பிரெக்ஸிட் மீன்பிடிப்பு பிரச்சினையில் பிரான்சும் பிரிட்டனும் வர்த்தகப் போருக்கு அச்சுறுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இங்கிலாந்து கால்வாயில் மீன்பிடி உரிமைகளை எவ்வாறு ஒதுக்குவது என்பதன் மீது அதிகரித்துவரும் பிரெக்ஸிட் க்குப் பிந்தைய சச்சரவுக்கு மத்தியில், பாரீஸூம் இலண்டனும் அடுத்த வாரம் தொடங்கி ஒன்றன்மீது ஒன்று பெரியளவில் வர்த்தகப் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள அச்சுறுத்தி வருகின்றன.

புதன்கிழமை, பிரெஞ்சு பொலிஸ் ரோந்து படகுகள் பிரெஞ்சு கடற்கரையை ஒட்டி இரண்டு பிரிட்டிஷ் மீன்பிடி படகுகளைத் தடுத்து நிறுத்தியதோடு, ஒன்றை லு ஹாவ்ர் துறைமுகத்தில் (Le Havre port) சிறைபிடித்து வைத்துள்ளது. லு ஹாவ்ரில் சிறைபிடிக்கப்பட்ட படகு, 'பிரிட்டனுக்கு வழங்கப்பட்ட மீன்பிடி உரிமங்களின் பட்டியலில் இல்லை' என்று பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர். 'மீனவர் பிடித்ததைப் பறிமுதல் செய்யவும்' மற்றும் அந்த கப்பலின் கேப்டன் மீது குற்றவியல் வழக்கு தொடரவும் அவர்கள் அச்சுறுத்தினர்.

அந்த நடவடிக்கை பிரிட்டிஷ் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிரான பதில் நடவடிக்கையாக இருந்தது, அவர்கள் பிரிட்டிஷ் கடற்பகுதியில் மீன்பிடிக்கும் உரிமைகள் கோரிய 47 பிரெஞ்சு கோரிக்கைகளில் 15 க்கு மட்டுமே உரிமம் வழங்கி இருந்தனர். பிரெஞ்சு கடற்பகுதியில் பிரிட்டனைச் சார்ந்துள்ள ஜெர்சி தீவு, மீன்பிடிப்பதற்கான உரிமம் கோரிய பிரான்சின் 170 கோரிக்கைகளில் வெறும் 66 க்கு மட்டுமே உரிமம் வழங்கியது. சுமார் 1,700 ஐரோப்பிய ஒன்றிய மீன்பிடி வாகனங்களுக்கு அல்லது மொத்த கோரிக்கைகளில் 97 சதவீதத்திற்கு உரிமம் வழங்கி இருப்பதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறுகின்ற நிலையில், பிரெஞ்சு மீன்வளத்துறை அமைச்சர் Annick Girardin மொத்த கோரிக்கைகளில் வெறும் 90.3 சதவீதத்திற்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டிருப்பதாகவும், பிரிட்டன் ஏறக்குறைய வேண்டுமென்றே இலக்கு வைத்து பிரெஞ்சு படகுகளுக்கு அனுமதி மறுப்பதாகவும் பதிலளித்தார்.

பாரிஸும் இலண்டனும் அந்த கால்வாயின் இருபுறமும் உள்ள மீனவர்களுக்கு எதிராக இந்தத் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஐரோப்பிய சக்திகளுக்கு இடையிலான உறவுகள் கட்டவிழ்கின்றன. பிரெக்ஸிட் சம்பந்தப்பட்ட பதட்டங்கள், சீனாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா-பிரிட்டன்-அமெரிக்கா (AUKUS) கூட்டணிக்குப் பிரான்சின் விரோதப் போக்குடன் தொடர்புபடுகின்றன, அது 56 பில்லியன் யூரோ பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா திடீரென மறுத்தளிக்க இட்டுச் சென்றது. அனைத்திற்கும் மேலாக, பிரெஞ்சு மற்றும் பிரிட்டன் ஏகாதிபத்தியம் இரண்டுமே இந்த பெருந்தொற்றில் இருந்தும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் அதிகரித்து வரும் கோவிட்-19 மரண அலையில் இருந்தும் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாக தேசியவாதத்தைத் தூண்டிவிட்டு வருகின்றன.

நவம்பர் 2 க்கு முன்னர் பிரெஞ்சு மீன்பிடி படகுகளுக்கு இலண்டன் உரிமங்கள் வழங்காவிட்டால் பெரியளவில் எதிர் நடவடிக்கைகளைக் கொண்டு பிரிட்டனை அச்சுறுத்த கிரார்டின் நேற்று RTL வானொலிக்குச் சென்றார். அந்த நடவடிக்கைகள் பின்வருவன உள்ளடங்கும்:

• பிரான்சிற்கு வரும் பிரிட்டிஷ் கடல்சார் உணவுப் பண்டங்கள் அனைத்திற்கும் தீவிர சுகாதார ஆய்வு மேற்கொள்ளப்படும்;

• பிரிட்டிஷ் மீன்பிடி படகுகள் பிடித்த மீன்களை பதப்படுத்த பயன்படுத்தப்படும் பிரெஞ்சு துறைமுகளில் அவற்றை நிறுத்த தடை விதிக்கப்படும்;

• பிரெஞ்சு கடற்பகுதியில் பிரிட்டிஷ் படகுகள் அனைத்திற்கும் கண்காணிப்பு சோதனைகள் நடத்தப்படும்;

• பிரான்சுக்கு வரும் பிரிட்டிஷ் சரக்கு வாகனங்கள் அனைத்திற்கும் கண்காணிப்பு மற்றும் சுங்கத்துறை சோதனைகள் தீவிரப்படுத்தப்படும்.

பிரான்சின் இந்த நடவடிக்கைகள், நடைமுறையளவில் பிரிட்டன் பண்டங்களைப் பிரான்சுக்கு ஏற்றுமதி செய்வதை ஏறக்குறைய சாத்தியமில்லாது செய்யவும், பிரெஞ்சு கடற்பகுதியில் பிரிட்டிஷ் படகுகள் பயணிக்க முடியாமல் செய்யவும் நோக்கம் கொண்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துடன் 2019 இல் பேரம்பேசப்பட்ட பிரெக்ஸிட் உடன்படிக்கையை பிரிட்டிஷ் அரசாங்கம் திடீரென கடந்தாண்டு கைவிட்டதைக் குறிப்பிட்ட கிரார்டின், RTL க்குக் கூறுகையில், “ஒன்பது மாதங்களாக பிரெஞ்சு மீனவர்களால் வேலை செய்ய முடியாமல் இருந்தது. பிரிட்டிஷார் அவர்கள் கையெழுத்திட்ட உடன்படிக்கைகளை அவர்களே மதிப்பதில்லை. நாங்கள் நிறைய பொறுத்து போய்விட்டோம்,” என்றார்.

பிரெஞ்சு அதிகாரிகள், பிரிட்டனுக்கும் ஜேர்சிக்கும் வழங்கப்படும் மின்சார ஏற்றுமதியைத் துண்டிப்பது உட்பட இன்னும் பல ஆத்திரமூட்டும் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர், ஜேர்சி அதன் மின்சாரத் தேவையில் 90 சதவீதத்திற்குப் பிரான்ஸை சார்ந்துள்ளது. இது அத்தீவின் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளையே மூடவேண்டிய நிலைக்குக் கொண்டு வரலாம்.

'துரதிருஷ்டவசமாக பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு வேறு எதுவும் புரிவதில்லை என்று நான் நினைப்பதால், இப்போது நாங்கள் அதிகார மொழியைப் பேச வேண்டியுள்ளது,” என்று பிரான்சின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமைச்சர் Clément Beaune அதிவலது தொலைக்காட்சி சேனல் Cnews க்குத் தெரிவித்தார். “எங்களால் இனியும் சகித்துக் கொள்ள முடியாது, விதிவிலக்குகளும் இருக்காது,” என்று கூறிய அவர் தொடர்ந்து கூறுகையில், “விதிகளை மதிக்காத பங்காளியுடன் நம்பிக்கைக்குரிய சூழல் இருப்பதைப் போல நாங்கள் நடித்துக் கொண்டிருக்க முடியாது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

பிரெஞ்சு அச்சுறுத்தல்கள் 'ஏமாற்றமளிப்பதாக' கூறி ஓர் அறிக்கையை வெளியிட்ட பிரிட்டிஷ் அரசாங்கம், அவை திணிக்கப்பட்டால் அதேவிதமாக பதிலடி கொடுக்க உறுதியளித்தது. வெளியுறவுத்துறை செயலர் லிஸ் ட்ரூஸ் 'பாரபட்சமான' அச்சுறுத்தல்கள் பற்றிய கேள்விகளை எதிர்கொள்ள, இன்று பிரெஞ்சு தூதர் கேத்தரின் கோலன்னாவை வெளியுறவுத்துறை அலுவலகத்திற்கு வருமாறு நேற்று அழைப்பாணை அனுப்பி இருந்தார்.

சுற்றுச்சூழல்துறை செயலர் George Eustice ஸ்கை நியூஸிடம் கூறுகையில், 'அவர்கள் என்ன செய்வார்கள் என்று எங்களுக்குத் தெரியாது, இத்தகைய நடவடிக்கைகளை அனேகமாக செவ்வாய்க்கிழமை வரை அறிமுகப்படுத்த போவதில்லை என்று அவர்கள் கூறினார்கள், எனவே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் அவர்கள் அவற்றைக் கொண்டு வந்தால், அந்த விளையாட்டை இருவருமே விளையாட முடியும், சரி தானே, உரிய முறையில் விடையிறுக்க எங்கள் வசமும் கையிருப்பு உள்ளது,” என்றார்.

மில்லியன் கணக்கான வேலைகள் சார்ந்திருக்கும் முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் மீது பதிலுக்குப் பதில் தீவிரமடைந்து வரும் தாக்குதல், முதலாளித்துவ தேசிய-அரசு முறையின் பகுத்தறிவற்றத்தன்மைக்கு சான்று பகிர்கிறது. இது 2016 இல் பிரெக்ஸிட் வெகுஜன வாக்கெடுப்பு குறித்து பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சி (SEP - UK) எடுத்த கொள்கைரீதியான நிலைப்பாட்டை நிரூபணம் செய்கிறது. ஐரோப்பிய நிதிமூலதனத்தின் ஒரு மூர்க்கமான ஐரோப்பிய ஒன்றியமும் மற்றும் பிரெக்ஸிட்டை ஆதரித்தவர்களின் தேசியவாதமும் என இரண்டுக்கும் எதிராக பிரிட்டனிலும் ஐரோப்பா எங்கிலும் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்ட, அந்த வெகுஜன வாக்கெடுப்பைச் செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு SEP (UK) அழைப்பு விடுத்தது.

அந்த பிரெக்ஸிட் வெகுஜன வாக்கெடுப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறிய பின்னர் மீன்பிடி உரிமைகளைப் பிரிப்பது சம்பந்தமான சண்டையைத் தூண்டிவிட்டது என்றாலும், ஐரோப்பிய ஒன்றியக் கொள்கைகளும் பிரெஞ்சு வர்த்தகப் போர் அச்சுறுத்தல்களும் அதே பிற்போக்குத்தனமான தேசியவாத போக்குகளின் ஆழமடைந்து வரும் வெளிப்பாடாகும். இது கோவிட்-19 பெருந்தொற்றில் இருந்து இன்னும் அப்பட்டமாக வெளிப்படுகிறது. இலண்டனும் ஐரோப்பிய ஒன்றிய தலைநகரங்களும் 'வைரஸுடன் வாழும்' கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கொள்கையையே பின்பற்றின, இது பிரிட்டன் மற்றும் பிரான்சில் கால் மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 இறப்புகளுக்கும், ஐரோப்பா முழுவதும் 1.3 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளுக்கும் வழிவகுத்தது.

ஐரோப்பாவில் சர்வதேச உறவுகளின் முறிவு மிகவும் முன்னேறிய நிலையில் இருக்கையில், ஓர் இராணுவ மோதல் ஆபத்து வேகமாக வளர்ந்து வருகிறது. முன்னதாக ஏற்கனவே மே மாதம், ஜெர்சிக்கு அருகில் நடந்த பிராங்கோ-பிரிட்டிஷ் மீன்பிடி தகராறு கடற்பகுதியில் ஒரு பதட்டமான விட்டுக்கொடுப்பற்ற நிலைப்பாட்டுக்கு வழிவகுத்தது, அதேவேளையில் இலண்டனும் பாரிஸும் அந்த சர்ச்சைக்குரிய கடல் பகுதிக்குப் போர்க்கப்பல்களை அனுப்பின.

இப்போதோ, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ரோமில் இவ்வாரயிறுதி ஜி-20 மாநாட்டுக்கு முன்னதாக AUKUS உடன்படிக்கைக்குப் பின்னர் அமெரிக்க-பிரெஞ்சு உறவுகளைச் செப்பனிடும் முயற்சியாக பைடெனுடன் இன்று சந்திக்க இருக்கின்ற வேளையில், இந்த மீன்பிடி பிரச்சினை மொத்த ஐரோப்பிய இராஜாங்க நெருக்கடியின் தன்மையை ஏற்று வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில், பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தில் இந்த மீன்பிடி பிரச்சினை குறித்து பேசிய பிரெஞ்சு பிரதம மந்திரி ஜோன் காஸ்டெக்ஸ், இலண்டனுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து 'உறுதியான ஆதரவு' கோரினார். 'பிரெக்ஸிட் உடன்படிக்கையின் விதிமுறைகளைப் பிரிட்டன் மதிப்பதை உறுதி செய்யுமாறு' ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுத்த அவர், பிரெக்ஸிட் உடன்படிக்கைகள் நிறைவேற்றுவதை வீட்டோ அதிகாரம் கொண்டு தடுக்க அச்சுறுத்தியதுடன், “பிரிட்டன் உடனான நம் இருதரப்பு உறவுகள்… கேள்விக்குரியதாக' இருப்பதாகவும் தெரிவித்தார்.

வியாழன் காலை, ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் அயர்லாந்து ஆகியவற்றுடன் சைப்ரஸ், கிரீஸ், போர்த்துக்கல் மற்றும் சுவீடனும் இணைந்து, பிரெக்ஸிட் உடன்படிக்கைகளை மதிக்கும் விதத்தில் பிரெஞ்சு மீன்பிடி உரிம கோரிக்கைகளுக்குப் பிரிட்டிஷ் விடையிறுக்கக் கோரி ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன. 'கூடிய விரைவில் ஒரு பதிலை வழங்குமாறும், அந்த உடன்படிக்கையின் உத்வேகம் மற்றும் எழுத்துக்களுக்கு இணங்கிய விதத்தில் மேற்கொண்டு தொழில்நுட்ப வேலைகளில் ஈடுபடுமாறும் பிரிட்டனுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்,” என்று அது நிறைவு செய்திருந்தது.

பிரிட்டிஷ் அதிகாரிகள் அவர்கள் பங்கிற்குப் பிரான்ஸை இலக்கு வைத்து போலந்து, செக் குடியரசு, ஸ்லோவாகியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளைக் கொண்ட வைஸ்கிராட் குழு (Visegrad group) என்றழைக்கப்படுவதுடன் ஒரு கூட்டணியைக் கட்டமைக்கும் திட்டங்களை அறிவித்து வருகிறார்கள். “பிரிட்டிஷ்-எதிர்ப்பு பிரான்சுக்கு எதிராக 'அனுதாபமுள்ள' நாடுகளின் கூட்டணியை' கட்டமைக்க இலண்டன் உத்தேசித்திருப்பதாக பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் ட்ரூஸ் க்கு நெருக்கமான ஆதாரநபரை மேற்கோளிட்டு வலதுசாரி இங்கிலாந்து பத்திரிகையான DailyExpress எழுதியது. ட்ரூஸ் '[லித்துவேனியா, எஸ்தோனியா மற்றும் லாட்வியா ஆகிய] பால்டிக் நாடுகள் மற்றும் வைஸ்கிராட் 4 நாடுகளுடன் பேசி வருவதாக' அந்த ஆதாரநபர் குறிப்பிட்டார்.

'அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து [ட்ரூஸ்] சர்வசாதாரணமாக இருப்பதாக' கூறியதோடு, 'ஐரோப்பிய ஒன்றியம் என்பதே அடிப்படையில் பிரான்ஸ் ஆகும்' என்பதை அந்த ஆதாரநபர் உதறித் தள்ளினார். “அனேகமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது மீது ஓர் ஆலோசனைப் பிரிவை நாம் அமைக்க வேண்டும்,” என அறிவுறுத்தி, பிரெக்ஸிட் உதாரணத்தைப் பின்தொடர போலாந்து மற்றும் ஏனைய வைஸ்கிராட் குழு நாடுகளைப் பிரிட்டன் ஊக்குப்படுத்துவதாக அந்த ஆதாரநபர் குறிப்பிட்டார்.

இத்தகைய அறிக்கைகள், ஐரோப்பிய மற்றும் உலக முதலாளித்துவத்தை உலுக்கி வரும் வெடிப்பார்ந்த பதட்டங்கள் குறித்து தொழிலாள வர்க்கத்திற்கு எச்சரிக்கைகளாகும். மீனவர்கள் மற்றும் பிற தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் மீதான பாதுகாப்புவாத தாக்குதல்களை, அது பாரீசிடம் இருந்து வந்தாலும் அல்லது இலண்டனில் இருந்து வந்தாலும், அவற்றை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டியது முக்கியமாகும். ஐரோப்பாவில் இராஜாங்க மற்றும் இராணுவ மோதலின் ஒரு புதிய தீவிரப்பாட்டை தடுப்பதும், கோவிட்-19 பெருந்தொற்று மீது முதலாளித்துவ அரசாங்கங்களின் கொலைபாதக கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதும், ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தில் பிரிட்டன் தொழிலாளர்கள் மற்றும் ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதைச் சார்ந்துள்ளது.

Loading