இலங்கையில் டீசைட் தோட்டத் தொழிலாளர்கள் வேலைச்சுமை அதிகரிப்புக்கும் அடக்குமுறைக்கும் எதிராக மீண்டும் வேலைநிறுத்தம் செய்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மஸ்கெலியா சாமிமலையில் உள்ள கிளனுகி தோட்டத்தின் டீசைட் பிரிவில் சுமார் 300 தொழிலாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தங்கள் மீதான நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிராக மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட டீசைட் தோட்டத் தொழிலாளர்கள் [Photo credit: K. Kishanthan]

வேலைநிறுத்தம், இன்று வரை தொடர்கிறது. தோட்டத்தில் இயங்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) ஆகியவை, தோட்ட நிர்வாகத்துடன் அணிதிரண்டுள்ள அதேவேளை, தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு வெளியே சுயாதீனமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். முந்தைய வேலைநிறுத்தங்களின் போது, இந்த தொழிற்சங்கங்கள் அவற்றை நாசப்படுத்த வேலை செய்தன.

வேலைக்கு தாமதமாக வந்ததாகக் குற்றம்சாட்டி 17 தொழிலாளர்களை வெள்ளிக்கிழமை வேலை கொடுக்க முகாமையாளர் மறுத்ததாலேயே போராட்டம் வெடித்தது. வேலை வேகப்படுத்தலுக்கு எதிராகப் போராடும் தொழிலாளர்களை அச்சுறுத்தவும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை பழிவாங்கவும் தோட்ட நிர்வாகம் இத்தகைய அநீதியான முடிவுகளை எடுப்பதாக டீசைட் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டீசைட் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக கிளனுகி தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இணைந்துகொண்ட போது [WSWS Media]

செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 6 வரை கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு, கிளனுகி தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலைச் சுமை அதிகரிப்புக்கு எதிராகப் வேலைநிறுத்தம் செய்தனர். தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டுமெனில் அதிகரிக்கப்பட்டுள்ள வேலை இலக்குகளை பூர்த்தி செய்ய வேண்டும் என கோரும் கம்பனி, அவற்றை முடிக்க முடியாத தொழிலாளர்களின் ஊதியத்தை வெட்டுகிறது. அதன்படி, கிளனுகி தோட்டத்தில் தினசரி கொழுந்து பறிக்கும் இலக்கு 16 கிலோவிலிருந்து 20 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வாரத்திற்கான வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன் ஆண் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 700 கிலோ புற்களை பிடுங்க வேண்டும். 20 கிலோ கொழுந்து பறிக்காத தொழிலாளர்களுக்கு கிலோவுக்கு சுமார் 40 ரூபாய் என்ற கணக்கில் ஊதியம் வழங்கப்படுகிறது.

தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் இந்த ஆண்டு 1.3 பில்லியன் ரூபா தேயிலை ஏற்றுமதி இலக்கை அடைவதாக உறுதியளித்துள்ளது. தொற்றுநோய், இரசாயன உரங்களின் தட்டுப்பாடு மற்றும் தேயிலைத் தோட்டங்களை முறையாகப் பராமரிக்கத் தவறியதன் காரணமாக விநியோகச் சங்கிலி சரிவு ஆகியவற்றின் மத்தியில், இந்த நெருக்கடியின் சுமையை மேலும் மேலும் தொழிலாளர்கள் மீது ஏற்றியே குறித்த இலக்குகள் எட்டப்படுகின்றன.

கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோயால் தீவிரமடைந்துள்ள முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்கு செயற்படும் கம்பனிகள், தொழிலாளர்களின் எதிர்ப்பை அடக்குவதற்கு சாத்தியமான ஒவ்வொரு சக்தியையும் பயன்படுத்துகின்றன.

தோட்டத்துறை முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் இதே நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரமும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் எதிர்ப்பு வளர்ச்சியடைந்து வருகின்றது. இந்த நிலைமைகளுக்கு எதிராக தோட்டங்களில் தொடர் போராட்டங்கள் தலைதூக்கி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாகவே செப்டம்பர் 21 அன்று டீசைட் தோட்டத்தில் போராட்டம் வெடித்தது. தோட்டத் தொழிற்சங்கங்களான இ.தொ.கா. மற்றும் NUW, ஆகிய தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களுக்காக நிற்க மறுத்ததுடன் தோட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைத்து வேலைநிறுத்தத்தை தோற்கடிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கின.

இத்தகைய சூழ்நிலையில், சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) அரசியல் வழிகாட்டுதலின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட கிளனுகி பிரிவின் தொழிலாளர் நடவடிக்கை குழு, தொழிலாளர்களின் போராட்டத்தை வழிநடத்த முன்வந்தது. அதன்படி டிசைட் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அக்டோபர் 29 முதல் கிளனுகி பிரிவில் சுமார் 200 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இணைந்துள்ளனர்.

உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்ட செய்தியின்படி, வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் அவர்களுக்கு வேலை வழங்க மறுப்பது உள்ளிட்ட துன்புறுத்தல்கள் தொடர்ந்தன. தொழிற்சங்கங்கள் இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை மறைமுகமாக ஆதரித்தன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய கிளனுகி நடவடிக்கைக் குழு, மீண்டும் டிசைட் தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கியமை பற்றி கலந்துரையாடியது. தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகள் தோட்ட முகாமையாளரால் அறிவிக்கப்பட்ட போதிலும், அவை அனைத்தும் அரசாங்க ஆதரவிலான தோட்டக் கம்பனிகளாலும் தூண்டிவிடப்பட்ட தாக்குதலின் ஒரு பகுதியாகும். எனவே முகாமையாளரை அகற்றுவது மட்டுமே சிக்கலை தீர்க்காது. தோட்டக் கம்பனிகளின் தாக்குதலை முறியடிக்க ஏனைய தோட்டத் தொழிலாளர்கள் உட்பட முழு தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டி போராட்டத்தை ஒழுங்கமைப்பது அவசியமாகும்.

பெருந்தோட்டப் போராட்டங்கள் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு அங்கமாக வெளிப்பட்டிருக்கின்றன.

தினசரி இலக்கை 16 கிலோவாக குறை!, தினசரி சம்பளமாக 1,000 ரூபாய் கொடு!, வாரத்தில் 6 நாட்கள் வேலை! போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதற்கும், மீதமுள்ள தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் ஆதரவைப் பெறுவதற்கும், கிளனுகி தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குழுவொன்று டீசைட் தோட்டத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று செயற்குழு முடிவு செய்தது.

Loading