மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஜனாதிபதி தேர்தல் தினத்தை முன்னிட்டு, அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் குழு ஒன்று, கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்து ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையானது, கை பேர்ட் (Kai Bird), சிட்னி புளூமென்தால் (Sidney Blumenthal), கென் பர்ன்ஸ் (Ken Burns- ஒரு ஆவணப்படக்காரராக நன்கு அறியப்பட்டவர்), ரான் செர்னோ (Ron Chernow), பெவர்லி கேஜ் (Beverly Gage), எடி கிளாட், ஜோன் மீச்சம் (Jon Meacham) மற்றும் சீன் வில்லென்ட்ஸ் (Sean Wilentz) ஆகிய எட்டு வரலாற்றாசிரியர்களால் இணைந்து எழுதப்பட்டுள்ளதுடன், டசின் கணக்கான பிற கல்வியாளர்கள் இதில் இணைந்து கையொப்பமிட்டுள்ளனர்.
இது, அமெரிக்க தாராளவாதத்தின் அரசியல் திவால்தன்மையையும், ஜனநாயகக் கட்சிக்கு முட்டுக் கொடுப்பதில் அதன் புத்திஜீவித விரிவுரையாளர்கள் ஆற்றி வருகின்ற இழிவான பங்கை அம்பலப்படுத்தும் திகைப்பூட்டும் ஆவணமாகவும் இது இருக்கிறது.
இந்த அறிக்கையானது, “இரண்டு தீமைகளில் குறைவான” ஹாரிஸூக்கு வாக்களிக்க வலியுறுத்துவதோடு மட்டும் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. மேலும், இந்த வாதத்தை அடிப்படையாகக் கொண்ட அத்தகைய அழைப்பு அரசியல் ரீதியாக தவறானதாகும். ஆனால், குறைந்தபட்சம் அது கையொப்பமிட்டவர்களுக்கும் பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்தின் குற்றங்களுக்கும் இடையில் சிறிது தூரத்தைத்தான் உருவாக்கியிருக்கும். ஆனால், முற்றிலும் எதிர்மாறாக: இந்த ஆவணம் ஹாரிஸை ஜனநாயகத்தின் கதாநாயகி என்றும், பிசாசாகிய ட்ரம்பிற்கு எதிராக தனது பயங்கரமான வாளை வேகமாக வீசுவதாகவும் பாராட்டுகிறது.
இந்த அறிக்கையின் பொருளுரையை படிக்கும்போது, இதன் ஆசிரியர்கள் மற்றும் கையெழுத்திட்டவர்கள் எவருக்கும் அமெரிக்க சமூகத்தின் தற்போதைய நிலை பற்றிய பரிச்சயம் இருப்பது ஒருபுறம் இருக்கட்டும், அமெரிக்க வரலாறு பற்றி ஏதேனும் அறிவு கூட இருந்தது என்பதை நம்புவது கடினமாக உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
1789 முதல், பொது நலனைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசியலமைப்பின் கீழ், எந்த ஒரு நபரும் அல்லது குழுவும் முழுமையான அதிகாரத்தைக் கொண்டிராத ஒரு தேசிய அரசாங்கத்தின் கீழ் தேசம் செழித்தோங்கியது. 1860-ல், மனித அடிமைத்தனத்தை ஆதரித்த ஒரு ஒரு உயரடுக்கானது தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளாமல், ஒன்றியத்தை (Union) சிதைக்க முயன்று நாட்டை உள்நாட்டுப் போரில் தள்ளியது.
இந்த விவரிப்பு வரலாற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டதல்ல; மாறாக, கட்டுக்கதையை அடிப்படையாகக் கொண்டது. இது ட்ரம்பின் ‘அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக ஆக்குவோம்’ (MEGA) என்ற பிற்போக்குப் போர் முழக்கத்திற்கு பதிலாக ‘அமெரிக்காவை மகத்தானதாக வைத்திருங்கள்’ என்ற பரிதாபகரமான முறையீட்டை முன்வைக்கிறது. கையெழுத்திட்டவர்களில் பலர் முதலில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பில் உள்ள சமத்துவமின்மைகளைப் பற்றி எழுதியுள்ளனர்; அதனால் தெற்கு அடிமைத்தன உரிமையாளர்கள் லிங்கன்தான் அரசியலமைப்பை மீறினார் என்று கூறுவதற்கு வழிவகுத்தது. உண்மையில், ஒன்றியத்தின் நிலைப்பாட்டின் அரசியல் மற்றும் தார்மீக அடித்தளம் சுதந்திரப் பிரகடனத்தில் உள்ள கொள்கைகளில் அமைந்திருந்தது, குறுகிய சட்ட வாசிப்பில் அல்ல. இதைத் தாண்டி, ‘பொது நலனைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசியலமைப்பின் கீழ் தேசம் செழித்துள்ளது’ என்ற வரலாற்றாசிரியர்களின் கூற்று அப்பட்டமான தேசபக்த முட்டாள்தனம் ஆகும்; ஜோர்ஜ் வாஷிங்டன் ஒரு வெள்ளி டாலரை பொடோமாக் ஆற்றைக் கடந்து வீசினார் என்பதும் அவர் ஒருபோதும் பொய் சொல்லவில்லை என்பதும் நம்பத்தகுந்ததாக இல்லை.
சட்டத்தில் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து அடிப்படையான மற்றும் அத்தியாவசியமான ஜனநாயக உரிமைகளும் மூல அரசியலமைப்பில் செய்யப்பட்ட திருத்தங்களின் விளைபொருளாகும். 1789க்கும் 1861க்கும் இடைப்பட்ட 72 ஆண்டுகளாக அடிமை முறையைப் பாதுகாத்து வந்த இந்த அரசியலமைப்பு, அடிமை ஒழிப்பு போராட்டத்தை முடக்கும் அளவுக்கு வலுவிழந்தது. இறுதியில், ஆப்ரகாம் லிங்கன் மற்றும் தீவிர குடியரசுவாதிகளின் தலைமையில் அமெரிக்காவின் வடக்கு பகுதியில் இருந்த அடிமை உரிமையாளர்களுக்கு எதிராக ஒரு புரட்சிகர யுத்தத்தை நடத்த வேண்டியது அவசியமாயிற்று. மேலும், இராணுவப் போராட்டத்தின் விளைவுகளைச் சட்டத்தில் பாதுகாக்க வேண்டுமானால், அரசியலமைப்பில் பதின்மூன்றாவது, பதினான்காவது, பதினைந்தாவது ஆகிய மூன்று திருத்தங்களை நிறைவேற்ற வேண்டியிருந்தது.
நாம் வரலாற்றாசிரியர்களை கேட்க வேண்டும்: அவர்கள் எந்த “தேசம்” மற்றும் எந்த “பொது நலனைப்பற்றி” குறிப்பிடுகிறார்கள்?
அமெரிக்க உள்நாட்டுப் போரின் இரத்தக்களரிக்குப் பிறகு, மறதி பிடித்த வரலாற்றாசிரியர்களால் புகழப்படும் “செழுமை” மற்றும் “பொது நலன்கள்” முன்னாள் அடிமைகள், தங்கள் முன்னாள் எஜமானர்களின் பழிவாங்கல் மற்றும் அடக்குமுறையை எதிர்கொண்டவர்கள் அல்லது அமெரிக்க அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட பூர்வீக அமெரிக்கர்களை உள்ளடக்கவில்லை.
கையெழுத்திட்டவர்களில் கணிசமானவர்கள் தொழிலாளர்கள் குறித்த வரலாற்றாசிரியர்களாக உள்ளனர். ஆனால், உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய 70 ஆண்டுகளில், ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தால் தொழிலாளர் வர்க்கம் மிருகத்தனமாக சுரண்டப்பட்டு, அதீத வன்முறையுடன் கூடியதாக இருந்தது, இது அவர்களது நினைவில் இருந்து தப்பிவிட்டதாகத் தெரிகிறது.
சுருங்கக் கூறின், ட்ரம்ப் தோன்றும் வரையில், உண்மை, நீதி மற்றும் அமெரிக்க வழி ஆகியவற்றின் வெற்றி ஊர்வலமாக அமெரிக்க வரலாற்றை இந்த அறிக்கை நினைவுபடுத்துவது ஒரு கட்டுக்கதையாகும்.
இதில் கையொப்பமிட்டவர்கள், “அரசியலமைப்பு மரபுகள்” மற்றும் “சட்டத்தின் ஆட்சி” மீதான ட்ரம்பின் குரோதத்தை கண்டனம் செய்கின்றனர். அந்தக் கூற்று உண்மைதான், ஆனால் ஜனநாயக கோட்பாடுகள் மற்றும் “சட்டத்தின் ஆட்சி” மீதான ட்ரம்பின் அவமதிப்பு, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டிலுமே, முந்தைய ஜனாதிபதி நிர்வாகங்களின் நடவடிக்கைகளில் எண்ணற்ற முன்னுதாரணங்களைக் கோர முடியும் என்ற உண்மையை அது புறக்கணிக்கிறது. ஒபாமா நிர்வாகம் இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளைப் பயன்படுத்துவதை நிறுவனப்படுத்தியது. இதில் அமெரிக்க குடிமக்கள் மீதான நீதித்துறைக்கு புறம்பான படுகொலைகளும் உள்ளடங்கும். கடந்த ஆண்டில், பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலை போருக்கு நிதியளிப்பதிலும் ஆயுதம் வழங்குவதிலும் சர்வதேச சட்டத்தின் அத்தியாவசிய கொள்கைகளை திட்டமிட்டு புறக்கணித்துள்ளது மற்றும் மீறியுள்ளது.
“நாட்டுக்குள்ளே இருக்கும் எதிரி” என்று முத்திரை குத்தப்படுபவர்களை “மிரட்டுவதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும், அவர்களை சிறையில் அடைப்பதற்கும்” ட்ரம்பின் திட்டங்களுக்கு எதிராக வரலாற்றாசிரியர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் ட்ரம்பின் இத்தகைய நடவடிக்கைகள், இரண்டாம் உலகப் போரின்போது, தேசத்துரோக குற்றச்சாட்டுக்களின் பேரில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை சிறையில் அடைத்தமை, பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்கள் மீது ஸ்மித் சட்ட வழக்குகளை தொடுத்தமை, ரோசன்பேர்க்குகள் தூக்கிலிடப்பட்டமை, ஹாலிவுட் கறுப்புப் பட்டியல்கள் மற்றும் எண்ணற்ற ஏனைய முதலாம் அரசியலமைப்பு திருத்த உரிமைகள் மீறப்பட்டமை உட்பட, கடந்த 85 ஆண்டுகளில் ஒவ்வொரு நிர்வாகமும் ஜனநாயக உரிமைகள் மீறியதன் மீது கட்டியெழுப்பப்பட்டது.
வரலாற்றாசிரியர்கள் கடந்த கால் நூற்றாண்டில் தூக்கத்தில் நடமாடியதாகத் தெரிகிறது. இதில், இரு கட்சிகளினதும் ஜனாதிபதி நிர்வாகங்களால் பிரமாண்டமான பொய்களின் அடிப்படையில் சட்டப்பூர்வமாக்கப்பட்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான முழுமையான குற்றவியல் போருடன் தொடர்புடைய ஜனநாயக உரிமைகளின் மீதான பாரிய மீறல்கள் கவனிக்கப்படாமல் கடந்து சென்றுள்ளன.
இந்த அறிக்கையானது கமலா ஹாரிஸை இடைவிடாது புகழும் அரசியல் போலித்தனத்தின் ஆழத்தில் இறங்குகிறது. ஹாரிஸுக்கு வாக்களிக்கும்போது மூக்கைப் பிடித்துக் கொள்ளுமாறு வரலாற்றாசிரியர்கள் தங்கள் வாசகர்களுக்கு அறிவுரை கூறியிருக்கலாம். ஆனால், வரலாற்றாசிரியர்கள் அரசியல் சந்தர்ப்பவாதத்தை ஆதரித்தால் மட்டும் போதாது. அவர்கள் கட்டுப்பாடற்ற அரசியல் களத்தில் மகிழ்வதைத் தேர்ந்தெடுத்துள்ளனர். வெட்கங்கெட்ட அரசவையினரின் பாணியில் எழுதி, அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்கள்:
சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த கமலா ஹாரிஸ் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். ஒரு வழக்கறிஞர் மற்றும் கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலாக, அவர் பயம் அல்லது சார்பு இல்லாமல் நீதியைப் பின்தொடர்ந்தார். அமெரிக்க செனட்டராக இருந்தபோது, அதிகாரத்தை தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்துவதற்கு உதவுபவர்கள் மற்றும் உடந்தையாக இருப்பவர்களை அவர் எதிர்கொண்டார். துணை ஜனாதிபதியாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அவசர பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர் பணியாற்றியுள்ளார். ஒரு ஜனாதிபதி வேட்பாளர் என்ற முறையில், அரசியலமைப்பைப் தற்காத்து பாதுகாப்பதற்கு, தனது எதிர்ப்பாளரின் உறுதிமொழிக்கு ஒரு அவமானம் என்று அழைத்துள்ளார்.
இந்த ஒழுங்கற்ற உந்துதல், ஒரு அறிவார்ந்த இலகுவான மற்றும் அரசியல் மறைக்குறியீட்டைப் பற்றி எழுதப்படுவதுடன் வாழ்க்கை முழுவதுமாக அவருடைய திறனை அடிப்படையாகக் கொண்டு, முதலாளித்துவ இரு-கட்சி அமைப்பு முறையின் கட்டமைப்பிற்குள் முன்னேறிச் செல்லும் அனைவரையும் போல, தனது பெருநிறுவன ஊதியம் வழங்குபவர்களின் மோசமான வேலையை அவர் செய்து வருகிறார். ஹாரிஸ் “அச்சமோ அல்லது தயவோ இல்லாமல்” போராடிய மாபெரும் சமூக காரணங்களை ஆசிரியர்கள் அடையாளம் காணத் தவறிவிட்டனர். கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக அவர் பதவி வகித்த காலம், மரண தண்டனையை ஆதரிப்பது, நெரிசலான சிறைகளில் இருந்து கைதிகளை விடுவிப்பதை எதிர்ப்பது மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூடுகளை விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளிட்ட ஏழைகளுக்கான கொடுமை மற்றும் அவமதிப்பு ஆகியவற்றால் முதன்மையாக வகைப்படுத்தப்பட்டது. செனட்டில் இருந்த ஹாரிஸ் விரைவில் புலனாய்வுக் குழுவிற்கு மாற்றப்பட்டார், அவர் CIA மற்றும் இராணுவத்தின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதை நிரூபித்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கான அவரது நிபந்தனையற்ற விசுவாசம், பைடெனின் கீழ் அவர் துணை ஜனாதிபதி பதவிக்கு உயர்த்தப்படுவதை உறுதி செய்தது.
காஸா இனப்படுகொலையில் அவர் உடந்தையாக இருந்தது குறித்தும், உக்ரேனில் பினாமிப் போரை அவர் உற்சாகமாக ஊக்குவித்தது குறித்தும் இந்த வரலாற்றாசிரியர்கள் ஒரு குற்றவுணர்வுள்ள மௌனத்தைக் கடைப்பிடிக்கின்றனர். துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸின் நான்கு ஆண்டு பதவிக்காலம் இரத்தத்தில் நனைந்துள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, 13,000 க்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 43,000 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதில் அமெரிக்க ஆதரவிலான படுகொலையுடன் தன்னை நேரடியாக தொடர்புபடுத்திக் கொண்டு, நெதன்யாகு உடனான பைடெனின் ஒவ்வொரு சந்திப்பிலும் கலந்து கொள்வதை அவர் ஒரு புள்ளியாக ஆக்கிக் கொண்டார்.
பைடென் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக, “சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்திற்கான” அர்ப்பணிப்பைப் பொறுத்தவரை, பல மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட இனப்படுகொலைக்கு எதிரானவர்களை பழிவாங்குவதையும் துன்புறுத்துவதையும் ஹாரிஸ் மேற்பார்வையிட்டுள்ளார். உண்மையில், ஹாரிஸ் அவரது இறுதி பிரச்சார நிகழ்வுகளில் ஒன்றை பென்சில்வேனியாவின் ஆலன்டவுனில் உள்ள முஹ்லென்பேர்க் கல்லூரியில் நடத்தியிருந்தார். அங்கு ஒரு யூத மானுடவியல் பேராசிரியரான மௌரா ஃபிங்கெல்ஸ்டீன் இஸ்ரேலை எதிர்த்து அறிக்கை விட்டதுக்காக நீக்கப்பட்டார்.
வரலாற்றாசிரியர்கள் தங்கள் அறிக்கையை ஹாரிஸ் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான இறுதி அழைப்புடன் முடிக்கின்றனர். “1860 தேர்தலுக்கு குறையாத வகையில், இந்தத் தேர்தலின் முடிவில், அரசியலமைப்பின் கடிதம் மற்றும் ஆன்மா ஆகிய இரண்டின் தலைவிதியும் தொங்கிக் கொண்டிருக்கிறது” என்று அவர்கள் பிரகடனம் செய்கிறார்கள். இந்த அறிக்கை அரசியல் மற்றும் புத்திஜீவித பிதற்றலாகும். 1860 தேர்தலில் அமெரிக்க மக்கள் எதிர்கொண்ட மாபெரும் பிரச்சினை அடிமை முறையாகும். லிங்கனுக்கு கிடைத்த வாக்கு அடிமை உரிமையாளர்களின் சர்வாதிகாரத்திற்கு எதிராக அமெரிக்க ஒன்றியத்தை பாதுகாக்கும் முடிவை பிரதிபலித்தது. மாபெரும் வரலாற்றாசிரியர் ஜேம்ஸ் மெக்பெர்சன் எழுதியதைப் போல, தேர்தலுக்குப் பிறகு உடனடியாக உள்நாட்டுப் போர் வெடித்தபோது, மக்கள் தாங்கள் வாக்களித்த வழியில் சுட்டனர்.
கமலா ஹாரிஸ் உயர்த்திப் பிடிக்கும் மாபெரும் ஜனநாயகக் கோட்பாடுகள் என்ன? அமெரிக்காவின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்புகளில் என்ன ஆழமான மாற்றங்களில் அவர் “அச்சமோ அல்லது தயவோ இல்லாமல்” முன்னேறி வருகிறார்? 1860 தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பொது விவாதங்களில் வருங்காலத்தில் தனக்கு போட்டியாக இருக்கும் ஸ்டீபன் ஏ. டக்ளஸை எதிர்கொண்ட லிங்கன், அடிமை முறைக்கு எதிரான போராட்டத்தின் தளமாக கொள்ள வேண்டிய அடிப்படைக் கொள்கைகளை தெளிவாகக் கூறினார்.
2024 தேர்தலில் ஆபத்தில் இருக்கும் கொள்கைகளை துணை ஜனாதிபதி ஹாரிஸ், (ஒரு டெலிபிராம்ப்டரின் சேவைகளை இல்லாமல், ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட வெற்றுரைகளின் மனப்பாடம் செய்யப்பட்ட பாராயணத்தை முற்றிலும் நம்பியிருக்கிறார்) எங்கே, எப்போது வெளிப்படுத்தினார்? பாசிசம் பற்றிய அவரது சுருக்கமான குறிப்பு விரைவில் திரும்பப் பெறப்பட்டது. குடியரசுக் கட்சியின் வெளிப்படையான பாசிசத் தன்மையும், ட்ரம்பின் சதித்திட்டங்களில் அதன் முழு அளவிலான ஈடுபாடும் முற்றிலும் குறிப்பிடப்படவில்லை.
இந்த சீரழிந்த தேர்தல் பிரச்சாரம், அனைத்திற்கும் மேலாக நிஜமான அரசியல், சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்த எந்தவொரு குறிப்பையும் தவிர்த்ததன் மூலமாக குணாம்சப்படுத்தப்பட்டிருக்கிறது: அமெரிக்கா ஏற்கனவே ஒரு பிரளயகரமான அணுஆயுத மோதலாக தீவிரமடைய அச்சுறுத்தும் ஒரு துரிதமாக விரிவடைந்து வரும் ஓர் உலகளாவிய போரில் ஆழமாக ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா பாரிய சமூக சமத்துவமின்மையால் பிளவுபட்டு, மலைப்பூட்டும் அளவிற்கு செல்வவள மட்டங்கள் மக்கள்தொகையில் மிகச் சிறிய அளவினரிடம் குவிந்துள்ளன. பெரும்பான்மையான மக்கள் கணிசமான அளவு பொருளாதார துயரங்களை அனுபவித்து வருகின்றனர். 1.5 மில்லியன் அமெரிக்கர்களின் உயிர்களைப் பறித்துள்ள மற்றும் மில்லியன் கணக்கானவர்களை கடுமையாக பலவீனப்படுத்திய ஒரு ஐந்தாண்டு பெருந்தொற்று நோயின் விளைவுகளால் சமூக வாழ்க்கை ஆழமாக சீர்குலைந்துள்ளது.
இந்த நிலைமைகள் மீதான ஹாரிஸ் பிரச்சாரத்தின் மௌனம் (இதற்கு ஜனநாயகக் கட்சி முழுப்பொறுப்பையும் ஏற்கிறது) வரலாற்றாசிரியர்களால் மீண்டும் உருவாக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஜனநாயக சொர்க்கத்தில் நரக இடைச்செருகலான ட்ரம்பின் ஆளுமையைத் தவிர, வரலாற்றாசிரியர்கள் அவரது அரசியல் உயர்வுக்கான காரணங்களைப் பற்றி எந்த பகுப்பாய்வையும் வழங்கவில்லை. 70 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் அவருக்கு ஏன் வாக்களிப்பார்கள் என்பதை விளக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
இந்த வரலாற்றாசிரியர்கள் ஒருபோதும் முக்கியமான கேள்வியை முன்வைக்க மாட்டார்கள்: ட்ரம்பிசம் மற்றும் பாசிச MAGA இயக்கத்தின் நிகழ்வுக்கு அடிப்படையான புறநிலை நிலைமைகள் என்ன? தேர்தல் வாக்குகள் எப்படி ஜனநாயகத்தை அழிவிலிருந்து காப்பாற்றும்? ட்ரம்ப் தேர்தல் வாக்குப் பெரும்பான்மையைப் பெறத் தவறினால், மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் உணரும் ஆழமான வேரூன்றிய கோபமும் விரக்தியும் கரைந்து விடுமா? தெற்கு அடிமை உரிமையாளர்கள் 1860 தேர்தல்களில் தங்கள் தோல்விக்கு 1861 இல் எதிர்ப்புரட்சிக் கிளர்ச்சியை நாடினர். ஜனவரி 6, 2021 அனுபவத்திற்குப் பின்னர், அமெரிக்க ஜனநாயகத்தின் இறுதி தலைவிதி தேர்தல் முடிவால் தீர்மானிக்கப்படும் என்று நம்புவதற்கு அங்கே எந்த காரணமும் இல்லை.
அமெரிக்காவில் ஒரு கணிசமான பாசிச அச்சுறுத்தல் தோன்றுவதற்கான காரணங்கள் குறித்த ஒரு பகுப்பாய்வு இல்லாமல், அதற்கு எதிராக எந்த அக்கறையான மற்றும் வெற்றிகரமான போராட்டமும் இருக்க முடியாது.
வரலாற்றாசிரியர்களின் அறிக்கை கல்வி வட்டங்களில் அரசியல் சிந்தனை என்று கடந்து செல்வதன் திவால்தன்மையைப் பிரதிபலிக்கிறது. ஆனால், இந்த புத்திஜீவித வறுமை வெறுமனே தனிநபர்களின் தோல்வி அல்ல. நிலவும் சமூக ஒழுங்கின் ஆழ்ந்த நெருக்கடி மற்றும் இரண்டு மிக சக்திவாய்ந்த வர்க்கங்களான முதலாளித்துவ வர்க்கத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதலின் இந்த சகாப்தத்தில், வர்க்க சமரசம் மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் பெருமைகள் குறித்த நடுத்தர வர்க்க சித்தாந்தவாதிகளின் பாத்திரம் முக்கியமற்றதாக குறைக்கப்படுகிறது. அவர்களின் அரசியல் பிரமைகள் பொருத்தமற்ற, அபத்தமான தன்மையைப் கொண்டிருக்கின்றன.
தேர்தல் தினத்தின் முடிவு என்னவாக இருந்தாலும், அமெரிக்கா கடுமையான வர்க்க மோதலின் எதிர்காலத்திற்கு முகங்கொடுக்கிறது. பாசிசம் மற்றும் போரின் கொடூரங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு தெளிவான மற்றும் தொலைநோக்கு கொண்ட சோசலிச முன்னோக்கு அவசியப்படுகிறது. அது கல்விக்கூடங்களின் மேடைகளில் இருந்து எழாது, மாறாக தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களது அபிவிருத்தியுடனும் சர்வதேச அளவிலும் நெருக்கமான தொடர்பில், மார்க்சிசத்தின் தத்துவார்த்த அடித்தளங்களின் மீது தன்னை அடித்தளமாகக் கொண்ட ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அணிகளில் இருந்து எழும்.