முன்னோக்கு

ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் வெளியுறவுக் கொள்கை மீதான மௌனத்திற்குப் பின்னால், ஜனநாயகக் கட்சியினர் உலகப் போரைத் தீவிரப்படுத்தத் தயாராகி வருகிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 20, 2024 அன்று சிகாகோவில் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்துகொள்கிறார். [AP Photo/Brynn Anderson]

தற்போது சிக்காகோவில் நடந்து வரும் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டின் மிகவும் அதிர்ச்சியூட்டும் அம்சம் என்னவென்றால், தற்போது ரஷ்யாவுக்கு எதிரான ஒரு போரில் ஈடுபட்டுவரும் அமெரிக்கா, சீனாவுடன் ஒரு சாத்தியமான போருக்கு தயாரிப்பு செய்து வருகிறது என்ற உண்மைக்கு இடையே, பைடென் நிர்வாகம் அல்லது வருங்கால ஹாரிஸ் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை குறித்து எந்தக் கலந்துரையாடலும் இல்லாதிருப்பது ஆகும்.

காஸாவில் 40,000 பேர்கள் அதிகாரப்பூர்வமாக கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், 200,000 பேரைக் கொன்றிருக்கக் கூடிய காஸா இனப்படுகொலைக்கு, “இனப்படுகொலை ஜோ” மட்டுமல்ல ஜனநாயகக் கட்சியும் முழுப் பொறுப்பாகும். “போர்நிறுத்தம்” பற்றிய சில பாசாங்குத்தனமான மற்றும் நேர்மையற்ற குறிப்புகளைத் தவிர, பாலஸ்தீனிய மக்களின் இரத்தத்தில் குளித்துவரும் பல்வேறு அதிகாரிகள் இனப்படுகொலை பற்றி குறிப்பிடவில்லை.

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் நேட்டோ போரின் விரிவாக்கமும் சீனாவிற்கு எதிரான போருக்கான தயாரிப்புகளும் அவ்வாறே இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவோ, முன்னாள் வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டனோ அல்லது துணை ஜனாதிபதி வேட்பாளர் டிம் வால்ஸோ ரஷ்யா அல்லது சீனா தொடர்பான அமெரிக்கக் கொள்கை பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. பைடென் ஒரேயொரு பத்தியில் ரஷ்யாவுடனான அமெரிக்க போர் மற்றும் சீனாவுடனான வர்த்தகப் போரை சுருக்கமாக, மறைமுகமாக குறிப்பிட்டார்.

ஆனால், ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு நடந்து கொண்டிருந்தபோது, ​​நேட்டோ ஆதரவுடன் உக்ரேனிய தாக்குதலின் ஒரு பகுதியாக, ரஷ்ய எல்லையை அமெரிக்க கவச வாகனங்கள் கடந்து கொண்டிருந்தன. உக்ரேன் புதன்கிழமை, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஆளில்லா விமானத் தாக்குதலை மேற்கொண்டது. இது போர் தொடங்கியதில் இருந்து மாஸ்கோ மீதான மிகப்பெரிய நேரடி தாக்குதல்களில் ஒன்றாகும்.

செவ்வாயன்று, ஒபாமா மாநாட்டில் உரையாற்றினார். அன்றைய தினம், அமெரிக்காவின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை கணிசமாக விரிவுபடுத்தும் புதிய அணு ஆயுத மூலோபாய ஆவணத்தை, பைடென் நிர்வாகம் ஏற்றுக்கொண்டதாக நியூ யோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. 6 டிரில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்ட அணு ஆயுத நவீனமயமாக்கல் திட்டமானது, ஏற்கனவே அதிகப்படியான செலவினங்களை மேலும் உயர்த்துகிறது.

“சீனாவின் அச்சுறுத்தலை மையமாகக் கொண்ட ஒரு இரகசிய அணுஆயுத மூலோபாயத்திற்கு பைடென் ஒப்புதல் அளித்துள்ளார்” என்று டைம்ஸ் கட்டுரையின் தலையங்கம் குறிப்பிட்டது. பைடென் நிர்வாகமானது, அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால், ஒரு புதிய மூலோபாயத்தை இதன்மூலம் அங்கீகரித்துள்ளது. டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி, பைடென் நிர்வாகம் “ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியாவுடன் சாத்தியமான ஒருங்கிணைந்த அணு ஆயுத மோதல்களுக்குத் தயாராக” அமெரிக்கப் படைகளை வழிநடத்தும் ஒரு புதிய மூலோபாயத்தை அங்கீகரித்துள்ளது.

ஜனநாயகக் கட்சி மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பற்றிய முழுமையான விவாதம் இல்லாததை கருத்தில் கொள்ளும்போது, இன்னும் வியக்க வைக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதை விட, இந்த மாநாட்டு மேடையில் முதல் நாளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அணு ஆயுத கொள்கை தொடர்பான மொழியில் பெரிய மாற்றங்கள் உள்ளன.

2020 ஜனநாயகக் கட்சி மாநாட்டு மேடை, புதிய அணு ஆயுதங்களை உருவாக்கியதற்காக டிரம்ப் நிர்வாகத்தை கண்டித்ததோடு, அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தங்களை விரிவுபடுத்துவதாக உறுதியளித்தது. “அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தைப் பலப்படுத்துவதற்கும், வெடிப்பார்ந்த அணுஆயுத சோதனை மீதான தடையைப் பேணுவதற்கும், ஐ.நா. ஆயுத வர்த்தக ஒப்பந்தம் மற்றும் விரிவான சோதனை தடை ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கும் மற்றும் புதிய தொடக்கத்தை நீட்டிப்பதற்கும் ஜனநாயகக் கட்சியினர் பொறுப்பேற்றுள்ளனர்,” என்று அது குறிப்பிட்டது.

ஆனால், இந்த வார்த்தைகள் அனைத்தும் 2024 மாநாட்டு அரங்கில் இல்லை. அதற்கு பதிலாக, அது அமெரிக்க அணுஆயுத களஞ்சியத்தை பரந்தளவில் விரிவாக்க சூளுரைக்கிறது. “நிர்வாகம் எமது அணுஆயுத முக்கூட்டின் ஒவ்வொரு காலடியையும் நவீனப்படுத்தி வருகிறது, எமது கட்டளை, கட்டுப்பாடு மற்றும் தகவல்தொடர்பு அமைப்புகளை புதுப்பித்து வருகிறது. மேலும், எமது அணு ஆயுத நிறுவனத்தில் முதலீடு செய்கிறது—தேவைப்பட்டால் நாம் தகைமைகளையும் தோரணைகளையும் தக்கவைத்து இன்னும் மேம்படுத்த முடியும்” என்று குறிப்பிடுகிறது.

பைடென் வெளியேறி ஹாரிஸால் மாற்றப்பட்டதிலிருந்து திருத்தப்படாத ஒரு பத்தியில், “ஜனாதிபதி பைடென் ஒருபோதும் எங்கள் இராணுவத்திற்கு முதுகு காட்டவும் இல்லை, ஒருபோதும் அப்படி செய்யவுமில்லை. அவரது இரண்டாவது பதவிக்காலத்தில், அடுத்த தலைமுறை ஆயுத அமைப்புகள், அதிநவீன பயிற்சி வாய்ப்புகள் மற்றும் நமது நீர்மூழ்கிக் கப்பல் படை மற்றும் அணுஆயுத முக்கூட்டு போன்ற தடுப்பு திறன்களை மேம்படுத்துவதில் அவர் தொடர்ந்து முதலீடு செய்வார்” என்று குறிப்பிடப்படுகிறது.

மாநாட்டு உரைகளில் எங்கும் அமெரிக்க அணுவாயுதக் கிடங்கை பாரியளவில் விரிவுபடுத்துவதற்கான கோரிக்கையை சுட்டிக்காட்டவில்லை. எந்த விளக்கமும் இல்லாமல், ஜனநாயகக் கட்சி மேடை புதிய அணு ஆயுதங்களை உருவாக்குவது “பாதுகாப்பற்றது” என்று அறிவித்துவிட்டு, அதற்குப் பதிலாக ஒவ்வொரு அமெரிக்க அணு ஆயுத அமைப்பும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் செலவில் “நவீனமயமாக்கப்பட வேண்டும்”, முதலீடு செய்யப்பட வேண்டும் மற்றும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

யதார்த்தத்தில், பைடென் நிர்வாகத்தின் கீழ் உத்தியோகபூர்வ அமெரிக்க அணுஆயுத கோட்பாட்டில் ஒரு கடலளவு மாற்றத்தை இந்த மாநாட்டு மேடை பிரதிபலிக்கிறது. இது, “பரஸ்பரம் உறுதியளிக்கப்பட்ட அழிவு” என்ற கருத்தாக்கத்தை நிராகரித்து, அதற்கு பதிலாக ஒரு “புதிய அணுஆயுத யுகத்தை” பிரகடனப்படுத்துகிறது. அதில் அணுஆயுதப் பதிலடி அச்சுறுத்தல் மூலம், அணு ஆயுத நாடுகளுக்கு எதிராகப் போரை நடத்துவதில் இருந்து அமெரிக்கா “தடுக்கப்படக்கூடாது” என்று வலியுறுத்துகிறது.

ஹாரிஸ் நிர்வாகம், உக்ரேனிய மோதலில் அமெரிக்க-நேட்டோவின் நேரடி தலையீடு மற்றும் சீனாவுடனான ஒரு சாத்தியமான போர் உட்பட உலகெங்கிலும் அமெரிக்க போர்வெறியை கணிசமாக விரிவாக்க முனைகிறது. இவை இரண்டுமே அணுஆயுத போர் அபாயத்தைக் கொண்டுள்ளன. மேலும் இது, தொழிலாள வர்க்கத்தின் மீதான பாரிய தாக்குதலுடன் சேர்ந்து, அவர்களது போர் முயற்சிகளுக்காக, தொழிலாள வர்க்கம் “தியாகம் செய்ய வேண்டும்” என்று கூறப்படும்.

புதன்கிழமை டுவிட்டர் X இல் பதிவிடப்பட்ட ஒரு அறிக்கையில், சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் பின்வருமாறு எழுதினார், “ஹாரிஸ் முக்கிய சமூக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவார் என்று பேர்ணி சாண்டர்ஸ், ஒக்காசியோ-கோர்டெஸ் (அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் ஒரு உறுப்பினர்) மற்றும் ஏனையவர்கள் கூறும் வாதங்கள் பொய்களாகும். இவை பொய்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஒவ்வொன்றும் வெளிநாட்டில் போர், உலகளாவிய சூறையாடல் என்ற ஆளும் வர்க்கத்தின் திட்ட நிரலுக்கு அடிபணிய வைக்கப்பட வேண்டும். இதற்கு, உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான போரை பாரியளவில் தீவிரப்படுத்துவது அவசியமாகும்.”

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

கிஷோர் மேலும் தெரிவிக்கையில், இதற்கு “தொழிற்சங்க எந்திரம் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – பைடென் AFL-CIO தொழிற்சங்கத்தை தனது உள்நாட்டு நேட்டோ என்று அழைத்தார். மாநாட்டின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரான அவரும், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் (UAW) தலைவர் ஷான் ஃபெயினும் ஒரு ‘ஜனநாயக ஆயுதக் களஞ்சியம்’ பற்றி பேசும்போது, அதைத்தான் அர்த்தப்படுத்துகின்றனர்” என்று கிஷோர் குறிப்பிட்டார்.

ட்ரம்ப், தனது பங்கிற்கு, உலகப் போரைத் தீவிரப்படுத்துவதில் எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல. அமெரிக்க இராணுவத்தின் அளவை இன்னும் கூடுதலாக விரிவுபடுத்தவும், சீனப் பொருட்கள் மீது 100 சதவீத சுங்கவரிகளைத் திணிக்கவும் அவர் சூளுரைத்துள்ளார். இந்த நகர்வு உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்களுக்கு பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதோடு, சீனாவுடனான அமெரிக்க போருக்கான சாத்தியக்கூறை பாரியளவில் தீவிரப்படுத்தும்.

உலகப்போரை தீவிரப்படுத்துவதில் இருகட்சிகளின் ஈடுபாடானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிப்படை நலன்களை பிரதிபலிக்கிறது. இது, இராணுவ வன்முறை மூலம் அதன் உலகளாவிய மேலாதிக்கத்தின் வீழ்ச்சியை ஈடுசெய்ய உறுதியாக உள்ளது. இந்தக் காரணத்திற்காகவே, போருக்கு எதிரான போராட்டம் என்பது சோசலிசத்திற்கான போராட்டத்துடன் இணைந்துள்ளது.

Loading