கோவிட்-19 அதிகரித்து வருவதால், தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு எதிராக மக்ரோன் அருவருப்பான கூச்சலைத் தொடங்கினார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாய் மாலை, 2022 ஜனாதிபதித் தேர்தல்கள் மற்றும் கோவிட்-19 நோய்த்தொற்று குறித்து Le Parisien பத்திரிகைக்கு நேரலை-உரையாடல் பேட்டியில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தடுப்பூசி போடாதவர்களுக்கு எதிராக ஒரு அருவருப்பான அவதூறைத் தொடங்கினார்.

'சரி, இப்போது, தடுப்பூசி போடப்படாதவர்கள், நான் அவர்களை துன்புறுத்த விரும்புகிறேன்,' என்று மக்ரோன் 'emmerder' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி கூறினார். பொறுப்பற்றவர்களாக இருப்பதற்காக தடுப்பூசி போடாதவர்களைக் கண்டித்து, அவர் மேலும் கூறினார்: 'பொறுப்பற்ற நபர் இனி குடிமகன் அல்ல.'

செவ்வாய்க்கிழமை 271,686 கோவிட்-19 நோய்த்தொற்றுகளையும் நேற்று 332,252 ஐயும் பிரான்ஸ் பதிவு செய்திருந்தபோதிலும், நோய்த்தொற்றுகளைத் தடுப்பதற்கு தேவையான முக்கிய பூட்டுதல்கள் மற்றும் சமூக விலகல் நடவடிக்கைகளை அவர் நிராகரித்தார். தடுப்பூசி போடாதவர்களுக்கு மதுவகங்கள், திரையரங்குகள், உணவகங்கள் மற்றும் கலையரங்குகளை அணுகுவதைத் தடைசெய்யும் தேசிய சட்டமன்றத்தில் அவர் நிறைவேற்ற முயற்சிக்கும் அனுமதி பத்திரத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், 'எங்கள் வரி எளிதானது: தடுப்பூசி, தடுப்பூசி, தடுப்பூசி மற்றும் ஒரு தடுப்பூசி அனுமதிப் பத்திரம்' என்றும் 'தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை வைப்பதும், கூட்டாக, பரவலைக் கட்டுப்படுத்த நடத்தைகளை ஊக்குவிப்பதும் யோசனையாகும்' என்றும் அவர் கூறினார்.

ஏப்ரல் 13, 2020 திங்கட்கிழமை, மத்திய பிரான்சின் லியோனில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் தொலைக்காட்சி உரையை ஒரு குடும்பம் பார்க்கிறது. (AP Photo/Laurent Cipriani)

வாழ்க்கைச் செலவைப் பொருட்படுத்தாமல், வைரஸை வரம்பில்லாமல் பரவ அனுமதிக்க வேண்டும் என்ற அவரது நோக்கத்தின் பிரகடனமாக இந்த மோசமான அறிக்கை இருந்தது. கடந்த இரண்டு நாட்களில் பிரான்சில் 600,000 பேருக்கும் ஐரோப்பாவில் 2.4 மில்லியனுக்கும் அதிகமானோர் கோவிட்-19 நோய்க்கு சாதகமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரெஞ்சு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் ஏற்கனவே 73 சதவீதம் நிரம்பியுள்ளன. ஆயினும்கூட, தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் நோயால் பீடிக்கப்படவும் பரப்பவும் முடியும் என்பதை விஞ்ஞானிகள் உறுதிசெய்து நீண்ட காலத்திற்குப் பின்னர், சமூகக் கட்டுப்பாடுகளின் அவசர தேவையைக் காட்டிலும், ஐரோப்பிய அரசாங்கங்கள் அனைத்தும் தடுப்பூசி மட்டுமே கொள்கையை ஆதரிக்கின்றன. மரண அலையைத் தடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் தங்கள் கைகளைக் கழுவுகின்றன.

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுவதால், முகக்கவசம் அணிவது மற்றும் மற்றவர்களிடமிருந்து ஒரு மீட்டர் தொலைவில் இருப்பது போன்ற தனிப்பட்ட நடத்தையை நம்பியிருப்பது தொற்றுநோய் பரவலைத் தடுக்காது. மக்ரோன் அரசாங்கம், அத்தியாவசியமற்ற உற்பத்தித் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும், மாணவர்கள் வகுப்புகளுக்குத் திரும்ப வேண்டும் அல்லது நூற்றுக்கணக்கானோர் நெரிசலான நேருக்கு நேர் பரீட்சை தேர்வு அறைகளில் உட்கார வேண்டும் என்று கோருவது, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் எண்ணற்ற அதி-பரவலுக்கான நிலைமைகளை உருவாக்குகிறது.

அவரது பொறுப்பற்ற கொள்கையின் கணிக்கக்கூடிய முடிவுகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப, மக்ரோன் வெகுஜன தொற்றுக்கு மத்தியில், தடுப்பூசி போடாத மிகவும் வெளிப்படையாக பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்ட முயற்சிக்கிறார்.

கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி என்பது, ஒரு அத்தியாவசிய பொது சுகாதார நடவடிக்கையாகும், இது கோவிட்-19 ஆல் இறக்கும் அல்லது கடுமையாக நோய்வாய்ப்படும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது. மேலும் இது, தொழில்முறை மருத்துவ பரிந்துரைகளின்படி உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். எவ்வாறாயினும், பிரான்சில் பல மில்லியன் மக்கள் இன்னும் கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போடப்படவில்லை என்பதற்கு மக்ரோன் அரசாங்கமே பெரும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது என்பது வெளிப்படையானது.

மக்ரோன் தடுப்பூசி போடாதவர்களை சபித்த அதே வேளையில், அவர்களில் மில்லியன் கணக்கான சிறு குழந்தைகள், தடுப்பூசியை சட்டப்பூர்வமாக அணுக முடியாதவர்கள் என்ற உண்மையை அவர் ஒதுக்கி வைத்தார். பிரான்சில் தற்போது 64 குழந்தைகள் கோவிட்-19 உடன் போராடி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். தடுப்பூசி போடப்படாத பிற மக்கள் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள், கிராமப்புற இரயில் சேவைகளில் மக்ரோனின் குறைப்பு காரணமாக, தடுப்பூசி மையத்திற்குச் செல்வது கடினம் அல்லது மிகவும் விலை உயர்ந்தது.

நேற்று, LCI செய்தி சேவை, கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதற்கு கொள்கையளவில் மறுக்கும் பிரெஞ்சு மக்கள் விகிதாசாரத்தில் 2 சதவிகிதமே என்று கருத்துக் கணிப்பாளர்களின் தரவை மேற்கோள் காட்டியது.

மக்ரோனும் அவரது அமைச்சர்களும் தடுப்பூசியின் அவசியத்தை விளக்குவதற்கு பகிரங்கமாக பிரச்சாரம் செய்வதிலிருந்து விலகியதும் கூட ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். ஆயினும், இன்று மக்ரோன், —தனது ஓய்வூதிய வெட்டுக்களை எதிர்த்தவர்களை பழைய பாணியில் 'கோலிஷ் மக்கள் மாற்றத்தை பிடிவாதமாக மறுக்கிறார்கள்' என்று கண்டனம் செய்த அவரது கருத்துக்களை எதிரொலிக்கிறார்— மீண்டும் தனது சொந்த பிற்போக்குத்தனமான கொள்கைகளின் விளைவுகளுக்கு மில்லியன் கணக்கான மக்களை குற்றம் சாட்டுகிறார்.

தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு எதிராக மக்ரோனின் சீற்றத்திற்குப் பின்னர், அவர் ஏப்ரல் 2022 தேர்தல்களில் மறுதேர்தலில் போட்டியிடுகிறாரா இல்லையா என்பதை அறிவிக்க முடியாத நிலைக்குத் திரும்பினார். இந்த விஷயத்தில், அவர் Le Parisien இடம் கூறினார்: 'நான் போட்டியிட விரும்புகிறேன். சுகாதார நிலைமைகள் அனுமதித்தவுடன், எனது உணர்வுகளிலும் அரசியல் சமன்பாட்டின் அடிப்படையிலும் இந்தப் பிரச்சினையை நான் தெளிவுபடுத்தியுள்ளேன். நான் எப்பொழுதும் அதே சுதந்திரத்துடன் நடப்பதைச் சொல்வேன், ஏனென்றால் நான் எதையும் மறுக்க விரும்பவில்லை.”

மக்ரோன் மறைமுகமாக மேலும் கூறினார்: 'நான் இன்று ஒரு நிலைப்பாட்டை எடுத்தால், சுகாதார நெருக்கடியின் உச்சத்தை கையாளும் எனது திறன் என்னவாக இருக்கும்?'

ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கும் சுகாதாரக் கொள்கைகளைத் தொடரும் மக்ரோனின் வாதம் என்னவென்றால், அவர் மீண்டும் தேர்தலை விரும்புவதாக அறிக்கை வடிவில் பிரெஞ்சு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டியவர் என்று அடையாளப்பூர்வமாக ஒப்புக்கொள்வதைக் கூட அவரால் பொறுத்துக்கொள்ள முடியாது. இத்தகைய கருத்து, கோவிட்-19 தொற்றுநோயால் வெளிப்படுத்தப்பட்ட பிரெஞ்சு ஜனநாயகத்தின் ஆழமான சரிவுக்கு அதன் சொந்த வழியில் சாட்சியமளிக்கிறது.

பிரான்சிலும் ஐரோப்பாவிலும் உலகம் முழுவதிலும் பரவும் தொற்றுநோய்களின் அதிர்ச்சிகரமான அலையை நிறுத்துவதற்கான ஒரே வழி, மக்ரோன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு எதிராக ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு தொழிலாளர்களை சுயாதீனமாக ஒழுங்கமைத்து அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதுதான். அத்தகைய போராட்டத்திற்கு, முழு பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்துடன் நனவான முறிவு தேவைப்படுகிறது.

சுகாதார அனுமதி பத்திரத்திற்கான (passe sanitaire) மக்ரோனின் திட்டங்களை தேசிய சட்டமன்றத்தில் விவாதிக்கும் கட்சிகள், வலதுபுறத்தில் இருந்து அவரது ஆபாசமான வெளிப்பாட்டை விமர்சித்தன. கடந்த கோடையில் நவ-பாசிஸ்டுகள் தலைமையில் கட்டாய தடுப்பூசிக்கு எதிரான போராட்டங்களை ஊக்குவிப்பதில் தங்கள் பங்கை மறு உறுதி செய்த அவர்களில் பலர், மக்ரோனை தாக்கியது வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க மறுத்ததற்காக அல்ல, மாறாக தொற்றுநோய்களின் போது உயிர்காக்கும் பொது சுகாதாரக் கொள்கைகளை புறக்கணிக்க 'உரிமை' உள்ளது என்ற பிற்போக்குத்தனமான கூற்றின் அடிப்படையில். தொற்றுநோய் காலத்தில், பிறருக்குக் கொடிய நோயைக் தொற்றிக்கொள்ள செய்யும் உரிமையை நிலைநாட்டுவதற்குச் ஒப்பான இந்தக் கூற்று ஒரு அரசியல் பொய்யாகும்.

'தடுப்பூசி அனுமதி என்பது, தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான கூட்டுத் தண்டனை என்பது தெளிவாகிறது' என்று அடிபணியா பிரான்ஸ் கட்சியின் (LFI) தலைவரும், மக்கள் ஒன்றிய (Union populaire) கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான ஜோன் லூக் மெலோன்சோன் கூறினார்.

'தேசத்தின் ஒற்றுமைக்கு உத்தரவாதம் அளிப்பவர் அதை பிளவுபடுத்தவும், தடுப்பூசி போடாதவர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தவும் பிடிவாதமாக செயற்படுகிறார்' என்று நவ-பாசிச ஜனாதிபதி வேட்பாளர் மரீன் லு பென் அறிவித்தார்.

வலதுசாரி குடியரசுக் கட்சியினரைப் பொறுத்தவரை (LR), அவர்கள் பொதுமக்களை அந்நியப்படுத்துவதற்காக மட்டுமே மக்ரோனை விமர்சித்தனர். 'யாரையும் அவமதிக்காமல் அல்லது தீவிரமயமாக்கலை ஊக்குவிக்காமல் தடுப்பூசியை ஊக்குவிக்க நாங்கள் முடியும்,' என LR செனட்டர் புருனோ றுத்தையோ கூறினார், 'தேர்தல் நோக்கங்களுக்காக பிரெஞ்சு மக்களில் ஒரு பகுதியை அவமானப்படுத்தியதற்காக' மக்ரோனை விமர்சித்தார்.

மக்ரோனின் கொள்கைகள், மில்லியன் கணக்கான பிரெஞ்சு மக்கள் உட்பட பத்து மில்லியன் ஐரோப்பியர்கள், மரணம் அல்லது நீண்ட கால பின்விளைவுகளை கொண்ட ஆபத்தில் ஆழ்த்துவதை எளிதாக்குகிறது என்ற அத்தியாவசிய உண்மையை எந்த கட்சியும் வலியுறுத்தவில்லை. ஏனெனில், ஐரோப்பா முழுவதிலும் உள்ள இந்தக் கட்சிகளும் அவற்றின் கூட்டாளிகளும் — மெலன்சோனுடன் இணைப்பிலுள்ள ஸ்பெயினின் ஆளும் பொடேமோஸ் கட்சியில் இருந்து, பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனுடன் இணைப்பிலுள்ள LR இன் பழமைவாதிகள் வரை— அதே பொறுப்பற்ற, தடுப்பூசி மட்டும் கொள்கையை முன்வைக்கின்றனர், இது வைரஸ் பரவுவதைத் தடுக்கும் எந்த முயற்சியையும் முடிவுக்குக் கொண்டுவருகிறது.

முன்னாள் ரோத்ஸ்சைல்ட் முதலீட்டு வங்கியாளரும், 'செல்வந்தர்களின் ஜனாதிபதியுமான' மக்ரோனைப் போலவே, இந்தச் சக்திகள் அனைத்தும் நிதியப் பிரபுத்துவத்தின் கருவிகள் ஆகும். இவை தொழிலாளர்களை வேலையிலும் மாணவர்களையும் பள்ளியிலும் வைத்திருக்க தம்மாலான அனைத்தையும் செய்கின்றன.

முழு ஐரோப்பிய ஆளும் உயரடுக்கும் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான அனைத்துப் பொறுப்பையும் கைவிடுவதை எதிர்கொண்டுள்ள நிலையில், முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக அணிதிரட்டவும் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் பணியிடங்களிலும் பள்ளிகளிலும் சாமானியர்களின் குழுக்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். இது விஞ்ஞானபூர்வமான பொது சுகாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கும், நிதியப் பிரபுத்துவத்தின் கைகளில் இருந்து அரச அதிகாரத்தை கையிலெடுப்பதற்கும் ஒரு பொது வேலைநிறுத்தத்தைத் தயாரித்து ஒழுங்கமைப்பதை சாத்தியமாக்கும்.

Loading