வேலை நீக்கம் செய்யப்பட்ட சக ஊழியர்களை மீண்டும் வேலையில் அமர்த்தக் கோரி இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஆகஸ்ட் 28 அன்று, சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) ஓல்ட்டன் மற்றும் கிளினுகி தோட்டத் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களும் ஒரு சக்திவாய்ந்த ஆர்ப்பாட்டத்தையும் ஊர்வலத்தையும் நடத்தின. ஓல்டன் தோட்ட நிர்வாகத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்ட 38 தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்தவும், 22 தொழிலாளர்கள் மீதான சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொள்ளுமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரப்பட்டது.

28 ஆகஸ்ட் 2022 அன்று மறியல் போராட்டத்திற்காக மஸ்கெலியா சாமிலையை நோக்கிச் ஊர்வலமாக சென்ற தொழிலாளர்கள்

2021 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சம்பள உயர்வு கோரி ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது, போலி குற்றச்சாட்டுகளின் பேரில் 22 தொழிலாளர்களையும் இரண்டு இளைஞர்களையும் பொலிசார் கைது செய்தனர். பெப்ரவரி 17 அன்று வீட்டு வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தோட்ட முகாமையாளரை உடல்ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவரது பங்களாவை சேதப்படுத்தியதாகவும் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஓல்டன் தோட்டத்தை நிர்வகிக்கும் ஹொரண பெருந்தோட்ட நிறுவனம், வேலைநிறுத்த நடவடிக்கையின் காரணமாக 38 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது. பின்னர் அவர்களில் நான்கு பேரை மட்டுமே இடை நீக்க கால ஊதியம் வழங்காமல் மீண்டும் வேலையில் அமர்த்தியது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) இந்த பழிவாங்கல்களுக்கு தீவிரமாக ஆதரவளித்தது. ஏனைய தோட்டத் தொழிற்சங்கங்களான தொழிலாளர்களின் தேசிய சங்கம், ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி போன்றவை மௌனமாக இந்த வேட்டையாடலுக்கு ஒப்புதல் அளித்தன.

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் ஓல்ட்டன் கிளினுகி மற்றும் பெயர்லோன் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில், கடந்த மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக பிரச்சாரம் செய்தனர். பாதிக்கப்பட்ட ஓல்டன் தொழிலாளர்கள் பற்றிய கட்டுரைகளையும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் மகாநாட்டிற்காக அழைப்பு விடுத்து சோசலிச சமத்துவக் கட்சி விடுத்த அறிக்கையையும் நூற்றுக்கணக்கில் விநியோகித்தனர்.

28 ஆகஸ்ட் 2022 அன்று மறியல் போராட்டத்துக்காக ஓல்டன் தோட்டத்தில் சோ.ச.க. செய்த பிரச்சாரம்

ஓல்டன் தோட்டத்திலிருந்து சாமிமலை நகரத்திற்கு ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர்கள் ஊர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களை தொழிலாளர்கள் அவர்களது லைன் அறைகளிலிருந்தும் வேலை தளத்தில் இருந்து வாழ்த்தி வரவேற்றனர்.

ஊர்வலத்தைத் தொடர்ந்து, கிளனுகி தோட்ட நடவடிக்கைக் குழு செயலாளரும் சோசலிச சமத்துவக் கட்சி அரசியல் குழு உறுப்பினருமான கே. காண்டீபன், சோசலிச சமத்துவக் கட்சி அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன் உரையாற்றினர். அவர்களின் உரைகள் சோசலிச சமத்துவக் கட்சி முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதோடு இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களை பழிவாங்குவதில் தொழிற்சங்கங்களின் துரோக ஆதரவையும், ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் உடனடி உறுதியான நடவடிக்கையையும் காண்டீபன் வேறுபடுத்திக் காட்டினார்.

'இந்த பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பாதுகாக்காமல், தொழிற்சங்கங்கள் மீண்டும் தாங்கள் அரச மற்றும் தோட்ட நிறுவனங்களின் கருவிகளாகவும் பொலிஸ்காரர்களாகவும் செயல்படுவதை காட்டியுள்ளன.

'இந்த அனுபவத்திலிருந்து பல தொழிலாளர்கள் தங்கள் பாதிக்கப்பட்ட சக ஊழியர்களைப் பாதுகாப்பதற்கு மட்டுமல்லாமல், தோட்டங்கள் உட்பட ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு ஒரு நடவடிக்கைக் குழுவை உருவாக்க முன்வந்தனர்,' என்று அவர் கூறினார்.

காண்டீபன், ஜனநாயகத்துக்கும் சோசலிசலிசத்துக்குமான தொழிலாளர் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் மாநாட்டுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் அழைப்பை விளக்கினார். நடவடிக்கைக் குழுக்ககளால் ஜனநாயாக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்குபற்றுவர்.

'இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அரசாங்கமும் முதலாளித்துவ வர்க்கமும் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் உரிமைகள் மீது தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. சோசலிச கொள்கைகளுக்காகவும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகவும் தொழிலாளர்கள் போராட வேண்டும்,' என்று அவர் கூறினார்.

28 ஆகஸ்ட் 2022 அன்று மஸ்கெலியா சாமிமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய தேவராஜா

தேவராஜா பேசும்போது 'ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துகிறது. கடந்த காலப் போராட்டங்களில் தொழிலாளர்கள் பெற்ற இலட்சக்கணக்கான அரசாங்க வேலைகளை வெட்டவும், ஊதியக் குறைப்பு செய்யவும் ஏனைய உரிமைகளை அழிக்கவும் அவரது ஆட்சி திட்டமிடுகிறது. இந்தத் தாக்குதல்களை தொழிலாளர்கள் பொறுத்துக் கொள்ள முடியாது,” என விளக்கினார்

அன்றைய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் முன்னைய அரசாங்கத்திற்கு எதிராக ஏப்ரல் 28 மற்றும் மே 6 ஆம் திகதிகளில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தங்களுக்கு பாரிய ஆதரவு கிடைத்ததை தேவராஜா சுட்டிக்காட்டினார். இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட அதே வேளை, தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது கட்சிகளின் காட்டிக்கொடுப்பால் வங்கிகள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியான விக்கிரமசிங்கவால் அதிகாரத்திற்கு வர முடிந்தது. அவர் இப்போது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறார்.

'அமெரிக்கா மற்றும் பெரிய பிரித்தானியா போன்ற முன்னேறிய நாடுகள் முதல் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் வரை உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் இதே நிலைமையை எதிர்கொள்கின்றனர். எல்லா இடங்களிலும், தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க போராடுகிறார்கள்.

'அமெரிக்காவில், வில் லெஹ்மன் யுனைடெட் ஆட்டோ தொழிலாளர் தொழிற்சங்கத்தின் சர்வதேச தலைவர் பதவிக்காக போட்டியிட்டு, ஊழல் மற்றும் பிற்போக்கு அதிகாரத்துவத்தை அம்பலப்படுத்துகிறார். அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவுடன் அவர் பிரச்சாரம் செய்வது, பெருநிறுவனங்களின் இத்தகைய கருவியை சீர்திருத்துவதற்காக அல்ல, மாறாக அதை உடைத்து, நடவடிக்கை குழுக்களைக் கட்டியெழுப்புவதன் மூலம் சுயாதீனமான தொழிலாளர்களின் அதிகாரத்தைக் கட்டியெழுப்பவே போராடுகிறார்.”

அனைத்துக் கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான விக்கிரமசிங்கவின் சூழ்ச்சிகளை நிராகரிக்குமாறும், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து சுயாதீனமாக ஒவ்வொரு தோட்டத்திலும் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புமாறும் பேச்சாளர் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். 'இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சியில் இணைய தொழிலாளர்களும் இளைஞர்களும் தீர்மானிக்க வேண்டும்' என்று தேவராஜா கூறினார்.

கூட்டத்திற்குப் பிறகு, சூரியகந்த தோட்டத்திலுள்ள இ.தொ.கா. கிளையின் உள்ளூர் தலைவர் ராஜா, சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒரு ஆத்திரமூட்டலைத் தொடங்க முயன்றார். இ.தொ.கா. பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானைக் கடுமையாக விமர்சித்த உலக சோலிச வலைத் தள கட்டுரையின் தமிழாக்கத்தில் பொய்கள் இருந்ததாகவும் ஆனால் இந்தக் கூற்றை நிரூபிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார். தொண்டமான் கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சராவர்.

28 ஆகஸ்ட் 2022 மறியல் போராட்டத்திற்குப் பிறகு சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிராக இ.தொ.கா. பிராந்தியத் தலைவர் ஆத்திரமூட்டல் செய்த போது

'குற்றம் சாட்டப்பட்டு பதினெட்டு மாதங்களுக்குப் பிறகும், இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்னும் விசாரணை இல்லை' என்ற கட்டுரை, ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களை சிக்கலுக்குள் தள்ளுவதற்கு இ.தொ.கா. மற்றும் பிற தொழிற்சங்கங்கள் ஆற்றிய பங்கை விளக்கியது. 'மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தும்' என்று கூறிக்கொண்டு வருமானப் பகிர்வு முறைக்கு தொண்டமான் வழங்கும் ஆதரவையும் அது அம்பலப்படுத்திய. உள்ளூர் இ.தொ.கா. தலைவரால் எந்த ஆதரவையும் திரட்ட முடியாமல் போனதோடு சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் தொழிற்சங்கத்தின் காட்டிக்கொடுப்பு வரலாற்றை சுட்டிக் காட்டியபோது அவர். பின்வாங்கினார்.

WSWS உடன் பேசிய ஒரு பாதிக்கப்பட்ட தொழிலாளி கூறியதாவது: 'நாங்கள் வேலைகள் இல்லாமல் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறோம். தற்போது உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக வாழ்வது மிகவும் சிரமமாக உள்ளது. நாங்கள் சாதாரண வேலை தேடி மற்ற தோட்டங்களுக்குச் செல்கிறோம், அங்கு மிகக் குறைந்த கூலிதான் கிடைக்கிறது. அதிகாலையில் சென்று இரவு திரும்புவோம். இதுவே நம் பிள்ளைகளுக்காக நாம் வழங்கக்கூடிய ஒரே வழி. எங்கள் வேலைகளை மீண்டும் பெறவும், சட்ட வழக்குகளைத் விலக்கிக்கொள்ள வைக்கவும் தொழிலாளர்கள் எங்களை ஆதரிக்க வேண்டும்.

வேலை நீக்கம் செய்யப்பட்ட மற்றொரு தொழிலாளியின் கணவர், இ.தொ.கா. உள்ளூர் தலைவர் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் கண்டு WSWS நிருபர்களிடம் பேசினார்.

“இந்த நபரை எனக்கு நன்றாக தெரியும். நான் அவரிடம் சென்று, 'அவர்கள் [சோ.ச.க.], முதல் வாரத்தில் இருந்தே எங்கள் தோட்டத்திற்கு வந்து, வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்தவர்கள். தொழிலாளர்களைப் பாதுகாக்க நீங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும், ஆனால் நீங்கள் எதுவும் செய்யவில்லை. உங்களின் இ.தொ.கா. தலைவர்களில் ஒருவரான பரத் அருள்சாமி நேரடியாக ஓல்டன் தோட்ட முகாமையாளரை ஆதரித்தார், என்று கூறி, சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று நான் அவரை எச்சரித்தேன்,” என அவர் தெரிவித்தார்.

28 ஆகஸ்ட் 2022 அன்று மஸ்கெலியா, சாமிமலையில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒரு தனியார் பேருந்து ஊழியர் ஒரு பதாகையை பிடித்துள்ளார்

ஃபெயர்லான் தோட்டத்தைச் சேர்ந்த ஆர். கோபிராஜ் கூறியதாவது: “ஓல்டன் தொழிலாளர்களுக்கு ஆதரவான உங்கள் போராட்டத்தை ஃபேஸ்புக் மூலம் பார்த்தேன், அதை எனது பல நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். ஓல்டன் பாதிக்கப்பட்டவர்களையோ அல்லது வேறு தோட்டத் தொழிலாளர்களையோ பாதுகாக்க தொழிற்சங்கங்கள் எதுவும் செய்யவில்லை. உங்கள் கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.”

கோபிராஜ், உலக சோசலிச வலைத் தளத்தையும் “ஜனநயாகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் மாநாட்டிற்கு' விடுத்து சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்ட அறிக்கையையும் வாசித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்கள் 'தலைமையற்றவர்கள்' என்று அவர் மேலும் கூறினார்: 'இ.தொ.கா., தொ.தே.ச. மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் தோட்ட நிர்வாகத்திற்கும் தோட்டக் கம்பனிகளுக்கும் ஆதரவளிக்கின்றன. அவர்கள் தொழிலாளர் உரிமைகளுக்காக போராடவில்லை.

'தொழிலாளர்களுக்காக சேவையாற்றுவதற்கு தொழிலாளர்கள் நேர்மையான தொழிற்சங்கங்களை நிறுவ வேண்டும் என்று நான் முன்பு நினைத்தேன், ஆனால் உங்களுடன் கலந்துரையாடிய பிறகு, தொழிற்சங்கங்கள் எவ்வாறு நிர்வாகத்தின் நேரடி கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன என்பதை நான் புரிந்துகொள்கிறேன்,' என்று அவர் கூறினார்.

Loading