சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு பொதுக் கூட்டத்தை நடத்தியது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

16 ஆகஸ்ட் 2024 அன்று கொழும்பு தேர்தல் கூட்டத்தின் ஒரு பகுதி.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்காக சக்திவாய்ந்த கூட்டமொன்றை ஆகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் நடத்தின. கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உட்பட சுமார் 60 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் உட்பட நாடு முழுவதும் சோசலிச சமத்துவக் கட்சி ஏற்பாடு செய்திருக்கும் பல கூட்டங்களில் இதுவே முதல் கூட்டமாகும். இலங்கை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ம் திகதி, சனிக்கிழமை நடைபெற உள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் விஜேசிறிவர்தனவை அறிமுகப்படுத்திய ஜயசேகர, அவர் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கட்சியின் ட்ரொட்ஸ்கிச அனைத்துலகவாத சோசலி கொள்கைகளுக்காகப் போராடிய சுமார் 50 ஆண்டுகால சாதனையைக் கொண்டுள்ளார் என்றார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர 16 ஆகஸ்ட் 2024 அன்று ஜனாதிபதித் தேர்தல் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய போது

தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் தலையீட்டின் நோக்கத்தை விளக்கிய ஜயசேகர, ஏகாதிபத்தியப் போருக்கு எதிராகவும் ஆளும் வர்க்கம் சிக்கனம் மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்குத் திரும்புவதற்கு எதிராகவும் ஒரு சோசலிச முன்னோக்கில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலை விரிவுபடுத்துவதற்காகவே கட்சி பிரச்சாரம் செய்வதாகக் கூறினார்.

'அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்துக் கட்சிகள் மற்றும் அவர்களது தொழிற்சங்க மற்றும் போலி-இடது அமைப்புகளுக்கு மாறாக தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேர்தலில் உண்மையைச் சொல்லும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே' என்று அவர் கூறினார். 'ஆழமடைந்து வரும் வறுமை, வேலையின்மை மற்றும் பிற சமூகப் பிரச்சனைகள் உட்பட, வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகள் எதுவும் முதலாளித்துவ இலாப அமைப்பிலோ அல்லது தேசிய அடிப்படையிலோ தீர்க்கப்பட முடியாது. உலகளவில் முதலாளித்துவ ஆட்சியை தூக்கியெறிந்து தொழிலாள வர்க்கத்தை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்காக, ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் மற்றும், முன்னோக்குக்காகப் போராட வேண்டியது அவசியம்.'

சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ் கூட்டத்தில் உரையாற்றுகையில், முதலாளித்துவத்தை ஒழித்து அதை சோசலிசத்தால் பதிலீடு செய்வதற்கான உலகளாவிய மூலோபாயத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டவும் வழிகாட்டவும் சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது என்று கூறினார்.

சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ் 16 ஆகஸ்ட் 2024 அன்று ஜனாதிபதி தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிய போது.

'ஆளும் வர்க்கத்தை போர் மற்றும் அழிவுக்கு இட்டுச் செல்கின்றன, முதலாளித்துவத்தின் அதே முரண்பாடுகள், தொழிலாள வர்க்கத்தையும் சமூகப் புரட்சியை நோக்கித் தள்ளுகின்றன' என்று அவர் கூறினார். 'ஆனால் தொழிலாள வர்க்கம் தன்னிச்சையாக தேவையான நனவை அடைய முடியாது. தொழிலாள வர்க்கத்திற்கு தேவையான முன்னோக்கு மற்றும் தலைமையை வழங்க ஒரு புரட்சிகர கட்சி இருக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தில், சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகரக் கட்சியாகக் கட்டியெழுப்புவதற்கான எங்கள் போராட்டத்தை நாங்கள் தீவிரப்படுத்துகிறோம்.”

சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கபில பெர்னாண்டோ, நாட்டின் இளைஞர்கள் மீதான ஆளும் வர்க்கத்தின் இரத்தக்களரி சரித்திரம் குறித்து கவனத்தை ஈர்த்தார். தெற்கில் கிராமப்புற அமைதியின்மையை ஒடுக்க 1971ல் மற்றும் 1988-1990ல் பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதையும், பின்னர் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் இனவாதப் போரின் போது தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

1940 களில் அப்போதைய ட்ரொட்ஸ்கிஸ்ட் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (BLPI) தலைமையின் கீழ் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் வென்றெடுத்த இலவச கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசிய பொது சேவைகளை அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் வெட்டிக் குறைத்துள்ளன என்று பெர்னாண்டோ விளக்கினார். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் சரியான தன்மையை எதிர்மறையாக நிரூபித்ததாக அவர் கூறினார். 'பின்தங்கிய நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கம் உழைக்கும் மக்களின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை உறுதிசெய்வதற்கு முற்றிலும் இலாயக்கற்றது. தொழிலாள வர்க்கம் தன்னைச் சுற்றி ஏழை விவசாயிகளை அணிதிரட்டிக்கொண்டு சோசலிசத்துக்காக போராடுவதன் மூலம் மட்டுமே இந்த உரிமைகளை அடைய முடியும்” என்று பெர்னாண்டோ கூறினார்.

IYSSE ஒருங்கிணைப்பாளர் கபில பெர்னாண்டோ 16 ஆகஸ்ட் 2024 அன்று கொழும்பு தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிய போது

பிரதான உரையை ஆற்றிய சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன, சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரங்களுக்கும் ஏனைய வேட்பாளர்களுக்கும் இடையிலான பிரதான வேறுபாடுகளை சுட்டிக்காட்டினார். “சோசலிச சமத்துவக் கட்சிக்கு தனியான தேர்தல் வேலைத்திட்டம் இல்லை. எங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​உழைக்கும் மக்களுக்கு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தையும் நமது உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) முன்னோக்கையுமே முன்வைக்கின்றோம்.

அமெரிக்காவும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும் தீவிரப்படுத்தி வரும் உலகப் போரின் ஆபத்து குறித்து எச்சரிக்கும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே என்று விஜேசிறிவர்தன கூறினார். ஏனைய வேட்பாளர்கள் யாரும் இந்தப் பிரச்சினையை மக்கள் முன் எழுப்பவில்லை. உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான உக்கிரமான தாக்குதல், முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியில் இருந்தே பாய்கிறது என்று அவர் விளக்கினார்.

“தங்கள் வேட்புமனுக்களை கையளித்த பிறகு, அனைத்து முதலாளித்துவ வேட்பாளர்களும் ‘நாட்டை’ கட்டியெழுப்புவது பற்றி பேசுகிறார்கள். இந்த நாடு எதை உள்ளடக்கியுள்ளது? நாட்டில் இரண்டு பெரிய வர்க்கங்கள் உள்ளன: முதலாளித்துவ வர்க்கம் மற்றும் தொழிலாள வர்க்கம். அவர்கள் அனைவரும் தொழிலாள வர்க்கத்தின் செலவில் முதலாளித்துவத்தின் இலாபங்களுக்கு முட்டுக் கொடுப்பதைப் பற்றியே பேசுகின்றனர்,” என்று அவர் கூறினார். அவர்கள் அனைவருக்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காகப் போராடுகிறது.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன, 16 ஆகஸ்ட் 2024 அன்று கொழும்பு தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிய போது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாகக் கூறுகின்றார், ஆனால் இலங்கையில் 2019 இல் 11 வீதமாக இருந்த வறுமை விகிதம் 2024 இல் 26 வீதமாக உயர்ந்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன, என விஜேசிறிவர்தன கூறினார். உயர் மட்டத்தில் உள்ள 1 சதவீதத்தினர் நாட்டின் செல்வத்தின் 31 சதவீதத்தை தம்வசம் வைத்துள்ள அதேவேளை, கீழ் மட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினர் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே கொண்டுள்ளனர். 'விக்கிரமசிங்க எந்த வர்க்கத்திற்காக பிரச்சினைகளை தீர்க்கிறார் என்பதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.'

2022 இல் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்கள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை பதவி விலகக் கோரி நாடு முழுவதும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் இணைந்து கொண்ட, வெகுஜன எழுச்சியின் அரசியல் படிப்பினைகளை பேச்சாளர் வெளிக்கொணர்ந்தார். இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டார். ஆனால் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும், முன்னிலை சோசலிசட் கட்சி போன்ற போலி இடதுகளும், இந்த வெகுஜன இ,யக்கத்தை எதிர்க் கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி.யும் முன்வைத்த 'இடைக்கால அரசாங்கம்' என்ற பொறிக்குள் திசைதிருப்புவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைத் தடுக்க வேலை செய்தன. சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்திய விக்கிரமசிங்கவை பதவியில் அமர்த்துவதற்கு இது வழி வகுத்தது.

2022ல் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே மாற்று புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்திற்காக, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் போராடியது என்று விஜேசிறிவர்தன விளக்கினார். அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்துக் கட்சிகள் மற்றும் அவர்களது தொழிற்சங்கம் மற்றும் போலி இடது கூட்டாளிகளுக்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி ஒவ்வொரு வேலைத்தளங்களிலும், தொழிற்சாலைகளிலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் தங்கள் சொந்த சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது. சோசலிச கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்காக, நடவடிக்கை குழுக்களில் இருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டிற்கான (DSC) அரசியல் முன்முயற்சியை அது எடுத்தது.

'தொழிலாளர் வர்க்கத்தில் வேரூன்றிய ஒரு புரட்சிகர கட்சி இல்லாமல், வெகுஜன இயக்கங்கள் வெற்றிபெற முடியாது. 2011 ஆம் ஆண்டு எகிப்திய எழுச்சி, இலங்கையின் வெகுஜன எழுச்சி மற்றும் இப்போது பங்களாதேஷில் நடைபெறும் போராட்டத்தின் மிகப்பெரிய படிப்பினை இதுவே ஆகும். இந்த படிப்பினையை மக்களிடம் கொண்டு செல்ல நாங்கள் எங்கள் தேர்தல் பிரச்சாரத்தை பயன்படுத்துவோம்,” என்று சோ.ச.க. வேட்பாளர் கூறினார்.

ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் (தே.ம.ச.) வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, மக்களின் உடன்பாட்டைக் கொண்டுள்ளதாக கூறிக்கொள்வதாக விஜேசிறிவர்தன கூறினார். “எனினும், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை தனது அரசாங்கம் தொடரும் என்று திஸாநாயக்கவே லங்காதீப பத்திரிகைக்கு கூறியுள்ளார். ஜே.வி.பி/தே.ம.ச. தலைவர், ‘மக்களின் உடன்பாடு’ பற்றி பேசுவது, ஒரு அப்பட்டமான பொய் என்பதையும், அவர்கள் உண்மையில் உழைக்கும் மக்களுக்கு எதிராக சர்வதேச நிதி மூலதனத்தின் பக்கம் நிற்பதையுமே இது காட்டுகிறது.”

ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான கட்சியின் பிரச்சாரம் சோசலிசத்திற்கான பரந்த சர்வதேச போராட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் விளக்கினார். சோசலிச சமத்துவக் கட்சி இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்பட வேண்டும் என்றும், தீவில் உள்ள நடவடிக்கைக் குழுக்கள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியில் (IWA-RFC) இணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறது.

விஜேசிறிவர்தன, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிக்குமாறும், கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்குபற்றி ஆதரவளிக்குமாறும் அழைப்பு விடுத்து முடித்தார்.

Loading