பிராந்திய அளவிலான போருக்கு வழிவகுக்கும் "போர்நிறுத்த" ஒப்பந்தத்தை வாஷிங்டன் முன்தள்ளுகையில், இஸ்ரேல் காஸா மீதான இனப்படுகொலையைத் தொடர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கடந்த செவ்வாயன்று, அதிவலது இஸ்ரேலிய ஆட்சி, காஸாவில் ஒரு பாடசாலை, ஒரு சந்தை மற்றும் ஒரு மொபைல் போன் சார்ஜிங் பாயிண்ட் மீது குண்டுகளை வீசி குறைந்தபட்சம் 25 பேர்களைக் கொன்று, பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலையைத் தொடர்ந்தது. நடந்துவரும் படுகொலைகளுக்கு மத்தியில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், காஸாவில் இஸ்ரேல் விரும்பும் அனைத்தையும் வழங்கி, லெபனான் மற்றும் மத்திய கிழக்கு எங்கிலும் போருக்கு பாதை அமைக்கும் ஒரு உடன்படிக்கையை இறுதி செய்வதற்காக, அப்பிராந்தியத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், இடதுபுறம், எகிப்தின் வெளியுறவு அமைச்சர் பதர் அப்தெலட்டியை ஆகஸ்ட் 20, 2024 செவ்வாய்க்கிழமை எகிப்தின் எல்-அலாமெய்னில் சந்திக்கிறார். [AP Photo/Kevin Mohatt]

காஸா நகரின் மேற்கில் உள்ள முஸ்தபா ஹஃபீஸ் பாடசாலைக் கட்டிடம் “தரைமட்டமாக்கப்பட்டது” என்று ஒரு சிவில் பாதுகாப்பு துறை ஊழியர் தெரிவித்தார். இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டசின் கணக்கானவர்கள் காயமடைந்தனர். மீட்புக் கருவிகள் பற்றாக்குறையால் பல சடலங்கள் மீட்கப்படாமல் போகலாம் என்று விளக்கிய அவர், உண்மையான இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்தார். இப்பகுதி முழுவதிலும் உள்ள பல பாடசாலைகளைப் போலவே, இந்தக் கட்டிடமும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் எந்தவித எச்சரிக்கையும் இன்றி தாக்கும் வரை இடம்பெயர்ந்த மக்களுக்கு புகலிடமாக பயன்பட்டது. இப்படுகொலை நடந்த ஒரு வாரத்திற்குள் அதே நகரத்தில் தபீன் பள்ளியில் நடந்த இரத்தந்தோய்ந்த படுகொலையில் 100 பேருக்கும் மேலானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

காஸாவில் அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 40,000 ஐ தாண்டியிருந்தாலும், இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக உள்ளது. கடந்த மாதம், பிரிட்டிஷ் மருத்துவ இதழான தி லான்செட், இனப்படுகொலை நடந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, இஸ்ரேலின் தாக்குதலால் சுமார் 186,000 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று மதிப்பிட்டுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியமும் மத்திய கிழக்கிலான அதன் சியோனிச தாக்குதல் நாய்களும், காஸா எங்கிலும் முடிவில்லா மரணம் மற்றும் அழிவுக்குப் பொறுப்பான அதே சக்திகள், 10 மாதங்களுக்கும் அதிகமான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய விதிமுறைகளை ஆணையிட முயற்சிக்கின்றன. செவ்வாயன்று எகிப்திய மற்றும் கட்டார் தலைவர்களுடனான தனது சந்திப்புகளின் போது, பிளிங்கன் அடைய முயற்சித்த ஒப்பந்தத்தை “போர்நிறுத்த ஒப்பந்தம்” என்று அழைப்பது யதார்த்தத்தை சிதைக்கும் செயலாகும். மூன்று வாரங்களுக்கு முன்பு, இஸ்ரேல் அமெரிக்காவின் மறைமுக ஒப்புதலுடன் தெஹ்ரானில் ஹமாஸின் அரசியல் தலைவரும் பேச்சுவார்த்தைகளின் முன்னணி பேச்சுவார்த்தையாளருமான இஸ்மாயில் ஹனியேவை படுகொலை செய்தது.

ஒரு உடன்பாடு எட்டப்பட்டால், அது முற்றிலும் இஸ்ரேலின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்கும் என்பது அதிகரித்தளவில் தெளிவாகி வருகிறது. இது, ஒரு கண முன்னறிவிப்பில் குண்டுகளைக் கொண்டு படுகொலைகளை மீண்டும் தொடங்க அவர்களுக்கு உதவும். மேலும் பேரழிவுக்குள்ளான பகுதிக்குள் உதவி விநியோகங்கள் மீதான அதன் கழுத்தை நெரிப்பதன் மூலமாக பாலஸ்தீனியர்கள் மீது பட்டினியையும் நோயையும் தொடர்ந்து திணிக்க அவர்களுக்கு உதவும். மேலும், காஸாவில் போரை நிறுத்துவது என்பது எல்லாவற்றிற்கும் மேலாக, இஸ்ரேலை அதன் வடக்கு போர்முனையில் லெபனானுடனான ஒரு போருக்கு முன்னோக்கிச் செல்ல இஸ்ரேலை அனுமதிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. மேலும், அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளின் ஆதரவுடன் ஈரானுடன் பிராந்தியம் தழுவிய மோதலுக்கு தளம் அமைப்பதையும் இலக்காக கொண்டிருக்கும். இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட் செவ்வாயன்று கூறியதைப் போல, இஸ்ரேலின் “ஈர்ப்பு மையம்” “தெற்கில் இருந்து வடக்கிற்கு” நகர்ந்து வருகிறது.

ஹனியேவை இஸ்ரேல் படுகொலை செய்ததற்கும், ஹிஸ்புல்லா தளபதி புவாட் ஷோக்ர் பெய்ரூட்டில் கொல்லப்பட்டதற்கும், வாஷிங்டன் இன்னும் கூடுதலான விமானந்தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் அணியை அப்பகுதிக்கு அனுப்பியதன் மூலம் பதிலடி கொடுத்தது. அமெரிக்க ஆளும் வர்க்கத்தைப் பொறுத்த வரையில், பாலஸ்தீனிய பிரச்சினைக்கான இஸ்ரேலின் “இறுதித் தீர்வு” என்பது, அதன் போட்டியாளர்களுக்கு எதிராக, அதன் சவாலுக்கிடமற்ற மேலாதிக்கத்தை பாதுகாக்க வேகமாக எழுச்சி பெற்றுவரும் மூன்றாம் உலகப் போரில் மத்திய கிழக்கு போர் முனையைத் திறந்து விடுவதற்கான அமெரிக்க தயாரிப்புக்களின் ஒரு பகுதியாக இருக்கிறது. வரவிருக்கும் ஐந்து ஆண்டுகளில் டசின் கணக்கான போர் ஜெட் விமானங்கள் உட்பட, இஸ்ரேலுக்கு 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்பது என்ற முடிவில் இது அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. எரிசக்தி வளம் கொழிக்கும் அப்பிராந்தியத்தின் மீது மேலாதிக்கம் செலுத்துவதற்கான அமெரிக்க அபிலாஷைகளுக்கு ஈரான் ஒரு பெரிய பிராந்திய தடையை பிரதிநிதித்துவம் செய்கின்ற அதேவேளையில், தன்னுடைய நலன்களுக்காக உலகை மறுபங்கீடு செய்யும் வாஷிங்டனின் உந்துதலின் முக்கிய இலக்குகள் ரஷ்யாவும் சீனாவும் ஆகும்.

சிக்காகோவில் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் திங்களன்று உரையாற்றிய பின்னர், வெள்ளை மாளிகையில் சக போர் குற்றவாளி கமலா ஹாரிஸை அவரது வாரிசாக வழிமொழிந்த பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், இஸ்ரேல் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்த ஒரு போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து ஹமாஸ் “பின்வாங்கியதற்காக” அதனைக் கண்டனம் செய்தார். உண்மையில், பைடென் நிர்வாகமும் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவும் பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் பலமுறை இலக்குக் கம்பங்களை மாற்றியுள்ளனர். இது பாலஸ்தீனியர்கள் மீதான அவர்களின் இரத்தத்தில் நனைந்த ஆட்சிகளுக்கு ஒரு மூடிமறைப்பை வழங்கியுள்ளது. மே மாத தொடக்கத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு படை ரஃபா மீது படையெடுப்பதை தடுத்திருக்கக் கூடிய ஒரு போர்நிறுத்த முன்மொழிவை ஹமாஸ் ஏற்றபோது, இஸ்ரேல் அந்த வாய்ப்பை அப்பட்டமாக புறக்கணித்து, காஸாவின் தெற்கு நகரத்தில் இருந்து ஒரு மில்லியன் மக்களை விரட்டியடித்த ஒரு தாக்குதலை தொடக்கி மனிதாபிமான உதவிகளை கிட்டத்தட்ட ஸ்தம்பிக்கச் செய்தது.

செவ்வாயன்று கூறிய கருத்துக்களில் நெத்தென்யாகு தன்னுடைய அரசாங்கம் ஒப்புக் கொள்ளும் எந்த உடன்பாட்டின்படியும் இஸ்ரேலியப் படைகள் காஸாவில் இருந்து திரும்பப் பெறாது என்பதைத் தெளிவுபடுத்தினார். “இஸ்ரேல் எந்த சூழ்நிலையிலும் பிலடெல்பி தாழ்வாரம் மற்றும் நெட்ஸாரிம் தாழ்வாரத்தை விட்டு வெளியேறாது” என்று கூறிய அவர், காஸாவிற்கும் எகிப்திய எல்லைக்கும் இடையிலான ஒரு துண்டு நிலத்தையும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையால் திணிக்கப்பட்ட வடக்கு மற்றும் தெற்கு என அந்த பகுதியை பிரிக்கும் கோட்டையும் அவர் குறிப்பிட்டார்.

காஸாவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து இருக்க அனுமதிக்கும் உடன்பாட்டிற்கு தன் எதிர்ப்பை ஹமாஸ் தெரிவித்து, இஸ்ரேலிய படையினர்கள் இரண்டு கட்டங்களில் முழுவதுமாக அங்கிருந்து வெளியேறுவதைக் காணும் பைடெனுக்குக் கூறப்பட்ட ஒரு அசல் திட்டத்தை அது ஆதரிக்கும் என்று சுட்டிக்காட்டியது. ஆனால், வாஷிங்டன் இந்த முன்மொழிவை வெளிப்படையாக கைவிட்டுவிட்டது. அதற்கு பதிலாக, இந்த வாரம் “இணைப்பு” உடன்பாடு என்றழைக்கப்படுவதை முன்மொழிகிறது. இது காஸாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான இராணுவ பிரசன்னத்திற்கான கோரிக்கையை கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இஸ்ரேலின் சமீபத்திய கோரிக்கைகள் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், மூத்த ஹமாஸ் அதிகாரி ஒசாமா ஹம்டன், “இதன் பொருள், ஒரு பெரிய இராணுவப் படை பிலடெல்பி தாழ்வாரத்தில் தங்கியிருக்கும். மேலும், ரஃபா கடவையில் தங்கியிருக்கும் இராணுவம் இஸ்ரேலிய ஒப்புதலுக்காக உதவியை மட்டுப்படுத்தும்” என்று கூறினார்.

மனிதாபிமான உதவியை போர் ஆயுதமாக பயன்படுத்துவதில் இஸ்ரேல் விடாப்பிடியாக உள்ளது. கெரெம் ஷாலோம் எல்லைக் கடப்பு வழியாக காஸாவை அடையும் டிரக்குகளின் எண்ணிக்கை ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலையில் ஓரளவு உயர்ந்திருந்தாலும், மொத்த விநியோகங்களில் வெறும் 8 சதவீதம் மட்டுமே மனிதாபிமான உதவியைக் கொண்டிருந்தன. இது, நாளொன்றுக்கு வெறும் 37 டிரக்குகளுக்கு சமமாகும். போருக்கு முன்னர், காஸாவுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 500 உதவி டிரக்குகள் சென்றிருந்தன. மே முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில், கெரெம் ஷாலோம் வழியாக காஸாவிற்கு வந்த உதவிகள் ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரையிலான காலத்துடன் ஒப்பிடுகையில் 61 சதவிகிதம் குறைவாகும்.

ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் ஆகஸ்ட் 16 அன்று வெளியிட்ட தகவலின்படி, ஆகஸ்ட் 1 முதல் 15 வரை, வடக்கு காஸாவிற்கு முயற்சிக்கப்பட்ட 109 உதவிப் பணிகளில் 46 மட்டுமே இஸ்ரேலால் அங்கீகரிக்கப்பட்டன. நிராகரிக்கப்பட்ட உதவிப் பணிகளின் வீதம் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 15 வீதத்திலிருந்து 29 வீதமாக அதிகரித்துள்ளது.

இனாரா அறக்கட்டளையின் நிறுவனர் அர்வா டாமன் அல் ஜசீராவிடம் கூறுகையில், காஸாவுக்கு உதவிகள் சென்றடைந்தாலும், விநியோகிப்பது பெருகிய முறையில் இயலாதது என்பதை நிலைமைகள் நிரூபித்து வருகிறது என்று குறிப்பிட்டார். ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்டி, அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் காயங்களுக்கு கட்டுப்போடும் துணிகள் தீர்ந்துவிட்டன என்று அவர் குறிப்பிட்டார். “இதன் பொருள் என்னவென்றால், உடலில் 50 முதல் 60 சதவிகிதம் தீக்காயங்களைக் கொண்ட 13 வயது சிறுவனுக்கு காயத்தை சுத்தம் செய்ய போதுமான துணி பாண்டேஜ்களை பெற முடியவில்லை, இதன் விளைவாக அவருக்கு இரத்த விஷம் மற்றும் ஆரம்பகால தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்தியது” என்று டாமன் மேலும் கூறினார்.

கடந்த வாரம் மத்திய காஸாவில் ஒரு குழந்தைக்கு போலியோ நோய் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர், காஸாவையும் தாண்டி பரவக்கூடிய ஒரு பெரிய போலியோ நோய் வெடிப்பின் அச்சுறுத்தலும் அங்கு மேலோங்கி நிற்கிறது. வாழ்நாள் முழுவதும் முடக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, பலவீனமான நிலை மேலும் பரவுவதைத் தடுக்க ஆகஸ்ட் பிற்பகுதி மற்றும் செப்டம்பர் மாதங்களில் இரண்டு சுற்றுகளில் ஒரு பெரிய போலியோ தடுப்பூசி பிரச்சாரம் அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனால் இனப்படுகொலை தாக்குதல் தொடருமானால், அவ்வாறான ஒரு முயற்சியை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றதாகிவிடும்.

சியோனிச ஆட்சியின் காட்டுமிராண்டித்தனத்தின் மற்றொரு வெளிப்பாடானது பாலஸ்தீனிய கைதிகளை திட்டமிட்டு சித்திரவதை செய்வதாகும். இது, தொடர்ச்சியான வெளிப்பாடுகளில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய கவலைகள், ஆஃப்னர் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட 33 பாலஸ்தீனிய கைதிகளிடமிருந்து வெளிப்பட்டது. அங்கு மதிப்பிழந்த Sde Teiman தடுப்பு மையத்தில் நடைமுறையில் சித்திரவதைகள் இருந்து வருவது பதிவாகியுள்ளன. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளில் ஒருவர் அல் ஜசீராவிடம் பின்வருமாறு கூறினார்:

நான் இரவும் பகலும் சித்திரவதை செய்யப்பட்டேன். என் விலா எலும்புகள் உடைந்தன, தோள்கள் சிதைந்தன. யாருடைய கற்பனைக்கும் எட்டாத வகையில், அனைத்து வகையான சித்திரவதைகளுக்கும் நாங்கள் ஆளாகினோம்.

அனைத்து கைதிகளும் குறைந்தபட்சம் 90 வீதமான சரீரத் திறனை இழந்துவிட்டனர். தொடர்ச்சியாக 70 நாட்கள் என் கண்கள் கட்டப்பட்டு கைவிலங்கிடப்பட்டேன். நாங்கள் அனைவரும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டோம், அவமானப்படுத்தப்பட்டோம், சித்திரவதை செய்யப்பட்டோம்.

பிராந்தியந்தழுவிய போர் அச்சுறுத்தலையும், ஏகாதிபத்திய ஆதரவிலான சியோனிச ஆட்சியின் காட்டுமிராண்டித்தனமான நடைமுறைகளையும் தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும். இந்த இயக்கம் இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிரான அதன் எதிர்ப்பை, தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தின் மூலமாக, ஏகாதிபத்திய உலகப் போர் மற்றும் முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் இணைக்க வேண்டும்.

Loading