ரஷ்ய பியானோ கலைஞர் அலெக்சாண்டர் மலோஃபீவ் மீதான ஜனநாயக விரோத தாக்குதல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அலெக்சாண்டர் மலோஃபீவ் 2017 (Photo credit–Liumir)

கனடாவில் மொண்ட்ரியல் மற்றும் வான்கூவரில் ரஷ்ய பியானோ கலைஞரான அலெக்சாண்டர் மலோஃபீவ் இன் கச்சேரிகளை இரத்து செய்தது மன்னிக்க முடியாததும் பிற்போக்குத்தனமானதுமாகும். அவை சில குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை பிடிக்கும் ரஷ்ய எதிர்ப்பு வெறியை மட்டுமே ஊக்குவித்து ஆழப்படுத்துகின்றன.

மாஸ்கோவில் பிறந்த மலோஃபீவ், விமர்சகர்களின்படி 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரஷ்ய பியானோ கலைஞரின் நீண்ட வரிசையில் உருவான 20 வயதில் பாராட்டப்பட்ட கலைஞர் ஆவார். 20 வயதிலும் 'ஆனால் மிகவும் இளமையாகத் தெரிகின்றார்' என விமர்சகர்கள் பலதடவை கருத்து தெரிவிக்கின்றனர்.

வான்கூவர் Recital Society ஆனது பல்வேறு வலதுசாரி பிரிவினரின் அழுத்தத்தின் கீழ், கடந்த வாரம் மாலோஃபீவின் இசை நிகழ்ச்சியை இரத்துச் செய்வதாக அறிவித்தது. இந்த நிறுவனத்தின் நிறுவனரும் கலைத்துறை இயக்குநருமான லீலா கெட்ஸ், இந்த முடிவைப் பற்றி தான் 'பயங்கரமானதாக' உணர்ந்ததாக ஊடகங்களிடம் கூறினார்.

பல ஆண்டுகளாக மலோஃபீவை முன்பதிவு செய்ய முயற்சிப்பதாகக் கூறிய கெட்ஸ், Vancouver Sun பத்திரிகையிடம் கூறினார்: “நான் ஒரு அரக்கன் அல்ல. நான் பெரியவன் அல்ல. அலெக்சாண்டர் மலோஃபீவ் பற்றி நான் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளேன். அவர் மேலும் கூறினார், 'ஆனால் நான் அவரை வான்கூவருக்கு அழைத்து வருவதை விட இதைச் செய்வது எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. நான் அப்படிச் செய்தால் நான் தண்டனைக்குட்பட்டது போல் உணர்கிறேன், செய்யவில்லை என்றாலும் நான் தண்டனைக்குட்படுவேன்” என்றார்.

இது போன்ற வட்டாரங்களில் இந்த விஷயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அது வெளிப்படுத்துகிறது. கெட்ஸ் 'பயங்கரமானதாக' உணர்கிறார். அவர் வெளிப்படையாக மிகவும் முரண்பட்டவர் போலுள்ளார். ஆனால் தற்போது இதுபோன்ற நபர்கள் எப்போதும் மோசமான சமூகப்பிரிவினர் மற்றும் அடிநிலை சிந்தனைகளுக்கு சரணடைகிறார்கள்.

செவ்வாயன்று, மொண்ட்ரியல் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா (OSM) இந்த வாரம் திட்டமிடப்பட்ட நடத்துனர் மைக்கேல் ரில்சன் தோமஸுடன் மலோஃபீவ் நடத்தவுள்ள மூன்று நிகழ்ச்சிகளை 'ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனின் குடிமக்கள் மீது கடுமையான தாக்கம்' என்ற அடிப்படையில் இரத்து செய்வதாக அறிவித்தது. மொண்ட்ரியல் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவின் படி, 'இந்த வாரம் திரு. மலோஃபீவைப் வரவேற்பது பொருத்தமற்றது'. இந்த அறிக்கையின் ஒரு பகுதிக்கும் மற்றொன்றுக்கும் என்ன தொடர்புள்ளது? உக்ரேனின் நிலைமைக்கு மலோஃபீவ் எவ்வாறு பொறுப்புடையவராகின்றார்? உலகில் அவர் நிகழ்ச்சியை நடத்துவது ஏன் பொருத்தமற்றதாக இருக்கும்?

இன்னும் பொதுவாக, பேரினவாதம் மற்றும் இன வெறுப்புணர்வைத் தூண்டுவதை நம்பியிருக்கும் அமெரிக்க, கனேடிய மற்றும் ஐரோப்பிய பிரச்சாரத்தின் சிந்தனையை மனதை மயக்கும் 'ஜனநாயக' உள்ளடக்கம் பற்றி அது என்ன கூறுகிறது?

பாசாங்குத்தனமாக, மொண்ட்ரியால் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா அதிகாரிகள் 'எனினும், அமைதி மற்றும் நம்பிக்கையின் செய்திகளைத் தழுவும் அனைத்து தேசிய இனங்களின் கலைஞர்களுடனும் உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம்' என்று தொடர்ந்தனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 'நாங்கள்' எந்தவொரு அழுத்தத்திற்கும் உள்ளாகும்போதும் மற்றும் கொள்கையடிப்படையில் நிற்பது சில உண்மையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற சந்தர்ப்பங்களைத் தவிர, அத்தகைய உறவுகளை 'நாங்கள் நம்புகிறோம்' என்றே அர்த்தப்படுகின்றது. 'சூழல் அனுமதிக்கும் போது இந்த அதிவிஷேடமான கலைஞரை வரவேற்பதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம்'. அதாவது, நமது கழுத்தை நீட்டி மாட்டிக்கொள்ளாமல் இருக்கும்போது நாம் அதைச் செய்வோம்.

மலோஃபீவின் நிகழ்ச்சிகளை ஆர்கெஸ்ட்ரா இரத்து செய்ய வேண்டும் என்று உக்ரேனிய சமூகத்தின் உறுப்பினர்களின் “கோரிக்கையை” தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக Montreal Gazette தெரிவிக்கிறது. ஆரம்பத்தில், இளம் பியானோ கலைஞன் ரஷ்ய ஆட்சியில் இருந்து தன்னை அந்நியப்படுத்திவிட்டதைக் குறிப்பிட்டு மொண்ட்ரியல் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா அதை மறுத்துவிட்டது. 'ஆனால், கனேடிய அரசாங்கத்தின் ஒன்றிணைந்துள்ள இந்த வலதுசாரி, தேசியவாத ஆதரவுக்குழுவிற்கு அது அடிபணியத் தொடங்கியது.

ரஷ்ய இசைக்கலைஞர்களின் தற்போதைய புறக்கணிப்பு 'பனிப்போரின் உச்சகட்டத்தில் இணைப்புகளை உருவாக்குவதில் இசை உலகம் ஆற்றிய பங்கிற்கு முற்றிலும் மாறுபட்டது' என்பதைக் குறிப்பிடும் அளவுக்கு அந்த Gazette நேர்மையாக இருந்தது. 1958 ஆம் ஆண்டில், டெக்ஸ் பியானோ கலைஞரான வொன் கிளிபேர்ன் மாஸ்கோவில் நடந்த முதல் சர்வதேச சாய்க்கோவ்ஸ்கி போட்டியில் வென்று வந்தபோது, நியூயோர்க்கில் நடந்த வாத்திய அணிவகுப்புடன் வீட்டிற்கு வந்தபோது ஒரு அரிய தருணத்தைத் தூண்டினார். அப்பத்திரிகை ரஷ்ய இசைக்கலைஞர்களின் புறக்கணிப்பை அவர் எதிர்த்ததாகக் கூறிய மொன்ரியல் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியரான யாகோவ் ரப்கின் கருத்துகளை மேலும் மேற்கோள் காட்டியது. 'இது யாருக்கும் உதவும் என்று நான் நினைக்கவில்லை. இது ரஷ்யர்களுக்கு எதிராக வெறுப்பை உருவாக்குகிறது ” என்று ரப்கின் கூறினார்.

Alexander Malofeev performing Tchaikovsky's Piano Concerto No.1 in 2017

அவர் போரைப் பற்றி இன்னும் பேசவில்லை என்பதால் வான்கூவர் Recital Society மலோஃபீவின் கச்சேரியை இரத்து செய்வதாகக் கூறியது. அந்த இரத்துக்கு பதிலளிக்கும் விதமாக, Malofeev தனது நிலைப்பாட்டை விளக்கினார். மார்ச் 2 அன்று, முகநூலில், 'நம்மில் எவரும் செல்வாக்கு செலுத்தமுடியாத மற்றும் கணிக்க முடியாத கொடூரமான மற்றும் இரத்தக்களரி முடிவுகளின் காரணமாக ஒவ்வொரு ரஷ்யனும் பல தசாப்தங்களாக குற்ற உணர்ச்சியுடன் இருக்கின்றோம்'. இதற்குப் பின்னரும் மொண்ட்ரியல் சிம்பொனி முன்னோக்கிச் சென்று எப்படியும் அவர்களின் நிகழ்ச்சிகளை இரத்து செய்தது! துணிச்சலான, கொள்கை உள்ள உள்ளங்களே!

மார்ச் 7 அன்று, மலோஃபீவ் முகநூலில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பது மிகவும் 'வலியாக' இருந்தது. 'ரஷ்யாவிலும் உலகம் முழுவதும் எல்லா திசைகளிலும் இவ்வளவு வெறுப்பு செல்வதை நான் பார்த்ததில்லை' என்று அவர் கூறினார். இந்த நாட்களில் நான் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்ட பெரும்பாலான மக்கள் பயம் என்ற ஒரேயொரு உணர்வால் வழிநடத்தப்படுகிறார்கள்'. பியானோ கலைஞர், போரைப் பற்றி ஒரு பொது அறிக்கையை வெளியிடுவதில் தான் 'அசௌகரியமாக' உணர்ந்ததாகவும், 'ரஷ்யாவில் உள்ள எனது குடும்பத்தை அது பாதிக்கலாம்' என்றும் கவலை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தார், 'இப்போது ஒதுங்கி இருக்க முடியாது என்றாலும், ரஷ்ய கலாச்சாரம் மற்றும் இசை குறிப்பாக நடந்து கொண்டிருக்கும் சோகத்தால் களங்கப்படுத்தப்படக்கூடாது என்று நான் இன்னும் நம்புகிறேன். நேர்மையாக, நான் இப்போது செய்யக்கூடிய ஒரே விஷயம் பிரார்த்தனை மற்றும் அழுவது மட்டுமே” என்றார்.

மலோஃபீவ், 'எந்தவொரு பிரச்சனையும் போரினால் தீர்க்கப்பட முடியாது, மக்களை அவர்களின் தேசியத்தை வைத்து மதிப்பிட முடியாது' என்று தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். ஆனால், ஏன், சில நாட்களில், “ஒவ்வொரு நபரும் பயத்திற்கும் வெறுப்புக்கும் இடையில் தேர்வு செய்யும் நிலைக்கு உலகம் முழுவதும் மீண்டும் உருண்டுவிட்டதா?” என்று அவர் ஆச்சரியப்பட்டார். உக்ரேனில் உள்ள அவரது உறவினர்கள் உட்பட உக்ரேனில் உள்ளவர்களுடன் ஒப்பிடும்போது அவரது பிரச்சினைகள் அற்பமானவை என்பதை ஒப்புக்கொண்ட பின்னர், இளம் இசைக்கலைஞர் “இப்போது மிக முக்கியமான விஷயம் இரத்தம் சிந்துவதை நிறுத்துவது. வெறுப்பைப் பரப்புவது எந்த வகையிலும் உதவாது, மேலும் துன்பத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்பது எனக்குத் தெரியும்” என எழுதினார்

துரதிர்ஷ்டவசமாக, அவர் பின்னர் முகநூலில், “நான் ஏற்கனவே மொண்ட்ரியலுக்கு வந்துவிட்டேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அரசியல் காரணங்களால் அவற்றை [கச்சேரிகள்] நடத்துவது சாத்தியமில்லை. பார்வையாளர்களிடம் நான் நேர்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என எழுதினார்.

Alexander Malofeev performing Sergei Prokofiev's Piano Concerto No 3

முகநூலில், பல வர்ணனையாளர்கள் அனுதாபத்துடன் பதிலளித்தனர். வெளிப்படையாக, இவர்களில் பலர் ஏற்கனவே மலோஃபீவின் அபிமானிகளாக இருந்தனர் மற்றும் நேர்மறையாக செயல்பட முன்வந்தனர். இருப்பினும், தற்போதைய போர் வெறியாட்டத்திற்குள் அனைவரும் விழுந்துவிடவில்லை என்பதைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது.

ஒரு கருத்து, “நீங்கள் இளமையாகவும் பாதிக்கப்படக்கூடியவராகவும் இருக்கிறீர்கள். உங்கள் உண்மையான எண்ணங்கள் சத்தமாகவும் தெளிவாகவும் வருகின்றன. ஒரு உணர்திறன் மற்றும் படித்த நபராக, என்ன நடக்கிறது என்பதில் நீங்கள் மிகுந்த வருத்தத்தை உணர்கிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அதை நிறுத்துவது கடினமாக இருக்கும்”.

இன்னொருவர், “ஒரு உலகமாக, நாம் ஒரு வெட்கக்கேடான குழப்பத்தில் சிக்கிக்கொண்டோம். இந்த சோகத்திலிருந்து உங்கள் இசை எங்கள் இதயங்களை வெளிக்கொண்டுவந்தது என்பதை தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள். நாங்கள் உங்களைப் பாராட்டுகிறோம், உங்களை நேசிக்கிறோம்' என எழுதினார்.

மூன்றாவது ஒருவர்: 'ரஷ்ய கலாச்சாரத்திற்கும் போருக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் அழகு மற்றும் அமைதியின் மிக அழகான வெளிப்பாடு, கலை மற்றும் இசை ஆகியவற்றை வன்முறை மற்றும் போருடன் தொடர்புபடுத்தப்படுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது' எனக்குறிப்பிட்டார்.

இன்னொருவர், “அட முட்டாள் போர்! அந்தப் போர் உங்கள் பொறுப்பு அல்ல... எனவே உறுதியாக இருங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள்!!!'

'உக்ரேனில் நடந்த 'நடவடிக்கையால்' மிகவும் வருத்தப்பட்ட மக்கள் ஒரு ரஷ்ய நபரை நியாயமாகவும் மரியாதையுடனும் நடத்துவதன் மூலம் அமைதி மற்றும் நன்மைக்கு பங்களிக்க முயற்சிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.'

“20 வயதுடைய மற்றும் அமைதிவிரும்பும் இசைக்கலைஞரிடம் இருந்து புத்திசாலித்தனமான வார்த்தைகள். பல வயதானவர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்” என எழுதினார்.

'உங்களைப் போலவே நீங்களும், உங்கள் குடும்பத்தினரும், நண்பர்களும் இருக்கும் சூழ்நிலை பற்றி நான் சோகமாக இருக்கிறேன். நான் எப்பொழுதும் என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். ஏன் நாம் அடிக்கடி பயனற்ற, சுயநலம், ஊழல் மற்றும் கொடூரமான தலைவர்களில் சென்று முடிவடைகிறோம்?'

'புத்திசாலித்தனம் கேட்கப்படுவதற்கு காலம் எடுக்கும். நீங்கள் சொல்வது சரிதான், இது ஒரு வகையான விரக்தி மட்டுமே இந்த சூழ்நிலையை ஏற்படுத்துகிறது என்று நான் நினைக்கிறேன்”.

'ரஷ்ய மக்கள் எங்கள் எதிரிகள் அல்ல என்பதை பெரும்பாலான அமெரிக்கர்கள் புரிந்துகொள்கிறார்கள் என்பதை தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள். துரதிர்ஷ்டவசமாக, அனைத்து நாடுகளும் அவர்களின் தலைமைக்கு உட்பட்டிருக்கின்றன”.

மாலோஃபீவ் மாஸ்கோவில் நடைபெற்ற இளம் இசைக்கலைஞர்களுக்கான 2014 சர்வதேச சாய்க்கோவ்ஸ்கி போட்டியில் முதல் பரிசு மற்றும் தங்கப் பதக்கம் வென்ற பிறகு சர்வதேச முக்கியத்துவம் பெற்றார்.

ஒரு தனியாக வாத்தியத்தை வாசிப்பவராக, மாலோஃபீவ் ஏற்கனவே ரஷ்யாவில் பல முன்னணி இசைக்குழுக்களுடன் தோன்றியுள்ளார். அவர் இசைக்குழுநடத்துனர் ரிக்கார்டோ சியாலியின் கீழ் Orchestra Filarmonica della Scala உடன் ஆசியாவில் சுற்றுப்பயணம் செய்தார். ரிம்ஸ்கி-கோர்சாகோவின் 175 வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ள மரின்ஸ்கி இசைக்குழுவுடனும், யோமியுரி நிப்போன் சிம்பொனி இசைக்குழுவுடன் டோக்கியோவிலும், ரோமில் சாண்டா சிசிலியா தேசிய அகாடமி இசைக்குழுவுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தினார்.

ரிக்கார்டோ சியாலி(Photo credit–riccardochailly.com)

2019 இல் Corriere della Sera இதழிடம் சியாலி பின்வருமாறு கூறினார். “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மிலானில் உள்ள Teatro alla Scala இல் வலேரி கெர்கியேவ் உடன் இசை நிகழ்ச்சி நடத்தியபோது நான் முதலில் மலோஃபீவ்வைக் கேட்டேன். அவருக்கு வயது 14, அவர் தனது திறமையால் என்னை ஆச்சரியப்படுத்தினார். ஏனென்றால் அவர் வெறும் குழந்தை மேதையாய் மட்டுமல்ல:அவர் மிகவும் இளமையாக இருக்கிறார். ஆனால் ஏற்கனவே ஆழமான மற்றும் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் இசை மற்றும் நினைவாற்றல் கொண்டவர். இது அவரை Rachmaninoff’s இன் பியானோ Concerto No. 3 இனை சிறந்தவகையில் வெளிப்படுத்துபவராக ஆக்குகிறது. இதனை வாசிப்பதுஉலகின் பல பியானோ கலைஞர்களுக்கு ஒரு பிரச்சனையாக உள்ளது.”

மிகச்சமீபத்தில், Boston Classical Review “பல இளம் கலைநயமிக்கவர்கள் அதன் உள்ளடக்கத்தைவிட அதிக நுட்பத்திறனை வழங்குகிறார்கள். ஆனால் அலெக்சாண்டர் மலோஃபீவ் ஒரு சாதாரணமான மேதைத்தன்மை கொண்டவர் அல்ல. அந்த வெளியீடு, '20 வயதுதான் என்றாலும், ரஷ்ய பியானோ கலைஞர் தனது வயதை விட இரண்டு மடங்கு புகழ்பெற்ற கலைஞர்களின் ஆய்வு விளக்க ஆழத்துடன் வாசிக்கின்றார். அவரது முதிர்ச்சி மற்றும் உருவகப்படுத்துவது, சமநிலை மற்றும் திசையின் உணர்வு ஆகியவை குழந்தையாக இருந்தபோது கூட தெளிவாகத் தெரிந்தன” என எழுதியது.

2020 ஆம் ஆண்டு ரஷ்ய பத்திரிகையான Musical Life இற்கு அளித்த நேர்காணலில், அவர் முதிர்ச்சியடையும் போது அவரது கச்சேரிகள் எவ்வாறு மாறுகின்றன என்ற கேள்விக்கு பதிலளித்த மலோஃபீவ், “ஒவ்வொரு புதிய செயல்திறனுடனும் புதிய வண்ணங்கள்” தோன்றியதாக விளக்கினார். விபரிக்கமுடியாத மற்றும் மீண்டும் செய்ய முடியாத ஒன்று மேடையில் நடக்கும். அதை மீண்டும் அதே வழியில் வாசிக்க முடியாது.

நிச்சயமாக, Prokofiev இன் பியானோ Concerto No. 3 இனை வாசிப்பதற்கு முக்கியமான தொழில்நுட்ப திறன்கள் தேவை. இது எனக்கு 13 வயதிலிருந்தே தெளிவாக உருவாகியுள்ளது. ஆனால் இந்தக் கச்சேரி ஒரு தீப்பொறி போன்றது, ஒரு விண்கல் போன்றது. மேலும் அதை 20 முறைக்கு மேல் வாசித்த பிறகுதான் அது ஒரு சிறிய ஒளித்துணுக்காக சுருங்குவது போல, வால் நட்சத்திரம் போல மேலே பறந்து மறைந்துவிடும். அப்படித்தான் நான் உணர்கிறேன்' என்றார்.

Alexander Malofeev performing George Gershwin's Piano Concerto in F

மலோஃபீவ் இன் பல நிகழ்ச்சிகள் இணையத்தில் கிடைக்கின்றன இதில் Rachmaninoff’s Piano Concerto No. 3, Prokofiev’s Piano Concerto No. 3, Tchaikovsky’s Piano Concerto No.1, Gershwin’s Piano Concerto in F மற்றும் பிற உள்ளடங்கும்.

இதற்கிடையில், பிற்போக்குத்தனமான தாக்குதல்கள் தொடர்கின்றன.

  • மார்ச் 5 அன்று, Hyperallergic படி, 'உக்ரேன் மற்றும் பிற இடங்களில் இருந்து 15 கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் கொண்ட குழு' நியூயோர்க் நகரத்தில் உள்ள ஹூககன்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் மேல்மாடியின் உச்சியில் இருந்து 350 காகித விமானங்களை பறக்கவிட்டது. காகித விமானங்கள் 'உக்ரேனுக்கு மேல் பறக்கக் கூடாது' என்று அழைப்பு விடுத்தன. விளாடிமிர் புட்டின் 'ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையத்தை தகர்க்க, உக்ரேனிய மக்களை அழிப்பதற்காக' திட்டமிட்டுள்ளதாக விமானங்களில் மேலும் குறிப்பிட்டிருந்தது.
  • கேள்விக்குரிய இந்த 'கலைஞர்கள்' அமெரிக்காவும் நேட்டோவும் மூன்றாம் உலகப் போரைத் தொடங்குவதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரினர். ட்விட்டரில், இந்த பொறுப்பற்ற மற்றும் சீர்குலைந்த துண்டுப்பிரசுரத்திற்கான பிலதிபலிப்புகள் மிகவும் எதிர்மறையாக இருந்தன. ஒரு வர்ணனையாளர் எழுதினார்: “கலைஞர்கள் போருக்கு எதிரானவர்கள் மற்றும் அணுக்குண்டுகளுக்கு எதிரானவர்கள் என்பதற்கு என்னவானது? அல்லது பறக்கத்தடை மண்டலம் என்றால் ரஷ்ய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்துவது என்பது அவர்களுக்கு புரியவில்லையா? இரண்டாம் உலக யுத்தத்தில் வீசப்பட்ட 2 அணுக்குண்டுகளை விட 1000 மடங்கு அதிக சக்தி வாய்ந்த அணுக்குண்டுகளுடன் மூன்றாம் உலக யுத்தம் தொடங்கும்”#.
  • கார்டிஃப் பில்ஹார்மோனிக் இசைக்குழு (வேல்ஸ்) மார்ச் 18 அன்று திட்டமிடப்பட்ட அனைத்து சாய்க்கோவ்ஸ்கி இசை நிகழ்ச்சியையும் இரத்து செய்துள்ளது. 'சமீபத்திய ரஷ்ய உக்ரைன் படையெடுப்பின் வெளிச்சத்தில், 1812 Overture உட்பட முன்னர் விளம்பரப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியை இந்த நேரத்தில் பொருத்தமற்றது என்று இசைக்குழு உணர்கிறது.' ஜோன் வில்லியம்ஸ், டுவோராக் மற்றும் எல்கர் ஆகியோருக்கு ஆதரவாக சாய்கோவ்ஸ்கி நிகழ்ச்சி எதிர்பாராதவிதமாக வெளியேற்றப்பட்டது. 'நீங்கள் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவளிப்பீர்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நிகழ்ச்சியை அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறோம்' என இசைக்குழு அறிவித்தது.
  • நெட்ஃபிளிக்ஸ் இன் ஹாலிவுட் நிருபரின் கூற்றுப்படி, 'வரவிருக்கும் அனைத்து ரஷ்ய மொழித் தொடர்களின் தயாரிப்பையும்' நிறுத்தியுள்ளது. மேலும் 'ரஷ்யாவிடமிருந்து எதிர்காலத்தில் பெற்றுக்கொள்வதையும் இடைநிறுத்துகிறது.' நெட்ஃபிளிக்ஸ் நான்கு ரஷ்ய தொடர்களை திட்டமிட்டுள்ளது அல்லது ஏற்கனவே படமாக்கியுள்ளது. அதில் “Zato, ஒரு நியோ-நோயர் துப்பறியும் நாடகம்; Anna K, டால்ஸ்டோயின் அன்னா கரேனினாவின் சமகால மறுபரிசீலனை. இது நெட்ஃபிளிக்ஸின் முதல் ரஷ்ய அசல் தொடராக இருக்கும்; Nothing Special என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளம் நடிகர் பற்றிய நாடகம்; மற்றும் நான்காவது பெயரிடப்படாத தொடர்' ஆகியன உள்ளடங்கும்.
  • போல்ஷோய் அரங்கத்தின் இசை இயக்குனரும் முதன்மை நிகழ்ச்சி நடத்துனருமான துகன் சோகிவ், 'உக்ரேனில் போரில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க விடுக்கப்பட்ட அழைப்புகள் காரணமாக' அழுத்தத்தின் கீழ் இராஜினாமா செய்துள்ளார். வலேரி கெர்கீயேவின் ஆதரவாளராகக் கருதப்படும் சோகிவ், மாஸ்கோ அரங்கில் இருந்து 'உடனடியாக அமலுக்கு வரும் வகையில்' இராஜினாமா செய்தார் என அல் ஜசீரா அறிவித்தது, மற்றும் 'பிரான்சின் Orchestre National du Capitole de Toulouse இல் அதற்கு நிகரான பதவியிலிருந்தும்' இராஜினாமா செய்தார்”.

'எனது அன்பான ரஷ்ய மற்றும் பிரியமான பிரெஞ்சு இசைக்கலைஞர்களுக்கிடையே தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியமற்ற தேர்வை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான பின்னர்' அவர் இராஜினாமா செய்ய முடிவு செய்ததாக சுட்டிக்காட்டினார். அல் ஜசீராவின் படி, சோகியேவ், 'நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை, எந்த வடிவத்திலும் எந்த மோதல்களுக்கும் எதிராக எப்போதும் இருப்பேன்' என்று கூறினார். இசைக்கலைஞர்கள் 'கலாச்சாரத்தை இரத்துசெய்' என்று அழைக்கப்படுவதற்கு பலியாக்கப்படுவதாகவும், ரஷ்ய இசை அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என்றும் அவர் கூறினார். 'சாய்கோவ்ஸ்கி, ஸ்ட்ராவின்ஸ்கி, ஷோஸ்டகோவிச் ஆகியோருக்கும் மற்றும் பீத்தோவன், பிராம்ஸ், டெபஸ்ஸி ஆகியோருக்கும் இடையில் தேர்வுசெய்யவேண்டும் என்று நான் விரைவில் கேட்கப்படலாம்' என்று அவர் அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார்.

Loading