முன்னோக்கு

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் மத்திய கிழக்கு முழுவதும் பிராந்திய அளவிலான போர் விரிவாக்கத்தை இஸ்ரேல் தயார்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளில் சனிக்கிழமை நிகழ்ந்த ஏவுகணைத் தாக்குதலில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலின் ஆக்ரோஷமான பதிலடிக்குப் பிறகு, முழு மத்திய கிழக்கும் போரின் விளிம்பில் தத்தளிக்கிறது. இஸ்ரேல் தெற்கு லெபனான் மீது தாக்குதல் நடத்த உள்ளது. இது பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவால் வன்முறைப் பகுதி என்று வர்ணிக்கப்பட்டுவரும் தெற்கு லெபனான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. ஈரானிய ஆதரவு ஹிஸ்புல்லா போராளிகளை குறிவைத்து, வரும் மணிநேரம் அல்லது நாட்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளது.

ஒரு கால்பந்து மைதானத்தில் ராக்கெட் தாக்குதலில் 12 சிறுவர்கள் மற்றும் பதின்வயதினர் கொல்லப்பட்ட இடத்திற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விஜயம் செய்தபோது, ட்ரூஸ் சிறுபான்மையின மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர், இஸ்ரேலிய-நிர்வாகப் பகுதிக்குள் இருக்கும் கோலன் மலைப்பகுதியிலுள்ள மஜ்தல் ஷாம்ஸ் கிராமம், Monday, July 29, 2024.  [AP Photo/Leo Correa]

கடந்த ஒன்பது மாதங்களில் சுமார் 186,000 பாலஸ்தீனியர்களை படுகொலை செய்து, இரத்தத்தில் குளித்துவரும் நெதன்யாகுவின் இனப்படுகொலை ஆட்சியானது, கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இறப்புகளுக்கு, ஈரானில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை பாவித்தே ஹிஸ்புல்லா தாக்குதல்களை நடத்தியது என்று கூறுகிறது. அதே நேரத்தில் இந்த தாக்குதலை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு ஏவுகணையே நடத்தின என்று லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியுள்ளது.

எதுவாக இருந்தாலும், இரண்டு விஷயங்கள் ஏற்கனவே தெளிவாக உள்ளன. அதி தீவிர வலதுசாரி இஸ்ரேலிய ஆட்சி, நீண்ட காலமாக காஸாவில் இடம்பெற்றுவரும் போரை, அதன் வடக்கு போர் முனையில் அதிகரிக்க ஒரு சாக்குப்போக்கை தேடி வருகிறது. இந்த பொறுப்பற்ற அணுகுமுறைக்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழு ஆதரவிலிருந்து அது பயனடைவதுடன், மத்திய கிழக்கின் முழுப் பிராந்தியத்தையும் ஒரு இரத்தத்திற்குள் மூழ்கடிப்பதற்கு அச்சுறுத்தி வருகிறது.

கடந்த வாரம் அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் கலந்துகொண்ட நெதன்யாகு உற்சாகமாக, அங்கிருந்த இரு கட்சிகளின் பார்வையாளர்களுக்கு தனது நோக்கங்களைப் பற்றி எந்த ரகசியத்தையும் மறைக்காமல் தெரிவித்தார்.

இஸ்ரேல் ஹமாஸை எதிர்த்துப் போரிடும்போது, ​​நாங்கள் ஈரானுடன் போரிடுகிறோம். நாங்கள் ஹெஸ்பொல்லாவுடன் போரிடும்போது, நாங்கள் ஈரானுடன் போரிடுகிறோம். நாங்கள் ஹவுதிகளை எதிர்த்துப் போரிடும்போது, ​​நாங்கள் ஈரானுடன் போரிடுகிறோம். நாங்கள் ஈரானுடன் போரிடும்போது, ​​அமெரிக்காவின் மிகவும் தீவிரமான மற்றும் கொலைகார எதிரியுடன் போரிடுகிறோம் …

நீங்கள் ஒரு விஷயத்தை, இந்த பேச்சைப் பற்றிய ஒரு விஷயத்தை நினைவில் வைத்திருந்தால், இதை நினைவில் கொள்ளுங்கள்: எங்கள் எதிரிகள் உங்கள் எதிரிகள், எங்கள் சண்டை உங்களது சண்டை, எங்கள் வெற்றி உங்களது வெற்றியாக இருக்கும்.

பொருத்தமான நேரத்தில் போரை விரிவாக்குவதற்கான அமெரிக்க ஒப்புதலைப் பெறுவதற்காக, ஜனாதிபதி பைடென் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுடன் நெதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார். ஈரானுடனான பிராந்திய அளவிலான மோதலில், இந்த இருவரும் இஸ்ரேலுக்கு தங்கள் நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்தனர். இஸ்ரேலிய பிரதமரை சந்தித்ததைத் தொடர்ந்து ஹாரிஸ் ஊடகங்களுக்கு தனது அறிக்கையை பின்வருமாறு வெளியிட்டார்: “ஆகவே, நான் பிரதமர் நெதன்யாகுவுடன் ஒரு வெளிப்படையான மற்றும் ஆக்கபூர்வமான சந்திப்பைக் மேற்கொண்டிருந்தேன். ஈரான் மற்றும் அதற்கு ஆதரவுடைய போராளிகளான ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா உள்ளிட்ட குழுக்களிடமிருந்து இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை நான் எப்போதும் உறுதி செய்வேன் என்று அவரிடம் கூறினேன்.”

அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் தாக்குதல் நாயான இஸ்ரேலும், ஏற்கனவே பதட்டங்களுடன் காணப்படும் ஒரு பிராந்தியத்தில் பொறுப்பற்ற முறையில் போரை அதிகரித்து வருகின்றன. நெதன்யாகு அரசாங்கத்தின் போர்வெறிமிக்க அறிக்கைகளுக்கு பதிலளித்த துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலுக்குள் 'நுழையப் போவதாக' அச்சுறுத்தினார்.

லெபனானில் ஒரு போர் தவிர்க்க முடியாமல் அண்டை நாடான சிரியாவை சீர்குலைக்கும் என்று எர்டோகனும் துருக்கிய ஆளும் வர்க்கமும் அஞ்சுகின்றன. சிரியாவில், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அமெரிக்காவினால்-கட்டமைக்கப்பட்டுவரும் உள்நாட்டுப் போர், அந்நாட்டை சீரழித்துள்ளது. சிரியாவின் அசாத் ஆட்சியை ஈரானிய படைகள் ஆதரித்து வருகிறது. துருக்கி அதன் தெற்கு எல்லையில் குர்திஷ் படைகளை எதிர்த்துப் போரிட வடக்கில் இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், டமாஸ்கஸில் இருந்த ஈரான் துணைத் தூதரகத்தின் மீது, இஸ்ரேல் ஆத்திரமூட்டும் வகையில் குண்டுவீசி ஏழு ஈரானிய புரட்சிகர காவலர் படை உறுப்பினர்களைக் கொன்றதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஈரான் தனது முதல் நேரடி தாக்குதலை நடத்தியது. அமெரிக்கா மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட பிராந்திய நட்பு நாடுகளின் ஆதரவுடன் ஏவப்பட்ட பெரும்பாலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இஸ்ரேலால் இடைமறிக்க முடிந்தது.

இந்த நிலைமைகளின் கீழ் லெபனானில் ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையை கட்டவிழ்த்து விடுவதற்கு பைடென் நிர்வாகமும் நெதன்யாகுவும் தயார்நிலைக்கு காரணமாக இருக்கக்கூடிய ஒரே விளக்கம் என்னவென்றால், அவர்கள் இருவரும் ஒரு முழுமையான போரை விரும்புகிறார்கள் என்பதாகும். கடந்த அக்டோபரில் காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலையை வாஷிங்டன் முழுமையாக அங்கீகரித்தது. ஏனெனில் பைடென், ஹாரிஸ் கம்பெனி, ஈரானைக் குறிவைக்கும் பிராந்தியப் போருக்கான தயாரிப்புகளின் முக்கிய அங்கமாக இனப்படுகொலையை கருதி வருகின்றனர்.

அவர்கள் பிராந்தியத்தில் 15,000 பேர் மற்றும் டசின் கணக்கான போர் விமானங்களுடன் பாரிய இரண்டு விமானம் தாங்கி கப்பலுடன் தாக்குதல் குழுக்களை அப்பகுதிக்கு அனுப்பினர். கொலைகார இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு அவர்கள் 2,000ம் பவுண்டுகள் எடைகொண்ட 14,000ம் வெடிகுண்டுகளை வழங்கியுள்ளனர். காஸாவின் மருத்துவமனைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற முக்கியமான உள்கட்டமைப்புகளை நாசமாக்க அவர்கள் உதவி வருகிறார்கள். அத்தோடு, அமெரிக்க ஏகாதிபத்தியமானது, இந்த குற்றங்களைப் போலவே கொடூரமாக, ஆற்றல் வளங்கள் நிறைந்த முழு மத்திய கிழக்கிலுள்ள பிராந்தியத்தின் மீது, அதன் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, என்ன விலை கொடுத்தும் பேரழிவிற்கு தயாராகி வருகிறது.

இஸ்ரேல் தனது இரத்தக்களரி தாக்குதலைத் தொடங்கிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 9, 2023 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வெளியிட்ட  அதன் அறிக்கையில் பின்வருமாறு எச்சரித்தது:

ஏகாதிபத்திய தலைவர்களும் அவர்களது ஊடக ஊதுகுழல்களும் 'பயங்கரவாதத்தை' அல்ல, ஆனால் தினமும் இஸ்ரேலால் நடத்தப்பட்டுவரும் ஆக்கிரமிப்புக்கும், பயங்கரங்களுக்கும் எதிரான பாரிய எதிர்ப்புக்களையே அவர்கள் எதிர்த்து வருகின்றனர். அவர்கள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு ஆதரவளிப்பதுக்கும், ஈரான், சிரியா மற்றும் லெபனானுக்கு எதிரான பிராந்திய போரை விரிவுபடுத்துவதுக்கும் அவர்கள் அவ்வாறு செய்வார்கள்.

மத்திய கிழக்கு வழியாக யுத்தத்தை நடத்துவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தீர்மானிப்பதற்கான காரணி, அதன் விரைவான பொருளாதார வீழ்ச்சியில் வேரூன்றியுள்ளது. இது, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தடையின்றி போரில் ஈடுபடும்படி அதனை  கட்டாயப்படுத்தி வருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியமானது, சோவியத் யூனியனின் ஸ்ராலினிசக் கலைப்பைக் கைப்பற்றிக்கொண்டு, அதன் ஒப்பீட்டளவில் பொருளாதார மேலாதிக்கத்தை ஈடுசெய்ய முயற்சிப்பதன் மூலம், அதன் ஒப்பிடமுடியாத இராணுவ சக்தியை தொடர்ச்சியான பேரழிவு மோதல்களில் பயன்படுத்துவதன் மூலம், ஈராக்கில் முதல் வளைகுடா போரில் தொடங்கி, செர்பியா, ஆப்கானிஸ்தான், இரண்டாவது ஈராக் போர், லிபியா மற்றும் சிரியாவில் நடந்துகொண்டிருக்கும் உள்நாட்டுப் போர் வழியாக போரைத் தொடர்கிறது. இந்த போர்கள் மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய ஆசியா முழுவதும் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்று தள்ளியுள்ளன. மேலும் மில்லியன் கணக்கானவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியுள்ளன.

ஆனால், இந்தப் போர்கள் அவற்றின் திட்டமிட்ட இலக்கை அடையத் தவறிவிட்டன. அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து ஆழமடைந்து வருகிறது. கடன் நிலைகள் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் என்பன, உலக இராணுவ சாகசங்களுக்கு நிதியளிப்பதற்கான பாரிய செலவினங்களுடனும், பில்லியனர்களை செறிவூட்டலுடனும் இணைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஆளும் வர்க்கம், அதற்கு மிகவும் விரோதமான மக்கள் மீது ஏகாதிபத்திய யுத்தத்தின் நிகழ்ச்சி நிரலை திணிப்பதற்கு, வெளிப்படையாக சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நாடுகிறது.

உலக முதலாளித்துவத்தின் அதே சிக்கலான நெருக்கடியால் உந்தப்பட்டு, ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் உள்ள பிற ஏகாதிபத்திய சக்திகள் மீண்டும் உலகை மறுபங்கீடு செய்வதற்கு, தங்கள் சொந்த நலன்களைத் தொடர்வதற்கு, தமது கோரப் பற்களை ஆயுதபாணியாக்கியுள்ளன., இதனை உலகப் போரின் மூலம் இவை சாதிக்க திட்டமிட்டுள்ளன.

இந்த உலகளாவிய மோதலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மத்திய கிழக்கு ஒரு போர் முனையாகும். அடுத்த போர் முனையாக, உக்ரேன் மற்றும் கிழக்கு ஐரோப்பா இருக்கிறது. அமெரிக்க-நேட்டோ அச்சு, ரஷ்யாவிற்கு எதிராக, அந்த நாட்டை ஒரு அரைக் காலனித்துவ நிலைக்கு அடிபணியச் செய்வதற்காக, அதன் இயற்கை வளங்களையும் ஆசிய-பசிபிக் பகுதிகளையும் கொள்ளையடிக்கும் இலக்குடன் போரை நடத்துகிறது. வாஷிங்டனின் முக்கிய பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் போட்டியாளராக தோன்றுவதைத் தடுக்க, வாஷிங்டனின் பிராந்திய நட்பு நாடுகளும், சீனாவுடனான போருக்கான தளத்தை அமைத்து வருகின்றன.

ஈரானுடனான போருக்கான தனது திட்டத்தை நெதன்யாகு அமெரிக்க காங்கிரசில் முன்வைத்தபோது, ​​அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கம், அதனை தடுத்து நிறுத்துவதற்கான ஒரே பாதையை, காங்கிரஸ் கட்டிடத்துக்கு முன்பாக இடம்பெற்ற அதன் பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சி முன் வைத்தது. உலகப் போரை நோக்கிய ஏகாதிபத்தியவாதிகளைத் தூண்டும் அதே முதலாளித்துவ முரண்பாடுகள், சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை தீவிரப்படுத்தி வருவதுடன், புரட்சிகர தாக்கங்களுடன் அவர்களை போராட்டங்களுக்குள் இட்டுச் செல்கின்றன.

இந்த செயல்முறைக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் பேரணியானது, நனவான வெளிப்பாட்டைக் கொடுத்ததுடன், பின்வரும் கொள்கைகளில் ஒழுங்கமைத்தது:

  • போருக்கான முக்கிய காரணம் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்பு முறையாகும். இராட்சத நிறுவனங்களின் உலகளாவிய நிதி நலன்களும், உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் இடைவிடாத உந்துதலும் இதில் அடங்கியுள்ளது.
  • போருக்கு எதிரான போராட்டத்திற்கு அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மகத்தான அதிகாரத்தை அணிதிரட்டுவதுக்கு, ஏகாதிபத்திய போரின் ஆளும் வர்க்கக் கட்சிகளான ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரிடமிருந்து அரசியல் சுயாதீனம் தேவைப்படுகிறது.
  • இனப்படுகொலைக்கும், போருக்கும் எதிரான இயக்கம் சர்வதேச இயக்கமாக இருக்க வேண்டும். தொழிலாளர்களை, அவர்களின் பொதுவான வர்க்க நலன்களின் அடிப்படையில் உலகளவில் ஐக்கியப்படுத்த வேண்டும்.

மத்திய கிழக்கில் முன்னேறிவரும் சமீபத்திய நிலைமைகள், இந்த கொள்கைகளில் தொழிலாள வர்க்கம் தலைமையிலான உலகளாவிய போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் பிரமாண்டமான அவசரத்தை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஏகாதிபத்திய போருக்கு சோசலிச எதிர்ப்பை உருவாக்குவதற்கு, இன்று முடிவெடுக்க ஒப்புக் கொண்ட அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்துகொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading