இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி ட்ரொட்ஸ்கிச தலைவர் விஜே டயஸின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை அனுஷ்டித்தது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

விஜே டயஸ்

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் இணைந்து ஜூலை 27 சனிக்கிழமையன்று தோழர் விஜே டயஸின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொழும்பு பொரளை பொது மயானத்தில் நினைவேந்தல் நிகழ்வை நடத்தின.

பிரசித்திபெற்ற ட்ரொட்ஸ்கிசத் தலைவரான விஜே டயஸ், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியினதும் அதன் முன்னோடியான, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும் நீண்டகால பொதுச் செயலாளராக இருந்தார்.

விஜேயின் நெருங்கிய உறவினர்கள் பலர்

விஜேயின் மகன் கீர்த்தி, மருமகள் அஞ்சனா, பேத்தி ஜனார்த்தி உட்பட உறவினர்களும் கட்சியினரும, ஆதரவாளர்களுமாக சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் விஜேயின் நினைவிடத்தில் கலந்து கொண்டவர்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வின் போது, ​​சோசலிச சமத்துவக் கட்சி, 1930களின் நடுப்பகுதியில் எழுதப்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கியின் பிரதான படைப்புகளில் ஒன்றான பிரான்ஸ் எங்கே செல்கிறது? என்ற நூலின் சிங்கள மொழி மொழிபெயர்ப்பை வெளியிட்டது. தோழர் விஜே, தனது சுறுசுறுப்பான அரசியல் வாழ்வின் கடைசி சில ஆண்டுகளை, கடினமான உடல்நிலைகள் இருந்தபோதிலும், நிரந்தரப் புரட்சி: முடிவுகளும் வாய்ப்புகளும், ஜெர்மனி: அடுத்து என்ன?, சீனப் புரட்சி பற்றிய சுருக்கம் மற்றும் முன்னோக்குகள் மற்றும் பிரான்ஸ் எங்கே செல்கிறது? ஆகிய நூல்களை தனது கடைசி கால கட்டத்தில் மொழிபெயர்த்தார்.

விஜே டயஸின் கடைசிப் படைப்பான லியோன் ட்ரொட்ஸ்கியின் பிரான்ஸ் எங்கே செல்கிறது (Whither France?) நூலின் சிங்கள மொழி மொழிபெயர்ப்பு.

நிகழ்விற்குத் தலைமை தாங்கிய கே. ரட்நாயக்க, விஜே இந்தப் படைப்புகளை மொழிபெயர்த்த சூழ்நிலையை விளக்கியதுடன், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று அனுபவங்களைக் கொண்டு கட்சிக் காரியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களையும் ஆயுதபாணி ஆக்குவதே விஜேயின் நோக்கம் என்றார். ரட்நாயக்க புதிய மொழிபெயர்ப்பின் முதல் பிரதிகளை சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் தீபால் ஜெயசேகரவிடமும், விஜேயின் மகன் கீர்த்தி விஜேகுணசிங்கவிடமும் கையளித்தார்.

இலங்கையில் உலக சோசலிச வலைத் தளத்தின் தேசிய ஆசிரியர் ரட்நாயக்க, 1987ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபக பொதுச் செயலாளரான, ட்ரொட்ஸ்கிச மேதாவி கீர்த்தி பாலசூரியவின் துயரமான மற்றும் அகால மரணத்திற்குப் பின்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவின் தலைமைப் பொறுப்பை தோழர் விஜே ஏற்றுக்கொண்டதை சுருக்கமாக விளக்கினார்.

'1968 ஜூனில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்ட போது, ​​இலங்கையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவை அமைப்பதற்கு முன்முயற்சி எடுத்த இளைஞர்களின் குழுவைச் சேர்ந்த விஜே, அவர் இறக்கும் வரை 54 ஆண்டுகள் இயக்கத்தில் முன்னணிப் பாத்திரத்தை வகித்தார்' என்று ரட்நாயக்க கூறினார்.

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான தோழர் டேவிட் நோர்த், இந்தியத் துணைக்கண்டத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மீள் எழுச்சிக்கான போராட்டத்தில், விஜே ஆற்றிய மகத்தான பங்கை தெளிவுபடுத்தியுள்ளார், என அவர் தெரிவித்தார்.

ரத்நாயக்க

2022 இல் இலங்கையில் ஏற்பட்ட வெகுஜன எழுச்சியை நினைவுகூர்ந்து ரட்நாயக்க கூறியதாவது: “தோழர் விஜே தனது கடைசி நாட்களில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைமையுடன் இணைந்து அந்த எழுச்சியிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதற்கான முன்னோக்கு ஆவணத்தைத் தயாரித்தார். 'தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டிற்காக' என்ற அந்த ஆவணம், விஜேயின் மறைவுக்கு ஏழு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை அன்றிலிருந்து எங்களின் அரசியல் பணிகளுக்கு வழிகாட்டி வருகிறது.”

சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ், கருத்து தெரிவிகையில்: “நான்காம் அகிலத்தில் 1953 இல் ஏற்பட்ட பிளவு மற்றும் 1963 இல் சோசலிச தொழிலாளர் கட்சியானது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர வகிபாகத்தை நிராகரித்து, கொள்கையற்ற முறையில் பப்லோவாதிகளுடன் மீண்டும் ஐக்கியப்படுத்தப்பட்டதன் படிப்பினைகளை வெள்ளவத்தை கிளை கலந்துரையாடிய போதே, நான் முதலில் தோழர் விஜேவை 1969ல் சந்தித்தேன்,' என்றார்.  

விஜேயின் மகத்தான பங்களிப்பு, தொழிலாள வர்க்கத்தை அதன் வரலாற்றுப் பணிகளுக்குத் தயார்படுத்துவதில் ஒரு உறுதியான அடித்தளமாக இருந்தது என்று அவர் கூறினார். அவர் ஒரு புத்திசாலி பேச்சாளராக இருந்தார். அதே நேரத்தில், அவர் கலை மற்றும் கலை பற்றிய மார்க்சிய கற்பித்தல்களில் ஆர்வமாக இருந்தார். மார்க்சிஸ கட்சி தொடர்பான பல கலைப் படைப்புகளின் தயாரிப்பிலும் பங்குகொண்டார். அதில் ஒன்றில், “இந்தப் போராட்டத்தில் வெற்றிபெறும் வரை நாங்கள் பின்வாங்கமாட்டோம்,” என தோழர் விஜே எழுதியிருந்தார்:

விலானி பீரிஸ்

சுமார் ஆறு தசாப்தங்களாக, தனது வாழ்நாளில் முக்கால்வாசியை, சர்வதேச சோசலிசத்தின் ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக முழுமையாக அர்ப்பணித்த, ஒரு அசாதாரண புரட்சிகர போராளியின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியை நினைவு கூர்வதே இக்கூட்டத்தின் நோக்கம் என, தீபால் ஜயசேகர கூறினார்.

'தோழர் விஜே, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எனக் கூறிக்கொண்ட லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.), 1964 இல் சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ கூட்டணிக்குள் நுழைந்துகொண்டு, சர்வதேச சோசலிசக் கொள்கைகளையும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தையும் காட்டிக்கொடுத்தமைக்கு எதிரான போராட்டத்திற்கு முன்முயற்சி எடுத்த அரசியல் புத்திஜீவி இளைஞர் குழுவைச் சேர்ந்தவர்,” என்று அவர் கூறினார்.

லங்கா சமசமாஜக் கட்சி காட்டிக்கொடுப்பின் உண்மையான வேர்கள் இலங்கையில் இல்லை, மாறாக சர்வதேசமானது, அதாவது பப்லோவாத திருத்தல்வாதத்தில் இருந்து தலைதூக்கியது என்பதை விளக்கிய, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தீர்க்கமான அரசியல் தலையீடுதான், இந்த போராட்டத்திற்கு மிக முக்கியமான காரணியாக இருந்தது என்று ஜயசேகர சுட்டிக்காட்டினார்.

ஜயசேகர

இலங்கையில் முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் விஷமத்தனமான தன்மை காரணமாக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் எதிர்கொண்ட பாரிய சிரமங்களுக்கு மத்தியில், தோழர் விஜே மற்றும் பலர், ட்ரொட்ஸ்கிச கொள்கைகளுக்காக தைரியமாகப் போராடினர். 'இந்த முன்மாதிரியான தலைவர், கட்சித் தலைமையை ஏற்றுக்கொண்ட பின்னர், அனைத்து முதலாளித்துவக் கட்சிகளுக்கும், அவற்றின் போலி இடது மற்றும் தொழிற்சங்க துணை உறுப்புகளுக்கும் எதிரான, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தில், கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கினார்,' என ஜயசேகர கூறினார்.

2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டம், முன்னோக்கு மற்றும் தலைமைத்துவத்தை வழங்குவதற்கான கட்சியின் போராட்டத்தில், பலவீனமான உடல் நிலையின் மத்தியிலும் விஜே ஆற்றிய முன்னணி பாத்திரத்தை ஜயசேகர சுட்டிக்காட்டினார்.

“முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியின் கூர்மையான வெளிப்பாடாக, இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த முன்னெப்போதும் இல்லாத பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியின் மத்தியில்,” விஜேயின் இழப்பானது குறிப்பாக உணரப்படுகிறது என்று குறிப்பிட்ட பேச்சாளர், 'அவரது சக்திவாய்ந்த அரசியல் பாரம்பரியம், மனிதகுலத்தின் சோசலிச எதிர்காலத்திற்கான தனது வாழ்நாள் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கின்ற, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் காரியாளர்களில் வாழ்கின்றது,” என்றார்.

விஜேயின் மரணத்தின் இரண்டாம் ஆண்டு நிகழ்வில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்

ஜயசேகர, விஜேயின் மறைந்த துணைவியான பியசீலி விஜேகுணசிங்கவின் நினைவுக்கு புகழஞ்சலி செலுத்தினார். தோழி பியசீலி, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக வாழ்நாள் முழுவதும் ட்ரொட்ஸ்கிச மற்றும் மார்க்சிய அறிவுஜீவியாக போராடினார். 'மார்க்சிச இலக்கிய விமர்சனத் துறையில் அவர் ஆற்றிய பங்கு, பாட்டாளி வர்க்கத்தின் தலைமை நெருக்கடியைத் தீர்ப்பதற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலையின் இன்றியமையாத அங்கமாகும்' என்று அவர் கூறினார்.

ஜயசேகர பின்னர், காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய இனப்படுகொலை, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் தயாரிப்புகளால், ஒரு ஏகாதிபத்திய உலகப் போரின் வளர்ச்சியடையும் ஆபத்து உக்கிரமடைந்தது வருகின்ற, முதலாளித்துவத்தின் இன்றைய உலகளாவிய நெருக்கடியின் பக்கம் திரும்பினார். 'அதாவது, விஜே ஈடுபட்ட தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டம் ஆழப்படுத்தப்பட வேண்டிய ஒரு தீர்க்கமான காலகட்டத்திற்குள் நாம் நுழைந்துள்ளோம்,' என்று அவர் கூறினார்.

இதே நெருக்கடி, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை வர்க்கப் போராட்டங்களின் வளர்ச்சிக்குள் தள்ளுவதாகவும் ஜயசேகர கூறினார். இது சர்வதேச சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை அவசரமாக வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியானது தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகரக் கட்சியாக கட்சியைக் கட்டியெழுப்புவதற்கும், தெற்காசியா முழுவதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்புவதற்குமான போராட்டத்திற்கு முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. அந்த தீர்க்கமான அரசியல் போராட்டத்தை, 'தோழர் விஜேக்கு நாம் செலுத்தக்கூடிய மாபெரும் புகழஞ்சலியாக' முன்னெடுப்பதில், சோசலிச சமத்துவக் கட்சியுடன் இணையுமாறு பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுத்து ஜெயசேகர முடித்தார்.