இலங்கையை விட்டு பல மருத்துவர்கள் வெளியேறுவதால் பொது சுகாதார நெருக்கடி ஆழமடைகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் அதன் சர்வதேச நாணய நிதிய சிக்கன வேலைத்திட்டத்தை வெகுஜனங்கள் மீது திணிப்பதால் இலங்கையின் பொது சுகாதார சேவை கடந்த வருடத்தில் கடுமையாக சீரழிந்துள்ளது. இதன் பிரதிபலனாக ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர்.

உண்மையில், 1,700 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உட்பட தீவின் மருத்துவ நிபுணர்களில் கிட்டத்தட்ட 10 சதவீதத்தினர், கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதுடன் வைத்தியர்கள் பற்றாக்குறை நெருக்கடி மிகவும் மோசமடைய உள்ளது.

7 ஏப்ரல் 2022 வியாழன், இலங்கையின் கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனைக்கு வெளியே இலங்கை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது. [AP Photo/Eranga Jayawardena] [AP Photo/Eranga Jayawardena]

ஜூன் 21 அன்று, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) 5,000 மருத்துவர்கள் அல்லது அரசாங்க சுகாதார நிறுவனங்களில் உள்ள 20,000 மருத்துவர்களில் 25 சதவீதம் பேர் வெளிநாட்டில் வேலை தேடுவதற்குத் தேவையான பரீட்சைகளை எழுதியுள்ளனர் என்று எச்சரித்தது. அவசரகால மருத்துவம், மயக்க மருந்து, குழந்தை மருத்துவம், மனநல மருத்துவம், நரம்பியல் மற்றும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களும் புலம்பெயர்ந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இதில் மொத்தம் 400 பேர் புலம்பெயர்ந்துள்ளனர்.

மருத்துவர்களின் புலம்பெயர்வு நாட்டின் சுகாதாரத் துறைக்கு 'பாரிய பிரச்சினையாக' மாறும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இது ஏற்கனவே கொழும்பில் அமைந்துள்ள இலங்கையின் தேசிய மருத்துவமனை (NHSL) மற்றும் கிராமப்புற மருத்துவமனை அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இதனால் நோயாளிகள் 'சில நேரங்களில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து வந்து தங்கள் அறுவை சிகிச்சைகளை செய்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.'

கடந்த ஆண்டு மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையால் இரண்டு முக்கிய மருத்துவமனை பிரிவுகள் முழுமையாக மூடப்பட்டன. இவற்றில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ பிரிவும் உள்ளடங்கும். ஏனெனில் இங்கு நான்கு சிறுவர் வைத்தியர்கள் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதுடன் வடமாகாணத்தில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை பிரிவுக்கு சத்திரசிகிச்சை நிபுணர் இல்லாத காரணத்தினால் மூடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் (NHS) சீரேஷ்ட அதிகாரியான 35 வயதான லஹிரு பிரபோத கமகே, ஜூன் 20 அன்று அல் ஜசீராவிடம் பேசிய போது, 'நான் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், பெரும் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது' எனவே வேறு வழியில்லாமல் நாட்டைவிட்டு வெளியேறினேன், என்றார். கமகே தனது அடிப்படை மாதாந்த சம்பளம் 64,000 ரூபாய் ($US213) என்றும், மேலதிக நேரத்தின் மூலம் சுமார் 220,000 ரூபாய் சம்பாதிக்க முடியும் என்றும், ஆனால் கடன்களைத் திருப்பிச் செலுத்திய பின்னர் பிற செலவுகளுக்கு சுமார் 20,000 ரூபாய் மட்டுமே மீதம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோய் நெருக்கடியை இலங்கை அரசாங்கம் எவ்வாறு வேண்டுமென்றே பயன்படுத்தி தனியார் துறைக்கு இலாபத்தை அதிகரிப்பதற்கான வழியைத் திறந்துவிட்டிருக்கிறது என்பதை கமகே விளக்கினார். அவரும் மற்றுமொரு மருத்துவரும் தொடர்புத் தடமறியும் செயலியை உருவாக்கி, இலங்கையின் கோவிட்-19 ஜனாதிபதி செயலணிக்கு விளக்கக்காட்சியை வழங்கினர்.

கமகே அல்ஜசீராவிடம் பேசும் போது, செயலணியின் உறுப்பினர் ஒருவர் தங்கள் செயலியைப் பற்றி சில கருத்துக்களை வெளியிட்டார், ஆனால் 'சில காலம் கழித்து, அந்த செயலி-சில தவறுகளுடன்- ஒரு தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாக நாங்கள் திடீரென்று கேள்விப்பட்டோம்.' வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இலங்கையில் பயிற்சி பெற்ற தாதிகளில் 30 முதல் 40 வீதமானவர்கள் புலம்பெயர்வதற்கு தீர்மானித்துள்ளதாக கடந்த வருடம் மார்ச் மாதம் ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். கடந்த இரண்டு வருடங்களில் 2,528 தாதியர்கள் தொழிலை விட்டு விலகியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் இந்த ஆண்டு பெப்ரவரியில் தெரிவித்திருந்தது.

அதிகரித்து வரும் ஊழியர் நெருக்கடியை ஒப்புக்கொண்ட போதிலும், அதனை மூடி மறைக்கும் முயற்சியில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசேல குணவர்தன, ஜூலை 1 அன்று டெயிலி மிரர் பத்திரிகையிடம் கருத்து தெரிவித்த போது, “கணிசமான எண்ணிக்கையிலான மருத்துவர்கள் சேவையில் உள்ள போதிலும் மேலும் பயிற்சியாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும், நாட்டை விட்டு வெளியேறும் நிபுணர்களின் முடிவு எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது” என்று கூறினார்.

கடந்த மே மாதம் (கற்கை) தாதியர் உத்தியோகஸ்தரான டி.ஐ.ஐ. அமரசிங்க, தகுதி பெற்ற தாதி உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை உட்பட இலங்கையில் தாதிமார் பல சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இந்த நிலைமை குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகமாக காணப்படுகின்றது. அங்கு சுகாதார வசதிகளில் பயிற்சி பெற்ற தொழிலறிஞர்கள் இல்லாததால் வேலைச்சுமை அதிகரிப்பதுடன் நோயாளிகளின் பராமரிப்பையும் பாதிக்கின்றது, என்றார்.

2020 டிசம்பரில், உலக சுகாதார அமைப்பின் பூகோள மூலோபாயத்தால் பரிந்துரைக்கப்பட்ட 10,000 பேருக்கு 44.5 பேர் என்ற விகிதாசார அடிப்படையில் ஒப்பிடும்போது. இலங்கையில் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் மருத்துவிச்சிகள் 37 பேர்தான் உள்ளனர், என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கிராமப்புறங்களில் பெரும்பாலும் தாதியர்-நோயாளி விகிதங்கள் உலக சுகாதார அமைப்பின் தரத்தை விட மிகக் குறைவாக இருப்பதாக சுகாதார அமைச்சின் அண்மைய புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

20 ஜனவரி 2023 அன்று கண்டி வைத்தியசாலைக்கு வெளியே வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது.

மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக அரசு மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகள் இல்லாத மருந்துகளை தனியார் மருந்தகங்களில் கணிசமான விலை கொடுத்து வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமை குறிப்பாக கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் அதிகமாக காணப்படுகின்றது. அங்கு நோயாளிகள் தனியார் மருந்தகங்களில் இருந்து மருந்து வாங்க அதிக விலை கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மே 3 அன்று, டெய்லி மிரர், குழந்தைகளுக்கும் வயது வந்தோருக்குமான பல அளவிலான சிறுநீர்க்குழாய் ஸ்டண்ட்கள் உட்பட, முக்கியமான மருத்துவப் பொருட்களில் குறிப்பிடத்தக்க பற்றாக்குறையைப் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது. மருந்து முகாமைத்துவ அமைப்பான ஸ்வேதாவிடமிருந்து இந்தத் தகவல் பெறப்பட்டிருந்தது. அமொக்ஸிசிலின் போன்ற பொதுவான மருந்துகளும் பற்றாக்குறையாக உள்ளன.

பிரதிப் பணிப்பாளர் நாயகம் (மருத்துவச் சேவைகள்) வைத்தியர் ஜி. விஜேசூரிய, தற்போதைய பற்றாக்குறையை ஒப்புக்கொண்டதுடன், சிக்கலைத் தணிக்க மாற்று சிகிச்சைகள் பயன்படுத்தப்படுவதாகக் கூறினார். சில மருந்துகளின் விநியோகம் 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ இந்த ஆண்டு மே மாதம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

விக்கிரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தால் கோரப்படும் செலவுக் குறைப்பு தாக்குதலை தீவிரப்படுத்துவதால், இலங்கையின் பொது சுகாதார அமைப்பு எதிர்கொள்ளும் நெருக்கடி மோசமடையும். வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் முதலீட்டாளர்களின் இலாபங்களை அதிகரிப்பதற்கும், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் உட்பட அரசுக்குச் சொந்தமான தொழிற்துறைகளை கொழும்பு அரசாங்கம் தனியார்மயமாக்குகிறது.

1990 இல் இலங்கையில் 44 தனியார் மருத்துவமனைகளே இருந்தன. இந்த எண்ணிக்கை 2013 இல் 145 ஆகவும், 2022 இறுதியில் 250 ஆகவும் உயர்ந்தது. குறித்த ஆண்டில் ஆறு புதிய முழுநேர தனியார் மருத்துவமனைகள் மொத்தமாக 5,602 படுக்கை எண்ணிக்கையுடன் உருவாகியுள்ளன.

மருத்துவப் பொருட்கள், மருந்துகள், ஆய்வகப் பரிசோதனைகள், வைத்தியர் கட்டணங்கள் ஆகியவற்றின் அதிகப்படியான மற்றும் அதிகரித்து வரும் செலவினங்களை சுட்டிக்காட்டிய 2023 ஆம் ஆண்டிற்கான மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நாட்டின் பொது மருத்துவமனைகளைப் பயன்படுத்த முடியாத இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மருத்துவ பீட விரிவுரையாளரான கலாநிதி அனுஜி கமகே, 2023 நவம்பரின் பிற்பகுதியில் எழுதிய ஒரு ஆய்வுக் கட்டுரையில், நாளாந்த செலவினத்தின் அதிகரிப்பு, பல இலங்கையர்களுக்கு முறையான சுகாதார சேவையை பெறுவதைத் தடுக்கின்றது என்று குறிப்பிட்டார்.

இலங்கையின் சுகாதாரத் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது சுகாதார அவசரநிலைகளால் மேலும் மோசமடையும். பறவைக் காய்ச்சல் எனப் பிரபலமாக அறியப்படுவது இந்தியாவிலும் ஏனைய அயல் நாடுகளிலும் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை சுகாதார அதிகாரிகளை அவதானமாக இருக்குமாறு உலக சாகாதர அமைப்பு அண்மையில் எச்சரித்துள்ளது.

இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட இலவச பொது சுகாதாரம், கல்வி மற்றும் ஏனைய சேவைகள், தொழிலாளர்களும் கிராமப்புற மக்களும் நடத்திய கடுமையான போராட்டங்களினால் வென்றெடுக்கப்பட்டவை ஆகும். அவை கடந்த நான்கு தசாப்தங்களாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் திட்டமிட்ட முறையில் வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளன.

முதலாளித்துவ இலாப முறைமையின் நெருக்கடி ஆழமடைந்து வருகின்ற நிலையில், பெரிய முதலாளித்துவ நாடுகள் முதல் வளர்ச்சியடைந்து வருகின்ற மற்றும் முன்னாள் காலனித்துவ நாடுகள் வரை, பிரதானமாக பொது சுகாதாரத்தையும் கல்வியும் வெட்டித் தள்ளுவதை இலக்காகக் கொண்டுள்ளன. நெருக்கடி மிக்க இலாப முறைமையால் தொழிலாள வர்க்கத்தினதும் ஏழைகளதும் மிக அடிப்படைத் தேவைகளைக் கூட வழங்க முடியாது. விக்கிரமசிங்கவின் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளுக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிரான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகப் போராடுவதன் மூலம் மட்டுமே இலவச சுகாதார சேவையையும் இலவசக் கல்வியையும் பாதுகாக்க முடியும்.

Loading