சிக்காகோவில் ஜனநாயகக் கட்சி தேசிய மாநாடு நிறைவடைந்த நிலையில், காஸாவில் 50 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

காஸா பகுதியில் இஸ்ரேலிய குண்டுவீச்சில் கொல்லப்பட்ட உறவினருக்கு பாலஸ்தீனப் பெண்கள் டெய்ர் அல்-பலாவில் (Deir al-Balah) உள்ள மருத்துவமனையில் இரங்கல் தெரிவிக்கின்றனர். ஆகஸ்ட் 22, 2024 வியாழக்கிழமை [AP Photo/Abdel Kareem Hana]

ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் இறுதி நாளுக்கு முன்னதாக காஸாவில் சுமார் 47 பாலஸ்தீனியர்கள், அமெரிக்கா வினியோகித்த குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டனர். இது, ஜனாதிபதி பதவிக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்புமனுவை துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஏற்றுக்கொண்ட நிலையில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

காஸாவில் குண்டுகள், ஏவுகணைகள், பீரங்கிகள் மற்றும் டாங்கிகள் மூலம் 322 நாட்களாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில், உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 40,000 ஐத் தாண்டியுள்ளதோடு, 90,000 க்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர். இது, ஒரு குறிப்பிடத்தக்க குறைமதிப்பீடாக இருக்கலாம். ஏனெனில், கடந்த மாதம் பிரிட்டிஷ் மருத்துவ இதழான தி லான்செட் உண்மையான இறப்பு எண்ணிக்கை 186,000 அல்லது காஸா பகுதியில் இனப்படுகொலைக்கு முந்தைய மக்கள்தொகையில் சுமார் 8 சதவீதம் என்று மதிப்பிட்டுள்ளது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் டுவிட்டர் X இல் பதிவிட்ட ஒரு அறிக்கையில் காஸாவில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மேற்கோளிட்டு, இனப்படுகொலையை ஜனநாயகக் கட்சியினர் ஆதரிப்பதை கண்டனம் செய்தார்.

கிஷோர் பின்வருமாறு குறிப்பிட்டார்:

வியட்நாம் போருக்கு எதிரான போராட்டங்களின் போது, ​​”ஏய், ஏய், LBJ, (ஜனாதிபதி Lyndon Baines Johnson) இன்று எத்தனை குழந்தைகளைக் கொன்றாய்?” என்று ஒரு பிரபலமான கோஷம் இருந்தது. காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலை தொடர்பாக பைடென்-ஹாரிஸ் விஷயத்தில், ஒரு உறுதியான பதிலைக் கொடுக்க முடியும்: இனப்படுகொலை தொடங்கியதிலிருந்து, 2,100 கைக்குழந்தைகள் மற்றும் சின்னஞ்சிறு குழந்தைகள் உட்பட மொத்தமாக 17,000 ம் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். யூரோ-மெட் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பானது, இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி—17,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இது, 10 மாதங்களுக்கும் மேலாக, ஒவ்வொரு நாளும் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்படுவதுக்கு சமமான எண்ணிக்கையாகும்.

நேரடியாக இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருக்கும் பாசிச இஸ்ரேலிய அரசாங்கமும், அதன் இராணுவப் படைகளும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட பிற ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து ஆயுத விநியோகம் மற்றும் நிதியுதவி இல்லாமல் ஒரு வாரம் கூட இயங்க முடியாது.

இந்த சூழலில், “காஸாவில் இடம்பெற்றுவரும் படுகொலைகளுக்கு மத்தியில் ஜனநாயகக் கட்சியானது, அவர்களின் ‘மகிழ்ச்சியின் வேட்பாளர்’ கமலா ஹாரிஸைப் பாராட்டுவதில் புரிந்துகொள்ள முடியாத ஆபாசமான மற்றும் இழிவான செய்தி ஒன்றைக் கொடுக்கின்றது. அது, காஸா பற்றி எரியும் போது, ஆடியும் பாடியும் ஏகாதிபத்தியமும் அதன் பிரதிநிதிகளும் கடிவாளமற்ற ஈவிரக்கத்தை வெளிப்படுத்திக் காட்டுகின்றனர்” என்று கிஷோர் குறிப்பிட்டார்.

நான்கு நாட்கள் இடம்பெற்ற மாநாட்டு நிகழ்வில், கடைசி நாளன்று இடம்பெற்ற ஹாரிஸின் உரை, மிகவும் போர்-சார்பு மற்றும் இராணுவவாத உரையாக இருந்தது. செனட்டர் மார்க் கெல்லி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலரும் சிஐஏ இயக்குனருமான லியோன் பானெட்டா உட்பட பேச்சாளர்கள், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரை விரிவாக்குவதற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் ஹாரிஸின் விருப்பத்தைப் புகழ்ந்து தள்ளினர்.

ஹாரிஸின் நிறைவுரை மற்றும் ஒட்டுமொத்த மாநாடு குறித்த மேலதிக பகுப்பாய்வுகளை உலக சோசலிச வலைத் தளம் வெளியிடும். எவ்வாறிருப்பினும், அவர் வெளியிட்ட மிக முக்கியமான அறிக்கைகள்: “உலகின் மிக வலிமையான, மிகவும் அபாயகரமான சண்டையிடும் சக்தியை அமெரிக்கா கொண்டிருப்பதை நான் எப்போதும் உறுதி செய்வேன்” மேலும், “இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் திறனைக் கொண்டிருப்பதை நான் எப்போதும் உறுதி செய்வேன்” என்பதாக இருந்தன. இதன் மூலம், ஜனநாயகக் கட்சியின் மத்திய முன்னுரிமை போரைத் தீவிரப்படுத்துவதாகும்.

மாநாட்டில், காஸா இனப்படுகொலைக்கான எந்த எதிர்ப்புக்களையும் பகிரங்கமாக வெளிப்படுத்துவதை தடுக்க ஜனநாயகக் கட்சியினர் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

சிக்காகோ மேயர் பிராண்டன் ஜோன்சனின் உத்தரவுகளின் பேரில், சிக்காகோ வீதிகளில் பாரிய படுகொலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த கிட்டத்தட்ட 70 ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த வாரம் கைது செய்யப்பட்டனர். சிக்காகோ ஆசிரியர் சங்கத்தின் ஒரு ஆபிரிக்க அமெரிக்க முன்னாள் ஊழியரான ஜோன்சனின் தேர்வானது, பேர்ணி சாண்டர்ஸால் ஊக்குவிக்கப்பட்டு, போலி-இடது குழுக்களால் ஆதரிக்கப்பட்டது. இவை இப்போது ஹாரிஸ் நியமனத்தை ஒரு வரலாற்று முன்னோக்கிய படியாக பாராட்டி வருகின்றன.

சில ஜனநாயகக் கட்சியினர் ஒரு பாலஸ்தீனிய அமெரிக்கரை மாநாட்டில் உரையாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை ஹாரிஸ்-வால்ஸ் பிரச்சாரகர்கள் நிராகரித்தனர். ஈரான் மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போன்ற அதன் கூட்டாளிகளுக்கு எதிரான போருக்குத் தயாராக அமெரிக்க இராணுவத்துடன் நெருக்கமாக செயல்பட்டு வரும் இஸ்ரேலில் உள்ள பாசிச நெதன்யாகு அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இது சாத்தியமான ஆட்சேபனையின் சமிக்ஞையாக எடுத்துக் கொள்ளப்படும் என்று அவர்கள் கவலை கொண்டனர்.

மிக முக்கியமான பாலஸ்தீனிய அமெரிக்க ஜனநாயகக் கட்சி பிரதிநிதி ரஷிதா தலீப்பின் போராட்டத்தை ஆதரித்ததுக்காக, முக்கியமாக மிச்சிகன் மற்றும் மினசோட்டாவில் 30 மாநாட்டு பிரதிநிதிகள் “உறுதியற்றவர்களாக” தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த பிரதிநிதிகள், ஜோர்ஜியா மாநிலத்தின் பாலஸ்தீனிய அமெரிக்க சட்டமன்ற உறுப்பினரான ருவா ரோம்மனுக்கு வெறும் 100 வார்த்தைகளில், ஹாரிஸை ஆதரித்தும், காஸாவில் போர்நிறுத்தத்திற்கான அழைப்பை உள்ளடக்கியும் வழங்கவிருந்த சுருக்கமான உரையை வழங்குவதற்கு நேரம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஜனநாயகக் கட்சியில் “இடதுகள்” என்றழைக்கப்பட்ட பேச்சாளர்களிடையே, இனப்படுகொலை குறித்து எதுவும் வாய் திறக்காத பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் போர்நிறுத்தத்தை ஆதரிப்பவராக ஹாரிஸை சித்தரித்துப் பாராட்டிய பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்ட்டெஸ் ஆகியோர் மாநாட்டில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர்.

மாநாட்டிற்கு வெளியே, இனப்படுகொலையை எதிர்த்து புதன்கிழமை இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பல டசின் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டனர். மாநாட்டுக்கு ஒரு நொடி கூட இடையூறு ஏற்படவில்லை. ஒரு மிச்சிகன் பிரதிநிதி இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று கோரும் பதாகையை கடத்திச் சென்றார். ஆனால், அவர் அதை அவிழ்த்தவுடன், பாதுகாப்புக் காவலர்கள் அதைப் பிடுங்கி, அவருக்கு நற்சான்றிதழ்கள் இருந்தபோதிலும், அவரை மாநாட்டு அரங்கத்திலிருந்து விரைவாக அகற்றினர்.

செவ்வாயன்று நடந்த கைதுகளைத் தொடர்ந்து தேசிய வழக்கறிஞர்கள் சங்கம் ஓர் அறிக்கை வெளியிட்டது: “ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிதிரண்டு அணிவகுத்ததற்கு விடையிறுப்பாக, மோதல்களைத் தூண்டிய பொலிஸ், அங்கிருந்த கூட்டத்தை விரட்டியதுடன், நடைபாதையில் இருந்தவர்களை கண்மூடித்தனமாக கைது செய்தது. மேலும் பெருந்திரளான மக்களை கைது செய்வதற்காக அவர்களை கூட்டமாக பொறிக்குள் சிக்க வைத்தது. … மாநாட்டின் போது மக்களின் முதல் திருத்த உரிமைகளை நகரம் மதிக்கும் என்று உறுதியளிக்கிறது. ஆனால் கருத்து சுதந்திரத்திற்கான இந்த வெட்கக்கேடான வெறித்தனமான அணுகுமுறை, வெற்றுத்தனமாக உள்ளது” என்று அறிக்கை குறிப்பிட்டது.

சிக்காகோ பொலிஸ் துறையின் (CPD) தலைமை அதிகாரி லாரி ஸ்னெல்லிங் புதன்கிழமை காலை பத்திரிகையாளர் கூட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைத் தாக்கி ஓர் ஆத்திரமூட்டும் அறிக்கையை வெளியிட்டார்: “இந்த அதிகாரிகள் இன்றிரவு நகரத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், வன்முறையில் ஈடுபடுபவர்களை வன்முறையில் இருந்து தடுப்பதற்கும் ஒரு நரக வேலையை செய்தனர். அது அனுமதிக்கப்படவில்லை, எனவே வழி தெரியாவிட்டால், அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாவிட்டால், மக்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது” என்று குறிப்பிட்டார். இது, அனுமதிக்கப்படாத போராட்டங்களுக்கு முக்கிய அச்சுறுத்தல் CPD என்பது தெளிவாகிறது.

பைடென் நிர்வாகத்தின் நீதித்துறை ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் போது சிக்காகோ நகரத்திற்கு 75 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையை வழங்கியது. இதில் சிக்காகோ பொலிஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் நேரத்திற்கான தாராளமான போனஸ் கொடுக்கப்பட்டது. மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) மற்றும் போதைப்பொருள் அமலாக்க நிர்வாகம் (DEA) உட்பட 12 வெவ்வேறு நிறுவனங்களின் முயற்சிகளை சிக்காகோ பொலிஸ் துறை மற்றும் இரகசிய சேவை ஒருங்கிணைக்கிறது.

ஆர்ப்பாட்டங்களின் அரசியலைக் குறித்து உரையாற்றுகையில், சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கிஷோர் பின்வருமாறு கருத்துரைத்தார்:

ANSWER கூட்டணி, Code Pink, DSA மற்றும் ஏனையவை உட்பட ஜனநாயகக் கட்சிக்கு அழுத்தமளிக்க முனையும் பல்வேறு நடுத்தர வர்க்க குழுக்களால் இந்த மாநாட்டிற்கு வெளியே போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. “ஜனநாயகக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் முற்போக்கான பிரச்சார வாக்குறுதிகளைப் பின்பற்ற வேண்டும்” என்பது அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றாகும்.

ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதைப் போல, ஒருவர் மழைக்காக பிரார்த்தனை செய்யலாம்.

ஆர்ப்பாட்டங்கள் அமைப்பாளர்கள் எதிர்பார்த்ததை விட கணிசமாக சிறியதாக இருந்ததில் வியப்பு ஏதும் இல்லை. ஜனநாயகக் கட்சி மற்றும் அரசியல் ஸ்தாபகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒட்டுமொத்த முன்னோக்கும் முற்றிலும் திவாலாகிவிட்டது என்பது நிரூபணமாகியுள்ளது, மேலும் மேலும் அதிகமான மக்கள் அதை அறிவர்.

காஸாவில் அமெரிக்க ஆதரவிலான இனப்படுகொலையை எதிர்க்கும் உழைக்கும் மக்களும் இளைஞர்களும் ஜனநாயகக் கட்சியினருக்கோ அல்லது குடியரசுக் கட்சியினருக்கோ முறையீடு செய்வதன் மூலம் எதையும் பெறப் போவதில்லை. அவர்கள் போர்க்குற்றவாளிகளிடம் தங்கள் குற்றங்களை நிறுத்துமாறு மன்றாடுவார்கள். மாறாக, இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தை ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்துடனும், போருக்கு எதிரான போராட்டத்தை சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்துடனும் இணைத்து, தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதே முன்னோக்கிய பாதையாகும்.

Loading