“நாங்கள் பயப்படவில்லை என்பதைக் காட்ட மற்றொரு 90 சதவீத ‘வேண்டாம்’ வாக்குகள் எங்களிடம் இருக்க வேண்டும்”

வொல்வோ நிறுவனம் அச்சுறுத்தல்கள் விடுத்தாலும் வேலைநிறுத்தம் செய்யும் வேர்ஜீனிய தொழிலாளர்கள் அதனை எதிர்க்கையில், பெல்ஜியத்தில் உள்ள வொல்வோ கார்கள் தொழிலாளர்களும் வெளிநடப்பு செய்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வொல்வோ கனரக வாகன நிர்வாகம், வியாழக்கிழமை, ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்கத்துடன் (UAW) இணைந்து வடிவமைத்த ஆறு ஆண்டு கால தொழிலாளர் ஒப்பந்தத்தை வேர்ஜீனியாவின் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு கட்டாயப்படுத்தும் கடைசி இழிவான முயற்சியாக அவர்களுக்கு எதிராக ஒரு தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் அச்சுறுத்தல்களை விடுத்தது. வேர்ஜீனியாவின், டப்ளினில் உள்ள நியூ ரிவர் வலி ஆலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 3,000 தொழிலாளர்கள், UAW ஆதரவுபெற்ற மூன்றாவது திட்டத்தின் மீது இன்று வாக்களிக்கின்றனர்.

வேலைநிறுத்தம் செய்யும் வொல்வோ கனரக வாகனத் தொழிலாளர்கள் (ஆதாரம்: UAW லோக்கல் 2069/முகநூல் பதிவு)

சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்புணர்வின் அடையாளமாக, பெல்ஜியத்தின், கென்டில் உள்ள வொல்வோ கார்கள் ஆலையின் தொழிலாளர்கள் வியாழக்கிழமை, தொழிற்சங்கங்களின் உடன்படிக்கையின் பேரில் வேலைவாரத்தை அதிகரிக்கும் நிறுவனத்தின் திட்டங்களை எதிர்த்து திடீர் வேலைநிறுத்தம் செய்து உற்பத்தியை நிறுத்தினர். வொல்வோ கார்கள் நிறுவனம் தற்போது வொல்வோ கனரக வாகன நிறுவனத்திலிருந்து தனியாக செயல்படுகிறது, ஆனால் கென்டில் இரு நிறுவனங்களின் ஆலைகளும் இன்னும் ஒன்றுக்கொன்று அருகே அமைந்துள்ளன.

சமீபத்திய ஒப்பந்தத்திற்கு வேர்ஜீனியாவின் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு இருப்பதை வொல்வோ அறிந்திருக்கிறது. இது, மே மற்றும் ஜூன் மாதங்களில் 90 சதவீத தொழிலாளர்கள் நிராகரித்த முதல் இரண்டு ஒப்பந்தங்களில் மிகச்சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டதாகும். சமீபத்திய திட்டத்திற்கான தொழிலாளர்களின் எதிர்ப்பை முறியடிக்க UAW முயல்கிறது, இத்திட்டம் இரு அடுக்கு ஊதியம் மற்றும் சலுகை முறையை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது, தற்போதைய மற்றும் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான சுகாதார செலவினங்களை தகுதிக்கு விஞ்சியளவில் கூர்மையாக அதிகரிக்கிறது, மேலும் “முக்கிய” தொழிலாளர்களுக்கான வருவாய் வரம்புகளை ஆண்டுக்கு சராசரியாக இரண்டு சதவீதம் அதிகரிக்கிறது, இது பணவீக்க விகிதத்தை விட மிகக் குறைந்ததாகும்.

ஜூலை 8 அன்று, வொல்வோவின் நியூ ரிவர் வலி ஆலையின் “Negotiations Update” வலைப்பக்கத்தின் கேள்வி பதில் பிரிவின் முக்கிய கேள்வி, “மூன்றாவது தற்காலிக ஒப்பந்தமும் நிராகரிக்கப்பட்டால், என்ன நடக்கும்?” என்று கேட்கிறது.

இதற்கு நிறுவனம், “அவ்வாறு நடந்தால், எந்தவொரு கூடுதல் ஊதிய விவாதங்களுக்கும் அடிப்படையாக, நாங்கள் இரண்டாவது தற்காலிக ஒப்பந்தத்திற்கு திரும்புவோமே தவிர மூன்றாவது ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் என்று UAW தலைமைக்கு தெரிவித்துவிட்டோம் என்பதைக் குறிப்பிடுவது அவசியம்” என்று பதிலிறுத்தது.

மேலும் இது, “விடுமுறைகால பணி நிறுத்தத்திற்கு முன்னர் நான்காவது தற்காலிக ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்பது சாத்தியமில்லை, ஆகவே வேலைநிறுத்தம் இல்லாதிருந்தால் விடுமுறைகால பணி நிறுத்தத்தின்போது பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்த உரிய விடுமுறை தற்போது ஊழியர்களுக்கு வழங்கப்படமாட்டாது” என்றும் கூறியது.

தொழிலாளர்களை தெளிவாக அச்சுறுத்தும் விதமாக, தொடர்ச்சியான வேலைநிறுத்தம் நியூ ரிவர் வலி ஆலையின் 400 மில்லியன் டாலர் மதிப்பீட்டிலான விரிவாக்கத்தை ஆபத்திற்குட்படுத்தும் என்று கூறி நிறுவனம் முடிக்கிறது. “இறுதியாக, ஒப்பந்தம் ஏற்கபடாததால் உருவாக்கப்பட்ட ஸ்திரமற்ற தன்மையால், ஏற்கனவே நாங்கள் முதலீட்டை இரத்து செய்துவிட்டோம் என்பதால் அத்தொகை ஆலை 2 க்கு வாகன நேர்த்தி பணிக்காக மாற்றப்படும்.” மேலும், “இந்த நேரத்தில் எஞ்சிய திட்டங்களின் மீதான தாக்கம் பற்றி சரியாகத் தெரியவில்லை, மற்றும் நிறுவன செயல்பாட்டின் இழுபறி நிலை எதிர்கால முதலீடு நிராகரிக்கப்படுவதன் ஆபத்தை அதிகரிக்கும்” என்றும் கூறியது.

2021 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் ஒரு பில்லியனுக்கு அதிகமாக இலாபமீட்டியதும், மேலும் அதன் பணக்கார முதலீட்டாளர்களுக்கு உச்சபட்ச இலாபப்பங்கீட்டை வழங்கியதுமான சுவீடன் நாட்டைச் சேர்ந்த இந்த பன்னாட்டு நிறுவனம், தொழிலாளர்களின் தலையில் துப்பாக்கியை வைக்க முயற்சிக்கிறது, அதாவது “மேலும் விட்டுக்கொடுப்புக்களை ஏற்றுக் கொள்ளவேண்டும், இல்லையெனில் உங்களது அற்ப ஊதிய உயர்வுகளைக் கூட நாங்கள் கொள்ளையடிப்போம், உங்கள் விடுமுறைக்கால ஊதியத்தை நிறுத்துவோம், மேலும் உங்கள் வேலையை கூட பிடுங்கி விடுவோம்” என்றெல்லாம் கடுமையாக எச்சரிக்கை விடுத்தது.

UAW தலைவர் ரே கரி (Ray Curry) உம் UAW லோக்கல் 2069 உம் நிறுவனத்தின் மிரட்டும் முயற்சி பற்றி ஒரு வார்த்தை கூட வெளியிடவில்லை. ஏனென்றால், தொழிலாளர்களின் தொண்டையை நெரித்து ஒப்பந்தத்தை ஏற்க வைக்கும் பிரச்சாரத்தில் இவர்கள் இணை சதிகாரர்களாவர். தொழிலாளர்கள் படித்து ஆராயும் வகையில் முழு ஒப்பந்தத்தையும் வெளியிட UAW அதிகாரிகள் மறுத்துவிட்டனர் என்பதுடன், தற்காலிக ஒப்பந்தத்திற்கு அறிவித்து ஒரே வாரத்தில், வாக்களிக்க வைப்பதன் மூலம் அதனை வேகப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

சாமானிய தொழிலாளர்கள் குழு தொழிலாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பதுடன், ஒப்பந்தத்தை தோற்கடிப்பதில் உறுதியாக உள்ளனர். “எங்களை கொடுமைப்படுத்தவே அவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்பது வெளிப்படையானதே,” என்று வேலைநிறுத்தம் செய்யும் ஒரு தொழிலாளி கூறினார். மேலும் இவர், “‘நாங்கள் மெக்சிகோவுக்குச் செல்லப் போகிறோம்’ என்று அவர்கள் எங்களை பயமுறுத்தும் தந்திரத்தை மீண்டும் கையிலெடுப்பார்கள். இது எங்களது நிராகரிப்பை குறைப்பதற்கு போதுமான நபர்களை தூண்டக்கூடும். நாம் இங்கு விளையாடவில்லை என்பதையும், அவர்களது அச்சுறுத்தல்களுக்கு பயப்படவில்லை என்பதையும் காட்ட இன்னும் 90 சதவீத ‘வேண்டாம்’ வாக்குகளுடன் நாம் பதிலிறுக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த தொழிலாளி இவ்வாறு தெரிவித்தார்: “முழு ஒப்பந்தமும் தொழிற்சங்க அரங்கின் பின்புற அறையில் இருப்பதாக தொழிற்சங்கம் கூறுகிறது. ஆனால், அதைப் பார்க்க அரங்கிற்குச் சென்ற தொழிலாளர்களின் முகநூல் பக்கத்தில் பல தகவல்களை நான் பார்த்தேன், மேலும் உள்ளூர் தொழிற்சங்க அதிகாரிகள் அது அங்கு இல்லை என்று கூறுகிறார்கள் அல்லது அதை பார்ப்பதற்கு முன்னர் மற்றொரு அதிகாரி காண்பிக்கும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும் என்கிறார்கள். தொழிலாளர்கள் UAW இன் இத்தகைய நடவடிக்கையால் சோர்ந்து போகிறார்கள்.”

நிறுவனத்தின் மிரட்டல்கள் பற்றி குறிப்பிட்டு, மற்றொரு தொழிலாளி இவ்வாறு கூறினார்: “இதற்கு வாக்களிக்க வைக்க எங்களை அவர்கள் பயமுறுத்த முயற்சிக்கிறார்கள். நாங்கள் வாக்களித்து இதையும் நிராகரித்தோமானால், ‘நாங்கள் அனைத்து கட்டுமானங்களையும் நிறுத்திவிட்டோம் என்றும், எங்களது புதிய ஆலைக்கான இடத்தை நாங்கள் தேடப் போகிறோம்’ என்றும் அவர்கள் கூறப் போகிறார்கள். நாங்கள் நிராகரித்து வாக்களித்தால் நிச்சயமாக அவர்கள் இதைத்தான் கூறுவார்கள் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.”

“அவர்கள் இரண்டாவது தற்காலிக ஒப்பந்தத்திற்கு திரும்புவார்களானால், ஏராளமான இளம் தொழிலாளர்கள் பெரும் வருமானத்தை இழப்பார்கள், எல்லாம் விதி, ஒரு மணி நேரத்திற்கு 2-3 டாலரை நானும் இழப்பேன். என்றாலும், இதை வாக்களித்து நிராகரிப்பதை தடுக்க இத்தகைய அச்சுறுத்தல்களை விடுத்து மிரட்டக் கூடாது என்பதற்கு நாம் வாக்குறுதி பெற வேண்டும்.”

நிறுவனம் மற்றும் UAW இரண்டையும் எதிர்ப்பதை வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழு (Volvo Workers Rank-and-File Committee - VWRFC) வழிநடத்துகிறது. இன்றைய வாக்கெடுப்புக்கான முன்னேற்பாடுகளில், அனைத்து பக்கங்களுடன் முழு ஒப்பந்தத்தை வெளியிடவும், ஒப்பந்தத்தின் மீதான எந்தவித வாக்கெடுப்புக்கும் முன்னால் தொழிலாளர்கள் அதைப் படித்துப் பார்த்து விவாதிப்பதற்கு போதுமான நேரம் வழங்கவும் கோரிக்கை விடுத்து VWRFC ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. சரணடைவு ஒப்பந்தத்தை நிராகரிக்கவும், வேலைநிறுத்தத்தை நிறுவனத்தின் மாக்-வொல்வோ ஆலைகளுக்கும் மற்றும் மிகப்பரந்த அளவில் ஒட்டுமொத்த வாகனத்துறைக்கும் விரிவுபடுத்தவும் தொழிலாளர்களுக்கு குழு அழைப்பு விடுத்துள்ளது.

பெல்ஜிய தொழிலாளர்களின் செயல்பாடு ஐக்கியப்பட்ட நடவடிக்கை சாத்தியம் என்பதைக் காட்டுகிறது. சமீபத்திய நாட்களில், வொல்வோ தொழிலாளர்கள் பென்சில்வேனியா மற்றும் மேரிலாந்தில் உள்ள மாக்-வொல்வோ ஆலைகளின் தொழிலாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களது ஆதரவைப் பெற்றுள்ளனர்; மேலும் டெட்ராய்ட், சிகாகோ மற்றும் ஏனைய நகரங்களிலுள்ள முக்கிய வாகன ஆலைகள்; மற்றும் ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பெல்ஜியம் உட்பட வொல்வோவின் சர்வதேச அளவிலான பிரிவுகளில் உள்ள தொழிலாளர்களின் ஆதரவையும் அவர்கள் பெற்றுள்ளனர்.

இந்த வார தொடக்கத்தில், உலக சோசலிச வலைத் தளம் (WSWS) மற்றும் ஐரோப்பாவின் சோசலிச சமத்துவக் கட்சிகளின் பிரச்சாரகர்கள், வொல்வோ கார்கள் ஆலையில் தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், கென்டில் உள்ள நிறுவனத்தின் மாபெரும் வளாகத்தின் பெல்ஜிய தொழிலாளர்களிடமிருந்து வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு மிகப்பரந்த ஆதரவு கிடைப்பதை கண்டனர்.

“பெல்ஜிய தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இணைய அனைத்து உரிமைகளும் உண்டு, நாங்கள் அவர்களை ஆதரிக்கிறோம்,” என்று VWRFC இன் ஒரு உறுப்பினர் வொல்வோ கார்கள் ஆலையின் தொழிலாளர்கள் வெளிநடப்புக்கு பதிலிறுக்கையில் WSWS க்குத் தெரிவித்தார். “பெல்ஜிய தொழிலாளர்கள் தங்களது குறுகிய நேர வேலைவாரத்தை இழந்தால், நிறுவனம் வேலைநேரத்தை 40 மணிநேரங்களில் தொடங்கும், பின்னர் அது நாங்கள் வேலை செய்வது போல 50-60 மணிநேரங்களாக மாறும்.

“நாங்கள் அனைவரும் இதே பிரச்சினைகளைத்தான் எதிர்கொள்கிறோம்,” என்றவர் கூறினார். மேலும், “பெல்ஜிய தொழிலாளர்களைப் போலவே, எங்களை அத்தியாவசிய தொழிலாளர்கள் என்று வொல்வோ கூறுவதுடன், தொற்றுநோய் தொடங்கிய பின்னர் மீண்டும் ஆலைக்கு வேலைக்குத் திரும்ப எங்களை அது நிர்ப்பந்தித்தது. அப்போது, ‘நீங்கள் வேலைக்கு வந்திருப்பதை நாங்கள் பாராட்டுகிறோம், தயவுசெய்து உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்’ என்று அவர்கள் கூறினர். இதற்கு நான் அவர்களிடம், ‘ஒருவேளை அடுத்த ஆண்டு எங்கள் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, நீங்கள் அனைவரும் எங்களை கவனித்துக் கொள்வீர்கள்’ என்று கூறினேன். பெல்ஜிய தொழிலாளி இவ்வாறு சொன்னது எனக்கு பிடித்தது: “தொற்றுநோய் காலத்தின் போது நாங்கள் அனைவரும் ஒரு பெரிய அணியை உருவாக்கினோம், இவ்வாறு எல்லா இடங்களிலும் உள்ள வொல்வோ தொழிலாளர்களுக்காக நாம் ஒரு பெரிய குழுவை உருவாக்குவது நல்லது.”

“எங்களது போராட்டம் அவர்களது போராட்டம்,” என்று மற்றொரு VWRFC தொழிலாளி பெல்ஜிய தொழிலாளர்கள் பற்றி கூறினார். மேலும் “அனைவரும் ஒரே விஷயத்திற்காகத்தான் போராடுகிறோம். டெட்ராய்ட் தொழிலாளர்களின் வீடியோவை நான் பார்த்தேன், அவர்களும் துல்லியமாக நாங்கள் செய்வதையே செய்கிறார்கள். இந்த பிரச்சினையை நாங்கள் மட்டும் தான் எதிர்கொண்டோம் என்று நீங்கள் நினைத்தால் அது வேடிக்கையானது, மாறாக ஒட்டுமொத்த உலகமே இதை எதிர்கொள்கிறது. இவையனைத்தும் வெளிப்படத் தொடங்கியுள்ளது, மூடிமறைக்கப்பட்ட விடயங்கள் வெளியே வருகின்றன” என்றும் அவர் கூறினார்.

ஒரு மூத்த வொல்வோ தொழிலாளி இவ்வாறு கூறினார்: “இது உங்களுக்காக இல்லாதிருந்தால், அவர்கள் [WSWS] எப்படி அறிவார்கள்? நியூ ரிவர் வலி ஆலை பற்றி வொல்வோ அவர்களுக்கு சொல்லாது, கென்ட் பற்றி அவர்கள் எங்களுக்கு சொல்ல மாட்டார்கள். இப்போது தெரியப்படுத்துவதற்கான வாய்ப்பை நீங்கள் எங்களுக்கு அளித்தீர்கள். குறைந்தபட்சம் அமெரிக்க ஊடகங்கள் இந்த மாதிரியான விடயங்களை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும், மேலும் ஐரோப்பிய ஊடகங்களும் மிகவும் வேறுபாடற்றவை என்று நான் சந்தேகிக்கிறேன்.”

மேலும் அவர், “இந்த வீடியோவை நான் பல NRV தொழிலாளர்களுக்கு அனுப்பினேன், அதற்கு அவர்கள் பாராட்டும் விதமாக thumps up மற்றும் ஏனைய அடையாளங்களை திருப்பியனுப்பினர். அவர்களில் பலர் கென்ட் தொழிலாளர்கள் எங்களுக்கு ஆதரவளிப்பதை நம்ப முடியாமல் இருக்கின்றனர். வீடியோ வெளிவந்த நேரம் இதைவிட சிறப்பாக இருந்திருக்க முடியாது. அவர்களது பொது தொடர்பு பொறிகள் கொண்டு எங்களை பயமுறுத்த வொல்வோ முயற்சிப்பது போல, சரியாக வாகளிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் தான், நாங்கள் இந்த வீடியோவை பார்க்கிறோம், இது மீண்டும் எரியூட்டுகிறது” என்றும் கூறினார்.

வொல்வோ தொழிலாளர்கள், அமெரிக்காவில் உள்ள மாக்-வொல்வோ தொழிலாளர்கள் மற்றும் ஏனைய வாகனத் தொழிலாளர்கள், மற்றும் உலகளவில் உள்ள வொல்வோ கனரக வாகன ஆலைகள் மற்றும் வொல்வோ கார்கள் ஆலைகளின் தொழிலாளர்கள் என தங்களது போராட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் நிறுவனத்தின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்.

வொல்வோ கனரக வாகன ஆலையின் வேலைநிறுத்தப் போராட்டம், ஐக்கியப்பட்ட எஃகு தொழிலாளர்கள் சங்கம் சலுகை ஒப்பந்தம் மூலம் கட்டாயப்படுத்த முயற்சிக்கும் பென்சில்வேனியா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள ATI எஃகு தொழிலாளர்கள், அலபாமாவில் உள்ள வாரியர் மெட் மற்றும் கனடாவில் உள்ள வேல் நிறுவனங்களில் வேலைநிறுத்தம் செய்யும் சுரங்கத் தொழிலாளர்கள், மற்றும் பேக்கரி, மிட்டாய், புகையிலை தொழிலாளர்கள் மற்றும் தானியம் அரைக்கும் தொழிலாளர்கள் ஆதரவுடன் ஒப்பந்தத்தை நிராகரித்ததன் பின்னர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட கான்சாஸின், டொபீகாவில் உள்ள பிரிட்டோ-லே (Frito-Lay) தொழிலாளர்கள் உட்பட, ஏனைய தொழில்கள் சார்ந்த தொழிலாளர்களின் போராட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினதும் போராட்டங்களின் விரிவாக்கம் மற்றும் ஒருங்கிணைப்புக்கு, ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கத்தின் கோரிக்கைகளைச் செயல்படுத்த பாடுபடும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான, சாமானிய தொழிலாளர்கள் குழுவின் வலையமைப்பை உருவாக்குவது அவசியமாகும்.

Loading