இலங்கை நிதி அமைச்சர் சிக்கன நடவடிக்கைகள் சிறப்பானதாக ஆகும் முன் ஆகவும் மோசமானதாக இருக்கும் என்று அறிவிக்கிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கடந்த வெள்ளியன்று வாஷிங்டனில் இருந்து கொழும்பு செய்தியாளர்களிடம் உரையாற்றிய இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளில் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் கட்டளையிடப்படுகின்றன என்று சமிக்ஞை செய்தார். நாடு எதிர்கொள்ளும் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவும் வகையில் அவசரக் கடன்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றைக் கோரும் பேச்சுவார்த்தைக் குழுவை சப்ரி வழிநடத்துகிறார்.

அலி சப்ரி (Photo: Facebook)

சப்ரி கூறியதாவது: 'இது இரண்டு வருடங்களுக்கு வேதனையானதாக இருக்கும் என்றாலும், சர்வதேச நாணய நிதிய வாய்ப்பு என்பது அனைத்து வேறுபாடுகளையும் பொருட்படுத்தாமல் நாம் பற்றிக்கொள்ள வேண்டிய ஒரு தருணம் என்று நான் நினைக்கிறேன்.' அரசாங்கமும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனமும் சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளை ஏற்கும், ஆனால் அதன் 'துன்பத்தை' தவிர்க்க முடியாமல் பெரும்பான்மையான மக்கள் மீது, அதாவது உழைக்கும் மக்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் மீது சுமத்தும்.

'இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை அரசாங்கத்தால் தலைதூக்க முடியும் என்று நான் நம்புகிறேன்' என்று அறிவித்த நிதி அமைச்சர், நிலைமைக்கு சிறந்த சாதகமான முகத்தை காட்ட முயன்றார். 'நிச்சயமாக, அது சிறப்பாக ஆவதற்கு முன்பு மிகவும் மோசமானதாக இருக்கும்,' என்று பின்னர் அவர் மேலும் கூறினார். உலகப் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, தாங்கள் எதிர்கொள்ளும் சமூகப் பேரழிவு இரண்டு ஆண்டுகளில் சரியாகிவிடும் என்று தொழிலாளர்கள் நம்பிக்கை வைக்க முடியாது.

'அவசர நிதியுதவிக்கு, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் மேலாக இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளின் விருப்பங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது,' என்று சப்ரி கூறினார். உலக வங்கி உடனடியாக 300-600 மில்லியன் டொலர் 'நிரப்பீட்டுக் கடன்' வழங்க கூடும். அதே சமயம் ஆசிய அபிவிருத்தி வங்கி மருந்துகளை இறக்குமதி செய்ய 21 மில்லியன் டொலர்களை வழங்குவதாக சமிக்ஞை செய்துள்ளது.

மூடிஸ், ஃபிட்ச் மற்றும் எஸ் அன்ட் பி உள்ளிட்ட தரமதிப்பீட்டு நிறுவனங்கள் நாட்டின் கடன் மதிப்பீட்டை ஓரங்கட்டும் நிலைக்குத் தரமிறக்கியுள்ளதால், இலங்கையால் வர்த்தக நிதியைத் திரட்ட முடியவில்லை. இரண்டு மாதங்களுக்குள் இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு நிகராக 340 ரூபாவாக, கிட்டத்தட்ட 70 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. நாடு ஏற்கனவே தனது வெளிநாட்டுக் கடன்களுக்கு தற்காலி தவணைத் தவறலை அறிவித்துள்ளது.

இலங்கையின் மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியானது, இரண்டு வருடங்களாக கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் இப்போது உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி யுத்தம் மற்றும் மாஸ்கோவிற்கு எதிரான பொருளாதாரத் தடையுடன் தொடர்புடைய உலகப் பொருளாதார வீழ்ச்சியின் கூர்மையான வெளிப்பாடாகும். .

பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ மற்றும் அவர்களது அரசாங்கமும் இராஜினாமா செய்ய வேண்டுமென கோரும் பாரிய ஆர்ப்பாட்டங்களில் தீவு மூழ்கியுள்ள நிலையிலேயே சப்ரியின் கருத்துக்கள் வந்துள்ளன. மத்திய கொழும்பில் உள்ள காலி முகத்திடலில், ஏப்ரல் 9 முதல் ஆயிரக்கணக்கானோர் இரவு பகலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உழைக்கும் மக்கள் அடிப்படை பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும், அவை எப்போதும் கிடைக்காது அல்லது மலிவு விலையில் இல்லை. விலைவாசி உயர்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் இதர அன்றாடப் பொருட்களின் விலை கடந்த வாரத்தில் இருமடங்காக அதிகரித்து, பலருக்கு எட்டாத விலைக்கு உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்காக வரிசையில் நின்று குறைந்தது ஆறு பேர் மரணித்துள்ளனர்.

ஏப்ரல் 18 அன்று மாகாண நகரமான ரம்புக்கனவில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக போராடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் சுட்டு ஒருவர் கொல்லப்பட்டது சம்பந்தமாக நிலவும் பரவலான கோபத்தின் விளைவாக எதிர்ப்புக்கள் மேலும் அதிகரித்துள்ளன. இந்த தாக்குதலில் சமிந்த லக்ஷான் என்ற தொழிலாளி கொல்லப்பட்டதுடன் மேலும் 24 பேர் வரை காயமடைந்தனர்.

பெருகிவரும் எதிர்ப்பு இயக்கமானது, இராஜபக்ஷ அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடியை ஆழமாக்கியுள்ளது. நாற்பதுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளதால் அரசாங்கம் பெரும்பான்மையை பெருமளவில் இழந்துள்ளது. சமிந்த லக்ஷான் பொலிசால் கொல்லப்பட்டமை, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பை நசுக்குவதற்கு அரசாங்கம் பொலிஸ்-அரச நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகின்றது என்பதற்கான ஒரு அச்சுறுத்தும் அறிகுறியாகும்.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய தூதுக் குழுவின் தலைவர் மசஹிரோ நஸாகி, 'அவசர துரித நிதியளிப்பு முறைமை (RFI) உட்பட எந்தவொரு சர்வதேச நாணய நிதிய கடனை வழங்குவதற்கு முன்னர், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க நாடு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று ராய்டர் செய்திச் சேவையிடம் கூறினார்.

எந்தவொரு நிதி வழங்கலுக்கும் முன்நிபந்தனையாக, சர்வதேச நாணய நிதியம் 'கடன் நிலைத்தன்மையை' வலியுறுத்துவதானது, நாட்டின் சர்வதேச கடன் கொடுப்போருக்கு பணம் செலுத்தப்பட்டிருப்பதையும், நெருக்கடியின் முழுச் சுமையும் உழைக்கும் மக்கள் மீது திணிப்பதையும் உறுதி செய்வதாகும். இந்த கடன் வழங்குனர்களில் பாதி, வணிக முதலீட்டு நிறுவனங்கள் ஆகும்.

நிதியமைச்சர் அடுத்த 15 நாட்களுக்குள் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நிதி மற்றும் சட்ட நிபுணர்களை நியமிக்க உள்ளார். தென் அமெரிக்க நாடுகளில் கஷ்டங்களை சுமத்துவதில் நிபுணத்துவம் பெற்ற அத்தகைய நிபுணரான லீ புச்ஹெயிட், இலங்கைப் பிரதிநிதிகளுக்கு ஏற்கனவே விளக்கமளித்துள்ளார். உதாரணமாக, 2020இல் திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெலிஸ் நாட்டில், அரசதுறை ஊதியங்கள் குறைக்கப்பட்டு, பரந்த அடிப்படையிலான பொது விற்பனை வரி விதிக்கப்பட்டது.

சப்ரி ஏற்கனவே நிதி, நிறுவன மற்றும் வரி சீர்திருத்தங்களை முன்னறிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகளில் வருமானத்தை உயர்த்துதல் மற்றும் பெருமதி சேர் வரிகளை அதிகரித்தல்; எரிபொருள் விலை மற்றும் மின்சார விலை அதிகரிப்பு; சந்தையினால் நிர்ணயிக்கப்படும் நெகிழ்வான நாணய மாற்று விகிதத்தை நிறுவுதல்; நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தல், அதாவது சமூகச் செலவுகளைக் குறைத்தல்; தனியார்மயமாக்கல், கூட்டுத்தாபனமயமாக்கல் மற்றும் வேலைகளையும் வேலை நிலைமைகளையும் கடுமையாக அழிக்கின்ற, ஒப்பந்தம் மூலமான அரசுத் துறை 'மறுசீரமைப்பு' ஆகியவையும் இதில் அடங்கும்.

புளூம்பேர்க் நியூஸ் உடனான நேர்காணலில், இலங்கையின் தற்போதைய வரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.6 சதவீதத்திலிருந்து 13-14 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று சப்ரி கூறினார். உணவு மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் மீதான மறைமுக வரிகளை அதிகரிப்பதற்கும் மேலாக, உழைக்கும் மக்கள் மீதான நேரடி வரிகளை விரிவுபடுத்துவதன் மூலமும் அதிகரிப்பதன் மூலமும் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட புதிய கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இலட்சக் கணக்கானவர்கள், இல்லையெனில் மில்லியன் கணக்கானவர்கள், ஏற்கனவே தாங்கள் எதிர்கொள்ளும் சகிக்க முடியாத நிலைமைகளுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறு கோரியுள்ளனர்.

எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடியின் சுமை உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளும் கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்து அரசாங்க அல்லது எதிர்க் கட்சிகளிடமோ விடயங்களை விட்டுவிட முடியாது.

சோசலிச சமத்துவக் கட்சியானது, கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைநிறுத்த அலைகளை நாசப்படுத்திய தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு வேலைத் தளங்களிலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் அயல்புறங்களிலும் நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு தொழிலாளர்களை வலியுறுத்துகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி வெளிநாட்டுக் கடனை நிராகரிப்பது உட்பட தொழிலாள வர்க்கம் அரசியல் போராட்டத்தை நடத்தக்கூடியவாறான ஒரு தொகை கோரிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் கடன்களை அடைக்க தொழிலாளர்களும் ஏழைகளும் பட்டினி கிடக்க வேண்டியதில்லை.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்தி வாய்ந்த இயக்கம், கிராமப்புற ஏழைகளின் பெரும் பகுதியினரின் ஆதரவைப் பெற்று, பெரும் செல்வந்தர்கள் சிலரின் தேவைகளை அன்றி, பெரும்பான்மையினரின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராடுவதற்கான அடிப்படையை நிறுவும்.

Loading