மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இந்த வாரம், ரஷ்யாவிற்குள் நேட்டோவின் நீண்டதூர ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தை அளித்திருந்த அமெரிக்காவும் பிரிட்டனும், அணு ஆயுதங்களை சாத்தியமானளவு பயன்படுத்துவது உட்பட இராணுவ பதிலடி தாக்குதலுக்கு இட்டுச் செல்லும் என்று ரஷ்ய அதிகாரிகள் கூறிய “சிவப்புக் கோட்டை” தாண்டியுள்ளன.
கடந்த ஞாயிறன்று, ஜனாதிபதி ஜோ பைடென் கியேவில் உள்ள உக்ரேனிய ஆட்சிக்கு ரஷ்யா மீது குண்டுவீச ATACMS ஏவுகணைகளைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்தார். இதற்கு பின்னர், இந்த கொள்கைக்காக செப்டம்பர் முதல் வாஷிங்டனை பகிரங்கமாக வற்புறுத்தி வந்த பிரிட்டனின் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர், லண்டன் ரஷ்யாவை அதன் Storm Shadows ஏவுகணைகள் மூலம் குண்டுவீச அனுமதிக்கும் என்று குறிப்பிட்டார். இதன் பின்பு, கீயேவ் கடந்த செவ்வாயன்று ATACMS ஏவுகணைகளையும், புதன்கிழமை Storm Shadows ஏவுகணைகளையும் ரஷ்யா மீது ஏவியுள்ளது.
ஐரோப்பாவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே எச்சரிக்கை மணிகள் ஒலிக்கப்பட வேண்டும். இன்னொரு நாட்டின் மீது குண்டு வீசுவது ஒரு போர் நடவடிக்கையாகும். போர் அறிவிக்கப்பட்டிருக்கிறதோ அல்லது இல்லையோ, உலகின் பிரதான அணுஆயுத சக்திகளுக்கு இடையே ஒரு போர் நிலை இருந்து வருகிறது.
இந்த ஆத்திரமூட்டும் தாக்குதல்களுக்கு ரஷ்ய அரசாங்கம் அதிகரித்தளவில் இராணுவ ரீதியிலான பதிலடி குறித்த அப்பட்டமான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. போரின் விளிம்பில் இருந்து பின்வாங்குவதற்குப் பதிலாக, வாஷிங்டனும் ஐரோப்பாவில் உள்ள அதன் நேட்டோ கூட்டாளிகளும் ரஷ்யா மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து விரிவாக்கி வருகின்றன.
ரஷ்யா மீது குண்டுவீசுவதில் இருந்து அணுஆயுத போர் அபாயம் அவரைத் தடுத்து நிறுத்தாது என்பதை ஸ்டார்மர் தெளிவுபடுத்தியுள்ளார். ரஷ்யா மீது குண்டுவீச மற்ற நாடுகளுக்கு ஆயுதமளிக்கும் பிரிட்டன் போன்ற அணுஆயுதமேந்திய நாடுகள் மீது, ரஷ்ய அணுஆயுத தாக்குதல்களை அனுமதிக்கும் கிரெம்ளினின் அணுஆயுத கோட்பாட்டில் செப்டம்பரில் அறிவித்த மாற்றம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. ரஷ்ய பிராந்தியத்தின் மீதான தாக்குதல்களுக்கு அது பதிலடி கொடுக்கும் என்ற அதன் எச்சரிக்கைகளை “பொறுப்பற்ற வாய்வீச்சு” என்று அழைத்த ஸ்டார்மர், அணுஆயுதங்களைக் கொண்டு விடையிறுப்பதற்கான ரஷ்ய அச்சுறுத்தல்கள் என்பன “உக்ரேனுக்கான எங்கள் ஆதரவைத் தடுத்து நிறுத்தப் போவதில்லை” என்று அறிவித்தார்.
ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேயர்பொக் ரஷ்யா மீதான குண்டுவீச்சுக்கு ஒப்புதல் அளித்ததுடன், அணுஆயுத போர் குறித்த எச்சரிக்கைகளை நிராகரித்தார். “எத்தகைய புதிய விஷயங்களை மீண்டும் மீண்டும் எக்காளமிட்டாலும் நாங்கள் பயப்பட மாட்டோம்” என்றார். பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன்-நோயல் பரோட் கூறுகையில், ரஷ்யா மீது குண்டுவீசுவது ஏற்கனவே “நாங்கள் பரிசீலித்துவரும் ஒரு தெரிவாக உள்ளது”, மேலும், ரஷ்யா மீது அமெரிக்கா-இங்கிலாந்தின் குண்டுவீச்சில் “புதிதாக எதுவும் இல்லை” என்று கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை ரஷ்யா எடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வியாழனன்று, அது டினிப்ரோ மீது, ஒரு இடைநிலை-தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது. இது, உக்ரேனிய மற்றும் நேட்டோ ஆதாரங்களால் RS-26 Rubezh ஏவுகணையின் “Orestnik” வகையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. பொதுவாக, அத்தகைய ஏவுகணை நான்கு சுயாதீனமாக சூழ்ச்சி செய்யக்கூடிய அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடியவைகளாகும். மேலும், இவை ஒவ்வொன்றும் ஹிரோஷிமாவை அழித்த அமெரிக்க அணுகுண்டை விட 20 மடங்கு அதிக சக்தி வாய்ந்தவையாகும். 5,800 கி.மீ வரம்புடன், இந்த ஏவுகணையால் ஐரோப்பாவில் எந்த நகரத்தையும் அல்லது எந்த இராணுவத் தளத்தையும் அழிக்க முடியும். ஆனால், அத்தகைய ஆயுதங்கள் இல்லாமல் இருந்த இந்த ஏவுகணையானது, மணிக்கு 12,000 கி.மீ வேகத்தில் அதன் இலக்கான உக்ரேன் ஏவுகணை தொழிற்சாலையை தாக்கி சேதப்படுத்தியது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தேசியளவிலான ஒரு தொலைக்காட்சி உரையில், இந்த தாக்குதல் நேட்டோவுக்கான ஒரு எச்சரிக்கை என்பதை சுட்டிக்காட்டினார். “அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு பதிலடியாக, இந்த ஆண்டு நவம்பர் 21 அன்று, ரஷ்ய ஆயுதப்படைகள் ஒருங்கிணைந்த தாக்குதலை மேற்கொண்டன. … போர் நிலைமைகளில், சமீபத்திய ரஷ்ய இடைநிலை ஏவுகணை அமைப்புகளில் ஒன்றின் சோதனை நடத்தப்பட்டது.
“எங்கள் இராணுவ நிலைகளுக்கு எதிராக, அவர்களின் ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் இராணுவ நிறுவல்களுக்கு எதிராக எங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த எங்களுக்கு உரிமை உண்டு. “நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்திற்கும் தயாராக இருக்கிறோம். யாருக்காவது இதில் சந்தேகம் இருந்தால், அவர்கள் இதனை செய்யக்கூடாது. அதற்கு எப்போதும் ஒரு பதில் இருக்கும்” என்று புட்டின் தொடர்ந்து கூறினார்.
ரஷ்யாவின் அறிக்கைகளை முட்டாள்தனமாக நிராகரிப்பது முற்றிலும் பொறுப்பற்றதாகும். எந்த வடிவத்தில் இருந்தாலும், நேட்டோ சக்திகளின் முன்பினும் அதிக ஆக்ரோஷமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு ரஷ்யா பதிலடி கொடுக்கும்.
நேற்று, ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஸகரோவா போலந்தில் உள்ள ரெட்சிகோவோவில் உள்ள அமெரிக்க ஏவுகணைத் தளத்தை “அப்பட்டமான ஆத்திரமூட்டல்” என்று கண்டித்துள்ளார். இந்த தளம் “சாத்தியமானளவு அழிப்பதற்குரிய முன்னுரிமை இலக்காக” அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த போர் விரிவாக்கத்தின் அபாயகரமான தர்க்கத்தை விளக்கி, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் வியாழனன்று X இல் பதிவிட்ட ஒரு கருத்துரையில் பின்வருமாறு எழுதினார்:
ரஷ்யாவிற்கு எதிராக ஸ்டோர்ம் ஷேடோ (Storm Shadow) ஏவுகணைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது கேள்விக்கு இடமின்றி, பிரிட்டனுக்கு எதிராக நேரடியாக பதிலடி தாக்குதலை மேற்கொள்ளும் என்று புட்டின் ஸ்டார்மரை எச்சரித்தாலும், பிரிட்டன் மேலும் தனது தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை.
இந்தக் கட்டத்தில், ரஷ்யா அநேகமாக ஒரு குறிப்பிடத்தக்க இராணுவ பதிலடி நடவடிக்கையைக் கொண்டு தாக்குதலை மேற்கொள்ளும் என்று அமெரிக்காவும் நேட்டோவும் நம்ப வேண்டும். ஆனால் அத்தகைய பதிலடியைத் தவிர்ப்பது இனியும் தீர்மானகரமான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்க போவதில்லை. அமெரிக்காவும் முக்கிய மேற்கத்திய சக்திகளும் ரஷ்யாவின் தோல்விக்கு உறுதிபூண்டுள்ளன. அவர்கள் பின்வாங்கப் போவதில்லை. புட்டின் தனது “மேற்கத்திய பங்காளிகளுடன்” நேரடி மோதலைத் தவிர்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்திருப்பதாக இப்போது தோன்றுகிறது.
சூழ்நிலை அசாதாரணமாக அபாயகரமானதாக உள்ளது — நாம் ஒரு பேரழிவுகரமான போரின் விளிம்பில் நிற்கிறோம் என்பது பொது மக்களுக்கு தெரியாது என்ற உண்மையால் இந்த அபாயம் தீவிரப்படுத்தப்படுகிறது.
என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தொழிலாள வர்க்கத்திற்கு தெளிவாக விளக்குவதும், ஏகாதிபத்திய போர் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தை அபிவிருத்தி செய்வததற்கும் எச்சரிக்கை ஒலி எழுப்புவது அவசியமாகும்.
2022 ஆம் ஆண்டில், உக்ரேனுக்கு டாங்கிகளை அனுப்பலாமா என்று பைடென் விவாதித்தபோது, “பிரளயம் வெடிப்பதற்கான” ஆபத்து குறித்து அவர் எச்சரித்தார். புட்டினை தனக்கு “ஓரளவுக்கு நன்றாக” தெரியும் என்றும், புட்டின் “தந்திரோபாய அணுவாயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து பேசும்போது அவர் நகைச்சுவையாக பேசவில்லை” என்றும் அவர் தெரிவித்தார். இப்போது, புட்டினின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களையும் மீறி, பைடென் ரஷ்யா மீது குண்டுவீச ஒப்புதல் அளித்துள்ளார்.
ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக பைடெனுடன் சேர்ந்து ரஷ்யாவுடன் சண்டையிட்டு வருகின்ற ஐரோப்பிய சக்திகள், கியேவுக்கான அமெரிக்க இராணுவ ஆதரவைக் குறைப்பதற்கும் அமெரிக்காவிற்கான ஐரோப்பிய ஏற்றுமதிகளைத் தடுக்க சுங்கவரிகளைத் திணிப்பதற்குமான ட்ரம்பின் அச்சுறுத்தலால் கவலை கொண்டுள்ளன. இந்த குளிர்காலத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் செய்ததைப் போல, எஸ்தோனிய வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கஸ் சஹ்க்னா, உக்ரேனில் ஐரோப்பாவின் “கால்களை தரையில் பதிக்க” அழைப்பு விடுத்துள்ளார். அவர்கள் தங்கள் சொந்த ஏகாதிபத்திய நலன்களை சுயாதீனமாக உறுதிப்படுத்தும் வகையில், போரை உக்கிரப்படுத்த அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
மூன்றாம் உலகப் போரின் பாகமாக, ரஷ்யாவுக்கு எதிராக சூழ்ந்து கொண்டிருக்கிற போர் ஒரு கொள்ளையடிக்கும் போராகும். “உக்ரேனில் நடக்கும் போர் மூலப்பொருட்களுக்கான போராகும் என்று ஜேர்மனியின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு நிறுவனம் (GTAI) கூறுகிறது. உக்ரேனில் பாரியளவிலான இரும்புத் தாது, டைட்டானியம் மற்றும் லித்தியம் ஆகிய கனிம வளங்கள் இருப்பதை GTAI சுட்டிக்காட்டுகிறது. இவற்றில் சில இப்போது ரஷ்யாவால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
அவர்கள் ரஷ்யாவை அடிபணிய வைக்க முடிந்தால், அத்தியாவசிய கனிம வளங்கள் மட்டுமல்ல, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றிலும் இன்னும் பெரிய செல்வம் அவர்களுக்குச் செல்லும். மலிவான ரஷ்ய எரிசக்தியை வாங்குவதை நிறுத்தும் அவர்களின் முடிவு ஐரோப்பாவை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. அப்போதிருந்து, ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, தொழில்துறை மின்சார விலைகள் ஜேர்மனியில் 280 சதவீதமும், பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்தில் 200 சதவீதக்கும் அதிகமாகவும், ஸ்பெயினில் 103 சதவீதமாகவும் உயர்ந்துள்ளன. இந்த எரிசக்தி விலை உயர்வுகள் ஐரோப்பிய உற்பத்திப் பொருட்களை உலகளவில் போட்டியிட முடியாததாக ஆக்கியுள்ளதால், ஐரோப்பா தொழிற்சாலைகள் மற்றும் வேலைகளில் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, இந்த ஆண்டின் தொடக்கத்தில், போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரேஜ் டூடா ரஷ்யாவை நசுக்கவும், அதை 200 அதிகாரமற்ற இனவழி நாடுகளாகப் பிரிக்கவும் அழைப்பு விடுத்தார். இன்றைய உலகில் ரஷ்யாவுக்கு “இனி இடமில்லை” என்று கூறி, அவர் ஆத்திரமூட்டும் வகையில் இதனை அறிவித்தார்:
ரஷ்யா பெரும்பாலும் ஒரு நல்ல காரணத்திற்காக நாடுகளின் சிறை என்று அழைக்கப்படுகிறது. இது 200 க்கும் மேற்பட்ட இனக்குழுக்களின் தாயகமாக உள்ளது… ரஷ்யா இன்று உலகின் மிகப்பெரிய காலனித்துவ சாம்ராஜ்யமாக உள்ளது. இது ஐரோப்பிய சக்திகளைப் போலல்லாமல் ஒருபோதும் காலனித்துவமயமாக்கல் செயல்முறைக்கு உட்பட்டதில்லை. மேலும், அதன் கடந்த காலத்தின் பேய்களை ஒருபோதும் சமாளிக்க முடியவில்லை. நவீன உலகில் காலனியாதிக்கத்திற்கு இனி இடமில்லை.
ஐரோப்பிய முதலாளித்துவத்தின் போர் விரிவாக்கத்திற்கு உந்தும் மற்றொரு காரணி வர்க்கப் போராட்டத்தின் தீவிரம் ஆகும். பல தசாப்த கால வங்கிப் பிணையெடுப்புகளுக்குப் பின்னர் பாரிய கடனில் மூழ்கியுள்ள ஐரோப்பிய அரசுகள் ஒவ்வொன்றும் முக்கிய சமூகத் திட்டங்களுக்கு பத்து பில்லியன் யூரோ வெட்டுக்களைத் திட்டமிட்டு, அவற்றை இராணுவச் செலவினங்களுக்குள் திருப்பிவிடுகின்றன. அதே நேரத்தில், வேலை வெட்டுக்கள் மீது தொழிலாள வர்க்கத்தின் கோபம் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இடம்பெற்ற பாரிய வேலைநிறுத்தப் போராட்டங்களுக்குப் பிறகு, ஐரோப்பிய அரசாங்கங்கள் தொழிலாளர்கள் மத்தியில் ஆழ்ந்த செல்வாக்கற்றதாகவும், வெறுக்கத்தக்கதாகவும் ஆகியுள்ளன.
ரஷ்ய இராணுவ தாக்குதல்கள், சமூகத்தை இராணுவமயமாக்குவதற்கும், வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாக்குவதற்கும், கட்டாய இராணுவ சேவையை மீண்டும் ஸ்தாபிப்பதற்கும், உழைக்கும் மக்களின் பரந்த பெருந்திரளினரால் நிராகரிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர்க் கொள்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கும் ஒரு சாக்குபோக்காக சேவையாற்றும் ஒரு உத்தியோகபூர்வ போர் அறிவிப்பை அனுமதிக்கக் கூடும்.
உக்ரேன், ரஷ்யா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களிடையே ஏகாதிபத்திய போருக்கு ஆழமாக வேரூன்றிய எதிர்ப்பு, அவர்களின் சொந்த முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிரான போராட்டத்தில் செயல்படுத்தப்பட்டு அணிதிரட்டப்பட வேண்டும்.