முன்னோக்கு

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள்

போரும் சர்வாதிகார அச்சுறுத்தலும் மேலாதிக்கம் செலுத்தும் ஒரு தேர்தல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப். [AP Photo]

நவீன அமெரிக்க வரலாற்றில் மிகவும் பிற்போக்குத்தனமான ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும் சுமார் எட்டு வாரங்கள் உள்ளன. இரண்டு பிரதான முதலாளித்துவ கட்சிகளும் அமெரிக்க உழைக்கும் மக்களுக்கு பாசிசவாத சர்வாதிகாரத்திற்கான வேட்பாளரான குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஏகாதிபத்திய உலகப் போருக்கான வேட்பாளரான ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு இடையேயான தேர்வையே வழங்குகின்றன.

ஜனாதிபதி ஜோ பைடெனுக்கு பதிலாக துணை ஜனாதிபதி ஹாரிஸ் நியமிக்கப்பட்டதானது, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பிரச்சாரத்தின் பொறிவைத் தடுத்ததோடு, பிரச்சாரத்துக்கான நிதியை உள்ளே கொண்டு வந்தது. ஆனால், போட்டி அடிப்படையில் சமமாக உள்ளது. ஞாயிறன்று பகிரங்கப்படுத்தப்பட்ட நியூ யோர்க் டைம்ஸ்/சியனா கல்லூரி கருத்துக்கணிப்பு ஒன்று ட்ரம்ப் தேசிய அளவில் ஒரு சதவீத புள்ளி முன்னிலையில் இருப்பதைக் காட்டியது. ஆனால், தேர்தல் கல்லூரியில் முடிவைத் தீர்மானிக்கும் ஏழு “போர்க்கள மாநிலங்களில்” மூன்றில் ஹாரிஸ் குறுகிய முன்னிலையில் இருப்பதையும், மற்ற நான்கில் சமநிலையில் இருப்பதையும் காட்டியது.

குறிப்பிடத்தக்க வகையில், டைம்ஸ் கருத்துக்கணிப்பின்படி, “வாக்களிக்க வாய்ப்புள்ளவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் அடுத்த ஜனாதிபதி திரு. பைடெனிடம் இருந்து ஒரு பெரிய மாற்றத்தை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் 25 சதவீதத்தினர் மட்டுமே துணை ஜனாதிபதி அந்த மாற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரிவித்தனர். அதேவேளையில் 53 சதவீதத்தினர் முன்னாள் ஜனாதிபதியான திரு. ட்ரம்ப் அவ்வாறு செய்தார்” என்று தெரிவித்தனர்.

ட்டுவிட்டர் X இல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஜனாதிபதி பதவிக்கான சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் ஜோசப் கிஷோர், டைம்ஸ் கருத்துக்கணிப்பு மற்றும் தேர்தல் போட்டி மிகவும் நெருக்கமாக இருந்தது என்பதற்கான ஏனைய அறிகுறிகளை மேற்கோளிட்டு, எழுதினார்:

கடந்த தேர்தலை ஒரு பாசிசவாத சதி மூலம் தூக்கியெறிய முயற்சித்த ஒரு முன்னாள் ஜனாதிபதி, 2024 தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற உண்மையை விட ஜனநாயகக் கட்சியினரின் பேரழிவுகரமான குற்றச்சாட்டு என்னவாக இருக்க முடியும்?

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

கிஷோர் மேலும் கூறியதாவது, “பரந்த பெருந்திரளான மக்கள் முகங்கொடுக்கும் சமூக நெருக்கடி மற்றும் பேரழிவுகரமான நிலைமைகளைக் கையாள்வதற்கு ஹாரிஸிடமும் ஜனநாயகக் கட்சியினரிடமும் முன்வைப்பதற்கு முற்றிலும் ஒன்றுமில்லை. அவர்களின் மைய முன்னுரிமையானது போரின் விரிவாக்கம் ஆகும், குறிப்பாக ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர், இது பிரபலமாக இல்லை. காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு குடியரசுக் கட்சியினருடன் சேர்ந்து அவர்களும் முழுப் பொறுப்பாளிகள் ஆவர்.”

மிக நெருக்கமான மாநிலங்களில் ஒரு சில ஆயிரம் வாக்குகள் தீர்மானகரமானதாக இருக்கும் நிலையில், நவம்பர் 5 இரவில் தேர்தலில் வெற்றி பெற்றவர் யார் என்பது தெரியவருவது அதிகரித்தளவில் சாத்தியமில்லை. ட்ரம்ப் பிரச்சாரம் ஏற்கனவே சட்டரீதியாகவும் உடல் ரீதியான வன்முறையுடனும் வாக்கு எண்ணிக்கையை சவால் செய்ய தீவிர தயாரிப்புகளை செய்து வருகிறது. மேலும், குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில சட்டமன்றங்களையும் வலதுசாரி உச்ச நீதிமன்றத்தையும் பயன்படுத்தி வாக்குகளை கடத்துவதற்கு எதிர்பார்க்கிறது.

கடந்த வார இறுதியில் தனது பிரச்சார பேரணிகளில், ட்ரம்ப் மீண்டும் தனது அரசியல் எதிரிகளை கைது செய்து, விசாரணை மற்றும் சிறையில் அடைப்பதாக மிரட்டினார். “மோசடிக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த மோசடியை நாம் நிறுத்தினால், அவர்களை ஏமாற்ற விடவில்லை என்றால், நான் இனி பிரச்சாரம் செய்ய வேண்டியதில்லை” என்று அவர் விஸ்கான்சினில் ஒரு கூட்டத்தில் கூறினார். ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் எழுதினார்: “நான் வெற்றிபெறும் போது, ஏமாற்றியவர்கள் சட்டத்தின் முழு அளவில் தண்டிக்கப்படுவார்கள், அதில் நீண்ட கால சிறைத்தண்டனையும் அடங்கும், இதனால் நீதியின் இந்த சீரழிவு மீண்டும் ஒருபோதும் நடக்காது.”

ட்ரம்ப் ஏற்கனவே அவரது இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலத்தின் முதல் நாளில் “சர்வாதிகாரி” பாத்திரத்தை ஏற்க சூளுரைத்துள்ள அதேவேளையில், ஏறத்தாழ 20 மில்லியன் புலம்பெயர்ந்தவர்களையும் அவர்களது குடும்பங்களையும் சுற்றி வளைத்து நாட்டை விட்டு வெளியேற்ற அமெரிக்காவிற்குள் இராணுவத்தை அணிதிரட்டவும் சூளுரைத்துள்ளார்.

கடந்த வாரயிறுதியில், கமலா ஹாரிஸ் இரண்டு குடியரசுக் கட்சியின் முக்கிய போர்வெறியர்களான முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மற்றும் அவரது மகள் லிஸ் செனி ஆகியோரின் ஒப்புதலைப் பெற்றார். வயோமிங்கின் முன்னாள் காங்கிரஸ் பெண்மணியான லிஸ் செனி, காங்கிரஸுக்கு எதிராக ட்ரம்ப் 2021 ஜனவரி 6 அன்று நடத்திய ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை விசாரிக்க இப்போது கலைக்கப்பட்ட பிரதிநிதிகள் சபை தேர்வுக் குழுவின் இணைத் தலைவராக இருக்கின்றார்.

ஒரு போர்க் குற்றவாளியான டிக் செனி, 2003 இல் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பின் பிரதான சிற்பியாக இருப்பதுடன், மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தூண்டிவிடப்பட்ட போர்களில் மில்லியன் கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் பொறுப்பாளியாவார். ட்ரம்ப்பைவிட ஹாரிஸை பகிரங்கமாக ஆமோதிக்க டிக் செனி தேர்ந்தெடுத்திருப்பதற்கான காரணம், பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரங்கில், இந்த இராணுவ ஆக்கிரமிப்புக் கொள்கையை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தொடருவார் என்ற அவரது நம்பிக்கைக்கு சாட்சியமளிக்கிறது:

ஜனவரி 6, 2021 அன்று காங்கிரஸ் கட்டிடமான கேபிடல் ஹில் மீதான தாக்குதலுக்கு ட்ரம்ப் தூண்டியதைக் கண்டிக்கும் மொழியில் செனி தனது ஒப்புதலை ஹாரிஸ்க்கு வெளிப்படுத்தினார். இப்படி ஜனநாயகத்தை பாதுகாப்பதாக கூறப்படுவதன் வெற்றுத்தனம் செனியின் சொந்த வரலாற்றிலேயே நிரூபணம் ஆகிறது. ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் செனி ஆகியோரின் குடியரசுக் கட்சியின் சீட்டு 2000 தேர்தலில் திருடுவதற்கான வெற்றிகரமான உந்துதலில் (ஒரு பிற்போக்கு உச்ச நீதிமன்றத்தால் ஆதரிக்கப்பட்டது) பொய்கள், வன்முறை மிரட்டல் மற்றும் சட்டப்பூர்வ வாக்குகளை அடக்குதல் ஆகியவற்றைப் பயன்படுத்தியது. “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்று அழைக்கப்படுவதன் ஒரு பகுதியாக, CIA கட்டவிழ்த்துவிட்ட சித்திரவதை, கடத்தல் மற்றும் கொலைகளை மிகவும் வெளிப்படையாக செனி பாதுகாத்தார்.

ஆயினும்கூட, ஹாரிஸ் பிரச்சாரம் செனியின் அறிக்கையை வரவேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது: “துணை ஜனாதிபதி செனியின் ஆதரவைப் பெறுவதில் துணை ஜனாதிபதி பெருமிதம் கொள்கிறார், மேலும் நாட்டை கட்சிக்கு மேலாக வைக்கும் அவரது தைரியத்தை ஆழமாக மதிக்கிறார்.”

ஞாயிற்றுக்கிழமை ABCயின் “This Week (இந்த வாரம்)” நிகழ்ச்சியில், லிஸ் செனி, கமலா ஹாரிஸுடன் பேசியதாகவும், அவருக்காக பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் ஹாரிஸின் ஏற்புரையை அவர் பாராட்டினார், அந்த உரை ரொனால்ட் ரீகன் அல்லது ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷால் வழங்கப்பட்டிருக்கலாம் என்று கூறினார்.

போருக்கான இந்த இருகட்சி கூட்டணியை எடுத்துக்காட்டும் வகையில், குடியரசுக் கட்சியின் மற்றொரு செயல்பாட்டாளரும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முன்னாள் அதிகாரியுமான அலிசா ஃபரா கிரிஃபின், ஞாயிறன்று CNN இல் பேசுகையில், ஹாரிஸுக்கு டிக் செனி ஆதரவளிப்பதற்கு இந்த விளக்கத்தை வழங்கினார்: “உக்ரேன் வாக்கெடுப்பில் உள்ளது, இது ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரேனை தொடர்ந்து ஆதரிக்கிறது. இது டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜே.டி.வான்ஸ் பின்தொடர்வதற்கு உறுதியளிக்காத ஒன்று...

ட்ரம்பும் வான்ஸும் உக்ரேன் உட்பட ஏகாதிபத்திய போரை எதிர்க்கவில்லை, மாறாக ஆழமாக மதிப்பிழந்த ஒரு போரை விமர்சிப்பவர்களாக காட்டிக் கொள்வதன் மூலமாக தேர்தலில் ஆதாயமடைய நம்புகின்றனர். குறிப்பாக உக்ரேனியப் போர் இராணுவ பேரழிவில் முடியக்கூடிய ஒரு தேக்க நிலையாக மாறியுள்ள நிலையில், சீனாவுடன் ஒரு இராணுவ மோதலுக்கு இன்னும் நேரடியாகத் திரும்ப விரும்பும் ஆளும் உயரடுக்கின் ஒரு பிரிவுக்காக அவை பேசுகின்றன.

ட்ரம்ப் கடந்த வாரம் வோல் ஸ்ட்ரீட்டில் தோன்றியபோது தெளிவுபடுத்தியதைப் போல, அங்கு அவர் எலோன் மஸ்க் (Elon Musk) மற்றும் ஸ்டீவ் சுவார்ட்ஸ்மன் (Steve Schwarzman) போன்ற பில்லியனர்களின் ஆதரவில் திளைத்திருந்தார். அவர் மற்றொரு சுற்று வரி வெட்டுக்கள் மூலமாக பெரும் செல்வந்தர்களுக்கு அவர்களின் செல்வவளத்தில் இன்னும் பரந்த அதிகரிப்பை வழங்குகிறார். இதற்கிடையில், ஹாரிஸின் பிரச்சாரம் அதே ஆதரவுக்காக போட்டியிட முனைகிறது, இது பைடென் கோரியதை விட குறைந்த மூலதன ஆதாய வரியை முன்மொழிவதன் மூலமும், மெர்க் (Merck), ஏட்னா(Aetna), பிளாக்ஸ்டோன்(Blackstone), ஃபோர்ட்(Ford), ஜெராக்ஸ் (Xerox) மற்றும் ஸ்டார்பக்ஸ்(Starbucks) ஆகியவற்றின் தற்போதைய மற்றும் முன்னாள் தலைமை நிர்வாகிகளான கிட்டத்தட்ட 100 பெருநிறுவன தலைமை செயலதிகாரிகள் மற்றும் பில்லியனர்களால் ஹாரிஸின் ஒப்புதலை விளம்பரப்படுத்துவதன் மூலமும் காட்டப்பட்டுள்ளது.

தேர்தலின் முடிவு என்னவாக இருந்தாலும், போர், சமூக எதிர்புரட்சி மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் முனைவு தொடரும். தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, பத்து மில்லியன் கணக்கான வாக்குகளுடன், குடியரசுக் கட்சியின் முழுமையான கட்டுப்பாட்டுடன், நிதியியல் பிரபுத்துவத்தின் கணிசமான பிரிவுகளின் ஆதரவுடன் அவர் மேலெழுவார்.

சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் கிஷோர் எழுதினார், “ஜனநாயகக் கட்சியினரை ஆதரிப்பதன் மூலமாக ட்ரம்ப் முன்னிறுத்தும் அபாயத்தை எதிர்த்துப் போராடுவது சாத்தியமில்லை. அணுஆயுத நிர்மூலமாக்கலுக்கு அச்சுறுத்தும் ஒரு போரை ஜனநாயகக் கட்சியினர் நாட்டுக்கு வெளியில் தீவிரப்படுத்துவார்கள் என்பது மட்டுமல்ல, மாறாக அது பாசிச வலதைப் பலவீனப்படுத்த சேவையாற்றாது. மாறாக, அதைப் பலப்படுத்தவே சேவையாற்றுகிறது என்பதையே பைடென் நிர்வாகத்தின் ஒட்டுமொத்த அனுபவமும் எடுத்துக்காட்டுகிறது.

“ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தில் அதன் நலன்களை வெளிப்படுத்தும் ஒரு அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே முன்னோக்கிய ஒரே பாதையாகும்.”

Loading