இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய இராஜபக்ஷ, வெள்ளிக்கிழமை இரவு சுகாதாரம் மற்றும் மின்சார விநியோகங்களை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து, இந்த துறைகளில் தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய தடை விதித்து ஒரு அசாதாரண வர்த்தமாணியை வெளியிட்டார்.
அத்தியாவசிய பொது சேவைகள் சட்டம் (EPSA) பிரகடனத்தின் உடனடி நோக்கம், தாதிமார், துணை மருத்துவ சேவை ஊழியர்கள், பொது சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருந்தாளுனர்கள் உட்பட 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஒடுக்குவதாகும். இந்த தேசிய வேலை நிறுத்தமானது கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இதற்கு 18 தொழிற்சங்கங்களின் கூட்டணியான சுகாதார தொழில் வல்லுனர்களின் சம்மேளனம் (சு.தொ.வ.ச.) அழைப்பு விடுத்துள்ளது.
இது துறையை தனியார்மயமாக்குவதற்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளை எதிர்க்கும் இலங்கை மின்சார சபையின் 26,000 பலமான தொழில் படைக்கு எதிராகவும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பங்குகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்திற்கு விற்க கொழும்பு முடிவு செய்துள்ளது.
சுகாதார ஊழியர்களின் தேசிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பான நீதிமன்ற தடை உத்தரவை தாதிகள் மீறிய நிலையிலேயே, ஜனாதிபதியின் பிரகடனம் வெளி வந்துள்ளது. வியாழன் அன்று, கொழும்பு மாவட்ட நீதிமன்றம், அரசாங்க தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் (அ.தா.உ.ச.) தலைவர் சமன் ரத்னப்பிரியவிற்கு, வேலை நிறுத்தத்தில் தொழிற்சங்கத்தின் பங்கேற்பை உடனடியாக 'இடைநிறுத்துமாறு' உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும், ஆயிரக்கணக்கான செவிலியர்கள் உத்தரவை மீறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தங்கள் சக ஊழியர்களுடன் போராட்ட நடவடிக்கையைத் தொடர்ந்தனர்.
இராஜபக்ஷவின் பிரகடனம், சுகாதாரம் மற்றும் மின்சாரம் 'சமூகத்தின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது' என்றும் அதற்கு 'தடை அல்லது குறுக்கீடு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது' என்று அறிவித்தது. அவர் குறிப்பாக தாதிமாரை குறிவைத்து, “மருத்துவமனைகள், சிகிச்சை நிலையங்கள், மருந்தகங்கள், மற்றும் அது போன்ற நிறுவனங்களில் உள்ள நோயாளிகளின் பராமரிப்பு, மற்றும் அனுமதிப்பு, பராமரிப்பு உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக தேவையான அல்லது செய்ய வேண்டியுள்ள எந்தவொரு எத்தகை வேலை விபரங்களினதும் அனைத்து சேவைகள், வேலை அல்லது உழைப்பு பேணப்பட வேண்டும்,' என்று அறிவித்துள்ளார். இந்த தெளிவற்ற வார்த்தைகள், நிச்சயமாக, வேலைநிறுத்தம் செய்யும் மற்ற சுகாதார ஊழியர்களுக்கு எதிராக அதைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.
அத்தியாவசிய சேவைகள் சட்டங்களின் கீழ், குறித்த நிறுவனங்களில் வேலைக்குச் செல்லாத எந்தவொரு ஊழியரும், 'நீதிபதியின் முன் ஒரு சுருக்கமான விசாரணைக்குப் பிறகு தண்டனையை” எதிர்கொள்கிறார். அவர் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை 'கடுமையான சிறைத்தண்டனை' மற்றும் 2,000 முதல் 5,000 ரூபாய் வரை (11 டொலர்- 25 டொலர்) அபராதத்தை அல்லது இரண்டையும் எதிர்கொள்வார்.. தண்டனை பெற்றவர்களின் 'அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள்' அரசால் கைப்பற்றப்படலாம் மற்றும் அவரது பெயர் 'தொழில் அல்லது தொழிலுக்காக பராமரிக்கப்படும் எந்தப் பதிவேட்டில் இருந்தும்' நீக்கப்படும்.
எந்தவொரு நபரும் 'உடல் ரீதியான செயல் அல்லது எந்தவொரு பேச்சு அல்லது எழுத்து மூலம்' வேலைக்குச் செல்லாமல் இருக்க 'வேறு எந்த நபரையும் தூண்டுவது அல்லது ஊக்கப்படுத்துவது' ஒரு குற்றமாகும். உண்மையில், இலக்கு வைக்கப்பட்ட தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பவர்களும் கூட இதேபோல் தண்டிக்கப்பட முடியும்.
கடந்த மே மாதம், இராஜபக்ஷ அரசாங்கமானது அபிவிருத்தி அதிகாரிகளின் வேலை நிறுத்தத்தை முறியடிக்க அத்தியாவசிய சேவைகளைப் பயன்படுத்தியது. ஜூன் மாதம், சுகாதாரம், துறைமுகங்கள், மின்சாரம், பெட்ரோலியம், தபால், வங்கிகள் மற்றும் மேலும் சில அரச நிர்வாக அலுவலகங்கள் உள்ளிட்ட பிரதான அரச நிறுவனங்களை உள்ளடக்கும் வகையில் இந்தச் சட்டம் நீட்டிக்கப்பட்டது.
இந்தச் சட்டம் பல மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டாலும், தொழிலாளர்களின் எதிர்த் தாக்குதலுக்கு அஞ்சி அரசாங்கம் உடனடியாக அதை அமுல்படுத்தவில்லை. இந்தப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்த தொழிற்சங்கங்களின் உதவியுடன், அரசாங்கத்தால் இந்தப் பிரகடனத்தை ஓரத்தில் வைத்திருக்க கூடியதாக இருந்தது. சுகாதார சேவை சங்கங்கள் உட்பட தொழிற்சங்கங்கள் எதுவும், இந்த அடக்குமுறைச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரவில்லை.
இராஜபக்ஷவின் சமீபத்திய பிரகடனம், மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு அன்றி, கோவிட்-19 தொற்றுநோயால் கடுமையாக மோசமடைந்துள்ள நாட்டின் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஒழுக்கமான ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளுக்கான தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை நசுக்குவதை குறிக்கோளாகக் கொண்டதாகும்.
சர்வதேசரீதியில் உள்ள ஆளும் வர்க்கங்களைப் போலவே, இராஜபக்ஷ அரசாங்கமும் கோவிட்-19 வைரசுக்கு பிரதிபலிப்பதில் மனித உயிர்களை விட பெருவணிக இலாபங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. ஒமிக்ரோன் இப்போது இலங்கையில் பரவி வரும் நிலையிலும், அரசாங்கம் மிகவும் வேகமாகத் தொற்றக்கூடிய இந்த மாறுபாடு பரவுவதைத் தடுக்க தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளை குறைத்துவிட்டது அல்லது நீக்குகிறது. பரிசோதனைகள் மற்றும் தொற்றுத் தடமறிதல் குறைந்தபட்ச நடவடிக்கையாக ஆக்கப்பட்டுள்ளதுடன் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டவர்கள் 'வீட்டு தனிமைப்படுத்தலுக்கு' அனுப்பப்படுகிறார்கள்.
இந்த தொற்றுநோய் இலங்கை முதலாளித்துவத்திற்கு அவநம்பிக்கையான பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது. நாடு வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த தவறும் விளிம்பில் உள்ளது மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பரவலான தட்டுப்பாட்டின் காரணமாக பலர் பட்டினியை எதிர்கொண்டுள்ளதால் ஆழ்ந்த சமூக அமைதியின்மையை எதிர்கொள்கிறது. இந்தியாவில் இருந்து உணவு மற்றும் மருந்துகளை உடனடியாக இறக்குமதி செய்வதற்கான 1 பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிதி அமைச்சர் பசில் இராஜபக்ஷ அடுத்த பதினைந்து நாட்களில் இந்தியாவுக்கு பயணிக்க இருப்பது இந்த நெருக்கடியின் ஒரு அளவுகோளாகும்.
இராஜபக்ஷ அரசாங்கம் இந்த பொருளாதார நெருக்கடியின் சுமையை மக்கள் மீது சுமத்துவதில் உறுதியாக உள்ளது. நேற்று ஒரு விழாவில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல, சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகளை வழங்க முடியாது என்று கூறி, தொழிற்சங்கங்களுடனான எந்த பேச்சுவார்த்தையையும் நிராகரித்தார்.
இராஜபக்ஷ ஆட்சியானது சுகாதார ஊழியர்களின் தடை மீறல் மற்றும் அவர்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் தடுமாறிப்போயுள்ளது. வியாழன் அன்று கல்விசாரா ஊழியர்கள் ஊதியங்கள் மற்றும் நிலைமைகள் தொடர்பாக வெளிநடப்பு செய்தனர். அடுத்த நாள், இலட்சக்கணக்கான தனியார் துறை ஊழியர்கள், தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி (ஓய்வூதியம்) மீது பெறுமதி சேர்ப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக தீவின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செவிலியர்களும் ஏனைய சுகாதார ஊழியர்களும் போராடுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள நிலையில், நீதிமன்றத் தடை உத்தரவுக்கும் இராஜபக்ஷவின் அத்தியாவசிய சேவை திணிப்புக்கும் பிரதிபலித்த அரசாங்க தாதி உத்தியோகத்தர்கள் சம்மேளன தலைமைத்துவம், சனிக்கிழமையன்று தொழிற்சங்கம் உடனடியாக வேலைநிறுத்தத்தில் இருந்து விலகிக்கொள்ளும் என்று அறிவித்தது.
அ.தா.உ.ச. தலைவர் சமன் ரத்னப்ரிய தனது தொழிற்சங்கம் 'நீதித்துறையை மதிப்பதாகவும்' நீதிமன்றத் தடை வாபஸ் பெறப்பட்டவுடன் தொழிற்சங்கம் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடும் என்றும் அறிவித்தார். நேற்று, தனது தொழிற்சங்கம் 'சர்வதேச நீதிமன்றங்களில்' அத்தியாவசிய சேவை சட்டத்துக்கு சவால் விடுக்கும் என்றார்.
சு.தொ.வ.ச. தலைவர் ரவி குமுதேஷ், மற்றொரு செய்தியாளர் கூட்டத்தில், ஏனைய சுகாதார தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் தொடர்ந்து ஈடுபடும் என்று கூறிய போதிலும், அரசாங்கம் சுகாதார சங்கங்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முடியும் என்று வலியுறுத்தினார்.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, இந்தப் பிரச்சினைகளை இலங்கைக்குள் தீர்க்க முடியாவிட்டால், தொழிற்சங்கங்கள் 'சர்வதேசத்திற்கு' அதாவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கு (ILO) செல்லும் என்று அறிவித்தார்.
கடந்த ஆண்டு சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து, சு.தொ.வ.ச. மற்றும் அதன் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் கோரிக்கைகளை வழங்குமாறு கொழும்புக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்ற அரசியல் கற்பனையை பரப்பி வந்தன. இந்த கூற்றுக்கள் அடிப்படையில் பிழையானவை மற்றும் அரசாங்கத்தின் அதிகரித்து வரும் தாக்குதல்களின் எதிரில் தொழிலாளர்களை நிராயுதபாணியாக்கி அரசியல் ரீதியாக பொறிக்குள் சிக்க வைக்க உருவாக்கப்பட்டவை ஆகும்..
'சர்வதேச' அமைப்புகளிடம் -அதாவது மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐ.எல்.ஓ- செல்வதன் மூலம் வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமையை பாதுகாப்போம் என்ற தொழிற்சங்கங்களின் வலியுறுத்தல் மிகவும் மாயையை தூண்டுவதாகும். இந்த சர்வதேச நிறுவனங்கள் நிதிய தன்னலக்குழுவின் நலன்களுக்கு சேவை செய்கின்றதுடன் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு முற்றிலும் விரோதமானவை ஆகும். இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்புவதன் மூலம் மட்டுமே சுகாதார மற்றும் மின்சார சபை ஊழியர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும்.
தொழிற்சங்கங்கள் இந்த முன்னோக்கை கடுமையாக எதிர்ப்பதுடன் சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை நிறுத்துவதற்காக திரைக்குப் பின்னால் தீவிரமாக வேலை செய்கின்றன. எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டில் உள்ள அகில இலங்கை சுகாதார ஊழியர் சங்கம் மற்றும் அரசாங்க சார்பு பொதுச் சேவை தாதியர் சங்கமும் வேலைநிறுத்த நடவடிக்கையை எதிர்த்து தொழிலைத் தொடர்ந்தன. ஜனாதிபதி இராஜபக்ஷ சுகாதார ஊழியர்களுக்கு எதிராக அத்தியாவசிய சேவைகள் சட்டங்களை பயன்படுத்தியதை ஒரு இலங்கை தொழிற்சங்கமும் கண்டிக்கவில்லை.
இராஜபக்ஷ அரசாங்கத்துடனான வர்க்க ஐக்கியத்தில் இருக்கும், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பாராளுமன்ற எதிர்க்கட்சிகள், அரசாங்கத்தின் நடவடிக்கை பற்றி எதுவும் கூறவில்லை. அரசாங்கத்தில் இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி, இந்தக் கட்சிகள் தொழிலாளர்களுக்கு எதிராக அத்தியாவசிய சேவைகள் சட்டத்தை பயன்படுத்துகின்றன அல்லது அவற்றை அமுல்படுத்த ஆதரவளித்துள்ளன.
இலங்கையில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி, கடுமையான அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டங்களை உடனடியாக விலக்கிக்கொள்ளுமாறு கோருவதுடன் அனைத்து சுகாதார ஊழியர்களையும் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத தாக்குதல்களை தோற்கடிப்பதற்கும் தொழிலாள வர்க்கம் உடனடியாக அதன் தொழில் மற்றும் அரசியல் பலத்தை அணிதிரட்ட வேண்டும் என அழைப்பு விடுக்கின்றது.
இராஜபக்ஷ அரசாங்கத்தின் சமீபத்திய தாக்குதலும் அதற்கு தொழிற்சங்கங்களின் கோழைத்தனமான சரணாகதியும், தொழிலாளர்கள் தங்கள் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க சுயாதீனமாக ஒழுங்கமைய வேண்டியதன் அவசரத்தையும் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது. இதற்கு, ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில், சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் கூட்டணியாக, ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தினதும் ஐக்கியப்பட்ட போராட்டத்தை முன்னெடுக்க, முழு தொழிற்சங்க எந்திரத்தில் இருந்தும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதை அவசியமாக்கியுள்ளது.