இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) மற்றும் அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினதும் (அ.ப.மா.ஒ.) ஐந்து முன்னணி செயற்பாட்டாளர்கள் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட அபத்தமானதும் ஜனநாயக விரோதமானதுமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 7 அன்று மூன்றாவது முறையாக கடுவெல நீதவான் முன் முற்படுத்தப்பட்ட ஐந்து மு.சோ.க. மற்றும் அ.ப.மா.ஒ. உறுப்பினர்கள் செப்டம்பர் 21 வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அன்றும் பிணை கிடைப்பது நிச்சயமற்றது என்பதையே அடக்குமுறை ஆத்திரமூட்டல்கள் காட்டுகிறன.
மு.சோ.க. தலைவர் சமீர கொஸ்வத்த, உறுப்பினர் கோஷிலா ஹன்சமாலி மற்றும் அ.ப.மா.ஒ. ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேயும் இரண்டு அ.ப.மா.ஒ. செயற்பாட்டாளர்களான அமிலா சந்தீபா மற்றும் ஹஷான் ஹர்ஷனவும் அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களாவர்.
சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) அதன் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், பொலிசாரின் அடக்குமுறையை வன்மையாகக் கண்டிப்பதோடு வேட்டையாடப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோருகிறன.
மு.சோ.க.வினதும் அ.ப.மா.ஒ.வினது அரசியலுடன் சோசலிச சமத்துவக் கட்சியும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் பாரிய அரசியல் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. ஆயினும், இந்த பொலிஸ் அடக்குமுறையானது உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்ம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று அறிவிக்க நாங்கள் தயங்குவதில்லை.
கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிராக ஆகஸ்ட் 3 அன்று கொழும்பு பாராளுமன்றத்திற்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொது சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டிலேயே மு.சோ.க. மற்றும் அ.ப.மா.ஒ. செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். அ.ப.மா.ஒ. தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட “மாணவர்-மக்கள் இயக்கமே” இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. பல பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இதில் பங்குபற்றினர்.
பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்வதற்காக என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஐந்து கைதிகள் மீதும் தலங்கம பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போராட்டத்தின் போது காட்சிப்படுத்தப்பட்ட அட்டை சவப்பெட்டியை எரித்தமையினால் நெடுஞ்சாலை 'சேதமடைந்தது' என்று கூறியே, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அபத்தமான குற்றச்சாட்டே “பிணை” வழங்காமலிருக்க பயன்படுத்தப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடிய சட்டத்தரணி கமல் விஜேசிறி, ஊடகங்களுக்கு பேசுகையில், கடுவெல நீதவான், 'இந்த நபர்கள் ஒவ்வொருவர் தொடர்பாகவும் ஆதாரங்களுடன் அறிக்கையை' சமர்ப்பிக்க கோரி பிணை வழங்க மறுத்ததாக குறிப்பிட்டார்.
அவர்களில் நான்கு பேர் விளக்கமறியலில் இருந்தபோது, கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு, அவர்களில் மூன்று பேருக்கு சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியிலேயே, ஐந்து கைதிகளும் மீண்டும் விளக்க மறியலில் அடைக்கப்பட்டனர்.
“கோவிட்-19 தொற்றுநோய் அபாயத்தின் மத்தியில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தால், இப்போது அவர்களுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பதை, பிணை வழங்குவதற்கான காரணமாக பரிசீலைனைக்கு எடுத்துக்கொள்ள முடியாது” என நீதவான் அறிவித்ததாக மு.சோ.க. தலைவர் ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) தெரிவித்தார்.
விளக்கமறியலில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. கொஸ்வத்த, முதலிகே மற்றும் சந்தீபா ஆகிய மூவரும் பதுளையில் உள்ள தல்தென தனிமைப்படுத்தல் மையத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 125 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இந்த மூவர் உட்பட 85 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.
வேட்டையாடப்பட்ட ஐந்து பேரும், தற்போது வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு 10X12 அடி அறைகளில் சுமார் 20 பேர் மனிதாபிமானமற்ற நிலையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் டெல்டா போன்ற தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் மு.சோ.க. செய்தி தொடர்பாளர் கூறினார். சந்தீபாவுக்கு இப்போது இரண்டாவது முறையாக கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. ஹஷான் ஹர்ஷன வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு தொற்று நோய் பரவும் அபாயத்தில் உள்ளார். அவர்கள் அனைவருக்கும் உயிராபத்து உள்ளது.
நீர்கொழும்பில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் வைக்கப்பட்டிருந்த போது ஹன்ஸமாலி வைரஸால் பாதிக்கப்பட்டார். அண்மையில் காய்ச்சல் இருந்தாலும், இரண்டு நாட்கள் சிகிச்சை இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், அம்பேபுஸ்ஸ சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டார். அந்த சிகிச்சை மையங்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது.
ஹன்ஸமாலி, கொஸ்வத்த, முதலிகே ஆகியோர், சுவாச பிரச்சனைகள் மற்றும் பிற சிக்கல்கள் குறித்து தனித்தனியாக மருத்துவ அறிக்கைகளை சமர்பித்திருந்தாலும், நீதிமன்றம் இவை அனைத்தையும் நிராகரித்துள்ளது.
இராஜபக்ஷ அரசாங்கம் ஒரு பரந்த அடக்குமுறையை முன்னெடுக்கத் தயாராகும் சூழ்நிலையிலேயே, மு.சோ.க. மற்றும் அ.ப.மா.ஒ. செயற்பாட்டாளர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய செயற்றப்பட்டாளர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளை சேகரித்து, அவர்களை பின் தொடரவதற்கு போலீசார் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து எதிர்ப்புகளையும் நசுக்க அரசாங்கம் அடக்குமுறை ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. ஆகஸ்ட் தொடக்கத்தில் நீதித்துறை சேவை ஆணைகுழுவும் (ஜே.எஸ்.சி.) இலங்கை நீதிபதிகள் சங்கமும் இணைந்து நடத்திய மாநாட்டில், பிரதம நீதியரசர் உட்பட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு, பொது போராட்டங்களை தடுக்கும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய அவசியம் குறித்து நீதவான்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வேலைநிறுத்தங்களை குற்றமாக்கும் அத்தியாவசிய பொதுச் சேவை சட்டம் நடைமுறையில் உள்ளபோதே, ஆகஸ்ட் 30 அன்று, ஜனாதிபதி இராஜபக்ஷ, இலங்கையில் ஒரு அடக்குமுறை அவசரகால நிலையை அறிவித்தார். தொற்றுநோயால் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடியின் சுமையை, கொடூரமான அடக்குமுறை மூலம் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது சுமத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது என்பது மிகத் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
- போராட்டங்களை தடை செய்ய இலங்கை அரசாங்கம் கொரோனா வைரஸ் சட்டங்களைப் பயன்படுத்துகிறது
- இலங்கையில் இராஜபக்ஷ அரசாங்கம் இணையத்தில் கருத்து சுதந்திரத்திற்கான உரிமைக்கு குழி பறிக்கிறது
- அரசாங்கத்துக்கும் ஆசிரியர் சங்கங்களுக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்களை நிராகரிப்போம்! நடவடிக்கை குழுக்களை அமைத்து ஊதிய போராட்டத்தை முன்கொண்டு செல்வோம்!