முன்னோக்கு

ஏகாதிபத்திய ஆதரவுடன் இஸ்ரேல் "பாலஸ்தீன மக்களுக்கு எதிராக வேண்டுமென்றே பட்டினி போடும் நடவடிக்கையை" ஐ.நா அறிக்கை அம்பலப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பாலஸ்தீன மக்களை அழித்து அவர்களின் நிலங்களை அபகரிக்க இஸ்ரேல் பட்டினியை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்துவதாக உணவு உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் மைக்கேல் ஃபக்ரி (Michael Fakhri) குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஆவணம் சியோனிச ஆட்சியின் இனப்படுகொலை நோக்கத்திற்கும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முன்னொருபோதும் இல்லாத போர் குற்றங்களில் ஏகாதிபத்திய சக்திகள் உடந்தையாக இருப்பதற்கும் ஆதாரங்களை வழங்குகிறது.

முவாசியில் போரினால் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் வசிக்கும் நெரிசலான கூடார முகாம் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட அழிவை பாலஸ்தீனியர்கள் பார்க்கிறார்கள். காஸா பகுதி, செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 10, 2024 [AP Photo/Abdel Kareem Hana]

கடந்த வியாழனன்று ஐ.நா. பொதுச் சபைக்கு சுற்றுக்கு விடப்பட்ட ஃபக்ரியின் அறிக்கையானது, மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்கள் உட்பட காஸாவிலுள்ள 2.3 மில்லியன் குடியிருப்பாளர்களை “வேண்டுமென்றே பட்டினி போடுவதாகவும்” மேலும் “பட்டினி தாக்குதல்” செய்வதாகவும் இஸ்ரேலை குற்றஞ்சாட்டுகிறது. 

அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

காஸாவில் உள்ள ஒவ்வொருவரையும் பட்டினி போடுவது என்ற அதன் நோக்கத்தை வெளிப்படையாக அறிவித்த  இஸ்ரேல், அதன் திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், எதிர்பார்த்தபடியே காஸா முழுவதும் பாரிய பஞ்சத்தை உருவாக்கியுள்ளது. இஸ்ரேலின் பட்டினி தந்திரங்களின் புவியியல் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளின் அறிக்கைகளை கண்காணிப்பது அதன் நோக்கங்களை உறுதிப்படுத்துகிறது. காஸாவில் இருக்கின்ற பாலஸ்தீனியர்கள் அனைவரையும் பலவீனப்படுத்தும் வகையில் இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ளது. பின்னர், வடக்கில் உள்ள மக்களுக்கு எதிராக வலுக்கட்டாயமாக இடமாற்றம், தீங்கு மற்றும் மரணத்தைத் தூண்டுவதற்கு இஸ்ரேல் பட்டினியைப் பயன்படுத்தியது. மேலும், மக்களை காஸாவின் தெற்குப் பகுதிக்கு தள்ளியது. பின்னர் தெற்கில் புதிதாக நிறுவப்பட்ட அகதிகள் முகாம்களில் மக்களை பட்டினி போட்டு, குண்டுவீசிக் கொன்றது.

“காஸாவில், ஊட்டச்சத்து குறைபாடு, பஞ்சம் மற்றும் நோய் ஆகியவை குண்டுகள் மற்றும் தோட்டாக்களை விட அதிகமாக மக்களைக் கொல்கின்றன” என்று ஃபக்ரி, ஒரு சமூக ஊடக பதிவில் வெளியிட்ட தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார். இந்தக் கூற்று ஜூலை மாதம் தி லான்செட்டில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய தாக்குதலின் விளைவாக 186,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், இது அதிகாரப்பூர்வ பாலஸ்தீனிய புள்ளிவிவரங்களில் பட்டியலிடப்பட்ட தோராயமாக 41,000 ஐ விட அதிகமாகும்.

நாஜிக்களால் ஐரோப்பிய யூதர்களின் படுகொலையின் நிழலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தடுப்பு மற்றும் தண்டனை பற்றிய 1948 மாநாட்டை ஒரு பகுதியாக மேற்கோள் காட்டி, அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது: “பாலஸ்தீனிய மக்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் இஸ்ரேல் எவ்வாறு பட்டினியைப் பயன்படுத்தியுள்ளது என்பதை சிறப்பு அறிக்கையாளர் எடுத்துக்காட்டுகிறார். (b) பாலஸ்தீனிய மக்களுக்கு கடுமையான உடல் அல்லது மன ரீதியான தீங்கு விளைவித்தல்; (c) பாலஸ்தீனிய மக்கள் மீது வேண்டுமென்றே அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சரீர ரீதியான அழிவைக் கொண்டுவர திட்டமிட்டு திணிக்கிறது.”

ஏகாதிபத்திய சக்திகளின் உடந்தையையும் அந்த அறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகிறது.

பஞ்சத்தை ஏற்படுத்திய குற்றவாளிகள் பொதுவாக அந்நிய அரசுகள் மற்றும் நிறுவனங்களால் ஆதரிக்கப்படுகிறார்கள். இதனால், இந்த மூன்றாம் தரப்பினரும் பஞ்சத்துக்கும் உடந்தையாக இருக்கிறார்கள். உதாரணமாக, காஸாவில், மூன்றாம் தரப்பு நாடுகளும் நிறுவனங்களும் இஸ்ரேலின் பட்டினி தாக்குதல் மற்றும் இனப்படுகொலைக்கு சட்டவிரோதமாக ஆயுதங்களை வழங்குவதற்கு பொறுப்பாக இருப்பது மட்டுமல்லாமல், பாலஸ்தீனிய உணவு மற்றும் நீர் அமைப்புகளை சட்டவிரோதமாக அழிப்பதற்கும், பாலஸ்தீனிய பிராந்தியங்களின் சட்டவிரோத குடியேற்றங்களுக்கும் இந்த நிறுவனங்கள் பல ஆண்டுகளாக உடந்தையாக இருந்து வருகின்றன. 

அமெரிக்காவின் அரசியல் தலைவர்கள் மற்றும் அதன் ஐரோப்பிய ஏகாதிபத்திய கூட்டாளிகள், எதிர்கால போர்க்குற்ற விசாரணையில் நெதன்யாகுவுடன் இணைந்து கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு பத்தியில், ஃபக்ரி பின்வருமாறு எழுதுகிறார்:

அக்டோபர் 7, 2023க்கு முன்பு, காஸாவின் மக்கள்தொகையில் ஏறத்தாழ பாதிப் பேர் உணவுப் பாதுகாப்பற்றவர்களாகவும், 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் மனிதாபிமான உதவியைச் சார்ந்தவர்களாகவும் இருந்தனர். இஸ்ரேலின் முழுமையான முற்றுகை பட்டினிக்கு உடனடி வினையூக்கியாக இருந்தது. இஸ்ரேலிய அதிகாரிகளால் மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட மனிதாபிமானமற்ற அறிக்கைகள் மற்றும் காஸாவை முற்றிலுமாக அழித்தொழிப்பதற்கான அழைப்புகளுடன், இஸ்ரேலின் பட்டினி தாக்குதல், இனப்படுகொலை குற்றத்தைத் தடுக்கும் மற்றும் தண்டிப்பது தொடர்பான மாநாட்டின் குற்றச் செயல் [Actus reus] மற்றும் குற்றவியல் நோக்கத்தை [mens rea] நிறைவேற்றியது. இதன் மூலம் இனப்படுகொலையைத் தடுப்பதற்கான அனைத்து அரசுகளின் கடமையையும் தூண்டியது. 

வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் இனப்படுகொலையைத் தடுப்பதற்கான அவற்றின் கடமைப்பாட்டை நிறைவேற்ற தவறியது மட்டுமல்ல, மாறாக சியோனிச ஆட்சிக்கு அவற்றின் உயர்சக்தி ஆயுதங்களை வினியோகிப்பதை பாரியளவில் அதிகரித்தன. உள்நாட்டில், காஸாவில் இழைக்கப்பட்டுவரும் உலக வரலாற்று குற்றங்கள் மீதும் ஏகாதிபத்திய சக்திகள் உடந்தையாக இருப்பதன் மீதும் கவனத்தை ஈர்க்க முனைந்த இனப்படுகொலையின் அனைத்து எதிர்ப்பாளர்களும் அரசு-முடுக்கிவிட்ட துன்புறுத்தல் மற்றும் மிரட்டலின் ஒரு வக்கிரமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். 

ஃபக்ரியின் அறிக்கை பெரும்பாலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களில் மறைக்கப்பட்டுள்ளது. ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தற்காப்புப் போரின் துரதிர்ஷ்டவசமான ஒரு மனிதாபிமான நெருக்கடியை பாலஸ்தீனியர்கள் எதிர்கொள்கின்றனர் என்ற நிலைப்பாட்டில் இருந்து, பரவலான பஞ்சம், கொடிய நோய்களின் பரவல் மற்றும் சுகாதாரம் மற்றும் இன்னபிற அடிப்படை சேவைகளின் பற்றாக்குறை ஆகியவை கவனத்தை ஈர்க்கின்றன. இந்த அபத்தத்தின் மறுப்பை அறிக்கை வழங்குகிறது, அது குறிப்பிடுகையில்,

தற்போதைய மக்கள்தொகையை விட 1.5 மடங்கு உணவளிக்க போதுமான உணவை உலகம் உற்பத்தி செய்கிறது. இருப்பினும் பசி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பஞ்சம் ஆகியவை அதிகரித்து வருகின்றன. பசியும் பஞ்சமும் உற்பத்திச் சிக்கல்கள் அல்ல, அவை எப்போதும் மக்களுக்கு உணவு கிடைப்பதை மறுக்கும் செயல்கள் மற்றும் விடுபடல்களால் ஏற்படுகின்றன. பஞ்சங்கள் பெரும்பாலும் மோதல்கள், பொருளாதார அதிர்ச்சிகள் மற்றும் வறட்சியால் தூண்டப்படுகின்றன. ஆனால், இந்த தூண்டுதல்கள் சார்பு மற்றும் பிரித்தெடுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் அடிப்படை சமூக உறவுகளை பிரதிபலிக்கின்றன. இறுதியில், உணவு அமைப்புகளில் அதிகாரத்தின் குவிப்பு மற்றும் பொறுப்புணர்வு இல்லாதது பஞ்சத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது. 

ஆகவே பஞ்சங்களை எப்போதும் ஒரு அரசியல் பிரச்சினையாகவே புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அவை மனிதனால் உருவாக்கப்பட்டவை மற்றும் எப்போதும் ஒரு குழு மற்றொரு குழுவை பட்டினி போடுவதன் விளைவாக உருவாகின. 

காஸாவில் பஞ்சத்தையும் துயரத்தையும் உருவாக்கிய இஸ்ரேல் மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் “செயல்கள் மற்றும் புறக்கணிப்புகள்” இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஆட்சியின் மனிதாபிமானமற்ற குற்றங்களுடன் ஒப்பிடத்தக்கவை. நாஜிக்களின் பட்டினி திட்டம், சோவியத் குடிமக்களை பாரியளவில் நிர்மூலமாக்குவதற்கு வசதியாகவும், சோவியத் மக்களுக்கான உணவை ஜேர்மன் சிப்பாய்கள் பறிமுதல் செய்து, கிழக்கு ஐரோப்பாவில் ஒரு “ஜேர்மன் விரிவாக்கவாத”  கருத்தை [lebensraum] ஸ்தாபிக்கவும் நோக்கத்தை கொண்டிருந்தது. நாஜி அழித்தொழிப்புப் போரின் போது உயிரிழந்ததாக நம்பப்படும் 27 மில்லியனுக்கும் அதிகமான சோவியத் குடிமக்களில் இது ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது.

எட்டு தசாப்தங்களுக்குப் பின்னர், சியோனிஸ்டுகள் அகண்ட இஸ்ரேல் என்ற அவர்களின் பிற்போக்குத்தனமான கொள்கையைப் பின்தொடர்ந்து, காஸாவில் உள்ள பாலஸ்தீனிய மக்களை நிர்மூலமாக்கி வருகின்றனர். ஏகாதிபத்தியவாதிகள் இந்தப் படுகொலையை ஆதரிக்கின்றனர். ஏனெனில், அவர்கள் ஈரானுக்கு எதிரான பிராந்திய அளவிலான போருக்கான அவர்களின் திட்டங்களின் இன்றியமையாத அங்கமாகக் இதனைக் கருதுகின்றனர். வாஷிங்டன், பேர்லின், பாரிஸ் மற்றும் லண்டன் தங்கள் பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதற்காக தொடரும் உலகின் மறுபகிர்வில் இந்தப் போர் ஒரு முன்னணி அரங்கில் இடம்பெற்று வருகிறது.  இதில் அவற்றின் போட்டியாளர்களுக்கு எதிராக மேலோங்குவதற்கு அவை எந்தவொரு குற்றத்தையும் செய்யும். 

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு 2024 இன் தொடக்கத்தில் அதன் புத்தாண்டு அறிக்கையில் விளக்கியதைப் போல,

நாகரீகத்தை காட்டுமிராண்டித்தனத்திலிருந்து பிரிக்கும் “சிவப்புக் கோடுகள்” அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்றன. முதலாளித்துவ அரசாங்கங்களின் குறிக்கோள் இதுதான்: அதாவது “குற்றம் விளைவிக்கக் கூடிய எதுவும் நமக்கு அன்னியமானது அல்ல.” 

ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், சமூக காட்டுமிராண்டித்தனத்தின் பல்வேறு வடிவங்களின் இயல்பாக்கம் முதலாளித்துவ வர்க்கம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்பதைக் குறிக்கிறது. பல்வேறு வகையான சமூகக் கொலைக் கொள்கைகளைக் கொண்ட ஒரு வர்க்கம் அதன் வரலாற்று, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சட்டபூர்வத்தன்மையை தெளிவாக இழந்துவிட்டது. 

பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் நிர்மூலமாக்குவதற்கு எதிராக கடந்த 11 மாதங்களாக உலகெங்கிலும் நடந்து வருகின்ற பாரிய போராட்டங்களில் மேலாதிக்கம் செலுத்திய அரசியல் சக்திகளால் பகிர்ந்து கொள்ளப்பட்ட காஸா இனப்படுகொலைக்கான விளக்கம் இதுவல்ல. ANSWER கூட்டணி மற்றும் அமெரிக்காவில் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட்டுக்கள் மற்றும் பிரிட்டனில் போரை நிறுத்து என்ற கூட்டணி போன்ற சக்திகள் இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது போதுமான அழுத்தம் கொடுக்கப்பட்டால், ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் உணர்வுக்கு மதிப்புக்கொடுத்து, இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைத்து பாலஸ்தீனியர்களின் நிலைமையை முன்னேற்றும் என்ற மூலோபாயத்தை பாதுகாக்கின்றன.

இரத்தத்தில் மூழ்கியுள்ள நெதன்யாகு ஆட்சியை, அதன் முக்கிய ஆயுத வினியோகஸ்தரும் அரசியல் உடந்தையாளருமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அழுத்தத்தின் கீழ், அப்பகுதிக்குள் உதவிகளை அனுமதிக்க நம்ப வைப்பதன் மூலம் காஸாவில் மனிதாபிமான பேரழிவை நிறுத்தலாம் என்று இவை கருதுகின்றன. இந்தக் குழுக்களைப் பொறுத்த வரையில், காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலைக்கும் உலகளாவிய ஏகாதிபத்திய போருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. ரஷ்யா மீது போர் தொடுப்பது என்று வரும்போது, ஏகாதிபத்திய போரை அவை பொதுவாக நிபந்தனையின்றி ஆதரிக்கின்றன. 

கடந்த ஜூலை மாதம் அமெரிக்க காங்கிரசின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய நெதன்யாகு, அவருடைய இனப்படுகொலை ஆவேசம் மற்றும் ஈரானுக்கு எதிராக போருக்குச் செல்வதற்கான உறுதிமொழிகளுக்காக ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரிடமிருந்தும் எழுந்து நின்று பாராட்டுக்களைப் பெற்றார். அதேநாளில், வாஷிங்டனில் சோசலிச சமத்துவக் கட்சி ஒரு பேரணியை ஏற்பாடு செய்தது. அது, இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிரான ஒரு உண்மையான போராட்டம், அடித்தளமாக கொண்டிருக்க வேண்டிய அடிப்படை அரசியல் வேலைத்திட்டத்தை விவரித்தது:

  • போருக்கான முக்கிய காரணம் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்பு முறையாகும். இராட்சத நிறுவனங்களின் உலகளாவிய நிதி நலன்களும், உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் இடைவிடாத உந்துதலும் இதில் அடங்கியுள்ளது.
  • போருக்கு எதிரான போராட்டத்திற்கு அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மகத்தான அதிகாரத்தை அணிதிரட்டுவதுக்கு, ஏகாதிபத்திய போரின் ஆளும் வர்க்கக் கட்சிகளான ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரிடமிருந்து அரசியல் சுயாதீனம் தேவைப்படுகிறது.
  • இனப்படுகொலைக்கும், போருக்கும் எதிரான இயக்கம் சர்வதேச இயக்கமாக இருக்க வேண்டும். தொழிலாளர்களை, அவர்களின் பொதுவான வர்க்க நலன்களின் அடிப்படையில் உலகளவில் ஐக்கியப்படுத்த வேண்டும்.
Loading