ஜேர்மன் நீதிமன்றம் தீவிர வலதுசாரி இராணுவ அதிகாரிக்கு 5½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளியன்று, பிராங்பேர்ட் பிராந்திய உயர்நீதிமன்றம் ஜேர்மன் இராணுவ அதிகாரியும் மற்றும் நவ-நாஜியுமான பிராங்கோ அல்பிரெக்ட் உயர் பதவியில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பொது நபர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதற்காக ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு இறுதியானதல்ல.

விசாரணையின் தொடக்கத்தில் பிராங்கோ அல்பிரெக்ட் தொலைக்காட்சி நிலையமான RT deutsch க்கு பேட்டி அளிக்கையில்

ஜேர்மன் நீதிமன்றமொன்று வலதுசாரி பயங்கரவாதம் தொடர்பாக இராணுவ அதிகாரி ஒருவருக்கு தண்டனை வழங்குவது இதுவே முதல்முறை. ஆனால், நவ-நாஜி NSU இன் (தேசிய சோசலிச தலைமறைவு இயக்கம்) பெயார்ட ஷேப்ப அல்லது கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியை சேர்ந்த வால்டர் லூப்கவை கொன்ற ஸ்டீபன் ஏர்ன்ஸ்ட் போன்ற தீவிர வலதுசாரி பயங்கரவாதிகள் பற்றிய முந்தைய விசாரணைகளைப் போலவே நீதிமன்றம் முதன்மையாக அவை தொடர்பான சேதத்தை கட்டுப்படுத்துவதிலேயே அக்கறை கொண்டிருந்தது.

அல்பிரெக்ட் ஒரு பரந்த வலதுசாரி தீவிரவாத வலையமைப்பில் ஒரு முக்கிய நபராக இருந்தாலும், அவ்வலையமைப்பு ஜேர்மன் ஆயுதப்படைகள் மற்றும் பாதுகாப்பு முகமைகளை ஆழமாக சென்றடைகிறது. ஆனால் விசாரணை அவரை ஒரு தனிநபராக மட்டுமே கவனம் செலுத்தியது. இவ் வலையமைப்பின் முன்னணி உறுப்பினர்களுக்கு எதிராக எதுவும் செய்யப்படவில்லை. அவர்கள் குற்றம் சாட்டப்படவில்லை அல்லது மற்ற விசாரணைகளில் அற்பமான தண்டனையை மட்டுமே பெற்று மற்றும் அவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்.

சமீபத்தில் ஜூன் 2018 இல், பிராங்பேர்ட் பிராந்திய உயர் நீதிமன்றம் அல்பிரெக்ட்டுக்கு எதிரான விசாரணையை தொடங்க மறுத்துவிட்டது. இப்போது அவரது தண்டனைக்கு வழிவகுத்த அனைத்து அத்தியாவசிய தகவல்களும் அந்த நேரத்தில் ஏற்கனவே இருந்தபோதிலும், நாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு தீவிரமான வன்முறைச் செயலை தயாரிப்பது பற்றி போதுமான சந்தேகம் இல்லை என்று கூறி அது நியாயப்படுத்தப்பட்டது.

ஒரு வருடத்திற்குப் பின்னர், காஸல் மாவட்டத் தலைவர் வால்டர் லூப்க ஒரு நவ-நாஜியால் படுகொலை செய்யப்பட்ட பின்னரும் மற்றும் அரசு அமைப்புகளுக்குள் வலதுசாரி சதித்திட்டத்தின் மீது பொதுமக்களின் சீற்றம் அதிகரித்தபோது மத்திய உயர்நீதிமன்றம் அல்பிரெக்ட்டுக்கு எதிரான விசாரணையை நடத்த பிராந்திய உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

விசாரணை மே 20, 2021 அன்று தொடங்கி 40 நாட்கள் நீடித்தது. 2017 இல் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அல்பிரெக்ட், பெரும்பாலான நேரம் சுதந்திரமாகவே இருந்தார். இந்த ஆண்டு பெப்ரவரியில்தான் அவர் சாட்சியங்களை அகற்ற முயன்றதால் மீண்டும் காவலில் வைக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் ஏராளமான ஸ்வஸ்திகா சின்னங்கள், வெட்டும் குத்தும் ஆயுதங்கள், கத்திகள் மற்றும் 50 முன்பணம் செலுத்தப்பட்ட செறிவட்டைகளுடன் [SIM Card] 21 கைத்தொலைசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பெப்ரவரி 2017 இல் அல்பிரெக்ட்டின் முதல் கைது, இராணுவத்திற்குள் வலதுசாரி தீவிரவாத செயற்பாடுகளின் அளவு தொடர்பான பொதுமக்களின் கவனத்தை திருப்பியது. குறிப்பிடத்தக்க வகையில், அவர் ஜேர்மன் அதிகாரிகளால் கைது செய்யப்படவில்லை மாறாக ஆஸ்திரிய பொலிசார் கைது செய்யப்பட்டனர். வியன்னா சர்வதேச விமான நிலையத்தில் அவர் முன்பு மறைத்து வைத்திருந்த ஒரு கைத்துப்பாக்கியை எடுத்தபோது அல்பிரெக்ட் கைது செய்யப்பட்டார்.

கையடையாள பரிசோதனையில் அவர் இரட்டை வேடத்தில் இருந்திருப்பது தெரியவந்தது. அவர் அல்சேஸில் உள்ள பிராங்கோ-ஜேர்மன் படைப்பிரிவின் 291 ஜேகர் பட்டாலியனில் முதல் லெப்டினன்டாக இருந்தார். மேலும் அவர் அரபு மொழி பேசவில்லை என்றாலும், சிரிய புகலிடக் கோரிக்கையாளராக 'டேவிட் பெஞ்சமின்' என்ற பெயரில் பதிவு செய்திருந்தார். அவர் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடாத்தி அதற்கு அகதிகளை குற்றம்சாட்ட தவறான தனது அடையாளத்தைப் பயன்படுத்த விரும்பியிருந்தார்.

செய்தியாளர்கள் இது பற்றி விசாரிக்கத் தொடங்கியபோது, மேலும் அல்பிரெக்ட் ஒரு விரிவான வலதுசாரி சதியின் ஒரு பகுதியாக இருந்தது விரைவில் தெளிவாகியது. அவர் கூட்டாளிகளின் ஆதரவுடன் பல ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருந்தார். மேலும் பசுமைக் கட்சி அரசியல்வாதி கிளவ்டியா ரோத், அப்போதைய நீதி அமைச்சர் ஹெய்கோ மாஸ் (சமூக ஜனநாயகக் கட்சி - SPD) மற்றும் இனவெறிக்கு எதிரான அமடேயோ அந்தோனியோ என்ற அமைப்பின் நிறுவனரான அனேற்ற காஹான உட்பட சாத்தியமான தாக்குதல் இலக்குகளின் பட்டியல்களை வைத்திருந்தார்.

கஹான மீதான தாக்குதல் திட்டங்கள் மிகவும் முன்னேறியிருந்த்தன. அல்பிரெக்ட் பேர்லினில் உள்ள அறக்கட்டளையின் வளாகத்திற்குச் சென்று நிலத்தடி வாகன தரிப்பிடத்தின் புகைப்படங்கள், வளாகத்தின் இருப்பிட வரைபடங்கள், ஆயுதங்களை மாற்றுவதற்கான திட்டங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய தப்பிக்கும் பாதை ஆகியவற்றை தயாரித்தார்.

அல்பிரெக்ட் தனது பிரிவான 291 ஜேகர் பட்டாலியனில் இல் நம்பிக்கைக்குரியவர்களையும் உதவியாளர்களையும் கொண்டிருந்தார். அப்பிரிவில் வலதுசாரி தீவிரவாதம் வெளிப்படையாக சகித்துக்கொள்ளப்பட்டது. அல்பிரெக்ட்டின் வலதுசாரி தீவிரவாத உணர்வுகளைப் பற்றி அவரது மேலதிகாரிகளுக்குத் தெரியும். 2013 ஆம் ஆண்டிலேயே, அவர் பிரெஞ்சு Saint-Cyr இராணுவ பயிலகத்தில் ஒரு இனவெறி மற்றும் யூத-விரோத முதுகலை ஆய்வறிக்கையை எழுதினார். இது பொறுப்பான ஜேர்மன் இராணுவத்தின் அதிகாரிகளால் மறைக்கப்பட்டது. இதனால் அல்பிரெக்ட் ஒரு அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடர முடிந்த்து.

அவர் 'நாள் X' அன்று ஆயுதமேந்திய சதித்திட்டத்திற்கு தயாராகும் விஷேட படையினர்கள், செயல்பாட்டு போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளின் வலையமைப்பில் ஒரு உறுப்பினராகவும் இருந்தார். இந்த வலையமைப்பின் தலைவரான ஆண்ட்ரே எஸ். ('ஹன்னிபால்' என்ற புனைபெயரை கொண்டவர்) இராணுவத்தின் விஷேட KSK இராணுவப் பிரிவின் முன்னாள் உறுப்பினராவார். அவருடன் பிராங்கோ அல்பிரெக்ட் தனிப்பட்ட தொடர்பில் இருந்தார்.

அல்பிரெக்ட் அம்பலப்பட்ட பின்னர் ஹன்னிபால் வலையமைப்பின் கண்டுபிடிப்பு அரச மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான செயல்பாட்டைத் தூண்டியது. 2020 ஆம் ஆண்டில், வலதுசாரி தீவிரவாத நடவடிக்கைகள் பற்றிய மேலும் மேலும் விவரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர் அப்போதைய பாதுகாப்பு மந்திரி அன்னகிரேட் கிராம்ப் காரென்பவர் (CDU) KSK இன் நான்கு பிரிவுகளில் ஒன்றைக் கலைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. KSK ஆனது 'சுயமாகவே இயங்கத் தொடங்கியுள்ளதுடன்', 'ஒரு நச்சு தலைமைத்துவ கலாச்சாரம்' இருந்தது மற்றும் பெரிய அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் காணாமல் போயுள்ளன என்று அவர் தனது நடவடிக்கையை நியாயப்படுத்தினார்.

ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்றீடு அமைப்பில் (AfD) நெருங்கிய உறவுகளைக் கொண்ட ஹன்னிபால் வலையமைப்பின் வடக்குப் பகுதியான 'Nordkreuz' குழுவிற்கு எதிரான தேடுதல் நடவடிக்கைகள், பெரிய அளவிலான ஆயுதங்கள், வெடிமருந்துகள், வெடிபொருட்கள் மற்றும் மரண தண்டனைப் பட்டியல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன. மெக்லென்பேர்க்-வெஸ்டர்ன் பொமரேனியாவின் உள்துறை மந்திரி, லோரன்ஸ் காபியர் (CDU) 'Nordkreuz' உடனான தொடர்பு காரணமாக இராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. ஆனால் பொறுப்பானவர்களுக்கு எதுவும் நடக்கவில்லை.

2019 இல், பொப்லிங்கன் மாவட்ட நீதிமன்றம் ஆண்ட்ரே எஸ். ('ஹன்னிபால்') இற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சட்டத்தை மீறியதற்காக அபராதம் விதித்தது. அதற்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்தார். அவர் KSK இலிருந்து இடமாற்றப்பட்டார், ஆனால் இராணுவத்திலிருந்து அகற்றப்படவில்லை.

'Nordkreuz' வழக்கில், பிரதம அரச வழக்குத்தொடுனர் அதன் இரண்டு முன்னணி உறுப்பினர்களான வழக்கறிஞர் ஜான்-ஹென்றிக் H. மற்றும் AfD உறுப்பினரான குற்றப்புலனாய்வாளர் ஹாலிக் J ஆகியோருக்கு எதிரான விசாரணையை கைவிட்டார். முன்னாள் பராட்ரூப்பர், SEK (சிறப்பு தந்திரோபாயப் பிரிவு) போலீஸ் அதிகாரி மற்றும் AfD உறுப்பினரான மார்கோ ஜி. தான் இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனையை பெற்ற அக்குழுவின் ஒரே உறுப்பினராவார்.

2017 இல் அல்பிரெக்ட்டுடன் அவரது இரட்டை அடையாளத்தை மறைக்க, ஆயுதங்களை மறைத்து, தாக்குதல் பட்டியலை பராமரிக்க உதவியதற்காக கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி மக்ஸிமில்லியான் T. விரைவில் விடுவிக்கப்பட்டார். AfD நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் நோல்டவின் பணியாளராக, பல இலக்குவைக்கப்பட்டவர்கள் அடிக்கடி வரும் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு அவருக்கு இலவச அணுகல் வழங்கப்பட்டது. மக்சிமில்லியான் டி. பிராங்கோ அல்பிரெக்ட்டின் வருங்கால மனைவி சோபியா டி.யின் சகோதரர் ஆவார். அவருடன் அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

அல்பிரெக்ட்டின் ஆரம்பக் கைதுக்குப் பின்னர் ஐந்தரை ஆண்டுகளில், இராணுவம் மற்றும் அரசு அமைப்பினுள்ளேயே தீவிர வலதுசாரி வலைப்பின்னல்களின் பரிமாணத்தை பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. பிராங்க்பேர்ட் உயர் பிராந்திய நீதிமன்றத்திற்கு, அவற்றிற்கான பெருமளவு ஆதாரங்களின் காரணமாக அல்பிரெக்ட்டை குற்றவாளியாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் வலதுசாரி சதுப்பு நிலத்தை உலர்த்துவதற்கு எந்த முயற்சியும் இல்லை. மாறாக, ஆளும் வட்டங்களில் இருப்பவர்கள் தங்கள் வழியில் இந்த தீர்ப்பு இராணுவவாதம் மற்றும் வலதுசாரி விமர்சனத்தின் கீழ் ஒரு முடிவுக்கோட்டை வரைய வேண்டும் எனக் கருதுகின்றனர்.

நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் இராணுவத்தை மறுஆயுதமாக்க செலவிடப்படுகின்றன. இராணுவம் சமூகத்தின் மையத்திற்கு மீண்டும் நகர்த்தப்படுகின்றது. இராணுவவாதம் பற்றிய எந்த விமர்சனமும் குற்றமாக அறிவிக்கப்படுகிறது. அமைதிவாதமானது நன்மைக்கு வழிவகுக்காது, ஆனால் 'கெட்டவர்கள், குற்றவாளிகள் மற்றும் மனிதாபிமானமற்றவர்களின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துகிறது' என்று முன்னாள் கூட்டாட்சித் தலைவர் ஜோஹாயிம் கவுக் சமீபத்தில் மார்கஸ் லான்ஸ் உடனான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிவித்தார் .உக்ரேனிய பாசிசவாதி ஸ்டீபன் பண்டேரா போன்ற நாஜி ஒத்துழைப்பாளர்களை புகழ்வது 'புரிந்துகொள்ளக்கூடியது' மற்றும் வரவேற்கத்தக்கது என்று கருதப்படுகிறது.

இது அனுமதிக்கப்படக்கூடாது.

Loading