மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
நீதிமன்றம் நியமித்த கண்காணிப்பாளர் குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தியோகப்பூர்வமற்ற கணக்கின்படி, மாக் ட்ரக்ஸ் ஆலைத் தொழிலாளியும் ஐக்கிய வாகனத்துறைத் தொழிலாளர் சங்கத் (UAW) தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சோசலிச வேட்பாளருமான வில் லெஹ்மன், எண்ணப்பட்ட 103,495 வாக்குகளில் 4,777 வாக்குகள் அல்லது கிட்டத்தட்ட 5 சதவீத வாக்குகள் பெற்றார்.
அமெரிக்கா முழுவதும் சாமானிய தொழிலாளர்களிடையே லெஹ்மன் பெற்றுள்ள பரந்த ஆதரவு, அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் அரசியல் தீவிரமயப்படலைப் பிரதிபலிக்கிறது. அமெரிக்காவில் தொழிலாளர்கள் விடாப்பிடியாக சோசலிச விரோதம் கொண்டவர்கள் என்ற கட்டுக்கதையை இந்த வாக்குகள் சிதறடிகின்றன.
வில் லெஹ்மன் ஒரு சர்வதேசியவாத சோசலிஸ்டாகவும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணியின் ஆதரவாளராகவும் போட்டியிட்டார். சோசலிச சமத்துவக் கட்சி (SEP) கொள்கைகளை அவர் ஆதரித்ததில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. பெருநிறுவன-சார்பு UAW அதிகாரத்துவத்தைக் கலைத்து ஒழிக்கவும், அதிகாரத்தைக் சாமானிய தொழிலாளர்களுக்குக் கைமாற்றவும் அவர் அழைப்பு விடுத்தார். இந்த முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான அவர் எதிர்ப்பைத் தெளிவாக எடுத்துக் காட்டிய லெஹ்மன், வாகனத் தொழில்துறை மீதான பெருநிறுவன தனியுடைமையை முடிவுக்குக் கொண்டு வரக் கோரினார்.
வாகனத் துறைத் தொழிலாளர்களில் இருந்து அன்னியப்படாமல், லெஹ்மனின் அரசியல் நம்பிக்கைகளும் போர்க்குணமும் அமெரிக்கா முழுவதும் உள்ள UAW உள்ளூர் கிளை தொழிலாளர்களிடையே அவருக்கு பரந்த ஆதரவைப் பெற்று தந்தது. கென்டக்கி, டென்னஸி, ஓஹியோ, அயோவா, மிசோரி மற்றும் இதுபோன்ற இன்னும் பல மாநிலங்களில் வழமையாக வலதுசாரியாக சித்தரிக்கப்படும் தொழிலாளர்கள் உள்ள ஆலைகளில், அவர் 4 முதல் 8 சதவீத வாக்குகளைப் பெற்றார். தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஐந்து வேட்பாளர்களில் ஒருவரான லெஹ்மன் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஆலைகளில் குறைந்தபட்சம் 10 சதவீத வாக்குகளைக் கூட பெற்றார்.
பென்சில்வேனியாவில் அவர் பணிபுரியும் ஆலையில், லெஹ்மன் கிட்டத்தட்ட 20 சதவீத வாக்குகள் ஜெயித்தார்.
லெஹ்மனுக்கு அளிக்கப்பட்ட இந்த 4,777 வாக்குகள், வேட்பாளராக அவருக்கான ஆதரவின் முழுமையான மற்றும் துல்லியமான அளவீடு இல்லை. இறுதியில் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், வாக்குப்பதிவைப் பாரியளவில் ஒடுக்கும் செயல்பாடு மூலமாக UAW சங்க அதிகாரத்துவம் தேர்தலில் மோசடி செய்தது என்பது மிகவும் அப்பட்டமாக உள்ளது.
தேர்தலில் பங்கேற்க தகுதியுடைய UAW சங்க உறுப்பினர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே வாக்களித்து இருந்தனர். UAW கண்காணிப்பாளர்கள் குழு தகவல்படி, 1 மில்லியனுக்கும் அதிகமான மொத்த உறுப்பினர்களில், வெறும் 100,000 வாக்குகளே பெறப்பட்டு எண்ணப்பட்டன. அதிகாரத்துவமும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும் கூறுவது போல, இந்த மோசமான வாக்குப்பதிவு தொழிலாளர்களின் 'அலட்சியத்தால்' ஏற்பட்டதில்லை, மாறாக UAW உறுப்பினர்களில் கணிசமான பிரிவினர் தேர்தல் நடப்பதே அறிந்திருக்கவில்லை. பத்தாயிரக் கணக்கான UAW உறுப்பினர்கள், அனேகமாக நூறாயிரக் கணக்கானவர்களுக்கும் கூட, வாக்குச் சீட்டு வழங்கப்படவில்லை.
வெஸ்ட் கோஸ்ட் கல்வித் துறைத் தொழிலாளர்கள் மத்தியில் பதிவான வாக்குகளின் மொத்த எண்ணிக்கை, வாக்குப்பதிவு ஒடுக்கப்பட்டதை மிகவும் பளிச்சிடும் வகையில் எடுத்துக்காட்டுகிறது:
- கலிஃபோர்னியா மாநில பல்கலைக்கழக அமைப்பில், UAW உள்ளூர் கிளை 4123 இன் 11,000 உறுப்பினர்களிடம் இருந்து, வெறும் 29 வாக்குகளே திரும்ப வந்தன. இதன் அர்த்தம், உள்ளூர் கிளை 4123 இன் உறுப்பினர்களில் வெறும் 0.26 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
- 9,000 உறுப்பினர்களைக் கொண்ட வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் உள்ளூர் கிளை 4121 இல், வெறும் 72 வாக்குகளே வந்தன, இது 0.8 சதவீத வாக்குப்பதிவாகும்.
- கலிபோர்னியா பல்கலைக்கழக அமைப்பில், உள்ளூர் கிளை 5810இல் வெறும் 328 வாக்குகளே வந்தன, உள்ளூர் கிளை 2865 இல் 921 வாக்குகளே வந்தன. கலிபோர்னியா பல்கலைக்கழக அமைப்பு முழுவதும் தற்போது 48,000 UAW உறுப்பினர்கள் நான்காவது வாரமாக வேலைநிறுத்தத்தில் நுழைந்துள்ளனர், இதன் அர்த்தம் வெறும் 3 சதவீதத்திற்கும் குறைவாகவே வாக்குபதிவு ஆகி உள்ளது. பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்கள் துணிச்சலாக சுய-தியாக உணர்வோடு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதற்கு மத்தியில் அவர்கள் 'அலட்சியத்தால்' வாக்களிக்கவில்லை என்பது வெறுமனே நம்பக்கூடியதாக இல்லை.
மற்ற இடங்களில் உள்ள நூற்றுக்கணக்கான UAW உள்ளூர் கிளைகளில், வாக்குப்பதிவு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தன. இத்தகைய நிலைமைகளின் கீழ், சாலிடாரிட்டி ஹவுஸ் அதிகாரத்துவம் வேண்டுமென்றே வாக்களிப்பை நசுக்கி, சாமானியத் தொழிலாளர்கள் ஒரு நியாயமான தேர்தலில் பங்கேற்பதற்கான அவர்களின் ஜனநாயக உரிமைகளை மீறியது என்பது மட்டுமே ஒரே நம்பத் தகுந்த முடிவாக உள்ளது.
ஊழல்பீடித்த தொழிற்சங்க எந்திரம், தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போர்க்குண உணர்வுக்கு அஞ்சி, அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் பெரும்பிரயத்தன முயற்சியில், முடிந்த வரை தேர்தல்கள் குறித்து தொழிலாளர்களை இருட்டில் வைக்க செயல்பட்டது. அதிகாரத்துவமும் —அதற்குப் பின்னால் உள்ள சக்தி வாய்ந்த பெருநிறுவன மற்றும் அரசியல் நலன்களும்— இந்தப் போட்டியைத் தங்கள் விருப்ப வேட்பாளர்களான தற்போதைய ஜனாதிபதி ரே கார்ரி மற்றும் சாலிடாரிட்டி ஹவுஸ் எந்திரத்தின் ஒரு நீண்டகால உறுப்பினரும் UAW இன் சர்வதேச பிரதிநிதியுமான ஷான் ஃபைன் ஆகியோருக்குள் கட்டுப்படுத்தி வைக்க கருதியது.
ஆனால் அவ்விரு வேட்பாளர்களாலும் கணிசமான ஆதரவைத் திரட்ட முடியவில்லை, அவ்விருவரும் வாக்களிக்க தகுதி வாய்ந்த மொத்த உறுப்பினர்களில் தனித்தனியாக 40,000 வாக்குகளுக்கும் குறைவாகவோ அல்லது 4 சதவீதத்திற்கும் குறைவாகவோ பெற்றுள்ளனர்.
சாலிடாரிட்டி ஹவுஸின் இரண்டு வேட்பாளர்கள், ரே கார்ரி மற்றும் ஷான் ஃபைனுக்கான நிஜமான ஆதரவைக் கணக்கிடுகையில், அவர்களுக்கான வாக்குகளில் கணிசமான பகுதி UAW இல் பணிபுரியும் ஆயிரக்கணக்கான அதிகாரத்துவவாதிகளால் அளிக்கப்பட்டன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த தனிச்சலுகை பெற்ற அடுக்குகளின் உறுப்பினர்கள் அவர்களுக்கான வாக்குச்சீட்டுக்களைப் பெற்று வாக்குச் செலுத்துவதை உறுதிப்படுத்த, சாலிடாரிட்டி ஹவுஸ், LUIS எனப்படும் உள்அலுவலக தகவல் தொடர்பு முறையைப் பயன்படுத்தியது.
தேர்தல்கள் முழுவதிலும் தொழிலாளர்களின் உரிமைகளைத் தடையின்றி நசுக்க அதிகாரத்துவத்தை அனுமதித்துள்ள UAW கண்காணிப்புக் குழு குறிப்பிடுகையில், கார்ரி மற்றும் ஃபைன் வரும் ஜனவரியில் இரண்டாம் சுற்று தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றது. ஆனால் வெறும் இவ்விரு வேட்பாளர்களுக்கு இடையிலான எந்தவொரு போட்டியும் முற்றிலும் நியாயமற்றதாக இருக்கும்.
சமீபத்திய UAW அரசியலமைப்பு கூட்டத்தில் நிறுத்தப்பட்ட ஐந்து வேட்பாளர்களும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டுமென லெஹ்மன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கோரினார். “இந்தச் சூழலில்,” லெஹ்மன் கூறினார், “கார்ரி மற்றும் ஃபைனுக்கு இடையிலான 'இரண்டாம் சுற்று தேர்தல்' கருத்தை ஏற்றுக் கொள்வது தொழிலாளர்களின் உரிமைக்களைக் கேலிக் கூத்தாக்கும். இதனால் தான், இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் எல்லா வேட்பாளர்களும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்கிறேன். ஆனால் இந்த முறை மொத்த உறுப்பினர்களுக்கும் இந்தத் தேர்தல் குறித்து தகவல் வழங்கப்பட்டு, அவர்கள் அதில் வாக்களிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.”
இரண்டாவது சுற்றுத் தேர்தலை கார்ரி மற்றும் ஃபைனுடன் கட்டுப்படுத்தும் சாலிடாரிட்டி ஹவுஸின் திட்டங்களுக்கு எதிராக லெஹ்மன் பிரச்சாரக் குழு எதிர்ப்பை அணித்திரட்டும். 90 சதவீத தொழிற்சங்க உறுப்பினர்களை வாக்களிக்கும் செயல்முறையில் பங்கேற்க விடாமல் தடுத்துள்ள UAW, தலைவர் பதவிக்கான இரண்டாம் சுற்று தேர்தலில் மற்ற மூன்று வேட்பாளர்களான வில் லெஹ்மன், பில் கெல்லெர் மற்றும் மார்க் கிப்சனை ஒதுக்கி வைக்க திட்டமிடுகிறது.
வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக UAW மற்றும் UAW கண்காணிப்புக் குழுவுக்கு எதிராக லெஹ்மன் தாக்கல் செய்த வழக்குக்கு, இந்த மிகவும் குறைவான வாக்குப்பதிவு சாட்சியம் வழங்குகிறது. லெஹ்மன் அந்தச் சட்டவழக்கில், வாக்களிப்பதற்கான காலக்கெடுவை 30 நாட்களுக்கு நீடிக்க வேண்டுமென்றும், தேர்தல்கள் நடப்பது குறித்து எல்லா UAW உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்துவதை உறுதிப்படுத்த நிஜமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரி இருந்தார்.
UAW எந்திரம் மற்றும் இந்தக் கண்காணிப்புக் குழு, அத்துடன் பைடென் நிர்வாகத்தின் தொழிலாளர் துறை, அனைத்தும் லெஹ்மனின் வழக்குக்கு எதிராக அணிவகுத்தன. தொழிலாளர்கள் உரிமை பறிக்கப்பட்டு வருவதாக வாதிட்ட லெஹ்மனின் வாதங்களுக்குப் போதுமான பதில் அளிக்காமல், அவர்கள் அதற்குப் பதிலாக லெஹ்மனுக்கு ஒரு வாக்குச்சீட்டு கிடைத்துள்ளதால் அவர் தரப்பு வழக்கு 'நிலைக்காது', அந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்ற வாதத்திற்குப் பின்னால் நின்றார்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதி, லெஹ்மன் வாதங்களின் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்டு, 'உறுப்பினர்களிடமிருந்து குறைவான விடையிறுப்பு இருந்தால், அது வாக்காளர்களின் உண்மையான விருப்பத்தைப் பிரதிநிதித்துவம் செய்யாத தேர்தல் முடிவுகளைக் குறிக்கலாம்' என்று எழுதினார். இருப்பினும் UAW எந்திரத்தின் பக்கம் சாய்ந்த அந்த நீதிபதி, தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் ஆபத்தில் இருக்கும் உண்மையை அலட்சியப்படுத்தும் விதத்தில் ஓர் எரிச்சலூட்டும் முடிவாக, அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
விட்டுக்கொடுப்புகளுக்கு முடிவு கட்டவும் மற்றும் இந்தப் பிற்போக்குத்தனமான தொழிற்சங்க எந்திரத்தின் சர்வாதிகார பிடியில் இருந்து உடைத்துக் கொள்ளவும் விரும்பும், பரந்த அடித்தளத்திலான ஒரு கிளர்ச்சிக்கு லெஹ்மனின் பிரச்சாரம் ஏற்கனவே குரல் கொடுத்துள்ளது. முதலாளித்துவ-சார்பு பெருநிறுவன தொழிற்சங்கத்திடம் இருந்து தொழிலாளர்களுக்கு அதிகாரத்தைக் கைமாற்றும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணிக்கான பணிகளை விரிவாக்க இது ஒரு பலமான தூண்டுதலை வழங்கி உள்ளது.
மேலும் படிக்க
- வாக்குப்பதிவு ஒடுக்கப்பட்ட போதும், சோசலிச வேட்பாளர் வில் லெஹ்மன் UAW தேர்தலில் ஆயிரக் கணக்கான வாக்குகள் ஜெயிப்பதை நோக்கி முன்னேறி வருகிறார்
- வில் லெஹ்மனின் பிரச்சாரம் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது
- நீதித்துறை கேலிக்கூத்து: பெடரல் நீதிபதி UAW எந்திரத்தின் பக்கம் நிற்பதோடு வாக்குச் சீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிப்பதற்கான வில் லெஹ்மனின் கோரிக்கையை மறுக்கிறார்