இலங்கை ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தை பயங்கரவாதத்தை அழித்ததை போன்று அடக்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மிரட்டுகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை அரச பாடசாலை ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் மூன்றாவது மாதத்தை எட்டியிருக்கும் நிலையில் அதற்கு எதிராக கொடூரமான தாக்குதலை சமிக்ஞை செய்யும் வகையில். பயங்கரவாதத்தை [விடுதலைப் புலிகளை] அழித்ததை போன்று ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கடந்த வெள்ளிக்கிழமை ஊடகங்களிடம் தெரிவித்தார் .

'பயங்கரவாதம் தோன்றுவதற்கான காரணம் நியாயமானதோ இல்லையோ அதை நாங்கள் அழித்தோம். அதேபோன்று ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்திற்கான காரணங்கள் நியாயமானதோ இல்லையோ மாணவர்கள் பாதிக்கப்படுவதால் நாங்கள் வேலைநிறுத்தத்தை நியாயப்படுத்த மாட்டோம்,' என அங்கு கூறிய வீரசேகர, வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ள ஆசிரியர்களை குற்றவாளிகள் என முத்திறைகுத்தி அவர்களுக்கு எதிரான பரந்த வேட்டையாடலுக்கு அடித்தளமிட்டார்.

ஏறக்குறைய 250,000 ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் நியாயமான ஊதியத்திற்கான போராட்டத்திற்கு வீரசேகரவின் கொடூரமான அர்த்தப்படுத்தல் யாதெனில், அது 'ஆசிரியர்களின் சுய விருப்பத்தின் படி செய்யப்படுவதல்ல, யாரோ ஒருவரின் நிர்பந்தத்தால் செய்யப்படுவது' என்பதாகும்

பொலிசுக்கு பொறுப்பான அமைச்சராக, வீரசேகரவின் இந்த பாய்ச்சல், ஆசிரியர்களின் போராட்டத்தை அடக்குவது சம்பந்தமாக முழு அரசாங்கத்தினதும் எதிர்கால நடவடிக்கைகளின் கொடூரத் தன்மைக்கு ஒரு முன் அறுகுறியாகும். ஜனாதிபதி இராஜபக்ஷ ஆகஸ்ட் 20 அன்று தேசத்திற்கு ஆற்றிய உரையில் 'வேலை நிறுத்தங்களையும் போராட்டங்களையும் செய்து நாட்டை அராஜக நிலைமைக்கு இட்டுச்செல்ல வேண்டாம்' என்று எச்சரித்த சூழ்நிலையிலேயே, வீரசேகர இந்த அச்சுறுத்தலை விடுக்கின்றார்.

இராஜபக்ஷ அரசாங்கம் “பயங்கரவாதத்தை அழிக்க” எதேச்சதிகாரமான கைதுகள், தடுத்து வைத்து விசாரணை செய்தல் மற்றும் காணாமல் ஆக்குதல் உள்ளிட்ட பொலிஸ்-இராணுவ வழிமுறைகளைப் பயன்படுத்தியது போல், ஆசிரியர்களின் போராட்டத்தை நசுக்க தயங்காது என்பதையையே வீரசேகரவின் கருத்துக்கள் உணர்த்துகின்றன.

அவரது நேரடி கட்டளையின் மூலம் ஏற்கனவே அந்த அடக்குமுறை தாக்குதலை தொடங்கியுள்ளது. அதன்படி, இரண்டு நாட்களுக்கு முன்பு, இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் மோகன் வீரசிங்க மற்றும் சுயாதீன கல்வி சேவையாளர் சங்கத்தின் செயற்பாட்டாளர் ஸ்ரீ நிலிகா ஆகியோர், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபடாத ஆசிரியர்கள் குழுவுக்கு, தொலைபேசியில் மிரட்டியதாக பொலிசார் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் அவர்கள், போராட்டத்திற்கு ஆதரவு கோரி ஆசிரியர்களுக்கு எடுக்கப்பட்ட பல அழைப்புகளின் அடிப்படையிலேயே பொலிஸ் தங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

வீரசேகரவின் கூற்றுப்படி, செப்டம்பர் 16, தீவின் பிரதான பாடசாலைகளின் பல ஆசிரியர்கள் அவரைச் சந்தித்து, வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பவர்கள் தங்களிடம் இணையவழி கல்வியில் ஈடுபடவேண்டாம் என 'கொலை மிரட்டல்' விடுத்ததாக புகார் தெரிவித்தனர். அவ்வாறு அழைப்புகள் எடுத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உடனடியாக உத்தரவிட்டதாக வீரசேகர கூறுகிறார்.

இந்த திட்டமிட்ட தாக்குதளுக்கு சான்றாக பயன்படுத்தும் முறைப்பாடுகள் பொதுவாக ஆசிரியர்களிடம் இருந்து வந்தவை அல்ல அரசாங்கத்தின் தாக்குதலுக்கான ஆயத்தங்களின் ஒரு பகுதியாக ஆசிரியர்களின் போராட்டத்திற்கு எதிராக மோசமான கருத்துக்களை வெளியிட்டு வரும் ஆளும் பொது ஜன முன்னணியின் ஒரு அங்கமான, பொது ஜன கல்வி ஊழியர் சங்கமே இந்த புகார்களை கொடுத்துள்ளது.

வீரசேகரவின் கருத்தின் எதிரொலித்து அன்றே நடத்திய செய்தியாளர் மாநாட்டில், பொதுஜன கல்வி ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்தபனகொட, 'ஆசிரியர் சங்கத் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் பயங்கரவாதிகளை நிறுத்தவேண்டும் என அரசாங்கத்திடம் கடுமையாக வலியுறுத்துகிறோம்' என்று கூறினார்.

அமைச்சரின் உத்தரவின்படி, பொலிஸ் தலைமையகம் இணையவழி கல்வி நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அவ்வாறான அச்சுறுத்தல் வந்தால் 119 தொலைபேசி எண் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இதுபோன்ற புகார்களை கொடுக்குமாறு அறிக்கையொன்றை விடுத்துள்ளது. ஆசிரியர்களின் போராட்டத்தில் ஈடுபடுவோரையும், அதை ஒழுங்கமைக்க முன்வருபவர்களையும் மிரட்டுவதே இத்தகைய அறிவிப்பின் நோக்கம் ஆகும்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதாகவும், வீதியை மறித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு, ஆகஸ்ட் 4 அன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம் முன்பு நடந்த ஆசிரியர்களின் போராட்டத்தின் பின்னர், 44 ஆசிரியர்களை வீட்டுக்குச் செல்லும் வழியில் கைது செய்வதன் மூலம், அரசாங்கம் தனது மிரட்டலைத் தொடங்கியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கண்டியில் 26 ஆசிரியர்களும், மாத்தறையில் மூன்று ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பல ஆசிரியர்கள் ஆகஸ்ட் 5 அன்று பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர்.

சமீபத்திய மாதங்களில் நாடு முழுவதும் நடந்த ஆசிரியர்களின் எதிர்ப்பு போராட்டங்கள் மூலம், கோவிட்-19 தொற்றுநோய் பரவியதாக பொய்யாக குற்றம் சாட்டி, அரசாங்கம் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதன் கீழ், ஆசிரியர்களின் போராட்டங்களை ஏற்பாடு செய்த நபர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் இருப்பிடங்கள் பற்றிய தகவல்களை கொடுக்குமாறு, குற்ற புலனாய்வுத்துறை பொலிஸ் நிலையங்கள் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மேலும், வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு க.பொ.த. உயர்தர மற்றும் 5 ஆம் தர புலமைப்பரிசில் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மறுத்த அதிபர்களின் பட்டியலை வலய கல்வி பணிப்பாளர்கள் மூலம் பெற்று அரசு, அவர்களை வரவழைத்து வலுக்கட்டாயமாக விண்ணப்பங்களை அவர்களை கொண்டே பூர்த்தி செய்துள்ளது.

அரசாங்கம் ஆசிரியர்களின் ஊதியக் கோரிக்கைகளைத் தொடர்ந்து நிராகரிக்கும் அதே வேளை, இந்த தாக்குதல்கள் அனைத்தையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு வேலைக்குச் சென்றால், இரண்டு மாதங்களுக்கு ஊதியம் வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்த 5,000 ரூபா செப்டம்பர் கொடுப்பனவை, மாத சம்பளத்தில் சேர்க்காமல் நிறுத்தி, மீண்டும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தை கைவிடுமாறு அரசாங்கம் வலியுறுத்துகிறது .

தொற்றுநோய் அச்சுறுத்தலை கருத்தில் கொள்ளாது பாடசாலைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள சுகாதார சேவைகள் ஆணையாளர் நாயகம், இருநூறுக்கும் குறைவான சிறுவர்களைக் கொண்ட பாடசாலைகளில் ஆரம்ப தரங்களை தொடங்குவதற்கு, கல்வி அமைச்சிற்கு அறிவுறுத்தியுள்ளார். இதன் கீழ், ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தை முறியடிக்கும் அரசின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

போராட்டங்களுக்கான காரணங்கள் 'நியாயமானவையானாலும்' அடக்கப்படும் என்ற வீரசேகரவின் கருத்து, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு எச்சரிக்கையாகும். தமது மேலதிக கொடுப்பனவுகள் வெட்டப்படுவதற்கு எதிராக பெட்ரோலியம் கூட்டுத்தாபன தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்துவரும் எதிர்ப்புகளும், அசாதாரண வேலை நிலமைகளுக்கு எதிராக சுகாதார தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் உட்பட, அபிவிருத்தியடைந்து வரும் வர்க்கப் போராட்டங்களை கொடூரமான முறையில் நசுக்குவதற்கு இராஜபக்ஷ அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்பது அதன் அர்த்தமாகும்.

தொற்று நோயிலிருந்து தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிப்பதை குற்றவியல்தனமான புறக்கணித்தமைக்கும், கடுமையான பொருளாதார நெருக்கடியின் சுமையை அவர்கள் மீது சுமத்தியதற்கும் எதிராக அரசாங்கத்தின் மீது வெகுஜனங்களின் கோபம் அதிகரித்து வருகிறது. நாட்டின் வளர்ந்து வரும் சுகாதார நெருக்கடியை சமாளிக்க கூடியவாறு பொது சுகாதார கட்டமைப்பைக் கட்டியெழுப்பத் தவறியுள்ள அரசாங்கம், அதன் வருவாய் வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு நாணய இருப்பு குறைதல் போன்றவற்றுக்கு முகம் கொடுப்பதால், அரச செலவுகளை குறைப்பதற்கு, அதாவது அரச வேலைகளுக்கு ஆட்சேர்ப்பதை நிறுத்துதல், சம்பளத்தை குறைத்தல், மேலதிகநேர கொடுப்பனவு, நலன்புரி சேவைகள் போன்ற அனைத்து செலவுகளையும் வெட்டிக் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

இந்த தாக்குதல்களுக்கு எதிராக வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க போராட்டங்களை நசுக்க, ஜனாதிபதி இராஜபக்ஷ இராணுவ அடிப்படையிலான சர்வாதிகாரத்தை நோக்கி வேகமாக நகர்கிறார். ஆகஸ்ட் 30 அன்று, ஜனாதிபதி இராஜபக்ஷவால் அறிவிக்கப்பட்ட அவசர நிலை, அந்த சர்வாதிகார திட்டங்களின் உச்சகட்டமாகும். இராஜபக்ஷவினால் முன்னர் பிரகடனப்படுத்தப்பட்டு கடந்த வாரம் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட அத்தியாவசிய பொதுச் சேவை சட்டம், சுமார் முழு அரசாங்க துறையிலும் அல்லது சுமார் ஒரு மில்லியன் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களை தடை செய்துள்ளது.

கல்வித் துறையில் உள்ள தொழிற்சங்கங்கள் போன்றே ஏனைய துறைகளிலும் உள்ள தொழிற்சங்கங்கள் இந்த வளர்ந்து வரும் ஆபத்தை தொழிலாளர்களுக்கு மூடி மறைக்கின்றன. தொழிற்சங்கத் தலைவர்கள், ஆசிரியர்களின் போராட்டத்தின் மீதான அரசாங்கத்தின் தாக்குதல் பற்றி அறிக்கைகளில், அவசரகால நிலை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் கவனமாக தவிர்த்துக்கொண்டனர்.

வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கும் பிரதான தொழிற்சங்கங்களில் ஒன்றான, மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைமையிலான இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் (இ.ஆ.சே.ச.) செயலாளர் மஹிந்த ஜெயசிங்க, நேற்று கூட்டிய செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தொழிற்சங்க கட்டளை சட்டங்களின் கீழ், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவது “பூரணமான உரிமை' என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், அரசாங்கத்தால் அதற்கு அப்பால் செல்ல முடியாது, எனக் கூறினார். “இது ஒரு பொலிஸ் அரசு அல்ல, இது ஒரு இராணுவ அரசு அல்ல, இது இன்னமும் ஒரு ஜனநாயக குடியரசு ஆகும்' என்று அவர் கூறியமை, முதலாளித்துவ சட்டத்தின் பாதுகாப்பின் கீழ் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்ற மாயையை விதைப்பதாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியால், “ஜனாதிபதியின் ஒடுக்குமுறை அவசர கால சட்டத்தை எதிர்த்திடுங்கள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை, வரலாற்றில் இலங்கையில் ஆட்சிசெய்த அரசாங்கங்கள், முதலாளித்துவ ஆட்சியை அச்சுறுத்தும் வகையில் சமூக மற்றும் அரசியல் எழுச்சிகள் தலைதூக்கும் போது, அவற்றை இரத்தக் களரி அளவுக்கு தவிடுபொடியாக்குவதற்காக, இருக்கும் அனைத்து சட்டங்களுக்கும் மேலாக அவசரகால சட்டத்தை பயன்படுத்தியுள்ளன என்பதை வலியுறுத்துகிறது. முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இந்த முறை அவசரகால சட்டத்தை அரசாங்கம் கையிலெடுத்துள்ளது .

தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் இந்த தீவிர ஆபத்துகள் மற்றும் சவால்களை மூடிமறைத்து வைத்திருக்கும் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களை அரசியல் ரீதியாக நிராயுதபாணிகளாக ஆக்கி, முதலாளித்துவ தாக்குதல்களை தோற்கடிப்பதற்கான சாத்தியமான நடவடிக்கையை தடுக்கின்றன.

தொழிற்சங்கங்கள் மிகைப்படுத்துவதைப் போல், முதலாளித்துவ சட்டம் அல்லது அதை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு அமைப்பினதும் உதவியோடும், ஆசிரியர்கள் போராட்டத்தை அரசாங்கத்தின் தாக்குதலுக்கு பலியாகிவிடாமல் தடுக்க முடியாது. சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் தலைமையிலான ஆசிரியர்-மாணவர்கள்-பெற்றோர் நடவடிக்கை குழுவின் சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, “தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து, இராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பிற்கும் எதிராக, ஒரு சுயாதீனமான மற்றும் ஒருங்கிணைந்த எதிர்த் தாக்குதலை தொழிலாள வர்க்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே, அரசாங்கத்தின் இந்த தாக்குதல்கள் மூலம், ஆசிரியர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தின் முன்னால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.”

Loading