முன்னோக்கு

ஓஹியோவின் ஸ்பிரிங்பீல்டில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான ட்ரம்பின் அரசியல் பயங்கரவாத பிரச்சாரம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஓஹியோவில் உள்ள ஸ்பிரிங்பீல்டில் ஆயிரக்கணக்கான ஹைட்டிய தொழிலாளர்களுக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியால் தொடங்கப்பட்ட அரசியல் பயங்கரவாதப் பிரச்சாரம், நெருக்கடிக்குள் இருக்கும் அமெரிக்க அரசியல் அமைப்புமுறையானது, ஒரு திருப்புமுனையில் இருப்பதை குறிக்கிறது.

மத்திய கிறிஸ்தவ தேவாலயத்தின் வழிபாட்டாளர்கள் சேவையின் போது ஹைட்டிய சமூகத்தின் உறுப்பினர்களைப் பாராட்டுகின்றனர், ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 15, 2024, ஸ்பிரிங்பீல்ட் [AP Photo/Jessie Wardarski]

ட்ரம்ப், குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் வான்ஸ் மற்றும் குடியரசுக் கட்சியினர், 60,000 பேர் வசிக்கும் தொழிலாள வர்க்க நகரத்தில் பொது செயல்பாடுகளை முடக்கியும், வன்முறைச் சூழலைத் தூண்டியும் வருகின்றனர். நவம்பர் தேர்தலுக்கு முன்னதாக, ட்ரம்பின் நோக்கம் துணை ராணுவ வகை வன்முறையை நோக்கி நகர்வதாகும். நடைமுறையளவில் அவரது அதிதீவிர வலதுசாரி ஆதரவாளர்களுக்கு உத்தரவை “பின்னால் நில், துணை நில்” என்பதில் இருந்து “முன்னோக்கி அணிவகுத்துச் செல்” என்ற நிலைக்கு மாற்றுவதாகும். ஞாயிற்றுக்கிழமை, ட்ரம்ப் விரைவில் ஸ்பிரிங்பீல்டுக்கு வருகை தரும் திட்டத்தை அறிவித்தார்.

ஹைட்டியர்களுக்கு எதிரான அவதூறின் துல்லியமான தோற்றுவாய்கள் தெளிவற்றவையாக உள்ளன. ஆனால், செப்டம்பர் தொடக்கத்தில் உள்ளூர் நவ-நாஜிக்கள் ஸ்பிரிங்பீல்டில் ஹைட்டிய புலம்பெயர்ந்தவர்கள் நாய்களையும், பூனைகளையும் சாப்பிடுகிறார்கள் என்ற பொய்யை ஊக்குவித்தனர். அதன்பின் விரைவிலேயே ட்ரம்ப் அல்லது வான்ஸின் செயல்பாட்டாளர்கள் அதைக் கையிலெடுத்தனர். ட்ரம்ப் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற விவாதத்தின் போது, “அமெரிக்கா எங்கிலுமான நகரங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். ஸ்பிரிங்பீல்டுக்கு போக வேண்டாம். ஸ்பிரிங்பீல்டில், உள்ளே வந்த மக்கள் நாய்களை சாப்பிடுகிறார்கள், அவர்கள் பூனைகளை சாப்பிடுகிறார்கள், அவர்கள் இங்கு வசிக்கும் மக்களின் செல்லப்பிராணிகளை சாப்பிடுகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

அந்த விவாதத்தைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்தவர்கள் மீதான பாசிசவாத தாக்குதலுக்கு ஒரு போலித்தனமான “தொழிலாளர்-சார்பு” மேற்பூச்சை வழங்க ட்ரம்ப்பின் பிரச்சாரம் வான்ஸை பயன்படுத்திக் கொண்டது. வெள்ளிக்கிழமை, ட்விட்டர்/எக்ஸ் இல் ஒரு அறிக்கையை வெளியிட்ட வான்ஸ், டிரம்பை ஏன் அவர் ஆதரிக்கிறார் என்பதை “ஸ்பிரிங்பீல்டில் உள்ள நிலைமை எடுத்துக் காட்டுகிறது” என்று குறிப்பிட்டார்: “வீட்டுவசதி செலவுகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன. தொற்று நோய்கள் அதிகரித்து வருகின்றன. கார் விபத்துகள், குற்றங்கள் மற்றும் காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரித்து வருகின்றன. குடிமக்கள் பல மாதங்களாக (அல்லது அதற்கு மேல்) புகார் அளித்து வருகின்றனர், மேலும் பெரும்பாலும் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான வெளிநாட்டவர் விரோத இனவெறி தூண்டுதலில் இருந்து வெளிப்படும் இந்த வாய்வீச்சு அறிக்கை, இப்போது 37 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் மற்றும் வான்ஸின் அழைப்பிற்கு விடையிறுப்பாக, அதி தீவிர வலதுசாரி கூறுபாடுகள் இப்போது ஸ்பிரிங்பீல்ட் நகரை வன்முறை அச்சுறுத்தல்களால் மூழ்கடித்துள்ளதோடு, பள்ளிகள் மீது குண்டுவீசுவதற்கும் ஹைட்டிய தொழிலாளர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மீது பாரிய துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் வாக்குறுதியளித்துள்ளன.

வீட்டு செல்லப்பிராணிகள் காணாமல் போனதாக எந்த அறிக்கையும் இல்லை என்று முன்னர் தெளிவுபடுத்திய நகர அரசாங்கம், ஸ்பிரிங்பீல்டின் நகர மண்டபம் மற்றும் மோட்டார் வாகனத் துறையை மூட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட அதே நேரத்தில், வெள்ளிக்கிழமை விடுக்கப்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தல்கள், பல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை பூட்டவும், ஆட்களை வெளியேற்றவும் கட்டாயப்படுத்தின. இப்பகுதியின் இரண்டு கல்லூரிகளான கிளார்க் கல்லூரி மற்றும் விட்டன்பேர்க் பல்கலைக்கழகம், தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக வகுப்புகள் மற்றும் நிகழ்வுகள் இரத்து செய்யப்படுவதாக அறிவித்தன.

12,000 முதல் 20,000 வரையிலான ஹைட்டிய குடியேற்றவாசிகள் சட்டப்பூர்வமாக இப்பகுதியில் வசித்து வருவதோடு, இங்கிருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் கிட்டங்கிகளில் அவர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கிருக்கும் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற பயப்படுவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமையன்று, பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவர் நியூயோர்க் டைம்ஸிடம், “எல்லோரும் முற்றிலும் விளிம்பில் உள்ளனர், இது மிகவும் மன அழுத்தமாக இருக்கிறது. ஏதோ பெரிய விஷயம் நடக்கப் போகிறது போல் உணர்கிறேன். ஆனால், அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை“ என்று குறிப்பிட்டார்.

வெடிகுண்டு அச்சுறுத்தல்களுக்கு விடையிறுப்பாக, ட்ரம்பும் வான்ஸும் ஹைட்டியர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான அவர்களின் தாக்குதலின் அளவை அதிகரித்துள்ளனர். ஞாயிறன்று “மீட் தி பிரஸ்” நிகழ்ச்சியில், வான்ஸ் “செல்லப்பிராணிகளை உண்ணும்” பிரச்சினை இட்டுக்கட்டப்பட்டது என்பதை திறம்பட ஒப்புக் கொண்டார்: “அமெரிக்க ஊடகங்கள் உண்மையில் அமெரிக்க மக்களின் துயரங்களுக்கு கவனம் செலுத்தும் வகையில் நான் கதைகளை உருவாக்க வேண்டுமானால், அதைத்தான் நான் செய்யப் போகிறேன்,” என்று வான்ஸ் கூறினார். மேலும், ஹைட்டியர்கள் “நோய் விகிதங்களை” அதிகரித்துள்ளனர். மேலும், வீடுகள், சுகாதாரம் மற்றும் கார் காப்பீட்டு செலவுகள் அதிகரிப்பதற்குக் தொழிலாளர்கள் காரணமாக உள்ளனர் என்று வான்ஸ் குறிப்பிட்டார்.

“Face the Nation” தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது வான்ஸ், மார்கரெட் பிரென்னனிடம், “ஆங்கிலம் பேசத் தெரியாத ஒரு சிறிய மாவட்டத்தில் இப்போது ஆயிரம் குழந்தைகள் உள்ளனர். ஆகவே, இப்போது அந்த பள்ளி மாவட்டத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைப்பதில்லை. உள்ளூர் சுகாதார சேவைகள் நிரம்பி வழிகின்றன. இது ஒரு பயங்கரமான சோகம்” என்று குறிப்பிட்டார். வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து வினவிய போது, புலம்பெயர்வு குறித்த குடிமக்களின் கவலைகளை மிக நீண்டகாலமாக புறக்கணித்ததற்காக ஊடகங்களை வான்ஸ் குற்றஞ்சாட்டினார்: “மார்கரெட், யாரோ ஒருவர் ஏன் வெடிகுண்டு மிரட்டலை விடுக்கிறார்? அவர்கள் கவனத்தை ஈர்க்க விரும்புவதே இதற்குக் காரணம்” என்று வான்ஸ் குறிப்பிட்டார்.

பாசிசவாத வன்முறைக்கான இந்த ஒப்புதலானது, புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதலை இன்னும் முன்னணிக்குக் கொண்டு வருவதற்கும், அதிகரித்தளவில் வன்முறை மொழியைப் பயன்படுத்துவதற்குமான ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினரின் முடிவில் அடியோடு இணைக்கப்பட்டுள்ளது. நெவாடாவின் லாஸ் வேகாஸில் சனிக்கிழமை நடந்த ஒரு பேரணியில் பேசிய ட்ரம்ப், “உங்கள் நாடு ஒரு இராணுவ படையெடுப்பின் கீழ் உள்ளது” என்றும், “ஆயிரமாயிரம் மேலும் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் எங்கள் நாட்டிற்குள் வருகிறார்கள்” என்றும் கூறினார். ஸ்பிரிங்பீல்ட், ஓஹியோ மற்றும் அரோரா, கொலராடோ போன்ற நகரங்கள் - மோசமான வாழ்க்கை நிலைமைகளுக்கு வெனிசுலா கும்பல்களே காரணம் என்று ட்ரம்ப் ஒரு தவறான கூற்றை ஊக்குவித்துள்ளார் - “விடுதலை” பெறப்பட வேண்டும், வரவிருக்கும் தேர்தலில் குடியேற்றவாசிகள் சட்டவிரோதமாக வாக்களிக்கத் தயாராகி வருவதாக அவர் தனது தவறான கூற்றை மீண்டும் கூறினார்.

நெவாடா செய்தித்தாளில் பேரணி குறித்த ஒரு விவரிப்பின்படி, ட்ரம்பின் பிரச்சாரம் பெரிய திரைகளில் வரிசையாக புதிய பிம்பங்களை வழங்கியது: “மேடையின் பக்கவாட்டில் இருந்த காணொளித் திரைகளில், அந்த பிரச்சாரம் புலம்பெயர்ந்தவர்களை குற்றங்களுடன் தொடர்புபடுத்தும் காட்சிகளை காட்டியது. ஒன்றில், ‘பாலியல் கடத்தல்காரர்களுக்கான ஹாரிசின் திட்டம்’ என்று பெயரிடப்பட்ட ஒரு சிவப்பு கம்பளம் அமெரிக்க எல்லையில் கதவுகளைத் திறக்க விரிக்கப்படுகிறது. மற்றொன்று, ‘கமலாவின் திறந்த எல்லைகளால் யாரும் பாதுகாப்பாக இல்லை’ என்பதும், இருண்ட சந்தில் ஒரு பெண்ணின் பின்னால் ஆயுதம் ஏந்திய ஒரு ஆண் பதுங்கியிருப்பதைக் காட்டியது. மூன்றாவதாக, பச்சை குத்திய லத்தினோ ஆண்களின் குழுவைக் காட்டி, ‘கமலா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்கள் புதிய அபார்ட்மெண்ட் மேலாளர்கள்’ இவர்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த பாசிச பிரச்சாரத்திற்கு விடையிறுக்கும் வகையில் ஜனநாயகக் கட்சியின் முழு மௌனமும், ட்ரம்ப்பின் பிரச்சாரம் மேலும் தீவிரமடைவதற்கு சுதந்திரமான கடிவாளத்தை வழங்குகிறது. புலம்பெயர்ந்தோர் மீது கடுமையாக இருப்பதாக தன்னைக் காட்டிக் கொள்ளும் தொலைக்காட்சி விளம்பரங்களை வாங்கியுள்ள கமலா ஹாரிஸ், ஹைட்டியர்களுக்கு எதிராக ட்ரம்ப் பொய்களை ஊக்குவிப்பதை எதிர்த்து ஒரேயொரு அறிக்கை கூட வெளியிடவில்லை. ஹைட்டியர்கள் செல்லப்பிராணிகளை உண்பது குறித்த ட்ரம்பின் அறிக்கைகள் தவறானவை என்று செவ்வாய்கிழமை விவாதத்தின் போது ஒருமுறை கூட அவர் சுட்டிக்காட்டவில்லை. அதற்கு பதிலாக புலம்பெயர்ந்தோரை ஒடுக்குவதற்கு காங்கிரஸின் “மிகவும் பழமைவாத உறுப்பினர்களில் சிலரால்” ஆதரிக்கப்பட்ட ஒரு மசோதாவை அவர் ஆதரித்ததாக வலியுறுத்தினார்.

“அமெரிக்காவில் எந்த இடமும் இல்லை, இது நிறுத்தப்பட வேண்டும் “ என்று வெள்ளிக்கிழமை பைடென் ஒரு செயலற்ற அறிக்கையை வெளியிட்டார். யதார்த்தத்தில், பைடென்-ஹாரிஸ் நிர்வாகம், ஹைட்டிய புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் மீது இடைவிடாத தாக்குதல்களில் ஈடுபட்டதன் மூலமாக ஹைட்டியர்களை ட்ரம்ப் பலிகடாவாக்குவதற்கு பாதை அமைத்துக் கொடுத்துள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடி இருந்து வருகின்றபோதிலும், இந்த ஏப்ரல் மாதம் பைடென் நிர்வாகம் ஹைட்டிக்கு நாடுகடத்தும் விமானங்களை மீண்டும் இயக்கத் தொடங்கியது.

2022 ஆம் ஆண்டில், ஜனாதிபதி பைடெனின் கீழ்தான், ஹைட்டிய புகலிடக் கோரிக்கையாளர்களை மெக்சிகோவின் தெற்கு எல்லைக்கூடாக நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க, எல்லைக் காவல் முகவர்கள் குதிரையில் நிறுத்தப்பட்டதுடன், அவர்கள் சாட்டைகளுடன் ஆயுதம் ஏந்தியிருந்தனர். ஹைட்டியிலிருந்து குடியேற்றத்தைத் தடுக்க பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக, சமீபத்திய ஆண்டுகளில் நாட்டிற்குள் நுழைய முயன்ற நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜூலை 17, 2024 அன்று, 40 ஹைட்டியர்கள் அமெரிக்காவிற்குச் செல்ல முயன்றபோது, ​​அவர்களின் படகு கேப் ஹைட்டியன் கடற்பகுதியில் தீப்பிடித்ததில் இறந்து போயினர்.

புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான பாசிசவாத ஆத்திரமூட்டலை ஊக்குவித்து வரும் ட்ரம்ப்பிற்கு, ஜனநாயகக் கட்சியினரும் ஒத்துழைத்து வருகின்றனர். ஏனெனில், தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஐக்கியப்பட்ட இயக்கம் குறித்த அச்சுறுத்தலைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள்.

தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் இந்த முயற்சிக்கு எதிராக, ஓகியோவிலும், அமெரிக்கா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளை பாதுகாக்க முன்வர வேண்டும். முதலாளித்துவத்திற்கு எதிராகவும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கான போராட்டத்தில் இது ஒரு அவசியமான மூலோபாயமாகும்.

Loading