முன்னோக்கு

போயிங் வேலைநிறுத்தத்திற்குப் பின்னால் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்! IAM விதித்த தனிமைப்படுத்தலை உடைப்போம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வாஷிங்டனின் எவரெட்டில் வேலைநிறுத்தம் செய்யும் போயிங் தொழிலாளர்கள்

ஐந்து நாட்களுக்கு முன்னர் தொடங்கிய வாஷிங்டன், ஓரிகான் மற்றும் கலிபோர்னியா மாநிலங்களில் 33,000 போயிங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

விண்ணை முட்டும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான நடைமுறையில் உள்ள ஊதிய முடக்கம் ஆகியவற்றை ஈடுகட்டவும், கணிசமான ஊதிய உயர்வுகளைப் பெறவும் தொழிலாளர்கள் தீர்மானகரமாக உள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு போயிங்கை அகற்றுவதற்கு சர்வதேச இயந்திர வல்லுநர் சங்கத்தின் (IAM) தலைமை அனுமதித்த நிறுவனத்தால் வழங்கப்படும் ஓய்வூதியங்களையும் அவர்கள் மீட்டெடுக்க விரும்புகிறார்கள்.

IAM மாவட்டம் 751 அதிகாரத்துவத்திற்கு எதிராக சாமானிய தொழிலாளர்களின் தொடக்கக் கிளர்ச்சியின் விளைவாக இந்த வெளிநடப்பு நடைபெற்று வருகிறது. வியக்க வைக்கும் வகையில் 95 சதவீதமான தொழிலாளர்கள் IAM ஆதரவு ஒப்பந்தத்தை நிராகரித்தனர். 96 சதவீதம் பேர் 2008ல் இரண்டு மாத வெளிநடப்புக்குப் பிறகு முதல் முறையாக வேலைநிறுத்தம் செய்ய வாக்களித்தனர்.

பெரு நிறுவனத்தின் இலாபத்திற்காக பாதுகாப்பை தியாகம் செய்ததாலும், நூற்றுக்கணக்கான விமானப் பயணிகளின் மரணத்திற்கு இட்டுச் சென்ற பாதுகாப்பற்ற நடைமுறைகள் குறித்த தொழிலாளர்களின் எச்சரிக்கையை புறக்கணித்ததாலும் ஏற்பட்ட நிறுவனத்தின் நிதி நெருக்கடிக்கு, தாங்கள் விலை செலுத்த வேண்டும் என்ற நிறுவனம் மற்றும் IAM அதிகாரத்துவத்தின் கோரிக்கையை தொழிலாளர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.

இதில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் என்னவென்றால், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட இளம் தொழிலாளர்களின் உறுதியான எதிர்ப்பு ஆகும். அவர்கள் கையெழுத்திடும் மேலதிக கொடுப்பனவுடன் உடன்பாட்டிற்கு ஆதரவாக வாக்களிக்க அவர்களை கவர்ந்திழுக்கும் முயற்சிகளை நிராகரித்தனர். சியாட்டில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அதிக வாடகையை செலுத்த முடியாமல், ஒரு வீட்டை வாங்குவது ஒருபுறம் இருக்க, இளம் தொழிலாளர்கள் கணிசமான ஊதிய மேம்பாடு மற்றும் ஓய்வூதியங்களை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தில் இராணுவ வீரர்களுடன் இணைந்து கொண்டனர்.

எதிர்ப்பின் வீச்சானது, கார்ப்பரேட் ஊடகங்கள், போயிங் நிர்வாகிகள் மற்றும் வேலைநிறுத்தத்தைத் தடுப்பதற்காக IAM தலைமையுடன் நெருக்கமாக பணியாற்றிய பைடெனின் வெள்ளை மாளிகையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மோர்கன் ஸ்டான்லி ஆய்வாளர்களுடன் ஒரு இணையவழி கூட்ட அழைப்பில், போயிங் தலைமை நிதி அதிகாரியான பிரையன் வெஸ்ட், போயிங் நிறுவனம் நீண்ட காலமாக தொழிற்சங்கத் தலைவர்களுடன் பணியாற்றி வருவதாகவும், ஒப்பந்தம் அங்கீகரிக்கப்படும் என்று நம்புவதாகவும் கூறினார். இந்த ஒப்பந்தம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது, ஏனெனில் சங்கத் தலைமை மற்றும் உறுப்பினர்களுக்கு இடையேயான ஒப்புதல் மிகவும் துண்டிக்கப்பட்டது.

இந்த முக்கியமான அடியை முன்னெடுத்த பின்னர், தொழிலாளர்கள் இப்போது இன்னும் அடிப்படையான கேள்விகளை எதிர்கொள்கின்றனர். போயிங் நிர்வாகிகளும் IAM தொழிற்சங்க அதிகாரத்துவமும் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுப்பது மற்றும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு உடன்படிக்கையை மறுவடிவமைப்பது குறித்து ஒரு நாடகத்தை நடத்தி வருகின்றனர். கூடுதலாக, பெடரல் மத்தியஸ்தம் மற்றும் சமரச சேவையைச் (FMCS) சேர்ந்த ஒரு மத்தியஸ்தர்—அதன் உயர்மட்ட ஆணையர் ஜனாதிபதி பைடனால் நியமிக்கப்பட்டார்— புதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.

ஆனால், சியாட்டில் நகரத்தில் உள்ள் சொகுசு விடுதியில் நடப்பது “பேச்சுவார்த்தைகள்” அல்ல. இது வேலைநிறுத்தக்காரர்களுக்கு எதிராக போயிங், மத்திய அரசாங்கம் மற்றும் IAM அதிகாரத்துவத்தின் ஒரு சதியாகும். ஒரு மேம்பட்ட உடன்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொழிலாளர்களை நிராயுதபாணிகளாக்குவதே அவர்களின் திட்டமாகும், அதேவேளையில் IAM தலைவர்கள் வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தி, தொழிலாளர்களை அடிபணிய வைக்க முயற்சிக்கின்றனர்.

IAM தொழிற்சங்க அதிகாரத்துவம், $300 மில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டுள்ளது மற்றும் கடந்த ஆண்டு அதன் சர்வதேச தலைவர் ராபர்ட் மார்டினெஸுக்கு $668,000 டாலர்களும், மாவட்டம் 751ன் தலைவர் ஜான் ஹோல்டனுக்கு $225,000 டாலர்களும், மொத்த இழப்பீடாக வழங்கப்பட்டது. ஆயினும்கூட, வேலைநிறுத்தத்தின் மூன்றாவது வாரம் வரையில், வேலைநிறுத்த சலுகைகளாக போயிங் தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 250 டாலர்களை மட்டும் வழங்கவே IAM அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அதேநேரத்தில், IAM மற்றும் AFL-CIO தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தவும், அதே போராட்டத்தை முகங்கொடுத்துவரும் வாஷிங்டன் மாநில ஊழியர்கள் மற்றும் துறைமுகங்கள், இரயில்பாதைகளில் மற்றும் ஏனைய தொழிலாளர்களுடன் போயிங் தொழிலாளர்கள் ஒரு பொதுவான போராட்டத்தை நடத்துவதைத் தடுக்கவும் அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றனர்.

இந்த கட்டத்தில், பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் தொழிலாளர்களின் எதிர்ப்பை தணிக்கவும், வேலைநிறுத்தத்தை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரவும் IAM அதிகாரத்துவத்தை நம்பியுள்ளது. ஆனால் வேலைநிறுத்தம் தொடர்ந்தால், வெளிநடப்பு “தேசிய பாதுகாப்பை” ஆபத்திற்கு உட்படுத்துவதாக கூறி, வெள்ளை மாளிகை நேரடியாக தலையிடக் கூடும். 2022 இல், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதியும் காங்கிரஸில் உள்ள இரு கட்சிகளும் 100,000 க்கும் அதிகமான இரயில்பாதை தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமாக்க இந்த வழிமுறையைப் பயன்படுத்திக் கொண்டனர்.

போயிங் நிறுவன வேலைநிறுத்தமானது, காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு பைடென் நிர்வாகத்தின் ஆதரவையும் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமிப் போரை விரிவாக்குவதற்கான அதன் திட்டங்களையும் குறுக்கே வெட்டுகிறது. போயிங் நிறுவனமானது, 2021 மற்றும் 2023 க்கு இடையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கு ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளின் மிகப்பெரிய சப்ளையராக இருந்து வந்தது. இதற்கும் கூடுதலாக, “உக்ரேனில் நடந்து வரும் போர் மற்றும் புவிசார் அரசியல் இயக்கவியல் குறித்த கவலைகள் கண்டத்தில் உள்ள நாடுகளை, இராணுவ செலவினங்களை அதிகரிக்க உந்துகின்ற நிலையில், போயிங் இன் பாதுகாப்பு பிரிவு ஐரோப்பாவில் வலுவான வளர்ச்சியை எதிர்பார்க்கிறது” என்று ஏவியேஷன் வீக் அறிவித்தது.

போயிங் வேலைநிறுத்தமும், இராணுவ ஒப்பந்ததாரர் ஈட்டன் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு எதிராக மிச்சிகனின் ஜாக்சனில் சமீபத்தில் தொடங்கிய 500 தொழிலாளர்களின் வெளிநடப்பும், ஆளும் வர்க்கத்திற்கு நிஜமான அபாயங்களை முன்னிறுத்துகின்றன, ஆளும் வர்க்கம் வெளிநாடுகளில் ஏகாதிபத்திய போரை நடத்துகின்ற அதேவேளையில், “உள்ளே இருக்கும் எதிரியான” தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வரும் எதிர்ப்பை ஒடுக்குவதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவத்தைப் பயன்படுத்த முனைந்துள்ளது.

போயிங் தொழிலாளர்களின் கிளர்ச்சியானது, சிக்காகோவில் டக்கோட்டா வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிலாளர்களின் மூன்று வார கால வேலைநிறுத்தம் உட்பட, தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான சாமானிய தொழிலாளர்களின் கிளர்ச்சி அலையின் ஒரு பாகமாகும். அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் மூலம் UAW ஐந்தாவது ஒப்பந்தத்தை முறியடிக்கும் முன், தக்கோடா தொழிலாளர்கள் ஐக்கிய ஆட்டோ தொழிலாளர் சங்க அதிகாரத்துவத்தின் ஆதரவுடன் நான்கு விற்றும்தள்ளும் ஒப்பந்தங்களை நிராகரித்தனர்.

2024 ஜனாதிபதி தேர்தல்களுக்கு முன்னதாக, அமெரிக்காவில் முன்னொருபோதும் இல்லாத அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் போயிங் வேலைநிறுத்தமும் நடந்து வருகிறது.

ட்ரம்ப்பின் பிரச்சாரம் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளை இலக்கு வைத்து அதன் பாசிசவாத வாய்வீச்சைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதை அது சமூக நெருக்கடிக்கு பலிகடாவாக்க முனைகிறது. பகிரங்க சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் செல்வந்த தட்டுக்களின் கன்னைகளுக்காக பேசும் ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும், தேர்தல்களின் முடிவு என்னவாக இருந்தாலும், வன்முறையை கட்டவிழ்த்துவிட அச்சுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, ஜனநாயகக் கட்சியினர் பாசிசவாத அபாயத்தை மூடிமறைத்து வரும் அதேவேளையில், போரின் விரிவாக்கத்தில் கவனம் செலுத்துகிறார்கள். மேலும், அவர்களது வழியில் குறுக்கிடும் எதையும் ஒடுக்க அவர்கள் தீர்மானகரமாக உள்ளனர். பொலிட்டிகோ (Politico) இல் வெளியான ஒரு கட்டுரை, போயிங் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து அக்டோபர் 1 அன்று கிழக்கு கடற்பகுதி மற்றும் மெக்சிகோ வளைகுடா துறைமுகங்களில் குறைந்தபட்சம் 25,000 துறைமுகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வரக்கூடும் என்றும், வெஸ்ட் கோஸ்ட் துறைமுகத் தொழிலாளர்களின் ஒற்றுமை நடவடிக்கையின் சாத்தியக்கூறு “பைடென் நிர்வாகத்தின் தேய்ந்து வரும் மாதங்களுக்கு ஒரு மகத்தான அரசியல் தலைவலியை உருவாக்கக்கூடும்...” என்று எச்சரித்துள்ளது.

மறியல் களத்தில், பூர்வீகமாக பிறந்த தொழிலாளர்கள் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் பிறந்த தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை எடுத்துக்காட்டுகின்றனர். அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த தலையீட்டிற்கு இந்த வேலைநிறுத்தம் அடிப்படையாக இருக்க வேண்டும்.

போர்க்குணமிக்க விமான இயந்திரவியலாளர்களது ஒரு நிபுணர்கள் குழு போயிங் சாமானிய தொழிலாளர் குழுவை ஸ்தாபித்துள்ளது. அது வேலைநிறுத்தத்தை விரிவுபடுத்துவதற்கும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்குமான ஒரு மூலோபாயத்தை விவரித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த குழு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒரு “வெற்றி-வெற்றி” உடன்படிக்கையை எட்ட முடியும் என்று போயிங் முதலாளிகள், IAM தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் கூட்டாட்சி மத்தியஸ்தர்கள் கூறுவது முற்றிலும் முட்டாள்தனமானது. இது வெறுமனே ஒப்பந்தப் போராட்டம் அல்ல. இது சமரசப்படுத்த முடியாத நலன்களைக் கொண்ட எதிரெதிர் சக்திகளின் மோதலாகும். அத்தகைய சந்தர்ப்பத்தில், யார் மிகவும் சக்திவாய்ந்த படைகளை போருக்கு கொண்டு வர முடியும் என்பதன் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுகிறார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தப் போராட்டத்தை நாம் தனித்து வெல்ல முடியாது. இந்த வேலைநிறுத்தம் போயிங் தொழிலாளர்களின் அனைத்து பிரிவுகளுக்கும் விரிவாக்கப்பட வேண்டும்; இதில் SPEEA இன் பொறியியலாளர்கள் மற்றும் தென் கரோலினா ஆலையில் தொழிற்சங்கத்தில் இல்லாத தொழிலாளர்களும் அடங்குவர். துறைமுகத் தொழிலாளர்கள், இரயில்பாதை தொழிலாளர்கள், வாஷிங்டன் மாநில ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், கல்வித்துறை தொழிலாளர்கள் ஆகியோரின் ஆதரவை வென்றெடுக்க தகவல் மறியல் போராட்டங்கள் அனுப்பப்பட வேண்டும். ஏர் கனடா மற்றும் ஏர்பஸ் சர்வதேச அளவில் உள்ள விமானச் சேவை தொழிலாளர்களை சென்றடைய ஒரு சிறப்பு பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.

போயிங் தொழிலாளர்களின் போராட்டமானது, ஒரு பாதுகாப்பான மற்றும் நல்ல ஊதியமளிக்கும் வேலை, முழுமையாக வழங்கப்படும் ஓய்வூதியங்கள், இலவச மருத்துவக் கவனிப்பு மற்றும் கட்டுப்படியாகும் வீட்டுவசதிக்கான சமூக உரிமைக்காக போராடுவதற்கு தொழிலாளர்களின் அத்தனை பிரிவுகளதும் தொழில்துறை மற்றும் அரசியல் எதிர்-தாக்குதலின் தொடக்கமாக இருக்க முடியும், இருக்கவும் வேண்டும்.

தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை அதன் சொந்தக் கைகளில் எடுக்கப் போராடுவதன் மூலமும் மற்றும் மிகப்பெரும் பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளை பொது உடைமை நிறுவனங்களாக மாற்றுவதன் மூலமும் மட்டுமே இது அடையப்பட முடியும். ட்ரில்லியன் டாலர்கள் பெரும் செல்வந்தர்களின் கஜானாக்களுக்குள் பாய்ச்சப்பட்டு போருக்காக வீணடிக்கப்படுவதற்கு பதிலாக, தொழிலாள வர்க்கத்தின் கூட்டு உழைப்பால் உருவாக்கப்படும் ஆதார வளங்கள் மனிதகுலத்தின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்.

போயிங் நிறுவனம் ஒரு பொது நிறுவனமாக மாற்றப்பட்டு, பாதுகாப்பான விமானங்களைக் கட்டியெழுப்ப பொறுப்பேற்றுள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களால் கூட்டாக சொந்தமாக்கப்பட்டு, ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இது அமெரிக்காவிலும் உலகெங்கிலும் பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வின் சோசலிச மாற்றத்தின் பாகமாக இருக்க வேண்டும்.

Loading