மேற்குக் கரையில் ஏழாவது நாளாக தாக்குதல் தொடரும் நிலையில் ஜெனின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அதன் இனப்படுகொலை நடவடிக்கையின் இரண்டாவது போர்முனையான மேற்குக் கரையில், இஸ்ரேல் செவ்வாயன்று ஏழாவது நாளாக இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

துல்கரேமில் ஒரு இராணுவத் தாக்குதலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய இராணுவ கவச வாகனங்களின் தொடரணி செல்லும்போது, பாலஸ்தீனிய ஆர்வலர் கைரி ஹனூன் பாலஸ்தீனிய கொடியை அசைக்கிறார். மேற்குக் கரை, செவ்வாய் கிழமை, செப்டம்பர் 3, 2024 [AP Photo/Majdi Mohammed]

அல் ஜசீராவின் ஒரு அறிக்கை, “ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால் கைதுகள், வன்முறை மற்றும் அழிவுகள் பதிவாகியுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமையிலிருந்து சியோனிச தாக்குதல் குவிந்துள்ள மேற்குக் கரையின் வடக்கில் உள்ள ஜெனின் நகரில், 16 வயது பாலஸ்தீனிய சிறுமியை இஸ்ரேலிய இராணுவம் சுட்டுக் கொன்றுள்ளதாக ஈரானிய வெளியீடான Press TV செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய படைகள் “அரை மணி நேரத்திற்கும் மேலாக அவருக்கு மருத்துவ அணுகலை மறுத்து, அவரை இரத்தப்போக்கில் இறக்கவிட்டதாக” பாலஸ்தீனிய செம்பிறை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 82 வயது முதியவரின் உடலின் மீது இராணுவ வாகனங்கள் ஓடுவதை X தளத்தில் வெளியிடப்பட்ட காணொளி காண்பித்தது. அவர் வெள்ளிக்கிழமை ஜெனினில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் (IDF) சுடப்பட்டார். மேலும், மருத்துவ பணியாளர்கள் அவருக்கு உதவிக்கு வரவிடாமல் தடுக்கப்பட்டதால் ரத்த வெள்ளத்தில் இறந்து போனார்.

இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் அதன் பிரதான வீதிகளை புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கி அவற்றை கடந்து செல்ல முடியாததாக ஆக்கியிருப்பதை ஜெனினில் இருந்து வரும் புகைப்படங்கள் காட்டுகின்றன. இதற்கிடையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படை ஜெனின் பாலஸ்தீனிய அகதிகள் முகாமில் ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளதோடு, மேலும், அங்கிருந்து குடியிருப்பாளர்கள் வெளியேறுவதையோ அல்லது நுழைவதையோ தடுத்துள்ளது என்று பாலஸ்தீனிய செய்தி நிறுவனமான வாஃபா (Wafa) தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய துருப்புக்கள் “58 வயதான பாலஸ்தீனியரின் உடலை காஃப்ர் டானில் (Kafr Dan) உள்ள சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். உயிரிழந்தவர் அய்மான் ராஜே அபேட் (Ayman Rajeh Abed) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

“அவரது உடல் கைவிலங்கிடப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்களுடன் வந்தது” என்று ஜெனின் அரசு மருத்துவமனையின் இயக்குநர் விஸ்ஸாம் பக்கர் (Wissam Bakr) கூறினார்.

ஞாயிறன்று துருக்கிய செய்தி நிறுவனமான அனடோலுவிடம் (Anadolu) பேசிய ஜெனின் மேயர் நிடால் அல்-ஒபைதி (Nidal al-Obaidi), ஜெனினில் நடந்து வரும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையை ஒரு “பூகம்பத்துடன்” ஒப்பிட்டு, இதுவரை சுமார் 500 மில்லியன் ஷெக்கல்கள் (135.2 மில்லியன் டாலர்) சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளார்.

“நீர் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை அழித்தல் மற்றும் மின்சார மின்மாற்றிகளை குறிவைத்தல் போன்ற உள்கட்டமைப்புகளுக்கு சேதம் விளைவித்தமை உட்பட இஸ்ரேலியப் படைகளினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அழிவுகள் பிரமாண்டமானவை” என்றும் மேயர் கூறினார்.

இதற்கிடையில், தெற்கில் உள்ள துல்கரெம் (Tulkarem) அகதிகள் முகாமில் இராணுவ நடவடிக்கைகள் கடந்த வாரத்தில் இரண்டாவது தடவையாக முடுக்கிவிடப்பட்டன. ஒரு பாலஸ்தீனிய இளைஞரான முகமது கானான் இஸ்ரேலிய ஸ்னைப்பர் துப்பாக்கியால் கொல்லப்பட்டதாக வாஃபா அறிவித்தது. அல் ஜசீரா நிருபர் நிடா இப்ராஹிம் (Nida Ibrahim) கூறுகையில், “அந்த இளைஞர் தனது தந்தையுடன் தொழுகைக்காக ஒரு மசூதிக்குச் சென்றபோது கழுத்தில் சுடப்பட்டார்” என்று தெரிவித்தார். அவரது தந்தையும் அடிவயிற்றில் சுடப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளை இதர அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. அதில், ரமல்லாவின் (Ramallah) வடக்கே உள்ள பிர்சீட் பல்கலைக்கழகத்தின் மீதான தாக்குதலில், “சொத்துக்கள் மற்றும் வெளியீடுகள்” பறிமுதல் செய்யப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, பிராந்தியத்தின் வடமேற்கில் உள்ள கல்கிலியாவில் நடந்த சோதனையின் போது ஒரு இளைஞன் காயமடைந்ததாகவும் அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

ரமல்லாவின் வடக்கே உள்ள பிர்சீட் பல்கலைக்கழகத்தைத் தாக்கியது உட்பட, மேற்குக் கரையில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை குறித்து அல் ஜசீரா, “பிராந்தியத்தின் வடமேற்கில் உள்ள ஒரு நகரமான கல்கிலியாவில் (Qalqilya) இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் ஒரு இளைஞர் காயமடைந்தார்” என்று மேலும் தெரிவித்தது.

இஸ்ரேலிய தாக்குதல் தொடங்கியதில் இருந்து மேற்குக் கரையில் இதுவரை 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலஸ்தீனிய கைதிகள் சங்கம் மேற்குக் கரையில் செவ்வாய்க்கிழமை முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் 22 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவித்தது. இது கடந்த வாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 70 ஆக உயர்த்தியது. கடந்த அக்டோபரில் இருந்து மேற்குக் கரையில் 10,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் மேற்குக் கரையில், இஸ்ரேலிய படைகள் மற்றும் பாசிச குடியேற்றக்காரர்களின் தாக்குதல்களால் குறைந்தது 682 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய இராணுவம் அவர்களின் வீடுகளை இடித்ததன் விளைவாக 3,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அதேவேளை காஸாவில் இனப்படுகொலை தொடங்கியதிலிருந்து பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய குடியேற்றக்காரர்கள் மேற்கொண்ட 1,250 தாக்குதல்களை ஐக்கிய நாடுகள் சபை ஆவணப்படுத்தியுள்ளது. இது மேற்குக் கரை மீதான தாக்குதலின் பின்னணியில் உள்ள இன சுத்திகரிப்பு இலக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இஸ்ரேலால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இரண்டு பாலஸ்தீனப் பிரதேசங்களில் 2,183 சதுர மைல்களைக் கொண்டுள்ள மேற்குக் கரையே பெரியதாகும். இது காசா பகுதியை விட சுமார் 15 மடங்கு பெரியதாகும். மேலும், 2.9 மில்லியன் பாலஸ்தீனியர்கள் இங்கு வசிக்கின்றனர். மேற்குக் கரையின் கிழக்கில் ஜோர்டான் ஆறு மற்றும் சாக்கடலும் (Dead Sea), தெற்கு, மேற்கு மற்றும் வடக்கில் இஸ்ரேலும் எல்லைகளாக உள்ளன.

ஜெனின் அகதிகள் முகாமானது, போர்க்குணம் கொண்ட பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான ஒரு மையமாக உள்ளது. இது 1948ல் நக்பாவின் போது, சியோனிச குண்டர்களால் தப்பியோடிய அல்லது தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காக 1953ல் நிறுவப்பட்டது.

ஜெனின் முகாமின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர மைலுக்கு 33,000 ஆகும். இது காஸாவை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும். ஜெனின் முகாமில் வேலையில்லாத் திண்டாட்டம் ஐந்தில் ஒன்று என்ற அளவில் உள்ளது. மற்றும் கழிவுநீர் அமைப்புமுறை பற்றாக்குறை மற்றும் தண்ணீர் மற்றும் மின்சார பற்றாக்குறையால் வாழ்க்கை நிலைமைகள் மோசமாக உள்ளன.

1948 இல் இணைக்கப்பட்ட மேற்குக் கரையானது, 1967 இல் ஆறு நாள் போரில் இஸ்ரேல் அதை ஆக்கிரமிக்கும் வரை ஜோர்டானால் ஆளப்பட்டது. அப்போதிருந்து, ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச நீதிமன்றமும் (ICJ) மேற்குக் கரை மற்றும் காஸா இரண்டையும் “ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள்” என்று மீண்டும் மீண்டும் வகைப்படுத்தி வந்துள்ளன. மேலும், அப்பகுதிகளின் மீதான இறையாண்மைக்கான பாலஸ்தீனிய உரிமைகளையும் கோரி வந்துள்ளன. ஜூலை 2024 இல், சர்வதேச நீதிமன்றம் “ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசத்தில் இஸ்ரேலின் தொடர்ச்சியான இருப்பு சட்டவிரோதமானது” என்று கூறியது.

திங்களன்று அவரது விளக்கக்காட்சியின் போது, ​​காஸாவில் ஹமாஸுடன் பணயக்கைதிகள்-பரிமாற்ற ஒப்பந்தத்தைப் பெற மறுத்ததற்காக அரசாங்கத்தை கண்டித்து டெல் அவிவில் இடம்பெற்ற வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, மேற்குக் கரையை முற்றிலுமாகப் புறக்கணித்த இஸ்ரேலின் வரைபடத்தை காட்சிப்படுத்தினார்.

மேற்கு கரையின் இருப்பை அழிக்கும் ஒரு சுவர் அளவிலான டிஜிட்டல் வரைபடத்தின் முன்னால் நின்று கொண்டிருந்த நெதன்யாகு, போர்நிறுத்தம் மற்றும் காஸா இனப்படுகொலை தொடர்வதற்கான இஸ்ரேலிய அரசாங்கத்தின் எதிர்ப்பை பாதுகாத்த அதேவேளையில், மேற்குக் கரையில் நடந்துவரும் தாக்குதல் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

இந்த அறிக்கை இஸ்ரேலுக்குள் இருக்கும் பாசிச அரசியல் சக்திகளின் கோரிக்கைகளை சமாதானப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. இஸ்ரேலிய குடியேற்றத்துறை மந்திரி ஓரிட் ஸ்ட்ராக் (Orit Strock) திங்களன்று அரசாங்கம் இன்னும் ஒரு படி மேலே சென்று மேற்குக் கரையில் ஒரு போர் நிலைமையை அறிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய இராணுவத்தால் 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், காஸா மீதான அமெரிக்க ஆதரவிலான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடர்கிறது.

காஸா நகரத்தின் டராஜ் பகுதியில் ஒரு வீட்டின் மீது இஸ்ரேலிய விமானம் நடத்திய தாக்குதலில், குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர் என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது. “முன்னதாக, காஸா பகுதியின் வடக்கில் உள்ள காஸா நகரில் ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்” என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன அதிகார சபையின் சுகாதார அமைச்சர் மஜித் அபு ரமதான் (Majid Abu Ramadan), குண்டு வீச்சுக்களை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, மேலும், காஸாவில் போலியோவிற்கு எதிராக பெரிய அளவிலான தடுப்பூசி பிரச்சாரத்தை மேற்கொள்ள அதிகாரிகளை அனுமதிக்க வேண்டும் என்று கூறியதாக Wafa செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு நாள் முதல் 10 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தலா இரண்டு டோஸ்கள் போடுவதற்கு தேவையான அளவு மொத்தம் 1.6 மில்லியன் டோஸ்கள் வந்துள்ளதாக ரமலான் கூறினார். இஸ்ரேலிய முற்றுகை மற்றும் காஸா மீதான தாக்குதல்கள் போலியோ 25 வருட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அந்த பகுதிக்கு பரவுவதுக்கு உதவியதோடு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகளைத் தடுப்பூசி பிரச்சாரத்தைத் தொடங்கவும் தூண்டியது.

அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலில் நடந்த எழுச்சி தொடர்பாக ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் (Yahya Sinwar) மற்றும் பிற ஹமாஸ் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை செவ்வாய்க்கிழமை அறிவித்தது. நியூயோர்க் ஃபெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஏழு- எண்ணிக்கை குற்றவியல் புகார் என்பது, சிடுமூஞ்சித்தனத்தின் உச்சத்தில் அமெரிக்க நீதி அமைப்பு இருப்பதை காட்டுகிறது. இந்தப் புகார்களில், ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கு பொருள் ஆதரவை வழங்க சதி செய்தல், அமெரிக்க நபர்களை கொலை செய்ய சதி செய்தல் மற்றும் மரணத்தை விளைவிக்கும் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்த சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க அரசாங்கம் (வெள்ளை மாளிகையில் ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி தலைமையில் இருந்தாலும் சரி) கடந்த 30 ஆண்டுகளாக குற்றவியல் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்களின் முடிவில்லாத தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக பால்கன், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் உக்ரேனில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Loading