முன்னோக்கு

ரிச்சர்ட் நிக்சன் இராஜினாமா செய்து ஐம்பது ஆண்டுகள்

ஜனநாயகமும் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாளில், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் (Richard Nixon) பதவியில் இருந்து இராஜினாமா செய்தார், ஏனென்றால் வாட்டர்கேட் ஊழல் அவரது நிர்வாகத்தின் நம்பகத்தன்மையை முற்றிலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. மேலும், வெள்ளை மாளிகை உரையாடல்களின் ஒலிப்பதிவுகள் வெளியிடப்பட்டதுதான் கடைசி துரும்பாக இருந்தது. அதில் “தேசிய பாதுகாப்பு” குறித்த கவலைகளை பொய்யாக கூறி வாட்டர்கேட் ஊடுருவல் மீதான FBI விசாரணையை CIA தடுக்க வேண்டும் என்று நிக்சன், அவரது உயர்மட்ட உதவியாளர்களிடம் கூறியதை கேட்க முடிந்தது.

ஆகஸ்ட் 9, 1974 அன்று, ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த பின்னர் ரிச்சர்ட் நிக்சன் வெள்ளை மாளிகைக்கு வெளியே ஒரு ஹெலிகாப்டரில் ஏறுகிறார். [AP Photo]

வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வாட்டர்கேட் வளாகத்தில் உள்ள ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுவின் தலைமையகத்தில் ஜூன் 17, 1972 அன்று, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான செனட்டர் ஜோர்ஜ் மெக்கவர்னை எதிர்த்து மீண்டும் தேர்தலில் போட்டியிடும் போது முறிவு ஏற்பட்டது. முன்னாள் சிஐஏ ஊழியர்களான ஐந்து கொள்ளையர்களும், இப்போது நிக்சனின் மறுதேர்தல் பிரச்சாரத்திற்காக வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் இரு வெள்ளை மாளிகை அதிகாரிகளான E. ஹோவர்ட் ஹன்ட் மற்றும் G. கார்டன் லிடி ஆகியோரால் அவர்களது உளவுத்துறை சேகரிக்கும் பணிக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் நிக்சனால் இரகசிய விசாரணைகளை நடத்தவும் மற்றும் அவரை விமர்சிப்பவர்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக “இழிந்த தந்திரங்களை” நடத்தவும் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

செங்குத்தாக சரிவு கண்ட நிக்சனின் மறுதேர்தலுக்குப் பிறகு, வாட்டர்கேட் ஊடுருவல் குறித்த விசாரணை வெள்ளை மாளிகையை நெருங்கத் தொடங்கியது. ஹன்ட், லிடி மற்றும் ஐந்து கொள்ளையர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு, நீண்ட சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர் என்று அச்சுறுத்தப்பட்டனர். வெள்ளை மாளிகை வழக்கறிஞர் ஜோன் டீன் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தொடங்கினார். நிக்சனின் உயர்மட்ட உதவியாளர்களான H.R. Haldeman மற்றும் John Ehrlichman ஆகியோருடன் அரசாங்க தலைமை வக்கீல் Richard Kleindeinst இராஜிநாமா செய்தார்.

நிக்சன் இரகசியமாக ஓவல் அலுவலகத்தில் உதவியாளர்களுடன் அவரது உரையாடல்களை பதிவு செய்யும் ஒரு ஒட்டுக்கேட்கும் முறையை நிறுவியிருந்தார். இது ஒரு சட்ட மற்றும் அரசியல் புயலைத் தொட்டது. வாட்டர்கேட் சிறப்பு வழக்குத்தொடுனர் ஆர்ச்சிபால்ட் காக்ஸ் டேப்புகளை அணுகுவதற்கு அழுத்தம் கொடுத்தபோது, நிக்சன் அவரை பதவி நீக்கம் செய்தார். அட்டர்னி ஜெனரல் எலியட் ரிச்சர்ட்சன் மற்றும் அவரது உதவியாளர் வில்லியம் ருக்கெல்ஷாஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து இராஜினாமா செய்தனர். இது “சனிக்கிழமை இரவு படுகொலை” என்று அறியப்பட்டது.

நிக்சன் ஒரு புதிய வாட்டர்கேட் வழக்குத்தொடுனர் லியோன் ஜவோர்ஸ்கியின் பெயரை குறிப்பிட நிர்பந்திக்கப்பட்டார். அவர் ஏழு முன்னாள் உயர்மட்ட நிக்சன் நிர்வாக அதிகாரிகள் மீது ஊடுருவல் மற்றும் மூடிமறைத்தல் தொடர்பான குற்றவியல் குற்றச்சாட்டுக்களின் பேரில் பெரு நடுவர் மன்ற குற்றச்சாட்டுக்களைப் பெற்றார், நிக்சனே கூட “குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத சக-சதிகாரர்” என்று பெயரிடப்பட்டார்.

இறுதியாக, ஜூலை 24, 1974 இல், அமெரிக்க உச்ச நீதிமன்றம் அமெரிக்கா எதிர் நிக்சன் வழக்கில், உயர்மட்ட உதவியாளர்களுடனான அவரது உரையாடல்களின் அந்தரங்கத்தைப் பாதுகாப்பதற்கான “நிர்வாக சிறப்புரிமை” குறித்த ஜனாதிபதியின் கோரிக்கை, அவரது குற்றவியல் விசாரணையைத் தொடர்வதற்கான வாட்டர்கேட் சிறப்பு வழக்குத்தொடுனரின் உரிமைக்கு வழிவிட வேண்டியிருந்தது என்று தீர்ப்பளித்தது. நீதிமன்ற முடிவைத் தொடர்ந்து விரைவில் மன்ற நீதித்துறை குழு குற்றவிசாரணை விதிகளை ஏற்றது.

செய்திகள் வெளியானதும், அந்த டேப்புகள் வாட்டர்கேட் மூடிமறைப்பை இயக்குவதில் நிக்சனின் பாத்திரம் குறித்த அதிர்ச்சியூட்டும் சான்றுகளை வழங்கின. உயர்மட்ட காங்கிரஸின் குடியரசுக் கட்சியினரின் ஒரு தூதுக்குழு வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்து ஜனாதிபதியிடம் அவர் பதவி நீக்க விசாரணைக்கு உட்படுத்தப்படுவார், செனட்டால் தண்டிக்கப்படுவார் மற்றும் பதவியில் இருந்து அகற்றப்படுவார் என்று தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 8, 1974 இரவு, நிக்சன் ஒரு தேசிய தொலைக்காட்சி உரையில், தான் பதவியில் இருந்து இறங்கப் போவதாக அறிவித்தார். மறுநாள் அவர் இராஜிநாமா செய்தார். அவருக்குப் பின் துணை ஜனாதிபதி ஜெரால்ட் போர்ட் பதவிக்கு வந்தார்.

வாட்டர்கேட் ஊழலே அமெரிக்காவில் ஒரு பெரிய தசாப்த கால அரசியல் நெருக்கடியின் ஒரு பகுதியாகும், இதில் 1963 இல் ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடியின் படுகொலையும் அடங்கும், இதன் போது CIA போன்ற ஏஜென்சிகளின் பங்கு மறைக்கப்பட்டது. மேலும், கறுப்பின தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நகர்ப்புற கிளர்ச்சிகளுடன் இணைந்து தெற்கில் வெகுஜன சிவில் உரிமைகள் இயக்கம்; வியட்நாம் போருக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புகள்; மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒரு சக்திவாய்ந்த ஊதிய தாக்குதல் இடம்பெற்றன.

மேலும், வியட்நாமில் டெட் தாக்குதல், ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் மறுதேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பு, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் ரோபர்ட் எஃப். கென்னடியின் படுகொலைகள், சிக்காகோவில் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு வெளியே போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை, மற்றும் இறுதியாக நிக்சன் தேர்ந்தெடுக்கப்பட்டமை போன்ற 1968 இன் கொந்தளிப்பான நிகழ்வுகளுடன் இந்த நெருக்கடி உடையும் புள்ளியை எட்டியது. நிக்சன் வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு “இரகசியத் திட்டத்தை” வைத்திருப்பதாகக் கூறிக்கொண்டார், ஆனால் உண்மையில் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு இரத்தக்களரியைத் தொடர்ந்தார்.

அவருடைய முதல் பதவிக்காலம் முழுவதும், நிக்சனும் அவருடைய நெருக்கமான ஒத்துழைப்பாளர்களும் உள்நாட்டில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வரும் வெகுஜன எதிர்ப்பைக் கண்டு பீதியடைந்தனர். நவம்பர் 1969 இல் ஒரு போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒரு மில்லியன் மக்களை வாஷிங்டனுக்கு கொண்டு வந்த பின்னர், அப்போதைய அட்டர்னி ஜெனரல் ஜோன் மிட்செல் அவரது மனைவி மார்த்தாவிடம் தெருக்களில் காட்சிகள் “ரஷ்ய புரட்சியைப் போல” இருப்பதாகவும், போரை விமர்சிப்பவர்கள் “கம்யூனிஸ்டுகளைக் காட்டிலும் மோசமானவர்கள்” என்றும் கூறினார்.

கீழிருந்து ஒரு அரசியல் எழுச்சி குறித்த இதேபோன்ற அச்சங்கள் —ஜனநாயகக் கட்சியில் உள்ள அவரது பால்சோப் எதிர்ப்பாளர்கள் அல்ல— வாட்டர்கேட்டில் நிக்சனின் சட்டவிரோத நடவடிக்கைகளின் வேராக இருந்தன.

வாட்டர்கேட் நெருக்கடி முழுவதிலும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக், நெருக்கடி குறித்த விரிவான அறிக்கைகளை வெளியிட்டதுடன், நிக்சனை பதவியில் இருந்து அகற்ற தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்திற்கான கோரிக்கையை முன்னெடுத்தது. தொழிலாள வர்க்கம் அமெரிக்க முதலாளித்துவம் நெருக்கடியை அதன் அரசியல் ஏகபோக உரிமை (இரு கட்சி முறை) மற்றும் முதலாளித்துவ அரசின் அடக்குமுறை நிறுவனங்களை பாதுகாக்கும் வழிவகைகள் மூலம் தீர்க்க அனுமதிக்கக் கூடாது என்று நாங்கள் கூறினோம்.

ஃபோர்ட் பதவியேற்று, “நமது நீண்டகால தேசிய கொடுங்கனவு” முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்த பின்னர், நிக்சனின் குற்றங்கள் இனி அம்பலப்படுத்தப்படாமல் இருப்பதற்காக அவர் அவருக்கு மன்னிப்பு வழங்கினார். ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளில் உள்ள பெருவணிக பிரதிநிதிகளும் பெருநிறுவன ஊடகங்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். “அமைப்பு வேலை செய்கிறது,” என்று அவர்கள் அறிவித்தனர்.

குறைந்தபட்சம் சொல்ல, இது முன்கூட்டியே இருந்தது. அடிப்படை அரசியலமைப்பு நடைமுறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் குற்றவியல் வழிவகைகளுக்கு ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் முதல் உண்மையான குறிப்பிடத்தக்க திருப்பத்தை வாட்டர்கேட் குறித்தது என்றாலும், அது கடைசியாகவும் இருக்கவில்லை. ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியினால் உந்தப்பட்டு, அமெரிக்க ஆளும் வர்க்கம் தொடர்ந்து தொழிலாள வர்க்கத்தை தாக்குவதற்கும் ஜனநாயக உரிமைகளை அச்சுறுத்துவதற்கும் வன்முறை மற்றும் சர்வாதிகார வழிவகைகளுக்கு திரும்பியது.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் 1978 இல் டாஃப்ட்-ஹார்ட்லி சட்டத்தைப் பிரயோகித்ததன் மூலமாக நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் தேசிய வேலைநிறுத்தத்தை நசுக்க முனைந்து தோல்வியுற்றார். ஆனால், அவரது நடவடிக்கையானது, ஆகஸ்ட் 1981 இல் PATCO என்றழைக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் உறுப்பினர்களான 11,000 வேலைநிறுத்தம் செய்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளை ரொனால்ட் ரீகன் பாரிய அளவில் பணிநீக்கம் செய்வதற்கு அடித்தளம் அமைத்தது.

1986-87ல், நிகரகுவாவில் இடது-தேசியவாத சாண்டினிஸ்டா அரசாங்கத்திற்கு எதிராக பயங்கரவாதப் போரில் ஈடுபட்டிருந்த பாசிச “கான்ட்ரா” கொலைப் படைகளுக்கு உதவுவதைத் தடைசெய்யும் சட்டத்தை மீறும் சதியில் ரீகன் வெள்ளை மாளிகையை ஈரான்-கான்ட்ரா ஊழலின் வெடிப்பு நேரடியாக உட்படுத்தியது. இந்த நடவடிக்கையின் இயக்குனரான லெப்டினன்ட் கேர்னல் ஒலிவர் நோர்த், மத்திய அமெரிக்காவில் ஒரு முழு அளவிலான போர் நிகழுமானால் அரசியல் எதிரிகளை சுற்றி வளைப்பதற்கான இரகசிய திட்டங்களை தயாரிக்கும் பொறுப்பையும் மேற்கொண்டிருந்தார். றேகன் மீது குற்றவிசாரணை நடத்துவதற்கு அல்லது வழக்குத் தொடுப்பதற்கு பதிலாக, காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் அவருடைய பொறுப்பையும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான அரசு சதியின் பரந்த தாக்கங்களையும் மூடிமறைத்தனர்.

1992 இல் ஜனநாயகக் கட்சியின் பில் கிளிண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், குடியரசுக் கட்சி ஒரு சிறப்பு வழக்கறிஞரை குற்றங்களை விசாரிக்க அல்ல, மாறாக ஒரு அரசியல் சதியை ஆதரிப்பதற்கான ஆதாரங்களை தயாரிக்க பயன்படுத்தியது. ஆர்கன்சாஸில் தோல்வியுற்ற ரியல் எஸ்டேட் முதலீடான வைட்வாட்டர் மீதான விசாரணை, இறுதியில் கிளிண்டனின் தனிப்பட்ட வாழ்க்கையின் ஒரு மோசமான விசாரணையாக மாற்றப்பட்டது, இது 1998 இல் அவரது பதவி நீக்கத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

செனட் சபை தண்டனை வழங்க மறுத்தாலும், பதவி நீக்க விசாரணை 2000ம் ஆண்டு திருடப்பட்ட தேர்தலுக்கு களம் அமைத்தது. இதில் புளோரிடாவில் வாக்கு எண்ணிக்கையை முடிப்பதன் மூலம் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷுக்கு ஜனாதிபதி பதவியை வழங்குவதற்காக புஷ் எதிர் கோர் வழக்கில் உச்சநீதிமன்றம் 5-4 என்ற கணக்கில் வாக்களித்தது. இந்த அசாதாரண முடிவை ஜனநாயகக் கட்சி எதிர்க்கவில்லை.

தேர்தலைத் திருடிய குடியரசுக் கட்சியினர் பயன்படுத்திய பல வாதங்கள் மற்றும் நடைமுறைகள், புளோரிடா மாநிலத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், 2020 இல் நாடு தழுவிய அளவில் ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சி பயன்படுத்திய முறைகளை அவர்கள் எதிர்பார்த்தனர். நீதிபதி அன்டோனின் ஸ்கேலியா வாதிடுகையில், புஷ் எதிர் கோர் வழக்கில் அரசியலமைப்பில் எதுவும் அமெரிக்க மக்களுக்கு ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுக்கவில்லை. மக்கள் வாக்கெடுப்பின் விளைவு பற்றி கவலைப்படாமல், ஜனாதிபதி வாக்காளர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை மாநில சட்டமன்றங்களுக்கு உண்டு என்று அவர் கூறினார்.

ட்ரம்பின் 2020-2021 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியுடன், அமெரிக்க ஜனநாயகத்தின் நீண்டகால நெருக்கடியானது, தீவிரத்தின் ஒரு புதிய மற்றும் வெடிக்கும் புள்ளியை எட்டியது. தேர்தல் முடிவுகள், தான் வெற்றி பெற்றதாகக் காட்டாத பட்சத்தில், அதற்கு மதிப்பளிக்கப் போவதில்லை என்று டிரம்ப் அறிவித்தார்.

அவரது தோல்விக்குப் பின்னர், ஏழு மில்லியன் வாக்குகள் என்ற பரந்த வித்தியாசத்தில், அவர் ஒப்புக்கொள்ள மறுத்து, முடிவை மாற்றுவதற்கான தனது சதியை இரட்டிப்பாக்கினார். ஜனவரி 6, 2021 அன்று, டிரம்ப் தனது தேர்தல் தோல்விக்கான காங்கிரஸின் சான்றிதழைத் தடுக்க முயன்று, அவரது ஆதரவாளர்களால் காங்கிரஸ் கட்டிடமான கேபிடல் மீது வன்முறைத் தாக்குதலைத் தூண்டினார்.

2024 நிகழ்வுகள் அமெரிக்க ஜனநாயகத்தின் முறிவில் இன்னுமொரு மைல்கல்லைக் குறிக்கின்றன. 1974 இல் நாட்டைக் காப்பாற்றியதாகக் கூறப்படும் நிறுவனங்கள், இப்போது வருங்கால சர்வாதிகாரியுடன் அணி சேர்ந்துள்ளன. 1974ல் நிக்சனுக்கு வழியே இல்லை என்று கூறிய குடியரசுக் கட்சி, இன்று பாசிச டிரம்ப் வழிபாட்டு முறையின் கருவியாகவே உள்ளது.

1974 இல் ஒரு சர்வாதிகாரி-ஜனாதிபதிக்கு எதிராக ஒருமனதாக வாக்களித்த உச்ச நீதிமன்றம், ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கான எந்தவொரு சட்டபூர்வ பின்விளைவுகளில் இருந்தும் விதிவிலக்கு குறித்த ட்ரம்பின் வாதங்களை நிலைநிறுத்த ஜூலை 1 அன்று 6-3 என்ற கணக்கில் வாக்களித்தது. 1974 இல் ஹால்ட்மன், எர்லிச்மன் மற்றும் சிஐஏ க்கு நிக்சன் வழங்கிய அறிவுறுத்தல்கள் போன்று, ஒரு ஜனாதிபதி அவரது நிர்வாக பிரிவு கீழ்நிலை அதிகாரிகளுக்கு வழங்கும் எந்தவொரு உத்தரவும் குற்றவிசாரணையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்ற பெரும்பான்மை தீர்ப்பளித்தது. கருத்து வேறுபாடு கொண்ட ஒரு நீதிபதி, இவ்வளவு அதிகாரம் பெற்ற ஒரு ஜனாதிபதி, ஒரு அரசியல் போட்டியாளரை படுகொலை செய்யவோ அல்லது தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படாமல் ஒரு இராணுவ சதிப்புரட்சிக்கு உத்தரவிட முடியும் என்று கூறியபோது, பெரும்பான்மையினர் அவரது கவலையை நிராகரித்தனர்.

1974 இல், நீதிபதி வில்லியம் ரெஹ்ன்குவிஸ்ட், ஒரு கடும்போக்கு பிற்போக்குவாதி, முன்னாள் நிக்சன் நிர்வாக அதிகாரியாக இருந்ததன் காரணமாக, அமெரிக்கா எதிர் நிக்ஸனில் 8-0 என்ற முடிவில் இருந்து விலகினார். 2024 இல், ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் தாமஸின் மனைவி முக்கியப் பங்கு வகித்தாலும், ஆட்சிக் கவிழ்ப்பு வெற்றி பெற்றால் அதற்கு ஆதரவாக நீதிமன்றத் தீர்ப்பை வெளியிட அலிட்டோ தயாராகிக் கொண்டிருந்தபோதும், ட்ரம்ப் சார்பு வாக்கெடுப்பில் கிளாரன்ஸ் தாமஸ் மற்றும் சாமுவேல் அலிட்டோ தங்களைத் தாங்களே விலக்கிக்கொள்ள மறுத்துவிட்டனர்.

ஜனநாயகக் கட்சியைப் பொறுத்த வரையில், உக்ரேனில் ரஷ்யாவுடனான அமெரிக்க-நேட்டோ போரைத் தொடர்வதும், அதனை விரிவாக்குவதும், காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை ஆதரிப்பதும் மற்றும் ஈரானுடனான போருக்குத் தயாரிப்பு செய்வதும், சீனாவுக்கு எதிராக ஆசிய-பசிபிக்கில் அமெரிக்க இராணுவ கட்டமைப்பைத் தொடர்வதும் அதன் முன்னுரிமையாக உள்ளது. இதுதான் இந்தாண்டின் அதன் அனைத்து சூழ்ச்சிகளின் உந்துசக்தியாக உள்ளது. இப்போது ஜனாதிபதி பைடென் போட்டியில் இருந்து விலகுவதிலும், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை ஜனாதிபதி வேட்பாளராக உயர்த்துவதிலும், மற்றும் 24 ஆண்டுகாலமாக இராணுவத்தில் இருந்தவரும் உக்ரேன் மற்றும் காசா போர்களின் ஆதரவாளருமான மின்னசோட்டா ஆளுநர் டிம் வால்ஸை அவர் தனது துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்ததில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் பதவி விலகிய பின்னர் தனது முதல் நேர்காணலில், ஜனாதிபதி பைடென் இந்த வாரம் சிபிஎஸ்ஸிடம் கூறுகையில், நவம்பர் தேர்தலில் டிரம்ப் தோற்கடிக்கப்பட்டால் 2025 ஜனவரியில் அமைதியான அதிகார மாற்றம் இருக்கும் என்று தனக்கு “நம்பிக்கை இல்லை” என்று கூறினார். ட்ரம்ப் அவரே கூட, “நியாயமான”, அதாவது அவர் வெற்றியாளராக அறிவிக்கப்படும் ஒரு முடிவை மட்டுமே அவர் அங்கீகரிப்பார் என்ற கருத்தை பராமரித்து வருகிறார்.

பைடெனின் அறிக்கை அரசியல் யதார்த்தத்தை ஒப்புக்கொள்வதாகவும் மற்றும் அரசியல் திவால்நிலையின் பிரகடனமாகவும் உள்ளது.  ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, பைடெனும் ஜனநாயகக் கட்சியினரும் ட்ரம்பை அவரது குற்றங்களுக்காக நீதியின் முன் கொண்டு வருவதற்கான எந்தவொரு தீவிர முயற்சியையும் தடுத்தனர். முதலாளித்துவ இருகட்சி அமைப்புமுறையைப் பாதுகாப்பதும், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான இருகட்சி போர் வேலைத்திட்டத்தில் குடியரசுக் கட்சியினரின் ஒத்துழைப்பைப் பாதுகாப்பதுமே அவர்களின் பிரதான முன்னுரிமைகளாக பார்க்கப்பட்டு வந்தன. அமெரிக்க உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்கள், வேலைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அவர்களின் பிற்போக்குத்தன தாக்குதல்களின் மூலம், அவர்கள் பாசிச வாய்வீச்சாளரின் அரசியல் நிலைப்பாட்டை புதுப்பிப்பதற்குப் பொறுப்பாக உள்ளனர்.

(இந்த நிகழ்வுகள் பற்றிய ஒரு விரிவான ஆய்வுக்கு, ஜூன் 6, 2005 பற்றிய இந்த எழுத்தாளரின் பகுப்பாய்வைப் பார்க்கவும்: Watergate in historical perspective: Why does today’s criminal White House face no similar challenge?)

Loading