும், வாஷிங்டன் தொடங்கி, ஏகாதிபத்திய சக்திகளின் கைரேகைகள் உள்ளன. அமெரிக்க ஆளும் வர்க்கம், நியூயோர்க் டைம்ஸின் முன்னணி வாசகமான "குணப்படுத்தல் நோயை விட மோசமாக இருந்துவிடக்கூடாது,” என்ற வாசகத்தின் கீழ் அதன் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் உத்தியை முன்னெடுத்தது. அது, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சக்திகளுடன் சேர்ந்து, தடுப்பூசிக்கான காப்புரிமைகளை விட்டுக்கொடுக்க மறுத்ததுடன், இந்தியாவில் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பெருகி கொண்டிருந்த போது மார்ச் மற்றும் ஏப்ரலின் முக்கிய வாரங்களில், பைடென் நிர்வாகம் இந்தியாவின் தடுப்பூசி உற்பத்திக்கு அத்தியாவசியமான மூலப் பொருட்களின் ஏற்றுமதியை கூட முடக்கியது. கடைசியாக ஆனால் முக்கியத்துவத்தில் குறைவின்றி, வாஷிங்டன், ட்ரம்பின் கீழ் இருந்த போதும் சரி அல்லது பைடென் கீழ் இருக்கின்ற போதும் சரி, பெய்ஜிங்கிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் இராணுவ-மூலோபாய தாக்குதலுக்குள் இந்தியாவை இன்னும் கூடுதலாக ஒருங்கிணைக்கும் நோக்கில், சீனாவுக்கு எதிராக அதைத் தூண்டிவிட கடந்தாண்டின் பெரும்பகுதியைச் செலவிட்டுள்ளது. உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதற்கான ஒரு பகுத்தறிவார்த்த, விஞ்ஞானப்பூர்வ திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் தலையீடும் உலகளாவிய சக்தியாக அதை அணிதிரட்டுவதும் அவசியமாகும்.

எல்லா அத்தியாவசியமற்ற வணிகங்கள் மற்றும் நேரடி வகுப்புகளை உடனடியாக மூடுவதும், பாதிக்கப்பட்ட எல்லா தொழிலாளர்களுக்கும் முழு கூலிகளை வழங்குவதும், பொது சுகாதார மருத்துவ வசதிகளைப் பாரியளவில் விரிவாக்குவதும் என இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அவசியமான எல்லா இன்றியமையா நடவடிக்கைகளும், போட்டி தேசிய முதலாளித்துவ உயரடுக்கின் இலாப மற்றும் புவிசார் அரசியல் தேவைகளுடன் சமரசத்திற்கிடமின்றி முரண்படுகின்றன.

ஆகவே இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது உலகெங்கிலும் போலவே இந்தியாவிலும், வேலைக்குத் திரும்புவதற்கான மற்றும் பள்ளிக்குத் திரும்புவதற்கான ஆளும் வர்க்க கொள்கையை நடைமுறைப்படுத்தி உள்ள முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்களை எதிர்த்து, ஒரு சோசலிச முன்னோக்கால் உயிரூட்டப்பட்ட, தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் புதிய அமைப்புகளைக் கட்டமைப்பதன் மூலமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்காக, மற்றும் உலக சோசலிசப் புரட்சிக்குத் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் கல்வியூட்டி அணிதிரட்டும் போராட்டத்தின் பிரிவிக்கவியலாத பாகமாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் (SEP) சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச கூட்டணியை ஏற்படுத்தி வருகின்றன.

Loading