முன்னோக்கு

குர்ஸ்க் மீதான நேட்டோ-உக்ரேனிய தாக்குதலின் அரசியல் முக்கியத்துவம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ரஷ்யாவின் குர்ஸ்க் நகரில் உக்ரேனிய தரப்பினரின் ஷெல் தாக்குதலுக்குப் பிறகு சேதமடைந்த ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் மக்கள் கூடி நிற்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 11, 2024 [AP Photo]

ஆறு நாட்களுக்கு முன்பு, ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தின் மீது உக்ரேன் ராணுவ தாக்குதலைத் தொடங்கியது. இந்த நேரத்தில், பல ஆயிரம் உக்ரேனிய துருப்புக்கள் ரஷ்ய எல்லையை தாண்டி ஒரு டசின் மைல்கள் தூரம்வரை முன்னேறியிருந்தன. இந்தக் கட்டம் வரையில், ரஷ்யாவினால் இந்த தாக்குதலை முறியடிக்க முடியவில்லை. மேலும் முன்னேறிவரும் ரஷ்யாவின் கூடுதல் படைகளின் அணிகள் நீண்ட தூர தாக்கும் ஆயுதங்களால் அழிக்கப்பட்டுள்ளன. திங்களன்று, உக்ரேனிய படைகள் எல்லையைக் கடந்துவிட்டதாகக் கூறுயதால், அருகிலுள்ள மற்றொரு எல்லைப் பகுதியான பெல்கோரோட்டில் இருந்து ரஷ்யா வெளியேறத் தொடங்கியுள்ளது.

குர்ஸ்க் தாக்குதல் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ செயல்திறனைக் கொண்டுள்ளது. ஆனால், இது கணிசமான அரசியல் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இது புட்டின் ஆட்சி மீதான ஒரு அளப்பரிய அரசியல் அவமானம் என்பதோடு, ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர் விரிவாக்கத்துக்கு அதனிடம் எந்த “சிவப்புக் கோடுகளும்” இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

உக்ரேனிய தாக்குதலுக்கு ஒப்புதல் கொடுத்துள்ள அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை, இத்தாக்குதலுக்கான அதன் திட்டமிடல், ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் அவை தொடர்பு கொண்டிருக்கவில்லை என்று கூறுகின்றன.

நேட்டோ சம்பந்தப்படவில்லை என்ற இத்தகைய கூற்றுக்கள் அபத்தமானவை. இத்தாக்குதல் வாஷிங்டனில் நேட்டோ உச்சிமாநாட்டிற்கு வெறும் ஒரு மாதத்திற்குப் பின்னர் வந்துள்ளது. அது உக்ரேனிய இராணுவத்தின் ஆயுதம் மற்றும் பயிற்சியின் மேற்பார்வையை நேரடியாக நேட்டோவிற்கு உத்தியோகபூர்வமாக மாற்றியது. அமெரிக்க மற்றும் ஜேர்மன் டாங்கிகள் மற்றும் நீண்டதூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி உக்ரேனின் குர்ஸ்க் மீதான தாக்குதல் உண்மையில் வாஷிங்டன், பேர்லின் மற்றும் இலண்டனில் இருந்து நிமிடத்திற்கு நிமிடம் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

எண்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், ஜூன் 1941 இல் பர்பரோசா நடவடிக்கையின் தொடக்கத்தில், ஜேர்மன் டாங்கிகள் சோவியத் ஒன்றியத்தின் எல்லையை நோக்கி பாய்ந்தன. இன்று, ஜேர்மன் கவச வாகனங்கள் மீண்டுமொருமுறை ரஷ்யாவிற்குள் சென்று கொண்டிருக்கின்றன. அவை உக்ரேனிய படைகளால் இயக்கப்படுகின்றன, அவை பெரும்பாலும் நாஜிக்களின் ஸ்வஸ்திகா மற்றும் ஹிம்லரின் SS கொலைப்படையால் பயன்படுத்தப்பட்ட இரட்டை-சிக் ரூன் உட்பட அதே சின்னங்களைக் காட்டுகின்றன.

பர்பரோசா இராணுவ நடவடிக்கை தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், வரலாற்றில் மிகப் பெரிய, ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் இடம்பெற்ற தரைவழிப் போரில் நாஜிப் படைகள் தீர்க்கமாக தோற்கடிக்கப்பட்டன.

இப்போது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முன்னணி வெளியீடான எகானாமிஸ்ட், அதே பிராந்தியத்தில் ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டு சரியாக 80 ஆம் ஆண்டு நிறைவடைந்த ஒரு மாதத்தில் வரும் ஒரு தாக்குதலைப் போற்றி, “இரண்டாம் குர்ஸ்க் போர்” தொடங்கிவிட்டதாக பிரகடனம் செய்துள்ளது.

உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஒரு ஆலோசகர் மைகைலோ பொடோல்யாக்கின் வார்த்தைகளில் கூறுவதானால், “சர்வதேச சமூகத்தின் கணிசமான பகுதியானது, எந்தவொரு இராணுவ நடவடிக்கைக்கும், எந்த வகையான ஆயுதங்களை பாவிப்பதுக்கும் ஒரு முறையான இலக்காக ரஷ்யாவை கருதுகிறது” என்பதை குர்ஸ்க் மீதான தாக்குதல் எடுத்துக்காட்டியுள்ளது.

நேட்டோ ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவைத் தாக்க உக்ரேனுக்கு அனுமதி என்றால், நேட்டோ துருப்புக்கள் ரஷ்யாவை நேரடியாகத் தாக்குவதும் அனுமதிக்கப்படுகிறது என்பது தவிர்க்க முடியாதது.

போரில் நேரடியாக ஈடுபடுவதற்கான பைடென் நிர்வாகத்தின் சுய-பிரகடன வரம்புகள், ஒன்றன் பின் ஒன்றாக, திட்டமிட்டு அகற்றப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டில், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு முன்பு, அமெரிக்கா முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக உக்ரேனுக்கு ஆபத்தான ஆயுதங்களை வழங்கியது. பின்னர் 2023 இல் கவச வாகனங்கள் மற்றும் டாங்கிகளும், 2024 இல் F-16 போர் விமானங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளும் உக்ரேனுக்கு வந்தன. பின்னர் ரஷ்யாவிற்குள் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி கிடைத்தது. இப்போது, உக்ரேன், அமெரிக்க மற்றும் ஜேர்மன் கவச வாகனங்களைப் பயன்படுத்தி, ரஷ்யா மீது நேரடியாக ஒரு தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

கிரிமியாவுக்கு எதிரான ஒரு இராணுவத் தாக்குதல் உட்பட அதன் சொந்த துருப்புகளை நிலைநிறுத்துவதே நேட்டோ கடக்க இருக்கும் அடுத்த “சிவப்புக் கோடாக இருக்கலாம்”.

நாஜி ஒத்துழைப்பாளரும் யூத இனப்படுகொலை குற்றவாளியுமான ஸ்டீபன் பண்டேராவை அதன் கருத்தியல் தலைவராகக் கருதும் உக்ரேனிய ஆட்சி, ரஷ்யாவை அடிபணியச் செய்யும் நோக்கில் ஒரு போரை சட்டப்பூர்வமாக்குவதற்கான தொடக்கப் புள்ளியை உருவாக்கியுள்ளது. சென்ற ஆண்டு, ஜேர்மனி உட்பட பிரதான நேட்டோ சக்திகளின் தூதர்கள், நாஜி போர் குற்றவாளி யாரோஸ்லாவ் ஹன்காவைப் பாராட்டுவதில் ஒட்டுமொத்த கனேடிய நாடாளுமன்றத்துடன் கைகோர்த்த போது, அவர்கள் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போரின் அடிப்படை அரசியல் உள்ளடக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியத்தை அழித்து முதலாளித்துவ மீட்சி செய்யப்பட்டதில் இருந்து எழுந்த கிரெம்ளினில் உள்ள செல்வந்த தன்னலக்குழுக்களின் ஆட்சியானது, ரஷ்யாவை அடிபணிய வைப்பதற்கான நேட்டோவின் முனைவுக்கு முற்போக்கான பதிலடி என்பது ஒருபுறம் இருக்கட்டும், மாறாக, அது எந்தவிதமான சாத்தியமான விடையிறுப்பையும் கொண்டிருக்கவில்லை.

ஞாயிறன்று, அட்லாண்டிக் கவுன்சில் சிந்தனைக்குழுவானது, இந்த தாக்குதலுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் விடையிறுப்பை மதிப்பிடும் ஒரு வலைப்பதிவு இடுகையை வெளியிட்டது:

உக்ரேனின் தாக்குதல், ரஷ்ய அச்சுறுத்தல்களின் நம்பகத்தன்மை மற்றும் மேற்கத்திய நாடுகளால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கைகளின் பகுத்தறிவு குறித்து கடுமையான கேள்விகளை இன்று எழுப்புகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, ரஷ்யா மீதான உக்ரேனிய இராணுவத்தின் தற்போதைய படையெடுப்பு நிச்சயமாக அனைத்து சிவப்புக் கோடுகளிலும் பார்க்க அதிக சிவப்பானது. சாத்தியமான அணுஆயுத விரிவாக்கம் குறித்து ரஷ்யா தீவிரமாக இருந்திருந்தால், அதன் பல அச்சுறுத்தல்களைச் சமாளிக்க இது ஒரு தருணமாக இருக்கும். உண்மையில், புட்டின் படையெடுப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் விடையிறுத்துள்ளார், அதே நேரத்தில் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கிறது என்று பாசாங்கு செய்துள்ளார்.

உண்மையில், நேட்டோ ரஷ்யாவுடனான நேரடி போரில் அதன் சொந்த ஈடுபாட்டை மட்டுப்படுத்த முன்னர் அமைத்திருந்த ஒவ்வொரு “சிவப்புக் கோட்டையும்” கடக்க உறுதியாக உள்ளது. இதில் இப்போது “அனைத்து சிவப்புக் கோடுகளிலும் பார்க்க அதிகமான சிவப்புக் கோடுகளும்” உள்ளடங்கும்: அதாவது, ரஷ்ய பிராந்தியத்தின் மீதான அதன் நேரடித் தாக்குதல்களும் அடங்கும்.

இந்தக் கொள்கையின் பொறுப்பற்ற தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது சாத்தியமில்லை. ரஷ்ய பிராந்தியத்தின் மீதான தாக்குதல் அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதன் மூலம் எதிர்கொள்ளப்படும் என்று ரஷ்ய அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையேயான முழு அளவிலான போரை மட்டுமல்ல, மாறாக மனிதகுலம் முழுவதையும் அழிக்கும் திறன் கொண்ட, ஒரு அணுஆயுத பரஸ்பர தாக்குதலைத் தூண்டிவிடக் கூடிய ஒரு நடவடிக்கையை, ஏறக்குறைய ரஷ்யா செயல்படுத்துவதை சாதகமாக்கிக் கொள்ள நேட்டோ சக்திகள் கிட்டத்தட்ட ரஷ்யாவுக்கு சவால் விடுகின்றன.

குர்ஸ்க் மீதான தாக்குதல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பில் இருந்து வெளிப்பட்ட முதலாளித்துவ அரசின் பலவீனத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

ரஷ்ய தன்னலக்குழு ஒரு நல்ல நடத்தை கொண்ட, கம்யூனிச-விரோத “முதலாளித்துவ” ஆட்சி என்றும், அமெரிக்கா உடனான அதன் உறவைக் காப்பாற்ற அதனால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய பெரும்பிரயத்தனம் கொண்டுள்ளதாகவும் புட்டின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் டக்கர் கார்ல்சனுடனான தனது நேர்காணலில் புட்டின் வருத்தத்துடன் பின்வருமாறு விளக்கினார்:

நாங்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றோம். “தயவு செய்து வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தோம். நாங்கள் இப்போது உங்களைப் போலவே முதலாளித்துவமாக இருக்கிறோம். நாங்கள் ஒரு சந்தைப் பொருளாதாரத்தை கொண்டுள்ளோம், கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிகாரம் இல்லை. பேச்சுவார்த்தை நடத்துவோம்”.

ஆயினும், ஏகாதிபத்திய சக்திகள் பேச்சுவார்த்தையில் அக்கறை காட்டவில்லை. மாறாக, அவை மேலாதிக்கம் செலுத்தவும் மற்றும் அமெரிக்காவின் கட்டளைகளை ஏற்க ரஷ்யாவை நிர்பந்திக்கவும் உறுதியாக உள்ளன. ஏகாதிபத்திய சக்திகள் “பகுத்தறிவுடன்” நடந்து கொள்ள வேண்டுமென்று புட்டின் கூறும் அனைத்து வாதங்களும் அவற்றின் பொறுப்பற்ற தன்மையை மட்டுமே அதிகரிக்கின்றன. அவை ரஷ்யாவை இராணுவரீதியில் நசுக்கவும், அதன் அரசாங்கத்தைக் கவிழ்க்கவும், இறுதியில் யூகோஸ்லாவியாவை ஒரு முன்மாதிரியாகப் பயன்படுத்தி, ஏகாதிபத்தியத்தால் சுரண்டப்படக் கூடிய சண்டையிடும் சிறுநகரங்களின் ஒரு குழுவாக நாட்டைக் கலைக்கவும் தீர்மானகரமாக உள்ளன.

புட்டினே கூட, நேட்டோவுடன் ஒரு உடன்பாட்டை விரும்புகின்ற ரஷ்ய ஒருசிலவராட்சியின் கணிசமான பிரிவிடம் இருந்து பெரும் அழுத்தத்தின் கீழ் உள்ளார். அது, அவர்களின் மேற்கத்திய வங்கிக் கணக்குகள் மற்றும் அவர்களின் சொகுசுப் படகுகளை அணுக அனுமதிக்கும். இந்த சமூக அடுக்கு தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயப்படல் குறித்து நேட்டோவை விட அதிகமாக அஞ்சுகிறது

அதே நேரத்தில், நேட்டோ சக்திகளின் தரப்பில் தொடர்ச்சியான போர் அதிகரிப்பு, புட்டின் அரசாங்கம் அதன் இராணுவ பழிவாங்கும் அச்சுறுத்தல்களை சரிசெய்ய நிர்பந்திக்கப்படும் நிலைமைகளை தோற்றுவிக்க முடியும்.

ட்ரம்ப் ஜனாதிபதியாக வருவதற்கான சாத்தியக்கூறு ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்க-நேட்டோவின் நேரடியான ஈடுபாட்டின் அளவைக் குறைக்கும் என்று புட்டின் ஐயத்திற்கிடமின்றி நம்புகிறார். ஆனால் ட்ரம்ப் நிர்வாகம் தான் உக்ரேனுக்கான நேரடி அமெரிக்க-நேட்டோ ஆயுத விற்பனையை முதலில் அங்கீகரித்ததோடு, தற்போதைய போரைக் கட்டியெழுப்புவதற்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவு என்னவாக இருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மனித உயிர்களின் விலையைப் பொருட்படுத்தாமல், முன்னாள் சோவியத் யூனியன் முழுவதையும் அடிபணியச் செய்வதில் உறுதியாக உள்ளது.

குர்ஸ்க் தாக்குதல், ரஷ்யாவை மட்டுமல்ல, மாறாக சீனா மற்றும் ஈரானையும் இலக்கில் கொண்டு, உலகெங்கிலும் ஏகாதிபத்திய வன்முறையின் ஓர் உலகளாவிய வெடிப்பின் பாகமாக உள்ளது. திங்களன்று அமெரிக்கா மத்திய கிழக்கில் ஈரானை அச்சுறுத்தும் போர்க்கப்பல்கள் குழுவை நிலைநிறுத்துவதாக அறிவித்தது. இது தற்போதைய உலகளாவிய இராணுவ விரிவாக்கம் உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது.

ரஷ்யாவுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் நேட்டோ போர், 1917 ரஷ்யப் புரட்சியின் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் இறுதிக் காட்டிக்கொடுப்பைக் குறிக்கும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் முழு மற்றும் பேரழிவு விளைவுகளை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது. அந்த நேரத்தில், சோவியத் ஒன்றியத்தை கலைப்பதற்கான ஆதரவாளர்கள், இது அமெரிக்கா மற்றும் நேட்டோவுடன் “சமாதான சகவாழ்வுக்கு” நிலைமைகளை உருவாக்கும் என்று கூறினர். ஏகாதிபத்தியம் என்பது லெனினால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கட்டுக்கதை என்று அவர்கள் கூறினர். மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், ஏகாதிபத்தியம் உண்மையில் மிகவும் யதார்த்தமானது என்பது தெளிவாகி உள்ளதோடு, ரஷ்யாவை அழிப்பதுக்கு இலக்காக தேர்ந்தெடுத்துள்ளது

ஏகாதிபத்திய போருக்கு மூலகாரணமான முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கிவீசுவதற்கான போராட்டத்தில், அக்டோபர் புரட்சியின் பாரம்பரியங்களின் அடிப்படையில், ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் ஒட்டுமொத்தமான பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு வெளியே, ஏகாதிபத்திய போரின் பாரிய விரிவாக்கத்திற்கு அங்கே எந்த தீர்வும் கிடையாது.

Loading