மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஜூலை 2024 தேர்தல்களுக்குப் பின்னர் அமைக்கப்பட்ட பிரெஞ்சு பிரதம மந்திரி மிஷேல் பார்னியேரின் (Michel Barnier) அரசாங்கமானது, 2025 சிக்கன வரவு-செலவு திட்டக்கணக்கு மீது ஆளும் உயரடுக்கில் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் ஒரு நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. செவ்வாய்கிழமை இரவு, பார்னியே TF1 ன் பிரதான நேர செய்தியில் தோன்றி, அரசியலமைப்பின் ஷரத்து 49.3 ஐப் பயன்படுத்தி, எந்தவொரு வாக்கெடுப்பும் இல்லாமல் நாடாளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டத்தை திணிக்க அச்சுறுத்தியுள்ளார். தேசிய நாடாளுமன்றம் அவரது அரசாங்கத்தைக் கண்டனம் செய்து கவிழ்ப்பதன் மூலமாக எதிர்வினையாற்றுமானால் “நிதியியல் சந்தைகளில் பல கொந்தளிப்புகள்” ஏற்படும் என்று அவர் எச்சரித்தார்.
ஜோன்-லூக் மெலோன்சோனின் (Jean-Luc Mélenchon) புதிய மக்கள் முன்னணி கூட்டணி (NFP- New Popular Front ) மற்றும் மரின் லு பென்னின் (Marine Le Pen) அதிவலது தேசிய பேரணி (RN - National Rally) இரண்டுமே 40 பில்லியன் யூரோ சமூக வெட்டுக்களைத் திணிக்கும் வரவு-செலவு திட்டக்கணக்கு சம்பந்தமாக, அரசாங்கத்தைக் கண்டிக்க அச்சுறுத்தி உள்ளன. பிரெஞ்சு அரசு ஏற்கனவே சட்டத்தை மீறியுள்ளது: ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 1-ம் தேதிக்குள் அது செய்யத் தவறிய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், NFP மற்றும் RN ஆகிய இரண்டு கட்சிகளும் அரசாங்கத்தை தணிக்கை செய்ய வாக்களிக்குமானால், 2025 ஆம் ஆண்டு தொடங்கும் போது, முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரான்சில் வரவு செலவு திட்டம் இடம்பெற முடியாத சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.
2025 சமூக பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டம் டிசம்பர் 2 அன்றும், 2024 ஆம் ஆண்டின் இறுதி வரவு-செலவுத் திட்டம் டிசம்பர் 4 ஆம் தேதியும், முழு 2025 வரவு-செலவுத் திட்டக்கணக்கும் டிசம்பர் 18 அன்றும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பார்னியே அரசாங்கத்திற்கு எதிரான கண்டன வாக்கெடுப்பு இரண்டு நாட்களுக்குப் பின்னர் தேசிய நாடாளுமன்றத்தில் நடத்தப்படலாம்.
பார்னியே அரசாங்கத்தின் வீழ்ச்சி மட்டுமே, பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போரின் கீழ்நோக்கிய சரிவை தடுத்து நிறுத்தப் போவதில்லை. மேலும், பிரான்சின் பாராளுமன்றக் கட்சிகள் நிறுவப்பட்ட ஒழுங்குமுறையின் மீதான வெகுஜன மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்த முற்படவில்லை. மாறாக, பார்னியேரின் வெட்டுக்கள் முதலாளித்துவ வர்க்கத்தை திருப்திப்படுத்தும் அளவிற்கு ஆழமானவை அல்ல. ஆளும் வர்க்கம், தாமதமின்றி விரைவிலோ, தாமதமாகவோ, தொழிலாள வர்க்கத்துடன் வெடிப்பார்ந்த மோதல்களுக்கு தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், அதன் கொள்கைகளை எவ்வாறு மறுமதிப்பீடு செய்வது என்பது குறித்து ஒரு கடுமையான விவாதம் கட்டவிழ்ந்து வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களில் ட்ரம்ப் வெற்றிபெற்றதற்குப் பின்னர், பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ரஷ்யாவுக்கு எதிராகவும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் போர்ப்பாதையில் உள்ளது. அமெரிக்க அரசாங்க செலவினங்களில் மலைப்பூட்டும் வகையில் 2 ட்ரில்லியன் டாலர்களை வெட்டுவதற்கும், ரஷ்யாவுடனான போருக்காக உக்ரேனுக்கான அமெரிக்க இராணுவ உதவியை இரத்து செய்வதற்கும் ட்ரம்பின் குழு அச்சுறுத்தி வருகிறது. உயர்மட்ட பிரெஞ்சு இராஜதந்திரிகள், பிரெஞ்சு SCALP ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா மீது குண்டுவீசவும், ரஷ்ய இராணுவத்தை எதிர்த்துப் போரிட உக்ரேனுக்கு பிரெஞ்சு தரைப்படை துருப்புகளை அனுப்பவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
ரஷ்யாவுடனான முழுமையான போருக்கு பிரெஞ்சு இராணுவத்தை ஆயுதபாணியாக்குவதும், அமெரிக்க தொழிலாளர்களுக்கு எதிராக ட்ரம்ப் தயாரிப்பு செய்து வருகின்ற தாக்குதலுக்கு மத்தியில் பிரெஞ்சு முதலாளித்துவத்தை பொருளாதார ரீதியில் போட்டித்தன்மையுடன் வைத்திருப்பதற்கும், பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்திடம் இருந்து இராணுவத்துக்காகவும் வங்கிகளுக்காகவும் நிதியியல் ஆதார வளங்களை பாரியளவில் சூறையாடுவதும் அவசியமாகும்.
ஆளும் வட்டாரங்கள், பார்னியேரின் வரவுசெலவுத் திட்டம் மற்றும் அரசாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற துணைக்குழுக்களால் முன்மொழியப்பட்ட வரைவு திருத்தங்கள் பற்றி அதிகரித்தளவில் அதிருப்தி அடைந்துள்ளன. மெலோன்சோனின் புதிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள், அதிவலது உள்துறை அமைச்சர் புரூனோ ரெடெய்லோ (Bruno Retailleau) மற்றும் குடியரசுக் கட்சியின் (LR - The Republicans) லோரோன் வோக்கியே (Laurent Wauquiez) போன்ற வலதுசாரி அரசாங்கக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் செலவின வெட்டுக்களை அகற்றவும் மற்றும் தங்களை மக்களின் நண்பர்களாக காட்டிக் கொள்ளவும் தலையீடு செய்துள்ளனர்.
“2025 க்கான பற்றாக்குறை வெட்டுக்களுக்கான இலக்கு குறைந்து கொண்டே வருவதாக தெரிகிறது” என்று லு மொன்ட் (Le Monde) கடந்த வாரம் எழுதியது. “அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளுக்கு இணங்குவதன் மூலம், 500 மில்லியன் யூரோக்களை இங்கே கைவிடுவதன் மூலம், 1 பில்லியன் அல்லது 2 பில்லியன், அரசாங்கம் அதன் ஆரம்ப நோக்கமான பொதுக் கணக்குகளை சரிசெய்ய முடியுமா?... அறிவிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைத் திட்டத்தின் யதார்த்தம் குறித்து ஏற்கனவே மிகவும் சந்தேகம் கொண்டுள்ள சந்தைகள், எந்த நேரத்திலும் வட்டி விகிதங்களைக் கூர்மையாக அதிகரிப்பதன் மூலம் பிரான்சைத் தண்டிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளன” என்று எழுதியது.
மக்ரோனின் மறுமலர்ச்சி கட்சியின் ஒரு பிரதிநிதியான சார்ல்ஸ் சிட்ஸென்ஸ்டுல் (Charles Sitzenstuhl), “மிஷேல் பார்னியே வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைகள் பிரதானமாக செலவினங்களைக் குறைப்பதன் மூலமாகவும் வரிகளை அதிகரிப்பதன் மூலமாகவும் குறைக்கப்படும் என்று கூறிய அதேவேளையில், கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் தலைகீழான நிலையையே காட்டுகிறது. ஒரு இடதுசாரி அரசாங்கத்தைப் போல நாங்கள் வரவு-செலவு திட்டக்கணக்கு ஊக்கப்பொதிக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
முதலாளித்துவ வர்க்கத்திற்குள் இந்த அதிருப்தி வளர்ந்த நிலையில், லு பென் இறுதியாக பார்னியே மீதான தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். பார்னியேரின் சிறுபான்மை அரசாங்கம் உருவாக்கப்பட்ட போது, லு பென்னும் RN உம் அரசாங்கத்தின் சிக்கன திட்டநிரலை ஆதரிப்பதற்கும், நாடாளுமன்றத்தில் அதன் நடவடிக்கைகள் மீது வாக்களிப்பதற்கும், மற்றும் அதற்கு ஒரு செயல்பாட்டு நாடாளுமன்ற பெரும்பான்மையை வழங்குவதற்கும் வாக்குறுதியளித்தனர்.
ஆனால், நவம்பர் 20 அன்று, மெலோன்சோனின் கூட்டாளி எரிக் கொக்ரெல் (Eric Coquerel) உட்பட NFP உறுப்பினர்கள், பார்னியே அரசாங்கத்தின் சிக்கன கொள்கைகளுக்காக அதைத் தண்டிக்க அதன் மீது தணிக்கை செய்ய அழைப்பு விடுத்த நிலையில், லூ பென் 180 பாகை திருப்பத்தை ஏற்படுத்தி, பார்னியேரின் தணிக்கையை அவர் ஆதரிக்கக்கூடும் என்று கூறினார். அவர் RTL வானொலிக்கு, “பிரெஞ்சுக்காரர்களின் வாங்கும் சக்தி மேலும் வெட்டப்படுவதை நாங்கள் ஏற்க மாட்டோம், (...) இது ஒரு சிவப்பு கோடு. உண்மையில், இந்த சிவப்புக் கோடு கடக்கப்பட்டால், நாங்கள் கண்டனத்திற்கு வாக்களிப்போம்” என்று லூ பென் கூறினார்.
பார்னியேரைத் தூக்கியெறிவதற்கும் வரவு-செலவுத் திட்டத்தை தடுப்பதற்குமான அச்சுறுத்தல்களைப் பாதுகாத்து, லு பென் நேற்று, லு பிகாரோ (Le Figaro) இல் ஒரு தலையங்க கட்டுரையை வெளியிட்டார். இது, எந்த பெரிய விளைவுகளையும் ஏற்படுத்தாது என்று அவர் நம்பமுடியாமல் கூறினார்: “அரசாங்கம் தணிக்கை செய்யப்பட்டாலும், வரி வசூலிக்கப்படும் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பணம் வழங்கப்படும், ஓய்வூதியம் வழங்கப்படும், மற்றும் சுகாதார செலவுகள் திருப்பிச் செலுத்தப்படும். தணிக்கை செய்யப்பட்ட அரசாங்கம் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு புதிய அரசாங்கம் உருவாகி, முறையான பட்ஜெட்க்கு வாக்களிக்கப்படும் வரை, குறைந்தபட்சம் 2024 வரவுசெலவுத் திட்டத்தை [2025க்குள்] தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு சிறப்புச் சட்டத்திற்கு ஒரு கவனிப்புத் திறனில் வாக்களிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
பார்னியரை வீழ்த்தக்கூடிய NFP மற்றும் RN இன் கணிசமான பிரிவுகளின் வாக்கெடுப்பு அரசியல் ஸ்தாபனத்திற்குள் கன்னை போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
NFP தலைவர் ஜோன்-லூக் மெலோன்சோன் பார்னியேரைக் கண்டிக்க பிரச்சாரம் செய்து வருவதுடன், “டிசம்பர் 18 மற்றும் 21 க்கு இடையில்” அவரது அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்று கணித்துள்ளார். அதேவேளையில், மற்ற NFP அதிகாரிகள் இதை எதிர்க்கின்றனர். சோசலிஸ்ட் கட்சியின் (PS – Socialist Party) முன்னாள் பிரதம மந்திரி பேர்னார்ட் கஸ்னேவ் (Bernard Cazeneuve) கூறுகையில், பார்னியரை வீழ்த்துவது, “ஆட்சியின் நெருக்கடியில் ஒரு பெரிய தாவலை ஏற்படுத்தும்” என்று கூறினார். “அனைத்து ஜனநாயக அரசியல் சக்திகளும் பார்னியருக்கு ஆதரவாக ஒன்று திரளும் அளவுக்கு தெளிவாக இருக்க வேண்டும்” என்று அவர் அழைப்பு விடுத்தார்.
அரசாங்கத்தின் வீழ்ச்சி குறித்து வதந்திகளைப் பரப்புபவர்களில் அதன் பெயரளவிலான தலைவரான ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எலிசே ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஒரு சமீபத்திய கூட்டத்தில், அவர் மறுமலர்ச்சி கட்சி அதிகாரிகளிடம் கூறினார்: “அரசாங்கம் வீழ்ச்சியடையும். அவர் [மரின் லு பென்] ஏதோவொரு புள்ளியில், நாம் நினைப்பதை விட விரைவிலேயே அதை தணிக்கை செய்வார். தேசிய நாடாளுமன்றத்தில் வெவ்வேறு வரவு செலவுத் திட்டங்களின் வாக்கெடுப்பின் போது RN நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவிருக்கும் நாட்களில் தனது அச்சுறுத்தல்களுக்கு எதிராக செயல்படலாம் என்று மக்ரோன் நினைப்பதாக” அதிகாரிகள் பாரிசியனுக்கு (Parisien) தெரிவித்தனர்.
பிரெஞ்சு வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் அரசியல் பிற்போக்குத்தனத்தின் ஒரு திருவிழாவாகும். பார்னியேரின் சிக்கன வரவு-செலவு திட்டக்கணக்கை ஆதரிக்கும் பிற்போக்குவாதிகளோ, அல்லது அவரது நாடாளுமன்ற வெளியேற்றத்தை ஆதரிக்கும் முதலாளித்துவ ஆதரவாளர்களோ தொழிலாளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.
காஸா இனப்படுகொலை, ரஷ்யாவுடனான முழுமையான போருக்கான திட்டங்கள், மற்றும் ஒரு போர் பொருளாதாரத்திற்கு நிதியாதாரமளிக்கும் சிக்கன கொள்கைகள் ஆகியவற்றிற்கு தொழிலாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு உள்ளது. ஆயினும் இந்த கண்ணோட்டங்களில் எதுவுமே முதலாளித்துவ ஊடகங்களால் “இடது” என்று ஊக்குவிக்கப்படுபவை உட்பட நாடாளுமன்ற கட்சிகளின் கொள்கைகளில் வெளிப்பாட்டைக் காணவில்லை. NFP இல் சோசலிஸ்ட் கட்சி பங்கேற்பதை உறுதிப்படுத்துவதற்காக, மெலோன்சோன் கூறுகையில், காஸா இனப்படுகொலை மீதான அவரது விமர்சனங்களை “ஆற்றில்” வீசியதாக தெரிவித்தார். NFPயின் வேலைத் திட்டத்தில் கலகப் பிரிவு பொலிசுக்கு நிதியை அதிகரித்தல், உக்ரேனுக்கு பிரெஞ்சு தரைப்படை துருப்புக்களை அனுப்புதல் போன்ற பிற்போக்குத்தன விதிகளையும் அவர் சேர்த்தார்.
ஒரு விடயம் நிச்சயம்: பிரெஞ்சு ஏழைகளின் வாங்கும் சக்தியை எவ்வாறு பாதுகாப்பது என்ற தேசிய கணக்கீடுகளின் அடிப்படையில் மரின் லு பென் பார்னியேருக்கு எதிராக திரும்பவில்லை. ஒரு அரசாங்கத்தை வீழ்த்துவதா இல்லையா என்பது குறித்த முடிவு உலகளாவிய ஏகாதிபத்திய மூலோபாயத்துடன் பிணைந்துள்ளது. லு பென் மற்றும் ட்ரம்பை எதிர்ப்பதற்கும் தொழிலாளர்களைத் தயார் செய்யாமல் பார்னியேரை கீழிறக்குவதென்பது, முதலாளித்துவ பிற்போக்குத்தனத்தின் முன்னால் தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்குவதாகும்.
ஏகாதிபத்தியத்திற்கு ஆழமாக வேரூன்றிய வெகுஜன எதிர்ப்பு, தாமதமின்றி விரைவில் அட்லாண்டிக்கின் இரண்டு பக்கங்களிலும் வெடிக்கும். எவ்வாறிருப்பினும், இத்தகைய போராட்டங்கள் பிரான்சின் நாடாளுமன்றக் கட்சிகள் போன்ற ஊழல் அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ், ஒரு தேசிய அடிப்படையில் நடத்தப்பட முடியாது. காஸா இனப்படுகொலைக்காக இஸ்ரேலுக்கு ஆயுதமளிப்பதை நிறுத்துவதற்கும், நேட்டோ-ரஷ்ய மோதலில் பேரழிவுகரமான தீவிரப்பாட்டின் அபாயம் குறித்து தொழிலாளர்களை எச்சரித்து, அந்த போரை நிறுத்துவதற்கும், போருக்கு நிதியாதாரம் அளிப்பதற்காக மேலதிக சமூக வெட்டுக்களை நிறுத்துவதற்குமான போராட்டத்திற்கு, தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச, சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.