இலங்கையில் ஜே.வி.பி./தே.ம.ச. தலைவர் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதாக உறுதியளிக்கிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

செப்டெம்பர் 4 அன்று நடைபெற்ற இலங்கை வர்த்தகர்கள் மன்றத்தின் கூட்டத்தில் பேசிய, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் (தே.ம.ச.) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க, தான் (திசாநாயக்க) ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று கூறுவதன் மூலம் 'மக்களை பயமுறுத்துவதை நிறுத்துமாறு' ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எச்சரித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் ஜே.வி.பி. தலைவருமான அனுரகுமார திசாநாயக்க, 4 செப்டம்பர் 2024 அன்று வர்த்தகர் மன்றத்தில் உரையாற்றிய போது [படம்: NPP Facebook] [Photo: NPP Facebook]

கொழும்பு பங்குச் சந்தையின் சமீபத்திய வீழ்ச்சிக்கு திசாநாயக்கவைக் குற்றம் சாட்டிய விக்கிரமசிங்க, ஜே.வி.பி/தேசிய மக்கள் சக்தி தலைவர் தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தை நிறுத்திவிடுவார் என முதலீட்டாளர்கள் அஞ்சுவதாக கூறினார். விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கையானது சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) கட்டளையிடப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதாகும்.

வணிகர் மன்றம் என்பது, தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறு வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களின் குழுவாகும். ஒரு நீண்ட உரையை ஆற்றிய திசாநாயக்க, தனது தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட நிரலை அமுல்படுத்தும் என்றும் அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களையும் பாதுகாக்கும் என்றும் உறுதியளித்தார்.

சமீபத்திய மாதங்களில், ஜேவிபி/தேசிய மக்கள் சக்தி தலைவர்கள், வெறுப்புக்குள்ளாகியுள்ள சரவதேச நாணய நிதிய திட்டத்தை பற்றி 'மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம்' என்று சில தடவைகள் அறிவித்தனர். இவை, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, கட்டணங்கள் அதிகரிப்பு மற்றும் பொதுச் சுகாதாரச் சேவையின் கிட்டத்தட்ட சிரழிவு போன்றவற்றின் மூலம், வாழ்க்கை நிலைமைகளை ஆழமாக சிதைத்துள்ள சிக்கன வெட்டுக்களை கடுமையாக எதிர்க்கின்ற, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை ஏமாற்றும் நோக்கத்துடன் கூறப்பட்டவை ஆகும்.

வர்த்தகர் மன்றத்தில் திசாநாயக்க ஆற்றிய உரையானது, ஜே.வி.பி/தேசிய மக்கள் சக்தியானது சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளில் இருந்து சிறிதளவேனும் விலகிவிடுமோ என்ற சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருந்தது. உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் ஜே.வி.பி.யை ஒரு மார்க்சிசக் கட்சி என வர்ணிப்பதை அவரது கருத்துக்கள் கேலிக்கூத்தாக்கின. ஜே.வி.பி.யானது முதலாளித்துவ வர்க்கத்தின் திட்ட நிரலை செயல்படுத்துவதற்கு நம்பகமான மற்றும் ஈவிரக்கமற்ற ஒரு அரசியல் கருவி என்பதை நிரூபிப்பதில் உறுதியாக உள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம், 'பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் எதுவும் செய்யாது' என்றும், அதற்குப் பதிலாக பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி முன்னோக்கி நகர்த்துவதை இலக்காகக் கொண்டு செயற்படும் என்றும் திசாநாயக்க கூறினார். சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கான எந்தவொரு முயற்சியையும் உறுதியாக நிராகரித்த அவர், அவ்வாறு செய்வது 'மக்களின் நலன்களுக்கானாதாக' இருக்காது என்றும் 'நாங்கள் அத்தகைய நடவடிக்கையை எடுக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்கிறோம்' என்றும் கூறினார்.

2025ல் இருந்து வரவு செலவுத் திட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதம் வருமான மிகுதியைப் பெறுவது மற்றும் 2032 ஆம் ஆண்டளவில் பொதுக் கடன் விகிதத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 98 சதவீதத்திற்குக் கீழே குறைப்பது போன்ற சர்வதேச நாணய நிதியம் விதித்த இலக்குகளை திசாநாயக்க ஏற்றுக்கொண்டார்.

செப்டம்பர் 4, 2024 அன்று கொழும்பில் வர்த்தகர் மன்ற பார்வையாளர்களின் ஒரு பகுதி [படம்: Facebook/nppsrilanka] [Photo: Facebook/nppsrilanka]

ஜே.வி.பி/தேசிய மக்கள் சக்தி, இலங்கையில் உள்ள பெருவணிகத்திற்கு மட்டுமன்றி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நிதி மூலதனத்திற்கும் உறுதியளிக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்தை பின்பற்றிக்கொண்டு அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு கொடுப்பது தெளிவாகவே முடியாத காரியம் ஆகும். எனினும் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் போட்டி போட்டுக்கொண்டு சம்பள அதிகரிப்பு வாக்குறுதிகளை வழங்குவதாக அவர்களை திசாநாயக்க விமர்சித்தார்.

'தேசிய பாதுகாப்பு' காரணமாக, எரிசக்தி போன்ற பிரதான துறைகளைத் தவிர, ஏனைய தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள் தொடரும் என திசாநாயக்க உறுதியளித்தார். ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி, தனியார் துறையை 'எங்கள் பொருளாதாரத்தின் முக்கிய இயந்திரம்' என்று கருதுகிறது என்று அவர் தனது வணிக பார்வையாளர்களுக்கு உறுதியளித்தார். அது ஊழல், இலஞ்சம் மற்றும் காலாவதியான சட்டங்களால் 'பூட்டி' வைக்கப்பட்டுள்ளது. 'நாங்கள் அவற்றை அகற்றுவோம். நீங்கள் நிறுவனங்களை நடத்துகிறீர்கள், நாங்கள் அவற்றுக்கு வசதிகளை வழங்குகிறோம்,” என்று அவர் கூறினார்.

“முதல் முறையாக, உங்கள் தேவையே எங்களுடைய தேவையும், எங்களுடைய தேவையே உங்களுடையதும் ஆகும். நாங்கள் இருவரும் முதல்முறையாக இணைகிறோம்,” என தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் கூறியவுடன் அவையில் இருந்தவர்கள் கைதட்டினர்.

இலங்கையின் பொருளாதாரத்தின் நிலை குறித்து வருத்தம் தெரிவித்த அவர், 1951 இல் தென்கொரியா இலங்கைக்கு பின்னாலேயே இருந்ததாகவும் ஆனால் தற்போது இலங்கையுடன் ஒப்பிடுகையில் அது 50 மடங்கு விரிவடைந்துள்ளதாகவும் கூறினார். 44 வருடங்களில், இலங்கையில் 22 பில்லியன் டொலர்கள்தான் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கிடைத்துள்ள நிலையில், வியட்நாம் கடந்த வருடம் மாத்திரம் 43 பில்லியன் டொலர்களை பெற்றுள்ளது. ஜே.வி.பி/தேசிய மக்கள் சக்தி நாட்டை அந்த மட்டத்துக்கு கொண்டு வரும் என்று அவர் அறிவித்தார்.

இலங்கையின் அனைத்துப் பொருளாதாரப் பிரச்சனைகளும் மோசடி மற்றும் ஊழலின் விளைவு என்று ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி கூறுகிறது. 'ஊழல் அரசியல் கலாச்சாரத்தை' முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம், உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட 'புத்துயிர் பொருளாதாரம்' மூலம் நாட்டை ஒரு நல்ல அடித்தளத்தில் வைக்க முடியும் என அது கூறுகிறது. அதன் தேர்தல் விஞ்ஞாபனம், “செல்வம் நிறைந்த நாடு! அழகான வாழ்க்கை!” என்று கற்பனையாக அறிவிக்கிறது.

பிரமாண்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடி 2022 இல் இலங்கையை கடுமையாகப் பாதித்து கடன் தவனைத் தவறல் நிலைக்குத் தள்ளப்பட்டதைப் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. திசாநாயக்கவோ அல்லது வேறு எந்த முதலாளித்துவ வேட்பாளர்களோ யாரேனும் ஆட்சிக்கு வந்தாலும் உழைக்கும் மக்களுக்கு பொருளாதார சொர்க்கம் கிடைக்காது. ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது புதிய பொருளாதாரச் சுமைகளைக் குவிப்பதிலும் எந்த எதிர்ப்பையும் நசுக்குவதிலும் ஈவிரக்கமற்றதாக இருக்கும்.

ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி, ஏற்கனவே தொழிலாள வர்க்க போராட்டங்கள் மீது பாய்வதாக சமிக்ஞை செய்துள்ளது. அதன் முன்னணி பிரமுகரான கே.டி. லால்காந்த, ஜூலை 1 அன்று, “வேலைநிறுத்தங்கள் வெகுஜனங்களுடன் முரண்படுவதால் நாங்கள் வேலைநிறுத்தங்களை நடத்த முடியாது. ஜனாதிபதி தேர்தலில் புதிய மாதிரி அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு எமக்கு உள்ளது. வேலைநிறுத்தங்கள் இந்த முயற்சிக்கு தீங்கு விளைவிக்கும்,” என்று அறிவித்ததாவது.

மற்றொரு தலைவரான நளிந்த ஜயதிஸ்ஸ, ஜூலை 19 அன்று ஒரு நேர்காணலில், வர்க்க ஒத்துழைப்பே அதன் கொள்கை வார்த்தையாக இருக்கும் என்று தெளிவுபடுத்தினார். 'தேசிய மக்கள் சக்தி/ஜே.வி.பி. ஒரு அரசாங்கத்தை அமைத்த பிறகு, கட்சியும் அரசாங்கமும் ஒன்றாக மாறும் அதே நேரம், தொழிற்சங்கங்களும் நிர்வாகங்களும் ஒன்றாக செயல்படும்,' என அவர் கூறினார்.

ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி, 2022 ஏப்ரல்-ஜூலையில் நடந்த வெகுஜன எழுச்சியின் போது, முதலாளித்துவ ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக அதை பாதுகாப்பான பாராளுமன்ற வழிகளில் திசை திருப்பிவிடுவதில் முக்கிய பங்கு வகித்தது. இலட்சக் கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டிருந்த வேளையில், ஏப்ரல் 7 அன்று பாராளுமன்றத்தில் பேசிய திசாநாயக்க, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ பதவி விலகும் வரை இடைக்கால அரசாங்கத்திற்கான எந்தவொரு திட்டத்தையும் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

திசாநாயக்க இப்போது விக்கிரமசிங்கவிற்கு எதிராக வசைபாடும் அதேவேளை, அவரும் ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தியும், தொழிற்சங்கங்களதும் போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சியினதும் ஆதரவுடன், 'இடைக்கால அரசாங்கம்' என்ற கோஷத்தை முன்னெடுப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்தன. அதுவே, இராஜபக்ஷ இறுதியாக நாட்டை விட்டு வெளியேறிய போது, ​​முற்றிலும் செல்வாக்கிழந்த, அமெரிக்க-சார்பு மற்றும் சர்வதேச நாணய நிதிய-சார்பு விக்கிரமசிங்கவை ஜனநாயகமற்ற முறையில் ஜனாதிபதியாக அமர்த்துவதற்கு வழி வகுத்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், ஜே.வி.பி/தேசிய மக்கள் சக்தி, அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை, சலுகைகளை வழங்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் எதிர்ப்புக்களாக மட்டுப்படுத்தி, பயனற்ற வேலைநிறுத்தங்களை நடத்தி, விக்கிரமசிங்க பதவியில் நீடிப்பதை உறுதி செய்துள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன, தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பாரிய ஆபத்துக்கள் குறித்து எச்சரித்து வருவதோடு, அனைத்து முதலாளித்துவக் கட்சிகளுக்கும் எதிராக சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதன் பேரில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் தொழில்துறை வலிமையை அணிதிரட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் வருகிறார். ஆழமடைந்து வரும் சர்வதேச பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு முதலாளித்துவ முறைமைக்குள் தீர்வு கிடையாது, அதே போல், தேசிய ரீதியிலும் தீர்வுகள் இல்லை.

அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு வேலைத் தளத்திலும் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. கிராமப்புற மக்களையும் தங்கள் பகுதிகளில் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கிக்கொண்டு, தொழிலாளி வர்க்கத்துடன் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

முதலாளித்துவ வர்க்கம் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தை கலந்துரையாடவும், முடிவெடுக்கவும், அணிதிரட்டவும், நமது சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்பட்டு, இந்த நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகள் அடங்கிய, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற ஒடுக்கப்பட்டவர்களதும் மாநாட்டைக் கூட்டுவதற்கு நாங்கள் முன்மொழிகிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சி அனைத்து வெளிநாட்டுக் கடனையும் தள்ளுபடி செய்யவும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்ட நிரலை முற்றிலுமாக நிராகரிக்கவும் மற்றும் சோசலிச கொள்கைகளுக்காக போராடுவதற்கும் அழைப்பு விடுக்கின்றது. இந்த போராட்டம் ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதற்கும் சோசலிச மற்றும் சர்வதேச கொள்கைகளை செயல்படுத்துவதற்கும் வழி வகுக்கும்.

Loading