இலங்கை: வெகுஜனப் போராட்டத்தின் போது ஆட்சியை கைப்பற்ற இராஜபக்ஷவுடன் ஐ.ம.ச. இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியமை அம்பலம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2022 மே 10 அன்று மக்கள் போராட்டத்தின் மத்தியில், ஆட்சியை கைமாற்றுவதற்காக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவுடன் ஒரு இரகசிய கலந்துரையாடலை நடத்தியதுதாக, ஜூலை 17 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி போன்ற முதலாளித்துவக் கட்சிகளின் ஜனநாயக வாய்வீச்சுக்களின் கீழ் இருக்கும் மக்கள் விரோதத் தன்மைக்கு, இந்த செய்தி மற்றொரு எடுத்துக்காட்டு ஆகும்.

ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஜூலை 17 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது

24 மணித்தியாலங்களுக்கு முன்னர் ஜனாதிபதியின் சகோதரரும் பிரதமருமான மஹிந்த இராஜபக்ஷ பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்ட தொடர் வன்முறைச் சம்பவங்களின் மத்தியிலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பிரதமர் இராஜபக்ஷவால் தூண்டிவிடப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட குண்டர்கள் குழு, மக்கள் போராட்டத்தின் மையமாக பெயரிடப்பட்ட கொழும்பு காலிமுகத் திடல் போராட்ட தளத்தில் இருந்தவர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தியதுடன் வன்முறைகள் வெடித்தன.

இராணுவம் பொலிஸ் உட்பட பாதுகாப்புப் படைகளின் ஆதரவுடன் இராஜபக்ஷவின் குண்டர்கள், போராட்டக்காரர்களை பொல்லுகளால் கொடூரமாகத் தாக்கி நூற்றுக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களின் தற்காலிக கூடாரங்களை உடைத்து எரித்தனர். இவ்வாறு தொடர்ந்த வன்முறைகள், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உடனடித் தலையீட்டின் காரணமாகவே நிறுத்தப்பட்டன.

சில்வா உட்பட நான்கு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர். கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார, எரான் விக்ரமரத்ன ஆகியோர் ஏனைய மூவர் ஆவர். சில்வாவுடன் விக்கிரமரத்னவும் மேற்படி செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டார். “சஜித் (அதிகாரம்) கைப்பற்றவில்லை, சஜித் ஓடிவிட்டார், ஒளிந்துகொண்டார்...” என்று ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, குறித்த சந்திப்பு குறித்து சில்வா இந்த தகவலை வெளியிட்டார்.

மே 10 அன்று இரவு 8 மணி முதல் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக ஜனாதிபதி இராஜபக்ஷவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், 'அதிகார பரிமாற்றம்' அல்லது 'கைமாற்றல்' பற்றியும், அந்த நோக்கத்திற்காக, அந்த நேரத்தில் சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிந்திருந்த, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தல் போன்ற 'யோசனைகள்' பற்றி. 'ஒரு கலந்துரையாடலை தொடங்குவது எப்போது' என்பது குறித்து கூறுமாறும் முன்னாள் ஜனாதிபதியிடம் தமது குழு கேட்டுக்கொண்டதாகவும் சில்வா கூறினார்.

'ஒரு கட்டத்தில், இரண்டு வாரங்களில் இந்த ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறச் சொல்கிறீர்களா?' என்று ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ எங்களிடம் கேட்டார், என சில்வா கூறினார். பின்னர் முன்சென்ற விக்கிரமரத்ன, 'இல்லை, ஜனாதிபதி அவர்களே, நாங்கள் அவ்வாறு கூறவில்லை, மாற்றம் என்று அழைக்கப்படுவதை பற்றியே நாங்கள் கலந்துரையாடுகின்றோம். அமைப்பு ரீதியான மாற்றம் தேவை. அதை ஜனநாயக முறைப்படி செய்வோம்,” என கூறியுள்ளார்.

மக்கள் போராட்டம் பற்றி எரியும் சூழ்நிலையில், இராஜபக்ஷ எதேச்சதிகாரமாக அதிகாரத்தைப் பற்றிக்கொண்டிருப்தானது நிலைமை கட்டுக்கடங்காமல் போவதையும், ஒட்டுமொத்த முதலாளித்துவ அரசு எந்திரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதையும் பற்றி ஐக்கிய மக்கள் சக்தி கவலை கொண்டிருந்ததையே இந்த கலந்துரையாடல் எனப்படுவது எடுத்துக் காட்டுகிறது.

மக்கள் எழுச்சியை தனிப்பட்ட ரீதியில் தனக்கு எதிரான வெறும் சதி என முத்திரை குத்தும் நோக்கில், “என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்ற முன்னெடுக்கப்பட்ட சதி” என்ற தலைப்பில் கோட்டாபய இராஜபக்ஷ எழுதிய நூலில், ஐக்கிய மக்கள் சக்தியுடனான சந்திப்பு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்கத் தயார் எனவும், ஆனால் பிரதமர் பதவியை அவரிடம் ஒப்படைத்ததன் பின்னர் ஜனாதிபதி பதவியை விட்டு விலக வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் நிபந்தனை விதித்துள்ளார். கொடூரமான அடக்குமுறை மூலம் அதிகாரத்தை தக்கவைக்க தொடர்ந்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்த இராஜபக்ஷ, பிரேமதாசாவின் நிபந்தனையை ஏற்கத் தயக்கம் காட்டினார்.

இந்தக் கதைகளின் உண்மை அல்லது பொய் எதுவாக இருந்தாலும், போராடும் மக்களுக்கு எதிராகவும் அவர்களுக்கு இரகசியமாகவும் ஜனாதிபதியுடன் ஒரு பதவிப் பேரம் பேசலுக்காக ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி இராஜபக்ஷவை சந்தித்தது என்பதில் சந்தேகமில்லை. அப்போது, ​​இராஜபக்சே விஷமத்தனமாக அவசரகால நிலையை அமுல்படுத்தி, அரசின் அடக்குமுறைக் கரத்தை வலுப்படுத்திய போதிலும், அதற்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் முனுமுனுக்கக் கூட இல்லை. முதலாளித்துவ வர்க்கத்தின் மீட்பராக முன்வந்து சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிந்த பூசிமெழுகலைப் பயன்படுத்தி, பொதுமக்களின் வெறுப்பை தணிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி இராஜபக்ஷவிடம் பேசியது தெளிவாகிறது.

மக்களுக்கு எதிரான இத்தகைய சதிகளும் சூழ்ச்சிகளும், பல தசாப்தங்களாக தலைமைப் பதவிகளில் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கும் புதிதல்ல. ஐக்கிய மக்கள் சக்தியின் அதிகாரப்பூர்வ இணையதளம், கட்சியின் ஸ்தாபனத்தின் நோக்கமானது நாட்டில் '... ஜனநாயக ஒழுங்கைப் பாதுகாப்பது' மற்றும் 'ஜனநாயக அரசியலை நிறுவுவதற்கான சவாலை வெல்வது' என்று கூறுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் முழு தலைமைத்துவ வரலாறும், அதன் பாரம்பரியமும் ஜனநாயகத்தை 'பாதுகாப்பதற்கானதாக' இருக்கவில்லை, மாறாக அதை ஒழிப்பதற்கானதாகவே இருந்து வந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டுவருவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகவர்களுடன் திரைமறைவில் செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள், அந்த சேவைகளுக்காக பல்வேறு வெகுமதிகளைப் பெற்றனர். ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டதுடன், அப்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த பிரேமதாச உட்பட எஞ்சியிருந்த ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. சிறீசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் பொதுமக்களை அடக்கி, கொடூரமான சிக்கனக் கொள்கைகளைச் செயல்படுத்தி நடத்திய கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக பெருகிய வெகுஜன வெறுப்பைப் பயன்படுத்திக்கொண்டே, 2019ல் கோட்டாபய இராஜபக்ச ஆட்சிக்கு வந்தார்.

விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது பெருகிவந்த வெகுஜன வெறுப்பிலிருந்து தங்களைத் தூர விலக்கிக் கொள்ளும் சூழ்ச்சியாகவே, பிரேமதாச உட்பட ஒரு குழு 2020 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்தது. எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்ளையடிக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி வேறுபடுவது, ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றுவதை நோக்கமாகக் கொண்ட பிரேமதாசவின் வாய்ச்சவடால்களில் இருந்து மட்டுமே. அதுமட்டுமல்லாமல், 1948 ஆம் ஆண்டு பெயரளவு சுதந்திரத்திற்காக பிரித்தானிய ஏகாதிபத்தியங்களுடன் சதித்திட்டங்களில் ஈடுபட்டமை, ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் மக்களுக்கு எதிராக உத்தியோகபூர்வமாக ஒரு கொடிய இனவாதப் போரை ஆரம்பித்தமை; 1988-89 காலத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற இளைஞர்களைக் கொன்ற, ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தை ஜனாதிபதி ஆர். பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் இரத்தக்களரி படுகொலை உட்பட தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்களின் இரத்தக் கறைகள் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்களின் கரங்களிலும் படிந்துள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சி, தொடர்ந்து விளக்கியது போல், வெகுஜனப் போராட்டமானது இராஜபக்ஷவுக்கு எதிராக மட்டுமன்றி, சுதந்திரம் எனப்படுவது கிடைக்கப்பெற்றதில் இருந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்தில் இருந்து வந்த முதலாளித்துவ அரசாங்கங்களால் பராமரிக்கப்பட்டு வந்த, முழு முதலாளித்துவ அரச கட்டமைப்புக்கு எதிராகவே வெடித்துள்ளது. முதலாளித்துவத்தை தூக்கி வீசி, ஒரு தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிக்காமல் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் எந்தவொரு அடிப்படைப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்று சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே வலியுறுத்தியது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இலட்சக்கணக்கான மக்களின் கண்களில் மண் தூவிவிட்டு, ஜனாதிபதி இராஜக்ஷவுடன் இரகசியப் பேச்சு வார்த்தை நடத்தச் சென்றதன் மூலம், ஐக்கிய மக்கள் சக்தியானது தனது உண்மையான முதலாளித்துவ வர்க்கத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. வாய்ச்சவடால் கூச்சல்களைத் தவிர, பொதுமக்களின் ஜனநாயக அபிலாஷைகளைப் பற்றி மறைமுகமாகப் பேசுவதைக் கூட அவர்கள் தவிர்த்துக்கொள்கிறார்கள். காரணம் அவ்வாறு பேசுவது கூட வெகுஜன எதிர்ப்பை அதிகரிக்கச்செய்வதோடு நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிடும் என்று அவர்கள் பீதியடைந்துள்ளனர்.

10 மே 2022 அன்று கூட்டம் நடந்து சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜூலை 9 அன்று, ஜனாதிபதி மாளிகையை இலட்சக்கணக்கான மக்கள் சூழ்ந்துகொண்டு, இராஜபக்ஷவை நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்த போது, ஐக்கிய மக்கள் சக்தியானது ஜே.வி.பி. மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து, ஒரு முதலாளித்துவ 'இடைக்கால அரசாங்கத்தை' ஸ்தாபிப்பதற்கான திட்டங்களைத் தயாரித்துக்கொண்டிருந்தது... இராஜபக்ஷ நிர்வாகத்தால் அமுல்படுத்தப்பட்டு, வந்த சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள கொடூரமான சிக்கனக் கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவதே இந்த இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதன் நோக்கமாக இருந்தது.

இந்த நடவடிக்கைக்கு 'அனைத்து கட்சி' என்ற மூடுதிரையை போடும் செயல்பாட்டில், அதற்கு ஒரு முற்போக்கு முலாம் பூசுவதன் பேரில், ஐக்கிய மக்கள் சக்தியானது 5 ஜூலை 2022 அன்று, சோசலிச சமத்துவக் கட்சியையும் அதற்குள் இணைத்து கொள்ள ஒரு தோல்வியுற்ற முயற்சியை மேற்கொண்டது.

அதன் அழைப்பை நிராகரித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர எழுதிய கடிதம், 07 ஏப்ரல் 2022 அன்று சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்ட அறிக்கையின் மீது கவனம் செலுத்தி பின்வரும் விடயங்களை வலியுறுத்தியது:

“…இராஜபக்ஷவின் மூஞ்சிக்குப் பதிலாக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்ததைப் போன்ற 'சர்வ கட்சி அரசாங்கம்' அல்லது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) முன்வைத்ததைப் போன்ற 'சமரச அரசாங்கம்' என்ற முகமூடியைப் பொறுத்துவதன் மூலம், இந்த முதலாளித்துவ அரசு இயந்திரத்திற்கு ஒரு புதிய முகத்தை உருவாக்குவதன் மூலம், உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பேரழிவிற்கு தீர்வு காண முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

“ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் போலவே, அதற்குப் பதிலாக அதிகாரத்தில் அமர்த்தப்படும் எந்தவொரு முதலாளித்துவ அரசாங்கமும், சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன வெட்டுக்களை அமுல்படுத்தும். அதேபோல், அந்தத் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்டவர்களை நசுக்குவதற்காக, தற்போதுள்ள அரசு இயந்திரத்தின் அனைத்து அடக்குமுறை கருவிகளையும் பயன்படுத்தப்படும்.”

கடந்த இரண்டு ஆண்டுகளின் துன்பகரமான அனுபவங்கள், சோசலிச சமத்துவக் கட்சி விடுத்த எச்சரிக்கையை துல்லியத்தை நிரூபிக்கின்றன. அவர்களின் சொந்த முதலாளித்துவ அரசியலமைப்பையே மீறி, ஜனநாயக விரோத பாராளுமன்ற கருவிகளைப் பயன்படுத்தி, ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கமும், சர்வதேச நாணய நிதியம் உட்பட நிதி மூலதனத்தால் சுமத்தப்பட்ட கொடூரமான சிக்கன வெட்டுக்களால் மக்களை எழும்புவரை நசுக்கியுள்ளனர். இனிவரும் வெகுஜனப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு, அடுத்தடுத்து கொடூரமான சட்டங்கள் இந்த பிற்போக்கு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்திலும், ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எஞ்சிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மலட்டுத்தனமான பிரதிபலிப்பாலேயே விக்கிரமசிங்க பலம் பெற்றார்.

2022 ஆம் ஆண்டு வெகுஜனப் போராட்டத்திற்கு காரணமான எந்வொரு பிரச்சினையும் தீர்க்கப்படடாதது மட்டுமன்றி அவை மேலும் உக்கிரமடைந்துள்ள சூழலிலேயே ஜனாதிபதி தேர்தலுக்கு விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். ஏனைய கட்சிகளைப் போலவே, ஐக்கிய மக்கள் சக்தியும் அந்த வெகுஜன வெறுப்பை ஆவியாக்கிவிட்டு நாற்றமெடுத்துள்ள முதலாளித்துவ முறைமையைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர். இதனாலேயே பொதுமக்கள் இந்த கட்சிகளை நிராகரிக்க வேண்டும்.

Loading