முன்னோக்கு

இஸ்ரேலுக்கு 20 பில்லியன் டாலர் ஆயுத விற்பனையுடன் மத்திய கிழக்கில் போர் தயாரிப்புகளை வாஷிங்டன் தீவிரப்படுத்துகிறது

இரண்டாவது விமானந்தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் அணியை இப்பிராந்தியத்தில் நிலைநிறுத்துவதாக அறிவித்த ஒரு நாளுக்குப் பின்னர், இஸ்ரேலுக்கு 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா எடுத்த முடிவானது, மத்திய கிழக்கில் போரை நோக்கிய ஒரு இன்னுமொரு அடியெடுப்பைக் குறிக்கிறது. முழு ஆளும் வர்க்கத்தின் ஆதரவுடன், பைடென் நிர்வாகம் ஈரானை இலக்கு வைத்து பேரழிவு தரும் மோதலை நடத்த தீர்மானகரமாக உள்ளது. ஈரானை அதன் போட்டியாளர்களுக்கு எதிரான ஏகாதிபத்திய வன்முறையின் உலகளாவிய வெடிப்பில் ஒரு முன்னரங்க நாடு என்று அது காண்கிறது. இது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரள்வின் மூலம்தான் நிறுத்தப்பட முடியும்.

தெற்கு இஸ்ரேலில், இஸ்ரேல்-காஸா எல்லைக்கு அருகில், காஸா பகுதியில் அழிக்கப்பட்ட கட்டிடங்களுடன், ஒரு இஸ்ரேலிய சிப்பாய் ஒரு டாங்கியிலிருந்து கையசைக்கிறார். 2024 ஆகஸ்ட் 1 வியாழக்கிழமை [AP Photo/Tsafrir Abayov]

ஆயுத விற்பனையின் உள்ளடக்கத்தை மீளாய்வு செய்வதில் இருந்து எடுக்கப்பட வேண்டிய தவிர்க்க முடியாத முடிவு இதுதான். 10 மாதங்களுக்கும் மேலாக காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை எளிதாக்கிய பின்னர், பைடென் நிர்வாகம் 50 க்கும் மேற்பட்ட F-15 போர் விமானங்கள், மேம்பட்ட நடுத்தர தூர வான்-விமான ஏவுகணைகள், 120 மிமீ டாங்கிளுக்கன வெடிகுண்டுகள், உச்சமாக வெடிக்கும் மோட்டார்கள் மற்றும் தந்திரோபாய வாகனங்களை இஸ்ரேலுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. முழு அளவிலான ஜெட் விமானங்களின் விநியோகம் முடிவடைய ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முற்றிலும் இராணுவக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இது ஏற்கனவே குண்டுவீச்சால் சிதைந்துள்ள காஸாவில், ஹமாஸ் போராளிகள் மிக அடிப்படையான குறுகிய தூர ராக்கெட்டுகளை வைத்திருந்து, இஸ்ரேலுக்குள் உள்ள எந்தவொரு இலக்கையும் அரிதாகவே ஆபத்தில் ஆழ்த்துகிற நிலையில், காஸாவில் இவ்வளவு பெரிய ஆயுத களஞ்சியத்தைப் பயன்படுத்த முடியாது. இஸ்ரேலிய விமானங்களை சுட்டு வீழ்த்தவும், நீண்ட தூர ஏவுகணைகளால் நாட்டை நேரடியாகத் தாக்கவும் வல்ல லெபனான் மற்றும் ஈரானிலேயே உள்ள ஹிஸ்புல்லா போராளிகள் போன்ற நவீன எதிர்ப்பாளர்களுக்கு எதிரான முன்னேறிய தயாரிப்புக்களின் பின்னணியில்தான் இஸ்ரேலுக்கு அத்தகைய ஆயுதங்கள் அவசரத் தேவையாக வழங்கப்பட இருக்கின்றன.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் இந்த ஆயுத விற்பனையைக் கண்டித்து ஒரு அறிக்கையில் விளக்கியவாறு,

பென்டகனின் இந்த அறிவிப்பு ஒரு வஞ்சகமான துணை உரையைக் கொண்டுள்ளது. இஸ்ரேல் ஏற்கனவே இப்பிராந்தியத்தில் கேள்விக்கிடமற்ற வான் மேலாதிக்கத்தைக் கொண்டுள்ளது. இந்த ஆயுத விற்பனையின் ஒரே நோக்கம் ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய போரில் எதிர்பார்க்கப்படும் இழப்புகளை ஈடுகட்டுவதாகும். பைடென்-ஹாரிஸ் நிர்வாகம், ஒரு துடிப்பைக் கூட இழக்காமல், மத்திய கிழக்கு மக்களை இஸ்ரேல் தொடர்ந்து தூள் தூளாக்குவதை உறுதி செய்ய விரும்புகிறது.

சமீபத்திய ஆயுத விற்பனைக்கு முன்னதாக, வாஷிங்டன் ஒரு பிராந்தியந் தழுவிய போரை விரும்புகிறது என்பதற்கான சந்தேகத்திற்கிடமற்ற அறிகுறிகள் இருந்தன. கடந்த அக்டோபரில் இஸ்ரேலின் இனப்படுகொலையின் ஆரம்பத்தில் இருந்தே, அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் பாலஸ்தீனிய பிரச்சினையின் “இறுதி தீர்வுக்கு” அவர்களின் ஒப்புதல், மத்திய கிழக்கில் ரஷ்யா மற்றும் சீனாவின் ஒரு முக்கிய கூட்டாளியான ஈரானை எதிர்த்துப் போரிடுவதற்கான திட்டங்களுடன் பிணைந்துள்ளது என்பதை தெளிவுபடுத்தி வந்துள்ளனர்.

கடந்த ஏப்ரலில் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரகத்தின் மீது இஸ்ரேல் குண்டுவீசி ஏழு மூத்த ஈரானிய புரட்சிகர காவல்படை உறுப்பினர்களைக் கொன்ற பின்னர், அமெரிக்க மற்றும் பிற நேட்டோ வளங்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு இஸ்ரேல் மீதான ஈரானின் பதிலடி தாக்குதலைத் முறியடிக்க உதவின. இஸ்ரேலின் சமீபத்திய மூர்க்கத்தனமான ஆத்திரமூட்டல், பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தளபதி ஃபுவாட் ஷுக்ர் மற்றும் தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஆகியோர் ஜூலை கடைசியில் ஒரு சில மணி நேர இடைவெளியில் படுகொலை செய்யப்பட்டமை, 20 பில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தத்தை அறிவிக்கவும், காங்கிரஸால் ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்ட 14 பில்லியன் டாலர் உதவித் தொகுப்பில் இருந்து 3.5 பில்லியன் டாலர்களை இஸ்ரேலுக்கு வழங்கவும் வாஷிங்டன் தூண்டியது. கூடுதலாக, இப் பிராந்தியத்தில் ஈரானின் பரம எதிரியான சவுதி அரேபியா மீதான மூன்று ஆண்டு ஆயுதத் தடையை பைடென் நிர்வாகம் நீக்கியுள்ளது.

உயர் தலைவர் அலி காமேனி உட்பட ஈரானிய அதிகாரிகள், ஹனியேவை இஸ்ரேல் படுகொலை செய்ததற்கு பதிலடி கொடுக்கும் தங்கள் உரிமையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பைடென் நிர்வாகம் தெஹ்ரானை ஒரு தாக்குதலைத் தொடங்க தூண்டுகிறது. பின்னர் அது இன்னும் போர் விவாக்கத்தை நியாயப்படுத்த இந்த தாக்குதலை பயன்படுத்த முயற்சிக்கிறது.

அமெரிக்க, இஸ்ரேலிய அரசியல்வாதிகள் ஈரான் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது என்ற உண்மையை இரகசியமாக வைத்திருக்கவில்லை. ஜூலை மாதம் அமெரிக்க காங்கிரசின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றியபோது, நெத்தென்யாகு ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இணைந்து போர் தொடுக்கும் தன் விருப்பத்தை வெளிப்படையாக அறிவித்தார். இதற்காக அவர் இருகட்சிகளின் கரவொலியைப் பெற்றார். “நீங்கள் ஒரு விஷயத்தை நினைவில் வைத்திருந்தால், இந்த பேச்சைப் பற்றிய ஒரு விஷயம், இதை நினைவில் கொள்ளுங்கள்: எங்கள் எதிரிகள் உங்கள் எதிரிகள், எங்கள் சண்டை உங்களது சண்டை, எங்கள் வெற்றி உங்களது வெற்றியாக இருக்கும்,” என்று அவர் உற்சாகமான கரவொலிக்கிடையே அறிவித்தார் “அமெரிக்காவை உண்மையிலேயே சவால் செய்ய, அது முதலில் மத்திய கிழக்கை வெல்ல வேண்டும் என்பதை ஈரான் புரிந்துகொள்கிறது... இருப்பினும், மத்திய கிழக்கின் இதயத்தில், இஸ்ரேல் அரசு ஈரானின் வழியில் நிற்கிறது...” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

துணை ஜனாதிபதியும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் உடனான ஒரு மூடிய கதவுகளுக்குள் நடந்த ஒரு சந்திப்பில் நெதன்யாகு அடுத்த நாள் மத்திய கிழக்கு முழுவதிலுமான ஒரு போர் குறித்து உரையாடினார். அவர் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த அவரது விளக்கவுரையில், “ஆகவே, நான் பிரதம மந்திரி நெதன்யாகுவுடன் ஒரு வெளிப்படையான மற்றும் ஆக்கபூர்வமான சந்திப்பை நடத்தினேன். ஈரான் மற்றும் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற ஈரான் ஆதரவிலான போராளிக் குழுக்களிலிருந்து, இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை நான் எப்போதும் உறுதிப்படுத்துவேன் என்று அவரிடம் கூறினேன்” என்று தெரிவித்தார்.

அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயவாதிகள், அதன் போட்டியாளர்களின் இழப்பில் வாஷிங்டனின் நலன்களுக்காக மத்திய கிழக்கை அடிப்படையில் மறுகட்டமைக்க போர் மூலம் நம்புகின்றனர். லெபனானில் தெஹ்ரானுடன் இணைந்த ஹிஸ்புல்லாவை அகற்றுவதும், அண்டை நாடான சிரியாவில் இருந்து ஈரானிய படைகளை வெளியேற்றுவதும், ஈரான்-சார்பு அசாத் ஆட்சியைப் பலவீனப்படுத்தும் என்பதோடு, டார்டஸில் உள்ள அவர்களின் ஒரே மத்திய தரைக்கடல் கடற்படைத் தளத்தில் ரஷ்ய படைகளை நேரடி தாக்குதலுக்குத் திறந்து விடும். கடந்த ஆண்டு ஈரானுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே ஒரு சமாதானத்திற்கு அது மத்தியஸ்தம் செய்ததிலிருந்தும், அதன் வளர்ந்து வரும் பொருளாதார பிரசன்னத்திலிருந்தும் எடுத்துக்காட்டப்பட்டவாறு, இப்பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கை போர் மூலமாக பலவீனப்படுத்த முடியும் என்றும் வாஷிங்டன் நம்புகிறது.

ஆனால் இந்த நம்பிக்கைகள் ஒரு மாயையாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏற்கனவே மூன்று தசாப்த கால இடைவிடாத போரின் போது மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா எங்கிலும் மில்லியன் கணக்கான மக்களைக் கொன்றுள்ளதுடன், ஒட்டுமொத்த சமூகங்களையும் சீரழித்துள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியாவின் பேரழிவுகள், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அதன் செங்குத்தான பொருளாதார வீழ்ச்சியை மாற்றியமைக்க ஒன்றும் செய்யவில்லை, மாறாக வல்லரசு மோதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஆகவே ஒரு புதிய போர் விரைவில் பூகோள அளவில் பிரதான சக்திகளுக்கு இடையிலான ஒரு நேரடி மோதலாக இழுத்துச் செல்லும்.

இந்த கடந்தகால பேரழிவுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய இராணுவ சாகசங்களை கட்டவிழ்த்து விடுவதற்கு ஒரு முடுக்காக செயல்படுகின்றன. ஈரானுடன் முழுவீச்சிலான போரைத் தூண்டுவதற்கான வாஷிங்டனின் தீர்மானமானது, அதன் உலகளாவிய மூலோபாயமான உலகப் போரில் இருந்து பிரிக்கவியலாததாகும். உலகப் போர் என்பது போட்டியாளர்களுக்கு எதிராகவும் மற்றும் பெயரளவிலான “கூட்டாளிகளுக்கு” எதிராகவும் அதன் மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரே நம்பகமான வழிவகையாக அதை அது காண்கிறது.

இந்தப் பிராந்தியத்தில் எரிசக்தி ஆதாரவளங்கள் உயர்ந்தளவில் குவிந்திருப்பதாலும், ஐரோப்பா மற்றும் ஆசியா மீதான கட்டுப்பாட்டிற்கான அதன் புவிசார் மூலோபாய முக்கியத்துவத்தின் காரணமாகவும் இந்த போரில் ஒரு முக்கிய முன்னணியாக பார்க்கப்படும் மத்திய கிழக்குக்கு கூடுதலாக, வாஷிங்டன் உக்ரேனில் ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ளதுடன், இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவுடன் ஒரு போருக்கு தயாராகி வருகிறது.

இந்த நிகழ்ச்சிப்போக்கின் ஆரம்ப கட்டத்தில், “உலகின் எந்தப் பகுதியும் அமெரிக்க முதலாளித்துவத்தின் நலனுக்கு வெளியே இல்லை” என்பதை விளக்கி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் என்ற அதன் 2016 அறிக்கையில் எழுதியது, “ஒவ்வொரு கண்டமும் ஒவ்வொரு நாடும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களின் முப்பட்டகக் கண்ணாடி மூலமாகவே பார்க்கப்படுகின்றன. அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒவ்வொரு நிஜமான மற்றும் சாத்தியமான சவாலையும் எதிர்கொள்ள ஒரு மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதில் ஒருமுனைப்பட்டிருக்கிறது.”

உலகின் இந்த மறுபங்கீடு, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய அனைத்து ஏகாதிபத்திய சக்திகளையும் உள்ளடக்கியுள்ளது. இது உலக முதலாளித்துவத்தின் கையாள முடியாத முரண்பாடுகளில் இருந்து எழுகிறது: பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும் உலகம் பகைமை தேசிய அரசுகளாக பிளவுபட்டிருப்பதற்கும் இடையேயும், மற்றும் உற்பத்தியின் பாரிய சமூக தன்மைக்கும் ஒரு சில தனியார் கைகளில் அது குவிந்திருப்பதற்கும் இடையிலான முரண்பாடுகளில் இருந்தும் இது எழுகிறது. இது மிகப்பெரிய அணுவாயுத போர் சாத்தியக்கூறை எழுப்பினாலும் கூட, ஏகாதிபத்தியவாதிகளுக்கு திறந்திருக்கும் ஒரே தீர்மானம், மனிதகுலத்தை ஒரு பூகோள மோதலின் காட்டுமிராண்டித்தனத்திற்குள் மூழ்கடிப்பதுதான்,

இதே முதலாளித்துவ முரண்பாடுகள்தான் தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரப் போராட்டத்திற்குள் உந்தித் தள்ளிக் கொண்டிருக்கின்றன. காஸா இனப்படுகொலையின் காட்டுமிராண்டித்தனம் மற்றும் அதன் ஏகாதிபத்திய பாதுகாவலர்களின் பாசாங்குத்தனத்தாலும், இராணுவவாதம் மற்றும் போரின் முழு பலத்தையும் ஊதிய வெட்டுக்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் மூலமாக தொழிலாளர்களின் முதுகில் சுமத்துவதற்கான ஆளும் வர்க்கத்தின் உந்துதலாலும் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் சீற்றமடைந்துள்ளனர். உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான ஒரு உலகளாவிய போர்-எதிர்ப்பு இயக்கத்திற்குள் இந்த போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதே அவசர பணியாகும். ஏனென்றால், ஏகாதிபத்திய போரை அது வேரூன்றியுள்ள முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலமாக மட்டுமே நிறுத்த முடியும்.

இது தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த சோசலிச மற்றும் சர்வதேசிய கட்சியை கட்டியெழுப்புவதை அவசியமாக்குகிறது. அந்தக் கட்சி அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் உலகெங்கிலும் உள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஏனைய தேசியப் பிரிவுகளும் ஆகும்.

Loading