மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் குறுகிய, ஆனால் தீர்க்கமான வெற்றியை அடைந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், தனது அமைச்சரவை மந்திரிகள், துணை மந்திரிகள், வெள்ளை மாளிகையின் அனைத்து உயர்மட்ட ஊழியர்கள் மற்றும் பல உயர்மட்ட அதிகாரிகள் உட்பட, வரவிருக்கும் அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு கிட்டத்தட்ட ஒவ்வொரு வேட்பாளரையும் விரைவாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.
ட்ரம்பின் தெரிவுகள், நிதிய தன்னலக்குழுவைக் கொண்டுள்ள வரவிருக்கும் அரசாங்கத்தின் அடிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துகின்றன. இது வெறும் சொற்றொடர் அல்ல. மாறாக இது, பில்லியனர் ட்ரம்பின் உதவியாளர்கள், கூட்டாளிகள், மற்றும் ஒரு பில்லியனரும் ஃபாக்ஸ் நியூஸின் உரிமையாளருமான மீடியா ஜம்பவான் ரூபேர்ட் முர்டோக், உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலோன் மஸ்க் உட்பட ட்ரம்ப் மற்றும் முர்டோக்குடன் இணைந்த அரை டசின் பில்லியனர்களைக் கொண்ட அரசாங்கத்தின் நேரடி விளக்கக் காட்சியாக இருக்கிறது.
புதிய நிர்வாகத்தின் மிக முக்கியமான அம்சமானது தீவிர தனிமனிதவாதமாகும். ட்ரம்ப் மீதான தனிப்பட்ட விசுவாசம், பெயரைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் பெருந்தலைவர் என்ற கொள்கை போன்றவை, பதவிகளுக்கான தேர்வுக்கு முக்கிய அளவுகோல்களில் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக, வெள்ளை மாளிகை மற்றும் நீதித் துறையின் பதவிகளை, ட்ரம்ப் தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஆயுதமாகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
நீதித்துறையில் முதல் நான்கு பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் அனைவரும் ட்ரம்பின் முன்னாள் அல்லது தற்போதைய சட்ட பிரதிநிதிகள் ஆவர். முன்னாள் புளோரிடா அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி, 2020 ஆம் ஆண்டில் முதல் குற்றச்சாட்டு விசாரணையின் போது ட்ரம்ப்பிற்கு வழக்கறிஞராக இருந்தவர் ஆவர். இவர், ட்ரம்பின் ஆரம்ப தேர்வான மாட் கெட்ஸுக்குப் பதிலாக அமெரிக்க அட்டர்னி ஜெனரலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 6, 2021 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் இருந்து உருவான ஃபெடரல் வழக்கில் ட்ரம்ப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திய டோட் பிளான்ச் மற்றும் எமில் போவ் ஆகியோர் அட்டர்னி ஜெனரல் பாம் போண்டியின் இரண்டு முக்கிய பிரதிநிதிகளாக உள்ளனர் என்று கூறப்படுகிறது. சொலிசிட்டர் ஜெனரல் ஜோன் பாயர் கடந்த கோடையில் உச்ச நீதிமன்றத்தில் டரம்ப் தரப்பில் வாதிட்டார். இதன் விளைவாக, ட்ரம்ப் எதிர் அமெரிக்கா வழக்கில் ஒரு அமெரிக்க அதிபருக்கு எந்தவிதமான வன்முறை, சட்டவிரோதமான அல்லது அரசியலமைப்பிற்கு விரோதமான எந்த உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கும் வழக்குத் தொடுப்பதில் இருந்து முழுமையான விலக்கு உள்ளது என்ற மோசமான முடிவு ஏற்பட்டது. ட்ரம்ப் ஜனவரி 20 அன்று பதவியேற்றவுடன் அந்த நோய் எதிர்ப்பு சக்தி என்ற போர்வையால் போர்க்கப்படுவார்.
வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ட்ரம்பின் ஜனாதிபதி பிரச்சாரத்தின் மேலாளர் சூசி வைல்ஸ் தலைமை தாங்குகிறார். குடியேற்ற எதிர்ப்பு பாசிஸ்ட் ஸ்டீபன் மில்லர் துணைத் தலைவராக உள்ளார். வில் ஷார்ஃப் வெள்ளை மாளிகை செயலாளராக இருந்து, ஆவணங்களை கையாளுவார். அதே சமயம் ட்ரம்பை மகிமைப்படுத்தும் புத்தகங்களை வெளியிடுவதில் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியரின் பங்குதாரரான செர்ஜியோ கோர், கீழ் நிலை பதவிகளுக்கான நியமனங்களை சரிபார்க்கும் பொறுப்பான வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக இருப்பார்.
மேலும், இரண்டு பாசிஸ்டுகள் செல்வாக்கு மிக்க வெள்ளை மாளிகையின் கொள்கை நிலைகளை வகிப்பார்கள். முதலாவது ட்ரம்ப் நிர்வாகத்தில் புலம்பெயர்ந்தோர்களை கைது செய்து, அவர்களின் குடும்பங்களை பிரிக்கும் கொள்கையின் சூத்திரதாரியான டாம் ஹோமன் “எல்லைப் பேரரசராக” இருப்பார். ஹங்கேரிய பாசிச ஆர்டர் ஆஃப் தி வைடெஸின் உறுப்பினரும், மிகவும் தீவிரமானவராக கருதப்பட்டவருமான செபாஸ்டியன் கோர்கா, 2017 இல் முதலாவது ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது, அவர் இரண்டாவது ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகையில் “பயங்கரவாத ஆலோசகராக” இருப்பார்.
இதர நான்கு அமைச்சரவை நியமனங்களில் உள்ளவர்கள், பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களாக இருந்ததுடன், அவர்கள் 2020 செனட் விசாரணையில் பதவி நீக்கத்திற்கு எதிராக ட்ரம்பின் பாதுகாப்புக் குழுவில் பணியாற்றியவர்கள் ஆவர். நியூ யோர்க்கின் எலிஸ் ஸ்டெபானிக் ஐ.நாவின் தூதராகவும், டெக்சாஸின் ஜோன் ராட்க்ளிஃப் CIAயின் இயக்குநராகவும், நியூ யோர்க்கின் லீ செல்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் (EPA) நிர்வாகியாகவும், ஜோர்ஜியாவைச் சேர்ந்த டக் காலின்ஸ் படையினர் விவகாரத் துறையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவே முதல் என்ற கொள்கை நிறுவனத்தில் இருந்து கேபினெட் அமைச்சரவை மற்றும் துணை அமைச்சரவை அதிகாரிகளின் முழுக் குழுவும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவே முதல் கொள்கை நிறுவனத்தில் இருந்து, மல்யுத்த சார்பு லிண்டா மக்மோஹன் இணைத் தலைவராகவும், கல்விச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மற்றும் வெள்ளை மாளிகையின் முன்னாள் உள்நாட்டு கொள்கை ஆலோசகரான ப்ரூக் ரோலின்ஸ் என்பவரை, விவசாய அமைச்சராக ட்ரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார்.
ட்ரம்ப் விசுவாசிகளுடன் ஒன்றுடன் ஒன்று சேரும் அதே வேளையில், தி ஃபாக்ஸ் நியூஸ் ஊழியர்களும் பண்டிதர்களும் சமமான எண்ணிக்கையில் உள்ளனர். பென்டகனின் தலைவராக பரிந்துரைக்கப்பட்ட பீட் ஹெக்செத் போன்ற நீண்டகால பேச்சு நிகழ்ச்சி “தொகுப்பாளர்களும்” இதில் அடங்குவர். முன்னாள் ஜனநாயகக் கட்சிப் பெண்மணியும் ட்ரம்ப்பின் வழக்கறிஞருமான துளசி கப்பார்ட், தேசிய புலனாய்வு இயக்குநராக பரிந்துரைக்கப்பட்டார். முன்னாள் ஆர்கன்சாஸ் கவர்னர் மைக் ஹக்கபி, இஸ்ரேலுக்கான தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் ட்ரம்ப் வெள்ளை மாளிகை உதவியாளர் ஸ்காட் டர்னர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் காங்கிரஸ்காரரும், ரியாலிட்டி டிவி “நட்சத்திரமான” சீன் டஃபி, போக்குவரத்துத் துறையின் தலைவராகவும், டாக்டர் ஜானெட் நெஷெய்வட் அறுவை சிகிச்சை நிபுணராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனநாயகக் கட்சி மற்றும் தடுப்பூசி எதிர்ப்பு சதி கோட்பாட்டாளரான ரொபர்ட் எஃப் கென்னடி ஜூனியரை சுகாதார மற்றும் மனிதவள துறையின் தலைவராகத் ட்ரம்ப் தேர்ந்தெடுத்தார். குடியரசுக் கட்சியை ஆதரிப்பதற்காக, தனது சுயேட்சை ஜனாதிபதி பிரச்சாரத்தை கைவிட்டதற்கான வெகுமதியாக இந்த பதவியை ட்ரம்ப் அவருக்கு அளித்தார். சுகாதாரப் பாதுகாப்பில் உள்ள இதர உயர் பதவிகளும், பொது சுகாதாரத்தின் அதே தீவிர எதிரிகளுக்கு வழங்கப்படுகின்றன. பிரபல தொலைக்காட்சி மருத்துவரும், தோற்கடிக்கப்பட்ட குடியரசுக் கட்சியின் செனட் வேட்பாளருமான மெஹ்மெட் ஓஸ், மருத்துவ மற்றும் மருத்துவ சேவைகளுக்கான மையங்களின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவிட் முடக்கம் மற்றும் முகக் கவசம் அணிவதுக்கு எதிரியான டாக்டர் மார்ட்டின் மகரி உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தை இயக்க, கருக்கலைப்பு எதிர்ப்பு மருத்துவர் மற்றும் குடியரசுக் கட்சியின் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் டேவ் வெல்டன் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களுக்கு தலைமை தாங்குகிறார்.
கோவிட் 19 கொள்கையை “கிழித்தெறிய வேண்டும்” என்ற முன்னணியில் இருந்து வக்காளத்து வாங்குபவரும், பொது-சுகாதாரத்திற்கு எதிரான கிரேட் பாரிங்டன் பிரகடனத்தின் இணை ஆசிரியருமான டாக்டர் ஜே. பட்டாச்சார்யா தேசிய சுகாதார நிறுவனங்களை நடத்த தேர்வு செய்யப்படுவார் என்று பல ஊடக ஆதாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
இந்த புள்ளிவிபரங்கள் கருத்தியல் ரீதியாக பொது சுகாதாரத்தை அழிப்பதில் இவர்கள் உறுதியாக இருந்தாலும், பெரும் பணக்காரர்களின் இலாப நலன்களில் வேரூன்றிய இந்த அழிவுகரமான நடவடிக்கைக்கு, ஆழமான சமூகக் காரணங்கள் உள்ளன. அமெரிக்க சமுதாயத்தை ஆளும் ஒரு சதவீதத்தில் நூற்றில் ஒரு பங்கினர், சமூக பாதுகாப்பு, மருத்துவம், மருத்துவ உதவி, கல்வி, உணவு முத்திரைகள் மற்றும் உழைக்கும் மக்கள், அவர்களது குழந்தைகள் மற்றும் அவர்களது ஓய்வுபெற்ற பெற்றோர்களுக்கான பிற சேவைகளுக்கான மத்தியிலுள்ள கூட்டாட்சியின் அனைத்து செலவினங்களையும் வெட்டித்தள்ளி, தங்கள் பாக்கெட்டுகளுக்குள் செல்வத்தை செலுத்துவதை இவை குறிக்கின்றன.
இந்த சமூக அடுக்குகளை கொண்டுள்ள ட்ரம்பின் அமைச்சரவை, 300 பில்லியன் டாலர்கள் தற்போதைய மதிப்புள்ள சொத்து மதிப்பைக் கொண்டுள்ள பணக்கார தனிநபரான எலோன் மஸ்க் தலைமையில், அரை டசின் பில்லியனர்களால் நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. எலோன் மஸ்க்கின் பல பில்லியன்கள் சொத்துக்கள் அரசாங்க ஒப்பந்தங்கள் அல்லது மானியங்களைச் சார்ந்திருக்கின்றன. மஸ்க், ஜென்-டெக் மற்றும் பில்லியனர் விவேக் ராமசுவாமி ஆகியோர் ட்ரம்பின் அரசாங்க செயல்திறன் துறையை உருவாக்க முன்வந்துள்ளனர். இதன் குறிக்கோளானது கூட்டாட்சி செலவினங்களில் $2 டிரில்லியன் டாலர்களை (பட்ஜெட்டில் கால் பங்கிற்கு மேல்) வெட்டித்தள்ளி நூறாயிரக்கணக்கான கூட்டாட்சி வேலைகளை நாசமாக்குவதாகும்.
முக்கிய கருவூலச் செயலர் பதவி ஒரு பில்லியனரால் நிரப்பப்படும்: வீட்டு அடமான முதலாளியும், முன்னாள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான ஸ்காட் பெசென்ட், மஸ்க் மற்றும் இன்னும் சக்திவாய்ந்த வோல் ஸ்ட்ரீட்டின் முதலாளிகளுக்கு இடையிலான மோதலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டார். “அவர்கள் (வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் தலையங்கப் பக்கம் வெளிப்படுத்தியபடி) பொருளாதாரக் கொள்கையை அதன் சொந்த நலனுக்காக சீர்குலைப்பதை எதிர்த்தனர். … திரு ட்ரம்ப் வெற்றிபெற வேண்டுமானால், பொருளாதாரக் கொள்கையில் நிலையான, திறமையான கைகள் தேவை” என்று ஜேர்னல் குறிப்பிட்டிருந்தது.
குறிப்பாக, வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம், 2025 இன் தொடக்கத்தில் காலாவதியாகும் பணக்காரர்களுக்கான 2017 வரிக் குறைப்புகளை நீட்டிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஜேர்னல் அக்கறையுடன் தெரிவித்தது. மஸ்க் முன்மொழிந்த கருவூலத் தலைவரும், போட்டியாளருமான பில்லியனர் ஹோவர்ட் லுட்னிக், தனது கேன்டர் ஃபிட்ஸ்ஜெரால்ட் தரகு நிறுவனம் மூலம் கிரிப்டோ நாணய முதலீட்டை ஊக்குவிப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் என்ற கவலையும் இருந்தது. லுட்னிக்கிற்கு ஆறுதல் பரிசாக வர்த்தகத் துறை வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் உள்ள இதர கோடீஸ்வரர்களில் எரிசக்தி துறைக்கு ஜம்பவான் கிறிஸ் ரைட் நியமிக்கப்பட்டுள்ளார் இவர், “காலநிலை நெருக்கடி எதுவும் இல்லை” என்று கடந்த ஆண்டு அறிவித்தவராவார். தகவல் தொழில்நுட்ப (IT) கோடீஸ்வரரும், வடக்கு டகோட்டா கவர்னருமான டக் பர்கம், உள்துறைக்கும் மற்றும் கல்வித் துறைக்கு லிண்டா மக்மஹோனும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் வரலாற்றிலும் அல்லது உலகின் எந்த நாட்டின் நவீன வரலாற்றிலும், ஒரு அரசாங்கம் பிரமாண்டமான மற்றும் முற்றிலும் பெரும் ஒட்டுண்ணிச் செல்வத் தட்டுக்களின் பிடியில் இருப்பதற்கான முன்மாதிரி இல்லை. உலக சோசலிச வலைத் தளம் ட்ரம்பின் தேர்தல் வெற்றி பற்றிய அதன் ஆரம்ப பகுப்பாய்வில் விளக்கியது போல், “இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகம் அதிகாரத்திற்கு வருவது அமெரிக்காவில் நிலவும் உண்மையான சமூக உறவுகளுடன் பொருந்தக்கூடிய அமெரிக்க அரசியல் மேற்கட்டுமானத்தின் வன்முறை மிகுந்த மறுசீரமைப்பை பிரதிபலிக்கிறது.”
இது ஒரு வர்க்கக் கேள்வியே அன்றி வெறும் ட்ரம்பின் விளைபொருளல்ல என்பது, முதலாளித்துவ இரு-கட்சி அமைப்பின் கட்டமைப்பிற்குள் பெயரளவிலான எதிர்ப்பாக இருந்துவரும் ஜனநாயகக் கட்சியின் பதிலில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகத்திற்கு “மென்மையான” மாற்றத்தை உறுதியளிப்பதில் ஜனாதிபதி ஜோ பைடென் தனது முதுமை மற்றும் அடிமைத்தனத்தை ஒருங்கிணைத்திருந்தாலும், காங்கிரஸிலுள்ள ஜனநாயகக் கட்சியினர் தமது மனநிறைவை திருப்தியுடன் பரப்பி வருகின்றனர்.
ஜனநாயகக் கட்சியின் நியூ யோர்க் பிரதிநிதியான ரொம் சுயோஸி, CNN உடன் சனிக்கிழமை பேசுகையில், அமெரிக்கர்கள் வரவிருக்கும் நிர்வாகம் குறித்து “அமைதியாக” இருக்க வேண்டும் என்றார். மேலும், “ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்திலும் வெடித்து சிதறினால், நீங்கள் ஒருபோதும் முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது” என்று குறிப்பிட்ட அவர், “நாங்கள் எங்கள் போர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்றார்.
பதவியிலிருந்து வெளியேறும் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பீட் புட்டிகீக் வியாழன் அன்று இடம்பெற்ற ஜனநாயகக் கட்சி கூட்டத்தில், “நாம் காணும் மோசமான காரியங்களைக் கண்டு மயங்க முடியாது” என்று கூறினார். மேலும், “நம்மை அதிர்ச்சியடையச் செய்யும் நோக்கத்துடன் துல்லியமாக செய்யப்படும் சில விஷயங்களுக்கு அதிர்ச்சியுடன் எதிர்வினையாற்ற முனைவோம். அதிர்ச்சியின் மூலம் நாம் மிக விரைவாக வெளியேற வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த அறிவுரையின் அர்த்தம் என்னவென்றால், ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை பாரிய சுற்றி வளைத்தல், சிறைவாசம் மற்றும் நாடுகடத்தலுக்கு இலக்காகிக் கொண்டிருப்பதை புறக்கணிக்க விரும்புகிறார்கள் என்பதாகும். ட்ரம்ப் அமெரிக்காவில் ஒரு சர்வாதிகார ஆட்சியை அமைக்கத் தொடங்கும் போது, அவர்கள் “தங்கள் போர்களைத் தேர்ந்தெடுத்து நிற்க விரும்புகிறார்கள்”. அல்லது ஏபிசியின் “திஸ் வீக்கில்” ஞாயிறு அன்று தோன்றி, செனட்டர் ஆமி க்ளோபுச்சார் கூறியது போல், “அவர்களுக்கு வாக்குகள் உள்ளன. … இறுதியில், அமெரிக்க செனட்டில் உள்ள குடியரசுக் கட்சியினர் தான் இவர்களை அந்த இடத்தில் வைக்க வேண்டுமா என்பதை முடிவு செய்வார்கள்”.
ஜனநாயகக் கட்சியின் ஒரே அக்கறை அதன் போர்க் கொள்கையை, குறிப்பாக, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரைப் பாதுகாப்பதுதான். அதன் இறுதி வாரங்களில், ரஷ்யாவிற்குள் இருக்கும் தொலைதூர நகரங்களை குறிவைப்பதற்கு, அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேன் பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்துடன், அணுஆயுத யுத்த அச்சுறுத்தலை மேற்கொண்டுவரும் மோதலின் ஒரு பெரிய விரிவாக்கத்தில் பைடென் நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது.
பெருநிறுவன ஊடகங்களைப் பொறுத்தவரை, புதிய நிர்வாகத்திற்கான பிரச்சாரக் குரலாகவும், மன்னிப்புக் கோருபவர்களாகவும், அவை ஏற்கனவே தமது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளன. தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த போதிலும், ஜனநாயகக் கட்சி சார்பு பிரிவின் சொற்களஞ்சியத்தில் இருந்து “பாசிஸ்ட்” என்ற வார்த்தை கைவிடப்பட்டுள்ளது. ட்ரம்ப், தனது புதிய ஆட்சியில் உயர் பதவிகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக பாசிஸ்டுகளை நியமிப்பதால் இது மிகவும் குறிப்பிடத்தக்கது.
வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் மற்றும் அதன் நடவடிக்கைகளுக்கான எதிர்ப்பானது, பெருநிறுவன அரசியல் கட்டமைப்பிற்குள் இருந்து வராது. மாறாக, கீழே இருந்து தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வரும். அமெரிக்க ஆளும் வர்க்கம் திணிக்க உறுதியாக இருக்கும் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள், சமூக சேவைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றின் அழிவை கோடிக்கணக்கான தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால், வெடித்தெழும் வர்க்கப் போர்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளன.