மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ரஷ்யாவை குறிவைத்து கிழக்கு ஐரோப்பா மற்றும் உக்ரேனில் இராணுவ விரிவாக்கத்திற்கான பிரிட்டனின் திட்டங்களை விவரிக்கும் அதே வேளையில் ஜோன்சன் அரசாங்கம் அதன் போர் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகிறது.
மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் தனது உரையிலும், BBCக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த நேர்காணலிலும், பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் ரஷ்யாவுடனான போரை தவிர்க்க முடியாததாக அறிவித்தார். வேறு எந்த நேட்டோ நாடுகளின் தலைவரையும் விட அவர் முன்னேறிச் சென்று, BBC யிடம், ரஷ்யா '1945க்குப் பின்னர் அதன் அளவில் ஐரோப்பாவில் மிகப் பெரிய போராக இருக்கக்கூடிய ஏதோவொன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.… இந்த திட்டம் ஏற்கனவே ஏதோ ஒருவிதத்தில் தொடங்கிவிட்டதற்கான எல்லா அறிகுறிகளும் உள்ளன' என்றார்.
வெள்ளியன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனின் அறிக்கையை எதிரொலிக்கும் வகையில், புட்டின் உக்ரேனை ஆக்கிரமிப்பதற்கு 'முடிவெடுத்துள்ளார்'. மேலும் எந்த ஆதாரமும் வழங்காமல், உக்ரேன் மீது உடனடி ரஷ்ய தாக்குதல் பெலாருஸில் இருந்து தொடங்கப்படும் என்று உளவுத்துறை நிறுவனங்களிலிருந்து தகவல் வந்துள்ளதாக ஜோன்சன் கூறினார். 'உக்ரேனியர்களுக்கு மட்டுமல்ல, ரஷ்யர்களுக்கும் ஏற்படக்கூடிய மனித உயிர்களின் மொத்த இழப்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.
மூனிச்சில் ஜோன்சன் 'கலந்துரையாடல் தோல்வியுற்றால், உக்ரேனில் உள்ள அப்பாவி மற்றும் அமைதியான மக்களுக்கு எதிராக ரஷ்யா வன்முறையைப் பயன்படுத்த விரும்பினால், மற்றும் அரசாங்களுக்கு இடையிலான நாகரீக நடத்தை விதிமுறைகளை புறக்கணித்தால், மற்றும் ஐக்கிய நாடுகளின் சாசனத்தை புறக்கணித்தால் இந்த மாநாட்டில் உள்ள நாங்கள், ரஷ்யா இறுதியில் தோல்வியடைவதுதான் எமது கூட்டு நலன்கள் என்பதில் ஐயுறவு கொண்டிருக்கவில்லை, மற்றும் தோல்வியடையும் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.
நேட்டோவின் ஆத்திரமூட்டல்களின் ஒவ்வொரு கட்டத்திலும், எந்தப் போரிலும் இறக்க நேரிடும் ஏராளமான ரஷ்யர்களை பற்றி ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார். மூனிச்சில் அவர் 'ஒரு மின்னல்வேக போரைத் தொடர்ந்து பழிவாங்கும் மற்றும் வன்மம் மற்றும் கிளர்ச்சியின் நீண்ட மற்றும் பயங்கரமான காலகட்டம் இருக்கும் என நான் அஞ்சுகிறேன். மேலும் ரஷ்ய பெற்றோர்கள் இளம் ரஷ்ய வீரர்களின் இழப்பிற்காக வருந்துவார்கள்...' என அறிவித்தார்.
அவர் “இந்த நடவடிக்கைகளின் மூலம் நேட்டோவை பின்னுக்குத் தள்ளலாம் அல்லது நேட்டோவை அச்சுறுத்தலாம் என ஜனாதிபதி புட்டின் நம்பினால், நிகழ்வு அதற்கு நேர்மாறாக இருப்பதை அவர் கண்டுகொள்வார். ஏற்கனவே இங்கிலாந்தும் நமது நட்பு நாடுகளும் நேட்டோவின் கிழக்குப் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றன” என அச்சுறுத்தினார்.
ஜோன்சன் பிரிட்டனை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்குதல் நாயாக நிலைநிறுத்தியுள்ளார். Sunday Times பின்வருமாறுகுறிப்பிட்டது, “இப்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள இங்கிலாந்துக்கு, மாஸ்கோ மீது கடுமையான நிலைப்பாட்டை கூடுதலாக மாற்றிமைத்துக் கொள்ளும் தன்மை இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 'மெதுவாக நகரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் பற்றி நாங்கள் கவலைப்பட வேண்டிய கட்டாயம் இல்லை,' என்று ஒருவர் கூறினார்.
மாஸ்கோவில் இருந்து சில நூறு மைல்கள் தொலைவில் உள்ள இங்கிலாந்தின் இராணுவ நிலைநிறுத்தலை விவரித்த ஜோன்சன், “எங்கள் புதிய விமானம் தாங்கி கப்பலான HMS Prince of Wales மற்றும் 3 கொமாண்டோ படையணியை அனுப்புவதன் மூலம் COLD RESPONSE பயிற்சி நடவடிக்கைகளுக்கு பிரிட்டிஷ் பங்களிப்பை அதிகரிக்கிறோம்.
“எஸ்தோனியாவில் எங்கள் இருப்பை கிட்டத்தட்ட 2,000 துருப்புக்களாக இருமடங்காக்குகிறோம்; 45 கொமாண்டோக்களில் இருந்து 350 கடற்படையினரை அனுப்புவதன் மூலம் போலந்தில் எங்கள் இருப்பை 600 துருப்புகளாக அதிகரித்துள்ளோம்; சைப்ரஸை தளமாகக் கொண்ட மற்றொரு ஆறு Typhoonகளுடன் தென்கிழக்கு ஐரோப்பாவின் வானத்தில் எங்கள் இருப்பை அதிகரித்துள்ளோம்; கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் கருங்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்புகிறோம்; மேலும் 1,000 துருப்புக்களை பெருகிய முறையில் சாத்தியம் என்று நாம் அனைவரும் அஞ்சும் மனிதாபிமான அவசரகாலநிலைக்கு பதிலளிப்பதற்காக தயார்நிலையில் வைத்துள்ளேன்” என்றார்.
உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய நவ-நாஜி படைப்பிரிவுகளின் தலைமையிலான 2014 ஆட்சிக் கவிழ்ப்பிலிருந்து உக்ரேனுக்கான பிரிட்டனின் ஆதரவு அதிகரித்துள்ளதாக ஜோன்சன் பெருமையாகக் கூறினார்: “நாங்கள் உக்ரேனுக்கு உதவி செய்து வருகிறோம். அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கும் விதத்தில் சமீப மாதங்களில் 22,000 துருப்புக்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். 2,000 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் வடிவில் தற்காப்பு ஆயுதங்களை அனுப்பும் நாடுகளில் ஒன்றாக எமது நாடு உள்ளது”.
நேட்டோவை ரஷ்யாவின் வீட்டு வாசலில் விரிவுபடுத்துவதை பிரதமர் உற்சாகப்படுத்தினார். 'இரும்புத் திரை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து' 'அற்புதமான ஆண்டுகளில்', 'நேட்டோ 1999 க்குப் பின்னர் 14 அரசுகளுக்கு அதன் கதவுகளைத் திறந்தது. மேலும் எங்கள் திறந்த கதவு மூடப்படுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது' என்றார்.
வெளியுறவு செயலர் லிஸ் ட்ரஸ், ஞாயிற்றுக்கிழமை Mail on Sunday க்கு அளித்த நேர்காணலில், உக்ரேனை மட்டுமல்ல ஐரோப்பாவின் பாதிப் பகுதியையும் இராணுவரீதியில் கைப்பற்ற புட்டின் தயாராகி வருகிறார் என்று ஜோன்சனை விட அதிகமாக கூறினார். 'அவர் மிகவும் தெளிவாக இருக்கிறார் - அவரது இலட்சியம் உக்ரேனைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டும் வழிவகுக்கவில்லை. அவர் கடிகாரத்தை 1990 களின் நடுப்பகுதிக்கு அல்லது அதற்கு முன்பு திருப்ப விரும்புகிறார். பால்டிக் அரசுகளும் மேற்கு பால்கனும் ஆபத்தில் உள்ளன.
'பெரிய ரஷ்யாவை உருவாக்க விரும்புவதாகவும், கிழக்கு ஐரோப்பாவின் பெரும் நிலப்பரப்பில் ரஷ்யா கட்டுப்படுத்திய முன்பு இருந்த நிலைமைக்குத் திரும்ப விரும்புவதாகவும் இதையெல்லாவற்றையும் புட்டின் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.'
மில்லியன் கணக்கானவர்களின் மரணத்தை விளைவிக்கும் '1945க்குப் பின்னர் ஐரோப்பாவில் நடக்கும் மிகப் பெரிய போரின்' சுழலுக்குள் பிரிட்டன் இழுத்துச் செல்லப்படுவதன் திகைப்பூட்டும் தாக்கங்கள் பற்றி திட்டமிட்ட முறையில் மக்களிடம் இருந்து மறைக்கப்படுகிறது. கடந்த 10 நாட்களாக நாடாளுமன்றம் இடைவேளையில் உள்ளது. ஜோன்சன் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று வலியுறுத்தும் ஒரு போரைப் பற்றி விவாதிக்க நாடாளுமன்றம் திரும்ப கூட்டப்பட வேண்டும் என்ற ஆலோசனை கூட எந்த கட்டத்திலும் இல்லை.
மாஸ்கோவிற்கு எதிரான நேட்டோவின் ஆத்திரமூட்டல்களை அனைத்துக் கட்சிகளின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரிக்கும் சூழ்நிலையில் கூட, எந்த விவாதத்தையும் அனுமதிக்க முடியாது. அரசாங்கம், பெயரளவிலான 'எதிர்க்கட்சிகள்' மற்றும் ஊடகங்களுக்கு பின்வருவன தெரியும்:
- 'ரஷ்ய படையெடுப்பு' கட்டுக்கதையானது, பெரும் ஏகாதிபத்திய சக்திகளின் புவிசார்-அரசியல் நோக்கங்களை முன்னெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொய்களின் தொகுப்பாகும். இது இறுதியில் ரஷ்யாவை எண்ணற்ற நாடுகளாகத் துண்டாடுவது மற்றும் அவற்றை அடிமைப்படுத்துவதில் உச்சக்கட்டத்தை அடையும்.
- பிரித்தானிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் இத்தகைய இழிவான கொள்ளையடிக்கும் போருக்கு ஆதரவு இல்லை.
Sunday Times இதைப்பற்றிக்குறிப்பிட வேண்டியிருந்தது: “நேட்டோவில் சேர உக்ரேனின் இலட்சியத்தை எதிர்க்கையில் அதற்கு ரஷ்யாவுக்கு ‘ஒரு காரணம் இருக்கிறது’ என கருதும் உதவியாளர்கள் ஜோன்சனைச் சுற்றி உள்ளனர். ஜோன்சனுக்கு நெருக்கமான ஒரு ஆதாரம் கூறியது: 'நேட்டோவில் உள்ள உக்ரேன், அமெரிக்கா அதனுடைய எல்லைகளில் வைத்திருப்பது போன்ற ஒன்றல்ல. இது திறந்த விவாதத்திற்கு உட்பட்ட ஒன்று''.
வெறுக்கப்பட்ட ஜோன்சனின் அரசாங்கத்தின் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை இப்போது 180,000 க்கும் மேற்பட்ட மக்களின் மரணத்திற்கு பொறுப்பாகும். கடந்த மூன்று மாதங்களில் 'partygate' ஊழல் அவரது பிரதமர் பதவியை உடைத்துவிட்டது. மாஸ்கோவுடனான அவரது எரிச்சலூட்டும் பதட்டங்களில் ஒரு முக்கிய கூறுபாடு, இங்கிலாந்தில் உள்ள அதிர்ச்சியூட்டும் சமூக மற்றும் அரசியல் பதட்டங்களை, வெளிப்புற எதிரியை அடையாளம் காண்பதன் மூலம் வெளிப்புறமாக திசைதிருப்புவதாகும். Sunday Times, 'உக்ரேன் இதைவிட போரிஸ் ஜோன்சனுக்கு சிறந்த நேரத்தில் வந்திருக்க முடியாது' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில், 'ஜோன்சனுக்கான கூடுதல் நன்மைகளாக' உக்ரேன் 'கொண்டாட்டங்களின் ஊழலை முதல் பக்கங்களில் இருந்து அகற்றியது' என சுட்டிக்காட்டியது.
தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிப்ரவரி 16 அன்று போரை நிறுத்து கூட்டினால் (Stop the War Coalition) வெளியிடப்பட்ட ஒரு மனுவிற்கு அளித்த பதிலில் பிரிட்டனின் ஆளும் உயரடுக்கினரிடையே பெரும் போருக்கு ஆதரவான பிரிவினரின் கருத்து அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. அந்த மனு, 'உக்ரேனுடனான மோதலை, அதை உயர்த்துவதை விட பிரிட்டன் பதட்டத்தைத் தணிக்கவும் நெருக்கடிக்குத் தீர்வு காணவும் இராஜதந்திர முன்மொழிவுகளை முன்னெடுக்க வேண்டும்..” எனக் குறிப்பிட்டது. இந்த பயந்த மனப்பாங்கான முறையீடு, வெறும் 12 தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 3 House of Lords உறுப்பின்ரகளின் ஆதரவைப் பெற்றது. கையொப்பமிட்ட உறுப்பினர்கள் அனைவரும் மறைந்துகொண்டு போகும் சோசலிச பிரச்சாரக் குழுவின் இருந்தவர்களாவர். இவர்களில் ஒரு சுயேட்சையாக அமர்ந்துள்ள மற்றும் யூத எதிர்ப்பு சூனியவேட்டையை பயன்படுத்தி தற்போதைய கட்சித் தலைவரான சேர் கெய்ர் ஸ்டார்மரிடம் ஒரு வருடத்திற்கு முன்பு பதவியிலிருந்து பின்வாங்கிய தொழிற் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரெமி கோர்பின் உம் அடங்குவார்.
ஆளும் வட்டாரங்களுக்குள்ளேயே போருக்கான உக்கிரமான ஆதரவு உணர்வு உள்ளது. தொழிற் கட்சியின் மொத்த உறுப்பினர்களான 198 பேரில் வெறும் 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ள சோசலிச பிரச்சாரக் குழுவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், போரை நிறுத்து கூட்டினால் முன்வைக்கப்பட்ட தைரியமில்லாத பிரகடனத்தில் கூட கையெழுத்திட மறுத்துவிட்டனர்.
நூறு மில்லியன் கணக்கான உயிர்களை அச்சுறுத்தும், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஒரு உண்மையான போர்-எதிர்ப்பு இயக்கத்தை அத்தகைய சக்திகளால் ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது. இது உறுதியான அரசியல் அஸ்திவாரங்களில் கட்டமைக்கப்பட வேண்டும் மற்றும் போர்வெறியர்களை தோற்கடித்து உலக சமாதானத்தை உறுதிசெய்யும் திறன் கொண்ட சமுதாயத்தில் பெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றியிருக்க வேண்டும்.
மேலும் படிக்க
- பைடென் நிர்வாகமும் குடியரசுக் கட்சியினரும் போர் நெருக்கடியைப் பயன்படுத்தி போலி "தேசிய ஒற்றுமை" க்கு உந்துகின்றனர்
- டொன்பாஸில் பாரிய மக்கள் வெளியேற்றங்கள் தொடங்கும் போது உக்ரேனை ஆக்கிரமிக்க "புட்டின் முடிவெடுத்துள்ளார்" என்று பைடென் கூறுகிறார்
- ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான இராணுவ செலவினத்தை ஜேர்மனி அதிகரிக்கிறது