போருக்கான இராணுவ மற்றும் இராஜதந்திர தயாரிப்புகள் தொடர்கையில், இஸ்ரேல்-ஈரானிய மோதல் வெடிக்கத் தயாராக உள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

தெஹ்ரானுக்கு விஜயம் செய்தபோது ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் படுகொலை செய்ததற்கு விரைவில் பதிலடி தாக்குதலை ஈரான் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இஸ்ரேலும் அதன் நட்பு நாடுகளும் திங்களன்று ஈரானுக்கு எதிரான ஒரு போருக்கான தயாரிப்புகளைத் தொடர்ந்தன.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ஜி 7 சகாக்களிடம் ஈரானும் ஹிஸ்புல்லாவும் எந்த நேரத்திலும் அத்தகைய நடவடிக்கையைத் தொடங்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை நம்புவதாக கூறினார்.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தெஹ்ரான் பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த புதன்கிழமை படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் சவப்பெட்டியை மக்கள் சுமந்து செல்கின்றனர். ஆகஸ்ட் 1, 2024 வியாழக்கிழமை [AP Photo/Office of the Iranian Supreme Leader]

இஸ்ரேல் பல மாதங்களாகத் தூண்டிவிட்டு வரும் பிராந்தியப் போரை எரியூட்டுவதற்கு ஒரு சாக்குப்போக்காக எந்த நடவடிக்கையும் பயன்படுத்தப்படலாம். அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யாயர் லாபிட்டின் கருத்துக்கள் நாட்டில் கிளர்ச்சியடைந்துள்ள சூழ்நிலையை சுட்டிக்காட்டுகிறது. “ஐந்து நாட்களாக ஒரு முழு நாடும் உட்கார்ந்து கொண்டு, எங்கள் மீது குண்டுவீசப்படுவதற்காக காத்திருப்பது உங்களுக்கு ஏற்புடையதா? ஏனென்றால் எந்த தடுப்பும் இல்லை” என்று அவர் கேட்டார்.

உலக சுகாதார அமைப்பு லெபனானுக்கு ஏற்படவுள்ள இரத்தக் களரியை எதிர்பார்த்து 32 டன்கள் அவசர மருத்துவ பொருட்களை வழங்கியுள்ளது. மேலும் பல நாடுகள் தங்கள் குடிமக்கள் லெபனானை விட்டு வெளியேறுமாறு ஆலோசனை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

டெல் அவிவில் உள்ள இஸ்ரேலிய விமானப்படையின் நிலத்தடி கட்டளை மையத்தில் பேசுகையில், பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட் படையினர்களிடம் “தாக்குதலுக்கு விரைவாக முன்னேறுவது உட்பட அனைத்து சாத்தியக்கூறுகளுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறினார். மேலும், “அனைத்து போர்த் துறைகளிலும் தாக்குதல் நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள்” குறித்து கேலண்ட் குறிப்பிட்டதாக பாதுகாப்பு அமைச்சக அறிக்கை ஒன்று சேர்த்துக் கொண்டது.

போர் தொடங்கியதிலிருந்து அண்டை நாடுகள் மீது மீண்டும் மீண்டும் கொடிய தாக்குதல்கள் உட்பட “தாக்குதல் நடவடிக்கைகளை” இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நிலையில், கேலண்ட் குறிப்பிடுவது ஒரு பாரிய போர் விரிவாக்கத்தையே ஆகும்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் வடக்கு கட்டளையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஓரி கோர்டின், நாட்டின் வடக்கில் இருந்து மேயர்கள் மற்றும் கவுன்சில் தலைவர்களிடம் கூறுகையில், “முன்னோக்கிச் செல்லும் எங்கள் தாக்குதல் திட்டங்கள் தயாராக உள்ளன என்பதையும், என்னிடமிருந்து ஒவ்வொரு சிப்பாய்கள் வரை எல்லா அம்சங்களிலும் நாங்கள் இதற்குத் தயாராக இருக்கிறோம் என்பதையும் நீங்கள் அறிய வேண்டும் என்பதை விரும்புகிறேன்.

“கடந்த 10 மாதங்களில் நாங்கள் நிறைய தாக்கி அழித்துள்ளோம், ஆனால் எங்களுக்கு இன்னும் வேலை இருக்கிறது. நாங்கள் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் இருக்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

காஸாவில் இனப்படுகொலை தொடங்கியதிலிருந்து, இஸ்ரேல் லெபனானில், எல்லை தாண்டிய தாக்குதலை மேற்கொண்டதில் 450 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்களும் அடங்குவர், இது லெபனானின் தெற்குப் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. திங்களன்று ஹிஸ்புல்லாவில் இருந்து ஒரு பயனற்ற டிரோன் தாக்குதலுக்குப் பின்னர், இஸ்ரேல் லெபனிய கிராமமான Mais Al-Jabal ல் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். இதில் முந்தைய தாக்குதலில் ஏற்பட்ட இறப்புக்கள் பற்றி அந்த இடத்தை விசாரித்துக் கொண்டிருந்த ஒரு துணை மருத்துவரும் அடங்குவர்.

இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்காவுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டு அதன் இராஜதந்திர அழுத்தத்தால் எளிதாக்கப்படுகின்றன. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்ஸி ஹலேவி மற்றும் அமெரிக்க சென்ட்கொம் தளபதி மைக்கேல் குரில்லா ஆகியோருக்கு இடையிலான திங்களன்று நடந்த ஒரு சந்திப்பில், “மத்திய கிழக்கிலான அச்சுறுத்தல்களுக்கான விடையிறுப்பின் பாகமாக, அப்பிராந்தியத்தில் பாதுகாப்பு-மூலோபாய பிரச்சினைகள் மற்றும் கூட்டு மதிப்பீடுகள்” குறித்து விவாதிக்கப்பட்டது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரின் பத்திரிகை குழு தகவல்படி, அதற்கு முந்தைய இரவு, “பிராந்தியத்தில் பாதுகாப்பு அபிவிருத்திகள் மற்றும் ஈரான் மற்றும் அதன் பினாமிகளால் முன்வைக்கப்படும் சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கு எதிராக இஸ்ரேலைப் பாதுகாக்க இஸ்ரேலிய இராணுவத்தின் தயார்நிலை” குறித்து விளக்கமளிக்க அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டினை கேலண்ட் சந்தித்தார்.

“[கேலண்ட்], தொடர்ச்சியான காட்சிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தற்காப்பு தாக்குதல் திறன்களைப் பற்றி விவாதித்தார், மேலும் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நெருக்கமான இராணுவ மற்றும் மூலோபாய ஒருங்கிணைப்புக்கு செயலாளர் ஆஸ்டினுக்கு நன்றி தெரிவித்தார். இதில் தற்போதைய மற்றும் எதிர்கால இராணுவ திறன்களை நிலைநிறுத்துதல் மற்றும் இஸ்ரேலின் படை நிலைகளில் மாற்றங்கள் ஆகியவை அடங்கும்” என்று அந்தக் குழு குறிப்பிட்டது.

“இஸ்ரேலையும் பிராந்தியத்தையும் பல்வேறு வான்வழித் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க கூட்டாளி நாடுகள் மற்றும் பங்காளிகளின் கூட்டணியை உருவாக்குவதில் அமெரிக்க தலைமையை” அவர் பாராட்டினார்.

இந்த தலைமை குறிப்பாக பல அரபு அரசாங்கங்களை ஈரானின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி இருப்பதுக்கான பிரச்சாரத்தையும் உள்ளடக்கியுள்ளது. இரண்டு தசாப்தங்களில் ஜோர்டானிய வெளியுறவு மந்திரி அய்மான் சஃபாடி தெஹ்ரானுக்கு முதல் விஜயத்தை மேற்கொண்ட பிறகு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ஜோர்டானிய மன்னர் அப்துல்லாவுடன் திங்கள்கிழமை பேசினார். ஈரானியத் தலைவர்களின் பதிலடித் தாக்குதலை குறைக்க அய்மான் சஃபாடி சமாதானப்படுத்த முயன்றார் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.

கடந்த புதனன்று ஈரான் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தை சவுதி அரேபியா நடத்துகிறது. அங்கு அது இஸ்ரேலுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்களுக்கு ஆதரவு திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்களன்று, ஈரானிய வெளியுறவு மந்திரி அலி பகேரி கனி, சர்வதேச தூதர்களை அழைத்து, தெஹ்ரான் “அதன் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கும் நோக்கத்துடன் இஸ்ரேலிய ஆட்சியால் நடத்தப்பட்ட பயங்கரவாத நடவடிக்கையைத் தடுப்பதற்கான அதன் சட்டபூர்வமான மற்றும் உள்ளார்ந்த உரிமையை” செயல்படுத்தும் என்று அவர்களிடம் தெரிவித்தார். ஐ.நா. பாதுகாப்புக் குழு இஸ்ரேலின் குற்றங்களுக்கு விடையிறுக்கத் தவறியதுதான் இப்பிராந்தியத்தில் ஆபத்தான பதட்டங்களுக்கு முக்கிய பொறுப்பு என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி பின்னர் கூறுகையில், “ஈரான் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஸ்தாபிக்க விரும்புகிறது, ஆனால் இது ஆக்கிரமிப்பாளரைத் தண்டிப்பதன் மூலமும், சியோனிச ஆட்சியின் சாகசவாதத்திற்கு எதிராக தடுப்பை உருவாக்குவதன் மூலமும் மட்டுமே வரும்” என்று குறிப்பிட்டார். “சியோனிச ஆட்சியை தண்டிப்பதற்கான ஈரானின் சட்டபூர்வ உரிமையை சந்தேகிக்க யாருக்கும் உரிமை இல்லை” என்று கனானி தொடர்ந்து கூறினார்.

இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் தலைமைத் தளபதி ஹொசைன் சலாமி இதேபோல் இஸ்ரேல் “சரியான நேரத்தில் தண்டனையைப் பெறும்... அவர்கள் ஒரு அடியைப் பெறும்போது, அவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை அவர்கள் கவனிப்பார்கள்.

மத்திய கிழக்கில் உருவாகிவரும் போர் அபாயங்கள் அமெரிக்காவிற்கு பக்கத்தில் பிரதான சக்திகளை விரைவாக உள்ளிழுத்து வருவதை எடுத்துக்காட்டிய ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு செயலரும் தற்போதைய பாதுகாப்பு கவுன்சில் செயலருமான சேர்ஜி ஷோய்கு, ஜனாதிபதி மசூத் பெஜேஷ்கியான் உட்பட ஈரானிய தலைவர்களுடன் விவாதங்கள் நடத்த தெஹ்ரானுக்கு பறந்தார்.

காஸா மண்ணில், குடிமக்களுக்கு எதிரான இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் குற்றவியல் தாக்குதல்கள் தொடர்கின்றன. காஸா நகரத்தில் ஹசன் சலாமா மற்றும் நாசர் பள்ளிகள் மற்றும் அல் அக்சா மருத்துவமனை மீது ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட குறைந்தப்பட்சம் 30 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை காண்ட ஒரு சாட்சியான அப்துல்லா அகிலா என்பவர் பின்வருமாறு விவரித்தார். “நாங்கள் உட்கார்ந்திருந்தபோது இங்கு ஒரு குண்டு விழுந்தது, மற்றொரு குண்டு பக்கத்து பள்ளியைத் தாக்கியது. இரண்டு பள்ளிகளும் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை தங்க வைத்தன... கடந்த ஒரு மணி நேரமாக குழந்தைகளின் எச்சங்களை மீட்டு வருகிறோம். இது மிகவும் நியாயமற்றது. இன்னும் எத்தனை காலம்தான் இப்படியே இருப்பது? நாங்க களைச்சுப் போயிட்டோம்... போதும்!” என்று குறிப்பிட்டார்.

மற்றொருவர் அல் ஜசீரா நிருபரிடம் “சிதறிய உடல்கள் எல்லா இடங்களிலும் உள்ளன” என்றும், மற்றொருவர், “அவர்கள் குழந்தைகளையும் முதியவர்களையும் கொன்றனர். பெண்களைக் கொன்றார்கள். கடவுள் மட்டுமே நம்மை காப்பாற்றுவார். குழந்தைகள் அவர்களுக்கு என்ன செய்தார்கள்?” என்று கேட்டார்.

குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்ட அல் அக்சா மருத்துவமனை மீதான குண்டுவீச்சினால் இடம்பெயர்ந்த பல மக்களின் கூடாரங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

“பெரும்பாலான புல்டோசர்களை இயக்க போதுமான எரிபொருள் இல்லாததாலும், நகராட்சி வசதிகளில் புல்டோசர்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாகவும்” மீட்பு நடவடிக்கைகள் வெறும் கைகளுடன் நடந்து கொண்டிருந்ததாக அல் ஜசீரா பத்திரிகையாளர் தாரிக் அபு அஸ்ஸூம் தெரிவித்தார். “வெளியேற்ற மையங்கள் மீது இஸ்ரேலிய தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் போரின் இனப்படுகொலை காட்டுமிராண்டித்தனம் பாசிசவாத நிதி மந்திரி பெசலெல் ஸ்மோட்ரிச் ஆல் வெளிப்படையாக உச்சரிக்கப்பட்டது. அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் காஸாவிற்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று புகார் கூறினார்: “தார்மீக ரீதியாக, எங்கள் பணயக்கைதிகள் திரும்பும் வரை, அது நியாயப்படுத்தப்பட்டாலும் கூட, இரண்டு மில்லியன் குடிமக்களை பட்டினியால் இறக்க யாரும் அனுமதிக்க மாட்டார்கள்” என்று புலம்பினார்.

மேற்குக் கரை மற்றும் இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தாக்குதலின் முன்னோடியாக காஸா போர் உள்ளது என்பதை உறுதிப்படுத்திய ஸ்மோட்ரிச், பாலஸ்தீனிய அரசின் “அச்சுறுத்தலை அகற்ற” இஸ்ரேலிய குடியேற்ற கட்டுமானத்தை விரிவுபடுத்துவதாக ட்வீட் செய்தார்.

“திறந்த பிரதேசங்கள் மீதான அரபுக் கட்டுப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், பாலஸ்தீனிய அதிகாரம் மற்றும் அதன் தலைவர்களால் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்த்துப் போராட வேண்டும் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பிரதேசத்தின் இஸ்ரேலின் முழு கட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டும். இதுதான் ஒரே வழி” என்று அவர் தெரிவித்தார்.

இரண்டு குழந்தைகள் உட்பட இருபத்தைந்து பாலஸ்தீனியர்கள் மேற்குக் கரையில் ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை நடந்த இரவுநேர சோதனைகளில் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன மற்றும் குடும்பங்கள் அச்சுறுத்தப்பட்டன. ஜெனினில் இரண்டு வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டன. மேலும், நாப்லஸில் உள்ள ஒரு சந்தையானது இஸ்ரேலிய படையினரால் எரியும் டயர்களைப் பயன்படுத்தி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

Loading