உக்ரேன் ராணுவம் ரஷ்யா மீது ஊடுருவத் தொடங்கியுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை, உக்ரேனிய படைகள் ரஷ்ய பிராந்தியத்திலுள்ள எல்லைப் பகுதியான குர்ஸ்க்கில் மிகப் பெரிய ஊடுருவலைத் தொடங்கியுள்ளன. ரஷ்ய இராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த தாக்குதலில் உக்ரேனிய ஆயுதப் படைகளின் ஒரு பிரிவிலுள்ள 1,000ம் துருப்புக்கள் மற்றும் ஏழு டாங்கிகள் உட்பட 50 கவச வாகனங்கள் ஈடுபட்டன. இதுவரை கீவ் அதிகாரப்பூர்வமாக இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

குர்ஸ்க் பிராந்தியத்தின் தற்காலிக ஆளுநர் அலெக்ஸி ஸ்மிர்னோவ் டெலிகிராம் சேனலால் வெளியிடப்பட்ட இந்த புகைப்படம், செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 6, 2024 அன்று குர்ஸ்க் பிராந்தியத்தின் சுட்ஜா நகரில் உக்ரேனிய தரப்பின் ஷெல் தாக்குதலுக்குப் பிறகு சேதமடைந்த வீட்டைக் காட்டுகிறது. [AP Photo]

புதன்கிழமை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்த தாக்குதலை ஒரு “பெரிய ஆத்திரமூட்டல்” என்று விவரித்ததுடன், உக்ரேனிய துருப்புக்கள் “பொதுமக்கள் கட்டிடங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மீது ஏவுகணைகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களால் கண்மூடித்தனமாக சுட்டதாக” தெரிவித்தார். ரஷ்ய மற்றும் உக்ரேனிய துருப்புக்களுக்கு இடையே மோதல்கள் எல்லைக்கு வடக்கே 7 கிலோமீட்டர் (4.3 மைல்கள்) வரை நடந்தன என்பதை ஆகஸ்ட் 6 தேதியிட்ட, போர் ஆய்வு நிறுவனத்தால் பகுப்பாய்வு செய்யப்பட்ட காட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

ரஷ்ய வலைப்பதிவாளர்களால் வெளியிடப்பட்ட உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள், ஐரோப்பாவிற்கு விநியோகிக்கப்படும் ரஷ்ய எரிவாயு பாயும் சுட்ஜா நகரில் உள்ள ஒரு எரிவாயு அளவீட்டு நிலையத்தை உக்ரேனிய துருப்புக்கள் குறிவைத்துள்ளன என்று தெரிவித்தன.

புதன்கிழமை மாலைக்குள் இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக ரஷ்ய அரசாங்கம் அறிவித்தது. இருப்பினும், குர்ஸ்க் பிராந்தியத்தில் அவசரகால நிலை இன்னும் நடைமுறையில் உள்ளது. புதன்கிழமைக்கும் வியாழக்கிழமைக்கும் இடையிலான இரவில், அப்பகுதியை இலக்கு வைத்து உக்ரேனிய ஆயுதப் படைகள் நடத்திய குறைந்தது ஏழு ஏவுகணைகளை ரஷ்ய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தின.

இக்கட்டுரை எழுதப்படும் வரையில், ஆறு குழந்தைகள் உட்பட 31 குடிமக்கள் காயமுற்றிருப்பதை ரஷ்ய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்தவர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், ரஷ்ய ஊடகங்கள் பல துணை மருத்துவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்தன. இப்பகுதி முழுவதிலும் உள்ள மக்கள் இரத்த தானம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது உண்மையான காயமுற்றோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கிறது. பல குடியிருப்பாளர்கள் வெளியேறுவதில் பிரச்சினைகள் இருப்பதாக முறைப்பாடு செய்துள்ள அதே வேளை, மற்றவர்கள் ஷெல் வீச்சில் இருந்து தப்புவதற்காக தேவாலயங்களில் மறைந்திருக்க வேண்டியிருந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊடுருவலின் அளவும், நேட்டோவால் ஆயுதம் மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட உக்ரேனிய இராணுவம் இதில் சம்பந்தப்பட்டிருந்தது என்ற உண்மையும், மோதலின் ஒரு குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் குறிக்கின்றன. இதற்கு முன்னர் ரஷ்ய நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது உக்ரேன் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது. எவ்வாறிருப்பினும், முந்தைய ஊடுருவல்கள் உக்ரேனின் இராணுவ உளவுத்துறையின் வழிகாட்டுதலின் கீழ் நவ-நாஜி துணை இராணுவப் பிரிவுகளால் நடத்தப்பட்டதே ஒழிய, இராணுவத்தால் அல்ல.

எதிர்பார்த்தபடியே, வெள்ளை மாளிகை உக்ரேனின் ஊடுருவலை ஒரு சட்டபூர்வமான தற்காப்பு நடவடிக்கை என்று பாதுகாத்துள்ளது. வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு தகவல்தொடர்பு ஆலோசகர் ஜோன் கிர்பி வாஷிங்டனில் கூறுகையில், இந்த தாக்குதல் அமெரிக்க கொள்கையை மீறவில்லை என்றும், “எல்லை தாண்டி உடனடி அச்சுறுத்தல்களை குறிவைக்க” அமெரிக்கா வினியோகித்த ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரேனை அமெரிக்கா தொடர்ந்து அனுமதிக்கும் என்றும் தெரிவித்தார்.

உக்ரேனிய இராணுவத்திற்கு போர்முனையில் நிலைமை பெருகிய முறையில் அவநம்பிக்கையுடன் காணப்படுவதால், உக்ரேன் ரஷ்ய பிரதேசத்தின் மீது மிகப்பெரிய ஊடுருவலை இப்போது தொடங்கியுள்ளது. இரண்டரை ஆண்டுகால போருக்குப் பிறகு ரஷ்யப் படைகளிடம் அது தொடர்ந்து அதன் நிலப்பரப்பை உக்ரேன் இழந்து வருகிறது. இது ஏற்கனவே அரை மில்லியன் ஆண்களின் உயிரைப் பறித்துள்ளது. ஜூலை 16 இல், ஒரு புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது, அது 18 முதல் 60 வயதுக்குட்பட்ட மில்லியன் கணக்கான உக்ரேனிய ஆண்கள் - நாட்டை விட்டு வெளியேறியவர்கள் உட்பட - தங்கள் பதிவுத் தரவைப் புதுப்பிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளது.

இந்த புதிய சட்டம் நாட்டில் சமூக மற்றும் அரசியல் பதட்டங்களை வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது. அது நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, உக்ரேனிய செய்தியாளர்கள் WSWS க்கு, ஆட்சேர்ப்பு ரோந்து மூலம் தெருக்களில் இருந்து ஆண்களை வன்முறையில் கடத்தும் முயற்சிகளை பொதுமக்கள் பெருகிய முறையில் எதிர்ப்பதாக தெரிவித்தனர். இந்த பத்திரிகையாளர்களின்படி, அவநம்பிக்கையான சிப்பாய்கள் தங்கள் ஆயுதங்களை தங்கள் தளபதிகள் மீது திருப்பும் பல சமீபத்திய சம்பவங்கள் நடந்துள்ளன. அதே நேரத்தில் போர்முனையில் இருந்து சிப்பாய்கள் ஓடிப்போவது அதிகரித்து வருகிறது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் இவான் கெர்ஷ்கோவிச் மற்றும் முன்னாள் அமெரிக்க கடற்படை சிப்பாய் பால் வீலன் உட்பட அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது. சமரசத்திற்கு தயாராக இருப்பதாக, வாஷிங்டனுக்கும் மற்றும் செல்வந்த தட்டுக்களின் நேட்டோ-ஆதரவு பிரிவுகளுக்கும் தெளிவாக உத்தரவாதமளிக்க முனைந்த புட்டின் ஆட்சி, ரஷ்ய செல்வந்த தட்டுக்களில் உள்ள நேட்டோ-ஆதரவிலான எதிர்த்தரப்பின் மிக உயர்மட்ட தலைவர்கள் பலரையும் விடுவித்தது. அவர்களில் வாஷிங்டனில் பரந்த உறவுகளைக் கொண்டுள்ள விளாடிமிர் காரா-முர்சா மற்றும் ரஷ்ய செல்வந்த தட்டுக்களில் மற்றும் அரசு எந்திரத்தில் உள்ள அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஆதரவிலான கன்னையின் நீண்டகாலமாக நன்கறியப்பட்ட பிரதிநிதியாக இருந்த மறைந்த எதிர்க்கட்சியாளர் அலெக்ஸி நவால்னியின் குழுவின் பல உறுப்பினர்களும் அடங்குவர். புட்டின் எதிர்ப்பு முன்னாள் தன்னலக்குழு மிக்கைல் கோடோர்கோவ்ஸ்கியால் நிறுவப்பட்ட திறந்த ரஷ்யா அமைப்பின் முன்னாள் தலைவரான ஆண்ட்ரி பிவோவரோவையும் ரஷ்யா விடுவித்தது. இதற்குப் பதிலாக, அமெரிக்கா பல குற்றவாளிகளையும், உளவாளிகளையும் விடுவித்தது.

அமெரிக்காவின் முதலாளித்துவ ஊடகங்கள், கைதிகள் பரிமாற்றத்தை இராஜதந்திர முறைக்குத் திரும்புதல் என்று சித்தரித்த அதேவேளையில், உக்ரேனில் நேட்டோவின் போர் முயற்சிகளுக்கு அதிகரித்து வரும் படுதோல்வி மற்றும் ஏகாதிபத்திய சக்தியிடம் கிரெம்ளின் காட்டும் சமரசங்கள், ஏதேனும் இருக்குமானால், கியேவில் உள்ள ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் அதன் பினாமிகளின் ஆக்ரோஷத்தை அதிகரிக்க மட்டுமே செய்கின்றன என்பதை மீண்டுமொருமுறை குர்ஸ்க் பிராந்தியத்தின் மீதான தாக்குதல்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அனைத்திற்கும் மேலாக, போர்முனையில் ஏற்பட்ட இராணுவத் தோல்விகள், நேட்டோ மற்றும் உக்ரேனை ரஷ்யாவிற்குள்ளேயே கூட போரில் ஒரு “இரண்டாவது முன்னணியை” திறப்பதற்கான அவற்றின் முயற்சிகளைத் தீவிரப்படுத்த தூண்டியுள்ளது.

பல அரசியல் படுகொலைகள், கிரெம்ளின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மற்றும் 2022-2023 இல் பாசிசவாத துணை இராணுவப் படைகளின் ஊடுருவல்களுக்குப் பின்னர், இந்த முயற்சிகளில் மிகவும் குறிப்பாக மாஸ்கோ குரோகஸ் நகர மண்டபம் மீதான மார்ச் பயங்கரவாத தாக்குதல்களும் உள்ளடங்கும். இதில் 140 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல்கள், இப்போரில் ஏகாதிபத்திய சக்திகளின் அடிப்படை நோக்கத்துடன் பொருந்துகின்றன: அதாவது, ரஷ்ய பிராந்தியத்திலுள்ள பரந்த மூலப்பொருள் ஆதார வளங்களை ஏகாதிபத்தியத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக, அதன் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் துண்டாடுவதாகும். இந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, குர்ஸ்க் பிராந்தியத்தில் நடந்ததைப் போன்ற ஊடுருவல்கள் போர்முனையில் இருந்து இராணுவ வளங்களை திசைதிருப்புவதற்காக மட்டும் திட்டமிடப்படவில்லை. மாறாக, ரஷ்யாவின் அரசியல் சூழ்நிலையை சீர்குலைத்து, மாஸ்கோவில் ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கான நிலைமைகளை உருவாக்குவதற்காக, ரஷ்ய தன்னலக்குழு மற்றும் அரசு எந்திரத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே பொங்கி எழும் உட்பூசல்களை எரியூட்டவும் அவை நோக்கமாக உள்ளன.

Loading