எமில் ஸோலா காணாமல் போதல்: ஸோலா, ட்ரேஃபுஸ் மற்றும் யூத எதிர்ப்புவாதத்திற்கு எதிரான போராட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

பிரெஞ்சு எழுத்தாளரான எமில் ஸோலா (Émile Zola - 1840-1902) இலக்கிய இயற்கைவாதத்தின் முன்னணி சாதனையாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இலக்கிய இயற்கைவாதம் தவிர்க்க முடியாத பலங்கள் மற்றும் பலவீனங்களுடன், உடனடி யதார்த்தத்தின் துல்லியமான மறுஉருவாக்கத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டது.

ஸோலாவின் பல நாவல்கள், குறிப்பாக ஜெர்மினல் (Germinal) மற்றும் நானா (Nana) போன்ற படைப்புகள், அரசியல், இராணுவ மற்றும் மத ஸ்தாபகத்திலும் மற்றும் ஐரோப்பாவின் ஏனைய பிற்போக்கு வட்டாரங்களிலும் சீற்றத்தைத் தூண்டின. அங்கு அவரது படைப்புகள் “இழிவானவை”, “வெறுக்கத்தக்கவை” மற்றும் “ஆபாசமானவை” என்று வழமையாக கண்டனம் செய்யப்பட்டன. அந்தப் புத்தகங்கள் அவரை மிகப் பிரபலமாக்கியதுடன், அவர் வாழ்ந்த காலத்திலேயே பெரிதும் போற்றப்பட்டது.

எமில் ஸோலா காணாமல் போதல் - காதல், இலக்கியம் மற்றும் ட்ரேஃபஸ் வழக்கு

நாவலாசிரியர், பத்திரிகையாளர் மற்றும் நாடகாசிரியரான எமில் ஸோலா, 1894ல் தேசத்துரோகத்திற்காக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்ட யூத பிரெஞ்சு இராணுவ அதிகாரியான ஆல்பிரட் ட்ரேஃபுஸ் (Alfred Dreyfus) இன் பெயரை அழிப்பதற்கு எதிரான போராட்டத்தில் அவர் வகித்த பங்கிற்காக சமமாக அங்கீகரிக்கப்படுகிறார். 1898 ஜனவரியில் வெளியிடப்பட்ட ஸோலாவின் நீண்ட பகிரங்கக் கடிதமான J’accuse (நான் குற்றம் சாட்டுகிறேன்), ட்ரேஃபுஸ் மீதான யூத-எதிர்ப்புவாத ஜோடிப்பு வழக்குக்கு எதிர்ப்பை அணிதிரட்டுவதில் தீர்க்கமாக நிரூபிக்கப்பட்டது.

125 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர், ட்ரேஃபுஸ் விவகாரம் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. இது, முதலாவதாக, யூத-எதிர்ப்புவாதத்தின் நிலைத்தன்மையானது, அதிதீவிர வலது மற்றும் பாசிச அபாயத்தின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது. இரண்டாவதாக, இஸ்ரேலிய சியோனிச ஆட்சி, இன சுத்திகரிப்பு மற்றும் ஆக்கிரமிப்பில் அதன் 76 ஆண்டுகால சாதனை, மற்றும் காஸாவில் கிட்டத்தட்ட 10 மாதங்களாக நடந்து வரும் இனப்படுகொலை ஆகியவற்றின் கொள்கை ரீதியான இடதுசாரி எதிர்ப்பாளர்களுக்கு எதிராக “யூத-எதிர்ப்பு” என்ற பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்பது சிறிய விடயமல்ல.

சமகால சூழல், சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ஒரு மெல்லிய தொகுதியான எமில் ஸோலா காணாமல் போதல்: காதல், இலக்கியம் மற்றும் ட்ரேஃபுஸ் வழக்கு என்ற நூல் குறிப்பாக ஆர்வமூட்டுவதாக ஆக்குகிறது (ரோமன் போலன்ஸ்கியின் திரைப்படமான J’accuse 2019, ட்ரேஃபுஸ் வழக்கில் தொடர்ந்து வரும் ஆர்வத்தின் மற்றொரு வெளிப்பாடாகும்). இதன் ஆசிரியர் மைக்கேல் ரோசன் (Michael Rosen), முக்கியமாக குழந்தைகள் புத்தகங்களுக்காக அறியப்பட்டவர், மற்றும் லண்டன் பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் இலக்கியத்தின் பேராசிரியர் ஆவார். J’accuse (நான் குற்றம் சாட்டுகிறேன்) தொடர்பாக அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், ஜூலை 1898 முதல் ஜூன் 1899 வரை எமில் ஸோலா பிரிட்டனில் சுயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகடத்தலில் செலவிட்ட கிட்டத்தட்ட 11 மாதங்களைப் பற்றிய ஒரு பதிவே அவரது நூல் ஆகும்.

இந்தச் சித்தரிப்பில் மூன்று முக்கியமான கருப்பொருள்கள் உள்ளன. முதலாவதாக, வெளிப்படையாக, ட்ரேஃபுஸ் விடயமாகும். இரண்டாவதாக, ஸோலாவின் வாழ்க்கையின் சிக்கல்கள், குறிப்பாக அசாதாரணமான மும்முனை உறவு (ménage à trois), அவரது மனைவி அலெக்ஸாண்ட்ரின் (Alexandrine) ஆகியோரை உள்ளடக்கியது, அவருடன் அவர் 1864 முதல் ஒன்றாக இருந்தார். மேலும், அவரது திருமணத்திற்கு அப்பாற்பட்ட காதலியான ஜோன் ரோஜெரோ (Jeanne Rozerot), என்பவருடனான உறவில் அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர், அவரது ஒரே சந்ததி அதுவாகும். இறுதியாக, சோசலிசம் மற்றும் இந்த காலகட்டத்தில் பிரான்சிலும் பிற இடங்களிலும் அரசியல் யூத எதிர்ப்புவாதத்தின் எழுச்சி உட்பட பரந்த பிரச்சினைகளில் ஸோலாவின் கருத்துக்கள் பற்றிய ஒரு புதிய மற்றும் மிகவும் குறிப்பிடத்தக்க ஆய்வுகளாகும்.

ட்ரேஃபுஸ் தேசத்துரோகத்திற்காக தண்டிக்கப்பட்டு, தென் அமெரிக்காவின் வடகிழக்கு மூலையில் பிரெஞ்சு கயானாவின் கடற்கரைக்கு அப்பால் உள்ள டெவில்ஸ் தீவிற்கு (Devil’s Island) கொடூரமான நிலைமைகளின் கீழ் நாடுகடத்தப்பட்டார். ட்ரேஃபுஸ் நிரபராதி என்றும், போலி ஆவணங்களின் விளைவுதான் தண்டனை என்றும் ஸோலா விரைவில் முடிவுக்கு வந்தார். பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் சக்திவாய்ந்த பிரிவுகளின் சீற்றத்தைத் தூண்டிவிட்ட வகையில், அவர் தன்னை தற்காப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். J’accuse கடிதமானது ஒரு அவதூறுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தூண்டும் நோக்கத்துடன் அவரால் வெளியிடப்பட்டது. இது, புதிய ஆதாரங்களை முன்வைக்க உதவியது. இருப்பினும் அவதூறு வழக்கு வெற்றி பெற்றது. ஸோலாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது, பிரான்சின் புகழ்பெற்ற கெளரவ (Legion of Honor) விருது பறிக்கப்பட்டது, மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது வழக்கறிஞர் மற்றும் நெருங்கிய சகாக்களின் அவசர வற்புறுத்தலின் பேரில், சிறைத் தண்டனைக்காக சரணடைவதற்குப் பதிலாக, அவர் தயக்கத்துடன் 1898 கோடையில் லண்டனுக்கு தப்பிச் சென்றார்.

பிரான்சிலிருந்தும், தனது அன்புக்குரியவர்களிடமிருந்தும் (வருகைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும்) மற்றும் அவரது படைப்பாற்றல் வாழ்க்கையின் ஊற்றுக்கண்ணிலிருந்தும் நீண்ட காலத்தை கழிப்பதற்கு ஸோலா எதிர்பார்த்திருக்கவில்லை. வழக்கின் போக்கை தூரத்திலிருந்தே அவதானித்துக் கொண்டிருந்த அவர், தாம் திரும்பி வரக்கூடிய நிலைமைகளுக்காக பொறுமையின்றிக் காத்திருந்தார்.

ஸோலாவினைக் குறித்த பதிவு மற்றும் அவரது வாழ்க்கையில் இரண்டு பெண்களுடனான அவரது சிக்கலான உறவு ஆகியவை ரோசனால் விவரிக்கப்படுகின்றன. அவரது வாழ்க்கையைப் பற்றிய எந்தவொரு உண்மையான விவரிப்பும் சந்தேகத்திற்கு இடமின்றி தேவைப்படுகிறது. எவ்வாறாயினும், ஸோலா “காணாமல் போன” காலத்தின் போது, நாவலாசிரியருக்கும் அவரது மனைவி மற்றும் காதலிக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்தை நெருக்கமாக ஆய்வு செய்வது உட்பட, சற்றே தேவையற்ற விவரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளன.

அலெக்ஸாண்ட்ரினுக்கு ஒரு பணியாளராக பணிபுரிந்து வந்த ஜேனுடனான விவகாரம், 1888 இல் தொடங்கியது, அவர்களின் குழந்தைகள் டெனிஸ் மற்றும் ஜாக் முறையே 1889 மற்றும் 1891 இல் பிறந்தனர். அலெக்ஸாண்ட்ரின் நவம்பர் 1891 இல் தான், அவர்களின் உறவைப் பற்றி கண்டுபிடித்தார், அந்த நேரத்தில் உறவுகள் முதலில் வெடித்தன மற்றும் ஸோலாவின் திருமணம் நெருக்கடிக்குள் வந்தது. அலெக்ஸாண்ட்ரின் மெதுவாக ஒரு ஏற்பாட்டு உடன்பாட்டிற்கு மாறினார், அதில் ஸோலா தனது காதலி மற்றும் குழந்தைகளுடன் பிற்பகல்களைக் கழிப்பார். ஸோலா நாடுகடத்தப்பட்ட நேரத்தில், விஷயங்கள் இன்னும் மோசமாக இருந்தன. ரோசன் எழுதுவதைப் போல, “குடும்ப ஏற்பாடு... ஓரளவு அமைதியை ஏற்படுத்தியது.” பெண்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமானார்கள், குறிப்பாக ஸோலாவின் மரணத்திற்குப் பிறகு ஆகும்.

நாடாரால் எடுக்கப்பட்ட ஸோலாவின் புகைப்படம், மார்ச் 3, 1898

ஜூன் 1899 இல், ட்ரேஃபுஸின் அசல் தண்டனை இரத்து செய்யப்பட்டது, ஸோலா பாரிஸுக்குத் திரும்பினார். சில மாதங்களுக்குப் பின்னர் ட்ரேஃபுஸ் இரண்டாவது முறையாக தண்டிக்கப்பட்டார். கொடூரமான நிலைமைகளின் கீழ் ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நாடுகடத்தப்பட்டிருந்த அந்த அதிகாரி, தான் நிரபராதி என்று நிலைநாட்டப்பட்டாலும், மன்னிப்புக்கு ஈடாக ஒரு குற்ற மனுவை ஏற்க ஒப்புக்கொண்டார்.

இறுதியாக, 1906 இல், ட்ரேஃபுஸ் முற்றிலுமாக குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டு அவரது பதவியில் மீண்டும் அமர்த்தப்பட்டார். அவர் மேலும் மூன்று தசாப்தங்கள் அதாவது 1935 வரை வாழ்ந்தார். எவ்வாறிருப்பினும், ட்ரேஃபுஸ் மற்றும் தானும் சரியானவர்கள் என்பது நிரூபணமானதை ஸோலாவால் உயிருடன் இருக்கும் போது காண முடியவில்லை. ஏனெனில் அவரது வீட்டில் முறையற்ற காற்றோட்டம் கொண்ட புகைபோக்கியால் ஏற்பட்ட கார்பன் மோனாக்சைடு விஷத்தால் பாதிக்கப்பட்டு, செப்டம்பர் 1902 இல் தான் அவர் இறந்தார். இந்த மரணம் தற்செயலானதல்ல, மாறாக வெறித்தனமான ட்ரேஃபுஸ் எதிர்ப்பாளர்களின் நாசவேலையால் ஏற்பட்டிருக்கலாம் என்று ரோசன், இன்னும் பலருடன் சேர்ந்து, குறைந்தபட்சம் சாத்தியமே என்று நினைக்கிறார். 1908 இல், ஸோலாவின் உடல் எச்சங்கள் பாந்தியனில் புதைக்கப்பட்டன, இது ட்ரேஃபுஸ் மீதான அவரது தைரியமான பாதுகாப்பிற்கும் அத்துடன் அவரது இலக்கிய சாதனைகளுக்கும் அங்கீகாரமாக இருந்தது.

ட்ரேஃபுஸ் வழக்கில் ஸோலாவின் பாத்திரத்தை நினைவுகூருகையில், இந்தப் புத்தகம் பிரான்சில் அரசியல் யூத எதிர்ப்புவாதத்தின் பாத்திரம், சியோனிசத்தின் பிறப்பு மற்றும் சோசலிச இயக்கத்தின் பாத்திரம் உட்பட பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகளை எழுப்புகிறது.

19ம் நூற்றாண்டின் இறுதி மூன்று ஆண்டுகளில் நவீன அரசியல் யூத எதிர்ப்புவாதத்தின் எழுச்சியானது வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியில் இருந்து எழுந்தது. இது குறிப்பாக 1871 பாரிஸ் கம்யூன் உதாரணத்திற்குப் பின்னர், முதலாளித்துவத்திற்கு ஒரு புரட்சிகர அச்சுறுத்தலை எழுப்பியது. பெரும்பாலும் மத்தியதர வர்க்கங்களின் கூறுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட யூத எதிர்ப்புவாதம், சோசலிச இயக்கத்திற்கு எதிராக முதலாளித்துவத்தை பாதுகாப்பதற்கான ஒரு வெகுஜன அடித்தளத்தை அபிவிருத்தி செய்வதற்கும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் சேவை செய்தது.

பிற்போக்கு சக்திகள், குட்டி முதலாளித்துவ வெகுஜனங்களின் சீற்றத்தை அவர்களின் உண்மையான எதிரியிடம் இருந்தும் ஒட்டுமொத்த யூத மக்கள் மீதும் திசைதிருப்பும் முயற்சியில் நிதியியலில் யூதர்களின் முக்கிய பாத்திரத்தை ஜனரஞ்சகமான
சொல்லாட்சி முறையீட்டுடன் சுட்டிக்காட்டின. ட்ரேஃபுஸ் சகாப்தத்தின் யூத எதிர்ப்புவாதம் அவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்ட பின்னர் மறைந்துவிடவில்லை. 1930களில் ஜேர்மனியில் கொலைகார நாஜி சர்வாதிகாரத்தின் எழுச்சியுடன் சேர்ந்து, பெருமந்த நிலை நிலைமைகளின் கீழ் அது மீண்டும் வெளிப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது பல பத்தாயிரக்கணக்கான பிரெஞ்சு யூதர்களை அவுஸ்விட்ஸ் சித்திரவதை முகாமுக்கு நாடு கடத்துவதில் பிரான்சில் இருந்த நாஜி ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சி உதவியது. ட்ரேஃபுஸ் இன் பேத்தியான மெடலின் ட்ரேஃபுஸ் லெவி (Madeleine Dreyfus Levy) நாடு கடத்தப்பட்ட அதே நாளில் அவரது பெரியப்பாக்களில் ஒருவரான ஆஸ்கார் ‘ஜெஸ்கி’ ரோசன் (Oscar ‘Jeschie’ Rosen) நாடுகடத்தப்பட்டார் என்பதை ஆசிரியர் ரோசன் அவரது பின்குறிப்பில் விளக்குகிறார்.

ட்ரேஃபுஸ் விவகாரம் சியோனிசம் பிறந்த துல்லியமாக அதே தருணத்தில் நடந்தது தற்செயல் நிகழ்வு அல்ல. அச்சமயத்தில் வியன்னாவில் வசித்து வந்த ஆஸ்திரிய-ஹங்கேரிய யூத பத்திரிகையாளர் தியோடர் ஹெர்ஸ்ல் (Theodor Herzl), ட்ரேஃபுஸ் மீதான ஜோடிப்பு வழக்கை அவதானித்து, ட்ரேஃபுஸ் வழக்கில் இருந்தும் சரி மற்றும் ஐரோப்பாவில் யூத-எதிர்ப்புவாதத்தின் பொதுவான வளர்ச்சியில் இருந்தும், யூதர்களுக்கு சமத்துவம் மற்றும் முழு குடியுரிமைகளை அடைவது சாத்தியமில்லை என்றும், பாலஸ்தீனத்தில் ஒரு யூத அரசை ஸ்தாபிப்பதிலேயே தீர்வு தங்கியுள்ளது என்றும் முடிவுக்கு வந்தார். ஹெர்ஸ்ல் 1896 இல் டெர் ஜூடென்ஸ்டாட் (யூத அரசு) என்னும் நூலை எழுதியதோடு, உலக சியோனிச அமைப்பானது (World Zionist Organization) அதன் முதல் மாநாட்டை 1897 இல் நடத்தியது. சியோனிசம் அதன் ஆரம்பத்தில் இருந்தே யூத முதலாளித்துவத்தின் ஒரு வேலைத் திட்டமாக இருந்தது, அது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இயக்கப்பட்டதுடன், சோசலிசத்திற்கும் சமூக சமத்துவம் என்ற இலக்கிற்கும் விரோதமாக இருந்தது.

அபிவருத்தியடைந்து வந்த சோசலிச இயக்கமானது யூத எதிர்ப்புவாதம் மற்றும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் பிற முயற்சிகளுக்கு எதிரான போராட்டத்தை கையிலெடுத்தது. டேவிட் நோர்த்தின் “சாதாரண ஜேர்மனியர்களின் கட்டுக்கதை”: டானியல் கோல்ட்ஹாகனின் ஹிட்லரின் விருப்பத்துடன் மரணதண்டனை நிறைவேற்றுபவர்கள் குறித்து ஒரு மீளாய்வு என்ற நூலில் குறிப்பிட்டதைப் போல, மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் உதவியுடன் நிறுவப்பட்டதும், சர்வதேச சோசலிச இயக்கத்தின் மிக சக்திவாய்ந்த பிரிவாக இருந்ததுமான ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியானது முன்னணித் தலைமை வகித்தது. நோர்த் பின்வருமாறு தொடர்ந்து எழுதுகிறார், “ஜனநாயக கோட்பாடுகள் மற்றும் தார்மீக பரிசீலனைகளுக்கு அப்பாற்பட்டு, யூத-எதிர்ப்புவாதத்தை ஜனரஞ்சகமான சொல்லாட்சி முறையீட்டுடன் முதலாளித்துவ-விரோத வாய்வீச்சை இணைப்பது தொழிலாள வர்க்கத்தை நோக்குநிலை பிறழச் செய்து அதை நடுத்தர வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளுக்கு அடிபணியச் செய்வதற்கான ஒரு முயற்சியாக சமூக ஜனநாயகக் கட்சி பார்த்தது.”

J’accuse (ஜனவரி 13, 1898)

பிரெஞ்சு சோசலிஸ்டுகள், அவர்களது சக்திவாய்ந்த ஜேர்மன் சகாக்களைக் காட்டிலும் பலவீனமாக இருந்த போதிலும், ட்ரேஃபஸ் வழக்கில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தனர். ட்ரேஃபுஸ் நிரபராதி என்பதில் உறுதியாக இருந்தவரும், 1898 செப்டம்பரில், ஆதாரம்: ட்ரேஃபுஸ் விவகாரம் (The Proof: The Dreyfus Affair) என்ற ஒரு நீண்ட புத்தகத்தை வெளியிட்டவருமான முன்னணி பிரெஞ்சு சோசலிஸ்ட் ஜோன் ஜூரஸ் (Jean Jaurès), மார்ச் 1899 இல் இலண்டனுக்கு விஜயம் செய்து ஸோலாவை சந்தித்தார்.

சமூக ஜனநாயக கூட்டமைப்பு (Social Democratic Federation) அழைப்பு விடுத்திருந்த ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள ஜூரஸ் லண்டனில் இருந்தார். தி டைம்ஸ் ஒரு அறிக்கையில், ஜாரெஸை ஆசிரியர் இவ்வாறு மேற்கோள் காட்டுகிறார்: “உலகெங்கிலும் போரைக் கட்டவிழ்த்து விடுவதையும் தொழிலாள வர்க்கங்களிடையே மோதல்களை ஊக்குவிப்பதையும் அடிப்படையாகக் கொண்ட தற்போதைய முதலாளித்துவ அமைப்புமுறையின் கீழ் உலகளாவிய சமாதானம் இருக்க முடியும் என்று நம்புவது அபத்தமானது. உண்மையான சமாதானத்தின் திசையில் சோசலிசம் மட்டுமே அவர்களின் ஒரே நம்பிக்கையாக இருந்தது.”

ஸோலாவின் சொந்த அரசியல் பார்வைகளை, அவர் லண்டனுக்கு புலம் பெயர்வதுக்கு சில மாதங்களுக்கு முன்பு, ஆனால் J’accuse கடிதம் வெளியான பிறகு, ஆஸ்திரியாவில் பிறந்த லண்டனை தளமாகக் கொண்ட பத்திரிகையாளரான மேக்ஸ் பீருக்கு அவர் அளித்த ஒரு நீண்ட நேர்காணலில் வெளிப்படுத்தியதைப் பற்றி ஆசிரியர் அறிக்கை செய்தார். ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு, பீர் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1899 இல் இருந்து பின்வரும் பரிமாற்றம் குறிப்பாக குறிப்பிடத்தக்கது:

பீர்: உங்கள் அவதானிப்பு சக்தியை நான் மறுக்கவில்லை. உலகமே அறிந்தது போல, இது மிகவும் விரிவானது; உங்கள் ஆய்வுகள் கடின உழைப்பாகும், நேர்மையானவை மற்றும் அறிவியல் ரீதியாக சரியானவை ஆகும். எனினும், யூத வாழ்க்கையைப் பற்றிய உங்கள் அவதானிப்பு போதுமானதாக இல்லை என்று கூற என்னை அனுமதியுங்கள். அதை முழுவதுமாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஸோலா: கடுந்துயரின் கடைசி சில மாதங்களில், யூதர்களின் கேள்வியைப் பற்றி நான் நிறைய சிந்தித்தேன். அதற்கும் நல்ல காரணம் இருந்தது... யூதரை நான் முக்கியமாக பணத்தாசை விரும்பிய, ஆடம்பர ஆசை கொண்ட ஒரு மனிதனாக கருதினேன் என்ற தோற்றத்தை எனது நாவல்கள் நிச்சயமாக ஏற்படுத்தக்கூடும். எனினும், எனது சமீபத்திய போராட்டம், முற்றிலும் வேறொரு வகையைச் சேர்ந்த பல யூதர்கள் உள்ளனர் என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்தது. மனித வரலாற்றில் இனம் அல்லது மதத்தை விட சக்திவாய்ந்த சில காரணிகள் உள்ளன.

பீர்: பொருளாதாரம்!

ஸோலா: சரியாகச் சொன்னீர்கள்...

பீர்: யூதப் பிரச்சினை என்பதே இல்லை, ஆனால் உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்களுக்கும் உழைப்புச் சக்தியின் உடைமையாளர்களுக்கும் இடையே ஒரு போராட்டம் இருக்கிறது. இந்தப் போராட்டத்திற்கு இனமோ, மதமோ தெரியாது. நாகரிக உலகம் முழுவதிலும் தெரிந்தோ தெரியாமலோ நடந்து கொண்டிருக்கும் போராட்டம் இது. இந்தப் பகைமையை ஒழித்தால், ட்ரேஃபுஸ் விசாரணைகள் இனியும் இருக்காது.

ஸோலா: நிச்சயமாக, நீங்கள் சோசலிசத்தைச் சுட்டிக் காட்டுகிறீர்கள்.

ஸோலாவுடனான தனது உரையாடலை வெளியிட்ட பத்திரிகை கட்டுரையில், பிரெஞ்சு எழுத்தாளரின் கடைசி நாவலான உண்மை (Truth) இன் ஒரு பகுதியை பீர் சுட்டிக்காட்டினார். அதை அவர் தனது நேர்காணலின் “எதிரொலியாக இருக்கலாம்” என்று அழைக்கிறார்: அதாவது “உண்மையில் யூதப் பிரச்சனைகள் எதுவும் இல்லை - இல்லவே இல்லை; ஒரு முதலாளித்துவப் பிரச்சினை மட்டுமே இருந்தது – அதாவது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெருந்தீனிக்காரர்களின் கைகளில் பணம் குவிந்து அதன் மூலம் உலகை நஞ்சாக்கி அழுகச் செய்வது பற்றிய கேள்வியாக இருக்கிறது.”

பிரெஞ்சு சோசலிசவாதி ஜோன் ஜூரஸ் 1904 இல், நாடாரால் எடுக்கப்பட்ட புகைப்படம்

பிரபலமாக, ஸோலா மற்றொரு சந்தர்ப்பத்தில் பின்வருமாறு எழுதினார், “நான் எந்த தலைப்பை ஆராயும் போதெல்லாம், நான் சோசலிசத்தை காண்கிறேன்.”

யூத எதிர்ப்புவாதம் மீதான ஸோலாவின் கருத்துக்கள் —உலகை வெறுமனே இனவாத அல்லது மத அர்த்தத்தில் பார்க்க அவர் மறுப்பது— இன்று சியோனிசம் மற்றும் அடையாள அரசியலின் ஏனைய வடிவங்கள் மீதான ஒரு சொற்பொழிவாக வாசிக்கப்படுகிறது. சியோனிச ஆட்சியானது அனைத்து யூதர்களுக்காக பேசுவதற்கும், யூதர்கள் உட்பட அதை எதிர்ப்பவர்களை “யூத எதிர்ப்பாளர்களாக” கருதுவதற்கும் “உரிமை” கோருகிறது. உண்மையில் அது உண்மையான யூத எதிர்ப்பாளர்களுடன் ஐக்கியத்துடன், அதே முறையிலும் நடந்து கொண்டிருக்கிறது. மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள மிகவும் பிற்போக்கு சக்திகளுடன் பகிரங்கமாக இணைந்து வேலை செய்கிறது.

அடையாள அரசியல், இனவாத அரசியல் ஆகியவற்றைப் பொறுத்தவரை இதே வர்க்க தர்க்கத்தைத்தான் காண முடியும். கறுப்பு தேசியவாதிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் ஸோலாவின் பார்வைக்கு எதிரானதை எடுத்துக்கொள்கிறார்கள். அவர் “மனித வரலாற்றில் இனம் அல்லது மதத்தை விட சக்திவாய்ந்த சில காரணிகள் உள்ளன” என்று சரியாக வலியுறுத்தினார்.

ஸோலா ஒரு தைரியமான மனிதர். 19ம் நூற்றாண்டு பிரான்சின் மிகவும் முற்போக்கான கலாச்சார ஆளுமைகளில் சிலரை தனது நண்பர்களாகக் கொண்டவர். ரோசன் விளக்குவது போல், முன்னோடி புகைப்படக் கலைஞர் நாடார் (Felix Tournachon -1820-1910), ஸோலாவை புகைப்படம் எடுப்பதை ஒரு தீவிர பொழுதுபோக்காக எடுக்கத் தொடங்கினார். மேலும், பதிவுவாதம் (Impressionist) அல்லது பிந்தைய பதிவுவாத (post-Impressionist) சகாப்தங்களின் மிகவும் முற்போக்கான ஓவியர்களில் இருவர், எட்வார்ட் மோனெ (Édouard Manet - 1832-1883) மற்றும் போல் செசான் (Paul Cézanne - 1839-1906) ஆவர். ஸோலாவிற்கு சிறுவயதிலிருந்தே செசானை தெரியும்.

எமில் ஸோலா ஒரு மார்க்சியவாதி அல்ல — உண்மையில், அவர் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிரெஞ்சு கற்பனாவாத சோசலிஸ்டான ஃபூரியேவின் (Fourier ) கோட்பாடுகளில் ஆர்வம் கொண்டிருந்தார். மேலும், அது நீர்த்துப்போன பதிப்புகளாகும். ஆனால், அவருடைய சிறந்த நாவல்கள் வெளிப்படுத்துவது போல், தொழிலாள வர்க்கத்தின் அவல நிலைக்கு அவர் நிச்சயமாக பரிவுணர்வு கொண்டிருந்தார், மேலும் அறியாமை (obscurantism - அறிவு மற்றும் கல்வியின் பரவலை எதிர்ப்பது அல்லது தடுத்து மக்களை அறியாமையில் வைத்திருக்க முயற்சிப்பது) மற்றும் பிற்போக்குத்தனத்திற்கு எதிரானவராக அவர் இருந்தார். ட்ரேஃபுஸ் இறுதியாக குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டதிலும் யூத-எதிர்ப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்திலும் ஜோன் ஜூரஸ் உடனான அவரது ஒத்துழைப்பு ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது, மேலும் இன மற்றும் மத வெறுப்பை அவர் எதிர்த்துப் போராடிய விதத்திலும் இன்று நமக்கு கற்றுக்கொள்ள நிறையவே உள்ளன.


Loading