உக்ரேன் ரஷ்யாவிற்குள் தாக்குதலைத் தொடர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

குர்ஸ்க் மற்றும் பெல்கொரோட் ஆகிய இரண்டு ரஷ்ய எல்லைப் பிராந்தியங்களில் உக்ரேனிய இராணுவத்தின் தாக்குதல் அதன் இரண்டாவது வாரத்திற்குள் நுழைகிறது. குறைந்தபட்சம் 74 குடியேற்றங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான போர் கைதிகள் உட்பட 1,000 சதுர கிலோமீட்டர் (386 சதுர மைல்கள்) பகுதியை கைப்பற்றியுள்ளதாக கியேவ் கூறுகிறது. இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர் ரஷ்யா மீதான முதல் படையெடுப்பை நடத்திய துருப்புக்கள் இங்கிலாந்தில் பயிற்சி பெற்றவர்கள், மேலும் அமெரிக்க மற்றும் ஜேர்மன் போர் டாங்கிகள் மற்றும் அமெரிக்கா வழங்கிய HIMARS ஏவுகனைகளை பயன்படுத்துகின்றனர்.

ஆகஸ்ட் 16, 2024 வெள்ளிக்கிழமை, ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தின் சுட்சா அருகே ஒரு சாலையோரத்தில் அழிக்கப்பட்ட ரஷ்ய டாங்கி உள்ளது. [AP Photo]

இதுவரை, உக்ரேன் அப்பகுதியில் உள்ள இரண்டு பாலங்களை தகர்த்தும், உக்ரேனில் போர்முனைக்கு பொருட்களையும் துருப்புகளையும் வழங்க ரஷ்ய இராணுவம் பயன்படுத்திய ஒரு முக்கிய ரயில் பாதையையும் தடை செய்துள்ளது.

இந்தப் பாலங்கள் தகர்க்கப்பட்டிருப்பதானது, குர்ஸ்க் மற்றும் பெல்கொரோட் ஆகிய இரண்டு பகுதிகளிலும் உள்ள போர் மண்டலங்களில் இருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதற்கான தற்போதைய முயற்சிகளை சீர்குலைத்துள்ளது. இப்பகுதியில் இருந்து 180,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ச்சியான வெளியேற்றங்கள் கிரெம்ளின் சண்டையின் விரைவான முடிவை எதிர்பார்க்கவில்லை என்பதைக் குறிக்கிறது.

ஆயினும்கூட, ரஷ்ய செய்தி அறிக்கைகளின்படி, கணிசமான எண்ணிக்கையிலான பொதுமக்கள் இப்போதும் உக்ரேனிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இன்னும் உள்ளனர். ரஷ்ய செய்தித்தாள் Nezavisimaya Gazeta கிரெம்ளினின் போர் பத்திரிகையாளர் அலெக்சாண்டர் கார்சென்கோவை மேற்கோளிட்டது, “எங்கள் குடிமக்களில் பெரும் எண்ணிக்கையினர் உக்ரேனிய படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

ஞாயிறன்று, உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஊடுருவலின் நோக்கம் “ஒரு இடைத்தடை மண்டலத்தை” உருவாக்குவதாகும் என்று அறிவித்தார். “ஒட்டுமொத்த தற்காப்பு நடவடிக்கைகளே இப்போது நமது முதன்மையான பணியாகும்: முடிந்தவரை ரஷ்ய போர் திறனை அழித்து அதிகபட்ச எதிர் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது” என்று அவர் தெரிவித்தார்.

தற்போது ரஷ்ய படைகளால் கட்டுப்படுத்தப்படும் தென்கிழக்கு உக்ரேனில் உள்ள குர்ஸ்க் மற்றும் சபோரிஜியா ஆகிய ரஷ்ய பிராந்தியத்தில் உள்ள அணுமின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த கியேவ் தயாராகி வருவதாகவும் ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான Zaporizhzhia அணுமின் நிலையத்தைச் சுற்றி சண்டை நடந்து வருகிறது.

இந்த நடவடிக்கையில், அமெரிக்காவின் ஈடுபாடு மற்றும் அதன் சூறையாடும் தன்மை இரண்டையும் அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பின் மிகப் பெரிய போர்க் குற்றவாளிகளில் ஒருவரும், பின்னர் CIA இன் தலைவருமான ஓய்வுபெற்ற தளபதி டேவிட் பெட்ரீயஸ், BBC Global News Podcast இல் உக்ரேனிய படையெடுப்பைப் பாராட்டினார். “இது ஈராக் மீதான படையெடுப்பை நினைவூட்டுகிறது, அங்கு ஒரு பெரிய கவசப் படை பாக்தாத் வழியாக விரைந்து வந்து விமானநிலையத்தில் முடிந்தது. அப்போது வீரர்கள், “ஏய், இங்கேயே இருப்போம்” என்றார்கள். சூழ்நிலையை உருவாக்குவோம், அங்கிருந்து என்ன நடக்கிறது, எதிரி எவ்வாறு நடந்துகொள்கிறான் என்பதைப் பார்ப்போம். அங்குதான் அவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

இந்த ஊடுருவலுக்குப் பின்னால் உள்ள உடனடி இராணுவ மற்றும் அரசியல் கணக்கீடுகள் எதுவாக இருந்தாலும், அதன் அடிப்படை மூலோபாயம் மற்றும் குறிக்கோள்கள் ரஷ்யாவிற்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகள் நடத்தி வருகின்ற போரின் ஏகாதிபத்திய தன்மையை வெளிப்படுத்துகின்றன. ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் துண்டாடுவதை இறுதி இலக்காக கொண்டுள்ள ஒரு பரந்த போருக்கான களமாக, உக்ரேனை பயன்படுத்துவதற்காக நேட்டோ வேண்டுமென்றே புட்டின் ஆட்சியின் படையெடுப்பைத் தூண்டியது.

இந்த இலக்குகள் குறித்து உக்ரேனின் இராணுவத் தலைமையை விட வேறு யாரும் வெளிப்படையாக இருந்ததில்லை. உக்ரேனிய ஆயுதப்படைகளின் முன்னாள் தலைவர் வலேரி ஜலுஸ்னி மற்றும் இராணுவ உளவுத்துறை தலைவர் கிரில் புடனோவ் இருவருமே வெவ்வேறு சக்திகளுக்கு இடையே பிளவுபட்ட ரஷ்யாவின் வரைபடத்துடன் மீண்டும் மீண்டும் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த வரைபடத்தின் அடிப்படையில், குர்ஸ்க், பெல்கொரோட் மற்றும் ரோஸ்டோவ் பிராந்தியங்கள் உட்பட இப்போது தென்கிழக்கு ரஷ்யாவாக இருக்கும் கணிசமான பகுதி, ஒரு “பெரிய உக்ரேனை” ஸ்தாபிப்பதற்கான உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பான (OUN) பாசிஸ்டுகளின் நீண்டகால நோக்கத்தின் ஒரு நவீன-கால பதிப்பாகும்.

துண்டாடப்பட்ட ரஷ்யாவின் வரைபடம். உக்ரேனிய ஆயுதப் படைகளின் முன்னாள் தலைவர் வலேரி ஜலுஸ்னி மற்றும் உக்ரைனின் இராணுவ புலனாய்வுத் தலைவர் கிரில் புடானோவ் இருவரும் 2022 முதல் தங்கள் அலுவலகங்களில் இந்த வரைபடத்துடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.

இந்த மூலோபாயம் ரஷ்ய பிராந்தியத்திற்குள் இராணுவ தாக்குதல்களை மட்டுமல்ல, மாறாக 140 க்கும் அதிகமானவர்களைக் கொன்ற மார்ச் மாஸ்கோ குரோகஸ் நகர அரங்க தாக்குதல் மற்றும் அரசியல் படுகொலைகள் போன்ற ரஷ்யாவிற்குள் பயங்கரவாத தாக்குதல்களையும் உள்ளடக்கி உள்ளது. ஏகாதிபத்திய சக்திகளின் நிலைப்பாட்டில் இருந்து, ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் அவற்றின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் முயற்சியின் பாகமாக, நேட்டோ-ஆதரவிலான ரஷ்ய செல்வந்த தட்டுக்கள் மற்றும் அரசு எந்திரத்தால் புட்டின் ஆட்சியைத் தூக்கியெறிவதற்கான நிலைமைகளை உருவாக்குவதற்காக, புட்டின் ஆட்சியை இராணுவரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பலவீனப்படுத்துவதே இறுதி நோக்கமாகும். 

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ மீட்சியில் இருந்து ஒரு போனபார்ட்டிச ஆட்சியாக எழுந்துள்ள புட்டின் ஆட்சி, அதன் அதே வர்க்க மற்றும் அரசியல் இயல்பின்படியே, இதுபோன்ற அழுத்தங்களுக்கு மிகவும் பலவீனமாக உள்ளது. உலக சோசலிச வலைத் தளம் விளக்கியதைப் போல, தன்னலக்குழுவினரின் பரந்த சமூக தனிச் சலுகைகளைப் பாதுகாப்பதை உள்ளடக்கி அதன் பிரதான செயல்பாடு உள்ளது. முதலாவதாக, தன்னலக்குழுவின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையேயும், இரண்டாவதாக, தன்னலக்குழுவிற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையேயும், மூன்றாவதாக, தன்னலக்குழுவிற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையேயும் சமநிலைப்படுத்துவதன் மூலமாக அது அவ்வாறு செய்ய முனைந்துள்ளது. ஆனால், உக்ரேனில் ஏகாதிபத்தியம் மற்றும் அதன் பினாமிகளின் ஒட்டுமொத்த மூலோபாயமும், முன்னெப்போதிலும் பார்க்க, அதிக ஆக்ரோஷமான இராணுவ தாக்குதல்கள் மற்றும் செல்வந்த தன்னலக்குழுக்களுக்குள் பதட்டங்களுக்கு எரியூட்டும் திட்டமிட்ட முயற்சிகள் இரண்டையும் உள்ளடக்கி, கிரெம்ளினின் கொள்கைகளுக்கு குழிபறித்து வருகிறது.

இதுவரையில், இரண்டாம் உலகப் போரில் செம்படையால் நாஜிக்கள் தோற்கடிக்கப்பட்டதற்குப் பின்னர் அந்நாட்டின் மீதான முதல் ஏகாதிபத்திய ஆதரவிலான படையெடுப்புக்கு புட்டின் ஆட்சியின் விடையிறுப்பு குறிப்பிடத்தக்க வகையில் மௌனமாக இருந்துள்ளது, இதுவே கூட திரைக்குப் பின்னால் மோதல்கள் உண்மையில் சீறிக் கொண்டிருக்கின்றன என்பதற்கான பல அறிகுறிகளில் ஒன்றாகும். புட்டின் ஆட்சி அதன் இராணுவத் தலைமையில் ஒரு பெரிய களையெடுப்பைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்த ஊடுருவல் நடந்தது. அனைத்திற்கும் மேலாக, அந்த ஊடுருவலுக்கு வெறும் சில நாட்களுக்கு முன்னர், கிரெம்ளின் வாஷிங்டனுடன் ஒரு கைதிகள் பரிமாற்றத்திற்கு பேரம்பேசி இருந்தது. அதில், அது நேட்டோ-ஆதரவிலான எதிர்த்தரப்பின் மிக முக்கிய பிரதிநிதிகள் பலரை, மிக குறிப்பாக விளாடிமிர் காரா-முர்சா மற்றும் செல்வந்த தட்டுக்களில் நீண்டகாலமாக ஏகாதிபத்தியத்தின் மத்திய கைக்கூலியாக இருந்த காலஞ்சென்ற அலெக்ஸி நவால்னியின் குழுவின் பல அங்கத்தவர்களை விடுவித்தது.

கடந்த சனிக்கிழமையன்று ரஷ்யாவின் முன்னணி அரசு தொலைக்காட்சி சேனலான “ரோசியா”, பெலாரஸ் ஜனாதிபதியும் புட்டினின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவருமான அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடன் ஒளிபரப்பப்பட்ட ஒரு நீண்ட நேர்காணல், செல்வந்த தட்டுக்களுக்குள் பரிசீலனைகள் மற்றும் சூடான விவாதங்கள் குறித்து சில நுண்ணறிவுகளை வழங்கியது. “மூன்றாம் உலகப் போர்” என்று பொருள்படும் போரில் நேரடியாக நுழைவதற்கு நேட்டோ தயாரிப்பு செய்து வருகிறது என்ற புட்டினின் எச்சரிக்கைகளை லுகாஷென்கோ மீண்டும் வலியுறுத்தினார். குர்ஸ்க் படையெடுப்புடன், “சமூகத்தை உள்ளிருந்தே ஸ்திரமின்மைக்கு உட்படுத்த, நாங்கள் இதைச் செய்ய தயாராக இல்லை, நாங்கள் இதை விரும்பவில்லை” என்பதற்காக ரஷ்யாவை ஒரு பொது அணிதிரட்டலுக்குள் தூண்டிவிட உக்ரேன் முயன்று வருவதாக அவர் தெரிவித்தார். உக்ரேன் பெலாருஸ் உடனான அதன் எல்லையில் 120,000 துருப்புகளை குவித்திருந்ததாகவும், மின்ஸ்க் அதன் இராணுவத்தில் மூன்றில் ஒரு பகுதியை —சுமார் 65,000 சிப்பாய்களை— ஏற்கனவே பலமாக கண்ணிவெடிகள் நிறைந்த எல்லைக்கு அணிதிரட்டியதன் மூலமாக விடையிறுத்திருந்ததாகவும் லுக்காஷென்கோ வாதிட்டார். பின்னர் அவர் நேட்டோ அங்கத்துவ நாடான போலந்துடன் ஒரு சாத்தியமான போருக்கான பெலாருஸின் தயாரிப்புகள் குறித்து விரிவாக பேசினார். மேலும் உக்ரேனின் குர்ஸ்க் படையெடுப்பு அதன் சொந்த “அழிவில்” முடிவடையும் என்று அச்சுறுத்தினார்.

அவர், மீண்டும் மீண்டும் “நாங்கள் போர் விரிவாக்கத்தை விரும்பவில்லை என்று வலியுறுத்தினார். நேட்டோ முழுவதற்கும் எதிரான இந்தப் போரை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் அதை விரும்பவில்லை. ஆனால் அவர்கள் அதற்கு சென்றால், எங்களுக்கு வேறு வழியில்லை” என்று அறிவித்தார். அதன்பின் லுக்காஷென்கோ பெலாருஸின் எல்லைகள் மீறப்பட்ட உடனேயே அணுஆயுத பொத்தானை அழுத்த அவர் தயாராக இருப்பதாக உறுதியாக அறிவித்ததுடன், “உங்களுக்கு இது வேண்டாம் என்றால், நாம் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்து இந்த சிறிய சண்டையை [அதாவது உக்ரேன் போரை] முடிவுக்குக் கொண்டு வருவோம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார். உக்ரேனில் இனி “நாஜிக்கள் இல்லை” என்றும், “நாஜிக்கள் இல்லாத உக்ரேன்” என்ற கிரெம்ளினின் இலக்காக கூறப்பட்டவை நடைமுறையளவில் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் அவர் வாதிட்டார்.

நிச்சயமாக, பெரும் ரஷ்ய பேரினவாதத்தில் மூழ்கியுள்ள மற்றும் அதிவலதுடன் விரிவான உறவுகளைப் பேணி வருகின்ற புட்டின் ஆட்சி, பாசிசத்திற்கு எதிரான ஒரு தீவிர போராட்டத்தை ஒருபோதும் விரும்பியதில்லை, மேற்கொள்ளவும் இல்லை. ஆயினும்கூட, ரஷ்ய மண்ணில் உக்ரேனிய துருப்புக்கள் தங்கள் சீருடைகளில் நாஜி சின்னங்களை பயன்படுத்துகையில், ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் லூக்காஷென்கோவால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கைகள், அரச மற்றும் தன்னலக்குழுவின் கணிசமான பிரிவுகள் படையெடுப்பிற்கு விடையிறுக்கும் வகையில் ஏகாதிபத்தியத்துடன் ஒரு பேச்சுவார்த்தை மூலமான உடன்பாட்டை எவ்வாறு சாத்தியமான அளவுக்கு விரைவாக அடைவது என்பது பற்றிய விவாதங்களை தீவிரப்படுத்தி வருவதை தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், நாடு ஒரு நீண்ட போருக்கும் மற்றும் இரண்டாவது அணிதிரட்டலின் சாத்தியத்திற்கும் தயாராக வேண்டும் என்று தன்னலக்குழுவின் மற்ற பிரிவுகள் எச்சரிக்கின்றன. வலதுசாரி கிரெம்ளின் ஆதரவு வலைத் தளத்தில் Vzglyad.Ru வெளியிட்ட ஒரு சிறப்பியல்பான கருத்துரை, 27 மில்லியன் சோவியத் குடிமக்களின் உயிர்களைப் பலிகொண்ட 1941 இல் சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி படையெடுப்பின் நினைவைத் தூண்டியதுடன், “வெற்றிக்கு ஒரு நீடித்த போர் அவசியப்படும்” என்று எச்சரித்தது.

ஏகாதிபத்திய ஆதரவிலான ரஷ்யா மீதான ஊடுருவல், 1941 க்குப் பின்னர் அதுபோன்றவொரு முதல் படையெடுப்பு, மற்றும் செல்வந்த தன்னலக்குழுக்களுக்குள் அது தூண்டிவிட்ட அரசியல் குழப்பம், அனைத்திற்கும் மேலாக 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் அழிவில் உச்சத்தை அடைந்த 1917 அக்டோபர் புரட்சியின் மீதான ஸ்ராலினிச காட்டிக்கொடுப்பின் பேரழிவுகரமான விளைவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதன் கசப்பான மற்றும் வன்முறையான உட்பூசல் என்னவாக இருந்தாலும், இந்த எதிர்ப்புரட்சியில் இருந்து எழுந்த ரஷ்ய தன்னலக்குழுக்கள் ஏகாதிபத்தியத்தால் முன்னிறுத்தப்படும் அபாயத்தைக் காட்டிலும் தொழிலாள வர்க்கத்திற்குள்ளான ஒரு இயக்கத்தை முன்கூட்டியே தடுப்பதிலேயே எல்லையற்ற அக்கறை கொண்டுள்ளது.

இப்பிராந்தியத்தின் ஏகாதிபத்தியப் துண்டாடுதல் மற்றும் அணுஆயுத யுத்தத்தின் உடனடி அச்சுறுத்தலை, தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டினால் மட்டுமே, முற்போக்கான அடிப்படையில் எதிர்கொள்ள முடியும். அக்டோபர் புரட்சிக்கு உத்வேகம் அளித்த சோசலிச மற்றும் சர்வதேச மரபுகளின் அடிப்படையில் தன்னலக்குழு மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் சுயாதீனமாக, தனது போராட்டத்தை தொழிலாள வர்க்கம் நடத்த வேண்டும்.

Loading