சோசலிசம் மற்றும் விடுதலைக்கான கட்சி (PSL): ஸ்ராலினிசம் மற்றும் நடுத்தர வர்க்க தீவிரவாதத்தின் கூட்டணி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 11, 2022 புதன்கிழமை அன்று கருக்கலைப்பு உரிமைகளை ஆதரித்து வாஷிங்டனில் உள்ள அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தின் முன் சோசலிசம் மற்றும் விடுதலைக்கான கட்சி (PSL) ஆர்ப்பாட்டம் செய்தபோது. [AP Photo/ Amanda Andrade-Rhoades]

ஈராக் போருக்கு எதிரான 2003 எதிர்ப்புகளுக்குப் பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆயுதங்கள் மற்றும் அதன் ஊக்குவிப்புடன் நடத்தப்படும் காஸாவின் மீது இஸ்ரேல் இனப்படுகொலையானது மிகப் பெரிய உலகளாவிய போர் எதிர்ப்பு இயக்கத்தைத் தூண்டியுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அரசியலில் இருந்து நீக்கப்பட்டதாகத் தோன்றிய நீண்ட காலத்திற்குப் பிறகு, 21 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு இனப்படுகொலையைப் பார்த்ததன் மூலம் மில்லியன் கணக்கான மக்கள் அதிர்ச்சியடைந்து தீவிரமயமாக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில், குறிப்பாக ஜனநாயகக் கட்சி மதிப்பிழந்துள்ளது. பைடென் நிர்வாகம் இந்த இனப்படுகொலைக்கான ஆயுதங்கள், நிதி மற்றும் உளவுத்துறையை வழங்கி வருகிறது, அதே நேரத்தில் பாசிச குடியரசுக் கட்சியினருடன் இணைந்து கல்லூரி வளாகங்களில் போராடும் எதிர்ப்பாளர்கள் மீது பொலிஸ்-அரசு ஒடுக்குமுறையை மேற்கொள்கிறது.

அமெரிக்காவில் நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் 21ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்கள். அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முடிவில்லாத போர்கள், சமூக சிக்கன நடவடிக்கை, மற்றும் மிக சமீபத்தில், ஏற்பட்ட பெருந்தொற்று நோய்க்கு ஆளும் வர்க்கத்தின் கொலைவெறி நடவடிக்கைகளின் விளைவாக, கோவிட்-19 மூலம் ஏற்படுத்தப்பட்ட பெருமளவு மக்களின் மரணம் போன்றவைகளுக்கு சாட்சியாக வளர்ந்துள்ளனர்.

இந்தக் காலகட்டம் முழுவதும், வர்க்கப் போராட்டம் தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் நசுக்கப்பட்டது, மேலும் வரலாறு மற்றும் சமூகம் பற்றிய எந்தவொரு புரிதலும் நடைமுறையில் உள்ள பிற்போக்குத்தனமான சூழல் மற்றும் மார்க்சிச எதிர்ப்பு ஊக்குவிப்பால் குறைமதிப்பிற்கு உட்பட்டிருந்தது. இந்த நிலைமைகளின் கீழ், வெகுஜன தீவிரமயமாக்கலின் ஆரம்ப கட்டமானது சமீப காலம் வரை அதிகம் அறியப்படாத அமைப்புகள் மற்றும் போக்குகளின் திடீர் முக்கியத்துவத்துடன் பிணைக்கப்பட்டிருப்பது தவிர்க்க முடியாததாக அமைந்திருக்கிறது.

இவற்றில் மிக முக்கியமானவை சோசலிசம் மற்றும் விடுதலைக்கான கட்சி (the Party for Socialism and Liberation - PSL), இது பல போராட்டங்களை ஒருங்கிணைத்துள்ளது மற்றும் ANSWER கூட்டணியுடன் இணைந்திருக்கிறது. PSL ஆனது ஏகாதிபத்திய-எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு உணர்வுகளுக்கு அதன் பேச்சாற்றலுடன் அழைப்பு விடுக்கிறது, மேலும் ஜனநாயகக் கட்சிக்குள் ஒரு “இடது” பிரிவாக செயல்படும் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளை (Democratic Socialists of America - DSA) விட அதிகளவில் தன்னைத் தீவிரமானதாகக் காட்டுகிறது. 2024 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில், PSL தன்னை ஜனநாயகக் கட்சிக்கு ஒரு சோசலிச மாற்றாகவும், ஒரு புதிய “தொழிலாளர் வர்க்கக் கட்சிக்கான” கருவாகவும் சித்தரிக்கிறது.

ஆனால், எந்தவொரு அரசியல் அமைப்பு அல்லது போக்கைப் போலவே, PSL தன்னைப் பற்றி என்ன சொல்கிறது என்பதன் மூலம் அல்ல, மாறாக அதன் வரலாறு மற்றும் அதன் அரசியல் வேலைத்திட்டத்தின் மூலம் மதிப்பிடப்பட வேண்டும். இந்த அடிப்படையில்தான் ஒரு அமைப்பின் வர்க்கத் தன்மையையும் அதன் அரசியலின் தாக்கங்களையும் மதிப்பிட முடியும். எனவே அவர்களைப் பற்றிய தீவிர பகுப்பாய்வு தேவைப்படுகிறது.

PSL இன் வரலாற்றுப் பதிவு: ஸ்ராலினிசத்தைப் பாதுகாத்தல், சோசலிசப் புரட்சிக்கு புதைகுழி தோண்டுதல்

PSL அதன் சொந்த வரலாறு பற்றி எழுதவுமில்லை மற்றும் சொல்லவுமில்லை. அதன் இணையதளத்தில், அதன் வரலாற்று வேர்களின் கணக்கை மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முக்கிய அனுபவங்களின் மதிப்பீட்டை ஒருவர் வீணாகத் தேடலாம். இந்த மௌனத்திற்கு உறுதியான காரணங்கள் இருக்கின்றன.

முதலாவதாக, எந்தவொரு குட்டி முதலாளித்துவ போக்கையும் போலவே, PSL அரசியலுக்கான வரலாற்று மற்றும் வர்க்க அணுகுமுறையை, அதாவது மார்க்சிச அரசியலை நிராகரிக்கிறது. அதற்குப் பதிலாக நடைமுறைவாதச் சிந்தனைகளின் அடிப்படையில் அதன் கொள்கைகளை உருவாக்குகிறது.

இரண்டாவதாக, PSL இன் ட்ரொட்ஸ்கிச எதிர்ப்புப் போக்கானது அதன் முழு வரலாற்றுப் பதிவும் தொழிலாள வர்க்கத்திற்கும் மார்க்சிசத்திற்கும் கடுமையான விரோதமானதாக இருக்கிறது என்பது அம்பலப்படுகிறது.

வரலாற்று ரீதியாக, தொழிலாளர் உலகக் கட்சிக்குள் (Workers World Party - WWP) இருந்த பிளவிலிருந்து PSL உருவாகியுள்ளது. இரு அமைப்புகளுக்கு இடையேயான பிளவை அவர்களில் ஒருவர்கூட விளக்கவில்லை மற்றும் இன்று வரை PSL இன் வெளியீடுகள் சாம் மார்சியின் (Sam Marcy) (1911-1998) “நிறுவன மேதை” என்று குறிப்பிடுவதை மேற்கோள் காட்டி, அவருடைய அரசியலை தங்கள் பாரம்பரியமாகக் கூறுகின்றனர்.

சாம் மார்சி 1930 களில் போருக்கு இடையேயான காலகட்டத்தில் தீவிரமயமாக்கப்பட்டு அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார். 1940களில் அவர் ட்ரொட்ஸ்கிசத்தால் ஈர்க்கப்பட்டு நான்காம் அகிலத்தின் அமெரிக்கப் பிரிவான சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியில் (Socialist Workers Party - SWP) சேர்ந்தார்.

1923-24ல் ஸ்ராலினிசத்தின் தேசியவாத வேலைத்திட்டத்திற்கு எதிராக உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் உருவாக்கப்பட்டது.
சோவியத் ஒன்றியம் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டதன் விளைவாக தொழிலாளர் அரசிற்குள் தன்னை ஒருங்கிணைத்துக்கொண்ட சலுகை பெற்ற அதிகாரத்துவத்தின் நலன்களை வெளிப்படுத்திய ஸ்டாலின், “தனியொரு நாட்டில் சோசலிசத்தை” கட்டியெழுப்பும் திட்டத்தை வகுத்தார். இந்த தேசியவாத வேலைத்திட்டம் 1917 அக்டோபர் புரட்சிக்கு எதிராக பல தசாப்த கால வன்முறையுடன் கூடிய எதிர்வினைக்கு அடித்தளமாக அமைந்தது.

ஸ்ராலினிஸ்டுகளின் கொள்கைகள் தொழிலாள வர்க்கத்தின் அழிவுகரமான தோல்விகளுக்கு வழிவகுத்தன. சீனாவில் 1925-27 புரட்சியின் போது, ஸ்ராலினிஸ்டுகள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை தேசிய முதலாளித்துவத்திற்கு அடிபணியச் செய்தனர், இதன் விளைவாக கம்யூனிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த பேரழிவு நிலை பின்னர் மத்திய கிழக்கிலும் பிற பிராந்தியங்களிலும் பிரதிபலித்தது, அங்கு ஸ்ராலினிசம் ஒடுக்கப்பட்ட மக்களை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் நிராயுதபாணியாக்கியது. 1930களில் முன்னேறிய ஏகாதிபத்திய நாடுகளில், ஸ்ராலினிஸ்டுகள் முதலாளித்துவத்தின் “ஜனநாயக” பிரிவுகளுடன் இணைந்து ஒத்துழைக்கத் தொடங்கினர். அமெரிக்காவில், கம்யூனிசட் கட்சி (CP) இறுதியில் ஜனநாயகக் கட்சிக்கு முழுமையாக அடிபணிந்ததன் வடிவத்தை எடுத்தது.

சோவியத் ஒன்றியத்திற்குள், அதிகாரத்துவம் தொழிலாள வர்க்கத்தை நசுக்க ஒரு வன்முறை இயந்திரத்தை உருவாக்கியது. ஸ்ராலினிசத்தின் தோற்றம் பற்றி லியோன் ட்ரொட்ஸ்கி தனது காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி என்ற விஞ்ஞான ஆய்வில், சர்வதேச அளவில் புரட்சியை விரிவுபடுத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, அதிகாரத்துவத்தை தூக்கியெறிவதை இலக்காகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் அரசியல் புரட்சியின் மூலம் மட்டுமே அதிகாரத்துவத்தால் அரசியல் அதிகாரத்தை அபகரிப்பது உடைக்கப்பட முடியும் என்றும், தொழிலாளர் அரசின் சீரழிவு நிலைமையை தலைகீழாக மாற்ற முடியும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

இடது எதிர்ப்பு அணி உறுப்பினர்களுடன் லியோன் ட்ரொட்ஸ்கி

1930களின் பெரும் பயங்கரவாதத்தில், உள்நாட்டுப் போரின் போது ஸ்ராலினிச அதிகாரத்துவம் நூறாயிரக்கணக்கான சோசலிச தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை சோவியத் ஒன்றியத்திலும், ஸ்பெயினில் மற்றும் பிற இடங்களிலும் படுகொலை செய்தது. ட்ரொட்ஸ்கி கூறியது போல், “தற்போதைய சுத்திகரிப்பு போல்ஷிவிசத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் இடையில் ஒரு இரத்தக்களரியால் ஆன கோடு அல்ல, மாறாக ஒரு முழு இரத்த ஆறாக இருக்கிறது.” 1940 இல், ட்ரொட்ஸ்கியே மெக்சிகோவில் ஒரு ஸ்ராலினிச முகவரால் படுகொலை செய்யப்பட இருந்தார்.

போருக்குப் பிந்தைய காலத்தில், ஸ்ராலினிசமானது தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக தலை துண்டித்து, ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கங்களை நாசப்படுத்துவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. பாசிசம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் காட்டுமிராண்டித்தனத்தால் மோசமாக மதிப்பிழந்திருந்த உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் உயிர்வாழ்வை இது உறுதி செய்தது. 1938 இல் ட்ரொட்ஸ்கியால் உருவாக்கப்பட்ட நான்காம் அகிலத்திற்கு, இது மிகவும் கடினமான நிலைமைகளை உருவாக்கியது. 1953 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, பப்லோவாதத்தின் நடுத்தர வர்க்க கலைப்புப் போக்கிற்கு எதிராக ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்டத்தைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டது.

போருக்குப் பிந்தைய முதலாளித்துவத்தின் மறு-நிலைப்படுத்தலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பப்லோவாதிகள் ஒரு “புதிய உலக யதார்த்தம்” தோன்றியிருப்பதாக அறிவித்தனர், இது “இரண்டு முகாம்களின்” - ஏகாதிபத்தியம் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் போராட்டத்தால் வரையறுக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு முகாம்களுக்கும் இடையிலான போராட்டம், பப்லோவாதிகளின் கூற்றுப்படி, சர்வதேச வர்க்கப் போராட்டத்தை மாற்றியமைத்திருந்தது. பப்லோவாதிகள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை நிராகரித்தனர், அதற்கு பதிலாக ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு அத்தகைய பங்கைக் கொடுத்தனர். இந்த முன்னோக்கின் அடிப்படையில், பப்லோவாதிகள் நான்காம் அகிலத்தை ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளுக்குள்ளும், அதே போல் முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களுக்குள்ளும் கலைக்க முறையாக வேலை செய்தனர்.

மார்சி ஆரம்பத்தில் பப்லோவாதிகளுடன் சேரவில்லை. ஆனால் அவர் விரைவில் அதே வர்க்க மற்றும் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்ததுடன் ஒத்த அரசியல் கருத்துருக்களை உருவாக்கினார். 1998 இல் மார்சியின் இரங்கல் செய்தியில், வேர்க்கர்ஸ் லீக்கின் (Workers League) [சோசலிச சமத்துவக் கட்சியின் (Socialist Equality Party) முன்னோடி] ஸ்தாபக உறுப்பினரான ஃபிரெட் மசெலிஸ் (Fred Mazelis), மார்சி மற்றும் நடுத்தர வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை நோக்கியும் மற்றும் வலது பக்கம் செல்வதையும் இவ்வாறு விளக்கினார்:

சோவியத் ஆட்சியின் சக்திவாய்ந்த செல்வாக்கு மற்றும் எதிர்ப்புரட்சிக் கொள்கைகளால் எளிதாக்கப்பட்ட ஏகாதிபத்தியத்தின் போருக்குப் பிந்தைய மறுசீரமைப்பு, முந்தைய ஆண்டுகளில் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகவும் சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களுக்கு எதிராகவும் போராடிய பலரை ஆழமாக திசைதிருப்பியது. CIO தொழிற்சங்கங்களின் விரைவான அதிகாரத்துவமயமாக்கல் மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் ஒப்பீட்டளவில் அமைதியான போக்கு [போருக்குப் பிந்தைய காலத்தில்] தொழிலாள வர்க்கத்தில் மார்க்சிச கொள்கைகளுக்கான போராட்டத்தை நம்பிக்கையற்ற திட்டமாக நிராகரிக்க வழிவகுத்தது. அதே நேரத்தில், சோவியத் முகாமின் விரிவாக்கம் மற்றும் சீன மற்றும் யூகோஸ்லாவிய புரட்சிகள் மூலம் சோவியத் அதிகாரத்துவம் மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகள் மற்ற இடங்களில் புரட்சியின் பாதையில் செல்ல நிர்ப்பந்திக்கப்படலாம் என்பதற்கான சான்றாக எடுத்துக் கொள்ளப்பட்டது. மார்க்சிஸ்ட் இயக்கத்தின் நிறுவனர்களையும் ரஷ்யப் புரட்சியின் தலைவர்களையும் உயிரூட்டப்பட்ட உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கு “புதிய உலக யதார்த்தம்” என்ற பெயரில் கைவிடப்பட்டது.

1950களின் இரண்டாம் பாதியில் ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்டத்தை மார்சி முறித்துக் கொண்டபோது, ​​அவர் வெளிப்படையாக ஸ்ராலினிச சார்பு அடிப்படையில் செயல்பட்டார்.

1956 இல் மார்சி சோசலிச தொழிலாளர் கட்சியில் (SWP) இருந்தபோது, ​​ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான ஹங்கேரிய தொழிலாளர்களின் அரசியல் புரட்சிக்கு பதிலளிக்கும்போது, தொழிலாளர்கள் “எதிர்ப்புரட்சியில்” ஈடுபடுவதாகக் கண்டனம் செய்தார். அதிகாரத்துவ இராணுவப் படைகளால் எழுச்சி நசுக்கப்பட்டதை அவர் வரவேற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1959 இன் தொடக்கத்தில், மார்சி சோசலிச தொழிலாளர் கட்சியிலிருந்து (SWP) பிரிந்து தொழிலாளர் உலகக் கட்சியை (WWP) நிறுவினார்.

உலக சோசலி வலைத்தளமானது (WSWS) அவரின் மறைவின் போது குறிப்பிட்டது போல், வரவிருக்கும் ஆண்டுகளில் மற்றும் பல தசாப்தங்களில், மார்சி மற்றும் தொழிலாளர் உலகக் கட்சி (WWP), “வட கொரியாவின் மறைந்த கிம் இல் சுங் (Kim Il Sung) மற்றும் ருமேனியாவின் நிக்கோலே சியோசெஸ்கு (Nicolae Ceaușescu) போன்ற ஸ்ராலினிச கொடுங்கோலர்களுக்கான அருவருக்கத்தக்க பாராட்டுக்களை கம்யூனிச எதிர்ப்பு AFL-CIO தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு அதிகளவு மரியாதை ஆதரவுடன் ஒன்றிணைக்க முடிந்தது.”

2000 ஆம் ஆண்டில் தொழிலாளர் உலகக் கட்சி (WWP) யின் சிறப்பியல்பு பற்றி, அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நீண்ட காலத் தலைவரான மறைந்த ஹெலன் ஹால்யார்ட் (Helen Halyard) எழுதினார்:

தொழிலாளர் உலகக் கட்சியில் (WWP) ஒரு அடிப்படையில் பிற்போக்கு தன்மையின் பல கருத்தியல் போக்குகள் ஒன்றிணைகின்றன. எதிர்ப்பு அரசியல், ஸ்ராலினிசம், முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் கருப்பு தேசியவாதம் போன்ற அடையாள அரசியலின் வடிவங்கள் ஆகியவை இதில் அடங்கும். இவையனைத்தும் நடுத்தர வர்க்க தீவிரவாதம் என்று நாம் அடிக்கடி அழைக்கும் அடையாளங்கள், அதாவது, தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அல்ல, மாறாக முதலாளித்துவ சமூகத்தில் தங்கள் நிலைப்பாட்டில் அதிருப்தி கொண்ட நடுத்தர வர்க்க அடுக்குகளின் நலன்களை பிரதிபலிக்கும் ஒரு அரசியல் முன்னோக்கு, ஆனால் அதனால் தற்போதைய நிலைக்கு உண்மையான புரட்சிகர எதிர்ப்பை முன்னெடுத்துச் செல்ல இயலாது. முதலாளித்துவ சமூகத்தில், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன்களை வெளிப்படுத்தும் வேலைத்திட்டம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை நிலைநாட்ட போராடும் ஒரு வேலைத்திட்டம் மற்றும் முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும்-தாராளவாத மற்றும் பழமைவாத-அதன் அரசியல் சுயாதீனத்தை நிறுவுவதற்கு ஒரு புரட்சிகர சோசலிச இயக்கம் மட்டுமே அடிப்படையை வழங்க முடியும்.

அதன் இன்றியமையாத வரையறைகளில், தொழிலாளர் உலகக் கட்சியின் (WWP) கண்ணோட்டத்தையும் அரசியலையும் சோசலிசம் மற்றும் விடுதலைக்கான கட்சி (PSL) மரபுரிமையாகப் பெற்றுள்ளது.

இன்று சோசலிசம் மற்றும் விடுதலைக்கான கட்சியின் (PSL) கூட்டாளிகள்: ஜனநாயகக் கட்சி மற்றும் முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளுக்கு அடிபணிதல்

PSL இன் ஸ்ராலினிசத்தின் வரலாற்றுப் பாதுகாப்பிற்கும் அதன் இன்றைய அரசியல் நோக்குநிலைக்கும் இடையே ஒரு நேரடியான தொடர்ச்சி உள்ளது.

PSL அதன் அரசியல் திட்டத்தில், “தனி ஒரு நாட்டில் சோசலிசத்தின்” பிற்போக்குத்தனமான, நவீன காலப் பதிப்பை ஆதரிக்கிறது - அதாவது இந்த முறை அமெரிக்காவில். இதற்கிடையில், அதன் தீவிரச் சொல்லாட்சிகள் இருந்தபோதிலும், அது உலகின் மிகப் பழமையான முதலாளித்துவக் கட்சியான ஜனநாயகக் கட்சி, முக்கிய கருவியாக இருக்கும் வோல் ஸ்ட்ரீட்டினையும் மற்றும் அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளுக்கும் அழுத்தம் கொடுப்பதையே முற்றிலும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதன் கட்டுரைக்குக் கட்டுரைகளிலும், உரைக்குப் பின் உரைகளிலும், 9 மாத இனப்படுகொலை மற்றும் 186,000 க்கும் அதிகமானோர் இறந்த பிறகும், பைடென் நிர்வாகம் “செயல்படுவதன்” மீது “அழுத்தம் பிரயோகிப்பது” என்பதன் மூலம் இளைஞர்களையும் தொழிலாளர்களையும் நம்பவைக்க PSL முயற்சிக்கிறது.

ஜனநாயகக் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் இந்த முன்னோக்கு 2003-2004 இல் புஷ் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஈராக் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்களை உயிர்ப்பித்தது இது, அமெரிக்காவில், முக்கியமாக ANSWER கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டது. அன்று போலவே இப்போதும் அது ஒரு முழுமையான முட்டுச்சந்து என்பதை நிரூபித்துள்ளது. ஒரு தசாப்தகால ஆக்கிரமிப்பில் ஈராக் மீதான படையெடுப்பையும் அதன் விளைவாக ஒரு மில்லியன் ஈராக்கியர்கள் கொல்லப்பட்டதையும் இந்த முன்னோக்கால் தடுக்க முடியவில்லை. காஸாவில் இனப்படுகொலை நிறுத்தப்படவில்லை அல்லது தடுக்கப்படவில்லை, மாறாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அழுத்தத்திற்கு “பதிலளிப்பதற்கு” மாறாக, ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது மட்டுமல்லாமல், இனப்படுகொலை பற்றிய “அறிக்கை”யை சமர்பிக்க கசாப்புக் கடைத் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஜூலை 24 அன்று காங்கிரசில் உரையாற்ற அழைப்பு விடுத்துள்ளனர். பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று ANSWER கூட்டணி மற்றும் PSL இன் முக்கிய கோரிக்கை மீண்டும் பைடென் நிர்வாகத்தை நோக்கி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த முயற்சிகளில், PSL மற்றும் ANSWER கூட்டமைப்பானது ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் (UAW) தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளன, இது காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையின் பிரதான ஆதரவாளர்களான பைடென் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பைடெனின் ஸ்டேட் ஆஃப் தி யூனியன் (State of the Union) உரையில் UAW தலைவர் ஷான் ஃபைன் (Shawn Fain) கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார் மற்றும் 2022 இல் அவர் மோசடியான தேர்தலில் இருந்து பல முறை வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்துள்ளார், அவர் “போருக்குச் செல்வேன் என்றும் உறுப்பினர்களின் அதிகாரத்தை உங்களுக்குப் பின்னால் வைப்பேன்” என்று பைடெனிடம் உறுதியளித்தார்.

ஜனவரி 24, 2024 புதன்கிழமை, வாஷிங்டனில் நடைபெற்ற ஐக்கிய கார்த் தொழிலாளர்களின் அரசியல் மாநாட்டில் பேச வரும் ஜனாதிபதி ஜோ பைடெனை, ஐக்கிய வாகனத் தொழிலாளர்களின் தலைவர் ஷான் ஃபைன் வரவேற்றபோது. [AP Photo/Alex Brandon]

இன மற்றும் அடையாள அரசியல் மூலம் தொழிலாளர்களைப் பிரிப்பதற்கான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் முதன்மைக் கருவிகளில் ஒன்றாகவும் PSL வெற்றி பெறுகிறது. மார்க்சிசம், வரலாற்று உண்மை மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளை அது நிராகரித்திருப்பதற்கு குறிப்பாகச் சொல்லும் சான்றாக, நியூயார்க் டைம்ஸின் 1619 திட்டத்தில் அவர்களின் மிக மோசமான நடவடிக்கைகளைப் பார்த்த பின்பும் அதில் அமெரிக்கப் புரட்சிகள் மற்றும் ஆபிரகாம் லிங்கன் மீதான தாக்குதல்களுக்கு PSL ஒப்புதல் அளித்துள்ளது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

இன மற்றும் தேசியவாத அரசியலில் ஈடுபடும் அதே வேளையில், அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச அளவில் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் ஒத்துழைப்பதன் மூலம், ​​PSL முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளை ஆதரிக்கிறது மற்றும் ஏகாதிபத்தியம் மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதை எதிர்க்கிறது. காஸாவில் இனப்படுகொலை பற்றிய அதன் கட்டுரைகளில், PSL ஆனது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்ட செயல்திறனற்ற எதிர்ப்பு அரசியலை ஊக்குவிப்பதோடு, முதலாளித்துவ மற்றும் ஏற்கனவே இஸ்ரேலுக்கு “மூலோபாயத் தோல்வியை” ஏற்படுத்தியுள்ள “ஈரான் வலையமைப்பின் பினாமிகள்” என்று விவரிக்கப்படும் குட்டி முதலாளித்துவ தேசியவாத சக்திகளான ஹமாஸ் மற்றும் யேமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை வெட்கமின்றி பெருமைப்படுத்துகிறது.

PSL இன் மற்றய அரசியல் ஹீரோக்களில் ஜோஸ் மரியா சிசன் (Jose Maria Sison) போன்ற நபர்களும் அடங்குவர். இவர் பிலிப்பைன்ஸில் தொழிலாள வர்க்கத்தின் இரத்தக் களரியான தோல்விகளுக்குப் பொறுப்பானவர் மற்றும் தனது வாழ்நாளின் இறுதிவரை பாசிச டுடெர்டே (Duterte) அரசாங்கத்தை ஆதரித்தவர். இருப்பினும், PSL அவரை ஒரு “தோழர்” மற்றும் “புத்திசாலித்தனமான மற்றும் அர்ப்பணிப்புள்ள புரட்சியாளர்” என்று விவரித்துள்ளது.

PSL ஆனது சீனாவில், ஜி ஜின்பிங்கின் (Xi Jinping) முதலாளித்துவ ஆட்சியை பெருமைப்படுத்துகிறது. அக்டோபர் 22, 2022 அன்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை “சீன மக்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்ட” ஆளும் கட்சி என்று விவரித்துள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஏகாதிபத்திய சக்திகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, கோவிட் எதிர்ப்புத் தணிப்பு நடவடிக்கைகளை முற்றிலுமாக கைவிடுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு இவ்வாறு கூறியது. இது அடுத்த சில வாரங்களுக்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளுக்கு வழிவகுத்தது. அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஆளும் வர்க்கத்தை பிரதிபலிக்கும் PSL, அதன் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திலும் அதன் இணையதளத்திலும் முற்றிலுமாகப் புறக்கணித்து, நடந்துகொண்டிருக்கும் கோவிட் பெருந்தொற்று நோயை ஒரு பிரச்சினை அல்ல என்று அறிவித்துள்ளது என்பதை இங்கு வலியுறுத்த வேண்டும்.

வெளிப்படையாக தன்னைக் குறைவாக காட்டிக்கொண்டாலும், புட்டின் ஆட்சிக்கு ஒரு முன்நோக்கைப் PSL பரிந்துரைக்கிறது, ஆனால் பிப்ரவரி 24, 2022 அன்று உக்ரேன் மீதான அதன் பிற்போக்குத்தனமான படையெடுப்பை கண்டிக்க மறுத்துவிட்டது.

படையெடுப்பிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட PSL அறிக்கையில், நேட்டோ விரிவாக்கம் ரஷ்யாவிற்கு அதன் இருப்பின் மீதான அச்சுறுத்தல் என்றும் ரஷ்யா “முடிவெடுப்பதற்கு” “ஒரு புவிசார் அரசியல் நிலைப்பாட்டில் இருந்து தெளிவான நியாயம்” எடுத்திருக்கிறது என்றும் விவரித்தது. “தீர்வாக” அது நேட்டோவிடம் அதனைக் கலைக்குமாறு வலியுறுத்தி PSL முறையிட்டது. PSL மேலும் கூறியது, “நேட்டோவை கலைத்துவிடுவது கிழக்கு ஐரோப்பாவில் வெடிக்கும் பதட்டங்களைத் தீர்க்கும் மற்றும் உலக அமைதிக்கான வரலாற்றுப் நடவடிக்கையைப் பிரதிபலிக்கும்.” ஏகாதிபத்திய நாடுகளில் ஆளும் வர்க்கம் இந்த Òஉலக அமைதியை நோக்கிய வரலாற்றுப் நடவடிக்கையைÓ எடுக்கவில்லை என்பதைச் சொல்லத் தேவையில்லை!

புட்டின் ஆட்சி 48 மணி நேரத்திற்குள் படையெடுத்தபோது, ​​PSL மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டது, போரைத் தூண்டுவதில் நேட்டோவின் பங்கு மற்றும் நேட்டோவை ஆக்கிரமிப்பாளர் என்று வலியுறுத்தியிருந்தது. புட்டின் ஆட்சியின் பிற்போக்குத்தனமான படையெடுப்பைக் கண்டிக்காமல் மேலும் ரஷ்யா, உக்ரேன், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலுள்ள தொழிலாள வர்க்கத்திற்கு இந்தப் போரை எதிர்ப்பதில் ஒரு தெளிவான பாதையின் முன்னோக்கை வழங்க முடியாமல் இருந்தாலும் நேட்டோவைக் கண்டிக்கும் இத்தகைய அழைப்புகள், புட்டின் ஆட்சியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் நியாயப்படுத்துவதற்கும் வகையாக அமைந்துள்ளது. PSL ஆனது கிரெம்ளினின் மொழியைப் பயன்படுத்தி, போரை “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்று விவரித்துள்ளது. அப்போதிருந்து, உக்ரேன் போர் பற்றிய ஒரு வேலைத்திட்ட ஆவணத்தையும் PSL வெளியிடவில்லை.

இதற்கு நேர்மாறாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, போர் தொடங்கிய சில மணிநேரங்களுக்குள், படையெடுப்பை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டனம் செய்தது. பிப்ரவரி 24, 2022 அன்று ஒரு கொள்கை ரீதியான அறிக்கையில், அனைத்துலகக் குழு (IC) கூறியது:

அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகளின் ஆத்திரமூட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை சோசலிஸ்டுகள் மற்றும் வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்களால் எதிர்க்கப்பட வேண்டும். 1991 ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் மூலம் இயக்கப்பட்ட பேரழிவை ரஷ்ய தேசியவாதத்தின் அடிப்படையில் தடுக்க முடியாது, இது விளாடிமிர் புட்டின் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு சேவை செய்யும் முற்றிலும் பிற்போக்குத்தனமான சித்தாந்தமாகும்.

1917க்கு முந்தைய ஜாரிசத்தின் வெளியுறவுக் கொள்கைக்கு திரும்புவது அல்ல, மாறாக, ரஷ்யாவிலும் உலகம் முழுவதிலும், 1917 அக்டோபர் புரட்சிக்கு உத்வேகம் அளித்த சோசலிச சர்வதேசியவாதத்தின் மறுமலர்ச்சி மற்றும் சோவியத் ஒன்றியத்தினை ஒரு தொழிலாளர் அரசாக உருவாக்க வழிவகுத்த நிலைமைகள் தேவைப்படுகிறது. உக்ரேன் மீதான படையெடுப்பு, புட்டின் ஆட்சியால் என்ன நியாயப்படுத்தப்பட்டாலும், ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கு மட்டுமே உதவும், மேலும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு சேவை செய்யும்.

மேலோட்டமாகப் பார்த்தால், பைடென் நிர்வாகம் மற்றும் நேட்டோவிடம் “அதனைக் கலைத்துகொள்ள” வேண்டுகோள் விடுப்பது PSLக்கு முரணாகத் தோன்றலாம். அதே நேரத்தில் புட்டின் ஆட்சி மற்றும் ஜி ஜின்பிங் ஆட்சிக்கு நடைமுறையில் ஆதரவை வழங்குகிறது. எவ்வாறாயினும், வரலாற்று மற்றும் சமூக நோக்குநிலையின் அடிப்படை நிலைப்பாட்டில் இருந்து, இந்த நிலை முற்றிலும் முரணற்றதாக இருக்கிறது.

உண்மையில், குறிப்பாக ஏகாதிபத்திய ஆளும் வர்க்கத்திற்கு அதன் வேண்டுகோள் விடுப்பதன் மூலம், சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ மறுசீரமைப்பில் இருந்து போனபார்ட்டிச ஆட்சியாக உருவான புட்டின் ஆட்சியின் நவ-ஸ்ராலினிச கொள்கைகளை PSL பிரதிபலிக்கிறது. உக்ரேன் மீதான அதன் பிற்போக்குத்தனமான படையெடுப்புடன், புட்டின் ஆட்சி ஏகாதிபத்திய சக்திகள் மீது அழுத்தத்தை பிரயோகிக்கவும் அவர்களை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைக்க கட்டாயப்படுத்தவும் முயல்கிறது. இந்த கணக்கீடு பேரழிவு தரும் வகையில் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும், கிரெம்ளின் அதை கைவிடவில்லை. ஒரு சமூகப் புரட்சியின் அச்சுறுத்தலுக்கு எதிராக தன்னலக்குழுக்களின் சொத்துக்களைப் பாதுகாப்பதில் முக்கிய அக்கறை கொண்ட புட்டின் ஆட்சி, ஏகாதிபத்தியத்துடன் “அமைதியான சகவாழ்வை” நோக்கிய ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் நோக்குநிலையைப் பேணிக் கொள்கிறது. இந்த நவ-ஸ்ராலினிச வெளியுறவுக் கொள்கை முதலாளித்துவ சார்பு மட்டுமல்ல, நடைமுறைப்படுத்த முடியாததும் கூட.

டேவிட் நோர்த் 2023 இல் விளக்கியது போல்:

முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய அரசுகளுக்கு இடையே உலக வளங்களை அமைதியான முறையில் விநியோகிப்பதும், ஒதுக்கீடு செய்வதும் சாத்தியமற்றது. உலகப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் போருக்கு இட்டுச் செல்கின்றன. எவ்வாறாயினும், அதன் தவறான தத்துவார்த்த அடித்தளங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு “பல-துருவ” உலகை யதார்த்தமாக்குவதற்கு, இன்றைய மேலாதிக்க ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்காவால் அது அமைதியாக ஏற்றுக்கொள்ளப்படுவது அவசியமாகும். இது ஒரு யதார்த்தமான எதிர்பார்ப்பு அல்ல. அமெரிக்கா “ஒற்றைத் துருவ” மேலாதிக்கத்திற்கான அதன் முனைவைத் தடுப்பதற்கான அதன் முயற்சிகளை அதன் வசமுள்ள அனைத்து வழிவகைகளையும் கொண்டு எதிர்க்கும். இவ்வாறாக, ஒரு “ஒற்றைத் துருவத்தை” ஒரு “பல-துருவ” உலகத்தைக் கொண்டு பிரதியீடு செய்ய முயலும் கற்பனாவாத வாதம், அதன் சொந்த திரிக்கப்பட்ட தர்க்கத்தால், மூன்றாம் உலகப் போருக்கும் கிரகத்தின் அழிவுக்கும் இட்டுச் செல்கிறது.

முடிவுரை

ஏகாதிபத்திய போருக்கு சோசலிச எதிர்ப்பின் அடிப்படைக் கோட்பாடானது தொழிலாள வர்க்கத்திலும் அதன் சர்வதேச ஐக்கியத்திலும் வேரூன்றி இருக்கவேண்டும். மேலும், அனைத்திற்கும் மேலாக, ஒரு பிற்போக்குத்தனமான மோதலில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் புரட்சிகரத் தோற்கடிப்புவாத நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று முதலாம் உலகப் போருக்குப் பின்னர் இருந்தே புரட்சிகர சோசலிஸ்டுகள் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளனர். அதாவது, போர் மூலமாக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தனது சொந்த தேசிய மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க முனைகின்ற அவர்களின் “சொந்த” முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான ஒரு புரட்சிகர எதிர்ப்புக் கொள்கையாக அது இருக்கிறது.

PSL இந்தக் கொள்கைகள் அனைத்தையும் தலைகீழாக மாற்றுகிறது: வளர்ச்சியடைந்து வரும் உலகப் போர் நிலைமை மற்றும் DSA போன்ற நன்கு அறியப்பட்ட போலி-இடது போக்குகளின் மதிப்பிழந்த நிலைமைகளின் கீழ், தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் இந்த அல்லது அந்த முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுடன் இணைக்க அது தீவிரமாக முயற்சிக்கிறது. உண்மையான சோசலிசப் போக்காக இல்லாமல், இது ஒரு தேசியவாத குட்டி-முதலாளித்துவ தீவிர அமைப்பாக இருக்கிறது, தீவிரப்பட்டுவரும் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் உண்மையான சோசலிச மற்றும் புரட்சிகர அரசியலுக்கான பாதையைக் கண்டுபிடிப்பதைத் தடுப்பதில் அதன் முக்கிய பங்கு இருக்கிறது.

இது இனப்படுகொலை எதிர்ப்பு போராட்டங்களின் “அரசியல் போலீஸ்” என்ற PSL இன் பாத்திரத்தை தெளிவான வெளிப்பாடாக பார்க்கமுடிந்தது: மேடையில் தீவிரமான சொற்றொடரைத் தூண்டி பேசும்போது, ​​பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்களுக்குத் தெரியாமல் PSL ஆனது IYSSE மற்றும் SEP உறுப்பினர்களை ஆர்ப்பாட்டங்களில் பேசவிடாமல் வழக்கமாகத் தடுத்துவருகிறது.

PSL இன் முழு வரலாறு மற்றும் அரசியல் பற்றி பார்த்தால் ஒரு துர்நாற்றம் இருக்கிறது, அதன் அரசியலை நவ-ஸ்ராலினிசமாக சிறப்பாக விவரிக்க முடியும். உலக ஏகாதிபத்தியத்தின் மையமான அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ஒடுக்கப்பட்ட நாடுகளிலும் சரி, சோசலிசப் புரட்சியின் 20ம் நூற்றாண்டின் புதைகுழியைத் தோண்டியவரின் பழைய அழுகிய சூழ்ச்சிகள் அனைத்தையும் அது மறு ஏற்பாடாக கொண்டிருக்கிறது. ஆளும் வர்க்கத்தின் நெருக்கடியின் ஆழத்தைப் பற்றி அது பேசுகிறது, ஆளும் வர்க்கம் இப்போது அதன் கொள்கைகளுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை தடம்புரளச் செய்வதற்கும் அதன் ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதற்கும் இத்தகைய சக்திகளை நம்ப வேண்டியுள்ளது

இந்த முட்டுக்கொடுத்தல் உண்மையில் ஆட்டம்காணும் என்று கணிக்க ஆழமான வரலாற்று தொலைநோக்கு தேவையில்லை. “வரலாற்றின் குப்பைத்தொட்டி” என்று ட்ரொட்ஸ்கி பொருத்தமாக அழைத்ததற்கு PSL ஒரு முதன்மையான உதாரணமாக விளங்குகிறது. வரவிருக்கும் போர் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் அதிர்ச்சிகளின் சோதனையில் அதன் அரசியல் தாக்குபிடிக்காது. இத்தகைய போக்குகளின் தோற்றமும் மறைதலும் ஒரு விதிவிலக்கு அல்ல, மாறாக வெகுஜன தீவிரமயமாதலின் எந்தவொரு நிகழ்ச்சிப்போக்கின் விதியாகும்.

புரட்சியை நோக்கிய வெகுஜன மக்களின் இயக்கம் ஒரே இரவில் ஏற்படுவதில்லை. தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் போராட்டத்தின் உறுதியான அனுபவங்களை கடந்து செல்கின்றனர். அதன் போக்கில் அவர்கள் வெவ்வேறு அரசியல் போக்குகளுடன் தொடர்பு கொள்கிறார்கள் மேலும் ஆளும் வர்க்கத்தால் அவர்களின் பாதையில் வீசப்படும் அரசியல் மற்றும் கருத்தியல் தடைகளை கடக்க வேண்டும்.

ஆனால் இது கடந்த 10 மாத போராட்டங்களில் இருந்து அரசியல் படிப்பினைகளைப் பெறுவது மற்றும் PSL போன்ற அமைப்புகளின் பங்கைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் துரிதப்படுத்துகிறது.

காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்ட இயக்கம் ஒரு முட்டுச் சந்தில் உள்ளது.

அது குட்டி முதலாளித்துவ தேசியவாத அமைப்புகளால் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தப்பட்டு, ஜனநாயகக் கட்சிக்கு அடிபணிந்தால், அது தவிர்க்க முடியாமல் வீழ்ச்சியடையும், இது இளைஞர்களிடையே மனச்சோர்வு மற்றும் அரசியல் விரக்தியின் உணர்வை மோசமாக்கும். அதுக்கு உதாரணமாக ஏற்கனவே ஆரோன் புஷ்னெலின் (Aaron Bushnell) சோகமான தற்கொலை எதிர்ப்பு முடிவுக்கு வழிவகுத்திருக்கிறது.

மற்றைய பாதை தொழிலாள வர்க்கத்தை நோக்கிய ஒரு சக்திவாய்ந்த சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதில் உள்ளது, இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேற்பார்வையில் ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் பரவி வரும் மூன்றாம் உலகப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திறன் கொண்டது.

உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (International Youth and Students for Social Equality), அமைப்பானது ஏகாதிபத்திய போரை எதிர்க்கும் அனைத்து இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களை தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச தலைமையை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை முன்னெடுக்க அழைப்பு விடுக்கின்றனர்! ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்றையும் அரசியலையும் படிக்கவும்! காஸாவில் இனப்படுகொலை, உக்ரேனில் போர் மற்றும் மூன்றாம் உலகப் போரை நோக்கி தீவிரமடைந்து வருவதைத் தடுக்க உண்மையான சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்காக ஜூலை 24 அன்று வாஷிங்டன் டிசியில் சோசலிச சமத்துவக் கட்சி (US) மற்றும் IYSSE அமைப்பும் சக்திவாய்ந்த பேரணியை நடத்தியது.


Loading