உக்ரேன் போரும் ரஷ்ய பொருளாதாரத் தடைகளும் மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் உணவு விநியோகங்களை அச்சுறுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ கூட்டணி தூண்டிவிட்ட போர் உலகளவில் உணவு விநியோகத்தை அச்சுறுத்துகிறது. குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய பல தசாப்த கால போர்களால், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில், ஏற்கனவே மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவு கிடைக்காத நிலை உள்ளது.

ரஷ்யாவும் உக்ரேனும் உலகின் மொத்த தானிய ஏற்றுமதியில் அண்ணளவாக மூன்றில் ஒரு பங்கையும், அவற்றின் சோள வணிகத்தில் ஐந்தில் ஒரு பங்கையும், மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தையும் கொண்டுள்ளன.

ரஷ்யாவின் வங்கிகள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான நிறுவனங்கள் மீது வாஷிங்டனும் ஐரோப்பிய நாடுகளும் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால், ரஷ்யா மற்றும் உக்ரேனிலிருந்து ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ளன. இப்போதைய போரின் ஒரு முக்கிய போரக்களமாகவும், ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளின் தானியங்களின் கப்பல் ஏற்றுமதிக்கான பிரதான வழித்தடமாகவும் உள்ள வடக்கு கருங்கடல் துறைமுகங்கள், சண்டையின் காரணமாக மூடப்பட்டு, டஜன் கணக்கான சரக்குக் கப்பல்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வாடகைக்கு கப்பல்கள் கிடைப்பதில்லை. விமானத் தடைகள், சரக்கு விமானங்களை ரஷ்ய வான்பகுதியைச் சுற்றிச் செல்ல திருப்பிவிடப்படுவதானது, பயணச் செலவுகளையும் நேரத்தையும் அதிகரிக்கின்றது.

சைபீரியாவின் டொம்ஸ்கில் உள்ள கோதுமை வயல் (Creative Commons)

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கூற்றுப்படி, தொற்றுநோய் தீவரப்பட்டு புவிசார் அரசியல் பதட்டங்கள் பெருகியதான ஏப்ரல் 2020 மற்றும் டிசம்பர் 2021 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில், கோதுமையின் விலை 80 சதவீதம் அதிகரித்தது, மேலும் 2022 இல் இதுவரை கோதுமை விலை 37 சதவீதமும், மக்காச்சோளத்தின் விலை 21 சதவீதமும் உயர்ந்துள்ளது.

50 ஆண்டுகளில் மிகக் கடுமையான வறட்சியை எதிர்கொண்ட ஈரானும், மற்றும் சிரியா, மொராக்கோ, ஈராக், துருக்கி மற்றும் எகிப்து நாடுகளும் உட்பட, முக்கிய உற்பத்தி நாடுகளில், பயிர் நிலங்கள் எத்தனோல் (ethanol) உற்பத்திக்கு மாறியது, மற்றும் அந்நாடுகளில் ஏற்பட்ட வறட்சி மற்றும் காலநிலை மாற்றத்தால், முதலீட்டாளர் ஊக வணிங்களின் ஒரு பகுதியாக நிகழ்ந்த விலைவாசி உயர்வு பற்றி குறைவாகவே பேசப்பட்டது. கடந்த 2008 ஆம் ஆண்டு உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் உணவுக் கலவரங்கள் தூண்டப்பட்டது, அப்போதிருந்து கடந்த காலப் பயிர்களில் எஞ்சியிருந்த கோதுமையின் விலை மிகக் குறைந்தது. உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு முன்பே, புவிசார் அரசியல் பதட்டங்கள் உலகளாவிய உணவுச் சந்தைகளை உலுக்கிப்போட்டன, மேலும் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ள லெபனான் மற்றும் யேமன் உட்பட, உக்ரேனில் இருந்து இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகளுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தின.

சிரியா மற்றும் யேமன் போன்ற, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் மிக வறிய மற்றும் பெரும் உணவு பஞ்சம் உள்ள நாடுகளுக்கு உணவு வழங்கும் ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் (WFP), உக்ரேனிய கோதுமையையே நம்பியுள்ளது. ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னைய நான்கு ஆண்டுகளில் உலகம் முழுவதும் சாத்தியமான பட்டினியை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை 80 மில்லியனில் இருந்து 276 மில்லியனாக ஏற்கனவே உயர்ந்துள்ளது என்றும், அதற்கான காரணம் மோதல், காலநிலை மாற்றம் மற்றும் தொற்றுநோய் ஆகியவற்றின் ‘துல்லியமான தாக்குதல்’ தான் என்றும் WFP தலைவர் டேவிட் பீஸ்லி BBC World Service க்கு தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய கோதுமை இறக்குமதியாளரான எகிப்து, உக்ரேன் மற்றும் ரஷ்யாவிலிருந்து 80 சதவீத கோதுமையை இறக்குமதி செய்கின்ற நிலையில், அதற்கான குறிப்பிடத்தக்க மாற்றை அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. துருக்கி தனது கோதுமை இறக்குமதியில் 75 சதவீதத்தை இந்த இரு நாடுகளிலிருந்தே பெறுகிறது. மேலும், லெபனான் அதன் மொத்த கோதுமை நுகர்வில் 60 சதவீதத்தை உக்ரேனில் இருந்து இறக்குமதி செய்கிறது, அதேபோல், துனிசியா கிட்டத்தட்ட 50 சதவீதமும், லிபியா 43 சதவீதமும், யேமன் 22 சதவீதமும் இறக்குமதி செய்கின்றன.

ஈரான், சிரியா, ஈராக், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இணைந்து, 2020-21 வேளாண் ஆண்டில் உலக மொத்த உற்பத்தியில் 13 சதவீதம், அதாவது 25.9 மில்லியன் டன்கள் அளவிற்கு தானியங்களை இறக்குமதி செய்ததில் இருந்து, 2021-22 வேளாண் ஆண்டில் 35.5 மில்லியன் மெட்ரிக் டன்கள் அல்லது உலகின் மொத்த உற்பத்தியில் 17 சதவீத அளவிற்கு அவற்றின் மொத்த இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க வேளாண் துறை கணித்துள்ளது.

ரொட்டி விலைகள் எகிப்தில் குறிப்பாக உணர்திறன் கொண்டவை, அங்கு மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 1.50 டாலருக்கும் குறைவான தொகையில் காலம் தள்ளும் நிலையில், அவர்களுக்குத் தேவைப்படும் கலோரிகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மற்றும் 45 சதவீத புரதத்திற்கும் மானிய விலை ரொட்டியையே அவர்கள் நம்பியுள்ளனர். 1980 களில் இருந்து மாறாத விலைகளை உயர்த்தும் முயற்சிகள், 1977 ஆம் ஆண்டு உணவுப் போராட்டங்களுக்கும் மற்றும் 2008 ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டங்களுக்கும் வழிவகுத்தன, மேலும் 2011 இல் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கை தூக்கியெறிய ஒரு முக்கிய காரணியாக இருந்ததை ஆளும் உயரடுக்கு கூர்மையாக உணர்ந்துள்ளது. அதன் பின்னர், 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. கடந்த ஆண்டு, ஜனாதிபதி அப்தெல் ஃபத்தே எல்-சிசி, ரொட்டிகளுக்கான மானிய விலையை உயர்த்தப் போவதாக அறிவித்தார், அது இனிமேல் தான் செயல்படுத்தப்படவுள்ளது, ஆனால் எகிப்தின் ரொட்டி மானியங்களின் செலவு மதிப்பு ஏற்கனவே ஆண்டுக்கு 3.2 பில்லியன் டாலராக உள்ள நிலையில், நிதி அமைச்சகம் 2021-22 ஆம் ஆண்டில் கூடுதலாக 763 மில்லியன் டாலரை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மதிப்பிடுகிறது.

லெபனானில், மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் விலைகள் 1,000 சதவீதம் உயர்ந்துள்ளன, அங்கு ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களின் கையிருப்பு மட்டுமே உள்ளது. சரிந்து வரும் பொருளாதாரத்திற்கு மத்தியில், மார்ச் 2020 இல் அரசாங்கம் அதன் சர்வதேச கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை மற்றும் ரொட்டி உட்பட பல பொருட்களுக்கான மானிங்களையும் குறைத்துள்ளது, அவற்றில் சில வகைகளின் விலைகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல ஐந்து முதல் ஒன்பது மடங்குகள் வரை அதிகரித்துள்ளது.

மேற்கத்திய ஆதரவு அரசாங்கத்தை வெளியேற்றியதான ஹவுத்தி தலைமையிலான கிளர்ச்சியை ஒடுக்க, ஏப்ரல் 2015 இல் அமெரிக்க ஆதரவுடன் சவுதி அரேபியா யேமன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, ஒரு பேரழிவுகரமான போரை அது எதிர்கொண்டது. இது ரொட்டியை அதிகம் சார்ந்துள்ள நாடாகும், அதாவது குடும்பங்களின் சராசரி கலோரி உட்கொள்ளலில் பாதியளவிற்கு இது ரொட்டியையே நம்பியுள்ளது. Save the Children உதவி அமைப்பின் யேமன் நாட்டின் இயக்குநர் ராம ஹன்ஸ்ராஜ், “யேமனில், 8 மில்லியன் குழந்தைகள் ஏற்கனவே பஞ்சத்தின் விளிம்பில் உள்ளனர். குடும்பங்கள் சோர்ந்து போகின்றன. ஏழு ஆண்டு காலப் போரினால் அவர்கள் அடுத்தடுத்த பயங்கரங்களை எதிர்கொண்டனர். இந்நிலையில், அவர்களால் மற்றொரு அதிர்ச்சியை, அதிலும் குறிப்பாக தங்கள் குழந்தைகளை உயிருடன் வைத்திருக்கும் முக்கிய மூலப்பொருள் கிடைக்காத அதிர்ச்சியை தாங்க முடியாது என்றே நாங்கள் அஞ்சுகிறோம்” என்று கூறினார். மேலும், ஏனைய பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ‘கூடுதல் பயங்கரங்களை’ கட்டவிழ்த்துவிடக்கூடிய உலகளாவிய ‘சிற்றலை விளைவு’ பற்றி அவர் எச்சரித்தார்.

துனிசியாவில், கடந்த கோடையில் வேலையின்மை, உயர்ந்து வரும் பணவீக்கம் காரணமான அமைதியின்மைக்கு மத்தியில் ஜனாதிபதி கைஸ் சையட் பாராளுமன்றத்தைக் கலைத்தார், இந்நிலையில் அது ஏற்கனவே தானிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தது. அரசாங்கம் ரொட்டியின் விலையைக் கட்டுப்படுத்தும் அதேவேளையில், பல மாதங்களாக பேக்கரிகளுக்கு மாவு விலையை திருப்பிச் செலுத்தத் தவறியதால், பேக்கரிகள் முன்கூட்டியே மூடப்படுவதற்கு அல்லது பங்கீட்டு முறை விநியோகத்திற்கு மாறுவதற்கு அது வழிவகுத்தது. சர்வதேச கடனை அடைப்பதற்காக IMF கடனைப் பெற சையட் தீவிரம் காட்டுகிறார், அதன் நிபந்தனைகளுக்கு பொதுத்துறை ஊதியங்களும் மற்றும் மானியங்களும் குறைக்கப்பட வேண்டும்.

சூடான் கூட, ரஷ்யா மற்றும் உக்ரேனில் இருந்து கோதுமை மற்றும் தாவர எண்ணெய் இறக்குமதியை சார்ந்துள்ளது. அதன் வெளிநாட்டு கையிருப்பு இந்த மாதம் 3 பில்லியன் டாலரை விடக் குறைந்துள்ளது, மேலும் ஜனநாயக-சார்பு ஆர்வலர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டதன் பின்னரான புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் அச்சுறுத்தலையும் எதிர்கொள்கிறது. சூடானின் துணைத் தலைவர் முகமத் ஹம்டன், பொருளாதாரத் தடைகளை முன்னரே தடுக்கும் ஒரு முயற்சியாக, செங்கடலில் ஒரு கடற்படைத் தளத்தை விட்டுக்கொடுக்க மாஸ்கோவிற்குச் சென்றார்.

உள்நாட்டு உற்பத்திக்கான உரங்களின் விலையும் உயர்ந்து வருகிறது. பொட்டாஷ் உற்பத்தியில் முன்னணியில் உள்ள பெலாருஸ் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடைகளை விதித்ததை அடுத்து, உற்பத்திக்கு பயன்படும் எரிவாயு மற்றும் பொட்டாஷின் விலை உயர்ந்துள்ளது. மேலும், ஐரோப்பிய உணவு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முக்கிய ஊட்டச்சத்துக்களில் கால் பங்கை வழங்கும் ரஷ்யா, சீனாவுடன் சேர்ந்து, தங்கள் சொந்த விநியோகங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. உரங்களின் பற்றாக்குறை பயிர் விளைச்சலை பாதிக்கக்கூடும் என்ற நிலை, ‘உலகளாவிய உணவு நெருக்கடிக்கு’ வழிவகுக்கும் என்று நோர்வே இரசாயன நிறுவனமான யாரா இன்டர்னேஷனல் BBC இடம் தெரிவித்தது.

எரிசக்திக்கான முன்னாள் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஃபிராங்க் ஃபானன் பைனான்சியல் டைம்ஸூக்கு கூறியது போல் மேலும் ஒரு சிக்கல் உள்ளது, அதாவது “பண்டங்கள் நீண்ட காலமாக ஆயுதமாக்கப்பட்டுள்ளன… இதற்கு ஒரு அரசு எப்போது தூண்டப்படுகிறது என்று எப்போதும் ஒரு கேள்வி நிலவுகிறது.”

வாஷிங்டனும் பெரும் வல்லரசுகளும், உக்ரேன் போரை தங்கள் வாடிக்கையாளர் நாடுகளை கட்டாயப்படுத்தவும், மற்றும் உலகப் பொருளாதாரத்தை தங்கள் நலன்களுக்கு ஏற்ப மறுசீரமைக்கவும் சாதகமான ஒரு வெளியுறவுக் கொள்கை ‘வாய்ப்பாக’ பார்க்கின்றன. இந்த கோதுமை விவகாரத்தின் பின்னணியில், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பிற ஏற்றுமதி நாடுகள், அவற்றால் பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியாது என்றாலும், தேவையின் அதிகரிப்பால் பயனடைகின்றன.

2011 ஆம் ஆண்டின் அரபு வசந்த புரட்சிகளைப் போல், உணவுப் பொருள் விலை நெருக்கடியானது, சமூக ஸ்திரமின்மை, புலம்பெயர்வு மற்றும் அரசியல் அமைதியின்மை ஆகியவற்றைத் தூண்டிவிடும் என்பதை உலகின் ஆளும் உயரடுக்குகள் நன்கு உணர்ந்துள்ளன.

கடந்த மாதம், மொராக்கோவில் அரசுக்கு எதிரான போராட்டங்களும் மற்றும் உணவு கலவரங்களும் வெடித்தன. இந்த வாரம், சரக்கு வண்டி ஓட்டுநர்கள் எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்த்து மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் செய்தனர், மேலும் விலைகள் மற்றும் விநியோகஸ்தர்களின் இலாபத்திற்கு வரம்பை நிர்ணயிக்க அழைப்பு விடுத்தனர்.

அணுசக்தி போருடன் இணைந்து, அபரிமிதமான உணவு விலை அதிகரிப்பும் மற்றும் விரிவடைந்து வரும் உலகளாவிய பட்டினியும், சர்வதேச தொழிலாள வர்க்கம் போராட்டத்தில் இறங்குவதற்கான அவசரத் தேவையை முன்வைக்கிறது, அதாவது ஒன்று அல்லது மற்ற முதலாளித்துவ ஆட்சியின் பக்கம் நிற்கும் போருக்காக அல்ல, மாறாக இந்த வாழ்வா சாவா விடயத்தில், தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூகத் தேவையின் அடிப்படையில் உற்பத்தியை மறுசீரமைப்பதற்கு ஒரு சர்வதேச சோசலிசப் புரட்சியை முன்னெடுக்க வேண்டும்.

Loading